J.பேபி (2024) | நான் யார் தெரியுமா?

2
J.பேபி

ண்மைக்கதையை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட படம் J.பேபி. image Credit

J.பேபி

அண்ணன் தம்பி பிரச்சனை, இவற்றோடு ஊர்வசிக்கு Bipolar Disorder பிரச்சனையால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகளைக் கூறுவதே J.பேபி.

Bipolar Disorder பல்வேறு பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தத்தால் உருவாவது.

மலையாளப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், தமிழில் இது போலப் படங்கள் வருவதில்லையே என்ற ஏக்கம் இருக்கும். அந்தக்குறையை J.பேபி தீர்த்துள்ளது.

நீலம் தயாரிப்பு

இப்படம் இவ்வளவு நாட்களாகப் பார்க்காமலிருந்ததற்கு காரணம், ரஞ்சித் தயாரிப்பு என்பது மட்டுமே.

எப்பப்பார்த்தாலும் சாதிப்பிரச்சினை, இந்து மதத்தை இழிவுபடுத்துவது என்று கடுப்பைக்கிளப்பிக் கொண்டு இருப்பதால், ரஞ்சித் படமோ, அவரது தயாரிப்பு படங்களோ பார்க்க விரும்புவதில்லை.

துவக்கத்தில் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி படங்களில் வெளிப்படையாக எதையும் காண்பிக்காமல், குறியிட்டின் மூலம் காண்பித்தார்.

தன்னை நிலை நிறுத்திய பிறகு சேட்டையை ஆரம்பித்து விட்டார்.

எப்பவாவது ஒரு படம் இதுபோல என்றால் பரவாயில்லை. இயக்குற படம், தயாரிக்கும் படம் என்று அனைத்தும் சாதியை வைத்தே எடுத்து, தமிழ் படங்கள் பார்க்கும் ஆர்வமே போய் விட்டது.

ரஞ்சித்தை தனி கட்டுரையில் விமர்சிக்கிறேன். தற்போது படத்துக்குப் போவோம்.

ஃபேஸ்புக்கில் சிலர் ஊர்வசி நடிப்பு அற்புதமாக உள்ளது என்று கூறியதால் சரி நம்ம கடுப்பை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம் என்று பார்த்ததே இப்படம்.

தினேஷ் & மாறன்

ஊர்வசி பசங்களில் இருவர் தினேஷ் & மாறன். திருமணப்பிரச்சனையில் இருவருக்கும் சண்டையாகி இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.

இந்நிலையில் ஊர்வசி காணாமல் போய் கொல்கத்தாவில் இருப்பதாக தகவல் வருகிறது. அவரை அழைத்துவரக் குடும்பத்தினரால் இவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

தினேஷ் உடம்பு போட்டு சித்தப்பா போல ஆகி விட்டார். படத்துக்காக இப்படி ஆகியுள்ளாரா? அல்லது உண்மையாகவே எடை கூடி விட்டாரா?

‘என்னை இன்னும் பைத்தியக்காரனாகவே நினைச்சுட்டு இருக்கே!’ என்று சந்தானத்திடம் கூறும் மாறனுக்கு J.பேபி மறக்க முடியாத படமாக இருக்கும்.

இதுவரை நகைச்சுவை கதாபாத்திரத்திலேயே வந்தவர் நகைச்சுவையோடு அருமையான குணச்சித்திர நடிகராகவும் கலக்கி விட்டார்.

ஒரு காட்சியில் ஒருவர் சரக்கைப் போட்டுக்கொண்டு ஆங்கிலத்தில் பேசிச் சண்டையிடும் காட்சி அசத்தல். துவக்கத்தில் மாறன் என்று நினைத்து விட்டேன்.

கொல்கத்தா

சண்டை போட்டுக்கொள்ளும் இருவர் ஒன்றாக பயணிப்பது என்றால் எப்படி இருக்கும்? மிக இயல்பான காட்சிகளாக உள்ளது,

நடிப்பு போலவே இல்லை, அவர்களுடன் பயணிப்பது போலவே உள்ளது. மாறனால் ஏதாவது பிரச்சனையாகுமோ என்ற பயம் இருந்து கொண்டே உள்ளது.

உணவு வாங்குவதில் மொழிப்பிரச்சினையால் எதிர்கொள்ளும் சிக்கல் நகைச்சுவையாக இருக்கும் 🙂 . ஆலு பிரியாணிக்கு தினேஷ் கூறி விழிப்பது சிரிப்பு.

கொல்கத்தாவில் இவர்கள் இருவருக்கும் உதவுபவராக வரும் தமிழரின் நடிப்பையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இறுதியில் கண் கலங்க வைத்து விட்டார்.

ஊர்வசி

முதல் பாதியில் ரயில் பயணத்தில் பிளாஷ்பேக் காட்சிகளாக ஊர்வசி மற்றும் தினேஷ் மாறன் பிரச்சனைகளைக் கொண்டு செல்வது பொருத்தமாக இருந்தது.

என்னடா ஊர்வசி பற்றி அப்படி கூறினார்கள் ஆனால், அவர் நடிப்பு ஒன்றுமே இல்லையே! ஒருவேளை இடைவேளைக்குப் பிறகு வருவாரோ என்று நினைத்தேன்.

அதே போல ஊர்வசி, பாட்ஷா ரஜினி போல வருவது செம 🙂 . தமிழ் திரையுலகில் எந்த ஒரு நடிகைக்கும் இப்படியொரு Intro இருக்காது 😀 தாறுமாறாக உள்ளது.

ஊர்வசி குடும்பம்

ஊர்வசி Bipolar Disorder பிரச்சனையால் எதையாவது செய்து விட்டுப் பின்னர் மறந்து விடுவார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளால் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

ஊர்வசியை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் தினேஷும் அவரது அக்காவும், ஒவ்வொருவர் வீட்டிலும் எப்படி பேசிக்கொள்வார்களோ அதே போலப் பேசுவார்கள்.

என்னை ரொம்பக்கவர்ந்த காட்சிகளாக இவை இருந்தன. ஊர்வசி கோபித்துக்கொண்டு சென்று விட அவரைத் தினேஷும், அவரது அக்காவும் சமாதானப்படுத்தும் காட்சிகள் மிக எதார்த்தம்.

தினேஷ் அக்காவாக நடித்துள்ளவர் சிறப்பான நடிப்பு.

எனக்கும் அக்கா உள்ளதால், அக்கா கூட நான் பேசினால் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இதனால், உடனடியாக கதைக்குள் செல்ல முடிந்தது.

ஊர்வசி செய்யும் பிரச்சனைகளால் அவர்களுக்கு கோபமும் வரும், அம்மாவையும் விட்டுக்கொடுக்க முடியாத நெருக்கடியான நிலையும் இருக்கும்.

அக்கா தம்பி அண்ணன்

பார்த்துக்கோ.. காலையில வந்துடுறேன்‘ என்று தினேஷிடம் அக்கா கூறுவதும், அவர்கள் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் என்று இயல்பாக உள்ளது.

ஒரு அண்ணனோ, அக்காவோ, தம்பியோ இருந்தால் மட்டுமே இக்காட்சிகளை நம்மோடு பொருத்திப் பார்க்க முடியும். மற்றவர்களுக்கு இக்காட்சிகளின் ஆழத்தை புரிந்து கொள்வது சிரமமே.

யார் யார் வீட்டிலெல்லாம் வயதானவர்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்களோ அவர்களுக்குத் தங்களையே பார்ப்பது போலவே இருக்கும்.

எங்க அப்பா Parkinson பிரச்சனையால் பாதிக்கப்பட்ட போது 10 மாதங்கள் பார்த்துக்கொண்டோம், அதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், இக்காட்சிகளை முழுக்க உணர்ந்து படத்தோடு ஒன்ற முடிந்தது.

ஊர்வசி அலப்பறை

மேற்கூறியதை கேட்கும் போது எதோ சோகமான காட்சிகளாக இருக்குமோ என்று தோன்றியிருக்கலாம் ஆனால், அது தான் இல்லை.

ஊர்வசி பண்ணுகிற அலப்பறை செம ரகளையான இருக்கும்.

தூங்கிக்கொண்டு இருக்கும் Patrol காவலரை எழுப்பி ‘நான் யார் தெரியுமா?‘ என்று கேட்டு ஊர்வசி செய்வதெல்லாம் தாறுமாறு 😀 .

சட்டென்று கோபப்படுவதும், உடனே உருகுவதும், கண் கலங்க வைப்பதும், சண்டையிடுவதும் என்று நடிப்பில் மிரட்டியுள்ளார்.

உறுதியாக இவருக்கு விருது கிடைக்கும், சந்தேகமே இல்லை.

ஊர்வசிக்கு Wig இல்லாமலே இயல்பாகத்தான் உள்ளார், அப்படியிருக்கும் போது Wig அவசியமா? இதைத் தவிர்த்து இருக்கலாம், இது மட்டுமே உறுத்தலாக இருந்தது.

ஒளிப்பதிவு இசை

துவக்கத்தில் ஒளிப்பதிவு, சீரியல் கேமரா போல உள்ளது. ஏற்கனவே ஆர்வம் குறைவாக இருந்ததால், பேசாமல் வேற படத்தைப் பார்ப்போமா என்று எண்ணினேன்.

ஆனால், சரி இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம் என்று தொடர்ந்து, தினேஷ், மாறன் இயல்பான நடிப்பில் அப்படியே மூழ்கி விட்டேன்.

பின்னர் எப்போது ஒளிப்பதிவு சரியானது என்று தெரியவில்லை.

இதுவரை தமிழ் படத்தில் கொல்கத்தாவை இவ்வளவு விரிவாக காட்டியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் குறைவான இடங்கள் என்றாலும், ஒரு புரிதலைக் கொடுக்கும் அளவு உள்ளது.

துவக்கத்தில் விட்ட ஒளிப்பதிவை கொல்கத்தா பகுதி மற்றும் இயல்பான காட்சியமைப்பில் ஒளிப்பதிவாளர் ஈடுகட்டி விட்டார்.

பின்னணி இசை ஓகே குறிப்பாக ஊர்வசி Intro பாடல் டாப் டக்கர். சித்ரா பாடும் பாடல் ரொம்ப சோகமாக உள்ளது, அவ்வளவு சோகம் அவசியமில்லை.

இன்னொரு பாடல் கபாலி மாயநதியை நினைவுபடுத்தியது, இரண்டு பாடல்களையுமே பாடியது பிரதீப், வரிகள் உமா.

யார் பார்க்கலாம்?

இது வழக்கமான மசாலா படமில்லை உணர்வுப்பூர்வமான படம். எனவே, அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே.

ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு தமிழ்ப்படம் திருப்தியாக பார்த்தேன் என்றால், அது J.பேபி தான். என்னளவில் மிகத்தரமான படம்.

சிலர் குறைவான மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்கள். ஏன் என்று புரியவில்லை!

என்னைப்போலப் பலரும் ரஞ்சித் தயாரிப்பு என்றால் இப்படித்தான் இருக்கும் என்று பார்க்காமல் தவிர்த்து இருக்கலாம் ஆனால், அப்படி எதுவுமில்லை.

படத்தின் இறுதிக்காட்சி வரை ஏதாவது சாதிப் பிரச்சனை, இந்து மதத்தை இழிவுபடுத்துவது போன்ற காட்சி வந்து விடுமோ என்ற சந்தேகத்தில் இருந்தேன், நல்லவேளை அப்படி எந்தக்காட்சிகளும் இல்லை.

இப்படியொரு அழகான படத்தைக் கொடுத்த இயக்குநர் சுரேஷ் மாரிக்கும், தயாரித்த ரஞ்சித்துக்கும் மிக்க நன்றி.

Happy Ending 🙂 .

Amazon Prime ல் காணலாம்.

Directed by Suresh Mari
Written by Suresh Mari
Produced by Pa. Ranjith, Abhayanand Singh, Piiyush Singh, Sourabh Gupta, Aditi Anand, Ashwini Chaudhari
Starring Attakathi Dinesh, Urvashi, Lollu Sabha Maaran
Cinematography Jayanth Sethu Mathavan
Edited by Shanmugam Velusamy
Music by Tony Britto
Release date 8 March 2024
Country India
Language Tamil

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. இந்த படம் வெளியானது குறித்து எனக்கு தெரியவில்லை.. ஆனால் தனிப்பட்ட முறையில் ஊர்வசியின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.. கதாநாயகியாக பயணத்தை ஆரம்பித்து பின்பு குணச்சித்திர வேடங்களில் தனது பங்களிப்பை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார்.. கோவிட் முடிந்த பிறகு சூரரை போற்று & மூக்குத்தி அம்மன் இரண்டு படங்களும் ஒன்றாக வெளிவந்தது.. இரண்டியிலும் முற்றிலிலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள்.. இரண்டையும் செம்மையாக செய்து இருப்பார்..

    80 களின் கதாநாயகிகளில் எனக்கு மிகவும் பிடித்தவர் ரேவதி.. மிக சிறந்த நடிப்பாற்றல் இருந்தும் குணச்சித்திர வேடங்களில் பெரிதாக இவர் நடிக்காமல் போய் விட்டார்.. தற்போது கூட மைக்கேல் மதன காமராஜ் படத்தில் ஊர்வசியின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.. Ente Ummante Peru மலையாள படத்தில் டிவினோ தாமஸ் உடன் அருமையாக ஊர்வசி நடித்து இருப்பார்..மனோரமா, கோவை சரளா இவர்களின் வரிசையில் நான் ஊர்வசியையும் சேர்க்கிறேன்.

    தினேஷ் தனது ஆரம்பத்தில் செலக்ட் செய்து நடித்து வந்தார்.. பின்பு அவர் நடிப்பில் வந்த படங்கள் பெரிய அளவில் ஓட வில்லை.. தினேஷ் நடிப்பிலும் பெரிய வித்தியாசம் காட்டாமல் ஒரே மாதிரியாக தான் நடிப்பதாக நான் உணர்கிறேன். கிட்டத்திட்ட விமலை போல் மிக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.. உங்கள் விமர்சனம் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்..

  2. @யாசின்

    “கோவிட் முடிந்த பிறகு சூரரை போற்று & மூக்குத்தி அம்மன் இரண்டு படங்களும் ஒன்றாக வெளிவந்தது.. இரண்டியிலும் முற்றிலிலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள்.. இரண்டையும் செம்மையாக செய்து இருப்பார்..”

    சூரரை போற்று பார்த்தேன், மூக்குத்தி அம்மன் பார்க்கவில்லை. (அம்மன் ஸ்ட்ரைட்டனிங் செய்யப்பட்ட முடியோடு இருந்தது) .

    இதில் விட J.பேபி படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு.

    ” தினேஷ் நடிப்பிலும் பெரிய வித்தியாசம் காட்டாமல் ஒரே மாதிரியாக தான் நடிப்பதாக நான் உணர்கிறேன்.”

    சரியாக கூறினீர்கள். ஒரே மாதிரி நடிப்பு மற்றும் உடல்மொழி.

    “நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்..”

    நேரம் கிடைக்கவில்லை என்றாலும், கிடைக்கிற மாதிரி ஏற்பாடு செய்து பார்க்கவும் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here