Io capitano (2023 Wolof) | கொடும்பயணம்

2
Io capitano

கதியாகச் செல்லும் இரு நண்பர்கள் கதையே Io capitano (Me Captain). Image Credit

Io capitano

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு Senegal.

ஏழை நாடான Senegal ல் உள்ளவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையைத்தேடி ஐரோப்பா நாடுகளுக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்று துடிப்பவர்கள்.

இதைப் போன்ற இரு இளைஞர்கள் இதற்காகவே வீட்டுக்குத்தெரியாமல் உழைத்துப் பணம் சேர்த்து ஐரோப்பா செல்ல வேண்டும் என்று முயல்கிறார்கள்.

அவ்வாறு பணத்தைச் சேர்த்துப் பயணிக்கும் போது மிகப்பெரிய ஆபத்துகளைச் சந்திக்கிறார்கள். இறுதியில் ஐரோப்பா சென்றார்களா? என்பதே Io capitano.

கொடும்பயணம்

Senegal ல் இருந்து மிகக்கொடுமையான பாலைவன மார்க்கமாக லிபியா சென்று அங்கிருந்து ஐரோப்பா (இத்தாலி) செல்ல வேண்டும்.

சில காட்சிகள் நம்ப முடியாததாகவும், எப்படிச் சாத்தியமானது என்ற கேள்விகளையும் எழுப்புகிறது.

Senegal ல் இருந்து போலி பாஸ்போர்ட் (உடனடியாக!) எடுத்து, அதைச் சரிக்கட்ட அங்குள்ளவர்களுக்குப் பணம் கொடுத்து, முகவரைப் பிடித்துப் பாலைவனப் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு செல்பவர்கள் சிலர் வெயில் கொடுமை தாங்காமல், நடக்க முடியாமல் வழியிலேயே இறந்து விடுவார்கள்.

அப்படியும் பிழைத்துச் சென்றால், லிபியா மாஃபியாவிடம் உறுதியாக மாட்டிக்கொள்வார்கள், அவர்களிடமிருந்து தப்பிப்பது எளிதல்ல.

இங்கே வந்தவுடன் பணத்தைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று அறிவுறுத்தி, பணத்தை ஆசன வாயில் மறைத்துக்கொள்ள அறிவுறுத்துவார்கள்.

இவ்வளவு தூரம் பணத்தைப் பிடுங்கத் தெரிந்தவர்களுக்கு, எப்படி மறைத்து எடுத்து வருவார்கள் என்று தெரியாதா? என்று நினைத்தேன், செய்து விட்டார்கள்.

பூலோக நரகம்

பாலைவனத்தைக் கடப்பது கூட, முயன்றால், பொறுமை காத்தால் கடந்து விடலாம் ஆனால், மாஃபியாவிடம் சிக்குவது மிகக்கொடுமை.

இரண்டு வாய்ப்பு கொடுக்கப்படும்.

சித்திரவதையை அனுபவிக்கிறீர்களா அல்லது ஊரில் இருப்பவர்களிடம் கூறி தப்பிக்க பணத்தை ஏற்பாடு செய்கிறீர்களா?

இங்கே யாரும் யாரையும் கேட்க மாட்டார்களா?! அரசாங்கம் என்ன செய்கிறது?! என்று கேள்விகள் தோன்றுகிறது.

நடப்பதைத்தான் காண்பித்துள்ளார்கள் எனும் போது அதிர்ச்சியாகவே உள்ளது.

இங்கே இருந்து செல்வது எளிதல்ல. திறமையானவர்களை அடிமையாகப் பிடித்துச் செல்வார்கள், அவர்களே விடுவித்தால் தான் உண்டு.

அகதிகள்

உலகம் முழுக்க தற்போது அகதிகள் பிரச்சனையுள்ளது. கடந்து சில வருடங்களாக ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் தினமும் ஐரோப்பா செல்கிறார்கள்.

ஆனால், உயிரைப் பணையம் வைத்துச் சென்று, சென்ற நாட்டில் வன்முறை, திருட்டு, கொலை, பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.

சொந்த நாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும் அல்லது சென்ற நாட்டுக்காவது உண்மையாக இருக்க வேண்டும்.

சொந்த நாட்டில் வாழ வழி இல்லாமல் செல்பவர்கள், அடைக்கலம் கொடுத்த நாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும் ஆனால், 90% இருக்க மாட்டார்கள்.

கடற்பயணம்

இவ்வாறு பாலைவனம் கடந்து, லிபியாவும் கடந்து ஐரோப்பா செல்பவர்களுக்கு அடுத்த ஆபத்து, கடலில் பயணிப்பது.

செய்திகளில் படித்து இருக்கலாம், அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு கவிழ்ந்து அனைவரும் மூழ்கினர் என்பதை. அது போன்ற பயணங்களில் ஒன்றாக அகதிகள் கடற் பயணம் இருக்கும்.

இதையும் கடந்து கரையை அடைபவர்களே ஐரோப்பா அடைகிறார்கள். இவ்வாறு தினமும் 1000 பேர் பல்வேறு வழிகளிலிருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆபத்தான பயணத்தில் பெண்கள், குழந்தைகளும் அடக்கம். இதோடு கர்ப்பிணிகளும். இவர்களை வைத்துத்தான் இக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு பின்னணி இசை

இப்படம் பார்க்க முக்கியக்காரணமே பாலைவனம், கடல் போன்ற இடங்களே.

கேமராவில் பாலைவனம் பார்க்க அழகாக உள்ளது ஆனால், இருப்பதிலேயே ஆபத்தானதாகவும், கொடுமையானதாகவும் உள்ளது.

எடுத்துக்காட்டுக்குக் கடலில் மூழ்கினால் சில நிமிடங்களில் இறந்து விடுவோம் ஆனால், பாலைவனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நரக வேதனையை அனுபவித்து உயிரை விட வேண்டும்.

இவையெல்லாவற்றையும் விடக் கொடுமை, ஏற்கனவே இது போன்று வந்தவர்கள் இறந்த உடல்களைக் கடந்து செல்ல வேண்டும்.

பரந்து விரிந்த பாலைவனத்தை அழகாகக் காட்டியுள்ளார்கள். அதோடு செனகலிலிருந்து புறப்பட்டு வரும் வழிகளெல்லாம் புதிய அனுபவமாக உள்ளது.

இவ்வளவு பேரை ஒருங்கிணைத்துக் காட்சிப்படுத்தி அதுவும் பாலைவனப்பகுதியில் அழைத்துச் செல்வது, கடும் சவால் தான்.

எப்படிப்பட்ட இடங்கள்? மனிதர்கள்? ஆபத்துகள் என்று அனைத்தையும் இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இசையை விட ஒளிப்பதிவுக்கே முக்கியத்துவம்.

யார் பார்க்கலாம்?

புதிய இடங்கள், மக்கள், வாழ்க்கை முறைகள், பண்பாடு, பாலைவனம், கடல் என்று Adventure ஆகப் பார்க்க விரும்புபவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்காது. இப்படம் வசூல் பெறவில்லை ஆனால், விருதுகளைக் குவித்துள்ளது.

NETFLIX ல் காணலாம்.

Directed by Matteo Garrone
Written by Matteo Garrone, Massimo Gaudioso, Massimo Ceccherini, Andrea Tagliaferri
Produced by Matteo Garrone, Paolo Del Brocco,
Starring Seydou Sarr, Moustapha Fall
Cinematography Paolo Carnera
Edited by Marco Spoletini
Music by Andrea Farri
Release dates 6 September 2023 (Venice) 7 September 2023 (Italy) 3 January 2024 (France) 10 January 2024 (Belgium)
Running time 121 minutes
Countries Italy, Belgium, France
Languages Wolof, French

தொடர்புடைய கட்டுரைகளை

ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ]

கடவுள் தொடங்கிய இடம் | அகதிகளின் திகில் பயணம்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. பதிவை முழுவதும் படித்து பார்த்த பிறகு.. படத்தை பார்த்த முழு feeling கொடுக்குது.. உலகில் நாம் அறியாத பலவற்றில் இதுவும் ஒன்று தான்.. இங்கு அரசாங்கம் சட்ட திட்டங்கள் ஏதும் எடுபடாது.. இங்கு போராட்டம் என்பது பல வகையானது.. பெரும்பாலும் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக தான் இருக்கும்..

    காரணம் அமெரிக்கா / மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் ஆப்ரிக்காவின் கனிம வளங்களை கொள்ளை அடிக்க வேண்டி, இங்கு ஆட்சியில் இருப்பவர்களை அவர்களின் கைப்பாவையாக வைத்து உள்ளார்கள்.. ஆப்பிரிக்காவை பொறுத்தவரை தங்கம், வைரம், பெட்ரோல், நிலக்கரி இது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட வளங்கள் உள்ளது (அரியவகை மரங்கள். இன்னும் பல..) ஒரு பயணமாக ஆப்ரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு சிறு வயதிலிருந்தே உண்டு..

  2. @யாசின்

    “பதிவை முழுவதும் படித்து பார்த்த பிறகு.. படத்தை பார்த்த முழு feeling கொடுக்குது.”

    அப்படியா தெரியுது 🙂 .முடிந்த வரை கதையை, முக்கிய திருப்பங்களை கூற மாட்டேன்.. இதில் சில சம்பவங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

    “அமெரிக்கா / மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் ஆப்ரிக்காவின் கனிம வளங்களை கொள்ளை அடிக்க வேண்டி, இங்கு ஆட்சியில் இருப்பவர்களை அவர்களின் கைப்பாவையாக வைத்து உள்ளார்கள்.”

    உண்மை. இவர்களாலே உலகில் பல்வேறு பிரச்சனைகள்.

    “ஆப்பிரிக்காவை பொறுத்தவரை தங்கம், வைரம், பெட்ரோல், நிலக்கரி இது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட வளங்கள் உள்ளது”

    காங்கோ போன்ற நாடுகள் அவ்வளவு வளங்களை வைத்துக்கொண்டு ஏழ்மை நாடாக இருப்பது வருத்தமளிக்கிறது.

    “ஒரு பயணமாக ஆப்ரிக்கா செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு சிறு வயதிலிருந்தே உண்டு.”

    எனக்கும் ஆசையுள்ளது ஆனால், பயமாகவும் உள்ளது.

    எங்கள் அலுவலகத்தில் ஒரு பெண் 2003 – 2005 வாக்கிலே ஏராளமான ஆப்பிரிக்கா நாடுகளுக்கு டிரைனிங் கொடுக்கத் தைரியமாக சென்று வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here