M3GAN (2022) | எந்திரன் குட்டி

4
M3GAN

மிழில் வந்த எந்திரன் படம் போல ஆங்கிலத்தில் M3GAN. Image Credit

M3GAN

சிறுமி Cady யின் பெற்றோர் விபத்தில் இறந்ததால், அவரின் அத்தை வீட்டுக்குச் செல்கிறார். அவரது அத்தை Gemma ஒரு ரோபோ தயாரிக்கும் பணியிலிருப்பார்.

குழந்தைகளை மையப்படுத்தி இருக்கும் ரோபோவான M3GAN யை இந்தச் சிறுமியுடன் பழக வைத்துச் சோதனை செய்யும் போது, அது பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடும்.

இறுதியில் என்ன ஆனது என்பதே M3GAN.

ரோபோ பெயரில் E க்கு பதிலாக 3 என்று இருப்பது 3rd Generation என்பதன் அர்த்தம்.

எந்திரன்

இப்படம் பார்க்கும் போது எந்திரன் படம் தான் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட எந்திரன் கதையை ஒட்டியே தான் இருந்தது.

இந்தப்படம் வெளியான பிறகு எந்திரன் வந்து இருந்தால், இப்படத்தை பார்த்துக் காபி அடித்ததாக சூடம் கொளுத்தி சத்தியம் செய்து இருப்பார்கள் 🙂 .

அறிவியல் படங்களில் வழக்கமாக ஆர்வமில்லை ஆனால், எந்திரன் படம் போலவே இருந்ததாலேயே தொடர்ந்து பார்த்தேன்.

பெற்றோரை இழந்த சிறுமி அதிர்ச்சியில் யாரிடமும் பேசப் பிடிக்காமல் அமைதியாகவே இருக்கும் போது இந்தக் குட்டி ரோபோ ஆறுதலைக் கொடுக்கும்.

நம்ம வீட்டுல குழந்தைங்க கேம்ஸ்க்கு அடிமையாகி விட்டால், மொபைலை வாங்கி வைத்தால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள்.

அதே போல இச்சிறுமி Cady யும் இந்த ரோபோவுடன் மிக இணக்கமாகி விடுவார். அதாவது அந்த ரோபோ இல்லாமல் இருக்க முடியாது எனும் அளவுக்கு.

Gemma க்கு சோதனைக்காக முயற்சித்தது சத்திய சோதனை ஆகி விடும் 🙂 .

Artificial Intelligence

சிட்டிக்கு உணர்ச்சிகளைக் கொடுக்கத் தலைவர் முயற்சிப்பார் ஆனால், இந்த ரோபோவோ தானாகவே தன்னை மேம்படுத்தி, சிந்திக்கும் திறனைப் பெறும்.

அதோடு சிறுமி Cady யை மிகவும் நேசிக்க ஆரம்பித்து, Cady யை யாரும் திட்டவோ, எதிர்க்கவோ கூடாது எனும் மனநிலைக்குச் சென்று விடும்.

இதென்னடா வம்பாகி விட்டதே! என்று Gemma தலையைப் பிய்த்துக்கொள்வார். இதுவொரு ரோபோ, மனிதர் அல்ல என்று கூறினால் Cady ஏற்றுக்கொள்ள மாட்டாள்.

நாம் இயந்திரங்களோடு மட்டுமே இயங்கி வாழக் கூடாது, மனிதர்களோடு பழக வேண்டும் என்று கூறினாலும் முடியாது என்று பதில்.

இந்த ரோபோவை Demo காட்டுவதற்காகக் கொண்டு செல்ல வேண்டிய நேரத்தில், மிகப்பெரிய சிக்கலைக் கொண்டு வந்து M3GAN நிறுத்தி விடும்.

திரைக்கதை

குழப்பமில்லாத தெளிவான, சுருக்கமான கதை.

இயந்திரங்களைச் சார்ந்து வாழத் துவங்கினால் என்ன ஆகும் என்பதையும். மனிதர்களை விட்டு விலகுவது ஆபத்து என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இதன் காரணமாகவே Amazon Echo, Google Home ஆகியவற்றை வாங்காமல் இருக்கிறேன். ஏற்கனவே உள்ள மறதியை இச்சாதனங்கள் மேலும் அதிகரித்து விடும்.

ஆனாலும் எதிர்காலத்தில் இவை தவிர்க்க முடியாததாகி விடும்.

ரோபோக்கள் சிந்திக்கத் துவங்கினால் அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை எந்திரன் படத்திலேயே பார்த்து இருந்தாலும், குழந்தைகள் அதிகம் ஈடுபாடு காட்டினால் என்ன ஆகும் என்பதை M3GAN விளக்குகிறது.

ஒளிப்பதிவு பின்னணி இசை

ஆங்கிலப்படங்களில் அனைத்தையும் உயிரோட்டமாகக் காட்டுவார்கள். ரோபோ என்றே தெரியாத அளவுக்கு ரோபோ உள்ளது குறிப்பாக, நடப்பது, ஓடுவது.

மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள்.

இப்படத்தில் வரும் இடங்கள் மிகக்குறைவு ஆனால், அது தெரியாத அளவுக்குக் காட்சிகள் உள்ளது, சலிப்பாக்கவில்லை.

இது போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு மிக முக்கியமானது. எங்குமே எந்தக் காட்சியிலுமே எதுவுமே செயற்கையாகத் தோன்றவில்லை.

பின்னணி இசை அவ்வப்போது பயமுறுத்துகிறது.

யார் பார்க்கலாம்?

எந்திரன் படம் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இதுவும் பிடிக்கலாம்.

அது எந்திரன் சிட்டி, இது எந்திரன் குட்டி 🙂 . குழந்தைகளுக்கு இப்படத்தைக்காட்ட பரிந்துரைக்கிறேன், விழிப்புணர்வாக இருக்கும்.

$12 மில்லியன் பட்ஜெட்டில் எடுத்து $181 மில்லியன் வசூலித்துள்ளது. மிக எளிமையான கதையை வைத்து இவ்வளவு பெரிய வசூல் வியப்பளிக்கிறது.

ரோபோ VFX க்கு மட்டுமே செலவு, வேறு எந்தப் பிரம்மாண்ட செலவும் இல்லை.

NETFLIX & Jio Cinema ல் காணலாம்.

Directed by Gerard Johnstone
Screenplay by Akela Cooper
Story by Akela Cooper, James Wan,
Produced by Jason Blum, James Wan
Starring Allison Williams, Violet McGraw
Cinematography Peter McCaffrey
Edited by Jeff McEvoy
Music by Anthony Willis
Distributed by Universal Pictures
Release dates December 7, 2022 (Los Angeles), January 6, 2023 (United States)
Running time 102 minutes
Country United States
Language English

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி. தேர்தல் முடிவுகள் பற்றி கட்டுரை எழுதுங்கள்.

  2. கிரி.. உங்க பதிவை படித்த பிறகு படத்தோட ட்ரைலர் பார்த்தேன்.. செம்மையா இருந்தது.. பதிவை படிச்சதனால ட்ரைலர் பார்க்கும் போதே படத்தோட கதையின் கருவை உள்வாங்கி கொள்ள முடிகிறது.. அது போல vfx காட்சிகள் தாறுமாறாக உள்ளது.. பொதுவாக நான் மிக குறைவாக ஆங்கில படங்கள் பார்ப்பவன்.. ஆனால் இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது.. நிச்சயம் பார்ப்பேன்..

    மாஸ் படங்களின் வருகையை விட தமிழிலும் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.. நிச்சயம் படம் சரியாக இருந்தால் வரவேற்பு கட்டாயம் இருக்கும்.. சமீபத்தில் கூட பார்க்கிங் படத்தின் காட்சிகளை பார்த்தேன்.. சாதாரண காட்சியை கூட இயக்குனர் மிரட்டலாக எடுத்து இருக்கிறார்.. எந்த மொழியில் ஓட கூடிய கதையம்சம் கொண்ட படம் இது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @ஹரிஷ்

    “கிரி. தேர்தல் முடிவுகள் பற்றி கட்டுரை எழுதுங்கள்.”

    கொஞ்சம் செட்டில் ஆகட்டும் என்பதற்காக எழுதாமல் இருந்தேன், தற்போது எழுதி விட்டேன்.

    @யாசின்

    “சமீபத்தில் கூட பார்க்கிங் படத்தின் காட்சிகளை பார்த்தேன்.. சாதாரண காட்சியை கூட இயக்குனர் மிரட்டலாக எடுத்து இருக்கிறார்.. எந்த மொழியில் ஓட கூடிய கதையம்சம் கொண்ட படம் இது”

    சரியாக கூறினீர்கள்.

    இது ஒரு Universal Story எந்த வளரும் நாட்டுக்கும் இது பொருந்தும். வளர்ந்த நாட்டுக்குக் கொஞ்சம் திரைக்கதையில் மாற்றம் வேண்டும்.

  4. பார்க்க முயற்சிக்கிரேன். எல்லாவற்றிற்கும் முன்னோடி, “Terminator” படங்கள். எந்திரங்கள் சிந்திக்க ஆரம்பித்தாள் வரும் விளைவே அது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here