இந்தியாவில் 2016 ல் நடந்த பணமதிப்பிழப்பு சம்பந்தேமே இல்லாத பாகிஸ்தானை சீரழித்து விட்டதைக் கேட்க வியப்பாக இருக்கும் ஆனால், உண்மை. Image Credit
பணமதிப்பிழப்பு
இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்க 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணிக்கு ₹1000, ₹500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
தினமும் காஷ்மீரில் நடந்து கொண்டு இருந்த கல் வீச்சுச் சம்பவங்கள் மோடி அறிவித்த பிறகு டக்கென்று நின்று விட்டது.
என்ன காரணம்?
காஷ்மீரில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த அங்குள்ள இளைஞர்கள், இளைஞிகளுக்குப் பாக் தீவிரவாதிகள் மூலமாகப் பணம் கொடுக்கப்பட்டுக் கல்லெறி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
இதனால், தினமும் நடைபெறும் சம்பவங்களைச் சமாளிக்க முடியாமல், இராணுவமே திணறிக்கொண்டு இருந்தது.
கல் வீசுபவர்களைப் பிடித்து அறிவுரை வழங்கி விடுவித்தாலும், இந்நிகழ்வு நிற்கவில்லை ஆனால், பணமதிப்பிழப்பு நடந்த பிறகு முற்றிலும் நின்றது.
காரணம், பாக் அரசு இந்திய ரூபாய்களைக் கள்ள நோட்டாக அச்சடித்துத் தீவிரவாதிகள் மூலமாக விநியோகித்துக் கல்வீச்சுச் சம்பவங்களை நடத்தி வந்தது.
பணமதிப்பிழப்பு நடந்து, ஏற்கனவே இருந்த பணம் பயனற்றதாகிப் போனதால், அவர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை. எனவே, பணம் வராததால், யாரும் கல்வீச்சுச் சம்பவங்களில் ஈடுபடவில்லை.
பண மதிப்பிழப்பால் கல்லெறி சம்பவம் நின்றதுக்கு ஒரு முஸ்லீம் பெரியவர் மோடிக்கு நன்றி தெரிவித்த நிகழ்வு பலருக்கு நினைவு இருக்கலாம்.
வீழ்ந்த பொருளாதாரம்
இந்திய ரூபாயின் தாக்கம் எந்த அளவுக்குப் பாகிஸ்தானில் இருந்துள்ளது என்பதை அறிந்தால், வியப்பாக இருக்கும்.
பணமதிப்பிழப்புக்குப் பிறகு பாகிஸ்தானின் பண மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதை எவரும் கூகுளில் சென்று சோதித்துப் பார்க்கலாம்.
இதைத்தொடர்ந்து கொரோனாவும் சேர்ந்து பாகிஸ்தான் பொருளாதாரத்தை முற்றிலும் சிதைத்துக் கடனாளி நாடாக்கி விட்டது.
பண வீக்கம்
உற்பத்தி குறைவு, சீனாவிடம் வாங்கிய கடன், ஊழல், நிதி கை இருப்புக் கரைந்தது உட்படப் பல்வேறு காரணங்களால் பொருளாதாரம் மிக மோசமாகி வருகிறது.
தற்போது (2023 செப்டம்பர்) பெட்ரோல் கட்டணம் பாக் ரூபாய் 300 தாண்டிச் சென்று கொண்டுள்ளது.
பல நிறுவனங்கள் பாக்கை விட்டு வெளியேறி வருகின்றன. விமானத்துக்குப் பெட்ரோல் போடவே பணம் இல்லாமல் பாக் அரசு திணறி வருகிறது.
பணவீக்கம், மோசமான பொருளாதாரம் காரணமாக, பொதுமக்கள் பலர் வழக்கம் போல ஐரோப்பா நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
அரபு நாடுகளின் நெருக்கமும் குறைந்து விட்டது, அரபு நாடுகள் இந்திய நட்பை வளர்த்து வருகின்றன.
பாகிஸ்தானுக்கு உதவியாக அவ்வப்போது இருப்பது துருக்கி மட்டுமே! துருக்கியும் அரசியல் ரீதியாக மட்டுமே உதவுகிறது, நிதி அளவில் அல்ல.
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விஷயத்தில் அரபு நாடுகள் கை விட்ட நிலையில், பாக்குக்கு ஆதரவு கொடுத்து வருவது துருக்கி மட்டுமே.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
2019 ல் Article 370 ரத்தால், காஷ்மீர் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
உட்கட்டமைப்புகள், சாலைகள், மேம்பாலங்கள் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைக் விளக்கமாக தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்.
தீவிரவாதத்தால் இழந்த சுற்றுலா வருமானத்தைப் பொதுமக்கள் திரும்பப் பெற்று வருகிறார்கள். சுற்றுலா வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால், பாக் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் நிலைமை தலைகீழாக உள்ளது. மக்கள் அடிப்படை வசதிக்கே திண்டாடி வருகிறார்கள்.
சன்னி பிரிவு பெரும்பான்மை உள்ள நாடு பாக் ஆனால், பாக் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் ஷியா பிரிவு மக்கள் அதிகம்.
எனவே, பாக் அரசு அங்கே சன்னி பிரிவு மக்களைக் குடியமர்த்திப் பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக, அங்குள்ள பாக் மக்கள் தங்களை இந்தியாவுடன் இணைக்கக் குரல் எழுப்பியும், போராட்டம் செய்தும் வருகிறார்கள்.
உள்நாட்டு கலவரம்
தீவிரவாதத்தால் இந்தியாவை நெருக்கடிக்கு ஆளாக்கி வந்த பாகிஸ்தானுக்குப் பொருளாதாரம் வீழ்ந்ததால், அவர்கள் வளர்த்த தீவிரவாதமே எமனாகியுள்ளது.
பாக்கிலிருந்து தங்களைப் பிரித்துத் தரக்கோரி பலுசிஸ்தான் போராடி வருகிறது. இதையொட்டி சண்டைகள், தற்கொலை படை தாக்குதல்கள் நடைபெறுகிறது.
அவ்வப்போது பாக் இராணுவ முகாம், வாகனம், காவல்துறை அலுவலகத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றுத் தொடர்ச்சியாகப் பலர் இறந்து வருகிறார்கள்.
இவற்றை விட மிகப்பெரிய தலைவலியாகப் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் மாறி வருகிறார்கள்.
பாக் மசூதியில் குண்டு வெடித்து 100 பேர் இறந்தது பெரிய சம்பவமானது.
கர்மா
தான் வளர்த்த கடா தன் மார்பிலே பாய்வது போல, தான் வளர்த்த தீவிரவாதம் பாக் மீதே நடந்து வருகிறது.
இதற்கிடையில் தீவிரவாத தலைவர்கள் பாக்கிலும், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருகிறார்கள். எப்படி நடக்கிறது? என்பது புரியாமல் பாக் தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளது.
முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி கூறியது போல, கத்தியின்றி ரத்தமின்றி நமக்குப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கிடைத்து விடும்.
1947 முதல் தீவிரவாதத்தைத் தூண்டி இந்தியாக்குத் தலைவலியாக இருந்து வந்த பாகிஸ்தான், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
தீவிரவாதத்தை ஆதரித்தால், அதுவே நமக்கு ஆபத்தாக முடியும் என்பதற்கு பாகிஸ்தான் எடுத்துக்காட்டு. அடுத்த எடுத்துக்காட்டாக கனடா மாறி வருகிறது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இந்த கட்டுரையில் நீங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டி இருப்பது 100% சரியா? என்று என்னால் உறுதியாக ஏற்று கொள்ள முடியவில்லை.. காரணம் நான் நேரிடையாக சில பாகிஸ்தான் நண்பர்களுடன் பழகி இருக்கிறேன்.. என் வயது ஒத்தவர்களும் உண்டு.. 50/55 வயது உடையவர்களும் உண்டு.. சில சமயம் அரசியில், கிரிக்கெட், பொருளாதாரம் என சில விஷியங்களை விவாதிப்பதுண்டு..
வீழ்ந்த பொருளாதாரம் : இந்த பணமிழப்பு நடவடிக்கையால் தான் பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை என்னால் ஏற்று கொள்ளமுடியாது.. காரணம் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் ஊழலில் நம் அரசியல்வாதிகளை விட பல மடங்கு திறன் பெற்றவர்கள் (விஜய் சொல்வது போல் : நம்ம அரசியல்வாதிகள் படித்த ஸ்கூலில் அவர்கள் எல்லோரும் ஹெட் மாஸ்டர்கள்).
கட்டுக் கடங்காத பல தீர்க்கவே முடியாத உள்நாட்டு பிரச்சனைகள் பாகிஸ்தானில் பல உண்டு. அங்கு இருக்கும் மாகாணங்களுக்குள் பல ஆண்டுகளாக பிரச்சனைகளை இருந்து கொண்டிருக்கிறது. மொழி, இனம், பொருளாதாரம் வாரியாக தீர்க்கவே முடியாத சிக்கல்கள் 2016 க்கு முன்பிலிருந்தே உண்டு. ஐரோப்பா நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருவது 20/30 வருடமாக தொடர்ந்து வருகிறது. என் பார்வையில் சரியான கல்வியறிவு இல்லாதது முதன்மை காரணம்.
பண வீக்கம் : உற்பத்தி குறைவு, சீனாவிடம் வாங்கிய கடன், ஊழல், நிதி கை இருப்புக் கரைந்தது உட்படப் பல்வேறு காரணங்களால் பொருளாதாரம் மிக மோசமாகி வருகிறது. உண்மை. ஏற்றுக்கொள்கிறேன் கிரி. அரபு நாடுகளை பொறுத்தமட்டில் பாகிஸ்தான்க்கு துருக்கியை தவிர மற்ற நாடுகளும் உதவி புரிந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரமே தற்போது மந்தமாக தான் சென்று கொண்டிருக்கிறது.. இந்த சூழலில் முன்பை போல உதவிகள் பெறுவது எளிதானதல்ல.
கர்மா : ஏற்று கொள்கிறேன் கிரி.. பாகிஸ்தான் புரியும் தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன்.. சொந்த நாட்டு மக்களையே தன் சுயநலத்துக்காக யார் கொன்றாலும் குற்றம் குற்றமே.. ஆனால் நம் நாட்டில் நடக்கும் சம்மதமே இல்லாத எல்லா நிகழ்வுகளுக்கும் பாகிஸ்தானை காரணம் காட்டி இங்கு அரசியல் புரிவது சரியான ஒன்று அல்ல கிரி.
@யாசின்
“நான் நேரிடையாக சில பாகிஸ்தான் நண்பர்களுடன் பழகி இருக்கிறேன்.. என் வயது ஒத்தவர்களும் உண்டு.. 50/55 வயது உடையவர்களும் உண்டு.. சில சமயம் அரசியில், கிரிக்கெட், பொருளாதாரம் என சில விஷியங்களை விவாதிப்பதுண்டு.”
யாசின் நீங்க கல்ஃப்பில் இருப்பதால், நிச்சயம் இவர்களுடனான விவாதம், தகவல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
“இந்த பணமிழப்பு நடவடிக்கையால் தான் பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை என்னால் ஏற்று கொள்ளமுடியாது..”
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து, பார்வை இருக்கும் என்பதால், உங்கள் கருத்தை மதிக்கிறேன்.
ஆனால், நான் கூறியது அதிகாரப்பூர்வ தகவலை வைத்தே. அதோடு எனக்கு ஜியோ பாலிடிக்ஸ் தொடர்பாக ஆர்வம் உள்ளதால், இது தொடர்பான செய்திகளை, கட்டுரைகளை அதிகம் படிக்கிறேன்.
மேற்குறிப்பிட்ட இந்திய நாணய மதிப்பில் நீங்கள் கவனித்தீர்கள் என்றால், சரியாக 2016 க்கு பிறகே வீழ்ச்சி துவங்கி இருக்கும். நீங்களும் பரிசோதித்துப் பார்க்கலாம்.
அதாவது, பணமதிப்பிழப்புக்கு பிறகு.
காஷ்மீர் கல்வீச்சு சம்பவம் 2016 நவம்பர் 9 முதல் நின்றது, இன்றுவரை தொடரவில்லை. காரணம், பணமதிப்பிழப்பு.
நான் கூறியது தவறு என்றால், உங்களுக்கு தெரிந்த காரணங்களைக் கூறலாம், எதனால் கல்வீச்சு சம்பவம் நின்றது என்று நானும் தெரிந்து கொள்கிறேன்.
கட்டுரையில் கூறியுள்ளபடி பணமதிப்பிழப்போடு கொரோனாவும் ஒரு காரணம், அதோடு அங்கே நடந்த வெள்ள சேதம். இதுவும் பெரிய அழிவு.
இவை தொடர்ச்சியாக நடந்தது அதாவது 2016 நவம்பர் முதல்.
பாகிஸ்தான் ஊழல் அனைவரும் அறிந்தது ஆனால், பொருளாதாரம் வீழ்ந்தது இதன் பிறகே.
“அரபு நாடுகளை பொறுத்தமட்டில் பாகிஸ்தான்க்கு துருக்கியை தவிர மற்ற நாடுகளும் உதவி புரிந்து கொண்டு தான் வருகிறது.”
உண்மை தான் ஆனால், முன்பு போல இல்லை, மாற்றங்கள் துவங்கி விட்டன.
“தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரமே தற்போது மந்தமாக தான் சென்று கொண்டிருக்கிறது.. இந்த சூழலில் முன்பை போல உதவிகள் பெறுவது எளிதானதல்ல.”
உதவி செய்ய முடியாத அளவுக்கு அவர்களுக்கு நெருக்கடி இல்லை ஆனால், அவர்களுக்கு செய்ய விருப்பம் இல்லை.
காரணம், பெறும் உதவியை பாகிஸ்தான் பொறுப்பற்ற தனமாக செலவு செய்து கொண்டு இருப்பதால்.
“நம் நாட்டில் நடக்கும் சம்மதமே இல்லாத எல்லா நிகழ்வுகளுக்கும் பாகிஸ்தானை காரணம் காட்டி இங்கு அரசியல் புரிவது சரியான ஒன்று அல்ல”
பாகிஸ்தானை தீவிரவாதத்துக்கு மட்டுமே காரணம் காட்டுகிறார்கள், வேறு எதற்கும் காரணம் காட்டுவது போல நான் பார்க்கவில்லை.
அந்த நிலையில் பாகிஸ்தானும் இல்லை. பாகிஸ்தான் செத்த பாம்பு போல ஆகி விட்டது, அதை அடிப்பதில் பயன் இருப்பதாகத் தோன்றவில்லை.
அப்படி இருந்தால், குறிப்பிட்டு கூறினால், என்னவென்று தெரிந்து கொள்வேன்.
என் கருத்து சரியோ தவறோ ஆனால், மாற்று கருத்து என்னவென்பதை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு.
ஏற்புடையதாக இருந்தால், என் புரிதலை சரி செய்து கொள்வேன்.