சுவாரசியமான, அதிரடியான கொரியன் படம் The Outlaws. Image Credit
The Outlaws
கொரியாவில் உள்ள சைனா டவுன் என்ற இடத்தைக் கைப்பற்ற இரு கேங் இடையே நடைபெறும் சண்டை, அதையொட்டி ஏற்படும் பிரச்சனைகளே The Outlaws.
Ma Dong-seok
சில கதாபாத்திரங்களை ஒரு படத்திலேயே பிடித்து விடும், அதுவும் ரொம்பப் பிடித்து விடும். அது போன்ற ஒரு கதாபாத்திரமாக Ma Dong-seok உள்ளார்.
அலட்டிக்கொள்ளாத குணம், அதிரடி, நகைச்சுவை, பதட்டமில்லாத நடவடிக்கைகள், பயமில்லா மனது, கலகலப்பான நபர் என்று ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும்?
அவர் தான் டிடக்டிவான Ma Dong-seok 🙂 .
இவர் ஆரம்பமே ஒரு பிரச்சனையை அசால்ட்டாக கையாள்வதில் துவங்கி இறுதி வரை அப்படியே கொண்டு சென்று உள்ளார்கள்.
ஆள் பல்க்காக இருந்தாலும், செமையா ஓடுகிறார், சண்டையிடுகிறார். ரவுடிகளை இவர் கையாளும் விதமே சுவாரசியமாக இருக்கும்.
நம்ம கூட ஒரு பலமான, தைரியமான நபர் இருந்தால் நமக்கு மனதில் ஒரு தைரியம் இருக்குமே அது போன்று இவர் இருக்கும் இடத்தில் எப்படியும் பிரச்சனையைச் சரி செய்து விடுவார் என்ற நம்பிக்கை இருக்கும்.
இவருடன் பணி புரிபவர்கள் இவருக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பு, நட்பு, ஆதரவு ஆகியவை ரசிக்கும் படியிருக்கும்.
Jang Chen
டெர்ரரான வில்லன், இவரது அறிமுகமே ரணகளமாக உள்ளது.
சில தமிழ்ப் படங்களில் ரத்தம் தெறிக்கும் படம் என்பார்கள் ஆனால், அதற்கெல்லாம் தாத்தா என்றால் ஜப்பான், கொரியன் படங்கள் தான். இவர்கள் படங்களில் ரத்தக்குளியலே நடக்கும்.
அப்படியென்ன ஆர்வமோ இதில் அவர்களுக்கு!
Jang Chen ஒரு சீனர், இவருடன் இரு அடியாள்கள். பயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். இவர்கள் பிரச்சனைகளைக் கையாள்வதே திகிலாக இருக்கும்.
அமெரிக்கப் படங்களில் ரஷ்யாவை மோசமான நாடாகவும், ரஷ்யர்களை கேங்ஸ்டர், கடத்தல் கும்பல், போதை கும்பலாகவே காட்டுவார்கள்.
துவக்கத்தில் வழக்கமான கேங்ஸ்டர் கதாபாத்திரங்களாக கருதினேன். Geo Politics தெரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகே புரிந்தது இதுவொரு உலக அரசியல் என்று.
அது போலக் கொரியன், ஜப்பான் நாட்டினருக்குச் சீனர் என்றால் பிடிக்காது. இதற்கு உலகப்போர்க் காலங்களில் சண்டையால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருக்கலாம். எனவே, சீனர்களை மட்டமாகவே சித்தரிப்பார்கள்.
அது போல ஒரு காட்சியில் Jang Chen யை ஒருவர் அவமானப்படுத்த, அதற்கு நடக்கும் சம்பவம் அங்குள்ளவர்களுக்கு மரண பயத்தைக் காட்டி விடும்.
தொடர்
ஒரே மாதிரிப் படங்கள் இதே போன்ற கதையமைப்புடன் The Roundup, The Roundup: No Way Out என்று இதன் தொடர்ச்சியாக வேறு கதைகளில் வந்துள்ளது.
மூன்றுமே டாப் டக்கர்.
சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும், சலிக்காது. அவற்றில் The Equalizer, Taken போன்ற படங்கள் அடங்கும். இப்படங்களும் என் வரிசையில் உள்ளன.
அதே அறிமுகம், அதே அதிரடி, புது புது வில்லன்கள், கதை என்று சுவாரசியமாக இருக்கும். சண்டையெல்லாம் சரவெடியாக உள்ளது.
காவல்துறை, கேங்ஸ்டர் கதையென்றாலே கொரியன் படங்களில் செமையா இருக்கும். இதில் நகைச்சுவையும் கலந்து இருக்கும் போது சுவாரசியமாக உள்ளது.
ஒளிப்பதிவு இயல்பான கொரியாவையும், கேங்ஸ்டர் இடங்களையும் காண்பிக்கிறது. பின்னணி இசையை விடத் திரைக்கதை கவர்ந்ததாக இருந்ததால், கவனிக்கவில்லை.
யார் பார்க்கலாம்?
சண்டைக் காட்சிகள், துப்பறியும் கதை, காவல்துறை Vs கேங்ஸ்டர் கதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம்.
திரும்பவும் பின்னர் பார்ப்பேன் 🙂 .
Amazon Prime ல் காணலாம்.
Directed by Kang Yun-seong
Written by Kang Yun-seong
Produced by Yoo Yeong-chae
Starring Ma Dong-seok, Yoon Kye-sang
Cinematography Ju Sung-lim, Kim Yong-seong
Edited by Kim Sun-min, Hwang Eun-ju
Release date October 3, 2017 (South Korea)
Running time 121 minutes
Country South Korea
Language Korean
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நான் படமாக கொரியன் படங்களை பார்த்தது மிக குறைவு.. சில சமயம் என்ன படம் என்று தெரியாமல் காட்சிகளை மட்டும் YOUTUBE இல் பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். காரணம் படத்தின் ஒளிப்பதிவு, காட்சி படுத்திய விதம், வேகம், சண்டை காட்சிகள் எல்லாம் தாறுமாறாக இருக்கும்.. பொதுவாக சண்டைக்காட்சிகள் கொண்ட படத்தின் மீது ஆர்வம் மிக குறைவு..
தமிழிலும் சில படங்களில் கொரிய படங்களின் தாக்கம் அதிகம் இருக்கும்.. சில காட்சிகளை அப்படியே எடுத்து இருப்பார்கள்.. இருக்கும் சில சமயம் இதுவே ரசிக்கும் போல் இருக்கும்.. நீங்கள் குறிப்பிட்ட படத்தை பார்ப்பேனா? என்று தெரியவில்லை.. உங்கள் பதிவுக்கு நன்றி..
@யாசின்
கொரியன் படங்கள் கேங்ஸ்டர், வன்முறை படங்களுக்கு பிரபலம்.
New World படம் எனக்கு ரொம்ப பிடித்தமானது. I saw the devil படம் ரணகளமாக இருக்கும்.
கேங்ஸ்டர் படங்களில் இவர்களின் உடை, ஒழுங்கு ஆகியவை ரசிக்கும்படியிருக்கும்.