ஆதார் கட்டாயம் என்பது சரியா?!

4
ஆதார் கட்டாயம்

 தார் தற்போது அரசின் பல சேவைகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவு எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. அதிலும் மதிய உணவுக்கு ஆதார் கட்டாயம் என்றதும் எதிர்ப்புப் பலமாக இருந்தது. Image Credit

அரசின் இந்த நோக்கம் சரியானது தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை ஆனால், அதைச் செயல்படுத்திய முறையில் தான் தவறு.

கால அவகாசம் கொடுக்காமல், அனைத்து குழந்தைகளும் ஆதார் பெற்று விட்டார்களா! என்று உறுதி செய்யாமல் அறிவித்ததே பிரச்சனை.

பண மதிப்பிழப்பு விசயத்திலும் மக்கள், திட்டத்தை எதிர்க்கவில்லை அதைச் செயல்படுத்திய முறையையே எதிர்த்தார்கள்.

ஆதார் அவசியம் தேவை

“காங்” அரசு கொண்டு வந்த திட்டங்களிலேயே உருப்படியான திட்டம் ஆதார் தான். இதை எதிர்த்து வந்த பாஜக தற்போது அதை மேம்படுத்தி இருக்கிறது.

ஆதார் மூலம் எரிவாயு கணக்கு, குடும்ப அட்டைகளில் லட்சணக்கணக்கான போலிக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நம்முடைய வரிப்பணம் சேமிக்கப்படுகிறது.

திருட்டைத் தடுக்கும் குறைந்த பட்சம் தவிர்க்கும்

தற்போது குடும்ப அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுப் பயனாளர்களின் Mobile எண்ணுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடைகளில் பணி புரிபவர்கள் நாம் வாங்காமலே வாங்கியதாகக் கணக்கு எழுதும் போது பொதுமக்களுக்குக் குறுந்தகவல் வருவதால் மாட்டிக்கொள்கிறார்கள்.

இது மிகப்பெரிய திருட்டை தவிர்க்க உதவியிருக்கிறது. இதெல்லாம் யார் பணம்? அனைத்தும் மக்கள் பணம்.

மதிய உணவுக் கொள்ளை

இது போல மதிய உணவில் எவ்வளவு கொள்ளை அடிக்கப்படுகிறது என்பதை அங்கே பணி புரிந்தவர்கள் கூற கேட்டு இருக்கிறேன். இல்லாத மாணவர்கள் பெயரை எல்லாம் கொடுத்து அவர்கள் பெயரில் திருடுவது மிகச் சாதாரணம்.

உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால், மதிய உணவு திட்டத்தில் பணி புரிபவர்கள் எவரையும் கேட்டுப் பார்க்கலாம். “அரிசி பருப்பு” திருட்டு வழக்கமான ஒன்று.

தற்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டால், திருட்டை முழுவதும் தடுக்க முடியாது ஆனால், நிச்சயம் பெருமளவில் குறைக்கலாம்.

திட்டமிடல் வேண்டும்

இது போலத் தடாலடியாக ஆதார் இருந்தால் தான் மதிய உணவு என்று கூறாமல், அனைவரையும் ஆதார் எண் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது பள்ளிகளிலேயே ஆதார் எடுத்துத் தருகிறார்கள். எனவே, மாணவர்களுக்கு ஆதார் எடுப்பதெல்லாம் பெரிய விசயமே இல்லை.

என் பையனுக்குக் கூட இவன் பள்ளியில் தான் ஆதார் எடுத்தார்கள்.

எனவே, குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து மாணவர்களை ஆதார் எடுக்க வைத்துப் பின் மதிய உணவுக்கு ஆதார் என்பதைக் கட்டாயமாக்கலாம்.

இதன் மூலம் மக்கள் பணம் விரையமாக்கப்படுவது திருடப்படுவது தடுக்கப்படும் குறைந்த பட்சம் தவிர்க்கப்படும்.

ஆதார் கட்டாயமாக்கப்பட வேண்டும்

ஆதார் அனைத்து துறைகளுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

சரியான முறையில் திட்டமிட்டு மக்களுக்கு ஆதார் பெற வசதி செய்து கொடுத்தால், நிச்சயம் மக்களிடம் அரசு வரவேற்பை பெறும்.

ஒரு வருடமே கொடுத்தாலும் ஆதார் எடுக்காமல் மொக்கை காரணங்களைக் கூறுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. சில விதிவிலக்குகள் தவிர்த்து.

என்னுடைய பெயரில் திருத்தம் இருந்தது, இதை மாற்றப் படாதபாடுபட்டேன் ஆனால், தீவிரமாக முயன்று ஒரு வழியாக மாற்றி விட்டேன்.

முயற்சி செய்தால், அனைத்துமே நடக்கும்.

எதிர்காலத்தில் ஆதார் மிக முக்கியமாகும்

எனக்கு முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் மிகப்பெரிய உதவியாக உள்ளது. இதன் பயனை முழுமையாக அறிந்ததால், இதன் முக்கியத்துவம் பற்றிக் கூறுகிறேன்.

எதிர்காலத்தில் PAN கணக்கு, வாக்காளர் எண், குடும்ப அட்டை எண் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆதார் எண் என்ற ஒரு எண்ணாக மாற வாய்ப்புள்ளது, மாற வேண்டும்.

இது மக்களின் சிரமங்களைக் குறைப்பதோடு அரசுக்கும் பணிச் சுமையைக் குறைக்கும்.

உணர்ச்சிக் குவியலாக, மாணவர்கள் மதிய உணவுக்கு ஆதாரா?! என்று திட்டுவதும், Meme போடுவதும் கிண்டலடிப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தான் அல்லது அரசியல் செய்ய மட்டுமே உதவும்.

குறை கூறிக்கொண்டு இருக்காமல், உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆதார் எடுக்க நடவடிக்கை எடுங்கள்.

4 COMMENTS

 1. கிரி, எந்த ஒரு தொலைநோக்கு கொண்ட திட்டங்களில் நிறை குறை நிச்சயம் இருக்கும். என்னை பொறுத்தவரை இது சிறந்த ஒரு திட்டம். நீங்கள் குறிப்பிட்டபடி எதிர்காலத்தில் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் இது தேவைப்படும். நகர் புறங்களில் இருக்க கூடிய நிலை, கிராமங்களில் இல்லை. அதனால் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமமின்றி பிற வகை செய்ய வேண்டும்..மதிய உணவுக்கு ஆதார் கட்டாயம் என்றதும் எதிர்ப்புப் பலமாக இருந்தது. இதில் எனக்கும் உடன்பாடு இல்லை.

  உங்கள் பையன் தனியார் பள்ளியில் படிப்பான் என நினைக்கிறேன்; அதனால் அவர்கள் சற்று விரைவாக பணியினை செய்வார்கள். ஆனால் அரசு பள்ளியின் சூழலை நான் உங்களுக்கு கூற தேவை இல்லை. (10 வரை அரசு பள்ளியில் படித்த அனுபவித்தினால் சொல்லுகிறேன், பள்ளி துவங்கி 4 / 5 மாதத்திற்கு பின் தான் புத்தகங்கள் எங்களுக்கு கிடைக்கும்.) இருப்பினும் தற்போதைய உண்மையான நிலவரம் எனக்கு தெரியவில்லை. ஏழை / நடுத்தர மக்கள் எந்த சிரமமின்றி இந்த திட்டத்தை நிறைவேற்றினால் மகிழ்ச்சியே!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

 2. யாசின் கால அவகாசம் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை நானும் கூறியிருக்கிறேன்.

  என்னுடைய பையன் தனியார் பள்ளியில் தான் படிக்கிறான் ஆனால், ஆதார் வழங்குவது அரசாங்கம் என்பதால், அவர்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் வழங்குவது எளிது.

  இதை சரியான முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பிறப்பு சான்றிதழ் எப்படி அவசியமோ அது போல எதிர்காலத்தில் ஆதார் கட்டாயமாகி விடும். பள்ளிகளுக்கு குழந்தைகள் சேரும் போதே ஆதார் எண்ணுடன் தான் சேர்வார்கள்.

 3. ஆதார் திட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே வரவேற்று வருகிறேன்.

  சமீபத்தில் நண்பன் [கால்நடை மருத்துவர்] ஒருவனுடன் ஜாலியாக மதிய உணவுக்கு ஆதார் பற்றி ஜாலியாக பேசிக் கொண்டிருந்த போது, கால்நடைத்துறையில் வழங்கப்படும் திட்டங்கள் பற்றி பேச்சு வந்தது. அவன் கூறிய தகவல்படி கால்நடைகளுக்கும் அந்த துறைகளில் உள்ள திட்டங்களை பயன்படுத்த ஆதார் அடையாளத்திற்கு நிதி ஒதுக்கபட்டுள்ளதாம். இதை ஜீரணிக்க கடினமாக இருந்தாலும் எப்படி சாத்தியப்படுத்த போகிறார்கள் என்று தெரியவில்லை.

  மதிய உணவுக்கே இத்தனை மீம்ஸ் என்றால்; கால்நடைகளுக்கும் ஆதார் என்றால் நினைக்கவே திகிலாக உள்ளது. 🙂

 4. @காத்தவராயன்

  மக்கள் / அரசியல்வாதிகள் / போராளிகள் எதற்கு சம்பந்தமே இல்லாமல் கொந்தளிக்கிறார்கள் என்று புரியவில்லை.

  ஒரே ஒருமுறை ஆதார் அதுவும் இலவசமாக எடுக்கப்போகிறார்கள். இதை கேட்கும் இடத்தில் கொடுக்கப் போகிறார்கள். இதைக் கொடுப்பதால் என்ன இழப்பு? எதற்கு இத்தனை அலுப்பு, போராட்டம்?

  எனக்கும் யாரும் அழைத்து கையில் கொடுத்து விடவில்லை. சொல்லப்போனால் இதை நான் சிங்கப்பூரில் இருந்த போது விடுமுறையில் வரும் போது பெற்றேன்.

  இதன் பிறகு பெயர் மாற்றம் முகவரி மாற்றம் என்று நானாக ஒவ்வொருமுறையும் அடிபட்டு தெரிந்து கொண்டேன்.

  தற்போது அனைத்தையும் சரி செய்து எதற்கும் தயாராக இருக்கிறேன். ஒரு பிரச்சனையும் இல்லை.

  கண்டிப்பாக அரசாங்கம் அனைத்துக்கும் ஆதாரை கட்டாயமாக்க வேண்டும்.

  எத்தனை திட்டங்கள் என்றாலும் அனைத்துக்கும் ஒரே ஆதார் தான் எனும் போது இதை பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை?

  ஒன்றும் புரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here