கறுப்புப் பண ஒழிப்புக்காகப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரபலமான மின்னணு பரிவர்த்தனை கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. Image Credit
இதற்காகக் கோபப்பட வேண்டிய அவசியமில்லை காரணம், நாளை மின்னணு பரிவர்த்தனையின் பயனை இவர்கள் 100% உணர்வார்கள், அனுபவிப்பார்கள்.
மின்னணு பரிவர்த்தனை
துவக்கத்தில் இருந்தே தொழில்நுட்பங்களில் ஆர்வம் என்பதால், எப்படியெல்லாம் மின்னணு பரிவர்த்தனையைப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு 2005 ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகிறேன்.
மின்னணு பரிவர்த்தனை என்பது சிகரெட் புகைப்பது போல, பழகி விட்டால் நீங்களே முயற்சித்தாலும் உங்களால் அதை விடுவது என்பது எளிதல்ல.
சிகரெட் உடலுக்குக் கெடுதல் ஆனால், மின்னணு பரிவர்த்தனை நமக்கு நல்லது.
நான் இதன் பயனை, எளிமையை முழுவதும் அறிந்ததால் கூறுகிறேன்.
அதோடு மின்னணு பரிவர்த்தனை, போலி கணக்குகளைக் காட்டி வரி கட்டாமல் ஏமாற்றி வரும் வணிகர்களை, நிறுவனங்களை நெருக்கடியில் தள்ளும்.
PAN & ஆதார்
PAN வந்த போது இதன் முக்கியத்துவம் பலருக்குத் தெரியவில்லை, என்னையும் சேர்த்து.
தற்போது PAN அனைத்து கணக்குகளிலும் இணைக்கப்பட்டு, வரியில் தப்பிக்க நினைப்பவர்களுக்குப் பெரிய தலைவலியை கொண்டு வந்து விட்டது.
அதாவது, என்ன செலவு செய்தாலும், எப்படிப் பணத்தைக் கையாண்டாலும் நடுவில் நின்று நெருக்கடியைத் தரத் துவங்கி விட்டது.
சொத்து வாங்குகிறோமா, பணத்தை வங்கியில் வரவு வைக்கிறோமா, நிலத்தை விற்கிறோமா, எது செய்தாலும் சுற்றி வளைத்துப் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆதார்
இதே பாஜக அரசு தான், காங் அரசு ஆதார் கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தது.
ஆனால், தற்போது ஆதார் இல்லையென்றால் ஒன்றுமில்லை எனும் அளவுக்குத் தங்கள் திட்டங்களை வடிவமைத்து வருகிறார்கள்.
காங் அரசு கொண்டு வந்த திட்டங்களிலேயே சிறப்பானது ஆதார் தான்.
ஆதார் கொண்டு வந்ததற்காக “அருண் ஜெட்லி” காங் அரசைப் பாராளுமன்றத்தில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
செக் மேட்
தற்போது இதை வைத்து எரிவாயு, குடும்ப அட்டை, வங்கி என்று அனைத்தையும் இணைத்து விட்டார்கள். ஒன்றில் தப்பித்தாலும் இன்னொன்றில் மாட்டிக்கொள்வோம்.
எனவே, எதிர்காலத்தில் அரசாங்கத்தைப் போலிக் கணக்குகளால் ஏமாற்றுவது எளிதல்ல.
இன்னும் சில வருடங்களில் இந்த இணைப்பு / கட்டமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்ட பிறகு மின்னணு பரிவர்த்தனை கட்டுப்பாட்டினுள் வந்து விடும்.
பின் யார் எது ஏமாற்றினாலும் வருமானவரித்துறை “செக் மேட்” சொல்லும்.
BHIM (Bharat Interface for Money Home) செயலி
பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய BHIM செயலி எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எவருக்கும் எளிதாகப் பணம் அனுப்பலாம் மற்றவரிடம் இருந்து பணம் பெற முடியும்.
இதில் தற்போது கூடுதலாக வங்கியைச் சேர்க்கும் வசதி இல்லை, மாற்ற மட்டுமே வசதியுள்ளது. அதோடு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே உள்ளது.
பெறுபவர்கள் முகவரியைச் சேமிக்கும் வசதியில்லை. முகவரியைச் சேமிக்கும் வசதியில்லை என்றால், ஒவ்வொரு முறையும் தட்டச்சுச் செய்ய வேண்டும்.
அதோடு, ஒரு எழுத்து, எண் மாறினாலும் தவறாக அனுப்பி விடவும் அதிக வாய்ப்புள்ளது.
Android இயங்கு தளத்துக்கு மட்டுமே செயலி வெளியிடப்பட்டுள்ளது, மற்ற இயங்கு தள பயனாளர்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையுள்ளது.
அடுத்து வரும் பதிப்புகளில் இக்குறைகள் களையப்படும் என நம்பலாம்.
தொழில்நுட்பம் தெரியாதவர்கள் எப்படிப் பயன்படுத்துவது?
அனைவரும் குறை கூறுவது ஏழை மக்கள், படிப்பறிவற்றவர்கள் மின்னணு பரிவர்த்தனையை எப்படி மேற்கொள்வார்கள்? என்பது தான்!
இவர்களுக்கான பதில் தான் “ஆதார் எண் மூலமாகக் கைரேகை பரிவர்த்தனை”. இந்த முறை மிகப்பெரிய வெற்றி பெறும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.
இது பற்றி / செயல்முறை பற்றி எளிமையாகத் தெரிந்து கொள்ள…
Read: ஆதார் எண் / கைரேகை மூலமாக எவ்வாறு பணப் பரிவர்த்தனை செய்வது?
கைரேகை முறை பாதுகாப்பு என்பதால், தொழில்நுட்பம் பற்றித் தெரியாத மக்களை ஏமாற்றி விட முடியாது.
கடவுச்சொல், போலி பற்று அட்டை (Debit card) உருவாக்கி ஏமாற்றுவது போன்றவை நடக்க வாய்ப்பில்லை.
எனவே, மக்கள் தைரியமாக ஆதார் கைரேகை முறையைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கலாம்.
“ஆதார் கைரேகை” சரியாக முறைப்படுத்தப்பட்டால் மக்களால் விரும்பப்படும்
அரசாங்கம் தற்போது காட்டும் முனைப்பை தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும்.
ஆர்வக் கோளாறில் / தற்போது நிலவும் பிரச்சனையைத் தற்காலிகமாகச் சமாளிக்கத் தற்போதைய நடவடிக்கைகளைச் செய்து இருந்தால், வெற்றி பெறாது.
விரியும் BHIM எல்லை
அரசாங்கம் சார்ந்த கட்டணங்களான தொலைபேசி, சொத்து வரி, வருமான வரி, மின்சாரம், எரிவாயு கட்டணம் போன்றவற்றை இந்த UPI முறையிலேயே செலுத்தும் படியான சூழல் வரும்.
தனியார் நிறுவனங்களின் கட்டணங்களைக் கூட BHIM செயலி மூலமாகச் செலுத்த முடியும் என்பது போல மாற்றம் பெறும்.
சுருக்கமாக, நேரடியாகப் பணம் செலுத்தும் முறை தவிர்க்கப்படும்.
அரசு அலுவலகம் செல்வது, ஆவணங்களைக் கொடுப்பதற்காக, பெறுவதற்காக மட்டுமே இருக்கும், கட்டணங்களைச் செலுத்துவதற்கு அல்ல.
ஏற்கனவே, கடவுச்சீட்டு (Passport) போன்றவற்றுக்கு இணையத்திலேயே பணம் கட்டும் முறையால், அடைந்த பலன்களை உணர்ந்து இருக்கலாம்.
இதே நிலை மற்ற துறைகளுக்கும் நிச்சயம் வரும்.
UPI (Unified Payments Interface)
UPI முறையில் கூடுதல் கட்டணம் கிடையாது எனவே, பணம் அனுப்ப வங்கியின் NEFT, IMPS சேவைகளைப் பயன்படுத்தாமல் UPI முறையையே பயன்படுத்துங்கள்.
அனுப்பும் பணம் “ஒரு நொடியில்” வரவு வைக்கப்படும்.
யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால், அவர்களுடைய IFSC Code, வங்கிக் கணக்கு எண், வங்கிப் பெயர் ஆகியவற்றை கேட்கவேண்டியதில்லை.
அவர்களுடைய மெய்நிகர் முகவரி (Virtual Payment Address) மட்டும் போதும்.
உதாரணத்துக்கு UPI முகவரி giriblog@upi அல்லது 9444011111@upi (வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட உங்கள் தொலைபேசி எண்) என்று இருக்கும்.
முகவரியைப் பதிவு செய்து உடனடியாகப் பணம் அனுப்பலாம், 30 நிமிடங்கள் அல்லது வழக்கமான நேரங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 24/7 சேவை.
இந்த முகவரியை உள்ளீடு செய்து அனுப்பினால், அடுத்த நொடி பெறுபவரின் கணக்கில் நீங்கள் அனுப்பிய பணம் இருக்கும்.
உறுதி செய்யப்பட்ட குறுந்தகவலையும் (SMS) பெறுவீர்கள்.
அரசாங்கம் தற்போது UPI பரிவர்த்தனைக்கு, சேவைக் கட்டணம் இல்லை என்று கூறுகிறது, எதிர்காலத்தில் UPI முறைக்குக் கட்டணம் கொண்டு வர வாய்ப்புள்ளது.
Uber, Ola போன்றவைகளின் கட்டணங்கள் கூட BHIM அல்லது அதற்கிணையான செயலியுடன் இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
கறுப்புப் பணம் உருவாவதைக் குறைக்கும்
மின்னணு பரிவர்த்தனை குறித்து எதிர்மறையாகப் பேசுபவர்கள், கிண்டலடிப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
சிறு கடைகளில் சிறு அளவில் கணக்குக் காட்டாமல் உருவாகும் கறுப்புப் பணமும், பொதுமக்களாகிய நம்மை அதிகளவில் பாதிக்கிறது.
அம்பானி ஏமாற்றினாலும் கறுப்புப் பணம் தான், அண்ணாச்சி கடையில் ஏமாற்றினாலும் கறுப்புப் பணம் தான்.
குறைவாகக் கறுப்புப் பணம் சம்பாதிப்பதால், நல்லவர்கள் ஆகிட முடியாது.
பணமில்லா பரிவர்த்தனை
பணமில்லா பரிவர்த்தனை இல்லாததால், நாட்டில் 90% சிறு / பெரிய நிறுவனங்கள் உண்மையான கணக்கைக் காட்டாமல் ஏமாற்றுகிறார்கள்.
வீடு விலை உட்பட அனைத்து விலையும் உயரக் காரணமே கணக்கு காட்டப்படாமல் சம்பாதிக்கும் கறுப்புப் பணமே!
காரணம், கறுப்புப் பணக்காரர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் பொருளை, நிலத்தை வாங்க முடியும்.
இதன் மூலம் போலியாக விற்பனை மதிப்பு உயர்த்தப்படுவதால், சாமானியனுக்கு அனைத்தும் கனவாகவே சென்று விடுகிறது.
எனவே, மின்னணு பரிவர்த்தனையைக் கிண்டலடிக்காமல், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பணமில்லா பரிவர்த்தனை செய்ய முயலுங்கள்.
இறுதியாக….
மேற்கூறியவை ஒருவேளை “ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக” போன்று நகைச்சுவையாகத் தோன்றலாம்.
ஆனால், இவை அனைத்துமே நடக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளது.
இதற்கு அரசாங்கத்தின் கட்டமைப்பு, மின்னணு பணப் பரிமாற்றம் தொடர்பான முன்னெடுப்பு போன்றவை சிறப்பாக இருக்க வேண்டும்.
மக்களும் எளிமையையே விரும்புவார்கள் என்பதால், எதிர்காலத்தில், தோராயமாக மூன்று வருடங்களில் இந்தியா மின்னணு பரிவர்த்தனையின் பயனைப் பெறும்.
குறிப்பாக, அரசாங்கம் சரியாக முறைப்படுத்தினால் “ஆதார் கை ரேகை மூலமான பரிவர்த்தனை” அடித்தட்டு / நடுத்தர மக்களிடையே பெரிய வெற்றி பெறும்.
மின்னணு பரிவர்த்தனை வெற்றியா?! என்று கேட்டால், நிச்சயம் பெரிய வெற்றி அடையும் ஆனால், இரண்டு / மூன்று வருடங்கள் ஆகும்.
தொடர்புடைய கட்டுரைகள்
கறுப்புப் பண விவகாரத்தில் சம்பளக்காரன் மட்டும் இளிச்சவாயனா?
நம்ம ஊருக்கு “FlashPay” எப்போது வரும்?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
நல்ல பதிவு கிரி.. நான் இப்போதுதான் ஒவ்வொரு செயலியின் சாதக பாதகங்களை ஆராய்ந்து வருகிறேன். (இன்னும் வெளிநாட்டத்தில் இருந்துகொண்டே) எதுக்கும் பீம் அக்கவுண்ட் ஒன்னு தொடங்கி வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆனா எனக்கு ஒரு டவுட்டு. இப்போ ஒரு கடையில் paytm code இருந்து என்னிடம் வேறொரு செயலி இருந்தால் என்ன செய்வது.
ஹாங்காங் – ஆக்டொபஸ் கார்டு மாதிரி கிடைக்காதா ? (அங்கே எந்த ஒரு ரயில்வே ஸ்டேஷனிலும் யார் வேண்டுமானாலும் வாங்கலாம்) அதை டாக்சி உள்பட எங்கு வேண்டுமானாலும் உயபோகித்து கொள்ளலாம்.. குறிப்பாக அதை உபயோகிக்கும்போது சில்லறைகளில் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
//அரசாங்கம் தற்போது காட்டும் முனைப்பை தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். ஆர்வக் கோளாறில் / தற்போது நிலவும் பிரச்சனையைத் தற்காலிகமாகச் சமாளிக்கத் தற்போதைய நடவடிக்கைகளைச் செய்து இருந்தால், வெற்றி பெறாது.//
well said.
//மின்னணு பரிவர்த்தனை வெற்றியா?! என்று கேட்டால், நிச்சயம் பெரிய வெற்றி அடையும் ஆனால், இரண்டு / மூன்று வருடங்கள் ஆகும்.//
நகர்புறங்களில் இரண்டு / மூன்று வருடங்கள் ஓ.கே, கிராமபுறங்களில் ஐந்து முதல் 10 வருடங்கள் ஆகலாம்.
ஒரு time & action plan உடன் செய்தால்; காலதாமதம் ஆனாலும் எளிதாக சாதிக்கலாம்
கிரி, மிகவும் தெளிவாக விவரித்து எழுதி இருக்கிறீர்கள். நகர்ப்புறங்களில் உள்ள நிலை கிராமப்புறங்களில் இல்லை. தொழில்நுட்பம் என்றாலே மக்களுக்கு இன்னும் ஒருவித பதட்டம், பயம் உள்ளது. அந்த நிலை மாற வேண்டும். அதற்கு அரசாங்கம் மக்களுக்கு முறையான பயிற்ச்சி அளிக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல் இரண்டு, மூன்று வருடங்களுக்கு மேல் ஆகும் என்று நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக மாற்றம் வரும். பகிர்வுக்கு நன்றி கிரி.
“மின்னணு” பரிவர்த்தனை –க்கு எதிர்ப்பு இல்லை .. உள் கடடமைப்பை வலுப்படுத்தாமல் 500/1000 நீக்கம் மூலம் இதை செயல் படுத்த நினைத்ததே விமர்சனத்துக்கு உள்ளானது .. அல்லது பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய விளைவை திசை திருப்ப இப்படி கேஸ் லாஸ் என்று பேசப்படுகிறது.. “மின்னணு” பரிவர்த்தனை — காலத்தின் கடடாயம்,,, தொழில் நுட்ப வளர்ச்சி இயல்பாய் நடக்கும்.. தேவை இருக்கும் பட்ஷத்தில் மக்கள் தானாக மாறுவார்கள்
@காத்தவராயன் 2017 முதல் பின்னூட்டம் 🙂
முறைப்படுத்தினால் எளிதாக செயல்படுத்தலாம்.
@ராஜ்குமார் ஆக்டோபஸ் அட்டை போல இங்க வர காலங்கள் எடுக்கும். ரொம்ப நாளா ஆளைக் காணோம் எப்படி இருக்கீங்க.
@யாசின் ஆதார் மூலமான பரிவர்த்தனை கிராமங்களில் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
@பிரபு நலமா? 🙂
செயல்படுத்தியதில் நிச்சயம் பல குறைகள் உள்ளது.
“பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய விளைவை திசை திருப்ப இப்படி கேஸ் லாஸ் என்று பேசப்படுகிறது”
இதில் எனக்கும் உடன்பாடு உண்டு. இருப்பினும் மின்னணு பரிவர்த்தனை நல்லதுக்கே என்பதால், நான் எதிர்க்கவில்லை.
மக்கள் நெருக்கடி இல்லாமல் மின்னணு மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நெருக்கடி ரொம்ப நெருக்கடியாக மாறி மக்களை வதைத்து விடக் கூடாது. அதற்கான சரியான கட்டமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும்.