சிங்காரச் சென்னை | Project Blue

2
சிங்காரச் சென்னை Singara Chennai Project blude

ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டம் சிங்காரச் சென்னை. சென்னை மேயராக ஸ்டாலின் (1996-2001) இருந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

சிங்காரச் சென்னை 2.0

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான, பழமை வாய்ந்த நகரான சென்னை அதற்குண்டான கட்டமைப்பில், மதிப்பில் இல்லை. Image Credit

ஸ்டாலின் அதற்குண்டான முயற்சியை முன்னெடுத்தார் ஆனால், அதைச் சரிவரச் செயல்படுத்த முடியவில்லை.

தற்போது முதல்வராக அவருக்கு இன்னொரு வாய்ப்பு அதிகப் பலத்துடன் கிடைத்துள்ளது.

சிங்காரச் சென்னை அவரது கனவுத்திட்டம் என்பதால், இந்தமுறை சிறப்பாகச் செய்வார் என்று நம்பிக்கையுள்ளது.

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி காலத்திலும் சிங்காரச் சென்னை என்ற பெயர் இல்லாமல் சென்னையை மேம்படுத்த முயற்சிக்கப்பட்டது ஆனால், வழக்கம் போல மக்கள் வரிப்பணம் வீணானது தான் மிச்சம்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அடையார் கூவம் மற்றும் அதையொட்டி சில பகுதிகள் சீரமைக்கப்பட்டது. ஆவடி பருத்திப்பட்டு ஏரி புணரமைக்கப்பட்டது,

வில்லிவாக்கம் ஏரி புணரமைப்பு கிட்டத்தட்ட முடிந்தது, தற்போது இறுதிக்கட்ட பணியில் உள்ளதால், இன்னும் சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

சென்னை மாநகராட்சி பகுதிகளைத் தூய்மையாக்க ஜனவரி 2021 ல் ஸ்பெயின் நிறுவனம் Urbaser உடன் 8 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இவர்கள் சிறு பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பை அள்ளி வருகிறார்கள். இதுவரை சிறப்பாகப் பணி புரிந்து வருகிறார்கள்.

Project Blue

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் இருந்தாலும், கடற்கரை சார்ந்த மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரையை அழகுபடுத்துவது, மாற்றுத்திறனாளிகள் கடற்கரையைப் பார்வையிட வசதிகள், நடைப்பயிற்சி செய்பவர்களுக்குப் பாதைகள் அமைப்பது.

இவையல்லாமல் நீர் சார்ந்த விளையாட்டு என்று கூறப்பட்டுள்ளது. அது என்ன மாதிரியானது என்பது புரியவில்லை.

வேறு என்னென்ன திட்டங்கள்?

  • சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள், பாலங்கள், முக்கியச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுப் புதுப்பிக்கப்படும்.
  • கூவம் நதி சுத்தப்படுத்தப்படும்.
  • அண்ணா நகர் கோபுரம் புதுப்பிக்கப்படும்.
  • வள்ளுவர் கோட்டம், அருங்காட்சியங்கள் போன்ற சுற்றுலா தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுச் சீர்படுத்தப்படும்.
  • ஏரிகள் தூர்வாரப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
  • குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் கணிதப் பூங்காக்கள் அமைக்கும் திட்டம்.
  • எழும்பூர் ரயில் நிலையப்பகுதியை மேம்படுத்துவது.
  • சென்னையில் 2021 மே மாதம் Mass Cleaning என்று நகர் முழுக்கச் சுத்தம் செய்யப்பட்டது போல, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சரியான பொறுப்பாளர்கள்

ஸ்டாலின் பல்வேறு நம்பிக்கை தரும் திட்டங்களை அறிவித்துள்ளார், அதோடு பெரும்பாலான திட்டங்களுக்குச் சரியான பொறுப்பாளரையும் நியமித்துள்ளார்.

எடுத்துக்காட்டுக்கு இறையன்பு IAS, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி.

ககன்தீப் சிங் பேடி ஏற்கனவே தனது சிறப்பான பணிகளால் தமிழ்நாடு மக்களிடையே நன்மதிப்பை பெற்றவர்.

தற்போதும் கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

நீர் நிலைகளை மேம்படுத்துவது, நகரை சுத்தம் செய்வது உட்பட முக்கியப் பணிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

எனவே, ஸ்டாலினின் சிங்கார சென்னை கனவுத் திட்டத்தில் ககன்தீப் சிங் பேடி முக்கியப் பங்காற்றுவார் என்று நம்பலாம் (மாற்றாமல் இருந்தால்).

இம்மாற்றங்கள் சரிவர நடந்தால், மிக்க மகிழ்ச்சி 🙂 .

திட்டங்கள்

திட்டங்களை அறிமுகப்படுத்துவதோ, செயல்படுத்துவதோ பெரிய விஷயமில்லை ஆனால், அதைப் பராமரிக்க வேண்டும். அது தான் முக்கியம்.

ஒரு பூங்காவை அமைப்பது பெரிய விஷயமில்லை, நாளடைவில் அவை குப்பை கொட்டும் இடமாக மாறினால், பூங்கா அமைத்து என்ன பயன்?

பூங்கா இருந்த இடத்தில் கல்வெட்டில் இவ்வளவு இலட்சத்தில் / கோடியில் கட்டப்பட்டது என்பதைக் காணும் போது வேதனையே மிஞ்சும்.

மியாவாக்கி காடுகளைச் சென்னையில் அதிகம் ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். சிங்காரச் சென்னை திட்டத்தில் இதையும் சேர்க்க வேண்டும்.

சென்னையை மேம்படுத்த, செய்ய வேண்டியவை ஏராளமாக உள்ளன. அதற்குத் தேவை உண்மையான முனைப்பு, ஆர்வம், அக்கறை மட்டுமே!

கனவுத்திட்டம்

தனது கனவுத்திட்டம் என்பதால், ஸ்டாலின் கவனம் கொடுத்து, செல்லப்பிள்ளை போலக் கவனித்து அனைவரும் வியக்கும் வண்ணம் சென்னையை மாற்ற வேண்டும்.

குறிப்பாக மற்ற மாநில மக்கள் அதிகம் புழங்கும் விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை மத்திய, எழும்பூர் இரயில் நிலையப்பகுதிகளைச் சிறப்பாகப் பராமரிக்க வேண்டும்.

இவையே மற்றவர்களுக்கு முதல் எண்ணத்தை (First Impression) சென்னையின் மீது கொடுப்பவையாகும்.

நடக்கும் என்று நம்பவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை 🙂 .

கொசுறு

சென்னை மத்திய ரயில் நிலையம் பகுதியை ஜெ ஆட்சி காலத்தில் மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து மத்திய சதுக்கம் (Central Square) என்று மாற்றச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Chennai Central, Metro, MRTS, Suburban இரயில் நிலையங்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய திட்டமாகும்.

இத்திட்டம் முடிக்கப்பட்டால், சென்னை சென்ட்ரல் பகுதி வேற லெவலில் இருக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்

மியாவாக்கி காடு வளர்ப்பு முறை என்றால் என்ன?

சுத்தமான சென்னை மெட்ரோ தூண்கள்

புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்

சென்னை மாநகரச் சிவப்பு நிறப் பேருந்து

2 COMMENTS

  1. கிரி, படிக்கும் போது மன நிறைவாக இருக்கிறது.. இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கும் போது இன்னும் சூப்பரா இருக்கும்.. கண்டிப்பாக மாற்றங்கள் நடக்கும் என நம்புகிறேன்.. மியாவாக்கி குறித்து உங்கள் தளத்தில் படித்த பிறகு நிறைய தகவல்களை திரட்டி வைத்து வருகிறேன்.. குறிப்பிட்ட சில ஆண்டுகளில் ஒரு பெரிய காட்டினை உருவாக்க திட்டமிட்டு வருகிறேன்.. எங்கள் பகுதியில் விளைநிலங்கள் விலை தாறுமாறாக உள்ளது. அதிக அளவில் நிலம் வைத்து இருப்பவர்கள் பயிர் செய்யாமலும், நியாயமான விலைக்கு பயிர் செய்ய ஆர்வம் இருப்பவர்களுக்கு விற்காமலும் , வேண்டுமென்றே விலையை உயர்த்தி கொண்டே போகின்றனர்.

    என் தந்தை 15 வருடங்களுக்கு மேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி புரிந்தார்.. அவருக்கு சென்னை மேல் அதீத காதல்.. சென்னையில் படிக்கவும் அல்லது பணி புரியவும் ஒரு சமயத்தில் ஏங்கி தவித்தேன்.. ஆனால் என்னுடைய துரதிஷ்டம் ஆரம்பத்திலிருந்தே எனக்கு சென்னையில் எந்த வாய்ப்புமே அமையவில்லை.. சென்னை கைவிட்டாலும் கோவை கை கொடுத்தது.. காலத்திற்க்கும் ஒரு இனிய நண்பரை (சக்தி) கொடுத்தது.. எனக்கு சென்னை என்றாலே என் தந்தையின் நினைவுகள் வந்து போகும்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின்

    ‘கண்டிப்பாக மாற்றங்கள் நடக்கும் என நம்புகிறேன்”

    நானும் நம்புகிறேன். பார்ப்போம்.

    மியாவாக்கி முறை அற்புதமான யோசனை. விரைவில் மரங்களை வளர்க்க அதுவும் அடர்த்தியாக வளர்க்க உதவுகிறது. சென்னையில் மற்றும் தமிழ்நாடு முழுக்க பல தன்னார்வலர்கள் இம்முறையை செயல்படுத்தி வருகின்றனர்.

    “குறிப்பிட்ட சில ஆண்டுகளில் ஒரு பெரிய காட்டினை உருவாக்க திட்டமிட்டு வருகிறேன்”

    வாழ்த்துகள்

    “எங்கள் பகுதியில் விளைநிலங்கள் விலை தாறுமாறாக உள்ளது”

    அனைத்து ஊர்களிலும் இதே நிலை தான்.

    “சென்னை கைவிட்டாலும் கோவை கை கொடுத்தது.. காலத்திற்க்கும் ஒரு இனிய நண்பரை (சக்தி) கொடுத்தது”

    சக்தி மீதான அன்பு வியக்கவைக்கிறது.

    சமீபத்தில் இதை சக்தியிடம் பேசிய போது கூறினேன். அவரை குறிப்பிட நீங்கள் தவறுவதே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here