கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பது பழமொழி ஆனால், கோபம் இருந்தால் அதன் பின் என்ன நல்ல குணம் இருந்தாலும் அதனால் பயனில்லை என்பதே தற்கால நிதர்சனம். கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது.
குடும்ப உறவுகள் பல பிரச்னைக்குள்ளாவதே கோபத்தால் தான். இதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதே இல்லை. Image Credit
கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது
துவக்கத்தில் கோபத்தால், பல நட்புகளை இழந்தேன்.
பின்னர் என்ன பிரச்னை? என்று சுயபரிசோதனை செய்து, பிரச்சனைகளுக்குக் காரணம் கோபம் தான் என்று அறிந்து அதை நிறுத்திய பிறகு அனைத்தும் சுகமானது.
கோபம் இருப்பவரிடம் எவரும் பழக மாட்டார்கள், பழக வேண்டிய சூழ்நிலை வந்தால், வேண்டா வெறுப்பாகப் பேசுவார்கள்.
கோபத்தால் அடைவதை விட இழப்பதே அதிகம் இருக்கும்.
குடும்பத்தில் இருவரில் ஒரு வாழ்க்கைத் துணையிடம் கோபம் இருந்தாலும் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
இருவருமே கோபக்காரர்கள் என்றால் அக்குடும்பமே நரகத்தில் தான் தினமும் வாழ்க்கை நடத்தும்.
கோபத்தால் எதையுமே சாதிக்க முடியாது ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டு அந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்கி கொள்வார்கள்.
தாங்கள் செய்வது தான் சரி என்று வாதிடுவார்கள்.
கோபத்தில் இருக்கும் போது எதுவுமே புரியாது, யார் என்ன கூறினாலும் தவறாகவே தோன்றும், நல்லதை கூறினாலும் ஏற்றுக்கொள்ளச் சுயகௌரவம் (Ego) தடுக்கும்.
தற்காலப் பெற்றோர்
தற்போது குடும்பங்களில் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமே கோபம் தான். இதைப் பலர் உணர்வதே இல்லை.
குறிப்பாகக் குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டினால் நிலைமை மேலும் மோசமாகும்.
இதைத் தற்காலப் பெரும்பான்மை பெற்றோர் உணர்வதில்லை. இவர்களே எவர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள் ஆனால், குழந்தைகள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
குழந்தைகளிடம் சில நிமிடங்கள் செலவழித்துப் பொறுமையாக எடுத்துக்கூறினால் எளிதாகப் பிரச்சனைகள் முடிந்து விடும்.
ஆனால், உணராமல் பொறுமை இழந்து கத்தி, கோபப்பட்டு ஒவ்வொரு நாளையும் எப்போதும் சிக்கலாக்கி கொள்வதே தற்காலப் பெற்றோரின் வழக்கம்.
உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அதற்காகக் கோபப்பட்டால், அப்பிரச்சனை சரியாகாது அப்பிரச்சனை மேலும் மோசமடையும்.
எதனால் கோபப்படுகிறோம், அதைத் தவிர்ப்பது எப்படி என்று ஒரு முறை யோசித்தால், நீங்கள் செய்வது முட்டாள்தனம் என்று உங்களுக்கே புரியும்.
தற்போதைய காலத் தம்பதியினரிடம் உள்ள பிரச்சனை கோபம், சுய கௌரவம், பொறுமையின்மை போன்றவை.
இந்த மூன்றும் உள்ள குடும்பத்தில் மகிழ்ச்சி என்பதே இருக்காது. எப்போதும் இறுக்கமான சூழ்நிலையே நிலவும்.
உங்கள் வீட்டில் எப்படி? என்று யோசித்துப்பாருங்கள்.
பலரும் நினைப்பது போல வாழ்க்கை கடுமையானது அல்ல, பிரச்சனையானதும் அல்ல. நாம் நடந்து கொள்வதிலேயே அனைத்தும் அடங்கி உள்ளது.
எதிலும் விதிவிலக்குகள் உண்டு ஆனால், அதை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அனைத்தையுமே பிரச்சனையாகப் பார்க்கும் மனநிலை பலரிடையே பரவி வருகிறது.
இது மிகத்தவறான எண்ணம்.
எதிர்மறை எண்ணங்கள்
சிலர் கிட்ட பேசினால், “அட! என்னங்க.. ஒரே பிரச்சனையாக இருக்குது.. எல்லாமே எதிரா நடக்குது.. எதுவுமே சரியில்லை” என்று எதிர்மறையாகவே பேசுவார்கள்.
இந்த எதிர்மறை நிலையில் இருந்து மாறி “எல்லாமே நல்லா நடக்குது, இப்பிரச்சனை சரியாகி விடும்” என்று நேர்மறையாக நினைத்துப்பாருங்க, வித்யாசத்தை உணர முடியும்.
சில மாதங்களில் உங்களுக்கே பிரச்சனைகள் இல்லாத மாதிரி உணர்வு இருக்கும்.
பின்னர் “நமக்குப் பிரச்சனையே இல்லையே.. எதற்கு இவ்வளோ நாள் புலம்பிட்டு இருந்தோம்” என்று குழப்பமாக இருக்கும். கோபம் நம்மை யோசிக்க விடாது.
பிரச்னை இல்லாத மனிதர் என்று உலகில் எவருமில்லை. எனவே, எல்லாமே பிரச்னை என்று நினைத்தால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது.
மகிழ்ச்சி நம்மிடமே உள்ளது. இதை உணராத வரை கோபத்தால் இழப்பு மட்டுமே!
தொடர்புடைய கட்டுரை
மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ் | சுவாமி சுகபோதானந்தா
செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.