ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?

4
ரயில்வே துறையில் தனியார்

யில்வே துறையில் தனியார் வழித்தட ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

தனியார் மயமாக்கப்பட்டாலும் அனைத்து பொறுப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படாமல் சில அதிகாரங்களை, கட்டுப்பாடுகளை இந்திய ரயில்வே நிறுவனமே வைத்துள்ளது. இதுகுறித்துப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தனியாரிடம் ஒப்படைப்பது சரியா தவறா?

இதைச் சரி தவறு என்று ஒரே வார்த்தையில் கூற முடியாது. காரணம், இதில் விவாதிக்க வேண்டியவை ஏராளம் உள்ளன.

பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு ரயில் நிலைய & ரயிலின் தரம், வசதிகள் மேம்பட்டுள்ளது, இதில் மாற்றுக்கருத்தே இல்லை.

இலவச இணையம், தங்கும் / ஓய்வு அறைகள், நவீன கழிவறைகள், நகரும் படிக்கட்டு, மின் தூக்கி, கூடுதல் இருக்கைகள், கூடுதல் விளக்குகள், பராமரிப்பு, மேம்பட்ட உணவகங்கள், IRCTC இணையத் தளத்தின் அதிகரித்த வேகம்.

செயலியின் மேம்பாடு, UTS செயலியின் எளிமை, மின்னனு பரிவர்த்தனை என்று ஏகப்பட்ட முன்னேற்றங்கள்.

தொடர்ச்சியாக ரயில் பயணம் செய்பவர்களுக்கு நான் கூறும் அனைத்தும் புரியும்.

பாஜக ஆட்சியில் ரயில்வே துறை மிக முன்னேற்றம் அடைந்துள்ளது.

தனியாரை ஏன் நுழைக்க வேண்டும்?

அரசுத் துறைகளில் தனியார் இல்லாமல் இருப்பதே நல்லது என்பது பரவலான கருத்து.

ஆனால், அதில் பணி புரியும் ஊழியர்கள் சிலர் / பலர் தங்கள் பொறுப்புகளைப் புறக்கணித்து, வேலை நிறுத்தம் போன்றவற்றை அதிகம் செய்யும்போது பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.

திறமையான, நேர்மையான ஊழியர்கள் இருப்பதில் சந்தேகம் இல்லையென்றாலும், ரயில்வே துறை போன்ற இலட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட மிகப் பெரிய துறையில் அனைவரையும் கண்காணித்து வேலை வாங்குவது எளிதல்ல.

தனியார் துறையும் வந்தபிறகு ஏற்பட்ட முன்னேற்றங்கள்

தற்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத சேவையாகி விட்ட தனியார் வங்கிகள், தொலைபேசி & போக்குவரத்து நிறுவனங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

வங்கித் துறை

வங்கித்துறையில் தனியார் வந்தபிறகு போட்டி காரணமாகச் சேவை தரம் மேம்பட்டுள்ளது.

ஒருவேளை அரசு வங்கிகள் மட்டுமே இருந்தால், இன்னும் பல வருடங்கள் பின்தங்கித்தான் நாம் இருந்து இருப்போம்.

தனியார் வங்கிகள் வந்த பிறகே போட்டி காரணமாக, அரசு வங்கிகளும் தங்கள் சேவையில் கவனம் கொண்டன, புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்தன.

முதலில் வாடிக்கையாளர்களை அரசு வங்கி ஊழியர்கள் எவ்விதம் நடத்தினார்கள், அவை தற்போது எப்படி மாறி வருகிறது என்பதை தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை.

தற்போது இருந்த இடத்திலேயே அனைத்து விதமான வங்கிப்பணிகளையும் முடிக்கிறோம் என்றால், அதற்கு மூல காரணம் தனியார் வங்கிகள் நுழைந்ததே.

தற்போது ஒரு அரசு வங்கியின் மேலாளருக்குக் கொடுக்கப்படும் இலக்கை அடையவில்லை என்றால் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

வங்கி ஊழியர் நிலையிலிருந்து பார்த்தால் அவர்களுக்கு இம்மாற்றம் சுமை, பொதுமக்கள் நிலையிலிருந்து பார்த்தால், இம்மாற்றம் வரவேற்கக்கூடியது.

தொலைபேசி நிறுவனங்கள்

BSNL மட்டுமே இருந்தால் என்ன நிலையாகி இருக்கும்?

ஒரு இணைப்பைப் பெறுவதற்கும், மாத கட்டணத்தைக் கட்டுவதற்கும், பழுது ஏற்பட்டால் அதைச் சரி செய்ய அவர்கள் எடுக்கும் காலமும், நடந்து கொள்ளும் முறையும் எப்படி இருந்தது என்பதும், தற்போது எப்படி மாறி இருக்கிறது என்பதற்கும் காரணம் தனியார் துறை போட்டியே.

ஒரு நாளைக்கு 2 GB டேட்டா நமக்குக் கிடைப்பதற்கு 2025 / 2030 கூட ஆகியிருக்கலாம். அகன்ற அலைவரிசை (Broadband) இன்னும் 10 MBps கூடத் தாண்டி இருக்காது என்பதே உண்மை.

தூர்தர்சன் மட்டுமே இருந்தபோது, ஒரு நாள் சன் குழுமம் “தமிழ் மாலை” என்ற பெயரில் அறிமுகமானபோது மக்களின் நிலை எப்படி இருந்தது என்பது அந்த நாளை அனுபவித்தவர்களுக்கு நன்கு தெரியும்.

சேனல் தெரிகிறதா என்று ஏரியலை திருப்பிக் கொண்டு இருந்த நேரத்தில் DTH அறிமுகம்.

சித்ரகார், ஒளியும் ஒலியும், ஜுனூன், சாந்தி, சந்திரகாந்தா, சுரபி, ஷக்திமான், ஸ்வாபிமான் மட்டுமே இருக்கும்.

தற்போது திரைக்கு வந்து சில நாட்களே ஆன என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அபரிமிதமான வளர்ச்சி, அதே சமயம் அதிகரித்த சேனல்களால் சிக்கல்களும்.

வறட்சியான நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் வண்ணமயமாகப் பல நிகழ்ச்சிகளைக் கொண்டு வந்தபிறகு எப்படி மாற்றம் பெற்றது என்பது அந்தச் சமயத்தில் இருந்தவர்களுக்குத் தெரியும்.

இத்தலைமுறைக்கு தனியார் துறைகள் வந்தபிறகு வந்த வசதிகள் மட்டுமே தெரியும். இரண்டையும் அனுபவித்தவர்களுக்கே வித்யாசம் புரியும்.

போக்குவரத்துத் துறை

தனியார் பேருந்துகளின் வருகைக்குப் பிறகே போட்டி காரணமாகத் தரமான, மேம்பட்ட வசதிகளுடன் அரசுப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போதைய நிலையைத் தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், அனைவரின் தின வாழ்க்கையில் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

அரசு விமானங்கள் மட்டுமே இருந்து இருந்தால், என்ன ஆகி இருக்கும்? யோசித்துப்பாருங்கள்.

தனியாரிடம் இருந்தாலும் கட்டுப்பாடு அரசிடம் உள்ளது

  • தனியார் வங்கிகள் வந்தாலும் அதை RBI கட்டுப்படுத்துகிறது.
  • தனியார் தொலைபேசி நிறுவனங்கள் வந்தாலும் TRAI கட்டுப்படுத்துகிறது.
  • காப்பீட்டு (Insurance) நிறுவனங்களை IRDA அமைப்பு கட்டுப்படுத்துகிறது.
  • ஓய்வூதிய திட்டங்களை, நிறுவனங்களை PFRDA கட்டுப்படுத்துகிறது.
  • பங்குச்சந்தையை SEBI, நிதி நிறுவனங்களை RBI கட்டுப்படுத்துகிறது.
  • பேருந்துகள் ஒரு மாநில கட்டுப்பாட்டினுள் இருப்பதால், இந்தியா முழுக்க அதற்கான நேரடி கட்டுப்பாடு இல்லாமல் உள்ளது.
  • ட்ராவல்ஸ் தவிர்த்து மற்ற தனியார் பேருந்துக் கட்டணங்கள் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே செயல்படுகிறது.

எனவே, தனியார் வசம் இருந்தாலும் கட்டுப்பாட்டுடனே உள்ளது.

பின் ஏன் இதை எதிர்க்கிறார்கள்?

இதை எதிர்ப்பவர்கள் யார் என்றால்..

எதைச் செய்தாலும் எதிர்ப்போம் என அரசியல் கட்சிகள், போராட்டம் செய்வதையே வேலையாக வைத்து இருக்கும் தொழிற்சங்கங்கள்.

இவ்வளவு நாள் சொகுசாக இருந்த இடம் / சலுகைகள் பறி போய் விடுமோ என்று அஞ்சும் ஊழியர்கள்.

கேரளாவில் எதனால் தொழிற்சாலைகள் அதிகம் இல்லை? ஏன் சேட்டன்கள் மற்ற மாநிலங்களை நோக்கி வருகிறார்கள்? காரணம் அங்கே உள்ள தொழிற்சங்கங்கள்.

தொழிற்சங்கங்கள் போராட்டம் போராட்டம் என்று மாநிலத்தை வளர்ச்சி அடையவே விடமாட்டார்கள். நிறுவனங்களை நடத்தவே விடமாட்டார்கள்.

ரயில் நிலையங்களின் சுவற்றை நாசம் செய்ததே தொழிற்சங்கங்களின் சுவரொட்டிகள் தான்.

எங்கே பார்த்தாலும் “SRMU பொதுச் செயலாளர் கண்ணையா” பெயருடன் இருக்கும். தற்போது இவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,

ரயில்வே துறையில் உள்ளவர்களைக் கேட்டால், அங்கு வீணாகும் மக்கள் வரிப் பணமும், எத்தனை ஊழியர்கள் வீணடித்து வருகிறார்கள் என்பதையும் அறியலாம்.

கடமையைச் சரிவரச் செய்யாத அதிகாரிகள், ஊழியர்களால் வீணாகும் பணம் மட்டுமே பல ஆயிரம் கோடிகள் இருக்கும்.

பணமும் வீணாகி வசதிகளும் கிடைக்கப்பெறாமல் உள்ளது.

தனியார் துறை உள்ளே வரும்போது தற்போது பணியை அக்கறை இல்லாமல் செய்து வருபவர்களுக்கு நெருக்கடி வரும்.

முன்பு போலக் கவனக்குறைவாக இருக்க, புறக்கணிக்க முடியாது. வேலையைச் செய்தே ஆக வேண்டும்.

சில ரயில்கள் தனியார் மயமாகும்போது அதில் உள்ள சேவைகள், வசதிகள் நிச்சயம் மேம்படும் எனவே, மக்கள் அந்த ரயிலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஒப்பீட்டளவில் மற்ற ரயில்களில் கூட்டம் குறையும்போது ஏற்படும் வித்யாசத்தால் அதைப் பராமரிக்கும் அதிகாரிகளுக்கு, ஊழியர்களுக்கு நெருக்கடி ஏற்படும்.

எனவே, மேலே வங்கி, தொலைத்தொடர்பு, போக்குவரத்து துறைகளில் என்ன நடந்ததோ அதே தான் இங்கேயும் நடக்கும்.

தேவையற்ற பயம்

தனியார் மயமானால் மக்களுக்குச் சிரமம் ஏற்படும் என்பதெல்லாம் போலி அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்கள், சொகுசு போய் விடுமே என்று அஞ்சுபவர்கள் செய்யும் மூளைச்சலவை.

மேற்கூறிய மாற்றங்களால் நாம் பெற்றதே அதிகம்.

நிச்சயம் சில நெருக்கடிகள், கட்டண உயர்வு இருக்கலாம் ஆனால், அத்துறை எவ்வளவு மேம்பட்டுள்ளது என்பதையும் காண வேண்டும்.

ஒரு துறையின் சேவை, தரம் மேம்பட வேண்டுமானால் தனியார் துறையின் பங்களிப்பும் அவசியம். போட்டி இருந்தாலே ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும்.

பாதுகாப்புத் துறை தவிர்த்து மற்ற தேவையான துறைகளில் தனியார் பங்களிப்புத் தேவை.

சிங்கப்பூரில் அரசு (SMRT) மற்றும் தனியார் (SBS Transit) மெட்ரோ / பேருந்துகள் உள்ளன. இதிலும் தனியார் நிறுவனமான SBS Transit போக்குவரத்தே வசதியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

இது நான் இருந்த 2015 வரையான நிலை, தற்போது (2022) எப்படி என்பது தெரியவில்லை.

சென்னை மெட்ரோ, 6 நிலையங்களின் பராமரிப்பை தனியார் பொறுப்பில் விட்டுள்ளது.

இது செயல்பாட்டுக்கு வந்தவுடன் வந்த முதல் அறிவிப்பு மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சொந்தமான சுவர், தூண் போன்றவற்றில் சுவரொட்டி விளம்பரம் செய்தால் 6 மாதங்கள் சிறை, ₹1000 அபராதம் அல்லது இரண்டும் என்ற அறிவிப்பு.

இது பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஏழைகளின் ரதம்

“ஏழைகளின் ரதம்” என்று அழைக்கப்படும் “ரயில் பயணம்” என்பது மிகக் குறைந்த கட்டணத்தில் இந்திய அரசால் வழங்கப்படுகிறது.

இன்றும் அனைவரும் விரும்பும் பயணமாக உள்ளது.

உள்ளூர் ரயில்களில் கட்டணம் மிகக்குறைவு. எடுத்துக்காட்டுக்கு, சேப்பாக்கத்திலிருந்து வேளச்சேரி செல்ல ₹5 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில் சென்னையிலிருந்து ஈரோடு (395 கிமீ) வரை செல்ல ₹75 மட்டுமே.

பெரும்பான்மை மக்கள் ரயிலையே நம்பி இருப்பதால், கூடுதல் வசதி தருகிறேன் என்று கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி விடாமல், RBI, TRAI போன்ற அமைப்புபோல இதற்கும் கட்டணத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்புத் தேவை.

இறுதியாக, கட்டண உயர்வு என்ற பிரச்னை இருந்தாலும், அதைக் கட்டுக்குள் வைத்து ரயில் பயணத்தை மட்டுமே நம்பி இருக்கும் மக்களைச் சிரமப்படுத்தாமல், திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

அரசுத்துறைகளில் தனியார் துறையின் பங்களிப்பு இல்லையென்றால், நாட்டின் வளர்ச்சியில் இந்தியா 20 வருடங்களாவது பின் தங்கியிருக்கும்.

“தனியார் மயம் தனியார் மயம்” என்று ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களைப் போலப் பேசாமல், தனியார் பங்களிப்பு வந்தபிறகு ஏற்பட்ட மாற்றங்களை யோசித்தால், நாட்டின் வளர்ச்சியில், பொதுமக்களின் சேவையில் தனியார் துறையின் பங்களிப்பு புரியும்.

கால மாற்றத்தில் ரயில்வேயில் தனியார் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.

தொடர்புடைய கட்டுரைகள்

உண்மையாகவே ரயில் போய்டும் போல இருக்கே..!

சென்ட்ரல் பெயர் மாற்றமும் ரயில்வே தேர்வு ஊழலும்!

நீங்கள் உள்ளூர் (suburban) ரயில்களில் பயணிப்பவரா?

ரயில் பயணங்கள்

சென்னை மெட்ரோ பயணிகள் அட்ராசிட்டிகள் 🙂

புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!

முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்

SBI வங்கி கொடுத்த அதிர்ச்சி!

மற்றவரின் ATM அட்டையைப் பயன்படுத்துகிறீர்களா?

KYC க்கு ஏற்ற அடையாள அட்டை எது?

தமிழைத் திரும்பக்கொடுத்த “HDFC”

HDFC கடனட்டையின் பாதுகாப்பான பரிவர்த்தனை

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. (ரயில் சேவையை மிக அதிகமாகப் பயன்படுத்துபவன் என்ற முறையில் இதுகுறித்துப் பேச எனக்குத் தகுதியுள்ளதாகக் கருதுகிறேன்.)

    நீங்கள் ரயில் சேவையை உபயோகிப்பதே இல்லை என்றாலும் இந்திய குடிமகனாக உங்களுக்கு இதை பற்றி பேச உரிமை உண்டு . நீண்ட நாள் கழித்து உங்கள் பதிவை படிக்கிறேன் . இன்னமும் நீங்கள் சுய புராணம் சொல்லி கொள்பவராக தான் உள்ளீர்கள் .
    (நான் காடுகளின் ரசிகன் , கூகுள் ரசிகன் , மிக அதிகமாக ரயிலை உபயோகிப்பவன், ) என்று நிறைய சொல்லலாம் . யாருக்கு தான் ரயில் பயணம் பிடிக்காது . டிக்கெட் கிடைக்காமல் தான் வேறு வழி இன்றி பேருந்து பயணம் செய்கிறார்கள். மற்ற படி உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை . ஒவ்வொன்றாக படித்து கொண்டு வருகிறேன். நன்றி

  2. கிரி, உங்களின் கட்டுரையிலே நீங்களே பதிலையும் தெளிவாக சொல்லி வீட்டர்கள்.. எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக ரயில்வே துறையில் பணி புரிந்து வருகின்றனர்.. இந்த துறைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பல வருடம் பந்தம் தொடர்கிறது.. தற்போதும் என் பெரியப்பாவின் பையன் திருச்சியில் ரயில்வேவில் பணி புரிகிறான்..

    லாலுபிரசாத் யாதவ் அமைச்சராக இருந்த போது ரயில்வே துறை மிகுந்த லாபத்தில் சென்றதாக செய்தித்தாள்களில் படித்த நியாபகம் உள்ளது.. எதிர்கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அரசு நிச்சயம் சரியான முடிவை யாருக்கும் பாதிப்பில்லாமல் எடுக்க வேண்டும்..நிச்சயம் மாற்றம் என்ற ஒன்று தவிர்க்க முடியாது.. என் விருப்பம் தனியார் மயமாக்குவதை நான் வரவேற்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @jஜோதிஜி அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் மாதிரி சொல்லிட்டு போயிட்டீங்க 🙂

    சரியா தவறா என்று தலைப்பு வைத்ததால், இப்படி கூறினேன். சரி தான் என்று தலைப்பு வைத்தால், நீங்கள் சொன்னது போலக் குறிப்பிட்டு இருப்பேன்.

    @ராமகிருஷ்ணன்

    “நீங்கள் ரயில் சேவையை உபயோகிப்பதே இல்லை என்றாலும் இந்திய குடிமகனாக உங்களுக்கு இதைப் பற்றிப் பேச உரிமை உண்டு .”

    சரி தான்.

    நான் ஏன் இதைக் குறிப்பிட்டேன் என்றால், பொருளாதாரத்துறையில் உள்ளவர்கள் பொருளாதாரம் பற்றிக் கூறினால் நல்லது, ஐடி துறையில் உள்ளவர்கள் அதைப் பற்றி விளக்கினால் நல்லது காரணம், அவர்கள் அதிலேயே இருப்பதால், விஷயம் அதிகம் தெரிந்து இருக்கலாம்.

    அது போலவே இதை அதிகம் பயன்படுத்துபவன் என்பதால் குறிப்பிட்டேன், வேறு ஒன்றுமில்லை.

    “இன்னமும் நீங்கள் சுய புராணம் சொல்லிக் கொள்பவராகத் தான் உள்ளீர்கள் . (நான் காடுகளின் ரசிகன் , கூகுள் ரசிகன் , மிக அதிகமாக ரயிலை உபயோகிப்பவன், ) என்று நிறைய சொல்லலாம் ”

    என்னங்க அநியாயமா இருக்கு 🙂

    இதெல்லாமா சுயபுராணம்! ஒரு விஷயம் பிடிக்கிறது, ரசிகன் என்று கூறுவது, கட்டுரைக்கு வலு சேர்க்க கூறுவது மட்டுமே.

    எனக்கு அது தெரியும் இது தெரியும், மற்றவர்கள் முட்டாள்கள் என்கிற ரீதியில் எழுதினால் மட்டுமே அது சுயபுராணம்.

    அதோட இது செய்தி தளம் கிடையாதுங்க.. என்னுடைய Personal Blog இங்கே என்னைப் பற்றித் தான் கூற முடியும். செய்தியை மட்டுமே பகிர வேண்டும் என்றால், அதற்கு ஏராளமான செய்தி தளங்கள் உள்ளன, நான் எதற்கு?!

    என்னுடைய எண்ணங்களை, விருப்பங்களைப் பகிரவே இத்தளம்.

    “யாருக்கு தான் ரயில் பயணம் பிடிக்காது ”

    என்னுடைய நண்பர்கள் பலருக்கு பிடிக்காது, அவர்களுக்குப் பேருந்துப் பயணம் மட்டுமே பிடிக்கும்.

    “மற்ற படி உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை”

    நன்றி.

    @யாசின் சூப்பர் 🙂 ரயில்வே துறையில் பணி புரிய வேண்டுமே என்ற என் ஆசை கனவாகவே போய் விட்டது 🙁 .

    எனக்குப் பெரிய ஏமாற்றம்.

    ஆமாம், லல்லு இருந்தபோது பொறுப்புகளை அதிகாரிகளிடம் விட்டுத் தலையிடாமல் இருந்ததால், இலாபம் அடைந்ததாகக் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here