நாவலாசிரியர் ப. சிங்காரம் அவர்கள் எழுதிய கடலுக்கு அப்பால் நாவலில் அவரிடம் எடுத்த பேட்டியில் அவர் கூறிய கருத்துக்களே இக்கட்டுரைக்குக் காரணம்.
ப. சிங்காரம்
தனது 18 வது வயதிலேயே மலேயா சென்று விட்டதால், இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த வேளை என்பதாலும், தமிழ் புத்தகங்கள் படிக்க வாய்ப்புக்கிடைக்கவில்லை. Image Credit
இதனால், ஆங்கிலப்புத்தகங்கள், ஆங்கில நாவலாசிரியர்கள் புத்தகங்கள் மட்டுமே நூலகத்தில் படித்துள்ளார். எந்தத் தமிழ் நூல் அறிமுகம், நடை அறிமுகமே இல்லாமல் ஒரு நாவல் எழுதியுள்ளது வியப்பை அளித்தது.
ஏனென்றால், ஆகச்சிறந்த நாவல் இல்லையென்றாலும், ஒரு நாவலுக்கான அனைத்து அம்சங்களையும் கடலுக்கு அப்பால் நாவல் கொண்டு இருந்தது.
இவர் நாவல் எழுதிய ஆண்டு 1950 ஆனால், புத்தகமாக வெளியான ஆண்டு 1959.
கவனிப்பதில்லை
‘இன்னைக்கு நம்ம ஆளுங்க இல்லாத இடம் உலகத்தில் எங்க இருக்கு? ஆனால், போன இடத்தில் என்ன இருக்குனு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க.
புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப் பத்தி ஒரு இடம் வருது. அது நாங்க யுத்த நேரத்துல இந்தோனேசியாவிலிருந்து மலேயாக்கு சரக்குகளோட போன போது தான்.
புயலடிச்சதால சரக்குகளைக் கடலில் வீசினோம். நாவல் எழுதறப்ப தோணுன சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்ட கேட்டேன்.
ஆனால், போனோம் வந்தோம். கூட யாரு வந்தா என்ன நடந்துகுங்குறதெல்லாம் ஞாபகமில்லேன்னுட்டாங்க.
வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்டுல வந்து தங்கினா போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப்பிடுவான்.
உண்மையைச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விஷயமிருக்கு தெரியுமா? ஆனால், கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுங்களுக்குக் கிடையாது.
இன்னைக்கு வரைக்கும் தமிழ் நாவல்கள் வாசித்தது இல்லை. பூரா ஆங்கிலம் தான்.
இப்பத்தான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு, இரண்டு பக்கம் கூட வாசிக்க முடியல‘.
என்று விமர்சித்துள்ளார்.
பின் தொடர்வது
சிலருக்குப் பகிர விருப்பம் இருக்காது ஆனால், தெரிந்து கொள்ள விருப்பம் இருக்கும்.
தொழில்நுட்பம் இதைப் பலருக்கும் கொண்டு சேர்க்கிறது.
எனவே சிலர் கூர்மையாகக் கவனித்துக் கூறுவதை ஆர்வமாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் எண்ணிக்கையும் அதிகம்.
இத்தளத்தில் பலருக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நான் எழுதும் தகவல்கள், விமர்சனம், விவரிக்கும் முறை, தெரியாத செய்திகள் என்று எதோ ஒரு காரணத்துக்காகப் பின் தொடர்வார்கள்.
எனவே, மற்றவர்கள் கவனித்து எழுதுவதை, காணொளியாகக் காண்பிப்பதை பலரும் ஆர்வமாகக் கவனிக்கிறார்கள்.
எல்லாமே கன்டென்ட் தான்
சிறு சம்பவம், ஒரு குறிப்பிட்ட வரி போதும் ஒரு கட்டுரையாக எழுதி விடுவேன். அதே போல Vlog செய்பவர்கள் அனைத்தையும் காணொளியாக்க விரும்புவார்கள்.
யாருக்கும் தோன்றாத கோணம் ஃபோட்டோகிராஃபி ஆர்வம் உள்ளவர்களுக்குத் தோன்றும். அவர்களின் கண்கள் வித்தியாசமானவை, எதையும் கலையுடன் அணுகும்.
இவற்றையெல்லாம் பார்க்க ஒரு பெருங்கூட்டம் இருக்கும். எனவே, தொழில்நுட்பம் தற்போது பலருக்குப் பல செய்திகளைக் கொண்டு சேர்க்கிறது.
எனவே, சிங்காரம் அவர்கள் தற்போது இருந்தால், என்ன கூறியிருப்பார்? என்று தோன்றியது 🙂 .
சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா எழுத்துக்கள் மிக எளிமையானவை.
ஆனால், சிங்காரம் அவர்கள் சுஜாதா குறித்துக் கூறிய கருத்துகளை ஒரேயடியாகப் புறம் தள்ள முடியவில்லை. காரணம், தற்போது சுஜாதா கதைகளைப் படித்தால், சுவாரசியமாக இல்லை. காரணம், அவை Outdated ஆகி விட்டது.
எழுதப்பட்ட காலத்தில் பலரும் விரும்பத்தக்கதாக இருந்து இருக்கலாம் ஆனால், தற்போது அவை வரவேற்பு குறைந்து விட்டது.
ஒரு சில புத்தகங்கள் மட்டுமே இன்றும் பலராலும் ரசிக்கப்படுகிறது. மற்றபடி சுஜாதா என்ற பெயருக்காகப் படிப்பவர்களும் ஏராளம் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
ஆனால், வாழ்க்கை முறையைக் கூறும் நாவல்கள் தற்போதும் பலரால் ரசிக்கப்படுகிறது, அக்காலத்திய வாழ்க்கை முறை ஆவணமாகக் கருதப்படுகிறது.
பொன்னியின் செல்வன் இன்றும் Best Seller ஆக உள்ளது.
இலக்கியம் என்றால் என்ன?
தற்போது வரை இலக்கியம் என்றால் என்னவென்றே புரியவில்லை.
பிரபலத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இலக்கியம் என்பார்கள் ஆனால், அவர்கள் எழுதியது பெரும்பான்மை மக்களுக்குப் புரிவதில்லை.
இந்த இடத்தில் தான் சுஜாதா அவர்கள் வெற்றி பெறுகிறார். அனைவருக்கும் புரியும் வார்த்தைகளில் எளிமையாகக் கூறுகிறார், விளக்குகிறார் ஆனால், அவற்றில் சில காலம் கடந்து நிலைப்பதில்லை.
எக்காலத்திலும் ரசித்துப் படிக்கும் நூல்களை, வாழ்வியலை, காலத்தால் அழியாத நினைவுகளை எழுதுவதே இலக்கியம் என்று எடுத்துக்கொள்ளலாமா?!
இன்று வரை எனக்கு இது புரியாத புதிராக உள்ளது 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. உண்மையில் இந்த பதிவு என்னை கொஞ்சம் பின்னோக்கி சிந்திக்க வைக்கிறது.. கடந்த காலத்தில் வாசித்த நான் நேசித்த புத்தங்களை எல்லாம் தற்போது விரும்புகிறேனா?? என்றால் நிச்சயம் இல்லை.. அது போல ஒரு வாசகனாக என்னுடைய மனநிலையே இவ்வாறு இருக்கும் போது எழுத்தாளர்களின் நிலை எவ்வாறு இருக்கும்..
சில புத்தகங்கள் ஆசிரியர் வாழ்ந்த காலத்தில் கவனிக்க படாமல் அவர் மறைத்த பிறகு கொண்டாட்டப்பட்டுள்ளார்கள்.. நான் சுஜாதாவின் புத்தகங்கள் படித்தது மிக குறைவு.. ஆனால் முகமறியாமல் உள்ள பல ஆசிரியர்களின் பல புத்தகங்களை கல்லுரி பருவத்தில் படித்து இருக்கிறேன்..
எக்காலத்திலும் ரசித்துப் படிக்கும் நூல்களை, வாழ்வியலை, காலத்தால் அழியாத நினைவுகளை எழுதுவதே இலக்கியம் என்று எடுத்துக்கொள்ளலாமா?! – என்னை பொறுத்தவரை இது இலக்கியமாக கொள்ள இயலாது என்றே கருதுகிறேன்.. நூல்கள் வேறு இலக்கியம் வேறு என்றே கருதுகிறேன்.. நூல்களை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இலக்கியத்தை மரபு மீறாமல் எழுதவேண்டும்.. அது எல்லோர்க்கும் சாத்தியம் இல்லை..
கிட்டத்திட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் படித்த ஒரு நூல்.. காதலினால் அல்ல.. ரே.கார்த்திகேசு (மலேசியா) இவர் எழுதிய நூலின் இனிமை இப்போதும் என்னால் உணர முடிகிறது.. வாய்ப்பு இருந்தால் படித்து பார்க்கவும்..
ஆனால் எனக்கு என்றுமே விருப்பமான ஆசிரியர் என்றால் ஐயா அ.முத்துலிங்கம் தான்.. இவரின் எழுத்துகள் எனக்கு என்றுமே படிக்கும் போது சலிப்பு ஏற்பட்டதில்லை.. படித்தவற்றை மீண்டும் படிக்கும் போதும், புதிதாக படிக்கும் எண்ணமே ஏற்படும் தவிர.. போதும் என்று தோன்றாது.. குறிப்பாக இவரின் நகைச்சுவைகள், உவமைகள், அருமையாக இருக்கும்..
இவரின் எழுத்துக்களில் முடிவு மிகவும் எளிமையாக, மிகவும் சுவாரசியமாக இருக்கும்.. நான் படித்த மிக குறைவான எழுத்தாளர்களில் இவர் எனக்கு மிகவும் பிடித்து போனார்.. இவரை விட சிறந்தவர்கள் இருக்கலாம் அவற்றை படிக்கவும் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.. பின்வரும் பதிவை படிக்கவும்.. குறிப்பாக பதிவின் முடிவு. அவர் எழுதிய விதம்.. இது தான் இவரின் தனித்துவம்..
https://shorturl.at/HEStw
கிரி, தமிழ் எழுத்தாளர்கள் கடந்த 50 ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருப்பதே , இலக்கியம் என்றால் என்ன? அதன் வரையறை என்ன ? என்பது தான். புதுமை பித்தன், க நா சு முதல் இன்று எழுதும் ஜெயமோகன் அவர்கள் வரை இந்த விவாதம் தொடர்கிறது…
ஜெயமோகன் அவர்கள் நவீன இலக்கியத்தை இரண்டாக பிரிக்கிறார் – வணிக இலக்கியம் , செவ்விலக்கியம்(Classic).
வணிக இலக்கியம் : மக்களின் ரசனையை அறிந்து, அவர்களை மகிழ்விப்பதற்கு எழுதுவது வணிக இலக்கியம். தமிழ் வார இதழ்களில் பெரும்பாலும் தொடராக வரும். அவை சமகால பிரச்சனைகளை, சமூக உறவுகளை பற்றி பேசி இருக்கும். காலம் கடந்த பின்பு, அடுத்த தலைமுறைக்கு அந்நியப்பட்டு போகும். 80 களில் எழுதிய பெரும்பாலான நவீனத்துவ எழுத்தாளர்களின் நாவல்கள் காலாவதி ஆகிவிட்டன. பெண் வேலைக்கு போவது, ஆண் பெண் உறவுகள், மறுமணம் மற்றும் பல சமூக காரணிகள் கால மாற்றத்தால் இப்போது படித்தால் வேடிக்கையாக இருக்கும்.
செவ்விலக்கியம்: ஆசிரியருக்கு என்று ஒரு vision இருக்கும், அதை ஒரு கனவாகவோ தரிசனமாகவோ முன் வைப்பார்.இவை பெரும்பாலும் மனித வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளை முன்வைக்கும் – மரணம், அறம், துரோகம், மனித சிறுமைகள். நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஓரளவு முழுமை பெற்று இருக்கும். முக்கியமாக பிரச்சாரமாகவோ, முன் முடிவுகளையோ வைக்காது. முக்கியமாக வாசகர்கள் தங்கள் கற்பனைகளை, பார்வைகளை நிரப்பி கொள்ள இடம் இருக்கும் (நோலன் படங்கள் போல).
தமிழ் சூழலில் வாசிப்பவர்கள் மிக குறைவு. என்னை பொறுத்தவரை,வாசகனை வாழ்வின் முழுமையை நோக்கி உந்துவதும், விடுதலை, sympathy மற்றும் empathy யை மேலோங்க செய்யும் அனைத்தும் இலக்கியமே.
@யாசின்
“என்னை பொறுத்தவரை இது இலக்கியமாக கொள்ள இயலாது என்றே கருதுகிறேன்.. நூல்கள் வேறு இலக்கியம் வேறு என்றே கருதுகிறேன்.. நூல்களை யார் வேண்டுமானாலும் எழுதலாம்.”
இந்த இலக்கிய குழப்பம் தீராது போல இருக்கே 🙂
“கிட்டத்திட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் படித்த ஒரு நூல்.. காதலினால் அல்ல.. ரே.கார்த்திகேசு (மலேசியா) இவர் எழுதிய நூலின் இனிமை இப்போதும் என்னால் உணர முடிகிறது.”
10 ஆண்டுகளுக்கு முன்பா?! எனக்கு பொன்னியின் செல்வன் கூட சில பகுதிகள் மறந்து விட்டது ஆனால், அதன் சுவை என்றும் இருக்கும்.
“ன்றுமே விருப்பமான ஆசிரியர் என்றால் ஐயா அ.முத்துலிங்கம் தான்.. இவரின் எழுத்துகள் எனக்கு என்றுமே படிக்கும் போது சலிப்பு ஏற்பட்டதில்லை.. படித்தவற்றை மீண்டும் படிக்கும் போதும், புதிதாக படிக்கும் எண்ணமே ஏற்படும் தவிர.. போதும் என்று தோன்றாது.. குறிப்பாக இவரின் நகைச்சுவைகள், உவமைகள், அருமையாக இருக்கும்”
இது போன்று அமைவது கடினம். எப்போது படித்தாலும் அதே சுவையுடன் ஒருவர் எழுத முடிகிறது என்றால், அவர் உண்மையிலேயே ஆகச்சிறந்த எழுத்தாளரே!
“இவரை விட சிறந்தவர்கள் இருக்கலாம் அவற்றை படிக்கவும் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை”
அது என்ன அப்படியொரு முடிவு! 🙂
“பின்வரும் பதிவை படிக்கவும்.. குறிப்பாக பதிவின் முடிவு. அவர் எழுதிய விதம்.. இது தான் இவரின் தனித்துவம்..”
படிக்க முயல்கிறேன் யாசின்.
@மணிகண்டன்
“தமிழ் எழுத்தாளர்கள் கடந்த 50 ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருப்பதே , இலக்கியம் என்றால் என்ன? அதன் வரையறை என்ன ? என்பது தான்.”
நல்லவேளை எனக்கு மட்டும் தான் அந்த பிரச்சனையோ என்று இருந்தேன் 🙂
“ஜெயமோகன் அவர்கள் நவீன இலக்கியத்தை இரண்டாக பிரிக்கிறார்”
ஒரு இலக்கியமே எதுன்னு புரியாமல் இருக்கிறேன்.. இதில் நவீன இலக்கியம், அதில் இரு பிரிவு.. ரொம்ப கடினம் போல இருக்கே.
“80 களில் எழுதிய பெரும்பாலான நவீனத்துவ எழுத்தாளர்களின் நாவல்கள் காலாவதி ஆகிவிட்டன.”
ராஜேஷ்குமார் நாவல்கள் பலவற்றை கூறலாம். ரமணிச்சந்திரன் நாவல்கள் பெண்களை அதிகம் கவர்ந்தது ஆனால், தற்போதும் ரசிப்பார்களாக என்று தெரியவில்லை.
“தமிழ் சூழலில் வாசிப்பவர்கள் மிக குறைவு.”
உண்மை தான். நானே அதிகம் வாசிப்பதில்லை. இது போன்று கிடைக்கும் போது வாசிக்கிறேன்.
அல்லது யாராவது பரிந்துரைக்கும் போது கிடைத்தால் வாசிக்கிறேன்.