2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின் பாஜக | 3

2
2024 பாராளுமன்றத் தேர்தல் 3

பாஜக தனிப் பெரும்பான்மையை இழந்ததை விட உத்தரப்பிரதேசத்தில் பாதிக்கும் குறைவான இடங்களைப் பெற்றதே பலருக்கும் அதிர்ச்சி. Image Credit

உத்தரப்பிரதேசம்

இம்மாநிலத்துக்கு நடந்த நல்லது போல எந்த மாநிலத்துக்கும் நடந்து இருக்காது.

ஏராளமான மாற்றங்கள், சீர் திருத்தங்கள், கேங்ஸ்டர், ரவுடியிசம் ஒழிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, நலத்திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, ராமர் கோவில், கோவிலால் வளர்ந்த சுற்றுலாத்துறை என்று பட்டியல் போட்டால், போய்க்கொண்டே இருக்கும்.

இவ்வளவு நடந்தும் எப்படி வெற்றி குறைந்தது?

இதற்கு பல்வேறு காரணங்களைப் பலர் கூறினாலும், அதில் முக்கியமான மூன்று பிரச்சனைகளை மட்டும் கூறுகிறேன்.

  • ராஜ்புத் சாதியினருக்கும் பாஜகவுக்குமான பிரச்சனையில் இவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காமல் அகிலேஷ் யாதவ் கட்சியினருக்கு வாக்களித்தனர்.
  • SC / ST பிரிவினர் இடஒதுக்கீடை அமித்ஷா நீக்கப்போவதாகக் காங்கிரஸ் வெளியிட்ட போலி காணொளியும், ராகுலின் பரப்புரையும்.
  • தேர்தல் முடிந்த பிறகு கடாகட் கடாகட் என்று வங்கிக்கணக்கில் பெண்களுக்கு மாதம் ₹8500 விழுந்து விடும் என்று வாக்குறுதி அட்டை கார்கே கையெழுத்திட்டு கொடுத்ததாக கூறி மக்களை ஏமாற்றியது.

அயோத்தி பகுதியைச் சுற்றியுள்ளவர்களுக்கு..

அயோத்தி கோவில் உட்கட்டமைப்பு, சாலை விரிவாக்கப் பணியின் போது அங்குள்ளவர்களுக்குச் சரியான இழப்பீடு கொடுக்காமல் வெளியேற்றியது, புதிய நபர்கள் உள்ளே வந்தது உள்ளூர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

பொறுப்பற்ற பாஜக ஆதரவாளர்கள்

இவையல்லாமல் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் இந்துக்கள் வாக்களித்தது சராசரியாக 30% – 37% ஆனால், அதே முஸ்லிம்கள் 90% – 96%.

இம்மாநிலங்களில் பாஜக தொகுதிகள் குறைந்ததற்குக் காரணம், முஸ்லிம்கள் அல்ல. சோம்பேறித்தனத்தால் வாக்களிக்காத பாஜக ஆதரவாளர்களும், மேற்கூறிய காரணங்களால் அகிலேஷ் கட்சிக்கு வாக்களித்த இந்துக்களுமே!

மோடி வர வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கு வாக்கைச் செலுத்த வேண்டும் என்பதை இந்துக்கள் உணராத வரை இச்சிக்கல் தொடரும்.

மேற்கூறியவற்றில் ஏற்றுக்கொள்ளக்கூடிய (Genuine) காரணமாக இருப்பது அயோத்தி சுற்றியுள்ள பகுதிகளில் உட்கட்டமைப்பு விரிவாக்கலில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவது மட்டுமே.

மற்றதெல்லாம் அலட்சியம், பொய் வாக்குறுதிகள் மற்றும் பரப்புரைகள்!

வாக்களிக்காத முஸ்லிம்கள்

உத்தரப்பிரதேச ராம்பூர் கிராமத்தில் 100% (2322) முஸ்லிம் மக்களும் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இங்கே 532 வீடுகள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியாளர்களின் ஆட்சியில் இதுவரை தண்ணீர் கிடைக்காத பகுதிக்குக் குடிநீர் சென்று சேர்ந்துள்ளது. இருந்தும், ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம் நபர் கூறுகிறார், ‘எங்கள் பகுதி அகிலேஷ் யாதவ் கட்சி வேட்பாளர் ரவுடி, அவர் எங்கள் பகுதிக்கு எதுவுமே செய்யவில்லை.

ஆனாலும் அவருக்குத் தான் வாக்களிப்போம்‘ என்கிறார்.

இன்னொரு பெண் ‘மத்திய, மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்றுப் பலனடைந்துள்ளதைக் கூறி, எங்கள் வறுமைக்கு மோடி தான் காரணம் ஆனால், தனக்கு 7 குழந்தைகள் அல்லா கொடுத்தது‘ என்கிறார்.

மோடி என்ன நல்லது செய்தாலும், அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினாலும், பாரபட்சம் இல்லாமல் நலத்திட்டங்களைக் கொடுத்தாலும், பெண்களுக்குப் பாதுகாப்பை கொடுத்தாலும் மோடி வரக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்.

இதுவரை இருந்த கட்சிகள் முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யவில்லை, வளர்ச்சியே இல்லை, அடிமையாக வைத்து இருந்தார்கள், கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள் என்பதை உணர்ந்தும், மதம் காரணமாக வாக்களிக்கிறார்கள்.

ராகுல்

காங்கிரஸ் குறித்தும், ராகுல் குறித்தும் பயப்பட்டது உண்மையாகிப்போனது.

மேற்கத்திய நாடுகளால் ராகுல் இயக்கப்படுகிறார் என்று விமர்சிக்கப்படுகிறார், அது உண்மை என்று அவரின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

ராகுலுக்கு இந்தியாவைப் பற்றியோ, அதன் மதிப்பை பற்றியோ எந்தக்கவலையும் இல்லை, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதைத் தவிர.

ஏழை, அப்பாவி மக்கள் ஒவ்வொருவரையும் போலி பத்திரம் கொடுத்து மாதம் ₹8500, கூலிக்கு ₹400 என்று ஏராளமான பொய் வாக்குறுதிகளைக் கூறி ஏமாற்றியுள்ளனர்.

பயந்தது போலவே, பட்டியல் இன மக்களிடம் இடஒதுக்கீடு பொய்களைக் கூறி பிரித்தாளும் சூழ்ச்சியால் வாக்குகளைத் தங்கள் பக்கம் ராகுல் இழுத்துள்ளார்.

இதுவொரு மிகப்பெரிய மோசடி.

Read : காங்கிரஸ் எதனால் ஆபத்தான கட்சி?

கடாகட்

காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதி அட்டையை நம்பி பெண்கள் குறிப்பாக முஸ்லீம் பெண்கள் அட்டையை எடுத்துக்கொண்டு காங்கிரஸ் அலுவலகத்தில் வரிசையில் நின்று கொண்டுள்ளார்கள்.

இது உத்தரப்பிரதேசம் மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பல மாநிலங்களிலும் இதே நிலை. இதில் ஒரு பெண் வெயில் கொடுமையில் இறந்து விட்டார்.

இதில் பெருமளவில் முஸ்லிம் பெண்களே ஏமாந்துள்ளனர். இவ்வாக்குறுதிகள் சாத்தியமே இல்லையென்பது கூடத் தெரியவில்லை என்பது பெரும் சோகம்.

ஒவ்வொரு மாதமும் கடாகட் கடாகட் என்று உங்கள் வங்கிக்கணக்கில் பணம் வந்து விடும் என்று உறுதியளித்ததை நம்பி ஏமாந்துள்ளார்கள்.

காங்கிரஸ் மட்டுமல்லாது கெஜ்ரிவால் ₹1000 கொடுப்பதாகக் கூறியதாக அதைக் கேட்டும் பெண்கள் டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டுள்ளார்கள்.

தமிழகத்திலும் காங்கிரஸ் இதே போல அட்டை கொடுத்துள்ளார்கள் ஆனால், தமிழக மக்களுக்கு ஏமாறுவது வழக்கம் என்பதால், கண்டு கொள்ளவில்லை.

பொருளாதார இழப்பு

இது போன்ற வாக்குறுதிகளுக்குத் தடை போடாமல் வழக்குகளைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தள்ளிச்செல்வது சலிப்பை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு பணத்தைக் கொடுப்பது நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிப்பதோடு, இதைச் செய்தால் தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தை மற்ற கட்சிகளுக்குத் தோற்றுவித்து அவர்களையும் அவ்வாறு செய்ய வைக்கிறது.

காங்கிரஸ் ஒருவேளை ஆட்சிக்கு வந்து இருந்தால், இப்பணத்தைக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் ஆனால், அதற்கான நிதி எங்கே உள்ளது? அது வரியாக, கட்டண உயர்வாக நம் தலையில் தான் வந்து விடியும், திமுக செய்வது போல.

ஆட்சிக்கு வரும் முன்னரும், வந்த பின்னரும் பணமாகக் கொடுப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காதவரை இப்பிரச்சினைக்குத் தீர்வில்லை.

பாஜகவினர் எதனால் மனம் தளரக் கூடாது என்பதை காரணங்களோடு அடுத்த கட்டுரையில் கூறி இத்தொடரை முடிக்கிறேன்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. கிரி .. தனிப்பட்ட முறையில் ஆதிநாத் அவர்களின் ஆட்சியின் மீது எனக்கு பெரிய ஆர்வம் இல்லை.. காரணம் சமயத்தில் இவரால் கொண்டு வரப்படும் சட்டங்கள் தொலைநோக்கு பார்வை கொண்டதாக எனக்கு தோன்றவில்லை.. இருப்பினும் எனக்கு அந்த மாநிலத்தின் சூழல் முழுமையாக தெரியவில்லை.

    உத்திர பிரதேசம் மட்டும் அல்ல வட இந்தியாவில் பல பகுதிகள் இன்னும் பின்தங்கிய சுழலில் தான் உள்ளார்கள்.. இவர்களை அரசியல் வாதிகள் தெளிவாக கையாளுகின்றனர்.. முஸ்லிம்கள் மக்கள் தொகை 20% இருக்கும் என எண்ணுகிறேன்.. கிரி பொதுவாக மீடியாவில் வரும் தரவுகளையோ, செய்திகளையோ வைத்து உண்மை நிலையை கணிக்க முடியாது..

    ====================
    உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம் நபர் கூறுகிறார், ‘எங்கள் பகுதி அகிலேஷ் யாதவ் கட்சி வேட்பாளர் ரவுடி, அவர் எங்கள் பகுதிக்கு எதுவுமே செய்யவில்லை.

    ஆனாலும் அவருக்குத் தான் வாக்களிப்போம்‘ என்கிறார்.

    இன்னொரு பெண் ‘மத்திய, மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்றுப் பலனடைந்துள்ளதைக் கூறி, எங்கள் வறுமைக்கு மோடி தான் காரணம் ஆனால், தனக்கு 7 குழந்தைகள் அல்லா கொடுத்தது‘ என்கிறார்.
    ====================

    இதெல்லாம் நம்புற மாதிரி இல்ல கிரி… சும்மா யாரவது அரசியல்வாதிகள் கிளப்பி விட்டதாக தான் இருக்கும்..

  2. @யாசின்

    “தனிப்பட்ட முறையில் ஆதிநாத் அவர்களின் ஆட்சியின் மீது எனக்கு பெரிய ஆர்வம் இல்லை.. காரணம் சமயத்தில் இவரால் கொண்டு வரப்படும் சட்டங்கள் தொலைநோக்கு பார்வை கொண்டதாக எனக்கு தோன்றவில்லை.”

    யாசின் எதனால் இப்படி கூறுகிறீர்கள்?

    இதுவரை வந்த முதலைமச்சர்களிலேயே அம்மாநிலத்தை வேறு கட்டத்துக்கு கொண்டு சென்று கொண்டு இருப்பவர் யோகி. எனக்கு மிக பொறாமையாக உள்ளது.

    இது போன்ற வளர்ச்சியை, சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழகத்தில் எதிர்பார்க்கிறேன்.

    சாலை, விமான நிலையங்கள், குடிதண்ணீர் என்று நலத்திட்டங்களாகட்டும், உட்கட்டமைப்பாகட்டும் அசத்தி வருகிறார்.

    இவரைத் தொடர்ந்து கவனித்து வருவதால், இது பற்றி நன்கு தெரியும். இவரைப்போன்ற ஒருவரே தமிழகத்துக்கு தேவை.

    “உத்திர பிரதேசம் மட்டும் அல்ல வட இந்தியாவில் பல பகுதிகள் இன்னும் பின்தங்கிய சுழலில் தான் உள்ளார்கள்.”

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகே வட மாநிலங்கள் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

    “இதெல்லாம் நம்புற மாதிரி இல்ல கிரி… சும்மா யாரவது அரசியல்வாதிகள் கிளப்பி விட்டதாக தான் இருக்கும்..”

    யாசின் அப்படிப்பட்ட ஒன்றை இங்கே பகிர்வேனா?!

    இவர்கள் கூறிய காணொளியை நானே பார்த்தேன். கடந்த மாதம் இப்பெண் கூறியது ட்ரெண்டிங்கா இருந்தது.

    பொய்யான தகவல்களை இங்கே எழுத மாட்டேன். தெரியாமல் நடந்து இருந்தால் மட்டுமே உண்டு.

    இது நடந்த உண்மை. நான் கூறியது இரு எடுத்துக்காட்டுகள் மட்டுமே இது போல நிறைய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!