நமக்குப் பிடித்த விசயங்களைச் செய்வதில் இருக்கும் இன்பமே அலாதியானது 🙂 . இவற்றில் நான் செய்ய நினைத்த எதிர்காலத் திட்டங்கள் பற்றிய குறிப்புகள்.
இதில் சுயநலம் கலந்த பொதுநலம் உள்ளது. இவற்றைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய சுயநலம் இதை அனைவருக்கும் பகிர்ந்து படிப்பவர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பது பொது நலம். Image Credit
எதிர்காலத் திட்டங்கள்
இது வரிசைப்படி / இந்த நாளில் என்றெல்லாம் கிடையாது. எப்போது வாய்ப்புக் கிடைக்கின்றதோ அப்போது செய்து விட வேண்டும் என்பது என் முடிவு. எனக்குக் காத்திருப்பது ரொம்ப பிடித்தமானது, அது நடக்குமென்றால் 🙂 .
ரஜினி
தலைவர் ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட வருட காத்திருப்பாக உள்ளது ஆனால், இதற்காக நான் இன்னும் முயற்சிக்கவில்லை. இது இப்படி சென்று கொண்டு இருக்கும் போது நான் Blog எழுத ஆரம்பித்தேன்.
அதன் பிறகு நிறைய ரஜினி பற்றி எழுதி இருக்கிறேன்.
Blog எழுதுவதால், தலைவரை நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால் அவரிடம் பேட்டி என்ற பெயரில் இரண்டு கேள்வியாவது கேட்டு அதை என்னுடைய தளத்தில் வெளியிட வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக வைத்து இருக்கிறேன்.
சும்மா இல்லங்க.. “கிரி Blog Exclusive” ன்னு போடணும் 🙂 இதற்காக நான் அவசரப்படவில்லை, பொறுமையாக இருக்கிறேன். சரியான நேரம் வரும் போது இதற்காக முயற்சி எடுத்து இதைச் செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பிற்சேர்க்கை – மே 2017 தலைவருடன் இரு நொடிகள்!
எதிர்காலத்தில் சில பிரபலங்கள் / சாமானியர்களை சந்தித்து அது பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
தள வடிவமைப்பு
தள வடிவமைப்பைப் படிக்க எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். மினுமினுக்கும், கண்ணை உறுத்தும் படங்கள் அனைத்தையும் நீக்கி விட்டேன்.
Blog லோகோ, கவர் படம், வாட்டர் மார்க் போன்றவை Professional ஆகப் போடும் திட்டம் உள்ளது.
தள வடிவமைப்பை மாற்ற நினைத்துள்ளேன், அதற்குக் கொஞ்சம் செலவு பிடிக்கும் என்பதால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
பிற்சேர்க்கை
January 2015 “Responsive Theme” எனப்படும் Mobile, Tablet உட்பட அனைத்துச் சாதனங்களிலும் படிக்க எளிதாக இருக்கும் படியான வசதியைச் செயல்படுத்தியிருக்கிறேன்.
April 2020 ல் தளத்தை 10 வருடங்களுக்குப் பிறகு மேம்படுத்தியுள்ளேன். தளத்தின் வடிவமைப்பையும் மாற்றியுள்ளேன்.
October 2023 ல் இத்தளத்தின் Hosting மாற்றப்பட்டு, வேகம் கூட்டப்பட்டது.
பயணம்
புதிய இடங்கள், மக்கள் பற்றித் தெரிந்து கொள்ள நிறைய பயணம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நான் எழுதுவதிலேயே எனக்கு ரொம்ப திருப்தி தருவது பயணக் கட்டுரைகள் தான்.
எனவே, எனக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று அது குறித்த பயண அனுபவங்களைப் பயணக் கட்டுரைகளாக எழுத வேண்டும். Image Credit
மலேசியா தைப்பூசம்
மலேசியாவில் நடைபெறும் தைப்பூச திருவிழா சென்று அது குறித்து எழுத வேண்டும். உலகிலேயே மிகப்பெரிய அளவில் நடைபெறும் தைப்பூச திருவிழா, மலேசியா பத்து மலையில் நடைபெறுவது தான்.
சிங்கப்பூரிலேயே இருந்தும் இங்கே இது வரை செல்ல முடியாதது எனக்குப் பெரிய குறை தான்.
அடுத்த தைப்பூச திருவிழாவரை சிங்கப்பூரில் இருந்தால் நிச்சயம் செல்ல வேண்டும் என்று இருக்கிறேன். பார்ப்போம் முடிகிறதா என்று.
இருக்கும் போது அருமை தெரிவதில்லை புரியும் போது அருகில் இருப்பதில்லை 🙂 .
பிற்சேர்க்கை 2015 Feb – என்னால் தைப்பூசத்திற்கு செல்ல முடியவில்லை ஆனால், முடிந்த பிறகு செல்ல வாய்ப்புக் கிடைத்தது. மலேசியா பயணம் – பத்து மலை
அமெரிக்கா
உலகின் கனவு தேசமான அமெரிக்கா சென்று வர வேண்டும் என்பது என்னுடைய பல வருட கனவு. இங்கே செல்ல இன்னொரு வித்யாசமான முக்கியக் காரணமும் உண்டு. எனக்குத் திரைப்படங்கள் மீதான Passion அதிகம்.
அமெரிக்காவில் உள்ள நீண்ட சாலைகள், அங்கே உள்ள காடுகள், வறட்சியான பகுதிகள், வீடு அமைப்புகள் இவற்றைத் திரைப்படங்களில் கண்டு இவற்றைச் சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வம் அதிகம் ஆகி விட்டது.
மசினகுடி சென்றதையே வளைச்சு வளைச்சு எழுதினேன்… இங்கே போனால் பிரிச்சி மேஞ்சுட வேண்டியது தான் 🙂 .
அமெரிக்கா செல்வது கடினம் என்றே தோன்றுகிறது காரணம், பணம் தான். இங்கே செல்வது கனவாகவே போய் விட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
அமெரிக்கா தவிர்த்து நம் இந்தியா அருகே செல்ல விரும்பும் நாடுகள் அந்தமான், இலங்கை. இன்னும் சில நாடுகள் உள்ளது அவை பிறகு சேர்க்கப்படும்.
இந்தியாவில் உள்ள இடங்களான ராஜஸ்தான், அஜ்மீர் தர்கா, இமயமலை, ரிஷிகேஷ், வாரணாசி, காசி, காஷ்மீர், வாகா எல்லை, கைலாஷ், பஞ்சாப் ஆகிய இடங்களுக்குச் சென்று பயணக் கட்டுரை எழுத வேண்டும்.
இப்பயணம் ரொம்ப சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். டிஸ்கவரி சேனலில் வருகிறவர்கள் சுற்றுவார்களே, அது மாதிரி.
நண்பர்கள்
பயணத் துணைக்கு ஆர்வமுள்ள, என் எண்ணங்களுக்கு ஒத்துப்போகிற நபர் உடன் இருந்தால் தான் இந்தப் பயணம் சிறப்பாக இருக்க முடியும்.
ஏனென்றால் இது நம் ஊரில் உள்ள இடத்திற்கு போவது போல ஒரு நாளில் சென்று வரக்கூடிய இடங்கள் அல்ல. குறைந்தது ஒரு வாரப் பயணம் இருக்கும்.
மாறுபட்ட கலாச்சாரம், வசதிகள் எப்படி இருக்கும் என்று தெரியாது, மொழிப் பிரச்சனை எனும் போது, உடன் ஒரு துணை இருந்தால் நமக்கும் தைரியமாக இருக்கும்.
ஒத்த கருத்துடையவராக இருக்கும் போது பயணம் சுவாரசியமாகவும் இருக்கும்.
எப்போதுமே நீண்ட தூர பயணம் என்றால் துணை இருப்பது நல்லது. மூவராகப் பயணம் செய்யலாம் என்று திட்டமிட்டுஇருக்கிறேன், பார்ப்போம்.
தென் இந்தியாவில் இதுவரை செல்லாத இடங்கள் ஏராளமாக உள்ளன.
வட மாநிலங்களில் நிழல் படம் எடுக்க ஏராளமான பழமையான இடங்கள், மக்கள் இருக்கிறார்கள். நிழற்படம் எடுப்பவர்களுக்கு வட மாநிலம் விருப்பமான இடம் என்று நிழற்படம் எடுக்கும் என் நண்பர் கூறினார்.
Blog
Blog எழுதுவது ஒரு வகையில் திருப்தியை அளிக்கிறது. ஒரே மாதிரி எழுதாமல் அனைத்தையும் பகிர நினைக்கிறேன் இதுவே, என்னைச் சலிப்படையாமல் வைக்கிறது.
என் சுதந்திரத்தை தீர்மானிக்க வேண்டியது நான், என் எழுத்தல்ல. எனக்கு இந்த அளவான எழுத்தே திருப்தி அளிக்கிறது என்பதால், தற்போது இதுவே போதும்.
மேற்கூறியவை உடனே நடப்பவையல்ல ஆனால், நடக்க வாய்ப்புள்ளவை.
இறுதியாக, காலம் எடுத்தாலும் என் தளத்தை முக்கியமான தளமாக, ஒரு Professional Blog ஆகக் கொண்டு வர வேண்டும் என்பது தான் என் விருப்பம்.
உங்களின் ஆதரவுடன் அடைவேன் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது.
Think BIG 🙂 .
குறிப்பு : இந்தப் பக்கத்தில் உள்ள தகவல்கள், எதிர்காலத் திட்டங்கள் நிரந்தரமானதல்ல… அவ்வப்போது சேர்க்கப்பட்டு / மாற்றப்பட்டு கொண்டே இருக்கும்.