தமிழ்ச் சொற்கள்

பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்டதாக / திருப்தி அளிக்கும் தமிழ்ச் சொற்கள் விளக்கங்களை மட்டும் இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

இவை தான் சரி என்று நான் கூறவில்லை ஆனால், இவற்றைத் தான் பயன்படுத்தி வருகிறேன்.

தமிழ்ச் சொற்கள்

தற்போது ஆளாளுக்கு ஒரு விளக்கம் / புதுப் பெயர் கொடுப்பதால் ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பொது மக்கள் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது.

இதற்குக் காரணம் ஒவ்வொருவரும் தான் வைக்கும் பெயரே சரி என்று நினைப்பதாலும் இவ்வாறு தமிழில் சரியான மொழி மாற்றி அமைப்பு இல்லாததாலும் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் ஏகப்பட்ட பெயர் வைத்து மக்களைக் குழப்பி வருகிறார்கள். Image Credit

இது தவறான ஒரு செயல்.

இதற்கென்று சரியான அமைப்பு இருந்து, பெயர்களை ஒருங்கிணைத்தால் அல்லது இது தான் சரியான விளக்கம் / பெயர் என்று அறிவித்தால், இதைத் தமிழில் அனைவரும் கூச்சம் இல்லாமல் ஆர்வத்துடன் பயன்படுத்துவார்கள்.

இதன் மூலம் தமிழும் வளர்ச்சி அடையும்.

பல பெயர்கள்

நம்மிடையே பின் வரும் சொற்களைத் தமிழ்ப் படுத்த முடியாமல் போவதற்குக் காரணம், சொற்களுக்குப் பல பெயர்கள் இருப்பதும் / அதோடு படிப்பவர்களுக்குப் புரியாது என்பதாலும் ஆங்கில சொற்களையே பயன்படுத்துகிறார்கள்.

நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

தொடர்ந்து தமிழ்ச் சொற்களைப் புறக்கணித்தால், நாளை ஆங்கிலச் சொற்களே தமிழ் என்றாகி விடும்.

நாமே நம் பல நூற்றாண்டுச் சிறப்பு கொண்ட தமிழ் மொழியை அழிக்கத் துணை புரியக் கூடாது.

ஏற்கனவே பல வட மொழிச் சொற்கள் நம் தமிழிலே இரண்டற கலந்து விட்டன.

இவற்றைத் தமிழ் இல்லை வட மொழிச் சொற்கள் என்று கூறினால் கூட யாரும் நம்பாத நிலைக்குச் சில சொற்கள் ஏற்கனவே நம்மிடையே கலந்து விட்டன.

இது போல ஆங்கிலச் சொற்களும் புகுந்து கொண்டு நம் தமிழ் மொழிக்கென்று இருக்கும் சிறப்பை அழித்து வருகின்றன. நாகரீகம் என்ற பெயரால் இதற்கு நாமே துணை போகக் கூடாது.

தொழில்நுட்ப தமிழ்ச் சொற்கள்

நான் முன்பு தமிழ் தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்திய போது என் நண்பர்கள் பலர் கிண்டலடித்தனர் ஆனால், தற்போது அவர்களே இது போலசொற்களைத் தான் கருத்துகளில் பயன்படுத்துகிறார்கள்.

எனவே, அனைவரும் ஒரு நாளில் உணர்ந்து கொள்வார்கள் குறிப்பாக அவர்களும் பயன்படுத்தத் துவங்கி விடுவார்கள். சோர்ந்து போக வேண்டாம்.

தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை குறிப்பிட்டு இருப்பது போல, ஏன் தமிழ் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதையும் கீழே கூறியுள்ளேன். அதையும் படிக்கவும்.

இதில் மேலும் புதிய சொற்கள் அவ்வப்போது சேர்க்கப்படும்.

Computer – கணினி

Laptop – மடிக்கணினி

Comment – பின்னூட்டம்

Post – இடுகை

Smart phone – திறன் பேசி

Social network – சமூகத் தளம்

Operating System – இயங்கு தளம்

Server – வழங்கி

Extension / Add on – நீட்சி

(facebook) Status – நிலைத்தகவல்

Blog – வலைப்பூ

Internet – இணையம்

Specialist – நிபுணர்

Website – இணையத்தளம்

Script – நிரலி

Computer technician – கணிப் பொறியாளர்

App – செயலி

Software – மென்பொருள்

User account – பயனர் கணக்கு

Browser – உலவி

Install – நிறுவுதல்

Password – கடவுச்சொல்

Download – தரவிறக்கம்

Upload – தரவேற்றம்

Type – தட்டச்சு

Global Positioning System (GPS) – புவியிடங்காட்டி

Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு

பெயர்ச்சொல்லை மாற்றக் கூடாது

மேலே கூறியது எவ்வளவு உண்மையோ அதே அளவு தமிழ்ப் “படுத்துகிறேன்” என்று கிளம்பி இருப்பவர்களால் ஏற்படும் தொல்லை.

இவர்கள் தமிழை வளர்க்கவில்லை மாறாகத் தமிழை கேலிப் பொருளாக்கி வருகிறார்கள்.

சுருக்கமாக “ஆர்வக் கோளாறு” என்று இவர்களைக் கூறலாம்.

தமிழை வளர்க்கிறேன் என்று தமிழையே மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி செய்து நியாயமான சொற்களை மொழி மாற்றினால் கூட அதையும் மற்றவர்கள் கிண்டலாகப் பார்க்கும் படி செய்து விட்டார்கள்.

அது தான் பெயர்ச் சொல். பெயர்ச்சொல்லை மொழி மாற்றம் செய்யக் கூடாது. இது குறித்த என் கட்டுரையைப் படிக்கவும்.

facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?

உங்களைச் செம்மொழியில் பேசுங்கள் என்று கூறவில்லை, அப்படி தற்போதைய நிலைக்குக் கூறவும் முடியாது.

ஆனால், முடிந்த வரை எங்கெல்லாம் தமிழ் சொற்களைப் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்துங்கள்.

தமிழ் வார்த்தைகளைப் புறக்கணிக்காதீர்கள், பேசும் போது இல்லையென்றாலும் எழுதும் போது பயன்படுத்துங்கள். கூச்சமாக நினைக்காதீர்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ்

தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்

எழுத்தாளர் “சுஜாதா” தரும் எழுத்து ஆலோசனைகள்

படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?!

இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]