2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின் பாஜக | 2

2
2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின் பாஜக | 2

2024 பாராளுமன்றத்தேர்தலில் மத்தியில் பாஜக வந்து விடும் என்று பெரும்பான்மையோர் எண்ணியது போலத் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெரும் என்று கருதினார்கள். Image Credit

திமுக

தற்போது திமுக நேரம் நன்றாக உள்ளது என்று கூறுவதைத்தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை ஆனால், இந்த நேரம் இப்படியே தொடராது என்பதும் உண்மை.

ஒரு நாள் மாறத்தான் போகிறது ஆனால், அது எப்போது தான் என்பது புரியவில்லை காரணம், இத்தேர்தலில் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லையென்பதால்.

கஞ்சா, போதை மருந்து, ரவுடியிசம், அனைத்துக் கட்டண உயர்வு, வன்முறை, திருட்டு, மணல் கடத்தல், வாக்குறுதிகள் நிறைவேற்றாதது, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, நிர்வாக சீர்கேடு என்ற பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ஆனாலும், திமுக கூட்டணிக்கு, மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்றால், கோபத்தைத் தவிர்த்துத் தவறுகளை எதிர்க்கட்சிகள் ஆராய வேண்டிய தருணம்.

எதிர்ப்பு வாக்குகளை அதிமுக பாஜக பிரித்துள்ளது தான் காரணம் என்று கூற முடியாது காரணம், முன்னரே கூறியபடி 47% திமுக கூட்டணி பெற்றுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி

தற்போது திமுக என்னென்ன செய்துகொண்டுள்ளதோ அதையே தான் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியும் செய்து கொண்டு இருந்தது.

இதே போலப் பெண்கள் உரிமைத்தொகை, அவங்கப்பாவுக்கு சிலை, அவர் பெயரில் திட்டங்கள், கட்டண உயர்வு என்று அப்படியே தமிழகம் போலவே.

ஜெகன் தோற்க மாட்டார் என்றே நினைத்தேன் ஆனால், தமிழகத்தில் எப்படி கணித்தது நடக்கவில்லையோ அதே போல ஆந்திராவிலும்.

ஆனால், திமுகவை விட மோசமாக சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்துள்ளார். இதையெல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமே இல்லை.

கூட்டணி ஆட்சி என்பதால், பாஜக நிதி கொடுத்தால் மட்டுமே வாய்ப்பு.

சீமான்

சீமான் வாங்கிய வாக்குகள் உண்மையிலேயே மிகப்பெரிய வெற்றி. சின்னம் மாறி இருந்தாலும், 8%+ வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது சாதாரண விஷயமல்ல.

குறுகிய காலத்தில் பலரிடையே சின்னம் சென்று சேர்ந்துள்ளதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. வேட்பாளர் யார் என்று கூடப் பலருக்கும் தெரியாது.

சீமான் மீது எனக்கு மாற்றுக்கருத்துக்கள் ஏராளம் உள்ளன ஆனால், நிதர்சனத்தை ஏற்றுக்கொள்வதில் எப்போதும் தயக்கம் இருந்ததில்லை.

நாம் தமிழர் வாக்குகள் எந்தக் கூட்டணி வாக்குகளும் இல்லாதது ஆனால், விஜய் ரசிகர்கள் வாக்குகள் சீமானுக்குக் குறிப்பிடத் தக்க அளவில் சென்று இருக்கலாம் என்று கருதுகிறேன்.

சீமான் மேற்கூறிய சிறப்புகளைப் பெற்று இருந்தாலும், அவர் கட்சியினரை, பொதுமக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டுள்ளார்.

இது பற்றி தனிக்கட்டுரையாகப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

நேரம்

சுக்கிர திசை திமுகவுக்கு உச்சத்தில் இருப்பதால் அவர்கள் மோசமான நிர்வாகத்தைச் செய்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் பலனைத்தருகிறது.

சிலர் கடுமையான உழைப்பைக் கொடுத்ததும் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்று யோசித்துள்ளீர்களா? அதற்கான பதில் கிடைத்தால், இதற்கும் கிடைக்கும்.

என்ன தான் மக்களைப் பலர் குறை கூறினாலும், சில நேரங்களில் சூழ்நிலை மற்றும் நேரம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

எப்படி சாத்தியமானது?

எடுத்துக்காட்டுக்கு ஆந்திரா பவன் கல்யாண் கடந்த தேர்தலில் அவர் தொகுதியில் 6% வாக்குகள் பெற்று தோல்வியடைந்ததோடு, அவரது கட்சியினரும் தோல்வியடைந்தனர்.

ஆனால், அவருக்கு அப்போது மக்கள் கூட்டம் அள்ளியது, அவரது அண்ணன் சிரஞ்சீவி இதே போல கூட்டம் கூட்டினார் ஆனால், பெரிய தோல்வியை அடைந்தார்.

நடிகர்களுக்கு வரும் கூட்டம் ஓட்டாகாது என்று கூறினார்கள். சொல்லப்போனால் பவன் வெற்றி பெறுவது இனி சாத்தியமில்லாதது என்றே முடிவு செய்து விட்டேன்.

ஆனால், இந்தத் தேர்தலில் பாராளுமன்ற இடங்கள் 2, சட்டமன்ற இடங்கள் 21 அனைத்திலும் அதிரி புதிரி வெற்றியாகி 100% ஸ்ட்ரைக் ரேட் கொடுத்துள்ளார்.

எப்படி நடந்தது? ஜெகன் மோகன் தோற்க மாட்டார் என்ற நிலையிலிருந்து எப்படி தோல்வியடைந்தார்? எல்லாமே கடுமையான உழைப்போடு நேரம், சூழல் மட்டுமே!

கேரளா இதுவரை நடிகரை அரசியல்வாதியாகத் தேர்ந்தெடுத்ததில்லை என்று கூறி வந்த நிலையில் சுரேஷ் கோபி எப்படி வெற்றி பெற்றார்?

நடக்கும் ஆனால், எளிதல்ல

எனவே, தமிழக பாஜகவுக்கும் எதிர்பார்த்தது நடக்கும் ஆனால், எளிதல்ல. அதுவரை அவர்களின் உண்மையான உழைப்பைத் தொடர்ந்து கொடுப்பது மட்டுமே ஒரே வழி.

50+ வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் உள்ள திராவிடக் கட்சிகளை தாண்டி வெற்றி பெறுவது எளிதல்ல என்பதைப் பலரும் தற்போது உணர்ந்து இருப்பார்கள்.

கடுமையான உழைப்போடு நேரமும் சேரும் போது யாராலும் ஒருவரின் வெற்றியைத் தடுக்க முடியாது. எனவே, பொறுமை, நம்பிக்கை அவசியம்.

ஒரு சராசரி கட்சி ஆதரவாளன் தோல்விகளால் மனச் சோர்வு அடைந்து விடலாம் ஆனால், கட்சித்தலைவர், தொண்டன் அடையக் கூடாது. அது கட்சியின் வளர்ச்சியையே பாதித்து விடும்.

தமிழகத்தில் எதிர்பார்த்தது நடக்காதது கவலையளித்தது ஆனால், ராகுல், காங்கிரஸ் குறித்து எதிர்பார்த்தது நடந்தது கவலையளித்தது. எப்படி இருக்கு பாருங்க! 🙂 .

அடுத்த கட்டுரையில் தேசிய பாஜக, காங்கிரஸ் 1 லட்ச மோசடி, எதனால் சில மாநிலங்களில் வாக்குகள் குறைந்தது என்பது பற்றிக் கருத்துக்களை பகிர்கிறேன்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. தேர்தலுக்கு முன்பே கட்சிகள் அறிக்கைகள் விடுவதை நிச்சயம் உச்சநீதி மன்றங்கள் தடுக்க வேண்டும்.. காரணம் இவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் எல்லாம் சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கும் தெளிவாக தெரியும்.. பின்பு ஆடி தள்ளுபடி போல் எதற்கு இந்த கவர்ச்சிகரமான விளம்பரம்.. எல்லாவற்றிக்கும் மேல் கடந்த கால ஆட்சியில் செய்தவற்றை சாமானிய மக்களுக்கும் புரியும் வண்ணம் பட்டியலிட்டு காட்ட வேண்டும்..

  இலவசம் என்பதை என்னும் போதே எரிச்சலாக இருக்கிறது.. எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டுமே தவிர அவர்களுக்கு இலவசம் என்ற ஒன்றை அளித்து மக்களை முட்டாளாக்க கூடாது.. முதலில் என் இலவசத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.. அதுபோல மக்களின் வரிப்பணத்தில் எதற்கு இறந்து போன தலைவர்களுக்கு சிலை / நினைவு சின்னம் வைக்க வேண்டும்.. யார் வீட்டு பணத்தில் யார் மஞ்ச குளிப்பது???? அதுவும் பல கோடிகளில்…

  ஆந்திராவின் முழு அரசியல் சூழல் எனக்கு தெரியவில்லை.. ஆனால் ஜெகன் தோல்வி எதிர்பாராத ஒன்று..காரணம் சந்திரபாபு திறன் மிக்க எதிர்க்கட்சியாக இருந்தாரா? என்று எனக்கு தெரியவில்லை.. அவரின் கைதும் ஜெகனின் தோல்விக்கு ஒரு காரணம் என உணர்கிறேன்.. குடும்ப பிரச்சனைகளும் ஒரு காரணமே..

  ஒரு சராசரி கட்சி ஆதரவாளன் தோல்விகளால் மனச் சோர்வு அடைந்து விடலாம் ஆனால், கட்சித்தலைவர், தொண்டன் அடையக் கூடாது. அது கட்சியின் வளர்ச்சியையே பாதித்து விடும். கிரி.. இது உண்மை.. ஆனால் 30 / 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் சூழல் தற்போது இல்லை..

  வாரிசு அரசியல் / கட்சிகள் தாவுவது / ஊழல்.. தொண்டன் கடைசி வரை தொண்டாகவே இருந்து போக வேண்டியது தான்.. கட்சிகள் தேர்தல் சமயத்தில் எவ்வாறு வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கிறார்கள் என்பதை உணர்ந்தாலே போதுமானது…

 2. @யாசின்

  “தேர்தலுக்கு முன்பே கட்சிகள் அறிக்கைகள் விடுவதை நிச்சயம் உச்சநீதி மன்றங்கள் தடுக்க வேண்டும்..”

  சரியா சொன்னீங்க யாசின். இதை என் அடுத்த கட்டுரையில் வலியுறுத்தியுள்ளேன். கடுப்பா இருக்கு.

  “இலவசம் என்பதை என்னும் போதே எரிச்சலாக இருக்கிறது.. எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டுமே தவிர அவர்களுக்கு இலவசம் என்ற ஒன்றை அளித்து மக்களை முட்டாளாக்க கூடாது”

  அனைத்து கட்சிகளுக்கும் இதுவொரு நெருக்கடியாகி விட்டது. அடுத்த கட்சி கொடுத்தால், நாம் கொடுக்கவில்லையென்றால், மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று கூற வேண்டியதாகி விடுகிறது.

  “மக்களின் வரிப்பணத்தில் எதற்கு இறந்து போன தலைவர்களுக்கு சிலை / நினைவு சின்னம் வைக்க வேண்டும்.. யார் வீட்டு பணத்தில் யார் மஞ்ச குளிப்பது???? அதுவும் பல கோடிகளில்…”

  இதெல்லாம் பார்த்தாலே ஆத்திரமாக உள்ளது.

  “அவரின் கைதும் ஜெகனின் தோல்விக்கு ஒரு காரணம் என உணர்கிறேன்.. குடும்ப பிரச்சனைகளும் ஒரு காரணமே..”

  வாய்ப்புகள் உண்டு.

  “வாரிசு அரசியல் / கட்சிகள் தாவுவது / ஊழல்.. தொண்டன் கடைசி வரை தொண்டாகவே இருந்து போக வேண்டியது தான்.”

  பாஜகவில் அப்படியில்லை. எவரும் தலைவர் ஆகலாம் ஆனால், மற்ற கட்சிகள் குடும்ப கட்சிகளாக இருப்பதால், தொண்டர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here