இளையராஜா இசைக்கச்சேரியில் (Ilayaraja Live In Concert) கலந்து கொண்ட பெருமையைப் பெற்று விட்டேன் 🙂 . Image Credit
Ilayaraja Live In Concert
இதுவரை எந்த இசைக்கச்சேரியையும் பார்க்க முயன்றது இல்லை. தேவா இசைக்கச்சேரி பார்க்க நண்பர் சூர்யா அழைத்தது போல இதற்கும் அழைத்தார்.
இளையராஜாக்கு 81 வயதாகிறது. இதற்கு மேல் எவ்வளவு இசைக்கச்சேரிகளை நடத்துவார், அதிலும் சென்னையில் எவ்வளவு இருக்கும்? என்பதால், உடனே ஒப்புக்கொண்டேன். இரு மாதங்கள் முன்பே முன்பதிவு செய்து விட்டோம்.
இசை ரசிகனான எனக்கு அதிலும் இளையராஜா இசைக்கச்சேரியை வாழ்க்கையில் ஒருமுறையாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி 🙂 .
ஜனனி ஜனனி
துவக்கத்தில் தொகுப்பாளர் அறிமுகம் கொடுத்தார். முடிந்தவுடனே நிகழ்ச்சிக்குத் தலைவர் ரஜினி வாழ்த்துக்கூறிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது,
இது முடிந்தவுடன் ‘ஜனனி ஜனனி’ பாடலை இளையராஜா பாடினார். இந்த பிறகு நேரத்தை வீணடிக்காமல் உடனே முதல் பாடலாக ராக்கம்மா கையத்தட்டு.
இப்பாடலில் வயலின் இசை Sharp ஆக இல்லை. எனவே, இனி வரும் பாடல்களும் இப்படியே இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது.
ஏனென்றால், இதற்கு முன் இணையத்தில் பார்த்த என்றென்றும் ராஜா எனக்கு Benchmark ஆக அமைந்து விட்டது. அதில் ஏராளமான வயலின் வாசிப்பவர்கள் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதில் பாதிக்கும் குறைவானவரே இருந்தனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பீட்டளவில் குறைவு என்பதால், அதே தரம் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது.
அதற்குத் தகுந்தது போல முதல் பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையாததால், இந்தச் சந்தேகம் வந்தது ஆனால், அதன் பிறகு எல்லாமே சிறப்பு.
அன்னக்கிளி
இளையராஜா முதன் முதலில் இசையமைத்த படம் அன்னக்கிளி.
அப்படத்துக்கு எப்படி இசையமைக்கப்பட்டது என்று அப்பாடலின் இசையைப் பிரித்து விளக்கினார்.
இப்படத்துக்கு முன்னரே பல படங்களில் பணியாற்றியிருந்தாலும், முதன் முதலாகத் தானே அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதால், எப்படி செய்வது? என்ற தயக்கம் இருந்ததாகக் கூறினார்.
அப்படியொரு தயக்கத்தை வைத்துக்கொண்டு இப்படியொரு இசையைக் கொடுத்தது வியப்பாக இருந்தது.
இளையராஜா கூறியது தன்னடக்கம் என்ற பெயரில் கூறியதாகத் தோன்றவில்லை, உண்மையாகவே அவர் கூறியதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
என்ன தான் ஒருவருடன் வழக்கமாகத் தினமும் சாலையில் பயணித்தாலும், நாமே செல்ல வேண்டும் எனும் போது ஏராளமான சந்தேகம் வரும்.
அது போலத்தான் இதையும் புரிந்து கொண்டேன்.
முக்கியப்பாடகர்கள் இல்லை
இங்கே வந்து இருந்தவர்கள் அனைவருமே இரண்டாம் கட்ட பாடகர்கள் தான். தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லையென்பதால், எனக்கு யாரையுமே தெரியவில்லை.
பெயர் தெரிந்த முகம் SPB சரண், யுகேந்திரன் மட்டுமே!
இளையராஜா இசை நிகழ்ச்சியைப் பார்க்க வாய்ப்புக்கிடைத்த எனக்கு, SPB குரலில் பாடலைக் கேட்கப் பாக்கியம் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது.
என்னவொரு அற்புதமான குரலுக்குச் சொந்தக்காரர். 70 வயதைத் தாண்டியும் இளமையான குரலைக் கொண்டவர். SPB, இளையராஜா போன்றோர் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
சுஜாதாவின் பொண்ணு பாடியது நன்றாக இருந்தது ஆனால், சிறு தவறுக்காக இளையராஜாவிடம் கொஞ்சம் வாங்கிக்கட்டிக்கொண்டார் 🙂 .
இவரும் இன்னும் இரு பெண் பாடகர்களும் சிறப்பாகப் பாடினார்கள், ஒப்பீட்டளவில் ஆண் பாடகர்கள் பெரும்பாலும் அனைவருமே நன்றாகப் பாடினார்கள்.
கோரஸ் பாடியவர்கள் அனைவரும் அசத்தலாகக் குரல் கொடுத்தார்கள். அதிலும் குறிப்பாகப் பெண் கோரஸ் குரல் கொடுத்தவர்கள் மிகச்சிறப்பு.
கண்டிப்பான ஆசிரியர்
‘எம் மகன்’ படத்தில் நாசர் கிட்ட வடிவேலு மாட்டிக்கொண்டு முழிப்பது போல இளையராஜாவிடம் தப்பிப்பது பெரும்பாடாக உள்ளது.
எது செய்தாலும் பயமாக இருக்கும், என்ன கூறினாலும் அதற்கும் ஒரு பதில் கூறுகிறார், கண்டிக்கிறார். ஐயையோ! எப்படித்தான் இவரைச் சமாளிக்கிறார்களோ.
பலர் மறுபேச்சே பேசுவதில்லை, புன்னகைத்துக் கடந்து விடுகிறார்கள். எந்த நேரத்தில் என்ன சொல்வாரோ என்ற பயமே அவர்களிடம் உள்ளது.
சிறுமிகள் ஒரு பாடலைப் பாடினார்கள், பாடி முடிந்த பிறகு பாடியவர்கள் பெயரைக் கேட்டு இளையராஜா அறிமுகப்படுத்தினார்.
ஒரு சிறுமி பெயரைக் கூறும் போது தான் தெரிந்தது, அச்சிறுமியின் எதிரே இருந்த மைக் வேலை செய்யவில்லையென்று 😀 . அந்தச் சிறுமியும் வேறு வழி இல்லாததால் பாடி முடித்து இருக்கிறார்.
மைக் வைத்தவர்களுக்கு மேடையிலேயே திட்டு விழுந்தது 🙂 .
வசனம்
‘கண்மணி அன்போடு’ பாடலும், ‘அண்ணாத்தே ஆடுறார்’ பாடலும் வசனத்துடன் பாடியவர் சிறப்பாகப் பாடினார், கிட்டத்தட்ட கமல் குரல் போலவே இருந்தது.
‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலுக்கு மனோரமா பாடும் பகுதிக்குப் பாடியவரும் சென்னை வழக்கில் செமையா பாடினார்.
‘மனிதா மனிதா’ பாடலைப்பாடியவரின் குரல் அப்பாடலுக்கு நன்றாகப் பொருந்தியிருந்தது. இப்பாடல் வழக்கமாகக் கச்சேரிகளில் கேட்டதில்லை.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
‘அன்னக்கிளி’ படத்துக்குப் போல ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலையும் இசையைப் பிரித்துக் காட்டினார்.
கோரஸ் தனி, வயலின் தனி, பாடல் தனி, ஸ்ட்ரிங்ஸ் தனி என்று தனித்தனியாக வாசித்துப் பின்னர் அனைத்தையும் ஒன்றாக இணைத்தது தாறுமாறாக இருந்தது.
தளபதி Breakup காட்சியைப் பின்னணியில் ஓடவிட்டு அதற்கு இசையமைத்தார்கள், அரங்கமே ஆர்ப்பரித்தது.
தளபதி படத்துக்குப் பாம்பே சென்று இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்குத்தான் இளையராஜா அதிக நாள் எடுத்துக்கொண்டதாகச் செய்தி.
அதற்குத்தகுந்தாற்போல அனைத்துப்பாடல்களும் தாறுமாறு ஹிட் அடித்தது.
‘சின்னத்தாயவள்’ பாடல் வயலினில் மிரட்டி இருக்கும். ஒருமுறை சோகமான மன நிலையில் கேட்டு அழுதுள்ளேன், அப்படியொரு மனதை உருக்கும் வயலின் இசை.
இரண்டு பாடல்கள் உள்ளது, நான் கூறுவது துவக்கப் பாடல். இந்நிகழ்ச்சியில் இருக்குமா என்று நினைத்தேன் ஆனால், இல்லை 🙁 .
‘பருவமே’ பாடலுக்கு ஜாக்கிங் சத்தம் எப்படிக் கொண்டு வந்தார் என்பதை விளக்கியதும் சுவாரசியமாக இருந்தது. அதை எப்படி செய்தார்கள் என்பதை மேடையில் செய்து காட்டினார்.
தேவையற்ற பேச்சுகள் இல்லை
வந்தவர்கள் பாடலைக் கேட்க வந்துள்ளார்கள், வெட்டிப் பேச்சுகளை அல்ல என்பதைச் செயலில் காட்டினார். தேவையற்ற பேச்சுகள் என்று எதுவுமே இல்லை.
4 மணி நேரத்தில் 40+ பாடல்களைக் கொடுப்பது எளிதல்ல.
ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே அப்பாடல் எப்படி உருவாகியது என்று கூறினார். இது மட்டும் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம். ஏனென்றால், இது போன்ற செய்திகளை அவர் கூற கேட்பது சுவாரசியமாக இருக்கும்.
துவக்கத்தில் வந்த கங்கை அமரன் க்ரிஞ் ஆகப்பேசினார். அவரையும் இளையராஜா கலாயித்து அனுப்பி விட்டார் 🙂 .
கங்கை அமரனுக்கு இது முதல் மேடையில்லை. எனவே, இது போன்ற சென்டி, க்ரிஞ் பேச்சுகள் அவசியமில்லை.
அதிரடி இறுதிப்பாடல்கள்
என்றென்றும் ராஜா நிகழ்ச்சியில் ‘காட்டுக்குயிலு’ பாடலைச் சொதப்பி விட்டார்கள் ஆனால், இங்கே சரவெடியாய் நொறுக்கினார்கள்.
ட்ரம்ஸ் தாறுமாறாக இருந்தது. அரங்கமே ஆடித்தீர்த்தது.
விக்ரம் ‘ஏஞ்சோடி மஞ்சக்குருவி’ பாடல் வரவில்லையே என்று கூறிக்கொண்டே இருந்தேன், இப்பாடல் வந்தவுடன் அருகிலிருந்த பெண் ‘நீங்க கேட்டுட்டே இருந்தீங்களே வந்து விட்டது‘ என்றார் 🙂 .
என்னவொரு அற்புதமான பாடல், இசை. ப்ப்பா டாப் டக்கராக இருந்தது. அனைவரும் எழுந்து ஆட ஆரம்பித்து விட்டார்கள். எனக்குப் பரமத் திருப்தி.
அம்ஜத்கான் பாடும் சலாமியா மொழி வரிகளைப் பாடியவர் அசத்தலாகப் பாடியது அனைவரையும் உற்சாகத்தில் வைத்தது.
அதன் பிறகு ‘ஏ! ஆத்தா’ பாடலும் செம.
இறுதிப்பாடலாக ‘அண்ணனுக்கு ஜெ’ வந்ததும், அனைவருமே எழுந்து ஆடினார்கள் அல்லது நின்று கொண்டு கைதட்டிக்கொண்டு இருந்தார்கள்.
இதனுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
கலைஞர்கள்
நிகழ்ச்சியில் குறிப்பிடத் தக்க இருவர் ட்ரம்ஸ் வாசித்தவரும், புல்லாங்குழல் வாசித்த நெப்போலியன் என்பவரும். இருவரும் பட்டையைக்கிளப்பினார்கள்.
வயலின் வாசிக்க ஹங்கேரியிலிருந்து பலர் வந்து இருந்தார்கள். இவர்களுக்கு இறுதி நான்கு பாடல்களுக்கு வேலையே இல்லை காரணம், எல்லாமே அதிரடி பாடல்கள் 🙂 .
பாடகர்களை பெயர் கூறி இளையராஜா அறிமுகப்படுத்தினார். அதிலொரு பாடகி மஹாராஷ்டிரா என்றும், அவருக்குத் தமிழே தெரியாது என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியிலோ அல்லது ஏதாவது தளத்தில் வரும். அதில் பாருங்கள், ட்ரம்ஸ் எந்த அளவுக்குச் சிறப்பாக வந்துள்ளது என்று.
அதிலும் சுந்தரி, காட்டுக்குயிலு, ஏஞ்சோடி பாடல்கள் வேறு ரகம்.
மழை
இசை மழையுடன் நிஜ மழையும் சேர்ந்து கொண்டது ஆனால், சிறு தூறல் (drizzile) மட்டுமே என்பதால், நிகழ்ச்சி தப்பித்தது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாகத் தூறியது. பலர் ஏற்கனவே தயாராக எடுத்து வந்து இருந்த குடையுடன் நிகழ்ச்சியைக் கண்டு களித்தார்கள்.
சிலர் பாட்டு கேட்க வருகிறார்களா அல்லது சாப்பிடுவதற்கு வருகிறார்களா என்றே தெரியவில்லை. எரிச்சலைக் கிளப்பும்படி நடந்து கொண்டே இருந்தார்கள்.
நிகழ்ச்சி நடக்கும் போது நடமாடுவது, எழுந்து செல்வது கலைஞர்களை அவமானப்படுத்தும் செயல் என்ற அடிப்படை அறிவு கூட இல்லை.
FDFS மதிப்பு தெரியாமலே பந்தாக்காக ஒரு கூட்டம் வருவது போல, இந்நிகழ்ச்சியின் மதிப்பு தெரியாமலே பலர் வருகிறார்கள். எல்லோரும் போறாங்க நாமளும் போவோம் என்று வரும் கோஷ்டிகள்.
இளையராஜா, தேவா இசை நிகழ்ச்சியைப் பார்க்க சூர்யா எந்தளவுக்கு உதவியுள்ளார் என்பதன் முக்கியத்துவம் அவருக்கே தெரியாது 🙂 . நன்றி சூர்யா.
இவை இரண்டுமே வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. பாடல்களை கேட்பதில் இருக்கும் ஆர்வம் இது போல LIVE CONCERT இதில் துளி கூட ஆர்வம் இல்லை.. சொல்லப் போனால் டிவி யில் வரும் பாடல் சம்பந்த பட்ட (சூப்பர் சிங்கர்மாதிரி) எந்த நிகழ்ச்சிகளையும் பார்த்ததே இல்லை.. குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லை.. ஆரம்பத்திலிருந்தே இது மாதிரியான நிகழ்ச்சிகள் மீது கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் போகி விட்டது..
LIVE CONCERT குறைந்தது 4 / 5 மணி நேரம் நடக்கும் போது ஆர்வம் இல்லாமல் எங்கே பார்க்க முடியும்.. 8 வருடங்களுக்கு முன்பு நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் AR ரஹ்மான் LIVE CONCERT நிகழ்ச்சிக்கு ஒரே ஒரு முறை சென்றிருந்தேன்.. அதுவும் எனக்கு திருப்தி கரமாக இல்லை..
ஆனால் பாடல்கள் எவ்வாறு பிறந்தன? என்ற கேள்விக்கு பதிலை தெரிந்து கொள்ள மிகவும் பிடிக்கும்.. குறிப்பாக வாலி, கண்ணதாசன், இளையராஜா குறித்த நிகழ்வுகளை தெரிந்து கொள்ள மிகவும் சுவாரசியமாக இருக்கும்.. வாலியின் அனுபவம் கொஞ்சம் நகைசுவை கலந்ததாக இருக்கும்..
ஒரு நேர்காணலில் வாலி கூறியது.. ஒரு முறை பாடல் எழுதி இயக்குனர் / இசை அமைப்பாளரிடம் வாலி கொடுத்து விட்டார்.. அவர்கள் மாறி மாறி பாடலை மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்துள்ளார்கள்.. கொஞ்சம் கடுப்பான வாலி.. யோ நான் என்ன என் வீட்டு பத்தரத்தையா கொடுத்து இருக்கேன்.. ரெண்டு பேரும் மாறி மாறி திரும்பி திரும்பி படிச்சிட்டு இருக்கீங்க!!! என்று நகைச்சுவையாக கூறி இருக்கிறார்..
கவிஞர் ஜெயந்தவுடனான நெருக்கம் வாலிக்கு மிகவும் அதிகம்.. குறிப்பாக தன்னுடை கடைசி காலங்களில் இவர் அதிக நேரம் ஜெயந்தாவுடன் செலவிட்டுள்ளார்.. அந்த நிகழ்வுகளை கவிஞர் ஜெயந்தாவும் பகிர்ந்துள்ளார்.. நேரம் கிடைக்கும் போது இதை பார்க்கவும்..
https://www.youtube.com/watch?v=iikGRHxeQ4M
@யாசின்
“பாடல்களை கேட்பதில் இருக்கும் ஆர்வம் இது போல LIVE CONCERT இதில் துளி கூட ஆர்வம் இல்லை”
உண்மையில் எனக்கும் இல்லை. எனவே தான் நானாக எதற்கும் முயற்சித்தது இல்லை ஆனால், நான் சென்ற இரண்டுமே தரமான Live Concert.
“8 வருடங்களுக்கு முன்பு நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் AR ரஹ்மான் LIVE CONCERT நிகழ்ச்சிக்கு ஒரே ஒரு முறை சென்றிருந்தேன்.. அதுவும் எனக்கு திருப்தி கரமாக இல்லை..”
சில நேரங்களில் ஒரிஜினல் போல இல்லாமல் இவர் மாற்றிப்பாடுவார். இது எனக்கு பிடிக்காது, ஒருவேளை இது போன்றவையும் நீங்கள் ரசிக்க முடியாமல் இருந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
“ஆனால் பாடல்கள் எவ்வாறு பிறந்தன? என்ற கேள்விக்கு பதிலை தெரிந்து கொள்ள மிகவும் பிடிக்கும்.. ”
எனக்கும் ரொம்பப்பிடிக்கும்.
“யோ நான் என்ன என் வீட்டு பத்தரத்தையா கொடுத்து இருக்கேன்.. ரெண்டு பேரும் மாறி மாறி திரும்பி திரும்பி படிச்சிட்டு இருக்கீங்க!!!”
🙂
“தன்னுடை கடைசி காலங்களில் இவர் அதிக நேரம் ஜெயந்தாவுடன் செலவிட்டுள்ளார்”
பார்க்கிறேன் யாசின்