அர்த்தமுள்ள இந்து மதம் | கண்ணதாசன்

26
அர்த்தமுள்ள இந்து மதம் Arthamulla indhu matham

ந்து மதத்திற்குப் புனிதமான நூல் என்றால் ‘பகவத் கீதை’. தமிழில் இதற்கு அடுத்தப் படி என்றால் கண்ணதாசன் அவர்களின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’.

அர்த்தமுள்ள இந்து மதம்

தினமணிக் கதிர்‘ இதழில் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தொடராக எழுதியதைத் புத்தகமாக வெளியிட்டு உள்ளார்கள். 1972 ம் ஆண்டு இந்தத் தொடர் எழுதப்பட்டது.

பத்து பாகப் புத்தகமாக வெளியிட்டு வந்ததைப் பின்னர் மாற்றி ஒரே புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். Image Credit

நாத்திகன் –> ஆத்திகன்

கண்ணதாசன் நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவர். மூன்று வருடங்கள் மட்டுமே நாத்திகராக இருந்து, போராட்டங்களில் பங்கு கொண்டு பின்னர் ஆத்திகராகி இருக்கிறார்.

நாத்திகர் ஆனதுக்குக் காரணமாக அதில் இருந்த போலித்தனமான பெருமை, அப்போது நாத்திகராக இருந்ததால் சமூகத்தில் கிடைத்த மதிப்பு போன்றவற்றில் மயங்கி நாத்திகரானதாகக் கூறி இருக்கிறார்.

இவர் மூன்று வருடங்கள் நாத்திகராக இருந்ததாலோ என்னவோ இவர்களைப் போட்டு வாங்கி இருக்கிறார் 🙂 .

சமயம் கிடைக்கும் போதெல்லாம் நாத்திகர்களையும் அவர்களின் போலித் தனங்களையும் வாரி இருக்கிறார்.

துவக்கம்

தொடர் ஆரம்பத்தில் Blog எழுதுவது போல அவருடைய தின / திரை வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றியே பெரும்பாலும் எழுதி இருக்கிறார்.

இவற்றைப் படிக்கும் போது “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ற சக்திவாய்ந்த தலைப்புக்கு ஏற்ற தொடராக இல்லாமல் மிகச் சாதாரணமாக இருக்கிறது.

ஆனால், போகப் போகத் தலைப்புக்கு நியாயம் கூறும் வகையில் அசத்தலாகப் போகிறது. இறுதிப் பகுதியில் எண்ணற்ற அனுபவங்களைத் தத்துவங்களைக் கூறி உள்ளார்.

ஆணின் பார்வையில்

இப்புத்தகம் ஆணின் பார்வையில் எழுதப்பட்டு இருக்கிறது அதாவது, இவர் கூறுவது அனைத்தும் ஆண்களை மனதில் வைத்தே உள்ளது, உதாரணம் உட்பட.

1972 ம் ஆண்டு எழுதப்பட்டு இருப்பதால், பெண் எப்படி இருக்க வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஆணிடம் எப்படிப் பழக வேண்டும்? என்று பெண்ணுக்கான அறிவுரைகளாகத் தான் உள்ளதே தவிர…

ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று கூறப்பட்ட உதாரணங்கள் வெகு குறைவு. இவை படிக்க எரிச்சலையே கொடுத்தது.

தவறுகள்

வாழ்க்கையில் எந்தத் தவறுகள் எல்லாம் செய்யக்கூடாதோ அத்தனையும் செய்து இருப்பதாகவும் காமுகனாக, கடன்காரனாக, நாத்திகனாக, கள்வனாக, வெறியனாக இருந்து இருக்கிறேன்.

தவறுகள் செய்தாலும் அதை மறைக்க நினைத்தது இல்லை என்று கூறி உள்ளார்.

‘பெத்தடின்’ ஊசிக்கு அடிமையாக இருந்து பின் மீண்டு வந்து உள்ளார். இதில் கடவுள் ஐயப்பன் கருணை இருப்பதாக நம்புகிறார்.

கண்ணதாசன் அவர்களின் ஒரு வசனம் மிகப் பிரபலம்.

எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து இருக்கிறேன். ஆகவே,

“இப்படித் தான் வாழ வேண்டும்”

என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு.

வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டு உள்ளார் என்பது இவர் கூறும் அனுபவங்களைப் படித்தாலே புரிகிறது. அதே போலக் கட்டுப்பாடே இல்லாமல் வாழ்ந்தும் இருக்கிறார்.

கர்மா

இந்து மதம் என்றால் “கர்மா” என்ற வார்த்தை பிரபலம். இந்து மதமட்டுமல்லாது மற்ற மதத்தினரும் குறிப்பிடும் சொல் “கர்மா” குறிப்பாக மேலை நாடுகளில்.

ஒருவர் தவறு செய்தால், கர்மாவின் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது என்று அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறி உள்ளார்.

தாமதமாகலாம் ஆனால், தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.

பயம்

பயத்தினால் புலன்கள் மென்மையாகி விடுகின்றன. தைரியத்தினால் தான் அவை கனமடைகின்றன.

100% உண்மை. இதை என்னுடைய அனுபவத்திலேயே உணர்ந்து இருக்கிறேன், கொண்டு இருக்கிறேன்.

எப்போதெல்லாம் மனதளவில் உறுதி இழக்கிறேனோ பயப்படுகிறேனோ அப்போதெல்லாம் இந்த நிலை ஏற்படுகிறது.

ஒரு முக்கியமான முடிவு தெரியும் நேரம், பதட்டமான சூழ்நிலை எனும் போது இந்த நிலையை உணர முடியும்.

அலுவலகத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு பெரிய பிரச்சனை எனும் போது பதட்டத்தில் உடலில் குளிர் கூடுவதாக உணர்வேன்.

நேர்முகத் தேர்வு சென்ற சமயங்களில் உடல் சில்லிட்டு இருக்கிறது.

சாதாரண நேரங்களில் அறையில் உள்ள குளிர் இயல்பாக இருக்கும், பதட்டமான சமயங்களில் குளிர் கூடுவது பயத்தில் உடல் மென்மையாகி விடுவதே காரணம்.

சிலருக்குப் பயத்தில் வியர்க்கும்.

ஒருவருடன் சண்டையிட நேரும் போது அவர் பலசாலி என்றால் வழக்கமாக இருக்கும் உடல் வலு கூட, இந்த சமயத்தில் பயத்தால் இளகி / குறைந்து விடும்.

நீண்ட வருடங்களாக இருந்த குழப்பம், இதைப் படித்த பிறகு தெளிவானது. உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

பட்டினத்தார்

பட்டினத்தார் பற்றிப் பள்ளிகளில் படித்து இருப்பீர்கள்.

இவர் பற்றிப் பல செய்திகளை அவர் வாழ்க்கை அனுபவங்களைக் கூறி இருக்கிறார். ஒரு அத்தியாயம் பட்டினத்தார் வாழ்க்கை வரலாறும் வருகிறது.

இது போல மற்றவர்களின் கருத்துகளைக் கூறி பக்கங்களை நிரப்புவதாக நினைக்க வேண்டாம். பெரியவர்களின் அரிய விசயங்களைத் தேடி அலைய முடியாதவர்கள், இதன் மூலம் பயனடையட்டும் என்று நான் கருதுகிறேன்.

எனவே தான் இவற்றைக் கூறினேன் என்று குறிப்பிடுகிறார்.

துவக்கத்தில் நானும், இவர் என்ன இவருடைய அனுபவங்களைக் கருத்துகளைக் கூறாமல் மற்றவர்களின் விளக்கங்களைக் கூறிக் கொண்டு இருக்கிறாரே என்று நினைத்தேன்.

உண்மையில் பட்டினத்தார் பற்றிப் படித்ததும் அவர் குறித்த புத்தகம் அவசியம் படிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்து விட்டது என்றால் அது மிகையல்ல.

மிகப் பெரிய செல்வந்தரின் மகனான பட்டினத்தார் திருமணம் நடந்து தன் மனைவியிடம் அன்பாக நேர்மையாக நடந்து கொள்வது, பின் பணத்தை வெறுத்து சந்நியாசி ஆவது என்று பட்டினத்தார் பகுதியுள்ளது.

மூன்று தலைமுறைகள்

மூன்று தலைமுறைகளுக்கு மேல் தாழ்ந்தவர்களும் இல்லை, மூன்று தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்தவர்களும் இல்லை என்று முன்னோர் கூறுவார்கள் என்று பட்டினத்தார் கூறுகிறார்.

இது கிட்டத்தட்ட உண்மை என்றே தோன்றுகிறது. இரண்டு தலைமுறைக்குக் கொடி கட்டிப் பறந்து இருப்பார்கள்.. அது மூன்றாவது தலைமுறையும் கூடத் தொடரும் ஆனால், அதன் பிறகு இறங்கு முகமாக இருக்கும்.

இது சிரமப்படுகிறவர்கள் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

எங்கள் குடும்பத்திலேயே இது நடந்துள்ளது. என் தாத்தா காலத்தில் எங்கள் குடும்பம் பட்டையக் கிளப்பியது. அப்பா, நான் ரொம்பச் சிரமப்பட்டோம்.

என் பசங்க திரும்ப மேலே வருவாங்க. இது இந்த மூன்று தலைமுறைகள்.

நாத்திகவாதிகள்

வாழ்க்கையில் அலுத்தவர்கள், சலித்தவர்கள், எவ்வளவோ காலம் கடவுளை வேண்டியும் பயனில்லையே என்று நினைத்தவர்கள் – இவர்களெல்லாம் சிக்கிக் கொண்ட வழியே நாத்திகம்.

சிக்கிக்கொண்ட ஈக்களைக் கடித்துத் தின்ன முயன்ற சிலந்திகளே அதன் தலைவர்கள்.

அதற்கு அவர்கள் பூசிய சாயம், “பகுத்தறிவு” என்பது.

சட்டையைக் கறுப்பாகப் போட்டுக்கொண்டு துக்கம் கொண்டாடிய அவர்கள், உள்ளத்தையும் “கறுப்பாகவே” வைத்திருந்தார்கள்.

பெண்டாட்டியைக் கோவிலுக்கு அனுப்புவார்கள்; பிள்ளையை ஜாதகம் எழுதி வாங்கி வரச் சொல்வார்கள்; மேடையில், “எல்லாம் பொய்” என்று பேசுவார்கள். அதை நான் நம்பினேன்.

அதுவரை கேளாத புதிய விசயமாக இருந்ததால், அதைச் சொல்வதைப் பெருமை என்று நினைத்தேன். எதையும் மறுப்பது அறிவுக்கு அடையாளம் என்று முடிவு கட்டினேன்.

இவ்வளவு கூத்தும் இரண்டு மூன்று ஆண்டுகளே.

என்று கூறுகிறார்.

உண்மையில் புத்தகத்தில் நிறைய இடங்களில் பகுத்தறிவாளர்களைப் பிரித்து மேய்ந்து இருக்கிறார்.

இவருடைய அனுபவங்களை எடுத்துக்கொண்டால் எதுவும் கூற முடியவில்லை ஆனால், சில கருத்துகளை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து இருக்கிறேன். ஆகவே,

“இப்படித் தான் வாழ வேண்டும்”

என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு.

இதன் பிறகு என்ன சொல்வது 🙂 .

பகுத்தறிவுவாதியாகக் காட்டிக்கொள்ள

இவர் கூறுவதில் ஒரு உண்மை இருக்கிறது. பந்தாவுக்காகவும் தன்னை அறிவாளியாகக்! காட்டிக்கொள்ளவுமே பகுத்தறிவாளராக தன்னை முன்னிறுத்துபவர்கள் இருக்கிறார்கள்.

இணையத்தில் வெகு எளிதாக இவர்களைக் காண முடியும்.

இந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது என்று அதை விளக்கி இருக்கிறார்.

இவர் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் எழுதிய ஆண்டு 1972.

தற்போது உயிருடன் இருந்து இருந்தால், இன்னும் அவருக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு இன்னும் பல கருத்து மாற்றங்கள் தோன்றி இருக்கலாம்.

இன்று சரி என்று கூறுவது நாளை தவறாகத் தோன்றுகிறது. அனுபவம் என்ற ஒன்றுக்கு எல்லையே இல்லை.

எனவே,

50 வருடங்களுக்கு முன்பு இருந்த சூழ்நிலையைச் சமூக வாழ்வியலை அடிப்படையாக வைத்துக் கூறியதை நடப்பு (*2022) சூழ்நிலையோடு ஒப்பிட்டு விமர்சிக்கத் தேவையில்லை.

நல்லதை எடுத்துக்கொண்டும் மற்றதை ஒதுக்கியும் விடலாம்.

5 வருடத்திற்கு முன்பு நான் எழுதியவற்றைத் தற்போது படித்தால், இப்படியெல்லாமா எழுதி இருக்கிறோம்! என்று தோன்றுகிறது.

ஒரு வருடத்திற்கு முன்னாடி எழுதிய சிலவற்றைப் படித்தால் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது.

எனவே, எதையும் அனுபவமாக எடுத்துக்கொண்டு நகர்ந்து விட வேண்டியது தான், தவறு செய்து விட்டோம் என்று குழம்ப வேண்டியதில்லை.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கூறியது போல முன்னர் எழுதியதில் நமக்குக் கருத்து வேறுபாடு வந்தால், நாம் அனுபவம் பெற்று இருக்கிறோம் என்று அர்த்தம்.

இப்புத்தகமும் அப்போதைய நிலையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.

எனவே, சில கருத்துகள் ஏற்புடையது இல்லையென்றாலும் வாழ்க்கைக்குத் தேவையான, இந்து மதத்தின் முக்கியக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ள உதவுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சில இடங்களில் ஒரு உதாரணமே பல்வேறு இடங்களில் வருகிறது. இதை நானும் செய்து இருக்கிறேன். இது சில நேரங்களில் தெரிந்தும் / தெரியாமலும் வருவது.

இப்புத்தகம் முழுமையான இந்து மதப் புத்தகம் என்று கூற முடியாது.

தன்னுடைய அன்றாட வாழ்வில் கிடைத்த அனுபவங்களையும் இந்து மதத்தையும் இணைத்து / தொடர்புபடுத்தி எழுதி இருக்கிறார்.

உண்மையில் இதை ஒரு மதப்புத்தகமாக இல்லாமல் அனுபவப் புத்தகமாகத் தான் படித்தேன்.

திருமண வட்டம்

கண்ணதாசன் அவர்கள் சமூகத்தில் பெண்களுக்குப் பற்றாக்குறையாக இருந்ததால் இவரது முதல் சகோதரிக்கு வரன் கொடுப்பவர்கள் இவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தது.

இது பின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது சகோதரி வரை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஐந்தாவது சகோதரிக்கு நாங்கள் வரனுக்குப் பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தது.

இதனாலே பெண் குழந்தையைப் பெற்றுக் கொள்ள அனைவரும் பயந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.

இது திரும்பச் சுழற்சி முறையில் திரும்பி இருக்கிறது.

தற்போது எங்கள் பகுதியில் பெண் கிடைப்பது என்பது சிரமமானதால் ஆண்கள் தான் அனைத்துத் திருமணச் செலவுகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

சுருக்கமாக, வாழ்க்கை சுழற்சி முறையில் மாறிக் கொண்டு இருக்கிறது.

Read: பெண் தேடும் படலம்!

ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு?

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார்.

“சுவாமி! ஒரு சந்தேகம்!” என்றார்.

“என்ன?” என்று கேட்டார் பரமஹம்சர்.

“நீங்கள் விஷ்ணு என்கிறீர்கள், சிவன் என்கிறீர்கள், அதே விஷ்ணுவின் அவதாரம் தான் ராமனும், கிருஷ்ணனும் என்கிறீர்கள்.

ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு? ஏன் ஒரே கடவுளாக வைத்துக்கொண்டால் என்ன?” என்று கேட்டார்.

அதற்குப் பரமஹம்சர் உடனே, “ஐயா! ஒரு விசயம். நீங்கள் ஒருவர் தான். ஆனால், உங்கள் அப்பாவுக்கு மகன் – மகனுக்கு அப்பா, மனைவிக்குக் கணவன், மாமனாருக்கு மாப்பிள்ளை, மாபிள்ளைக்கு மாமனார்.

மைத்துனனுக்கு மைத்துனன், பாட்டனுக்குப் பேரன், பேரனுக்குப் பாட்டன் – உங்கள் ஒருவருக்கே இத்தனை வடிவங்கள் இருக்கும் போது, ஈஸ்வரனுக்கு இருக்கக் கூடாதா?” என்றார்.

சரி தானே!

அனுபவங்கள்

அனுபவங்கள் பல விதம் அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்.

நீதி சொல்வதில், நான் வள்ளுவனாக முடியாது. ஏன்? இன்னொரு வள்ளுவன் பிறக்கவே முடியாது.

ஆனால், என் அனுபவம் சுட்டிக் காட்டுகிற நீதிகளில் வள்ளுவன் சொல்லாததும் இருக்கக் கூடும்.

தர்மோபதேசம் செய்வதில் நான் வடலூர் வள்ளலாராக முடியாது. ஏன்? இன்னொரு வள்ளலார் இந்தத் தலைமுறையில் பிறக்கப் போவதும் கிடையாது.

ஆனால், என் உடலில் பட்ட காயங்களில், வள்ளலார் காணாத காட்சிகளும் இருக்கக் கூடும்.

என்று கூறுகிறார் கண்ணதாசன்.

இவை முற்றிலும் ஏற்றுக்கொள்ளும்படியுள்ளது. உலகில் ஒருவரே அனைத்து அனுபவங்களையும் பெற்று இருக்க முடியாது.

என் அப்பாவிற்குக் கிடைக்காத அனுபவம் எனக்குக் கிடைத்து இருக்கும். அதே போல நான் சந்திக்காததை என் மகன் சந்திக்க நேரலாம்.

கண்ணதாசன் அவர்களுக்குக் கிடைக்காத வாழ்க்கை அனுபவம் எனக்குக் கிடைத்து இருக்கும்.

எனவே, கிடைக்கும் அனுபவங்களை ஒருவர் எவ்வாறு உணர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்கிறார் என்பதில் தான் ஒருவரின் உயர்வு இருக்கிறது.

இதை ஞானிகள் சரியாக உணர்ந்து தங்களை மேலும் உயர்த்திக் கொள்கிறார்கள் சாதாரணமானவர்கள் இதில் திணறுகிறார்கள்.

அவ்வளவு தான் வித்யாசம்.

அனுபவம் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அதைச் சம்பந்தப்பட்டவர் உணருவதில் தான் ஒருவர் உயர்ந்தவர் ஆவதும் சாதாரண மனிதராக இருப்பதும்.

பொய்யில்லா வாழ்க்கை

திறந்த புத்தகமாக நாம் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டால், அடுத்தவன் நம்மை விமர்சனம் செய்வதற்கு விசயம் கிடைக்காது.

“இவன் இப்படிச் செய்தான், அப்படிச் செய்தான்” என்று எதையும் ரகசியமாகப் பேச முடியாது.

நாம் இல்லவே இல்லை; செய்யவே இல்லை என்று மறுக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

“ஆம், செய்தேன்” என்று ஒரு வார்த்தையின் மூலம், பல விமர்சனங்கள், பல விசயங்கள், பல வார்த்தைகள் அடிபட்டுப் போகின்றன என்பதை மறந்து விடக்கக் கூடாது.

என்று கூறுகிறார்.

இப்புத்தகத்திலேயே எனக்கு ரொம்பப் பிடித்த பகுதிகளில் இதுவும் ஒன்று. கொஞ்சம் நினைத்துப் பாருங்க.. நமக்கு என்று ரகசியம் இல்லையென்றால் அது எப்படி ஒரு அற்புதமான உணர்வு!

யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை, எதை நினைத்தும் கவலைப்பட வேண்டியதில்லை, மற்றவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்று யோசிக்கத் தேவையில்லை. நினைத்தாலே சுகமாக இருக்கிறது.

இதைப் படித்ததும் செய்த முதல் வேலை, கணினியில் இருந்த Porn காணொளிகளை நீக்கியது தான் 🙂 .

இவை இருந்தால், யாராவது பார்த்து விடுவார்களோ! பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என்று ஆயிரம் யோசனை இருக்கும்.

அதோடு நான் தனிப்பட்டது என்று நினைத்த மின்னஞ்சல்கள் ஒன்றிரண்டையும் நீக்கி விட்டேன். இதன் மூலம் எனக்கு மட்டுமல்லாது சம்பந்தப்பட்டவருக்கும் பாதிப்பு நேரலாம்.

நினைவுக்காக வைத்து இருந்தாலும், ஆபத்து தான்.

இணையக் கணக்கை எளிதாக ஹேக் செய்து விடுவதால், எதுவும் சாத்தியமே! தேவையில்லாத ஒன்றை ஏன் பயந்து கொண்டு வைத்து இருக்க வேண்டும்?!

தற்போது அனைத்தையும் நீக்கி விட்டேன். மனது தெளிவாகி விட்டது. கண்ணதாசன் அவர்கள் கூறியது உண்மை தான் 🙂 .

இங்கே என்ன எழுதுகிறேனோ அது தான் நான். இங்கே ஒரு மாதிரி எழுதி விட்டு நேரில் வேறு மாதிரி இருக்க மாட்டேன். எனவே, இவை எனக்கு நெருக்கடி இல்லாத ஒரு நிலையைத் தருகிறது.

போலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, சுதந்திரமான உணர்வை நமக்குத் தருகிறது.

எனவே, கண்ணதாசன் அவர்கள் கூறியது போலத் திறந்த புத்தகமாக, போலியாக நடிக்காமல் இருந்து விட்டால், நம்மை விமர்சிக்க ஒன்றுமே இருக்காது.

அப்படியே விமர்சித்தாலும் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது.

சுருக்கமாக, மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை 🙂 .

முழுமையாக இது போல இருக்க முடியவில்லையென்றாலும் இருக்க முயற்சிக்கலாம்.

நல்லவன் வாழ்வான்

இறுதி அத்தியாயமான இதில் ஒரு சாமானியனுக்கு இருக்கும் இயல்பான கேள்விகளை முன்னிறுத்தி இருக்கிறார்.

எவ்வளவு தான் நாணயமாக இருந்தாலும், நேர்மையாக இருந்தாலும், ஒழுக்கமாக நடந்தாலும், வாழ்க்கையில் துன்பம் என்பது வந்துதான் தீரும். அது சரி தான்.

ஆனால், நாணயம் / நேர்மை / ஒழுக்கம் / மரியாதை கெட்டவன் இவனெல்லாம் உற்சாகமாகவும், வசதியாகவும் வாழுகிறானே, அதுவும் நீண்ட காலம் வாழுகிறானே, “எப்படி”.

“நான் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை! எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்?” என்று கலங்குவோர் உண்டு.

“தினமும் நான் கோயிலுக்குப் போகிறேனே, ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கிறான்? என்று வருந்துவோர் உண்டு.

“நான் யாருக்கும் துரோகம் செய்ததில்லை; யாருடைய குடும்பத்தையும், நிலத்தையும் அபகரித்ததில்லை; நான் படாதபாடும் இல்லை” என்ற ஆதங்கப் படுவோர் உண்டு.

நல்லவர்கள் வருந்துகிறார்கள் என்பதை விட, தீயவர்கள் வாழுகிறார்களே, அது எப்படி?

என்று கர்மா குறித்து விளக்கமாக இந்த அத்தியாயத்தில் எழுதி இருக்கிறார்.

இவர் துவக்கத்தில் இருந்து கூறும் கருத்துகளில் உடன்பாடு இல்லாதவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் இந்த அத்தியாயத்தை ஆர்வமுடன் படிப்பார்கள்.

இவை ஒவ்வொரு சாமானியனுக்கும் இருக்கும் கேள்விகள், மதங்கள் கடந்து.

சில ஆணாதிக்கக் கருத்துகளைத் தவிர்த்து விட்டுப் படித்தால் சிறப்பான புத்தகம்.

இந்து மதத்தில் ‘வர்ணாசிரமம்’ என்ற ஒரு விசயம் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், உலகிலேயே மிகச் சிறந்த மதமாக இருந்து இருக்கும்.

வர்ணாசிரமத்தால் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறது.

பகவத் கீதைப் படி கூறுவதென்றால்…

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

காரணமில்லாமல் காரியமில்லை.

“இந்து மதம்” குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் எனக்கு இருந்தாலும் அதன் எளிமைக்கும், Flexi தன்மைக்கும் பெரிய ரசிகன்.

இந்து மதத்தை மதம் என்று கூறுவதை விட “வாழ்வியல் முறை” என்று கூறுவதே சரி.

அர்த்தமுள்ள இந்து மதம் படித்து என்னுடைய நீண்ட நாள் சந்தேகங்களுக்கு புரிந்தும் புரியாமல் சில பதில்கள் கிடைத்து இருக்கிறது.

மேலும் புத்தகங்கள் படிக்கும் போது தெளிவாகும் என்று கருதுகிறேன்.

படிக்கக் கொடுத்த நண்பன் பாபுக்கு நன்றி.

அமேசானில் வாங்க –> அர்த்தமுள்ள இந்து மதம் Link

தொடர்புடைய கட்டுரைகள்

கர்ம வினையும் இந்து மதமும்

அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

26 COMMENTS

  1. ப்ரோ, சீக்கரம் பகவத்கீதையையும் படிச்சு முடிங்க. 🙂

  2. “அர்த்தமுள்ள இந்து மதம்” படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துவிட்டது கில்லாடி.

    எப்போ படத்தோட விமர்சனம் எழுத போறீங்க.. உங்க ரசிகர்களை இப்படி ஏமாற்றகூடாது

  3. ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புத்தகம், அர்த்தமுள்ள இந்து மதம். தான் பெற்ற அனுபவங்களை, நமக்கு பாடமாக கொடுத்தவர், கவியரசர். படிக்க படிக்க ஆர்வமாக இருக்கும், இந்த புத்தகம். இதே போல, வன வாசம், மன வாசம், போய் வருகிறேன், நம்பிக்கை மலர்கள், அர்த்தமுள்ள இந்து மதம் சம்பந்தமான கேள்வி பதில்கள் இரண்டு பாகங்கள் உள்ளன. இவை அனைத்தையும் படித்துப் பாருங்கள். மனம் தெளிவடையும்
    பக்குவமாகும்.

  4. தல,
    நீங்க ரொம்ப அனுபவிச்சு இந்த புக் படிச்சத காட்டுது உங்களோட பதிவு.

    “வர்ணாசிரமத்தால் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறது.”
    ““இந்து மதம்” குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் எனக்கு இருந்தாலும் அதன் எளிமைக்கும், Flexi தன்மைக்கும் நான் பெரிய ரசிகன்.”
    எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து இருக்கிறேன். ஆகவே,
    “இப்படித் தான் வாழ வேண்டும்”
    என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு.

    – உண்மை தல. இந்தப் பதிவு ல எனக்கு ரொம்ப ஈர்த்த வரிகள் இது மூன்றும்..

    – அருண் கோவிந்தன்

  5. நான் இந்நூலைப்பற்றி புகழ்ந்து சாதாரணமானவர்கள் பேசவும் எழுதவும்தான் பார்த்துவருகிறேன். உங்களைப்போல.

    இந்துமதத்தில் உள்ள பழுத்த ஆன்மிகவாதிகள்; சாமியார்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவே இல்லை. நீங்கள் தெரிந்து எழுதியிருக்கலாமென்று தோன்றுகிறது.

  6. Similar books of personal experiences and explanations are also written by important people of other religions. But I don’t know why they have not become popular. Why so much importance and popularity for this book only? If we analyse this question, it is possible to say that the popularity doesn’t come from the book, but from the flamboyant personality of the author. He built up it through his film lyrics; from there, he reached public life and politics included. So, all cinema. Because if had not written flim lyrics, and written only just lyrics, like most poets then as well as now, he would have been one of the many who is read by people interested in poetry. Politics and Cinema are the routes to reach the hearts of Tamilians.

  7. கிரி அவர்களே,

    மிகவும் நன்றாக எழுதி உள்ளீர்கள், சீக்கிரம் படிக்க வேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது…

  8. இந்து மதத்தை (வெள்ளக்காரன் கொடுத்த பேரு) ரெண்டு மார்க்கமா பிரிக்கலாம். பக்தி மார்க்கம் மற்றும் சித்தாந்தம். பக்தி மர்க்கத்துல அவர் அவர் விருப்படி இறைவனை வழிபடுவது. சித்தாந்தம் என்பது நம்ம மதத்திற்கு விளக்கம் அளிப்பது. நம்மளுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அங்கே கிடைக்கும். உதாரணமா இறைவன் என்றால் யாரு? உயிர் என்றால் என்ன ? உலகம் எப்படி அல்லது ஏன் தோன்றியது? இது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். சித்தாந்துல நிறைய பிரிவு இருக்கு உதாரணமா சைவம், வைணவம் இப்படி பல. எல்லாமே கிட்டத்தட்ட ஒரேமாதிரி விளக்கங்கள் இருக்கும் ஆனா அடிப்படையா சில வேறுபாடுகள் உண்டு. அதனால கொஞ்சம் வேர்களை பற்றி தெரிஞ்சிகிட்டோம் என்றால் ரொம்ப நல்லது. கொஞ்சம் தேடல் அவசியம்…

  9. கோவையில் தங்கி இருந்த போது இந்த புத்தகத்தை படிக்க வாய்ப்பு கிடைத்தது… சில பக்கங்கள் ரொம்ப ரசித்து படித்து இன்றும் நினைவில் உள்ளது.. தான் வாழ்ந்த காலத்திலே அதிகமான புகழை பெற்ற மாபெரும் கவிஞன் கண்ணதாசன் அவர்கள் தான் என்று வைரமுத்து அவர்கள் கூறி உள்ளார்… இது கம்பருக்கும், பாரதிக்கும் கூட கிடைக்காத ஒரு வரம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  10. முழு புத்தகத்தையே படித்த உணர்வை தருகிறீர்கள்.. பாராட்டுக்கள்.. பகவத்கீதையை படிக்க நானும் ஆரம்பித்தேன்.. ஆனால் இடையிடையே வரும் பாசுரங்கள் (அர்த்தம் தெரியாமல்) சற்றே தடுக்கின்றன..

    பிகு: ஒவ்வொரு பதிவையும் படித்து தான் வருகிறேன்.. நன்றாக இருக்கிறது என்று ஒற்றை வரியில் பாராட்ட விரும்பவில்லை அதனால் தான் சில பதிவுகளில் கருத்துக்கள் இடவில்லை.

  11. “இந்து மதத்தில் “வர்ணாசிரமம்” என்ற ஒரு விசயம் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், உலகிலேயே மிகச் சிறந்த மதமாக இருந்து இருக்கும்.

    வர்ணாசிரமத்தால் பல்வேறுஇன்னல்களை எதிர்கொள்கிறது.”

    இது தவறான கருத்து. ஏனென்றால் ஹிந்து மதம் தவறான எதையும் போதிக்காது. யாரோ சிலர் தவறாக எடுத்துக் கொண்டதால் வர்ணாசிரம தர்மமே தவறு என்று கூறுவது தவறு. அப்படி அதில் தவறான விஷயங்கள் இருப்பதாக நினைத்தால் நம் தவறு தானே தவிர ஹிந்து மதத்தின் தவறல்ல. ஆகையால் கண்டிப்பாக அர்த்தமுள்ளது தான் ஹிந்து மதம்…..

  12. பகவத் கீதை படிப்பதாக இருந்தால் சரியான மொழி பெயர்ப்பை படிக்கவும். இல்லை என்றால் புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும்………

  13. தலையணை சைஸ் புத்தகத்தை – எங்க ஊர் கோயில் கோபுர அட்டை படத்துக்காக வாங்கி இன்னும் படிக்காமல் வைத்துள்ளேன்.

    உங்கள் பதிவு படிக்கும் ஆர்வர்த்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. நன்றி.

  14. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @அருண் தொல்லை தாங்கலன்னு சொல்றீங்களா 🙂

    @விஜய் நான் திரையரங்கில் படம் பார்ப்பதை லிங்கா பிரச்சனைக்குப் பிறகு குறைத்து விட்டேன். படம் பார்த்தால் தானே எழுத! 🙂

    @ஜோதிஜி நான் படித்தேன் ஆனால், மத சம்பந்தப்பட்ட விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என்பதால், எதுவும் கூறவில்லை.

    உங்கள் இடுகைகள் அனைத்தையும் படிப்பேன்.

    @சந்தர் சிங் நீங்க கூறிய புத்தகங்களை படிக்க முயற்சிக்கிறேன்.

    @செந்தில் நன்றி

    @அருண் & யாசின் நீங்க இருவரும் இதற்கு விரிவாகக் கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

    @ராஜ்குமார் நீங்க சின்னதா பின்னூட்டம் போட்டதால் நான் கூட வேற யாரோ ராஜ்குமார் என்று நினைத்து விட்டேன். அப்பப்ப வாங்க! 🙂 உங்க பெரிய பின்னூட்டம் இல்லாம இருப்பது என்னவோ போல இருக்கு.

    @பிரகாஷ் வர்ணாசிரம் உருவாக்கப்பட்டது என்னவோ நல்ல எண்ணத்தில் தான் என்றாலும் ஆனால், அது தொடங்கியது முதல் இன்று வரை பிரச்சனையே.

    இந்து மதம் மட்டுமல்ல எந்த மதமும் நல்லதையே போதிக்கிறது. அதில் உள்ளவர்கள் தான் பிரச்னையை உருவாக்குகிறார்கள்.

    வர்ணாசிரமத்தால் ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், இது போல கூறாமல் இருந்து இருக்க வாய்ப்புள்ளது.

    உங்களுக்கு தெரிந்த எளிமையான பகவத் கீதை தமிழ் மொழி பெயர்ப்பு நூல் பெயர் இருந்தால் கூறவும். இந்தப் புத்தகத்திலேயே வரும் கவிதைப் பகுதி நான் படிக்கவில்லை. விளக்கமுமில்லாததால் சிரமமாக இருந்தது.

    இது குறித்து கூற நினைத்து மறந்து விட்டேன்.

  15. @பால சுந்தர விநாயகம்

    “இந்துமதத்தில் உள்ள பழுத்த ஆன்மிகவாதிகள்; சாமியார்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவே இல்லை. நீங்கள் தெரிந்து எழுதியிருக்கலாமென்று தோன்றுகிறது.”

    எதைத் தெரிந்து எழுதியிருக்கலாம் என்று கூறுகிறீர்கள்?

    ஏன் கண்ணதாசன்? என்று கேட்டதற்கு அவருடைய அனுபவத்தையே கூறலாம்.

    ஒருமுறை ஒரு விழாவிற்கு கண்ணதாசன் சென்று இருந்தார். அங்கே ஒரு சிறுவன் ஒரு கவிதை வாசித்தான் முடித்ததும் அரங்கம் அமைதியாக இருந்தது.

    இறுதியில் கண்ணதாசன் ஒரு கவிதை வாசித்தார். அனைவரும் ஆஹா ஆஹா என்று புகழ்ந்தார்கள்.

    பின்னர் கண்ணதாசன் நான் வாசித்து நீங்கள் புகழ்ந்த கவிதையை எழுதியது முன்பு படித்த சிறுவன் எழுதியது, அவன் வாசித்தது நான் எழுதிய கவிதை.

    இந்த உலகம் யார் கூறுகிறது என்பதற்குத் தான் முக்கியத்துவம் தருகிறதே தவிர என்ன கூறுகிறது என்று கவனிப்பதில்லை என்று கூறினார்.

    இன்னொரு உதாரணம்

    சண்டியர் என்ற பெயரில் கமல் ஒரு படம் எடுத்தார் இதற்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கமல் தன் படத்தின் பெயரை விருமாண்டி என்று மாற்றினார்.

    பின்னர் கடந்த வருடம் சண்டியர் என்ற பெயரில் மீண்டும் புதுமுகம் நடித்த ஒரு படம் வெளியானது. ஒரு எதிர்ப்பு கூட இல்லை.

    ஏன்? 🙂

    இது தான் உலகம். கண்டு கொள்ளப்படாமல் இருப்பவர்களும் சரியான பாதையில் சென்றால் திறமை இருந்தால் தாமதமானாலும் மற்றவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்படுவார்கள்.

    அனைத்திலும் நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது.

    நல்ல புத்தகம் எங்கே இருந்தாலும் கவனிக்கப்படும் அது திரைத்துறை / எழுத்துத்துறை என்றால் கூடுதல் கவனம் பெறுகிறது அவ்வளவு தான். கவனிக்க வைக்க முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.

    எழுதுவதோடு என் கடமை முடிந்தது.. யாரும் படிக்கவில்லை என்று புலம்பினால் என்ன செய்ய முடியும்?! மற்றவர்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு நம்முடையது தான்.

    நீங்கள் என்னுடைய தளத்திற்கு புதியவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் ஆளைப் பார்த்து எழுதுவதில்லை. என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைத் தான் எழுதுவேன்.

    இதே புத்தகத்தை கண்ணதாசன் எழுதாமல் நீங்கள் எழுதி இருந்தாலும் இதையே தான் எழுதி இருப்பேன்.

    நான் எழுதுவதில் கொஞ்சம் Soft corner இருக்கும் என்றால் ரஜினி படத்திற்கு மட்டுமே! மற்றபடி யார் என்று பார்த்து எழுதுவதில்லை.

  16. இப்பவும் வர்ணாசிரமத்தில் தவறு இல்லை புரிந்து கொண்டவர்கள் மீது தான் தவறு. அரசியல்வாதிகள் அனைவரும் தவறு செய்வதால் அரசியலே தவறு என்று ஆகாது. அது போல் தான்……. பகவத்கீதை தமிழ் மொழி பெயர்ப்பு நான் படித்தது இல்லை ஏனென்றால் எனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரிந்ததால் அதிலேயே படித்து விட்டேன். ராஜாஜி என்று நினைக்கிறேன் , அவரின் மொழி பெயர்ப்பு சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்…….

  17. அய்யா எனக்கு அரத்தமுள்ள இந்து மதம் அனைத்து பாகங்களும் மற்றும் பகவத் கீதை புத்தகங்கள் வேண்டும்

    • amazon ல் தற்போது அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகமும் ஒலி வட்டும் தற்போது இல்லை என்றிருக்கிறார்கள், ஆனால் பகவத் கீதை உள்ளதாம்.

      90களில் வானதிப் பதிப்பகத்திலிருந்து, அர்த்தமுள்ள இந்துமதம் 10 புத்தகங்களும் அர்த்தமுள்ள இந்துமதம் சம்பந்தமான கேள்வி பதிலும் பெற்றேன்.
      அன்று கடிதத் தொடர்பு…
      அவர்களது மின்னஞ்சல் முகவரியும் தொலைபேசி இலக்கமும்:
      cs@chennaishopping.com
      Call us: +91 9444 63 86 86
      முயற்சி செய்து பாருங்கள் நிட்சயம் அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

    • அமாசோன் இல் அர்த்தமுள்ள இந்துமதம் இல்லை என்றிருக்கிறார்கள். பகவத் கீதை அமாசோனில் இருக்கிறது.
      கூகுள் தேடல் இயந்திரத்தில் வானதிப் பதிப்பகம் என எழுதினால் அவர்களது இணையத் தளமும் அந்தப் பக்கத்தின் இறுதியில் தொடர்பு கொள்ள முகவரிகளும் இருக்கிறது.
      90களில் வானதிப்பதிப்பகத்திற்கு, கடிதமெழுதியே பெற்றேன். இன்று இணைய வசதி செய்திருக்கிறார்கள.

  18. மனிதனிடம் கடவுள் மன்னிப்பு கேட்கும் படி கவிஞர் கண்ணதாசனால் மட்டுமே முடியும். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வே வீண் பழி ஏற்றாயடா

  19. கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலைத் தேடும் வேளை உங்களது வலைப் பதிவு கிடைத்தது.
    அர்த்தமுள்ள இந்துமதம் புத்தக விமர்சனம் நன்றாக இருந்தது. நடுநிலை வகித்த விதமே என்னைக் கவர்ந்தது.
    தமிழில் எழுதிய விதமும் நன்றாக உள்ளது.
    ஆம், திறந்த புத்தகமாக இருந்து விட்டால், சலனங்கள் சந்தேகங்களுக்கு இடமில்லாமல்ப் போய்விடும்.
    தொடருங்கள், வாழ்த்துக்கள்.

  20. திரு சோ அவர்கள் எழுதிய எங்கே பிராமணன் என்ற புத்தகத்தை படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here