தமிழக ஊடகங்களின் பல்டிகள் மிரள வைத்துள்ளது. Image Credit
இவர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள், கொண்டார்கள் என்பதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்று நினைத்து எழுதியவையே இவை.
தமிழக ஊடகங்களின் பல்டிகள்
தமிழக ஊடகங்கள் பெரும்பான்மை திமுக / கூட்டணி ஆதரவு ஊடகங்கள் என்பது அனைவரும் அறிந்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற காரணங்களில் இவர்களின் பங்கும் உள்ளது.
தொடர்ச்சியாக மக்களிடையே ஆளுங்கட்சி எதிர்ப்பு மனநிலையைப் பரப்பிக்கொண்டே இருந்தார்கள்.
அதோடு பாஜக எதிர்ப்பு மனநிலையைத் தொடர்ந்து கட்டமைத்து வந்தார்கள்.
ஊடகங்கள் எப்படியெல்லாம் மாறி வருகிறார்கள் என்பதை ஊடகங்களைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு அதன் வித்யாசம் நன்கு புரியும்.
எதெல்லாம் குறையாக இருந்ததோ அதெல்லாம் தற்போது சிறந்ததாக மாறி விட்டது.
மாறி வரும் ஊடகங்கள்
சன் நியூஸ், கலைஞர் செய்திகள், தினகரன், நக்கீரன் இவர்களை விட்டு விடுவோம் காரணம், இவர்கள் வெளிப்படையாகவே திமுக ஆதரவு ஊடகங்கள்.
இவர்களிடம் நடுநிலையான செய்திகளை எதிர்பார்க்க முடியாது. எனவே, இவர்களைத் தவிர்த்து விடுவோம்.
அடுத்த நிலை முக்கிய ஊடகங்கள்
சன் நியூஸ், கலைஞர் செய்திகள், தினகரன், நக்கீரன் இவர்களை விட நடுநிலை என்ற பெயரில் உள்ள ஊடகங்களே மிக ஆபத்தானவை.
பாலிமர், புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ் 18, நியூஸ் 7, விகடன், தினமலர், தினமணி, தமிழ் இந்து ஆகியவை அடுத்த நிலை ஊடகங்கள்.
பாலிமர் ஓரளவு நடுநிலை செய்திகளைக் கொடுத்து வந்தது, தேர்தல் முடிவு வெளியான பிறகு திமுக ஆதரவு செய்திகள் அதிகரித்துள்ளது.
இருப்பினும் மற்ற ஊடகங்களை ஒப்பிடுகையில் பரவாயில்லை ரகம்.
இவற்றினுள் ஓரளவு நடுநிலை செய்திகளைத் தருவது தினமணி. இவர்கள் மக்களிடையே அதிகம் சென்றடையவில்லை என்பதால் விட்டு விடுவோம்.
தினமலர் வெளிப்படையான அதிமுக, பாஜக ஆதரவு, திமுக எதிர்ப்புப் பத்திரிகை. நடுநிலை என்று காட்ட அவ்வப்போது அனைத்து கட்சிகளையும் விமர்சிக்கும்.
தமிழ் இந்து படிப்பவர்களுக்கே தெரியாமல் திமுக, கம்யூனிச ஆதரவு / பாஜக எதிர்ப்புச் செய்திகளை நுழைக்கும், சில நேரங்களில் வெளிப்படையாகவும்.
நான்கு நடுநிலையான செய்திகளைக் கொடுத்தால், மூன்று திமுக ஆதரவு, மூன்று பாஜக எதிர்ப்பு கட்டுரைகளைக் கொடுக்கும்.
புதிதாகப் படிப்பவர்களுக்கு இதன் சூட்சுமம் புரியாது. தொடர்ந்து படிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். எனவே, இது விவகாரமான பத்திரிகை.
தந்தி டிவி துவக்கத்தில் ஓரளவு நடுநிலையாக இருந்தது பின்னர் தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்பு திமுக ஆதரவு செய்திகளைக் கொடுத்தது.
தற்போதும் கொடுக்கிறது என்றாலும், மற்றவர்கள் அளவுக்குத் தற்போதைக்கு (மே 2021) மோசமில்லை.
மேற்கூறியவை இதுவரை படித்தவற்றை வைத்துக் கூறப்பட்ட தனிப்பட்ட அனுமானம். மற்றவர்களுக்கு இதில் சில கூடக் குறைய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
முன்களப் பணியாளர்களின் சிறப்பான சேவை!
ஊடகங்களை முன்களப் பணியாளர்களாக ஸ்டாலின் அறிவித்த பிறகு சமூகத்தளங்களில் ஊடகங்களைக் கிண்டலடித்து வருகிறார்கள்.
காது ஜவ்வு கிழியும் அளவுக்குத் திமுக ஜால்ரா சத்தம் என்றால், புதிய தலைமுறை, நியூஸ் 18, நியூஸ் 7, விகடன் ஊடகங்கள் தான்.
இதனுடன் ஊடகம் என்ற பெயரில் புதிதாக Behindwoods இணைந்துள்ளது, சகிக்க முடியவில்லை.
ஊடகங்கள் பல செய்திகளை முற்றிலும் மறைத்து விடுகின்றன ஆனால், ஒரே பாராட்டு மழையாக செய்திகளில் உள்ளது.
நியூஸ் 18 ஒரு படி மேலே போய் ஊரடங்கில் கடையே திறக்காத நேரத்தில், மக்கள் கேரம் போர்டு வாங்குவதில் ஆர்வம் என்று போட்டு அதிர்ச்சி கொடுத்தார்கள்.
ஊரடங்கால் மக்கள் மகிழ்ச்சி என்றார்கள், இன்னும் கொரோனாவால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறார்கள் என்பதை மட்டும் தான் கூறவில்லை.
இவை எதிர்பார்த்தது என்றாலும், இவ்வளவு மோசமாக அல்ல.
இனி ஐந்து வருடங்களுக்குத் தமிழக ஊடங்களின் விமர்சனம் மற்ற மாநிலங்களைப் பற்றியும் பாஜக பற்றியும் மட்டுமே இருக்கும்.
இடையில் கருத்து வேறுபாடு, சண்டை வந்தால் மட்டுமே மாற்றம் வர வாய்ப்புள்ளது.
புதிய தலைமுறை
சன் நியூஸ், கலைஞர் செய்திகளுக்குப் போட்டியாகப் புதியதலைமுறை செயல்படுகிறது ஆனால், திமுக என்ற அடையாளம் இல்லாமல்.
புதியதலைமுறையின் முதலாளி பச்சமுத்து முன்பு திமுக கூட்டணியில் இருந்தார். பின்னர் விலகி கமல் கூட்டணியில் இணைந்தார்.
இதன் பிறகு ஓரளவு நடுநிலை செய்திகள் எதிர்பார்க்கலாம் என்று நினைத்தால், அதன் பிறகு தான் திமுக ஜால்ரா உச்சத்தை அடைந்தது.
தேர்தல் முடிவு வெளியான பிறகு ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி பச்சமுத்து ஒரு பக்க விளம்பரம் கொடுத்தார். கூட்டி கழித்துப் பாருங்கள், ஏதாவது புரியும்.
தேர்தல் முடிவு வெளியான பிறகு புதிய தலைமுறை செய்திகளை இரண்டே தலைப்புகளில் அடக்கி விடலாம்.
ஒன்று திமுக ஆதரவு செய்திகள், இரண்டாவது பாஜக எதிர்ப்புச் செய்திகள்.
புதியதலைமுறை ‘மர்ம நபர்கள்‘ செய்தி இதுவரை அனைவராலும் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
விகடன்
விகடனும் கிட்டத்தட்ட இதே தான். பாலசுப்ரமணியம் அவர்கள் வளர்த்தெடுத்த பாரம்பரிய பத்திரிகை இந்த நிலைமைக்குச் சென்றது காலத்தின் கோலம்.
இரண்டாம் முரசொலியான விகடனுக்குத் தெரிந்ததும் இரண்டே தான். ஒன்று திமுக, கம்யூனிச ஆதரவு, இரண்டாவது பாஜக எதிர்ப்புச் செய்திகள்.
இங்கே கூறப்படுவது கற்பனையல்ல, இவர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில், நான்கே நான்கு செய்தி தலைப்புகளையும் அதற்கு வந்துள்ள கருத்துகளையும் பாருங்கள்.
மேற்கூறப்பட்டது உண்மையா, மிகைப்படுத்தப்பட்டதா என்று புரியும்.
மாறி வரும் தலைப்புகள்
திமுக ஆதரவு ஊடங்கள் அனைத்தும் கடந்த மே 6 2021 முதல் கொடுத்த தலைப்புகளில் சில.
முதல் பாலே சிக்ஸர், அதிரடி, சரவெடி, மாஸ் காண்பித்தார்.. இவையல்லாமல் தலைப்புகள் எப்படி மாறி வருகிறது, வரும் என்பதைக் காணலாம். Source
- நிர்வாகத் திறமையின்மை –> சவாலான சூழ்நிலை
- பொருளாதார வீழ்ச்சி –> பொருளாதாரச் சிக்கல்கள்
- மத்திய அரசின் அடிமை –> மத்திய அரசுடன் இணக்கம்
- முழு முடக்கம் –> கட்டுப்பாடுகள்
- சொந்த ஊர் செல்ல மக்கள் அவதி –> சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம்
- மெத்தனம் –> நிதானம்
- ரகளை செய்யும் ஆளுங்கட்சியினர் –> மர்ம நபர்கள்
- மூப்பு அடைந்தவர்கள் –> அனுபவம் மிக்கவர்கள்
- மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுதல் –> மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தல்
- அதிரடி விலை உயர்வு –> தவிர்க்க இயலா கட்டண உயர்வு
- வன்மையாகக் கண்டிக்கிறோம் –> மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறோம்
- மின்வெட்டு –> மின் தடை
- நடவடிக்கை எடுக்காத கையாலாகாத அரசு –> அதிரடி நடவடிக்கை எடுக்கும் அரசு
- கண்டமூடித்தனமான –> சிந்தித்துச் செயல்பட்டு
உத்தரபிரதேச மாநிலம்
உத்தரபிரதேச மாநில முதல்வர் ஆதித்யா யோகிநாத்தை வைத்து மிகப்பெரிய அரசியல் தமிழகத்தில் நடந்துள்ளது, நடக்கிறது, நடக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம், அதன் பிற்போக்கான எண்ணங்களுக்கும், வளர்ச்சி அடையாத பகுதிகளுக்கும் விமர்சனங்களுக்குள்ளாகும்.
எப்படியும் ஏதாவது ஒரு சர்ச்சை, பிரச்சனை நடந்து கொண்டு இருக்கும்.
தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு இருந்து உத்தரபிரதேச செய்திகள் தமிழக ஊடகங்களில் அதிகரித்ததை எத்தனை பேர் கவனித்தீர்கள்?!
உபி செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிடுவதில் ஊடகங்கள் குறிப்பாக புதிய தலைமுறை & விகடன் தீவிரமாக உள்ளன.
நுண்ணரசியல்
தமிழகத்தில் பாஜக எதிர்ப்பைத் தொடர்ந்து கட்டமைக்கத் தமிழக ஊடகங்ளுக்கு வசதியாகச் சிக்கியவர் தான் யோகி.
உபி யில் பிரச்சனைகள் இருந்தாலும், தமிழகச் செய்திகளுக்கு இணையாகச் சம்பந்தமே இல்லாத உத்தரபிரதேச செய்திகள் தொடர்ந்து வருவதேன்?
ஒரு பெரிய சம்பவம் நடந்தால் மற்ற மாநில செய்தி வருவது இயல்பு ஆனால், தின செய்தி போல அனைத்தும் குறிப்பாக உபி மட்டும் வருவதேன்?
இதன் நுண்ணரசியல் புரிந்தால் மட்டுமே இவர்களின் எண்ணவோட்டம் புரியும்.
தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு மனநிலையைத் தொடர்ந்து வைத்து இருக்கப் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் விரும்புகின்றன.
தமிழக ஊடகங்களுக்குப் பாஜக எதிர்ப்பு / வெறுப்பு பிம்பத்தைத் தொடர்ந்து கட்டமைக்க எளிதாகக் கிடைத்த வாய்ப்பு தான் உபி.
அதற்குத் தகுந்த மாதிரி சம்பவங்களும் உபியில் நடப்பதால், எளிதாகிறது.
தற்போது மட்டும் ஏன்?
2017 ம் ஆண்டு பாஜக (யோகி) ஆட்சிக்கு வந்துள்ளது. அதற்கு முன் மாயாவதி, முலாயம் சிங் கட்சிகள் மட்டுமே 15 வருடங்கள் ஆட்சியில் இருந்துள்ளன.
2020 இறுதியில் தான் உபி பற்றிய விமர்சனங்கள் தமிழக ஊடங்களில் அதிகரித்தது. இதற்கு முன் இது போலத் தொடர்ச்சியாக உபி செய்தி வந்துள்ளதா? கிடையாது.
அப்போதெல்லாம் உபி வளம் கொழிக்கும் மாநிலமாகவும், பொருளாதாரத்தில் மேம்பட்டதாகவும், பிரச்சனையே இல்லாத மாநிலமாகவும் இருந்ததா?!
இதற்கான விடை கிடைத்தால், மேற்கூறியது மொத்தமும் புரியும்.
செய்திகள் செய்திகளாக இருக்க வேண்டும்
ஊடகங்கள் யாரையும் பாராட்டியும், விமர்சித்தும் எழுத வேண்டும் என்பது மக்கள் எண்ணமல்ல, செய்தியைச் செய்தியாகக் கொடுங்கள் என்பது தான்.
தங்களுக்குத் தேவையென்றால் ஒரு செய்தி, தேவையில்லை என்றால் வேறு மாதிரியான செய்தி என்றால் விமர்சிக்கத்தான் செய்வார்கள்.
ஸ்டாலின், பழனிச்சாமி, மோடி, யோகி என யாராக இருந்தாலும், செய்திகள் என்ற பெயரில் தனிப்பட்ட உள்நோக்க கருத்துகளைத் திணிக்கக் கூடாது.
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் கிடையாது.
யார் நல்லது செய்தாலும் பாராட்டுங்கள், தவறு என்றால் விமர்சியுங்கள். ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாதீர்கள்.
இறுதியாக, யார் தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி செய்தாலும், தமிழ்நாட்டுக்கு நல்லது நடப்பது யார் மூலமாக என்றாலும் மகிழ்ச்சியே!
ஆனால், ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக, உள் நோக்கத்துடன் செய்திகளைக் கொடுக்கும் போது விமர்சனங்களும் தவிர்க்க முடியாததே!
பின்குறிப்பு
மேற்கூறப்பட்டவை எதுவும் கற்பனையானது அல்ல. அந்தந்த செய்தி தளத்தில், ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!
தொடர்புடைய கட்டுரைகள்
Drug Mafia | உலக மருந்து அரசியல் | COVID-19
SICK Mind ஊடகங்களும் அரசியல்வாதிகளும் | COVID-19
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, ஆரம்பத்தில் சினிமாவும், பத்திரிக்கையும் வெகுஜன மக்களின் மனதில் எளிதில் நுழையக்கூடிய கருவியாக இருந்தது.. அதன் காரணமாக தான் நமது அரசியலில் சினிமா துறையை சார்ந்தவர்கள் ஆட்சியாளராக மாற முடிந்தது.. அதன் நீட்சி தான் இன்று MGR , ரஜினி, கமல்ஹாசன் வரை தொடர்ந்து கொண்டு வருகிறது. இது எதிர்காலத்திலும் தொடரும்.. என் பார்வையில் நடிகர் விஜய் எதிர்கால அரசியலில் ஒரு முக்கிய நபராக வலம்வருவர் என்பது என் கணிப்பு.. மற்ற கருவிகளை விட தற்போது சமூக வலைதளங்கள் முக்கியமான ஒன்றாக இருக்கிறது..கட்டுப்பாடற்ற சுதந்திரம் தான் இதன் பெரிய மைனஸ்..
அன்றும் சரி இன்றும் சரி அனைத்து கட்சிகளும் சொந்தமாக பத்திரிகையும், சேனல்களும் வைத்து அவர்களின் செய்திகளை மக்கள் விரும்பத்தக்க வகையில் ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர்.. நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிடினும் சரி இந்த வட்டத்திற்குள் தான் சுற்றி சுற்றி வர வேண்டும்.. இல்லையென்றால் எல்லாவற்றையும் தவிர்த்து முழுவதுமாக வெளியேற வேண்டும்.. (நான் எப்போதோ வெளியேறி விட்டேன்) நான் விரும்பி முதுகலை படிக்கும் போது பகுதி நேரத்தில் பத்திரிக்கை துறையில் ஒரு ஆண்டு பட்டயப் படிப்பில் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்.. சூழ்நிலை காரணமாக என்னால் இந்த துறையில் பணிபுரிய முடியாமல் போய்விட்டது.. பகிர்வுக்கு நன்றி கிரி.
@யாசின் “எல்லாவற்றையும் தவிர்த்து முழுவதுமாக வெளியேற வேண்டும்”
நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை ஆனால், Blog எழுதுவதால், நாட்டு நடப்பு தெரிந்து இருக்க வேண்டும் என்பதால், செய்தி தளங்களின் ஃபேஸ்புக் பேஜ் மட்டும் பின்தொடர்வேன்.
“சூழ்நிலை காரணமாக என்னால் இந்த துறையில் பணிபுரிய முடியாமல் போய்விட்டது”
நல்லவேளை யாசின் 🙂 . உங்களைபோன்றவர்களால் இங்கே பணி புரிய முடியாது. உண்மைக்குப் புறம்பாக எழுத வேண்டும். நேர்மையாக எழுத முடியாது.
பிடிக்கவில்லை என்றாலும் மனசாட்சியை தொலைத்து எழுத வேண்டும்..
எனவே, நல்லது தான் விடுங்க.
எதிர்பார்த்ததுதான் கிரி, No surprise at all! இந்த ஊடங்கங்கள் கிரெடிபிலிட்டி எப்பவோ இழந்து விட்டன. இனி உத்தரபிரதேச மாநில செய்தி மட்டும் அல்ல, பிற பாஜக ஆளும் மாநில செய்திகள் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.
அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆக வேண்டும் என கனவு கண்ட நாம், இன்று பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தைவிட வளர்ந்து விட்டோம் என்று கூறுவதை சகித்து கொள்ள முடியவில்லை. இது என்ன மனநிலை என்று புரிந்து கொள்ளமுடியவில்லை.
விகடன் பத்திரிகை இப்படி மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது கல்லூரிநாட்களில் நான் தீவிரமாக அந்த வாரஇதழை வாங்கி படித்து இருக்கிறேன்.
ரொம்ப நாளைக்கு இந்த ஊடகங்கள் போலி பிம்பத்தை கட்டமைக்க முடியாது.இவர்கள் எப்படியும் மாறுவார்கள். உதாரணம், EPS ஐயை அவர்கள் விமர்ச்சித்த விதம். முதல் வருடம் எடுபுடி என்று விமர்ச்சித்த ஊடகங்கள், அவர் இடை தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல்வர்,இரும்பு தேசத்து கரும்பு மனிதர் 🙂 இவங்க டிசைன் அப்படி.
என்னை பொறுத்தவரை மீடியாவில் வேலைசெய்பவர்களும் கூலிக்கு வேலை செய்யும் பிற தொழிலாளிகளை போல தான். இவர்கள் சம்பளம் வாங்கி கொண்டு அன்றைய தினத்துக்கான செய்தியை சுவாரசியமாகவும், கன கட்சிதமாக எழுத , பேச தெரிந்த ஊழியர்கள் அவ்வளவே! இவர்களிடம் அறத்தை எதிர்பார்ப்பது வீண். இவர்கள் குடும்பத்தை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது, 24 மணிநேரமும் எதிர்மறை மற்றும் கொதிப்பில் இருக்கும் இவர்களை எப்படி சமாளிப்பார்கள் என்று.
“இனி உத்தரபிரதேச மாநில செய்தி மட்டும் அல்ல, பிற பாஜக ஆளும் மாநில செய்திகள் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை”
தமிழகத்தில் இனி மற்ற மாநில செய்திகள் தான் ஆக்கிரமிக்கும் 🙂
“விகடன் பத்திரிகை இப்படி மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.”
யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். சர்வைவாக இந்த அளவுக்கு இறங்கி விட்டார்கள் போல, ஏற்கனவே வாசகர்களை இழந்ததால்.
“ரொம்ப நாளைக்கு இந்த ஊடகங்கள் போலி பிம்பத்தைக் கட்டமைக்க முடியாது.இவர்கள் எப்படியும் மாறுவார்கள்.”
ஆமாம். ரொம்ப நாள் தாங்காது. இது தேனிலவு காலம்.
“24 மணிநேரமும் எதிர்மறை மற்றும் கொதிப்பில் இருக்கும் இவர்களை எப்படி சமாளிப்பார்கள் என்று.”
எனக்கும் இந்தச் சந்தேகம் உண்டு. எப்போதும் எதிர்மறை எண்ணத்திலேயே சிந்தித்தால்.. நினைத்துப் பார்த்தாலே மோசமாக உள்ளது.
ஒரு திமுக காரனா சொல்றேன் அண்ணா, சன் நியுஸ், பாலிமர், பு.த., நியுஸ்7, நியுஸ் 18 இந்த சேனல்களையெல்லாம் நாங்கள் (சமுக வலைதளங்களில் இருக்கும் திமுக ஆதரவாளர்கள்) நடு நிலைமை சேனல்கள் என்று நம்புவதே இல்லை. இந்த சேனல்களில் பொது செய்தியை தவிர்த்து, அரசியல் சம்பந்தமான எந்த செய்தியானாலும் சரி அல்லது எந்த அரசியல் கட்சி சம்பந்தமான செய்தியானாலும் சரி பேக்ட் செக் செய்து கொடுப்பவர்கள் ட்விட்டரில் இருக்கிறார்கள். நான் அவர்களை பாலோ செய்வதால் பெரும்பாலான செய்திகள் அவர்கள் மூலமே அறிகிறேன்.
திரு. குணா அவர்கள் சன் நியுஸில் இணைந்த பிறகு தான் சத்தியமா சொல்றேன் நானெல்லாம் அந்த சேனலையே பார்க்க ஆரம்பிச்சேன். இன்று இந்த சேனல்கள் என்னதான் கழக ஆதரவு செய்திகளை கொடுத்தாலும் இந்த சேனல்களை ஆதரிக்க இணைய உடன்பிறப்புக்கள் தயாராக இல்லை அண்ணா.
மற்றபடி இந்த சேனல்களில் நடக்கும் அரசியல் நமக்கு தெரியாது.
“ஒரு திமுக காரனா சொல்றேன் அண்ணா, சன் நியுஸ், பாலிமர், பு.த., நியுஸ்7, நியுஸ் 18 இந்த சேனல்களையெல்லாம் நாங்கள் (சமுக வலைதளங்களில் இருக்கும் திமுக ஆதரவாளர்கள்) நடு நிலைமை சேனல்கள் என்று நம்புவதே இல்லை.”
கார்த்திக் உங்க கட்சிக்காரங்க நம்புறது நம்பாததும் இங்கே பிரச்சனையில்லை.
ஒருதலைப்பட்சமாக செய்திகளை வெளியிடுவது தான் இங்கே பிரச்சனை.
பெரும்பான்மை உங்களுக்கு ஆதரவா செய்திகளை வெளியிடும் போது நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்களுக்கு இழப்பு இல்லை.
“மற்றபடி இந்த சேனல்களில் நடக்கும் அரசியல் நமக்கு தெரியாது.”
இது தான் கார்த்தி விஷயமே. நீ ஒரு அடிமட்ட தொண்டன் அதனால் உனக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், மிகப்பெரிய அரசியல் நடந்து கொண்டுள்ளது.
சின்ன எடுத்துக்காட்டு கூறுகிறேன்.
ஸ்டாலின் கோவை மாவட்டம் வந்ததுக்கு #GoBackStalin ட்ரெண்டிங் நடந்ததால், அதை மடை மாற்ற ஸ்டாலின் PPE Kit அணிந்து நோயாளிகளை சந்தித்தார் என்று ஊடகங்கள் பேச ஆரம்பித்தன.
அதோடு இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு முதலமைச்சர் இது போல செய்துள்ளார் என்று தொடர்ச்சியாக கூறிக்கொண்டு இருந்தனர்.
ஆனால், ஏற்கனவே பல மாநில முதல்வர்கள் இது போல நோயாளிகளைச் சந்தித்துள்ளனர். புதுச்சேரி ஆளுநராக உள்ள தமிழிசையும் இது போலச் சந்தித்துள்ளார்.
ஆனால், ஊடகங்கள் பேசியது என்ன?!
இறுதியில் ஸ்டாலின் நோயாளிகளின் அருகிலேயே செல்லவில்லை, தூரமாகவே நின்று பார்த்து விட்டு சென்றார்.
அதை விட முக்கியமாக அது நோயாளிகள் பிரிவு அறையே இல்லை. வரவேற்பு அறையை இது போல தற்காலிகமாக மாற்றி வைத்து இருந்தார்கள்.
இது போல நிறைய நடக்குது கார்த்திக்.