பாராளுமன்றத்தேர்தல் 2024 முடிவுகள் இடது சாரியினருக்கு மகிழ்ச்சியையும், பாஜகவினருக்கு மகிழ்ச்சி கலந்த ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. Image Credit
99 இடங்கள் பெற்ற காங்கிரஸ் கொண்டாட்டமாகவும், 240 இடங்கள் பெற்ற பாஜக சோகமாகவும் இருந்தது 🙂 .
முடிவுகள்
400 என்று பாஜக கூறினாலும், பெரும்பான்மையானோர் பாஜக 350+ உறுதியாகப்பெறும் என்றே நம்பினார்கள், எதிர்க்கட்சிகள் உட்பட.
ஆனால், முடிவு தனிப்பெரும்பான்மை வராததோடு 300 இடங்களையே தாண்டவில்லை என்பதே பாஜகவினரின் சோகத்துக்குக் காரணம்.
குறைந்தபட்சம் தனிப்பெரும்பான்மை பெற்று இருந்தால் கூடப் பெரியளவில் ஏமாற்றமாகி இருக்காது.
ஆட்சியைப் பெற்றும் இந்த ஏமாற்றம் ஏற்படக்காரணம், கடந்த ஆட்சிகள் போலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் போகலாம் என்ற எண்ணமே.
எடுத்துக்காட்டுக்கு, UCC, NRC செயல்படுத்த வேண்டும் என்றால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை ஆனால், அவர்கள் கொடுக்கத் தயங்குவார்கள்.
காரணம், ஆதரவு கொடுத்தால், தங்கள் அரசுக்கு முஸ்லீம் மக்களிடம் எதிர்ப்பு வரலாம் என்று நினைப்பார்கள். இதுவொரு நியாயமான காரணமே!
ஆனால், நிதிஷ் ஆதரவு கொடுப்போம் என்கிறார் ஆனால், இவரை நம்ப முடியாது.
மோடியின் பேச்சைப் பார்த்தால் எதோ ஒரு முடிவுடன் இருப்பதாகவே தோன்றியது. அதாவது என்ன வந்தாலும் பார்த்துக்கலாம் என்ற தொனி.
மத்திய அமைச்சரவையிலும் முக்கிய இலாக்காக்களை பாஜகவே வைத்து, தன் ஆளுமையை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது.
இனி தமிழக பாஜக, தேசிய பாஜக பற்றிப் பார்ப்போம். எனக்குத் தோன்றியதை, படித்த தகவல்களை வைத்து எழுதுகிறேன்.
தமிழக பாஜக
தமிழக தேர்தலில் நான் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. எதிர்பார்த்த அண்ணாமலை உட்பட ஒரு பாஜகவினர் கூட வெற்றி பெறவில்லை. எதிர்பார்த்த 15% பாஜக வாக்கு சதவீதமும் வரவில்லை.
மேற்கூறியவை பல்வேறு கருத்துக்கணிப்புகள், பலரின் பேட்டிகள், மக்களின் கருத்து ஆகியவற்றை வைத்து நான் எதிர்பார்த்தது.
ஒருவகையில் ஏமாற்றமாக இருந்தாலும், கணிப்புக்கும் நிதர்சனத்துக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள கிடைத்த அனுபவமாகவே எடுத்துக்கொள்கிறேன்.
காரணம்
பாஜக வாக்கு சதவீதம் கூடியிருந்தாலும், மக்கள் மிகப்பெரிய அளவில் திமுக கூட்டணிக்கு வாக்கு அளித்து இருப்பது பெரிய ஏமாற்றமாக உள்ளது.
காரணம், திமுக மீது ஏராளமான புகார்கள் உள்ளன ஆனாலும், வாக்களிக்கிறார்கள் என்றால் என்னவென்று சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.
பணம் வாங்கிக்கொண்டு மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் ஒரு காரணம் ஆனால், அதுவே காரணம் அல்ல.
சென்னையில் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் வாக்களிக்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? முன்பொரு கட்டுரையில் கூறியதை போலத் திமுக ஆதரவை மாற்றி வாக்குகளைப் பெறுவது எளிதல்ல.
அதிமுக பாஜக கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணியிருந்தால், திமுக இவ்வளவு அதிகமாக வெற்றி பெற்று இருக்காது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காரணம், திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 47%. அதிமுக பாஜக சேர்த்தே வாங்கி இருந்தாலும், 13 தொகுதிகளே வருகிறது.
கூட்டணியாக இருக்கும் போது அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு மாறுவதில்லை. எனவே, இந்த 13 என்பது கூட 8 – 10 என்று மாறியிருக்கலாம்.
தற்போது தனித்துப் போட்டியிட்டு பாஜக வாங்கிய வாக்குகள் அதிமுக கூட்டணியாக இருந்த போது பெற்றதை விட அதிகம். அப்படியென்றால் கூட்டணியாக இருந்த போது அதிமுக வாக்குகள் யாருக்குச் சென்றது?
ஒருவேளை கூட்டணியிலிருந்தால், எங்கள் தோல்விக்குப் பாஜக தான் காரணம் என்று அதிமுக வழக்கம் போல புகார் கூறும். இது தான் நடந்து இருக்கும்.
ஒடிஷா எடுத்துக்காட்டு
எனவே, தோற்றாலும் அண்ணாமலை கூறிய ஒடிஷா எடுத்துக்காட்டை நினைவு கூறலாம். கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இன்று ஆட்சியைப் பிடித்துள்ளார்கள்.
அதிமுக கூட்டணியில் இருந்தால், கடைசி வரை பாஜக வளர முடியாது.
கொடுக்கும் 5 தொகுதிகளும் வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளாக இருக்கும். அதே தோற்றால், பாஜக மட்டுமே காரணம் என்பார்கள். இது காலகாலத்துக்கும் தொடரும்.
சுருக்கமாக, தற்காலிக வெற்றிக்குப் பாஜக ஆசைப்பட்டால், கட்சி வளராமல், இன்னொரு காங்கிரஸ் கட்சியாகவே தமிழகத்தில் தொடரும்.
தற்போது பல இடங்களில் அதிமுகவுக்குச் சமமாகவும், சில இடங்களில் கூடுதலாகவும் பாஜக வாக்குகளைப் பெற்றுள்ளது. 81 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது இரண்டாம் இடத்துக்கு முன்னேறுவதை உணர்த்துகிறது.
கொங்கு, தென், சென்னை மாவட்டங்களில் பாஜக வளர்ந்துள்ளது.
சுருக்கமாக முடித்து விட நினைத்தேன் ஆனால், ஏராளமான தகவல்களைப் படித்ததால், அவை தொடர்பான கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனவே, மேலும் சில கட்டுரைகள் தொடரும். ஆர்வம் இருப்பவர்கள் தொடரலாம்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
தேர்தல் என்பதே புரியாத புதிர் தான் கிரி.. 90 காலகட்டம் தொடக்கம் முதல் செய்தித்தாள்களை வாசித்து வந்ததால் ஓரளவுக்கு அரசியல் அறிவு உண்டு. அரசியல் விருப்பமான ஒன்றும் கூட.. ஆனால் பல தேர்தல்களில் மக்களின் எண்ண ஓட்டத்தை முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை..
96 சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா தோற்ற பிறகு அவரது அரசியல் வரலாறு முற்றிலும் முடித்து விட்டது என்றே கருதினர்.. ஆனால் மீண்டும் 2001 இல் ஒரு வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.. இந்த நிகழ்வை நான் அடிக்கடி எண்ணி பார்ப்பதுண்டு. காரணம் அந்த சமயம் திமுக ஓரளவுக்கு சரியாக தான் ஆட்சி செய்தார்கள்.. எதிர்க்கட்சி என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் அதிமுக இருந்தது..
இந்த பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நிச்சயம் எல்லோருக்கும் சற்று அதிர்ச்சியாக தான் இருக்கும்.. காரணம் காங்கிரஸ் அந்த அளவிற்கு வலுவில்லாத எதிர்க்கட்சியாக தான் இருந்தது.. அவர்களின் கூட்டணியிலும் பல குழப்பம் இருந்தது.. எல்லாவற்றிக்கும் மேல் பிஜேபி தங்களின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின் மீது அபரிதானமான நம்பிக்கை வைத்து இருந்தனர்.. ஆனால் மக்களின் எண்ண ஓட்டம் வேறு மாதிரி இருந்துள்ளது..
உண்மையில் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.. கடந்த இரு முறையும் பெரும்பான்மை கிடைத்ததால் பிஜேபி எந்த தடையும் இல்லாமல் ஆட்சியை புரிய முடிந்தது.. தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் நிச்சயம் இந்த ஐந்து வருடம் கத்தி மேல் நடப்பது போல் தான்.. அதனால் மிகுந்த கவனத்துடன் ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம் வர கூடிய நிகழ்வுகளை…
திமுக மீது ஏராளமான புகார்கள் உள்ளன ஆனாலும், வாக்களிக்கிறார்கள் என்றால் என்னவென்று சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.
அந்தப் புகார்கள் எல்லாம் பெரிதல்ல என்று எண்ணம் அளவிற்கு பிஜேபி என் மீது உள்ள எதிர்மறை எண்ணம்.
@யாசின்
“தேர்தல் என்பதே புரியாத புதிர் தான் கிரி”
உண்மை. கணிப்பது கடினமே. வெகு சில நேரங்களில் மட்டுமே மக்களின் எண்ணவோட்டம் புரிகிறது.
“மீண்டும் 2001 இல் ஒரு வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்..”
2006 ம் ஆண்டும் ஆட்சியை பிடித்து இருப்பார் ஆனால், கலைஞர் இலவச தொலைக்காட்சி அறிவிப்பு ஜெ ஆட்சியை கவிழ்த்து கலைஞருக்கு மைனாரிட்டி ஆட்சியை கொடுத்தது.
இதை கடைசி வரை மைனாரிட்டி திமுக என்றே ஜெ கூறி வந்தார்.
“தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் நிச்சயம் இந்த ஐந்து வருடம் கத்தி மேல் நடப்பது போல் தான்.. அதனால் மிகுந்த கவனத்துடன் ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.”
இதை சமாளிப்பார்கள் என்றே கருதுகிறேன். மத்திய அமைச்சரவை இலாகாவில் கூட முக்கிய அமைச்சரவையை பாஜக வைத்துக்கொண்டுள்ளது.
கூட்டணி கட்சிகளிடம் இந்த முக்கிய இலாகா கிடைத்தால் மிகப்பெரிய ஊழலை செய்து விடுவார்கள்.
@டெமோ
“அந்தப் புகார்கள் எல்லாம் பெரிதல்ல என்று எண்ணம் அளவிற்கு பிஜேபி என் மீது உள்ள எதிர்மறை எண்ணம்.”
அதிமுகவுக்கு வாக்களிக்கலாமே!
வணக்கம் கிரி. கடந்த சில மாதங்களாக அரசியல் என்னும் சிலந்தி வலையில் சிக்கி திழைத்து கொண்டு இருந்தேன். தேர்தல் முடிவுக்கு பின் ஓரளவு தெளிவடைந்து , எனக்கொரு ஒரு பார்வையை உருவாக்கி கொண்டேன். இனிமேலும் அதிக நேர விரயம் அரசியலில் செய்ய கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இது விரக்தியில் இல்லை. உள்ளுணர்வால் அடைந்த இடம் என்றே கருதுகிறேன்.
4 கட்டுரைகளையும் வாசித்தேன். பெரும்பாலான தேசிய விரும்பிகள் eco chamber ல் இருந்தனர். அதில் நீங்களும் ஒருவர் என்று தெரிகிறது. நானும் கூட.
முடிந்தவரை என்னுடைய கருத்தை சுருக்கி கீழே கொடுத்து உள்ளேன்.
திமுக வெற்றிக்கு காரணங்கள்:
1.கூட்டணி பலம்.
2.அவர்கள் அமல் படுத்திய சமூக நல திட்டங்கள் – இலவச பேருந்து, பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் , பள்ளியில் இலவச காலை உணவு, etc
3.ஊடக பலம் – மோடி எதிர்ப்பு, போலி வாக்குறுதிகள்
4.சிறுபான்மையினரின் அச்ச உணர்வு (மோடி அரசியலமைப்பு சட்டத்தை நீக்குவார், ஆடு கோழி வெட்ட விட மாட்டார் , மசூதிகளை இடிப்பார் etc
5.ஓட்டுக்கு பணம்
6.திமுக வின் தொண்டர் பலம்
7. எடுபடாத எடப்பாடி பழனிசாமியின் அவர்களின் தேர்தல் பரப்புரை.
8.ஸ்டாலின் மேல் கட்டப்பட்ட பிம்பத்தினால் பொது மற்றும் அதிமுக ஓட்டுகள்
பிஜேபி:
நான் பிஜேபி தனித்து 9% வாங்குவார்கள் என்று நினைத்தேன். 11.20% வாங்கினார்கள், கூட்டணியாக 18 சதவீதம். ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. அண்ணாமலை அவர்களின் தோல்வி சறுக்கலே. அவர் மேல் கட்டப்பட்ட பிம்பம் ஒரளவு உடைக்க பட்டது. மோடி மற்றும் மற்ற தலைவர்கள் அண்ணாமலை அவர்களை கொஞ்சம் மிகை படுத்திவிட்டார்கள். செய்தி சேனல்களில் அண்ணாமலை வருங்கால பிரதமர் என்ற விவாதங்கள். நானே இவர்கள் ஊடங்கங்களின் வலிமையால் இந்த கருத்தை நம் மூளையில் திணிக்கிறார்கள் என்று நினைத்தேன். அவரால் மாற்றம் நிகழும் , அதிவிரைவு மாற்றம் கொஞ்சம் கடினம் தமிழ்நாட்டில். மோடியின் மேல் வெறுப்பு இல்லாதவர்கள் , அவர் நல்லவர் என்ற எண்ணம் உள்ளவர்கள் கூட dmk மற்றும் aiadmk க்கு வாக்கு செலுத்தினார்கள். கேட்டால் அவர்களின் குறைகளை தீர்க்க அப்பகுதியில் பிஜேபி தலைவர்கள் வலிமையாக இல்லை . பெரும்பான்மை சாதியின் பிரதிநிதியாக பிஜேபி கட்சியில் அங்கே இல்லை என்ற காரணமும்தான்.
மோடி:
2019-24 விட 2014-19 இல் அவர் செய்த நல திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வந்தது. 2019-24 ஆட்சியின் வீரியம் குறைவு. கொரோனா காரணமாக இருக்கலாம்.
அவர் இந்து மதத்தை போற்றுபவர் என்று அனைவரும் அறிந்ததே. கடந்த இரண்டு வருடமாக அவர் செய்த கோவில் தரிசனங்கள் ஒருவகை சலிப்பை தான் எனக்கு தந்தது.
தேர்தல் பரப்புரையில் வெறுப்பு பேச்சை குறைத்து இருக்கலாம்.
சாதிகளுக்கு பிரதிநித்துவம் செய்தது போல , இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதத்தை சேர்ந்த தலைவர்களை கட்சியிலும் ஆட்சியிலும் ஊக்க படுத்தியிருக்கலாம்(அவர்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் )
இந்த தேர்தல் முடிவுகள் கலவையாக இருந்தாலும் , மக்கள் நிஜ எஜமானர்கள் என்று நிரூபித்து இருக்கிறார்கள் . இந்திய மக்கள் ஜனநாயகத்தை எப்பொழுதும் நிலைநிறுத்துவார்கள் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறோம்.
மோடி அவருக்கு கொஞ்சம் பின்னடைவு தான். காலத்தின் தேவையும் கூட. தவறுகளை சரி செய்து கொண்டு பிஜேபி அடுத்த முறை பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கிறேன்.
@மணிகண்டன்
“கடந்த சில மாதங்களாக அரசியல் என்னும் சிலந்தி வலையில் சிக்கி திழைத்து கொண்டு இருந்தேன். தேர்தல் முடிவுக்கு பின் ஓரளவு தெளிவடைந்து , எனக்கொரு ஒரு பார்வையை உருவாக்கி கொண்டேன். இனிமேலும் அதிக நேர விரயம் அரசியலில் செய்ய கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இது விரக்தியில் இல்லை. உள்ளுணர்வால் அடைந்த இடம் என்றே கருதுகிறேன்.”
சரியான முடிவு.
“ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. அண்ணாமலை அவர்களின் தோல்வி சறுக்கலே. அவர் மேல் கட்டப்பட்ட பிம்பம் ஒரளவு உடைக்க பட்டது. மோடி மற்றும் மற்ற தலைவர்கள் அண்ணாமலை அவர்களை கொஞ்சம் மிகை படுத்திவிட்டார்கள்.”
பிம்பம் என்று கூற முடியவில்லை மாறாக எதிர்பார்ப்பு என்று கூறலாம்.
மோடிக்கோ மற்ற தலைவர்களுக்கோ வேறு வாய்ப்புகள் இல்லையே. இருப்பதில் அண்ணாமலை சிறந்தவராக உள்ளார்.
அண்ணாமலை வெற்றி பெற வில்லை என்றாலும், அவரைத் தவிர தற்போதைக்கு வேறு யார் உள்ளார்கள் என்று நீங்களே கூறுங்களேன்!
முடியாது. எனவே, இதுவொரு சூழ்நிலையே தவிர மிகைப்படுத்தி விட்டதாக கூற முடியவில்லை. அதீத எதிர்பார்ப்பு மட்டுமே.
“மோடியின் மேல் வெறுப்பு இல்லாதவர்கள் , அவர் நல்லவர் என்ற எண்ணம் உள்ளவர்கள் கூட dmk மற்றும் aiadmk க்கு வாக்கு செலுத்தினார்கள். கேட்டால் அவர்களின் குறைகளை தீர்க்க அப்பகுதியில் பிஜேபி தலைவர்கள் வலிமையாக இல்லை”
தமிழக பாஜக தற்போது தான் வளர்ந்து வருகிறது. இதற்கு முன் தலைவர்களே மிகக்குறைவு. இருந்தவர்களும் பழையவர்கள் மட்டுமே!
அண்ணாமலை வந்த பிறகே இது பற்றியே பேச்சே வந்துள்ளது. இல்லையென்றால், பாஜக விவாதத்திக்குள்ளாகி இருக்காது என்பதே உண்மை.
இதுவே அண்ணாமலையின் பலம். எனவே தான் கூறினேன் அண்ணாமலை மிகப்படுத்தப்பட்டவரல்ல, எதிர்பார்ப்பை கொடுத்தவர் என்று.
இதுவரை இப்படியொரு எதிர்பார்ப்பை எந்த பாஜக தலைவரும் கொடுக்கவில்லை.
அதே போல தனியாக இவ்வளவு இடங்களில் நிற்கவும் இல்லை. இதெல்லாம் அண்ணாமலையாலே சாத்தியமானது.
பழைய பாஜகவாக இருந்தால், அதிமுக கூட கூட்டணி வைத்து அவர்கள் தந்த இடங்களில் போட்டியிட்டு முடிந்து இருக்கும். பாஜக பற்றி எவருமே விவாதித்து இருக்க மாட்டார்கள்.
பாஜக பற்றி திமுக கவலையே பட்டு இருக்காது, கண்டுகொள்ளாமல் புறக்கணித்து இருப்பார்கள்.
“பெரும்பான்மை சாதியின் பிரதிநிதியாக பிஜேபி கட்சியில் அங்கே இல்லை என்ற காரணமும்தான்.”
நியாயமான காரணம். எதிர்காலங்களில் அடையாளம் காணப்படுவார்கள்.
“கடந்த இரண்டு வருடமாக அவர் செய்த கோவில் தரிசனங்கள் ஒருவகை சலிப்பை தான் எனக்கு தந்தது.
தேர்தல் பரப்புரையில் வெறுப்பு பேச்சை குறைத்து இருக்கலாம்.”
கோவில் சென்றது எனக்கு சலிப்பை தரவில்லை ஆனால், வெறுப்பு பேச்சைக் குறைத்து இருக்கலாம் என்பது உண்மையே.
இதற்கு ராகுலின் பேச்சே காரணம். ராகுல் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருக்கும் போது மோடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
அரசியல் என்றாலே அது தானே. இங்கே ராகுல் பேசினால் அது அரசியல், மோடி பேசினால் வெறுப்பரசியல்.
“இந்த தேர்தல் முடிவுகள் கலவையாக இருந்தாலும் , மக்கள் நிஜ எஜமானர்கள் என்று நிரூபித்து இருக்கிறார்கள் . இந்திய மக்கள் ஜனநாயகத்தை எப்பொழுதும் நிலைநிறுத்துவார்கள் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறோம்.”
சோம்பேறித்தனத்தால் வாக்களிக்காத பொறுப்பற்ற இந்து / பாஜக / மோடி ஆதரவாளர்களை என்ன கூறியும் என்னால் மன்னிக்க முடியவில்லை.
இவர்களாலே மோடி தனிப்பெரும்பான்மை இழந்தார்.
“மோடி அவருக்கு கொஞ்சம் பின்னடைவு தான். காலத்தின் தேவையும் கூட. தவறுகளை சரி செய்து கொண்டு பிஜேபி அடுத்த முறை பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கிறேன்.”
மாற்றுக்கருத்தில்லை, ஏற்றுக்கொள்கிறேன்.
நீங்கள் சொல்வதுபோல் அண்ணாமலை மேல் பிஜேபி தலைமை எதிர்பார்ப்பை அதிகரித்தது தப்பில்லை. ஆனால் கணிசமான வாக்கு வங்கி வைத்திருந்த கோவை தொகுதியிலே பிஜேபி சார்பான வாக்காளர்கள் நீக்கம் நடந்துள்ளது என்று அண்ணாமலை சொன்னார். கட்சி கட்டமைப்பு சரியாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. அவர் போட்டியிடுவார் என்பதை முன்கூட்டியே தெரிவித்து இருக்க வேண்டும். நான் முன்பு கூறியது போல , dmk மற்றும் aiadmk உள்ளடி வேலை நடந்திருக்கிறது. அதிமுக கோட்டையில் சிங்கை வெறும் 17 % வோட்டு தான் பெற்றார் என்பது ஆச்சரியம் தான்.
அண்ணாமலை அவர்களுக்கு எதிராக கட்சியில் எதிர் குரல்கள் வர தொடங்கிவிட்டன. மோடி மற்றும் அமித் ஷா வின் நம்பிக்கை இருப்பதால் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. 2026 தேர்தல் தான் அண்ணாமலைக்கு அக்னிப் பரீட்சை. பார்ப்போம்.
தமிழ்நாட்டு ஊடகங்களை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வரம்பு மீறி செல்கிறார்கள். மோடி மீதான வெறுப்பை தினமும் கக்கி செல்கிறார்கள். காங்கிரஸ் தோல்வி அடைந்ததையே கொண்டாடுகிறார்கள், என்ன மனநிலையோ? மக்களின் மூளையில் கடந்த 10 வருடங்களாக பிஜேபி எதிர்ப்பை வளர்த்து இருக்கிறார்கள், dmk பக்கம் அந்த கோபம் திரும்பினால் மட்டுமே, இங்கே அண்ணாமலைக்கும் பிஜேபி கட்சிக்கும் வளர்ச்சி.
பிஜேபி ஆதரவாளர்கள் வாக்கு செலுத்தி தான் இருக்கிறார்கள். வாரணாசி தொகுதியில் மோடி அவர்கள் பெற்ற வாக்குகள் கடந்த தேர்தலை விட 60k மட்டுமே குறைவு. ஆனால் கூட்டணி பலத்தால் எதிர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்திய அளவிலே 1% தான் வித்தியாசம். கர்நாடக மாநில தேர்தலிலும் இதே நிலை தான். நீங்கள் அவர்கள் மீது கோபப் பட தேவை இல்லை என்றே நினைக்கிறன்.
உங்கள் கோபம், அற சீற்றம் புரிந்து கொள்ள கூடியது தான். பொறுமையாக தான் இருக்க வேண்டும்,மக்கள் விசித்தரமானவர்கள் என்ன செய்வார்கள் என்று கணிப்பது கடினம் தான். பொறுமையாக ஆலமரம் போல வேரூன்றி வளர்ந்தால் மட்டுமே தான் நீண்ட நாட்கள் ஆட்சியிலும் மக்கள் மனதிலும் நிலை பெற முடியும். இன்ஸ்டன்ட் வெற்றி பெற்றால் Jegan and KCR போல தூக்கி எறிந்து விடுவார்கள்.
@மணிகண்டன்
“கணிசமான வாக்கு வங்கி வைத்திருந்த கோவை தொகுதியிலே பிஜேபி சார்பான வாக்காளர்கள் நீக்கம் நடந்துள்ளது என்று அண்ணாமலை சொன்னார். கட்சி கட்டமைப்பு சரியாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது.”
பாஜக தற்போது தான் வளர்ந்து வரும் கட்சி, அதுவும் அண்ணாமலை வந்த பிறகே.
எனவே, இதையெல்லாம் அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் சரி செய்து கொள்ள வேண்டும்.
“dmk மற்றும் aiadmk உள்ளடி வேலை நடந்திருக்கிறது. அதிமுக கோட்டையில் சிங்கை வெறும் 17 % வோட்டு தான் பெற்றார் என்பது ஆச்சரியம் தான்.”
உண்மை தான். ஏதோ நடந்துள்ளது.
“2026 தேர்தல் தான் அண்ணாமலைக்கு அக்னிப் பரீட்சை. பார்ப்போம்.”
இதிலும் திமுக தான் வரும் என்ற நிலையே தற்போது உள்ளது. காரணம், எதிர்ப்பு வாக்குகள் பிரிந்துள்ளது திமுகவுக்கு சாதகமாக இருக்கும்.
ஆனால், உறுதியாக சில இடங்களைப் பாஜக வெல்லும் ஆனால், அவை ஆட்சி அமைக்கும் அளவுக்கு இருக்காது.
விஜய் அரசியலுக்கு வருவதால், அவர் கட்சி திமுக வாக்குகளைப் பிரிக்கும். பட்டியலின மக்களின் வாக்குகள் விஜய்க்கு அதிகம் உள்ளது.
ஓரளவு கிறித்துவ வாக்குகள் பிரியும். எனவே, ஒன்றும் கணிக்க முடியவில்லை.
“தமிழ்நாட்டு ஊடகங்களை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வரம்பு மீறி செல்கிறார்கள். மோடி மீதான வெறுப்பை தினமும் கக்கி செல்கிறார்கள்.”
மிக மிக அதிகம். இது பற்றி பின்னர் தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்.
“மக்களின் மூளையில் கடந்த 10 வருடங்களாக பிஜேபி எதிர்ப்பை வளர்த்து இருக்கிறார்கள், dmk பக்கம் அந்த கோபம் திரும்பினால் மட்டுமே, இங்கே அண்ணாமலைக்கும் பிஜேபி கட்சிக்கும் வளர்ச்சி.”
உண்மை.
“பிஜேபி ஆதரவாளர்கள் வாக்கு செலுத்தி தான் இருக்கிறார்கள். வாரணாசி தொகுதியில் மோடி அவர்கள் பெற்ற வாக்குகள் கடந்த தேர்தலை விட 60k மட்டுமே குறைவு.”
இந்த முறை எதிர்க்கட்சி கூட்டணி அமைத்ததால் வித்தியாசம் குறைவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், வாரணாசிக்கு இவ்வளவு செய்தும், இந்த வாக்குகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“உங்கள் கோபம், அற சீற்றம் புரிந்து கொள்ள கூடியது தான். பொறுமையாக தான் இருக்க வேண்டும்,மக்கள் விசித்தரமானவர்கள் என்ன செய்வார்கள் என்று கணிப்பது கடினம் தான்.”
உண்மையைக்கூறினால் மனதளவில் சோர்வடைந்து விட்டேன்.
தமிழ்நாட்டில் இவ்வளவு கேவலமான ஆட்சி இருந்தும், வாக்களிக்கிறார் என்றால் சலிப்பாகி விட்டது.
கள்ளச்சாராய இறப்பில் கூட எனக்கு பரிதாபம் வரவில்லை.
அவர்கள் தேர்ந்தெடுத்த கட்சியே காரணம், இதில் பரிதாப பட என்ன உள்ளது? அவரவர் நிலைக்கு அவரவர் காரணம்.
சில நேரங்களில் இவர்களால் சம்பந்தமில்லாத நாமும் பாதிப்படைய வேண்டியதாக உள்ளது தான் கடுப்பாக உள்ளது.
“பொறுமையாக ஆலமரம் போல வேரூன்றி வளர்ந்தால் மட்டுமே தான் நீண்ட நாட்கள் ஆட்சியிலும் மக்கள் மனதிலும் நிலை பெற முடியும். இன்ஸ்டன்ட் வெற்றி பெற்றால் Jegan and KCR போல தூக்கி எறிந்து விடுவார்கள்.”
முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். சரியாகக் கூறினீர்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதே கட்சியை எதிர்காலத்தில் உறுதியாக நிலை நிறுத்தும்.