நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

5
நடுநிலை Balance

டுநிலை குறித்த விவாதம் அடிக்கடி பலராலும் விவாதிக்கப்படுகிறது. அதாவது செய்தியில் நடுநிலை, விவாதத்தில் நடுநிலை, எழுத்தில் நடுநிலை என்று.

நடுநிலை

நடுநிலை என்பதே எங்கும் கிடையாது. இதை எவரும் நம்பவில்லை என்றாலும் இது தான் உண்மை. Image Credit

யாராக இருந்தாலும் ஏதாவது ஒன்றின் மீது பற்றாகத்தான் இருப்பார்கள். சிலருக்கு தெரியாது அல்லது தெரியாதது போலத் தங்களை நியாயப்படுத்துவார்கள்.

எந்த விவாதமாக இருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தில் ஒரு கருத்து சார்ந்து தான் இருக்க முடியும். இரண்டையுமே சமனாகக் கொண்டு செல்வது இயலாது.

நடுநிலையாக இருக்க முயற்சித்து இரண்டும் கெட்டானாக இருப்பதை விட, இது தான் என்பதைத் தெளிவுபடுத்தி விடுவது சிறப்பு.

நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு பக்கம் இருப்பதே சரி.

எப்போதுமே கூற வரும் கருத்தில் தெளிவாக இருக்க வேண்டும், நடுநிலை என்ற பெயரில் சமன் (Balance) செய்ய ஆரம்பித்தால், முழுக் கருத்தும் சொதப்பி விடும்.

தன் பக்க கருத்தைப் பேச / எழுத முயற்சிக்கலாமே தவிர அனைவரையும் திருப்தி செய்ய நினைத்தால் அர்த்தமற்றதாக மாறி விடும்.

இக்கருத்தை ஏற்கனவே பல்வேறு கட்டுரைகளில், விவாதங்களில் கூறியுள்ளேன் ஆனால், இது போலத் தனித்த கட்டுரையாக தற்போது தான் கூறுகிறேன்.

விமர்சனங்கள்

இத்தளத்தைப் படிப்பவர்கள் சில கட்டுரைகளில், ‘நீங்கள் பாஜக ஆதரவு அதனால் இது போல எழுதுகிறீர்கள்‘ என்று குற்றச்சாட்டு வைப்பார்கள்.

நான் வலது சாரி சிந்தனை உள்ளவன், இது சார்ந்த கருத்துகளில் ஏற்புடையவன்.

இந்து மதத்தின் மீது பற்றுக்கொண்டவன்.

எனவே, இதையொட்டியே என் கருத்துகளும் இருக்கும்.

இடது சாரி ஆதரவாளர்கள்

தமிழகம் முழுக்க இடது சாரி ஆதரவாளர்களால் இந்து மதம் இழிவு படுத்தப்படுகிறது, நாளுக்குள் நாள் இது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்துக்கள் தவறுகள் பூதாகரமாக்கப்படுவதும், சிறுபான்மையினர் தவறுகள் மறைக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறும் போது ஜீரணிக்க முடிவதில்லை.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே என் எண்ணம் ஆனால், இதற்கு மாற்றாகவே நடைபெறுகிறது.

தமிழக ஊடகங்கள் இதற்கு முழு ஆதரவு எனும் போது எப்படித் தொடர்ந்து அமைதியாகவே கடந்து செல்ல முடியும்?

ஏனென்றால், மதச்சார்பின்மை என்ற பெயரில் தமிழகத்தில் நடந்து வருவதைப் பார்க்கும் போது பொறுமையாகக் கடப்பது இயலாததாகத் தோன்றுகிறது.

இதனால் இது குறித்த மன அழுத்தம், கோபம் அதிகரிக்கிறது.

ஒத்துப்போகும் கருத்துகள்

என் பல கருத்துகள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் பாஜக செயல்பாடுகளுடன் கருத்துகளுடன் ஒத்துப்போகிறது.

குறிப்பாக, மின்னணு பரிவர்த்தனை, பண மதிப்பிழப்பு, GST, தனியார் மயமாக்கல், ஆதார், CAA, அனைவருக்கும் வங்கிக்கணக்கு, Article 370, FasTag, சுய சார்பு, PAN – Gas – வங்கி – ஆதார் – குடும்ப அட்டை இணைப்பு, நாட்டுப்பற்று.

இதில் “மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ” கட்டுரையில் நான் கூறியுள்ளது பெரும்பாலானவை நடந்துள்ளது மகிழ்ச்சி 🙂 .

மேற்கூறியதை பாஜக என்றல்ல, திமுக, காங் அரசு செய்து இருந்தாலும் 100% ஆதரித்து இருப்பேன். திமுக முன்னெடுத்து வரும் திட்டங்களையும் ஆதரிக்கிறேன்.

காரணம், இது கட்சி / சித்தாந்த சார்ந்த விருப்பங்கள் அல்ல, தனிப்பட்ட எண்ணங்கள் சார்ந்தது. மாற்றங்களை வரவேற்கும் அனைவரையும் ஆதரிப்பேன்.

இதில் பொருந்தாத இந்தி திணிப்பு எதிர்ப்புக்குத் தீவிர ஆதரவாளன்.

எனவே, 90% வலது சாரி சிந்தனை என்றால் 10% இடது சாரி சிந்தனை உள்ளவன் என்று வைத்துக்கொள்ளலாம்.

இடது சாரி சித்தாந்தம் எனக்குப் பிடிக்காதது. எப்போதும் போராட்டம், வேலை நிறுத்தம், எதிர்ப்பு, போலி மதச்சார்பின்மை என்று எதிர்மறை அரசியல்.

எனவே, என் நிலை தெளிவாக வலது சாரி சிந்தனை தான்.

எது சரி?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை இருப்பது போல, அவரவர்க்கு அவரவர் நியாயம், விளக்கங்கள் உள்ளது.

ஒருவர் நமக்குப் பிடித்தமான கருத்துகளைக் கூறினால், சிறப்பாக எழுதியதாகக் கருதுகிறோம். எதிர் கருத்து என்றால், கோபம் அடைகிறோம்.

கூற வரும் கருத்து நாகரீகமாக உள்ளதா? என்பதை மட்டும் பாருங்கள், நம் கருத்தையே அடுத்தவரும் கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

கட்டுரையில் தவறு இருந்தால், விளக்கம் கேட்கலாம் அதை விடுத்து அதெப்படி பாஜக வை ஆதரிக்கலாம் என்பது எப்படிச் சரியாகும்?

சமீபமாக இது போன்ற விமர்சனங்கள் அவ்வப்போது வருகிறது.

எனவே தான் தனித்தனியாகக் கூறிக்கொண்டு இல்லாமல் இது போலக் கூறி விட்டால், இதையே பதிலாகக் கொடுத்து விடலாம் 🙂 .

ஒவ்வொரு முறையும் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை.

இத்தளத்தில் கருத்து மட்டுறுத்தல் கிடையாது. இங்கே எழுதப்படும் என் கருத்துக்களுக்கு நானே பொறுப்பு.

நானும் விதிவிலக்கல்ல

பாஜக சித்தாந்தங்களில் 80% – 90% இருக்கலாம் ஆனால், எந்தக்கலப்படமும் இல்லாத 100% முழுமையான ரஜினி ரசிகன். இதுவே நான்.

இதையொட்டியே என் கருத்துகளும் இருக்கும். எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

நடுநிலையாக எழுதுவேன் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம், என் மனசாட்சிக்கு சரி என்பதை எழுதுவேன் என்பது மட்டுமே உண்மை.

தவறு என்றால் ஒத்துக்கொள்ளும் தைரியம் எனக்குண்டு.

எனவே, விவாதியுங்கள் ஆனால், இதைத் தான் நான் எழுத வேண்டும் / கூடாது என்று நிர்பந்திக்காதீர்கள், எதிர்பார்க்காதீர்கள்.

நடுநிலை என்று எவரும் கிடையாது, படிக்கும் நீங்கள் உட்பட.

எனவே, நானும் விதிவிலக்கல்ல.

நன்றி, வணக்கம் 🙏

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. கிரி, பல வருடங்களாக உங்களை தொடர்பவன் என்பதால் உங்களை குறித்து என்னால் ஓரளவிற்கு யூகிக்க முடியும்.. நீங்கள் உங்கள் பதிவுகளிலும் / விவாதங்களிலும் உங்களை நிலை என்னவென்று தெளிவாக பல முறை கூறியுள்ளீர்கள்.. அதில் மாற்று கருத்து என்பதே இல்லை என்பது, உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும்..உங்கள் மனதிற்கு தோன்றுவதை வெளிப்படையாக, தைரியமாக (ஓப்பனாக) எழுதும் பழக்கமும், அடுத்தவர்களின் கருத்துக்கு (நேர்மாறான கேள்விக்கும் – சிறு பிள்ளை தனமான கேள்விக்கும்) மதிப்பளித்து பதிலளிக்கும் பழக்கமும் தான் என்னை உங்கள் தளத்தை எத்தனை ஆண்டுகள் தொடர வைத்து கொண்டிருக்குகிறது என நினைக்கிறேன்.. (எதிர்காலத்திலும் இது தொடரும்).

  இணையத்தில் ஆரம்பத்திலும் / தற்போதும் (முத்துலிங்கம் ஐயா தற்போது பதிவுகள் இடுவதில்லை) நான் தொடரும் ஒரே தளம் உங்களுடையது மட்டும் தான்.. (இதை முன்பே கூறியிருக்கிறேன்) மற்ற தளங்களை ஒரு சமயத்தில் தொடர்ந்து வந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் ஒன்று, இயல்பாகவே ஒரு வித அயர்ச்சியை உண்டாக்குகிறது, அதன் பின் சலிப்படைய வைக்கிறது.., இல்லையென்றால் ஏதோ ஒரு தருணத்தில் அவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுகிறது.. அந்த நொடியே இத்தனை ஆண்டுகள் நாம் அவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கை கண் முன்னே சுக்குநூறாய் உடைகிறது.. (இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது).. இந்த மோசமான நிகழ்வால் மனது கனத்து விடுகிறது.

  உங்கள் பதிவுகளிலும் எனக்கும் சில மாற்று கருத்துக்கள் இருந்ததுண்டு!!! சிலவற்றை வெளிப்படுத்தி இருக்கலாம், சிலவற்றை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.. அதற்காக ஒரு சில பதிவிற்காக ஒட்டு மொத்தமாக உங்கள் மீது அவதூறு கூறுவதில் எந்த நியாயமும், தர்மமும் இல்லை!!! படிக்கப் பிடித்தால் தொடந்து பயணி !!! இல்லையேல் பாதியில் இறங்கி விடு!!! யாரையும் கட்டாயப்படுத்தி பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லையே!!!நிர்பந்திக்கவும் முடியாது. கடந்த கால சில பதிவுகளில் நீங்கள் ரொம்ப நேரம் விமர்சனத்திற்கு பதில் கொடுக்க வேண்டி (கம்பு சுத்தி இருப்பீங்க).. சில ஆண்டுகளுக்கு பின் பழைய பதிவுகளை படிக்கும் போது “கொஞ்சம் சிரிப்பாக இருக்கும்” எதற்காக கிரி இவ்வளவு தூரம் பதில் கொடுக்கிறார் என வியப்பாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி.

  அடிக்கடி படித்து சிரிக்கும் வரிகள் : –

  ஏங்க!!!!அத வைங்க…உங்களுக்கு எதையும்
  சரியாவே செலக்ட் பண்ண தெரியல!!!!என்று
  மனைவி சொல்லும் போது…. கணவன் நினைவில்
  வந்து போகின்றது… (‪#‎திருமண_நாள்#)..

 2. உங்கள் கருத்துக்கும் உங்கள் நிலைக்கும நாங்கள் மதிப்பளிகிறோம் …

 3. @யாசின்

  “நீங்கள் உங்கள் பதிவுகளிலும் / விவாதங்களிலும் உங்களை நிலை என்னவென்று தெளிவாக பல முறை கூறியுள்ளீர்கள்”

  உண்மை தான் யாசின். இருப்பினும் சிலர் எல்லா கோட்டையும் அழிங்க.. முதலிலிருந்து ஆரம்பிப்போம் என்கிறார்கள்.

  எனவே தான் இக்கட்டுரையை எழுதினேன். இனி யாரவது கூறினால், இக்கட்டுரையின் சுட்டியைக் கொடுத்து விடுவேன் 🙂 .

  “உங்கள் மனதிற்கு தோன்றுவதை வெளிப்படையாக, தைரியமாக (ஓப்பனாக) எழுதும் பழக்கமும், அடுத்தவர்களின் கருத்துக்கு (நேர்மாறான கேள்விக்கும் – சிறு பிள்ளை தனமான கேள்விக்கும்) மதிப்பளித்து பதிலளிக்கும் பழக்கமும் தான் என்னை உங்கள் தளத்தை எத்தனை ஆண்டுகள் தொடர வைத்து கொண்டிருக்குகிறது என நினைக்கிறேன்”

  துவக்கத்தில் சிலவற்றை தைரியமாக கூறவில்லை காரணம், இதனால் மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்ற கவலை.

  அதோடு இந்த நடுநிலையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் 😀 .

  கடந்த 7 -8 வருடங்களாக இந்த எண்ணத்தை மாற்றி விட்டேன். யாரையும் திருப்தி செய்ய எழுதக்கூடாது. நமக்கு எது சரியோ தவறோ அதை மட்டுமே எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன்.

  இதனால், தைரியமாக கூறுவதோடு நாகரீகமாகவும் கூறுவதால், சில காட்டமான விமர்சனங்கள் வந்தாலும், இன்னும் மட்டுறுத்தல் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படாமல் உள்ளதே இதன் மீதான நம்பிக்கையை அளிக்கிறது.

  தைரியமாக எழுதினாலும், மனசாட்சிக்கு மிகப் பயப்படுவேன். நானே நினைத்தாலும், என் மனதுக்கு சரியில்லை என்று படுவதை எழுத முடியாது.

  ஒரு குற்ற உணர்வாகவே இருக்கும். எனவே, எனக்கு நியாயமில்லாததை எழுதுவதில்லை. சில எனக்கு நியாயமாக இருக்கும் ஆனால், மற்றவர்களுக்கு இருக்காது.

  இந்நிலையில் தான் கடுமையான விமர்சனங்கள் வரும்.

  “மற்ற தளங்களை ஒரு சமயத்தில் தொடர்ந்து வந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் ஒன்று, இயல்பாகவே ஒரு வித அயர்ச்சியை உண்டாக்குகிறது, அதன் பின் சலிப்படைய வைக்கிறது”

  எனக்கும் நேர்ந்துள்ளது. ஒரு சில கட்டுரைகளைப் படித்து அட! இவ்வளவு நாளாக படிக்காமல் விட்டோமே என்று நினைத்துத் தொடர்ந்தால், அதன் பிறகு இவரையா நாம் வியப்பாக கண்டோம் என்று நினைக்கும் அளவுக்கு மாறி விடும்.

  என் தளத்தையும் சிலர் இது போல நினைத்து இருக்கலாம் 🙂 .

  ஒரே மாதிரி நான் எழுதுவதில்லை. பல்வேறு தலைப்புகளில் எழுதுவதால், உங்களுக்கு ஒருவேளை சலிப்பு ஏற்படாமல் இருந்து இருக்கலாம்.

  ஒரே மாதிரி எழுதினால், இது தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வந்து விட்டால், அதன் பிறகு படிக்க விருப்பம் இருக்காது.

  எனவே, முடிந்தவரை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தலைப்புகளில் மாற்றி மாற்றி எழுதுவேன்.

  இன்னொன்று படிப்பவர்களுக்கு எளிமையாக புரியும்படி எழுதுவது என் பலம்.

  “உங்கள் பதிவுகளிலும் எனக்கும் சில மாற்று கருத்துக்கள் இருந்ததுண்டு!!! சிலவற்றை வெளிப்படுத்தி இருக்கலாம், சிலவற்றை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.. அதற்காக ஒரு சில பதிவிற்காக ஒட்டு மொத்தமாக உங்கள் மீது அவதூறு கூறுவதில் எந்த நியாயமும், தர்மமும் இல்லை”

  கடவுளால் கூட ஒரு மனிதரை அனைத்து நேரமும் திருப்தி செய்ய முடியாது எனும் போது சாதாரண நபர்கள் என்ன செய்ய முடியும்.

  நான் அவ்வப்போது அனைவருக்கும் கூறுவது, 100% நமக்குப் பிடித்த மாதிரியே ஒருவர் எழுத வேண்டும் என்றால், நாமே எழுதி நாமே படித்துக்கொள்ள வேண்டியது தான்.

  எழுதுவதில் தோராயமாக 75% நமக்கு ஏற்புடையதாக இருந்தால், சரி என்று தொடர வேண்டியது தான்.

  சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கவே செய்யும். இவற்றைத் தவிர்க்கவே முடியாது. நீங்களும் இந்தப் புரிதலில் இருப்பது மகிழ்ச்சி.

  “படிக்கப் பிடித்தால் தொடந்து பயணி !!! இல்லையேல் பாதியில் இறங்கி விடு!”

  இதைத்தான் செய்ய முடியும். பிடித்தால் தொடரலாம், இல்லையேல் புறக்கணிக்கலாம். என் தளத்தையும் கருத்து வேறுபாடுகளால் பலர் புறக்கணித்துள்ளார்கள்.

  “கடந்த கால சில பதிவுகளில் நீங்கள் ரொம்ப நேரம் விமர்சனத்திற்கு பதில் கொடுக்க வேண்டி (கம்பு சுத்தி இருப்பீங்க).. சில ஆண்டுகளுக்கு பின் பழைய பதிவுகளை படிக்கும் போது “கொஞ்சம் சிரிப்பாக இருக்கும்” எதற்காக கிரி இவ்வளவு தூரம் பதில் கொடுக்கிறார் என வியப்பாக இருக்கும்”

  நம்மை மதித்து கேள்வி கேட்குறாங்க.. பதில் கூறுவது தானே முறை என்கிற அர்த்தத்தில்.

  எனக்கு பலர் பதில் கொடுத்தது இல்லை. எனவே, அதே தவறை நாமும் செய்ய கூடாது என்பதை பின்பற்றி வருகிறேன்.

  இன்னொன்று, விவாதம் எனக்குப் பிடித்தமானது. ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றால், அதில் நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே எழுதுவேன். எதோ எழுதுவோம் என்று எழுதியதில்லை.

  எனவே, அனைத்துக்கும் என்னால் பதில் அளிக்க முடியும். ஒருவேளை என் புரிதல் தவறு என்றால் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதில்லை.

  எனவே, எவ்வளவு கேள்வி கேட்டாலும், சளைக்காமல் பதில் அளிப்பேன். வாதம் விதண்டாவாதமாகச் சென்றால், நன்றி வணக்கம் கூறி விடுவேன் 🙂 .

  “அடிக்கடி படித்து சிரிக்கும் வரிகள்”

  😀

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here