சில நேரங்களில் குருட்டுத் தைரியம் கூடப் பலருக்குப் பலனளித்துள்ளது, வாய்ப்புகளையும் கொடுத்துள்ளது.Image Credit
நிழல்கள் ரவி
நடிகர் நிழல்கள் ரவி தனது ஆரம்ப கால திரைப்பயணத்தில் கூறிய சில தகவல்கள் சுவாரசியமாகவும், உத்வேகமாகவும் இருந்ததால் இங்கே பகிர்கிறேன்.
பல இடங்களில் வாய்ப்புத்தேடி கிடைக்காமல், பாரதிராஜா படத்தில் ஒரு நடிகருக்குக் குரல் (டப்பிங்) கொடுப்பதாகக் கூட்டத்தில் கூறியிருக்கிறார்.
அப்போது டப்பிங் பற்றி எந்த அனுபவமும், அறிவும் கிடையாது. இருப்பினும் எப்படியாவது வாய்ப்பைப் பெற்று விட வேண்டும் என்று கூறி வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
அதன் பிறகு அவர் டப்பிங் செய்த குரல் வரவில்லையென்றாலும் (மலையாளக் குரலும் தேவை என்பதால்) பாராட்டைப் பெற்று உள்ளார். டப்பிங் வரவில்லையென்றாலும், அடுத்த படமான நிழல்கள் பட வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.
நீச்சல்
நிழல்கள் திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும், ரவிக்கு நல்ல பெயரும், அறிமுகமும் கிடைத்துள்ளது ஆனால், பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மலையாளப் படமொன்றில் நடிக்க வாய்ப்புக்கிடைத்துள்ளது. மலையாளமும், நீச்சலும் இப்படத்துக்கு அவசியம் என்று இயக்குநர் கூறியுள்ளார்.
அங்குள்ளவரை வைத்து ஓரளவு மலையாளத்தைச் சமாளித்துள்ளார்.
நீச்சலுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதற்காகப் பல இடங்களுக்குச் சென்று பழகியும் சரிப்பட்டு வரவில்லை.
நாயகி ரோகிணியை காப்பாற்றும் காட்சி கேரளா Back Water பகுதியில் எடுக்கப்படுவது. எப்படிடா சமாளிப்போம் என்று யோசனையிலிருந்துள்ளார்.
காட்சி எடுக்கும் போது திணறியதால், இயக்குநர் நீச்சல் தெரியுமா தெரியாதா? என்று கேட்டதற்கு ‘சார் 40 அடி ஆழம், Back Water என்பதால், கிறுகிறுப்பாக உள்ளது‘ என்று சமாளித்துள்ளார்.
பின்னர் ஆழம் குறைவான பகுதியில் (6 அடி) எடுத்து, படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்று ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
‘எப்போதுமே எனக்கு தெரியாது என்று கூறவே மாட்டேன், தெரியும் என்று கூறி எப்படியாவது சமாளித்து விடுவேன்‘ என்றார். உண்மையிலேயே வியப்பை அளித்தது.
ஒருவேளை தனக்கு தெரியாது என்று கூறியிருந்தால், திரையுலகில் இடத்தைப் பிடிக்கக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பைத் தவற விட்டு இருக்கலாம்.
நம்பிக்கையா? குருட்டு தைரியமா?
நிழல்கள் ரவி கூறுவது அனைத்து நேரங்களிலும் சரியாக வராது ஆனால், நேரம் நல்லா இருந்தால், வெற்றியாகி விடும், அவருக்கு நேர்ந்தது போல.
சில நேரங்களில் எல்லாமே தெரிந்தால் தான் செய்ய வேண்டும் என்று எண்ணம் இருக்கும். எனக்கும் அப்படியுள்ளது.
தெரியாத செயலை தெரிந்ததாகக் கூறி அசிங்கப்பட வேண்டாம் என்று நினைப்பேன். இதனாலையே பல வாய்ப்புகளை இழந்துள்ளேன்.
நிழல்கள் ரவி கூறிய போது இவை மனதில் வந்து சென்றது 🙂 .
இன்னொன்று உடனடியாகப் பொய் கூறுவது எனக்கு எளிதல்ல. உண்மையைக் கூறுவோம் நடப்பதைப் பார்த்துக்கொள்வோம் என்பது என் எண்ணம்.
நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தயக்கம் இல்லாமல், குதித்து விட வேண்டும் என்பார்கள். உதவிக்கு ஆள் இல்லையென்றால், மேலே வருவதற்குப் பதிலாகக் கீழே போய் விடுவோம்.
எனவே, அனைத்து நேரங்களிலும் தைரியம் பொருந்துவதில்லை ஆனால், சில நேரங்களில் இதுவே சரியான வழியாகவும் உள்ளது.
Resume
அனைவருக்கும் புரியும்படியான எடுத்துக்காட்டாக வேலைக்கு அனுப்பும் Resume யை கூறலாம்.
ஒரு தொழில்நுட்பத்தில் அனுபவம் இல்லையென்றாலும், தெரியும் என்று போட்டு நேர்முகத்தில் எதையாவது கூறித் தப்பித்து விடுவார்கள், சிலர் மாட்டிக்கொள்வர்.
உள்ளே நுழைந்த பிறகு எவரையும் உடனே பணியைச் செய்யச் சொல்ல மாட்டார்கள் குறிப்பாக (Probationary Period) முக்கியமான பணியை நம்பிக்கொடுக்க மாட்டார்கள்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் உடன் பணி புரிபவரிடம் நட்பைப் பிடித்துக் கொஞ்சம் தெரிந்து கொண்டு சமாளிப்பவர்கள் வேகமாக முன்னேறி விடுவார்கள்.
இதில் மாட்டிக்கொள்பவர்களுக்குப் பணி இழப்பு ஏற்படும். மேற்கூறியது போல ஒவ்வொருவர் நேரமும், திறமையும் காரணமாகிறது.
தைரியமா? ஏமாற்றுதலா?
தெரியாத ஒன்றைத் தெரிந்ததாகக் கூறி செல்வது ஒரு வகையில் ஏமாற்றும் செயல் தான் ஆனால், போட்டி மிகுந்த உலகத்தில் இது போன்ற குருட்டு தைரியம் பல நிகழ்வுகளில் உதவும்.
மோசமான நிலைக்கும் கொண்டு செல்லும் வாய்ப்புமுள்ளது.
எல்லோருமே எல்லாமே தெரிந்து கொண்டு தான் ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஏராளமான காலம் வீணாகும்.
எனவே, கிடைத்த வாய்ப்பில் எவ்வளவு விரைவாகக் கற்றுக்கொண்டு, திறமையை நிரூபிக்கிறோமோ அவ்வளவு விரைவாக வாழ்க்கையில் முன்னேற முடியும்.
நிழல்கள் ரவியின் அனுபவம் சுவாரசியமாகவும், உத்வேகத்தைக் கொடுப்பதாகவும் இருந்தது. நாளை இது போன்ற சூழ்நிலையில் இவர் கூறியது நினைவுக்கு வரும்.
உங்களுக்கு இது போன்ற அனுபவங்கள் உள்ளதா? 🙂 .
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. இந்த பதிவை படிக்கும் போது நகைசுவையாகவும் அதே சமயம் என் வாழ்வில் நடந்த சம்பவமும் நினைவுக்கு வருகிறது.. கோவையில் முதன் முதலில் நான் பணி புரிந்த நிறுவனத்தில் நான் சேர்ந்தது ஒரு சோக கதை.. என்னை நேர்காணல் செய்தவர் நிறுவனத்தின் MD (அப்போது எனக்கு தெரியாது) என்னுடைய RESUME இல் பகுதி நேரத்தில் ஒரு சிறு நிறுவனத்தில் வேலை பார்த்ததாக குறிப்பிட்டு இருந்தேன் (காரணம் அந்த வேலைக்கு 1 வருட அனுபவம் அவசியம்) . நான் குறிப்பிட்டு இருந்த நிறுவனம் என் நண்பரின் அண்ணனின் நிறுவனம்.. ஆனால் எனக்கு அதை பற்றி முழுவதும் தெரியாது.. அந்த நிறுவனத்தின் OPERATIONS குறித்து ஓரளவுக்கு கேட்டு தெரிந்து வைத்து இருந்தேன்..
நேர்காணலில் 80% MD அதை குறித்து தான் கேட்டு கொண்டே இருந்தார்.. நானும் ஒன்னுமே தெரியாமலே சமாளித்து கொண்டு வந்தேன்.. ஒரு கட்டத்தில் என்னால் முடியாமல் சார் மன்னித்து விடுங்கள். (வடிவேல் COMMEDY போல் படுத்தே விட்டான் ஐயா) நான் இந்த நிறுவனத்தில் வேலையே செய்ய வில்லை. 1 வருடம் அனுபவம் கேட்டு இருந்ததால் நான் RESUME இல் குறிப்பிட்டு இருந்தேன்..பிரெஷ் ஷாக கல்லுரி முடித்து விட்டு வரும் போது எல்லா இடத்திலும் அனுபவத்தை கேட்டால் நான் என்ன செய்வது? என்று திருப்பி கேட்டேன்.
அவர் சிரித்து கொண்டே அதற்காக பொய் சொல்வது தவறு தானே என்றார். நான் ஒன்றும் கூறாமல், சரி உன்னை தேர்வு செய்தால் கடலூரில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருவாயா? என்றார். கோவைக்கு செல்ல கூடாது என்ற கோட்பாடு இருந்தால் நேர்காணலுக்கே வந்து இருக்க மாட்டேன் அல்லவா? என்றேன். பின்பு சகஜ மனநிலைக்கு வந்த பின், ஏன் கோவையில் பணி மீது ஆர்வம் என்றார்? நான் கல்லுரி படிக்கும் போதே ஒரு உற்பத்தி நிறுவனத்தில் மட்டும் தான் ஆரம்ப வேலையை துவக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை சொன்னேன்.. பின்பு இடையில் சொந்த ஊரில் கிடைத்த வங்கி பணியையும், AIRTEL REP பணியை பற்றியும் கூறினேன்.. என்னுடைய இலக்கு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் மட்டுமே..
பின்பு இருவரும் அது குறித்து விரிவாக பேசினோம்.. என்னை பொறுத்தவரை வேலை கிடைக்காது என்ற மன நிலைக்கு எப்போதோ வந்து விட்டேன்.. ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்பு பணிக்காக உத்தரவு கடிதம் வந்தது.. என்னை ஏன் தேர்வு செய்தார்?? என்று தற்போது வரை விடை தெரியாத கேள்வி.. இந்த நிகழ்வை எப்போதும் எண்ணி பார்ப்பதுண்டு..
இந்த பணியின் மூலம் தான் சக்தியின் இனிமையான நட்பு கிடைத்தது.. வாழ்க்கையில் எந்த நிலையிலும் மறக்க முடியாத பல நிகழ்வுகள் இங்கு தான் நடந்தது.. 1 வருடம் 10 மாதம் மட்டுமே பணியில் இருந்தேன்.. ஆனால் என் மரணம் வரை எந்த நினைவுகள் பொக்கிஷமாக நெஞ்சில் புதைத்து வைத்து இருப்பேன்.. சக்தியுடன் பேசும் போது அடிக்கடி இருவரும் இதை குறித்தும் பேசுவதுண்டு.. என்னை விட அவருக்கு நினைவாற்றல் கொஞ்சம் அதிகம்..பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“கல்லுரி படிக்கும் போதே ஒரு உற்பத்தி நிறுவனத்தில் மட்டும் தான் ஆரம்ப வேலையை துவக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை சொன்னேன்..”
எதனால் உங்களுக்கு உற்பத்தி நிறுவனத்தில் பணி புரிய ஆர்வம் வந்தது?
“இந்த பணியின் மூலம் தான் சக்தியின் இனிமையான நட்பு கிடைத்தது.. வாழ்க்கையில் எந்த நிலையிலும் மறக்க முடியாத பல நிகழ்வுகள் இங்கு தான் நடந்தது.. 1 வருடம் 10 மாதம் மட்டுமே பணியில் இருந்தேன்”
தோராயமாக இரண்டு வருடம் உடன் பணி புரிந்து வாழ்க்கை நண்பராக ஆனது பெரிய விஷயம் தான் 🙂 .