கடலுக்கு அப்பால் | ப.சிங்காரம்

8
கடலுக்கு அப்பால்

புலம் பெயர்ந்தவர்கள் வாழ்க்கையைக் கூறிய நாவல்களில் ஒன்று கடலுக்கு அப்பால்.

கடலுக்கு அப்பால்

வேலைக்காகப் புலம் பெயர்ந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்றவர்களை, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்தவற்றைத் தனது கற்பனை கலந்து ஆசிரியர் ப.சிங்காரம் அவர்கள் கூறியுள்ளார்.

உலகப்போர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருந்தாலும், படித்து இருந்தாலும் நம்மவர்களில் ஒருவராகக் கூறும் போதும், பாதிக்கப்படுவது தமிழர்கள் எனும் போது அதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

இவற்றோடு இடையே வட்டித் தொழில், காதல் என்று கலந்து விவரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர்

பிரிட்டிஷ் இராணுவம், ஜப்பானிய இராணுவம், சீன இராணுவத்தோடு இந்தியாவின் நேதாஜி படை பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது சுவாரசியமாக உள்ளது.

நண்பர்கள் கூறியதை வைத்து இரண்டாம் உலகப்போர் நிகழ்வுகளை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

போர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதும், சம்பந்தமே இல்லாமல் குண்டுகளால் உறவுகளை இழப்பதும் சராசரி நிகழ்வாக உள்ளது.

கப்பல் விட்டால், ஊருக்குப் போகலாம் என்ற எதிர்பார்ப்போடு சிலர்.

நேதாஜி

இந்தியர்க்காகப் படை திரட்டிய நேதாஜிக்கு ஆதரவாகப் பலர் இருந்துள்ளனர்.

நேதாஜி எப்படி இவ்வளவு பெரிய படையைக் கையாண்டார், பல நாடுகளில் எப்படி ஒருங்கிணைத்தார் என்று நினைத்தால் வியப்பாக உள்ளது.

நேதாஜி தனக்கு அடுத்த நிலையில் எவரையும் விட்டுச் செல்லவில்லை. எனவே, விமான விபத்தில் இறந்த பிறகு பலரும் அதோடு விலகி விட்டனர்.

எந்தவொரு அமைப்புக்கும் இரண்டாம் தலைமை அவசியம் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது.

வட்டித் தொழில்

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குத் தமிழகத்தில் பலர் புலம் பெயர்ந்து சென்றனர்.

இவர்களில் பலர் வேலை தேடிச் சென்றவர்கள், பலர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். தற்போது இவர்களே இந்நாடுகளில் தமிழ் குடியினராக உள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் செட்டியார்கள். பெரும்பாலும் வட்டித் தொழிலுக்குச் சென்றவர்கள்.

இந்நாடுகளில் உள்ள பிரபலமான முருகன் கோவில்களைப் பெரும்பாலும் இவர்களே கட்டியிருப்பர் அல்லது இவர்களின் பங்கும் உறுதியாக இருக்கும். தற்போதும் இக்கோயில்களில் செட்டியார்களின் முக்கியத்துவம் அதிகம்.

செட்டி என்றால் பணத்தில் கெட்டி என்று சொல் வழக்கு. அதற்கேற்றாற் போலத் தற்போதும் வட்டித் தொழில் சிறப்பாகச் செய்து கொண்டுள்ளார்கள்.

இந்நாவலில் முக்கிய கதாபாத்திரமே செட்டியார் தான்.

காதல்

சிறு வயது நட்பாகத் துவங்கி காதலாக மாறிப் பின்னர் காலச் சூழ்நிலைகள் அதற்கு எதிராக மாறுவதை ஆசிரியர் இயல்பாகக் கூறியுள்ளார்.

இதுவொரு காதல் கதை கிடையாது ஆனால், காதல் போன்ற சூழ்நிலையில் வருகிறது.

நாயகன் செல்லையாவின் நண்பன் மாணிக்கம் கூறும் கண்ணகி, மாதவி, கோவலன் எடுத்துக்காட்டுகள் மிக எதார்த்தமாக உள்ளது.

மாணிக்கம் எதற்கு இதைக்கூறுகிறான் என்று குழம்பும் போது அதைச் செல்லையா பிரச்சனையோடு நடைமுறை எதார்த்தத்தோடு கூறும் போது ‘அட! ஆமாம்ல’ என்று நினைக்க வைக்கிறது.

வட்டார வழக்கு

நாவல் முழுக்க வட்டார வழக்கு பேசப்படுவதால், சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. இவற்றோடு மலாய் பேச்சுகளும் மொழி மாற்றம் இல்லாமல் வருகிறது.

இவற்றைக் கேட்கும் (படிக்கும்) போது சிங்கப்பூர் நினைவுகள் வந்து சென்றன 🙂 .

ஆசிரியர் மொத்தம் இரு நாவல்களையே எழுதியுள்ளார். அவற்றில் கடலுக்கு அப்பால் முதல் நாவல், புயலிலே ஒரு தோணி இரண்டாவது நாவல்.

முதல் நாவலிலேயே எப்படிச் சிலர் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று வியப்பாக உள்ளது! இவருக்கு மற்ற முக்கிய எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமும் இல்லை.

சுஜாதாவையும், அனைத்தையும் சாதாரணமாகக் கடந்து செல்பவர்களையும் விமர்சித்துள்ளார். இதைப்படித்ததும் தனிக்கட்டுரையாக எழுத ஆர்வம் வந்தது.

இதன் பிறகு இப்புத்தகம் தொடர்பாக ஒரு கட்டுரையும், ஓர் அனுபவத்தையும் எழுத விருப்பப்படுகிறேன்.

யார் படிக்கலாம்?

அக்காலப் புலம் பெயர் தமிழர்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும், இரண்டாம் உலகப்போர் பற்றிச் சிறு புரிதலைப் பெறவும் விரும்புபவர்கள் இந்நாவலைப் படிக்கலாம்.

மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை‘ என்று முடிகிறது.

அமேசானில் வாங்க –> Link

பரிந்துரைத்தது சூர்யா. நாவல் பரிசளித்தது இராஜ கோபாலன்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

 1. கிரி.. உண்மையில் புத்தகவாசிப்பில் உள்ள சுவாரசியம் வேறு இதிலும் எனக்கு இல்லை.. ஆனால் தற்போது சில வருடங்களாக என்னால் முழுமையாக வாசிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.. என்னுடைய ஓய்வு நேரங்கள் பெரும்பாலும் குடும்பத்துடனும், விளையாட்டிலும் செல்வதால் புத்தக வாசிப்பு என்பது குறைந்து விட்டது.. ஆனால் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை.. அது பல மடங்கு அதிகமாக தான் இருக்கிறது.. நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்..

  என் அறை முழுவதும் புத்தகங்கள் இருக்க வேண்டும்.. அதன் நடுவில் ஒற்றை ஆளாக எல்லா புத்தகத்தையும் வாசித்து.. மீண்டும் வாசித்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. காலம் தான் என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.. மனைவியுடன் என் ஆசையை கூறினால் “தயவுசெய்து பணத்தை” வீண்விரையம் செய்யாதீங்க என்று கூறுகிறார்.. ஏற்கனவே உள்ள பல புத்தகங்களே இன்னும் வாசிக்காமல் இருக்கும் போது புது புத்தகங்கள் வாங்க தடை உத்தரவு வேறு உள்ளது.. நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தை இது வரை கேள்விப்பட்டதில்லை.. வாசிக்க முயற்சிக்கிறேன்..

 2. சிங்கப்பூர்ல இருந்து இந்தியா வந்த அனுபவத்தை கொஞ்சம் விரிவாக எழுதுங்க, சிங்கப்பூர்ல இருந்ததை விட இங்க உண்மையிலுமே சந்தோஷமா இருக்கீங்களா என்ன என்ன விஷயங்களை நீங்க மிஸ் பண்றீங்கன்னு சொல்லுங்க நன்றி

 3. ப சிங்காரம் அவர்கள் எழுதிய சிறப்பு மிக்க இரண்டு நாவல்களையும் சில வருடங்களுக்கு முன்பு வாசித்தேன். அவர் வாழ்ந்த காலத்தில் இந்த நாவல்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை. அவர் மற்ற தமிழ் எழுத்தாளர்களிடம் நட்பான உறவு வைக்காதது அவரின் இயல்பு என்றே நினைக்கிறேன். அவர் இறந்த செய்தியை கூட சொந்தங்களுக்கு அறிவிக்க தேவை இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
  அவரது மொத்த சேமிப்பையும் மதுரையில் உள்ள அறக்கட்டளைக்கு கொடுத்து விட்டார். இப்படி விசித்திரமானவர்கள் தான் எழுத்தாளர்களாக முடியும் என்றே நினைக்கிறேன்.அவர் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஈர்க்க பட்டு, கட்சியிலும் இருந்தார்.

  எஸ் சம்பத் எழுதிய இடைவெளி நாவல் கூட காலம் தாழ்த்தி தான் பெரும் கவனத்தை பெற்றது.

 4. @யாசின்

  “கிரி.. உண்மையில் புத்தகவாசிப்பில் உள்ள சுவாரசியம் வேறு இதிலும் எனக்கு இல்லை..”

  இருக்கே..

  யாசினுக்கு புறா வளர்ப்பது, கிரிக்கெட் பார்ப்பது அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் பார்ப்பதில் அலாதி விருப்பம் 🙂 .

  புடிச்சுட்டேன் பாருங்க 🙂 .

  “என் அறை முழுவதும் புத்தகங்கள் இருக்க வேண்டும்.. அதன் நடுவில் ஒற்றை ஆளாக எல்லா புத்தகத்தையும் வாசித்து.. மீண்டும் வாசித்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்”

  முன்னரே கூறியுள்ளீர்கள். எனக்கு இவ்வளவு பெரிய ஆசை இல்லை.. Kindle ல் படித்தால் ஓகே 😀

  “மனைவியுடன் என் ஆசையை கூறினால் “தயவுசெய்து பணத்தை” வீண்விரையம் செய்யாதீங்க என்று கூறுகிறார்.. ஏற்கனவே உள்ள பல புத்தகங்களே இன்னும் வாசிக்காமல் இருக்கும் போது புது புத்தகங்கள் வாங்க தடை உத்தரவு வேறு உள்ளது”

  😀

  சரி தானே! வாங்கிய புத்தகத்தை ஏன் படிக்காமல் உள்ளீர்கள்?!

  அதை படித்து விட்டு அப்புறமா சொல்லிப்பாருங்க.. ஒத்துக்குறாங்களான்னு 🙂 .

 5. @Kamalakkannan

  “சிங்கப்பூர்ல இருந்து இந்தியா வந்த அனுபவத்தை கொஞ்சம் விரிவாக எழுதுங்க, சிங்கப்பூர்ல இருந்ததை விட இங்க உண்மையிலுமே சந்தோஷமா இருக்கீங்களா என்ன என்ன விஷயங்களை நீங்க மிஸ் பண்றீங்கன்னு சொல்லுங்க நன்றி”

  ‘உண்மையாகவே’ மிக மகிழ்ச்சியாக உள்ளேன் 🙂 . நான் இதுவரை வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவுகளில் இதுவும் ஒன்று.

  எதையும் நான் தவறவிடவில்லை என்பது உண்மையே! நம்ம ஊரிலும் சிங்கப்பூர் போன்று சுத்தம், உட்கட்டமைப்பு இருந்தால் நன்றாக இருக்குமே (பேராசை தான்) என்பது மட்டுமே உள்ளது.

  பின்னர் ஒருநாள் இது பற்றி விரிவாக எழுதுகிறேன்.

 6. @Manikandan

  நீங்க எப்படி முன்பு படித்ததை இப்ப படித்தது போலவே நினைவு வைத்துக் கூறுகிறீர்கள்?

  இதை வைத்து மட்டும் கூறவில்லை இதற்கு முன் அண்ணாமலை புத்தகம் பற்றி கூறிய போதும் நினைத்தேன்.

  கொஞ்சமா பொறாமையாக உள்ளது 🙂 . எனக்கு படித்த சில நாட்களில் மறந்து விடும்.

  ஏகப்பட்டதை படிப்பதால், எதைப் படித்தோம் என்றே குழம்பி விடுகிறது.

  பல குப்பைகளைப் படிப்பதால், பல மாணிக்கங்கள் மறந்து விடுகிறது.

  “அவரது மொத்த சேமிப்பையும் மதுரையில் உள்ள அறக்கட்டளைக்கு கொடுத்து விட்டார். இப்படி விசித்திரமானவர்கள் தான் எழுத்தாளர்களாக முடியும் என்றே நினைக்கிறேன்.”

  தமிழ் எழுத்தாளர்கள் வெகுகுறைவானவர்கள் மீதே மரியாதை உள்ளது. இன்னொன்று பலரின் எழுத்துக்களை இன்னும் படிக்கவில்லை.

 7. நன்றி, கிரி. நான் வருடத்திற்கு 10 நாவல்கள்/சிறுகதை தொகுப்பை மட்டுமே வாசித்து கொண்டு இருக்கிறேன். வாசித்த பிறகு, பிறரின் வாசிப்பு அனுபவ கட்டுரைகளை இணையத்தில் கவனிப்பேன். நான் தவறவிட்ட இடங்கள், புதிய கோணங்களை அறிந்து கொள்ள இது உதவுகிறது. அது மட்டுமில்லாமல் என்னுடைய தேடலுக்கு விருப்பத்திற்கு உண்டான நாவல்கள் மட்டுமே என் இலக்கு. இது என்னுடைய வாசிப்பை கூர்மை செய்கிறது. ஜெயமோகன் அவர்கள் கூறுவதை போல, கணக்கு முக்கியம் இல்லை, ஆழ்ந்து படிப்பதே இலக்கிய வாசகனுக்கு முக்கியம்.

  அதுமட்டுமில்லாமல் ஜெயமோகன் அவர்களின் ப்லோக் யை தினமும் வாசிப்பேன். அவர் புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறார், மதிப்பீடு கட்டுரைகளையும் எழுதுகிறார், ஆன்மிகம், பயண கட்டுரைகள், ஆலயம், இந்து மதம் பற்றிய கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை. எனக்கு இவை சிந்திக்கவும் புதிய சிந்தனைகளை நோக்கியும் இட்டு செல்கிறது.

 8. @மணிகண்டன்

  “வாசித்த பிறகு, பிறரின் வாசிப்பு அனுபவ கட்டுரைகளை இணையத்தில் கவனிப்பேன். நான் தவறவிட்ட இடங்கள், புதிய கோணங்களை அறிந்து கொள்ள இது உதவுகிறது.”

  சரியான வழிமுறை.

  நானும் இதைப் பின்பற்றுகிறேன். திரைப்பட விமர்சனங்களுக்கு இதைக் கவனிப்பேன் ஆனால், எழுதி விட்டே பார்ப்பேன்.

  இல்லையென்றால், அவர்கள் விமர்சனம் என்னை Influence செய்து விடும் என்பதால்.

  “அது மட்டுமில்லாமல் என்னுடைய தேடலுக்கு விருப்பத்திற்கு உண்டான நாவல்கள் மட்டுமே என் இலக்கு. இது என்னுடைய வாசிப்பை கூர்மை செய்கிறது.”

  நான் அப்படியில்லை.. யாராவது பரிந்துரைத்தால், படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் படித்து விடுவேன்.

  சில எனக்கு பிடிக்காத விஷயங்கள் இருந்தால், புறக்கணித்து விடுவேன். முடிந்தவரை படித்துப்பார்ப்பேன், ரொம்பவுமே எதிர் மனநிலையாக இருந்தால், தவிர்த்து விடுவேன்.

  “அதுமட்டுமில்லாமல் ஜெயமோகன் அவர்களின் ப்லோக் யை தினமும் வாசிப்பேன். ”

  எனக்கு அவர் எழுத்துக்கள் Advanced ஆக உள்ளது, அதனால் பெரியளவில் ஆர்வம் வந்ததில்லை. யாராவது லிங்க் அனுப்பி படிக்க கூறினால் மட்டுமே படிப்பேன்.

  இவர் Blog உடன் என் Blog யையும் படிப்பது மகிழ்ச்சி 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here