பணமதிப்பிழப்பு – GST சரியா தவறா?!

4
பணமதிப்பிழப்பு - GST

ணமதிப்பிழப்பு மற்றும் GST குறித்து ஆதரவு கருத்துகளும் அதை விட அதிகளவில் எதிர்ப்பு குரல்களும் எழுந்துள்ளன. இது குறித்த என்  கருத்துகளே பின்வருவன.

பணமதிப்பிழப்பு

இரண்டு நடவடிக்கைகளையும் வரவேற்கிறேன் ஆனால், அதைச் செயல்படுத்தியதில் ஏற்பட்ட தவறே இத்திட்டங்கள் மீதான விமர்சனங்களுக்கான காரணம்.

கருப்புப் பணம் வைத்து இருந்தவர்களுக்குப் பணமதிப்பிழப்பு அதிர்ச்சி கொடுத்து இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

இதனால், கணக்கில் வராமல் குவித்து வைத்து இருந்த பணத்தை என்ன செய்வது?! என்று திணறி இருப்பார்கள்.

திரு ப.சிதம்பரம் “கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியதே இந்த மிகப்பெரிய பணமதிப்பிழப்பு ஊழல்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

பொதுமக்களுக்கு வாரத்துக்கு 2000₹, 4000₹ கூடக் கிடைக்காமல் திண்டாடியதையே எவரும் மறுக்க முடியுமா? பணமே இல்லாமல் பலர் ATM வாசலில் மணிக்கணக்கில் நின்று பணத்தைப் பங்கு போட்டுக்கொண்டார்கள், கொடுமையான நிகழ்வு.

சேகர் ரெட்டி வீட்டில் கிடைத்த 34 கோடி

சேகர் ரெட்டி கைதான போது அவர் வீட்டில் நடந்த சோதனையில் 34 கோடிக்கு 2000₹ நோட்டுக் கைப்பற்றப்பட்டது.

பொதுமக்கள் வாரம் 4000₹ க்கு அல்லல்பட்டுக்கொண்டு இருக்க, இவரோ 34 கோடியை அசால்ட்டாக வைத்து இருந்தார்.

இந்த 34 கோடியைப் பொதுமக்களுக்குப் பகிர்ந்து அளித்து இருந்தால், எத்தனை ATM வரிசை குறைந்து இருக்கும்? எத்தனை பேர் அவர்களின் பிரச்சனைகளைத் தவிர்த்து இருக்கலாம்?!

சேகர் ரெட்டி எல்லாம் நான்காம் கட்ட நபர் தான்.

இவராலே 34 கோடியை வங்கி அதிகாரிகளின் உதவியோடு மாற்ற முடிந்தது என்றால், மூன்றாம், இரண்டாம், முதல் கட்ட அரசியல் தலைவர்கள் என்ன செய்து இருப்பார்கள்!

இவரே 34 கோடி என்றால், முதல் கட்ட தலைவர்கள் எல்லாம்..!!

எந்த அரசியல்வாதியாவது பணப் பிரச்சனையில் மாட்டினார் என்று படித்தீர்களா?! இருக்காது. அப்படி என்றால் அரசியல்வாதிகள் அனைவரும் யோக்கியமா?!

அப்படி என்றால் இத்தனை பணமும் வங்கி அதிகாரிகளின் உதவியோடு மாற்றப்பட்டு இருக்கிறது என்பது தானே உண்மை. இதைப் புரிந்து கொள்ள நீங்கள் ஒன்றும் அதி புத்திசாலியாக இருக்க வேண்டும் என்பதில்லை.

மாட்டிய ஒரே ஒரு வங்கி அதிகாரி

பெங்களுருவில் ஒரே ஒரு வங்கி மேலாளரின் மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்தது. அதுவும் என்ன ஆனது என்று தெரியவில்லை.

அப்படியென்றால் ஒருத்தர் விடாமல் மற்ற அனைத்து வங்கி மேலாளர்களும் நேர்மையாக நடந்து கொண்டனரா?

RBI க்கு 99% பணம் திரும்பி விட்டது, அப்படியென்றால், கள்ளப்பணமே இல்லையா! 99% பணம் திரும்பி வந்தது என்றால், கள்ளப்பணமே எவரிடமும் இல்லை என்று தானே அர்த்தம்!

இதனால் கள்ளப்பணம் பழைய நோட்டில் இருந்து புதிய நோட்டாக மாறி இருக்கிறதே தவிர. கள்ளப்பணம் அப்படியே தான் உள்ளது.

தற்போது மத்திய அரசுக்கு மிகப்பெரிய கெட்ட பெயர்.

அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

தனக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திய வங்கி அதிகாரிகள் மீது மத்திய அரசு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை!

இந்தியாவிலேயே ஒரே ஒரு வங்கி அதிகாரி தான் இவர்களுக்குக் கிடைத்தாரா!

குறைந்தபட்சம் தங்கள் அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்திய இவர்களை விடாமல் துரத்திப் பிடித்து உண்மையை வெளிக்கொண்டு வந்து இருந்தாலாவது பொதுமக்கள் கொஞ்சம் மனது ஆறி இருப்பார்கள் ஆனால், இதுவரை நடக்கவில்லை.

நொங்கு தின்பவன் ஒருத்தன் விரல் சூப்புவன் இன்னொருத்தனா!

வங்கி அதிகாரி மூலம் மாற்ற முடியாதவர்கள் போலி நிறுவனக் கணக்கில் பணத்தை மாற்றி இருக்கிறார்கள். தற்போது இவர்களைத்தான் பிடித்துக் கொண்டு உள்ளார்கள்.

மக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை கள்ளப்பணம் வைத்து இருந்தவர்களே எடுத்துக் கொண்டதை பார்த்தால்,  மக்களுக்குக் கோபம் வராமல் இருக்குமா?!

இதனால், மின்னணு பரிவர்த்தனை உட்படப் நல்ல விஷயங்கள் நடந்து இருந்தாலும், வாங்கின அடியும் அலைந்த நாட்களுமே பொதுமக்கள் கண் முன்னே நிற்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி

GST மிகச் சிறப்பான செயல் திட்டம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

நம் நாட்டில் 100% மக்களில் 4% மக்கள் தான் வரிகட்டுகிறார்கள் என்பது மிக மோசமான நிலை. எல்லோரும் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

GSTN

வரி ஏய்ப்பு இல்லாத வணிகமே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. வெகு சில விதிவிலக்குகள் இருக்கலாம் அவ்வளவே! Image Credit

இவர்களை GSTN கணக்கு மூலம் நெருக்கடி கொடுத்து அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாத அளவுக்கு GST கொண்டு வந்து இருக்கிறது.

ஏமாற்ற முடியும் ஆனால், முன்பு போலச் செய்ய முடியாது என்பதே நிலை. இது நிச்சயம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை.

28% என்பது எந்த விதத்தில் நியாயம்?

இதைச் சிறப்பாகச் செய்து விட்டு வரி விதிப்பில் கண்மூடித்தனமாக 28% வைத்தால், எவராலும் தாங்க முடியுமா?!

என்ன நினைத்து இப்படியொரு வரைமுறையே இல்லாத வரி வைத்தார்கள்?

காங் அரசு GST கொண்டு வரப்போவதாகக் கூறப்பட்ட போது 18% தான் கூறி வந்தது. 18% என்பதே அதிகம் என்று இருக்கும் போது இந்தியா போன்ற நடுத்தர மக்கள் நிறைந்த நாட்டில் 28% வைத்தால், என்னவென்று கூறுவது?

மூளையோடு தான் இதை எல்லாம் விவாதித்து முடிவு செய்தார்களா என்றே சந்தேகமாக உள்ளது.

வரிக்குறைப்பில் சமரசம் இல்லையென்று கூறியவர்கள்,  தற்போது மக்கள், வணிகர்கள் கோபம், விற்பனை சரிந்தது மற்றும் குஜராத் தேர்தல் காரணமாகப் பெரும்பாலான வரிகள் 18% க்கும் கீழே வந்து விட்டது.

50 பொருட்கள் / சேவைகள் மட்டுமே 28% வரி பிரிவில் உள்ளது.

தற்போது இருக்கும் வரி விகிதம் தான் அறிமுகத்திலேயே இருந்து இருக்க வேண்டும்.

உணவகத்துக்கு எல்லாம் 12% 18% வைத்தால் எவன் போவான்?

ஹர்பஜன் சிங் என்று நினைக்கிறேன், “மூன்று பேர் போனால் உடன் இன்னொருவரும் சாப்பிட்ட மாதிரி உள்ளது” என்று கட்டண உயர்வைக் கிண்டலடித்து இருந்தார்.

இது சிறிய எடுத்துக்காட்டு தான், இது போலப் பல பொருட்களின் விலை உயர்ந்ததால், மக்கள் தேவையைக் குறைத்துக்கொண்டார்கள். இது ஒரு வகையில் நல்லது என்றாலும், விற்பனை குறைந்ததால் வரி இழப்பும் ஏற்பட்டது.

குறைவான வரியை வைத்து அனைவரும் கட்டினாலே அரசுக்கு லாபம்

GSTN வந்த பிறகு எளிதில் வணிகர்கள் ஏமாற்ற முடியாத அளவுக்கு ஆனது நல்ல விஷயம்.

ஆனால், வரியைச் சிறிய அளவில் வைத்து இருந்தால், அனைவரும் கட்ட முயல்வார்கள். அனைவரையும் வரி வட்டத்தில் கொண்டு வந்து இருக்கலாம்.

ஆனால், தெறித்து ஓடுவது போல வரி விதித்தால் என்ன செய்வார்கள்?! தற்போதுள்ள நெருக்கடி நிலையில் மக்கள் எவ்வளவு தான் தாங்குவார்கள்?!

தொடர்ந்து அடி வாங்கும் நடுத்தர மக்கள்

மத்திய அரசு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை ஆனால், நடுத்தர மக்கள் தான் தொடர்ச்சியாகக் கசக்கி பிழியப்படுகிறார்கள்.

எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என்று அனைத்தின் விலையையும் தொடர்ச்சியாக உயர்த்தி வந்தால் என்ன ஆவது?

எரிவாயு உட்பட அனைத்தின் விலையையும் மனசாட்சியே இல்லாமல் உயர்த்திக்கொண்டு சென்றால், வாழ்க்கை நடத்துவதா துறவியாகி செல்வதா?

தற்போது வரிக் குறைப்பை அறிவித்துள்ளதால், மக்களிடையே சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

ஆனால், என்ன பயன்? மக்கள் இதை நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள், வாங்கின அடியைத் தான் நினைவில் வைத்து இருப்பார்கள்.

அரசின் பணமதிப்பிழப்பு குறிப்பாக GST முடிவு, தற்போது இல்லையென்றாலும், பின்னாளில் அனைவராலும் தைரியமான நடவடிக்கை என்று போற்றப்படும்.

ஆகவே, பணமதிப்பிழப்பு,  GST இரண்டுமே மிக மிகச் சிறப்பான தைரியமான நடவடிக்கை ஆனால், செயல்படுத்தியதில் தான் மத்திய அரசு சொதப்பி விட்டது.

தொடர்புடைய கட்டுரைகள்

மின்னணு பரிவர்த்தனையால் சரியும் வங்கிப்பணிகள்!

சரக்கு மற்றும் சேவை வரி (GST)

“மின்னணு” பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

4 COMMENTS

 1. மிகச்சிறிய நிறுவனத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கும் சூழல் ஏற்படும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். முடிவுக்கு பின் ஊழியர்களும் பாதிப்படைய கூடாது. நிறுவனமும் பாதிப்படைய கூடாது. ஒரு சாதாரண நிறுவனத்திற்கே இந்த நிலை என்றால்..

  இந்தியா போன்ற வல்லரசான நாட்டில் இது போன்ற முக்கிய முடிவுகள் மிகவும் கவனமாக எடுக்கப்பட வேண்டும். நமது நாட்டின் பின்புலமே நடுத்தர குடும்பமும், விவசாய மக்களும் தான். பாதிப்படைந்த பின் வலிக்கு தகுந்தவாறு நிவாரணம் அளிப்பது சரியான தீர்வாக எனக்கு படவில்லை. நண்பர்களிடம் நிறைய பேசி பேசி மனது கணத்து விட்டது… இதற்கு மேல் கூற ஒன்றும் இல்லை..

 2. கிரி,
  வங்கி அதிகாரிகளைக் காட்டிலும், உயர்மட்ட அரசியல்வாதிகள் ஆடிய ஆட்டம்தான் இதில் குறிப்பிடத்தகுந்தது.

  வங்கி அதிகாரிகள் வேண்டுமானால் சில லட்சங்களை மாற்ற உதவியிருக்கலாம்.

  நண்பர் கூறிய தகவல் இது;

  நண்பர் பணியாற்றும் நிறுவனம் முதலில் ஊழியர்கள் மூலம் பணத்தை மாற்ற முயன்றுள்ளார்கள். அது ஓரளவுக்கு மேல் பலனளிக்கவில்லை.

  பின்னர் ஒரு முக்கியமான மத்திய மந்திரியை பிடித்து, அவர் மூலம் பல கோடிகளை மாற்றினார்களாம்[முப்பது சதவீதம் கமிஷன்] . மந்திரியின் பெயரை நான் தவிர்த்துள்ளேன், மேலும் இன்று அவர் மந்திரி சபையில் இல்லை, அது யாரென்று முடிந்தால் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

  நான் ஆரம்பத்தில் சொன்னபடியே இது கமிஷனுக்காகவும், அரசியல் கட்சிகளை மாற்ற அனுமதித்துவிட்டு பின்னர் ப்ளாக் மெயில் செய்ய நடந்த திட்டம்தான். நம்ம சிவாஜி படம் போல………………..

  ஜி.எஸ்.டி உன்மையிலே நான் வரவேற்கிறேன், அவசியமான ஒன்றே, நீங்கள் கூறுவது 100% சரி. இதை ஆர்ப்பாட்டமில்லாமல், விளம்பரம் இல்லாமல் அமல்படுத்தியிருக்க வேண்டும். முன்பு 2005/06 இல் வாட்டை அமல் செய்தது போல……..

  ஜி.எஸ்.டியை காரணம் காட்டி எல்லோரும் விலையை ஏத்திட்டாங்க……… இப்போ குறைசிருக்காங்க, இவனுக குறைப்பாங்களா? இதுதான் மோசமான திட்டமிடல்.

 3. பணமதிப்பிழப்பில் உதவி செய்த்து சம்பாதித்த அரசாங்க ஊழியர்கள் ஏராளம் பேர்.. நாம் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சொல்லிகொண்டிருக்கிறோம்.
  ஜிஎஸ்டி யில் – அனைத்து வரிகளும் உள்பட என்று ஏற்கனவே வாங்கிகொண்டிருந்த பொருள் ஜிஎஸ்டி என்று வந்த பிறகு அதே விலையில் தான் விற்கப்படவேண்டும். ஆனால் கடை முதலாளிகள் அதை தனியே காண்பிக்கின்றனர். இது ஜி எஸ் டி யை குறித்த பிறகும் பொருளின் மீது விலையை கூட்டி அதே நிலைமை தொடர்கிறது.
  இப்போ தவறு செய்பவர்கள் நம்மை போன்ற சாமாநியரே.
  எனக்கு எந்த கட்சியின் மீதும் ஈர்ப்பு இல்லை அதே சமயத்தில் நாம், நம்மை சுற்றியுள்ளோர் நேர்மையாக இருக்கவேண்டும். நாம் நேர்மை தவறி அல்லது அதை தடுக்க தவறி அரசை குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை.

 4. @யாசின் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

  @காத்தவராயன் அரசியல்வாதிகள் பங்கு அதிகம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை.

  சரியான திட்டமிடலுடன் செயல்படுத்தி இருந்தால், பலரின் சிரமத்தை குறைத்து இருக்கலாம். தேவையில்லாம எல்லாவற்றையும் திரும்ப மாற்றி, விலையில் சொதப்பி, திருடி என்று எத்தனை குழப்படிகள்.

  சந்தடி சாக்குல உணவகங்கள் விலையை ஏற்றிவிட்டன. 60 ருபாய் இருந்த பரோட்டா சரவணபவனில் 80 ருபாய். தற்போது மாற்றி இருக்கிறார்களா என்று அடுத்த முறை சென்றால் கவனிக்க வேண்டும்.

  @ராஜ்குமார் கடைகாரங்க ஏகப்பட்ட திருட்டு வேலை செய்து இருக்கிறார்கள்.

  இதெல்லாம் சரியாக இரண்டு வருடங்கள் நிச்சயம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here