இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]

10
Hindi Imposition இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்

இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம் கட்டுரையை உங்களுக்கு நேரம் இருக்கும் போது அவசரப்படாமல் பொறுமையாகப் படியுங்கள். 

வேண்டுகோள்

மாற்று எண்ணம் கொண்டுள்ளவர்களைக் கோபப்படுத்துவது என்னுடைய எண்ணமல்ல. இந்தித் திணிப்பால் ஏற்படும் இழப்புகளை அபாயங்களை எடுத்துக் கூறுவது மட்டுமே!

ஏற்கனவே, இந்தித் திணிப்பு குறித்து எழுதி இருக்கிறேன். இதில் கூறப்பட்ட சில கருத்துகள் திரும்ப வரலாம், அவை கூற நினைக்கும் கருத்துக்களுக்கு வலு சேர்க்கவே.

Readஇந்தித் திணிப்பும் மொழி அழிப்பும்

இந்தியாவின் அலுவல் மொழிகள்

ஆங்கிலமும் இந்தியும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவலக மொழிகளாக உள்ளது.

எனவே, அனைத்து இடங்களிலும் இவை இரண்டும் இருக்க வேண்டும். காரணம் ஆங்கிலம் உலகில் பலருக்கு இணைப்பு மொழி, இந்தி இந்தியாவில் பெரும்பாலானவர்கள் பேசும் மொழி.

எனவே, ஆங்கிலமும் இந்தியும், உடன் மாநில மொழியும் இணைந்து இருக்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள், தேசிய நெடுஞ்சாலை, வங்கிகள், விமான / ரயில் நிலையங்கள் போன்ற அனைத்து பொது மக்களும் பயன்படுத்தும் இடங்களில் இவை பின்பற்றப்பட வேண்டும்.

இது தான் பல்வேறு பண்பாட்டை, மொழிகளைக் கொண்டு இருக்கும் இந்தியாவில் நியாயமான செயலாக இருக்க வேண்டும்.

ஆனால் நடந்து கொண்டு இருப்பது என்ன?

தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலம் அழிக்கப்பட்டு இந்தி சேர்க்கப்படுகிறது.

இதில் என்ன நியாயம் உள்ளது என்பதை மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பவர்கள் தான் விளக்க வேண்டும்.

இதில் ஏதாவது லாஜிக் உள்ளதா?!

தமிழ் ஆங்கிலத்துடன் இந்தியை சேர்த்தால் எந்தத் தவறுமில்லை. ஏனென்றால் ஆங்கிலம் இந்தி அலுவலக மொழி தமிழ் மாநில மொழி.

எதற்கு ஆங்கிலத்தை நீக்க வேண்டும்? ஆங்கிலத்தை நீக்கினால் தமிழ் இந்தி தெரியாதவர்கள் எப்படி வழி தெரிந்து கொள்வர்கள்? வெளிநாட்டினர் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு நம் இடங்கள் எப்படிப் புரியும்?

சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதன் நடைமுறை சிரமத்தைப் புரிந்து கொள்ள Common sense என்ற ஒன்று இருந்தால் போதும்.

எனவே, ஆங்கிலத்தை நீக்கி இந்தியை சேர்த்தது திணிப்பு என்ற ஒன்றை தவிர வேறு ஒன்றும் கிடையாது. எதிர்ப்பு அதிகமானதால் திரும்ப ஆங்கிலம் வந்து இருக்கிறது.

திரு பொன் ராதாகிருஷ்ணன்

இதற்கு மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் “வட இந்திய லாரி ஓட்டுநர்களுக்கு படிக்க எளிதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

இது எப்படிப்பட்ட கோமாளித்தனமான பதில் என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். அவர்கள் புரிந்து கொள்ள இந்தியை சேர்க்கலாம் ஆனால், எதற்கு ஆங்கிலத்தை நீக்க வேண்டும்?!

இதற்குப் பதில் கேட்டால் அவரால் பதில் கூற முடியவில்லை. எப்படிக் கூற முடியும்?!

இந்தி தெரியாத தமிழ் லாரி ஓட்டுநர்கள் புரிந்து கொள்ள அனைத்து வட மாநிலங்களிலும் தமிழ் மொழியை எழுதி வைக்க வேண்டும் என்று கேட்பது எப்படி முட்டாள்தனமான வாதமாக இருக்கிறதோ அதே போலத் தான் உள்ளது திரு ராதாகிருஷ்னன் அவர்கள் பதிலும்.

இந்த இடத்தில் தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக அனைத்து மாநில மக்களுக்கும் பொதுவாக உள்ளது.

மாட்டிய ராஜா

பாஜக தலைவர் H.ராஜாவிடம், ஒரு தமிழ் ட்விட்டர் பயனாளர் “தமிழனாக இருந்து (ட்விட்டரில்) ஏன் தமிழைப் பயன்படுத்தாமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டார்.

இதற்குப் பதில் அளித்த ராஜா “ஆங்கிலம் தான் அனைவரும் புரிந்து கொள்ள முடியும், பொதுவாக இருக்கும்” என்று கூறினார்.

இதை இன்னொருவர் “நீங்களே ஒப்புக்கொண்டீர்கள் பின்னர் ஏன் இந்தியை பொது மொழி என்று கூறுகிறீர்கள்?” என்று பிடித்து விட்டார். ராஜாவால் பதில் கூற முடியவில்லை..

ஒருவேளை “நீ ஒரு தேச விரோதி” என்று வேண்டும் என்றால் வழக்கம் போலக் கூறலாம்.

ATM களில் தமிழ் நீக்கம்

தேசிய நெடுஞ்சாலையில் ஆங்கிலத்தை நீக்கினார்கள், தற்போது பெரும்பாலான ATM களில் தமிழை நீக்கி விட்டார்கள். இதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

மேலே கூறியது போல ஆங்கிலத்தையும் இந்தியையும் வைப்பதில் பிரச்சனையில்லை ஆனால், தமிழை ஏன் நீக்க வேண்டும்?

இதன் பெயர் என்ன? இதை ஆதரிப்பவர் தயவு செய்து விளக்குங்கள்.

இன்னும் எவ்வளவோ மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தமிழை வைத்துத்தான் பணப் பரிமாற்றம் செய்கிறார்கள். தற்போது அவர்களின் நிலை என்ன?

HDFC ICICI போன்ற தனியார் வங்கிகள் செய்வதை ஒரு கணக்கில் வைக்கலாம் (அதுவும் தவறே) ஆனால், SBI, IDBI போன்ற அரசு வங்கி செய்தால், அதன் பெயர் என்ன?

எதிர்ப்புக் காரணமாக நெடுஞ்சாலை ஆங்கிலம் போல, தமிழ் திரும்ப  வரலாம். அப்படியென்றால் மத்திய அரசு சும்மா கல் விட்டுப் பார்க்கிறதா?

தமிழகத்தில் இந்திப் பணியாளர்களை நிறைத்து வரும் மத்திய அரசு

தமிழர்களுக்குத் தமிழகத்தில் பணிகளை வழங்காமல் வேண்டும் என்றே தவிர்த்து வருகிறது. வங்கிப்பணிகளில் அதிகளவில் இந்தி பேசுபவர்களை நியமித்து வருகிறது.

மத்திய அரசுப் பணிகளில் மற்ற மாநில மக்கள் சுழற்சி முறையில் வருவது வழக்கமானது என்றாலும், இது அதிகப்படியான எண்ணிக்கை.

அனுமதிக்கப்பட்ட சதவீதத்தை விட அதிகம்.

இதை வங்கிப்பணிகளுக்காக முயற்சித்துக்கொண்டு இருப்பவர்களைக் கேட்டால் தெளிவாகக் கூறுவார்கள்.

ரயில் நிலையங்களில் வட இந்திய காவலர்களே அதிகளவில் உள்ளனர்.

விமானநிலையங்களில் பெரும்பாலான காவலர்கள் இந்தி பேசுபவர்களே! இவர்கள் பயணிகளிடம் அதட்டலாக நடந்து கொண்டு வருகிறார்கள்.

இதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும் இல்லையென்றால், விதண்டாவாத பேச்சாக மட்டும் கருதப்படும்.

இது குறித்து விரிவாகக் கூற தகவல்கள் உண்டு ஆனால், கட்டுரை தடம் மாறி விடாமல் இருக்க இதைத் தவிர்க்கிறேன்.

தபால் நிலையங்களில் இந்தித் திணிப்பு 

தற்போது தபால் நிலையங்களை நீங்கள் அதிகம் பயன்படுத்தி இருக்க வாய்ப்புக் குறைவு காரணம் பெரும்பாலானவர்கள் தனியார் தூதஞ்சல் (courier) சேவைக்கு நகர்ந்து விட்டார்கள்.

ஆனால், தற்போது தபால் நிலையங்களில் தமிழ் குறைந்து ஆங்கிலமும் முக்கியமாக இந்தியும் தான் உள்ளது.

பணிக்கு எடுக்கும் ஊழியர்களும் வட மாநில மக்களாக உள்ளனர்.

தமிழே தெரியாத அரியானாவை சார்ந்தவர்கள் தமிழில் (தமிழ் மாணவர்களை விட) அதிக மதிப்பெண்கள் வாங்கியதாக அறிவிக்கப்பட்டது கடும் சர்ச்சையைச் சமீபத்தில் ஏற்படுத்தியது.

சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் தமிழில் முகவரி எழுதியதால் அங்கு இருந்த வட மாநில அதிகாரி அநாகரிகமாக நடந்ததால், பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின் அதிகாரி  மன்னிப்புக் கடிதம் (இந்தியில்!!) கொடுத்ததால், மேல் நடவடிக்கை எடுக்காமல் விடப்பட்டது.

விளம்பரங்கள்

ஆங்கிலச் சேனல்களில் விளம்பரத்தின் மொழி தற்போது ஆங்கிலத்தில் இருந்து முற்றிலும் இந்திக்கு மாறி விட்டது.

மத்திய அரசின் விளம்பரங்கள் தமிழகத்தில் இந்தியிலேயே வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் இந்தி தெரிந்தவர்கள் 5% இருப்பார்கள், ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் 15% இருப்பார்கள், மீதி 80% பேர் தமிழ் தெரிந்தவர்கள்.

இது தோராயமான கணக்கு மட்டுமே!

80% மக்களுக்குப் புரிந்த மொழியில் அரசு விளம்பரம் வராமல் முழுப் பக்க இந்தி விளம்பரம் வருவது எந்த வகையில் நியாயம்? கண்ணுக்கு தெரிந்தே மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

இந்து ஆங்கில நாளிதழில் சென்னை பதிப்பு மட்டும் ஒரு பக்க விளம்பரத்துக்கு 40 லட்சம் (முதல் தாளில் வந்தால்).

இது என் கற்பனை தகவல் அல்ல, நண்பன் இந்துவில் பணி புரிகிறான் அவனிடம் உறுதி செய்து கொண்ட பிறகே கூறுகிறேன்.

ஆங்கிலம் தமிழ் நாளிதழ்களில் வந்த விளம்பரங்களை பகிர்ந்து இருக்கிறேன். மனசாட்சியுடன் கூறுங்கள் இது சரியா?! திணிப்பை எதிர்ப்பதில் என்ன தவறு?

மக்களுக்கு மத்திய அரசு திட்டங்கள் பற்றிய தகவல்கள் செல்கிறதா என்பதை விட, “நான் இந்தியில் திணிப்பேன். நீ புரிந்து கொள்ள வேண்டும்” என்பது என்ன மாதிரியான மனநிலை?!

இந்தியை ஆதரிப்பவர்கள் இந்தச் செலவு / திணிப்பு நியாயம் என்று கூறுகிறீர்களா?

INOX & PVR

திரையரங்குகளில் வரும் விளம்பரங்கள் குறிப்பாக INOX PVR போன்ற வட மாநில நிறுவனங்களின் திரையரங்குகளில் வரும் அரசு விளம்பரங்கள் மொழிமாற்றம் செய்யப்படாமல் இந்தியிலேயே வருகிறது.

இதற்கு எதிர்ப்பு வந்த பிறகு தற்போது குறைந்து இருக்கிறது.

தொலைக்காட்சி அரசு விளம்பரங்கள்

பண மதிப்பிழப்பு நடந்த போது அது குறித்த விழிப்புணர்வு விளம்பரம் தமிழ் தொலைக்காட்சிகளில் இந்தியிலேயே வந்தது. இது மிக மோசமான போக்கு.

சில நொடிகளுக்கே பல லட்சக்கணக்கான ருபாய் விளம்பர பணம் என்ற நிலையில் தினமும் ஏராளமான விளம்பரங்கள் போடப்பட்டன.

பெரும்பான்மை மக்களுக்குப் புரியாத விழிப்புணர்வு விளம்பரத்தால் மக்களின் வரிப்பணம் பல கோடிகள் வீணடிக்கப்பட்டது.

மான் கி பாத்

மோடியின் வானொலி பேச்சு “மான் கி பாத்” என்றே கூறப்பட்டு அது குறுந்தகவலாகவும் அதே பெயரில் வந்து கொண்டு இருந்தது.

அதைத் தமிழகத்தில் ஒருவருமே கண்டுகொள்ளவில்லை, மோடி ஆதரவாளர்கள், இந்தி தெரிந்து ஆர்வம் இருப்பவர்கள் தவிர்த்து.

மக்களிடையே வரவேற்பை பெறாததால் பின்னர் “மனதின் குரல்” என்று தமிழில் வந்த பிறகே கவனிக்கப்பட்டது.

இந்திக்கு மாறி வரும் நிறுவனங்களின் Tag line

HDFC ICICI வங்கிகள் Paytm Mobikwik போன்ற நிறுவனங்களில் Tag line ஆங்கிலம் மறைந்து இந்தி மாறி விட்டது.

HDFC யில் “We understand your world” தற்போது “Bank aapki mutthi mein” (Bank at your finger tips) என்று மாறி விட்டது, சில இடங்களில் மட்டும் இன்னும் மாற்றம் பெறாமல் உள்ளது.

ICICI யில் “Khayaal aapka” என்று மாறி விட்டது.

இது போல Paytm (Paytm karo), Mobikwik (Hai Na), Make my trip (Dil toh roaming hai) என்று முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் மாற்றி விட்டன.

நமக்கு வரும் சமையல் பொருட்களின் பைகளில் வரும் பெயர்கள் பருப்பு Dal , தயிர் Dahi, பால் Doodh, கோதுமை Atta  ஆகி விட்டது. இதெல்லாம் ஆரம்பம் தான்.

மத்திய அரசின் நெருக்கடி

மத்திய அரசின் ஆதரவு தேவை என்பதாலும் இந்நிறுவனங்களின் முதலாளிகள் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும் இதைச் செயல்படுத்தி இருப்பார்கள்.

கூகுள் கூடத் தற்போது இந்தியை முன்னிலைப் படுத்தி வருகிறது. இதற்கும் வங்கிகளின் Tag Line க்கும்  மோடியின் / மத்திய அரசின் நெருக்கடி நிச்சயம் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.

ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுள்ள இந்தியாவில் கால் ஊன்ற கூகுளுக்குத் தேவை இருக்கிறது எனவே, மத்திய அரசின் நிர்பந்தங்களுக்குப் பணிந்து தான் ஆக வேண்டும்.

இதை மோடி ஆதரவாளராகக் கேட்டால் முட்டாள்தனமான வாதம், இந்தித் திணிப்பு என்ற நிலையில் யோசித்தால் இதில் நடப்பதை புரிந்து கொள்ளலாம்.

எந்த நிலையில் இருந்து யோசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இதை அணுக முடியும்.

வங்கிகளின் இந்தித் திணிப்பு

இந்தியாவிலேயே மிகத்தீவிரமாக இந்தித் திணிப்பு நடைபெறும் இடம் வங்கிகள் தான்.

படிவங்கள் முதல், அறிவிப்புகள் அனைத்தும் இந்தி முதன்மையாக ஆக்கிரமித்து இருக்கிறது, மாநில மொழியான தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.

பணியாளர்கள் வட மாநில ஊழியர்களாக மாறி வருகிறார்கள். இது சிறு நகரமான சத்தியமங்கலத்தில் (SBI) கூட நடைபெற்று இருக்கிறது.

தற்போது மேற்கூறிய செய்தியான ATM களில் தமிழ் நீக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மேல் என்ன திணிப்பு வேண்டும்?

ரயில் நிலையங்கள்

வங்கிகளை அடுத்து ரயில் நிலையங்களில் இந்தித் திணிப்பு தீவிரமாக உள்ளது.  தமிழ் அறிவிப்புகள் சில நிலையங்களில் புறக்கணிப்பு செய்யப்படுகின்றன.

அறிவிப்புகள் இந்தியிலேயே எழுதப்பட்டுள்ளன. பயணச்சீட்டுகளில் தமிழ் இல்லை.

பணமதிப்பிழப்பு நடந்த சமயத்தில் IRCTC யில் இந்திக்கு என்று தனித்தளம் இருந்தும் ஆங்கிலத் தளத்தில் வேண்டும் என்றே வலுக்கட்டாயமாக இந்தி அறிவிப்பை வெளியிட்டனர், கீழே ஆங்கிலம் வந்தது ஆனால், பெரும்பாலோனோர் கவனிக்கவில்லை.

பிற்சேர்க்கை இவற்றைப் பார்க்கும் போது கடுப்பாகுமா ஆகாதா?!

மேற்கூறிய செய்திகள் உங்களுக்குத் தமிழகத்தில் / இந்தியாவில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை ஓரளவு புரிய வைத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

இதில் கூறப்பட்டுள்ளது அனைத்துமே உண்மை, நடந்த நிகழ்வுகள்.

நானாகக் கூறினால் இந்தி எதிர்ப்பு முட்டாள் ஒருத்தன் கற்பனையாக உளறிட்டு இருக்கான் என்று தான் நினைப்பீர்கள்.

எனவே தான் காத்திருந்து அவசரப்படாமல் தரவுகளைத் திரட்டி செய்திகளின் ஆதாரத்துடன் கொடுத்து இருக்கிறேன்.

நான் கூறுவதைப் பொய் என்று கூறமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தியால் பல நூற்றாண்டு பெருமை வாய்ந்த தமிழ் மொழி / பண்பாடு எப்படி அழியும்?!

நியாயமான கேள்வி தான் ஆனால், அழியும் என்பதே பதில்.

ஆனால், முழுவதும் அழியாது எதோ ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும். தற்போது 90% மக்கள் பேசினால், இந்தித் திணிப்புத் தொடர்ச்சியாக நடைபெற்றால், பிற்காலத்தில் 10% மக்களே பேசுவார்கள்.

லாஜிக்காகப் பேசினால் தமிழ் அழியவில்லை என்று கூறலாம் அதான் 10% இருக்கிறதே!

ஆனால், 90% க்கும் 10% க்கும் உள்ள வித்யாசத்தில் உள்ள லாஜிக்கை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இந்த 10% பின் வரும் தலைமுறைகளில் காணாமல் போகும்.

இலங்கை, சிங்கப்பூரில் தமிழ் வாழ வாய்ப்புள்ளது, இந்தியாவில் அல்ல.

இந்தி பரவியதால் தற்போது என்ன நடந்து விட்டது?

இந்தி பரவியதால் பல வட மொழிகள், அவர்கள் பண்பாடு அழிந்து விட்டது, அழிந்து கொண்டு இருக்கிறது. போஜ்புரி, மைதிலி மொழிகள் என்ன ஆனது தெரியுமா?

இது போலப் பல மொழிகள் அழிந்து விட்டது / வருகிறது. மொழி மட்டுமல்ல அவர்கள் அடையாளமும் (மேலே உள்ள படம் இதன் தாக்கத்தை விளக்கும்).

இதே தான் திணிக்கப்படும் போது தமிழுக்கும் நடக்கும். நம் அடையாளம் துடைத்து எடுக்கப்படும்.

தமிழின் பயன்பாடு குறையும் அதற்கான தேவைகளும் குறைந்து விடும்.

கேரளா கர்நாடகா ஆந்திராவில் இந்தி பேசுவதால் அவர்கள் மொழி அழிந்தா விட்டது?!

மேலோட்டமாகப் பார்த்தால் அவர்கள் மொழி பண்பாடு அழியவில்லை என்று தான் தோன்றும் ஆனால், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அடையாளத்தை இழந்து வருகிறார்கள்.

இது குறித்து அந்த மாநில மொழிப் பற்றாளர்களை கேட்டுப்பாருங்கள், பக்கம் பக்கமாக தரவுகளை அடுக்குவார்கள்.

நமக்கு தெரியவில்லை என்பதாலே, எதுவுமே நடக்கவில்லை என்பது அர்த்தமல்ல. சில வருடங்களில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும்.

தற்போது கேரளா தனது மாநிலத்தில், பள்ளிகளில் மலையாளப் பாடத்தைக் கட்டாயமாக்கி அவசர சட்டம் இயற்றி இருக்கிறது. ஏன் என்று யோசித்தால், உங்களுக்கு பதில் கிடைக்கும்.

ஜப்பான் ஜெர்மன் சீனா போல இந்தியா முழுக்க ஒரே மொழி இருந்தால் நல்லது தானே?!

நல்லது தான் ஆனால், இந்த நாடுகளில் எல்லாம் அனைவரும் ஒரே இனம் மதத்தை அடையாளத்தைச் சார்ந்தவர்கள்.

எனவே, ஒரு மொழி இருப்பதில் வியப்பில்லை.

ஆனால், இந்தியா அப்படியா?! பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள் என்று தனித்துவம் நிறைந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அடையாளம்.

இந்த நிலையில் இங்கே எப்படி ஒரே மொழி கொண்டு வர முடியும்?! கொண்டு வந்தால் மேற்கூறிய அடையாளங்கள் அழிக்கப்படும். இது எப்படி ஏற்புடையதாகும்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே மொழி என்பது சரியான வாதம் ஆனால், அந்த வாதத்துக்கு ஏற்ற நாடு இந்தியா அல்லவே! ஒப்பீடு செய்வதிலும் ஒரு நியாயம் வேண்டாமா?!

நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் / மக்களின் அடையாளத்தை அழித்து வரக்கூடாது.

பெரும்பான்மையாவர்கள் பேசுகிறார்கள் என்பதாலே “இந்தி” தகுதி பெற்று விடுமா?

இந்த லாஜிக்கை பின்பற்றினால்…

இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம் எனவே, இந்து நாடு என்று கூற வேண்டும், காகம் தான் அதிகம் எனவே தேசிய பறவையாகக் காகம் இருக்க வேண்டும்.

நாய் தான் பெரும்பான்மை எனவே நாய் தான் தேசிய விலங்காக இருக்க வேண்டும்.

பெரும்பான்மை என்பது ஒரு தகுதி அல்ல!

எனவே, இந்தி தான் பேச வேண்டும் என்றால் மேற்கூறியவையும் பெரும்பான்மை என்று கருதி அதற்கு அந்தத் தகுதியை அளிக்க வேண்டும்.

இந்தி தெரியாததால் முன்னேற முடியவில்லை, என் முன்னேற்றத்தை தடுத்து விட்டீர்கள்!

உண்மையில் இதன் இன்னொரு அர்த்தம் என்ன தெரியுமா? தாழ்வுமனப்பான்மை, இயலாமை.

எந்த ஒரு நபரும் தனக்குத் தேவை என்று வரும் போது அனைத்தையும் கற்றுக்கொள்வார். தமிழகத்தில் யாரும் இந்தி பேசுவதையோ கற்றுக்கொள்வதையோ தடுக்கவில்லை.

நம்முடைய கூச்ச சுபாவம், தாழ்வுமனப்பான்மை, இயலாமையை மறைக்க “என்னை இந்தி கற்றுக்கொள்ள முடியாமல் செய்து விட்டார்கள்” என்று கூறுகிறார்கள்.

இந்தியை அல்ல இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்

தமிழகத்தில் இந்தியை எதிர்க்கவில்லை இந்தித் திணிப்பு  தான் எதிர்க்கப்படுகிறது. இந்த வித்யாசம் புரிந்து கொள்ளாமல் திட்டுபவர்களே அதிகம்.

தமிழக அரசு தமிழைக் கட்டாயமாக்குகிறது என்றால் தன் மாநில மொழி அழிந்து விடக்கூடாது என்ற எண்ணம். இதில் என்ன தவறு இருக்கிறது?

வேறு மாநிலத்தில் சென்று தமிழைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கூறினால் அது மொழி வெறி தன் மாநிலத்தில் என்றால் மொழிப் பற்று.

வட மாநிலத்தில் இருந்து வந்து சில வாரங்களில் தமிழைப் பேசுகிறார் வட மாநிலத் தொழிலாளி.

இவர் பேசும் போது வட மாநிலத்துக்குச் சென்று உங்களால் இந்தி பேச முடியவில்லை என்றால் அது இயலாமை தானே!

ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம் அது போல உள்ளது.

இந்தி படித்தால் முன்னேறலாம்!

சொல்றேன்னு கோபித்துக்கொள்ளாதீர்கள். இது ஒரு  முட்டாள்த்தனமான வாதம்.

இந்தி பேசாத தமிழகம் அடைந்து இருக்கும் வளர்ச்சி வட மாநிலங்கள் அடையவில்லை. தென் இந்தியாவே அதிகளவில் இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுத்து இருக்கிறது.

அதிகளவில் GDP கொடுப்பதும் தென் இந்திய மாநிலங்களே!

முதலில் மஹாராஷ்ட்ரா, இரண்டாவது நிலையில் தமிழகம் உள்ளது. இதை விடக்கொடுமை முதல் ஐந்து இடங்களில் ஒரு வட மாநிலம் கூட இல்லை. இந்தி பேசும் மாநிலங்கள் ஏன் பின்தங்கியுள்ளது?

Read3 States’ Contribution To India’s GDP Higher Than That Of 20 States Combined

100 சிறந்த பல்கலைக்கழகங்களில் அதிகம் தமிழகத்தில் இருந்தே வந்துள்ளன. இங்கே படிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் வட / தென் மாநில மாணவர்களே!

கல்லூரி மாணவர்களைக் கேட்டுப்பாருங்கள், நான் கூறுவது உண்மையா பொய்யா என்று தெரியும்.

வளர்ச்சிக்கு மொழியைக் காரணம் கூறாதீர்கள். மாநிலத்தின் திறமையையே கணக்கில் கொள்ள வேண்டும்.

வட இந்தியாவில் வேலை கிடைக்காமல், வளர்ச்சி இல்லாததால், அடக்கு முறையால், படிப்பறிவு இல்லாததால், மிகக்குறைந்த சம்பளத்தால் தினமும் லட்சக்கணக்கில் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வை முன்னேற்ற தென் இந்தியா வருகிறார்கள்.

நீங்கள் விடியற்காலை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள் எத்தனை ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள் என்று.

ஒரு முறை “சென்னை சென்ட்ரலில் தான் இருக்கிறோமா!” என்று சந்தேகமே வந்து விட்டது.

இது பொய்யல்ல.. 100% உண்மை.

எங்கள் கிராமத்தில் 1000 வட மாநில தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா? என்னாலும் நம்ப முடியவில்லை, கேட்டு கிறுகிறுத்து இருக்கிறேன்.

தமிழ்நாட்டைத் தேடி இந்தி பேசுபவர்கள் ஏன் வருகிறார்கள்?

இந்தி பேசினால் முன்னேற முடியும் என்றால் தமிழ் பேசும் தமிழ்நாட்டுக்கு இவர்கள் ஏன் வரவேண்டும்?!

இந்தி படித்தால் முன்னேறலாம்!” என்பதெல்லாம் இந்தி முக்கியம் என்று உணர்த்த செய்யப்படும் மூளைச் சலவை வார்த்தைகள், இதில் ஏமாறாதீர்கள்.

தொழில்ரீதியாகச் செல்லும் போது பேச வேண்டும் என்றால், கற்றுக்கொள்ளுங்கள். வட மாநில தொழிலாளி பேசும் போது உங்களால் முடியவில்லை என்றால், அது யார் குற்றம்!

வட மாநில தொழிலாளி இதற்கு என்று வகுப்பு எடுத்துப் படித்தா தமிழகம் வந்தார்! அவர் அசத்தலாகச் சமாளிக்கவில்லையா?!

திறமையான அரசியல்வாதி கையில் இருந்து இருந்தால், தற்போது தமிழகம் இருக்கும் நிலையே வேறு. அந்த அளவுக்குத் திறமையான படிப்பறிவுள்ள மாநிலம் தமிழகம்.

ஊழல் அரசியல்வாதிகள் இருந்தே இவ்வளவு முன்னேறி உள்ளது என்றால், ஊழல் இல்லையென்றால், தொட முடியாத உயரத்தில் இருக்கும்.

இந்தி மொழி தெரிந்து கொள்ளக்கூடாதா?!

இந்தி அல்ல எந்த மொழியையும் கூடுதலாகத் தெரிந்து வைத்து இருப்பது நல்லது. எத்தனை மொழி தெரிந்து வைத்து இருக்கிறோமோ அவ்வளவு நல்லது.

இந்தித் திணிப்பை எதிர்ப்பது இந்தியையே எதிர்ப்பதாக உருவகப்படுத்திக் கொள்ளாதீர்கள், தவறான எண்ணம். இந்தி கற்றுக்கொள்வதில் தமிழகம் தான் முதல் இடம்.

என்னை இந்தி படிக்க விடாமல் செய்து விட்டார்கள்?

இந்தப் பொதுவான கருத்து மக்களிடையே பரவி இருக்கிறது. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ இதையே நானும் முன்பு நினைத்துக்கொண்டு இருந்தேன்.

ஆனால், பல புத்தகங்கள் படிக்கும் போது அதன் பிறகு பல்வேறு சம்பவங்களில் கிடைக்கும் அனுபவத்தில் இது எவ்வளவு ஒரு தவறான எண்ணம் என்பதை நான் உணர்ந்தேன்.

இந்தி திணிக்கப்படுவதால் உள்ள ஆபத்துக்களைத் தாமதமாகவே உணர்ந்து கொண்டேன்.

இன்றைய அரசியல் தலைவர்கள் தமிழை வைத்து வியாபாரம் செய்தாலும் அன்று (1938 – 1968) செய்த போராட்டம் தான் இன்று நம் தமிழ் அடையாளத்தை தக்க வைத்து இருக்கிறது.

இந்தியாவின் தேசிய மொழி

இந்தியாக்கு தேசிய மொழி என்று எதுவுமில்லை. அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் உள்ளது.

ஆனால், பல முக்கிய வட மாநில அரசியல் தலைவர்களே ராஜ்நாத் சிங் உட்பட இந்தியை தேசிய மொழி என்று தவறாக மக்களிடையே விதைத்து வருகிறார்கள்.

இந்தி தெரியவில்லை என்றால் தேச விரோதி

தற்போது குறிப்பாகப் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு “தேச விரோதி” என்ற சொல் பிரபலமடைந்து வருகிறது. யார் என்ன செய்தாலும் உடனே தேச விரோதி என்று கூறி விடுகிறார்கள்.

இந்தி தேசியமொழி அல்ல என்று கூறினால் “நீ பாகிஸ்தானுக்குப் போ!” என்கிறார்கள். இந்தி தெரியவில்லை என்றால் எதோ கீழ்த்தரமானவர்களைப் பார்ப்பது போலக் கிண்டலாகப் பார்க்கிறார்கள்.

தமிழைக் கிண்டல் செய்யும் தமிழர்கள்

வேறு மொழியினர் குறிப்பாக இந்தி பேசும் மக்கள் தமிழை, தமிழர்களைக் கிண்டல் செய்தால் எனக்கு அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை காரணம் அது இயல்பு இதில் வியக்க ஒன்றுமில்லை.

ஆனால், தமிழர்கள் சிலரே தமிழை இழிவாகப் பேசும் போது ஏற்படும் மன வருத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. தன் தாயையே பழிப்பதற்கு ஈடானது.

நம் தாய்க்கு வயதான பிறகு பயனில்லை என்று புறக்கணிப்பது எவ்வளவு ஒரு கீழ்த்தரமான செயலோ அது போன்றது தான் தமிழை இழிவாகப் பேசுவதும், புறக்கணிப்பதும்.

மொழியை, நம் அடையாளத்தைப் புறக்கணிப்பது தாயை புறக்கணிப்பது போல.

இந்தத் தளம் (2006 ல்) எழுத வந்த போது எனக்குத் தமிழ் மீது எந்த ஒரு பெரிய மதிப்பும், ஆர்வமும் இல்லை.

ஆனால், எழுத எழுதத் தான் தமிழை அதன் சிறப்பை நான் எவ்வளவு தூரம் இவ்வளவு வருடங்களாக இழந்து இருக்கிறேன் என்று புரிந்து கடும் ஏமாற்றமாக இருந்தது.

தாமதம் என்றாலும், தற்போது தமிழுக்காக என்னுடைய தளத்தில் முடிந்தவரை என் பங்கை ஆற்றி வருகிறேன்.

இந்தித் திணிப்பு வளர்க்கும் தமிழ்

இளைஞர்கள் இடையே தமிழுக்குத் தற்போது முன்பை விட ஆதரவு அதிகரித்து இருக்கிறது. சமூகத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் இந்தியை திணிப்பதாலே!

மத்திய அரசு இந்தியை திணிக்கச் செய்யும் முயற்சிகள் தமிழைப் பலப்படுத்தி வருகிறது.

சில வருடங்கள் முன்பு “நீயா நானா” நிகழ்ச்சியில் தமிழைக் கிண்டல் செய்து ஒரு பிரிவினர் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அது ஒரு சாதாரண நிகழ்வு (எனக்கு இன்னும் மனசு ஆறவில்லை).

இதே நிகழ்ச்சி தற்போது நடைபெற்று இருந்தால், தமிழ் Meme Creators வச்சுச் செய்து இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்தித் திணிப்பு இளைஞர்களை மாற்றி இருக்கிறது.

ஒரு வகையில் எவ்வளவுக்கெவ்வளவு இது போல மட்டம் தட்டுகிறார்களோ அது மேலும் தமிழைத் தீவிரமாக்குகிறது, தமிழுக்கான ஆதரவை அதிகரிக்கிறது.

ஆனால், ஆட்சி பலம், அதிகாரம், முடிவு எடுக்கும் திறன் மேலிடத்தில் இருப்பதே பயத்தையும் கொடுக்கிறது. எத்தனை நாட்கள் அதிகாரத்தை எதிர்த்துப் போராட முடியும்?!

இந்தியைத் திணிக்க அனுமதித்தால் என்ன பிரச்சனை?

ஒரு இனத்தின் அடையாளத்தை அழிக்க ஒரு மொழியை அழித்தால் போதும். இதைத்தான் மத்திய அரசு செய்து கொண்டு இருக்கிறது.

இதில் ஒரு சின்னத் திருத்தம், மத்திய அரசு தமிழ் இனத்தின் அடையாளத்தை அழிக்க முயல்கிறது என்று கூறாமல் இந்தியை தமிழகத்தில் மாற்ற முயல்கிறது என்று வைத்துக்கொள்ளலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்தி நுழையும் போது தமிழின் தேவையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.

முன்பே கூறியபடி திரைப்படங்கள், சீரியல், வங்கிகள், ரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள் என்று எங்கும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இடங்களில் அவர்களின் தேவைகளில் இந்தியே ஆதிக்கம் செலுத்தும்.

இது தொடரும் போது லாஜிக்காக மக்கள் தமிழைக் குறைத்து இந்தியில் பழகி விடுவார்கள்.

இவை இதோடு நிற்காமல் நம் அடையாளத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றும் பண்டிகைகளும் அதன் முக்கியத்துவத்தை இழந்து வட மாநில பண்டிகைகளுக்குப் பொது விடுமுறையும் அதைக் கொண்டாடும் மக்களும் அதிகரித்துத் தமிழ் பண்டிகைகள் கொண்டாட்டம் குறைந்து விடும்.

இதுவே பண்பாட்டு / கலாச்சார மாற்றம்.

ஒரு வருடத்தில் நடக்கக்கூடிய மாற்றம் அல்ல!

இதைப் படித்தால் சிலருக்கு குறிப்பாக இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்களை எதிர்ப்பவர்களுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம் ஆனால், இது தான் நடைமுறை எதார்த்தம்.

இதெல்லாம் ஒரு நாளில், ஒரு வருடத்தில் நடக்கக்கூடிய மாற்றம் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக Slow Poison போல ஊடுருவி அழிக்கும். இரண்டு தலைமுறைகள் கூட ஆகலாம்.

இன்று நான் கூறுவது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம் ஆனால், இது நடைபெறும் போது நானோ நீங்களோ இருக்க மாட்டோம் ஆனால், இந்தக் கலாச்சார மாற்றம் நடைபெறும்.

இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், இன்று நாம் போராடி தடுத்தாலும் இதைச் சில தலைமுறைகள் தள்ளிப்போடலாமே தவிர முழுமையாகத் தடுக்க முடியாது.

அனைத்து மாநில அடையாளங்களும் அழிந்த பிறகு இறுதியாகத் தமிழ் அடையாளமும் அழியும்.

இதை நான் கூறும் போது, இது நடக்கப்போகிறது என்று நினைக்கும் போது நான் அடையும் மனவருத்தம்… 🙁 அதை வார்த்தைகளால் கூற முடியாது.

இது போல நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் நம் அடையாளத்துக்காகப் போராட வேண்டும். இவை இளைஞர்கள் கையில் தான் உள்ளது.

மொழி வெறி, மொழிப் பற்று என்றால் என்ன?

இந்தி மட்டுமே அனைவரும் பேச, பயன்படுத்த வேண்டும் என்று தன்னுடைய அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தி, மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணாக்கி புரியாத விளம்பரங்களை திணித்தாவது இந்தியைப் புகுத்த வேண்டும் என்று மாநில மொழிகளை தரமிறக்க முயற்சி செய்யும் மத்திய அரசு செய்வது மொழி வெறி.

தன்னுடைய மொழியை, அடையாளத்தை அழிய விடக்கூடாது என்று தன் மொழியைக் காக்க அதிகாரத்தை எதிர்த்து உரிமைகளைப் பெற இறுதி வரை போராடுவது மொழிப் பற்று.

மற்ற மாநிலங்கள் கை விட்ட நிலையில் தன் அடையாளத்துக்காக கடைசி வரை போராடும் தமிழனாக இருக்க மிக்கப் பெருமைப்படுகிறேன்.

ஏன் கட்டுரை இவ்வளவு பெரியது?

நாளை யாராவது என்னை கேள்வி கேட்கும் போது, தனித்தனியாக விளக்கம் அளிக்காமல் இந்த சுட்டியைக் கொடுத்து இதில் சென்று பாருங்கள் என்று இனி நான் கூற முடியும்.

மற்றவர்களுக்கும் பிரச்சனைகளைக் கூற, விளக்கமளிக்க இக்கட்டுரை உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். இது போல பலரும் கட்டுரைகள் எழுத வேண்டும் அப்போது தான் புது புது செய்திகள், கருத்துகள் கிடைக்கும்.

உங்களின் “ஈகோ”வை தூண்டுவது என் விருப்பமல்ல

நான் மாற்றுக்கருத்துள்ளவர்களை வேண்டிக்கொள்வது என்னவென்றால், மேற்கூறியதை உணர்ச்சிவசப்பட்டுப் புறக்கணிக்காமல் கோபப்படாமல் பொறுமையாக யோசித்துப் பாருங்கள், ஒருவேளை நான் கூறுவதில் உள்ள நியாயம், ஆபத்து புரியலாம்.

நான் மிக ஆவேசமாக உணர்ச்சிகரமாக இக்கட்டுரையை எழுதி இருக்க முடியும் ஆனால், அது என்னுடைய நோக்கமல்ல.

மாற்றுக்கருத்து உள்ளவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோ அவர்கள்  “ஈகோ”வை தூண்டுவதோ என் விருப்பமல்ல அதற்காக இக்கட்டுரையும் எழுதப்படவில்லை.

மாற்றுக்கருத்து உள்ளவர்கள் திணிப்பின் ஆபத்தை கொஞ்சமாவது உணர்ந்து திணிப்பின் எதிர்கால தாக்கத்தைப் புரிந்து கொண்டால் குறைந்த பட்சம் ஐந்து பேராவது தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள நினைத்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.

நன்றி!

Image & News credits

Promote Linguistic Equality: Hindi is Not National Language of India

PLE Tamil Nadu (மொழியுரிமை முன்னெடுப்பு – தமிழ்நாடு)

இந்தித் திணிப்புக்கு எதிரான மக்கள் இயக்கம்

& Media

கொசுறு

இதைப் படிக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

“இந்தி தினம்” ஜனவரி 10 வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் இந்தியின் சிறப்பு மேலும் அதிகரிக்கிறது, கவன ஈர்ப்புக் கிடைக்கிறது.

இதே போலத் தமிழுக்கும் ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டும் “தமிழ் நாள்” (Tamil Day) என்று.

இது தமிழுக்குக் கூடுதல் கவன ஈர்ப்பை கொடுக்கும், தமிழ் மக்களுக்கு ஒரு மகிழ்வை தரும், குழந்தைகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும், தமிழின் முக்கியத்துவம் அறியப்படும்.

எனவே, ஏதாவது ஒரு நாளை தமிழ் மொழி நாளாகக் கொண்டாட அனைவரும் தீர்மானிக்க வேண்டும். மீதியை Meme Creators பார்த்துக்கொள்வார்கள்.

இது பண்டிகை அல்லாத சாதாரண நாளாக இருக்க வேண்டும் ஏனென்றால், பண்டிகை நாள் கொண்டாட்டத்தில் “தமிழ் நாள்” கவனம் சிதறடிக்கப்படும்.

பிற்சேர்க்கை

இனி இந்தித் திணிப்பு குறித்த செய்திகளை அவ்வப்போது இக்கட்டுரையில் சேர்க்க திட்டமிட்டுள்ளேன்.

இந்தித் திணிப்பு குறித்துப் பேசும் போது அனைத்தையும் ஒரே இடத்தில் காண, விளக்க எனக்கும் மற்றவர்களுக்கும் எளிமையாக இருக்கும் என்று கருதுகிறேன்.

உணர்ச்சிப் பதிவுகளாக இல்லாமல், உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டுமே பகிர முடிவு செய்துள்ளேன்.

19 ஏப்ரல் 2017

கடந்த 10 நாட்களில் மட்டும் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியக் கோட்பாடுக்கே எதிரானது.

30 April 2017

27 பிப்ரவரி 2018

05 March 2019

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. //நாளை யாராவது என்னை கேள்வி கேட்கும் போது, தனித்தனியாக விளக்கம் அளிக்காமல் இந்த சுட்டியைக் கொடுத்து இதில் சென்று பாருங்கள் என்று இனி நான் கூற முடியும்.//

    உண்மை அண்ணா… என்னிடம் ஹிந்தி கட்டாயம் வேண்டும் என்று வாதிட்ட இரண்டு பேருக்கு பகிர்ந்திருக்கிறேன்.

    நன்றி.

  2. நண்பரே, நான் உங்கள் எழுத்துக்களை பல வருடங்களாக கவனித்து வருகிறேன. மிக அருமையான பதிவுகள்.
    இந்தப்பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் உழைப்பு தெரிகிறது. சரியான பதிலடி. இந்த தொகுப்பை அடிக்கடி பார்க்க வர வேண்டி இருக்கும். நன்றி! நன்றி!

  3. முற்றிலும் உண்மை, மக்கள் தாமதமாக உணர்கிறார்கள்.

  4. கிரி எனக்கு ஹிந்தி தெரியும், கட்டாயத்தில் கற்றுக்கொண்டதும் உதவுகிறது தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை… பாரதி போல் யாமறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிது எங்கும் இல்லை என்பதும் உண்மை தான்..

    இவை எல்லாம் இருந்தும் ஊடகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் வாசிப்பில் ஆங்கில மற்றும் மாற்று மொழி கலப்புகள் செய்வதை கண்டு ரத்தக்கண்ணீர் தான் வருகிறது.

    • கிரி, மிக அருமையான அவசியமான ஆகச்சிறந்த கட்டுரை . உங்கள் எழுத்து நடை எங்கேயோ போய்விட்டது . நான் உங்கள் பதிவுகள் சிலவற்றை உங்கள் அனுமதி இல்லாமல் பகிந்திருக்கிறேன் . இந்த பதிவை நிச்சயம் பல தளங்களில் பகிரப்போகிறேன் .
      உங்கள் அனுமதி தேவை.
      நன்றி,

      அழகர்

  5. கிரி, மிக அருமையான அவசியமான ஆகச்சிறந்த கட்டுரை . உங்கள் எழுத்து நடை எங்கேயோ போய்விட்டது . நான் உங்கள் பதிவுகள் சிலவற்றை உங்கள் அனுமதி இல்லாமல் பகிந்திருக்கிறேன் . இந்த பதிவை நிச்சயம் பல தளங்களில் பகிரப்போகிறேன் .
    உங்கள் அனுமதி தேவை.
    நன்றி,

    அழகர்

  6. ரொம்ப அவசியமான கட்டுரை. எல்லோரும் படித்து அறிந்துகொள்ள வேண்டும்.

    நம்முடைய பிரச்சனை, இந்த நிலைக்குப் போராடும் தார்மீக உரிமை நம் தமிழக அரசியல்வாதிகளிடம் (வாக்குவங்கி உள்ள) இல்லை.

    தமிழக சிந்தனையாளர்கள் இதுபற்றி விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும். அரசியல் கலவாத, மாணவர்கள் மட்டும் இதற்குப் போராடினாலும் நல்லது. அரசியல்வாதிகள் அந்தப் போராட்டத்திற்கு வந்தால், நிச்சயம் போராட்டம் பிசுபிசுக்கும்.

  7. மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரை. நான் மனதளவில் சோர்ந்து போய் யோசித்த விசயங்களை தரவுகளைக் கொண்டு மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கீங்க.

  8. மிக சிறந்த பதிவு. என் மனதில் கொண்டிருந்த விஷயங்களை உங்கள் பதிவில் கண்டு மகிழ்ந்தேன். இதை படிக்கும் நம் இளைய தலை முறையினர் தமிழை பல தளங்களில் கொண்டு செல்ல உறுதி ஏற்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!