குடும்பத்தில் நடக்கும் சிக்கல்களை நகைச்சுவையாக Falimy படத்தில் காட்டியுள்ளார்கள். Image Credit
Falimy
ஒரு குடும்பத்தில் பல்வேறு சிக்கல்கள், மன வேற்றுமைகள். தாத்தாக்கு காசி செல்ல வேண்டும், நாயகன் பாசிலுக்கு திருமணம் நடக்க வேண்டும்.
இவற்றோடு கடன் பிரச்சனைகள், எதற்கும் கவலைப்படாத அப்பா என்று இருக்கும் குடும்பம் இறுதியில் எப்படி மாறுகிறது என்பதே Falimy.
Family என்பதை Falimy என்று மாற்றியிருப்பதிலேயே புரிந்து கொள்ளலாம் 🙂 .
பாசில்
பாசிலுக்கு என்று ரசிகர் கூட்டம் உள்ளது. நாயகன் போலத் தனித்துத் தெரியாமல், வெகுஜனத்துடன் பொருந்திப்போகும் முகம் மற்றும் உடல்வாகு.
டப்பிங் கலைஞரான பாசிலுக்கு திருமணம் கைகூடுவதில்லை, கைகூடி வரும் நேரத்தில் பெரிய பிரச்சினையானதில் நிச்சயதார்த்தத்தோடு நின்று விடும்.
அதனால், நமக்கு தான் எதுவும் சரியா நடக்க மாட்டேங்குது என்று கடுப்பாகி தாத்தா விருப்பமான காசியாவது அவரைக் கூட்டிச் செல்வோம் என்று முடிவு செய்கிறார்.
பாசில், தாத்தா, அம்மா, அப்பா, தம்பி என்று அனைவரும் ரயிலில் கிளம்புகிறார்கள்.
ரயில் பயணம்
இது போன்ற கலாட்டா ரயில் பயணத்தைப் பார்த்து மாமாங்கம் ஆகிறது 😀 .
பாசில் அப்பா முரட்டு சாப்பாட்டுப் பிரியர், நொறுக்குத்தீனி சாப்பிடவே கடன் வாங்கியிருப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ரயில் நிற்கும் இடத்தில் எல்லாம் புதிய பண்டங்கள் எதையாவது வாங்கி மென்று கொண்டு இருப்பார்.
நமக்கே கடுப்பாகி விடும், என்னையா மனுஷன் இப்படி திங்கிறாரே என்று.
இது போன்ற ஒரு நேரத்தில் விற்கும் பையனுடன் பஞ்சாயத்து ஆக, ரயில் கிளம்பி விடும். இந்த நேரத்தில் அவரது மனைவி அவரைத் திட்டி அழைக்கும் காட்சி ரணகளம்.
திரையரங்கில் காண வேண்டிய காட்சி. திரையரங்கமே அதிர்ந்து இருக்கும், அப்படியொரு திட்டும், கலாட்டாவும் நடக்கும்.
இப்ப நினைத்தால் கூட அவர் திட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது 😀 😀 .
இன்னொரு இடத்தில் நடக்கும் பிரச்சனையில் பாசில் அம்மா கடுப்பாகி,
‘சாணியைக் கொடுத்தால் கூட அதையும் மென்னுட்டு இருப்பார்‘ என்று சொன்னதும், பாக்கை மென்று கொண்டு இருப்பவர் முகம் போகிற போக்கு… 😀 .
காசி பயணம்
காசிப்பயணத்தில் மொழி புரியாமல் திணறுவதும், பேருந்து பயணத்தில் பாசில் அம்மா நாற்றத்தில் வாந்தி எடுப்பதும் என்று சிரிப்பு வெடிகள்.
இடைப்பட்ட நேரத்தில் பயணிக்கும் நபருடன் சண்டை என்று அனைத்தையும் கடந்து காசி சென்று விடுகிறார்கள்.
இந்தக் களேபரத்தில் தாத்தா காணாமல் போய் விடுவார்.
தாத்தா கிடைத்தாரா? என்ன ஆனது? என்பதை சிரிக்க வைத்து இறுதியில் அட்டகாசமான கருத்தையும் முன் வைத்துள்ளார்கள்.
இறுதிக்காட்சி வரை சிரிக்காமல் முடிக்க முடியாது. அதிலும் பாசில் அப்பா நிலை செம நகைச்சுவை 😀 .
அனைத்து கதாபாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் உள்ளது. யாரையுமே குறைத்துக்கூற முடியாது. தாத்தா, தம்பி, அம்மா, அப்பா என அனைவருமே பட்டாசு.
Cliche
மலையாளப்படங்களைப் பாராட்டிப் பேசுவது எனக்குச் சங்கடமாக உள்ளது. என்னடா இது! ஒரு மாதிரியே சொல்லிட்டே இருக்கோமே என்று 🙂 .
இவர்களுக்கு மட்டும் எப்படிப் புதிது புதிதாகக் கதை தோன்றுகிறது?!
உண்மையாகவே வித்தியாசமான கதை! இரண்டு மணி நேரம் சலிப்பு தெரியாமல் கொண்டு செல்வது அதை விடச் சிறப்பு. எனக்கு பொறாமையாக உள்ளது.
நமக்கு அப்படியே வடமாநிலங்களையும் கொஞ்சம் சுற்றி காட்டி விட்டார்கள்.
குடும்ப மன வேற்றுமை காரணமாக இவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாததால் ஏற்படும் சிக்கல்களும் ரசிக்கும்படியாக இருக்கும்.
ஒளிப்பதிவு செம, நம்மை அப்படியே அனைத்து இடங்களுக்கும் இயல்பு மாறாமல் அழைத்துச்சென்று வருகிறார்கள். எதுவுமே அரங்க அமைப்பு அல்ல, எல்லாமே Live.
பட சுவாரசியத்தில் பின்னணி இசையைக் கவனிக்கவில்லை. அதோடு ஒலி குறைவாக வைத்துப்பார்த்ததும் முக்கியக் காரணம்.
யார் பார்க்கலாம்?
அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
துவக்கத்தில் கொஞ்சம் மெதுவாகச் சென்றாலும், பாசில் திருமணம் முடிவாகும் நேரத்துக்குப் பிறகு படம் விறுவிறுப்பாக மாறி விடுகிறது.
இயக்குனருக்கு இது தான் முதல் படமாம், சத்தியமா முதல் படம் என்றால் நம்பவே முடியாது, அந்த அளவுக்கு, அனுபவமான நபர் எடுத்தது போல உள்ளது.
Hotstar ல் காணலாம். தமிழ் டப்பிங் சிறப்பு, டப்பிங் போலவே இல்லை.
Directed by Nithish Sahadev
Written by Nithish Sahadev, Sanjo Joseph
Produced by Lakshmi Warrier, Ganesh Menon, Amal Paulson
Starring Basil Joseph, Jagadish, Manju Pillai
Cinematography Bablu Aju
Edited by Nidhin Raj Arol
Music by Vishnu Vijay
Release date 17 November 2023
Running time 127 minutes
Country ndia
Language Malayalam
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
தற்போது தமிழில் படங்கள் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.. சில மலையாளம் & ஹிந்தி படங்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்று குறிப்பு வைத்து இருக்கிறேன்.. 10 / 15 வருடங்களுக்கு முன்பு என்னுடைய மலையாள அறை நண்பர்களுடன் தமிழ் படம் பெஸ்ட்டா அல்லது மலையாள படம் சிறந்ததா?? என்று போட்டியெல்லாம் போட்டு மலையாளிகளுக்கு அல்வா கொடுத்து இருக்கிறேன்.. அந்த நேரத்தில் தமிழில் சிறந்த படங்கள் வந்தது.
நல்ல வேளை நான் சண்டை போட்டு தமிழ்மொழி பாடம் வாழ்க!!! என்று முழங்கி என்னுடன் தோல்வியை ஒப்பு கொண்ட மலையாளி நண்பர்கள் தற்போது என்னுடன் பணி புரியவில்லை.. தற்போது இருந்தால் நான் அவ்வளவு தான்..
பாசில் ஜோசப் நம்ம பக்கத்து வீட்டு பையன் மாதிரி தோற்றம் & உடல் மொழி.. கடைசியாக நான் பார்த்த ஜெய ஜெய ஹே படம் தற்போது பார்த்தாலும் சிரிப்பை வர வைக்கும்.. இவர் இயக்கிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட்.. ஆனால் தற்போது இயக்குவதை காட்டிலும் அதிக படங்கள் செலக்ட் செய்து நடித்து வருகிறார்.. யதார்த்தமாக உள்ளது இவரின் நடிப்பு.. நீங்கள் கூறிய படத்தை பார்க்கவில்லை.. பின்பு பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“நல்ல வேளை நான் சண்டை போட்டு தமிழ்மொழி பாடம் வாழ்க!!! என்று முழங்கி என்னுடன் தோல்வியை ஒப்பு கொண்ட மலையாளி நண்பர்கள் தற்போது என்னுடன் பணி புரியவில்லை.. தற்போது இருந்தால் நான் அவ்வளவு தான்..”
😀
“கடைசியாக நான் பார்த்த ஜெய ஜெய ஹே படம் தற்போது பார்த்தாலும் சிரிப்பை வர வைக்கும்”
இப்படம் என் பட்டியலில் உள்ளது, விரைவில் பார்த்து விடுவேன்.
“தற்போது இயக்குவதை காட்டிலும் அதிக படங்கள் செலக்ட் செய்து நடித்து வருகிறார்.. யதார்த்தமாக உள்ளது இவரின் நடிப்பு..”
ஆமாம். ஒரு ஹீரோ போல இல்லாததே எல்லோரும் உடனே கனக்ட் ஆக காரணம்.