சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். பணிக்காகத் தற்போது சென்னையில் வசிக்கிறேன்.
வாழ்க்கை – கோபி –> சென்னை –> சிங்கப்பூர் –> சென்னை
பதிவு எழுத ஆரம்பித்தது 2006 ம் ஆண்டு. திரட்டிகள் பற்றி தெரிய வந்தது 2008 ம் ஆண்டாகும். தமிழ்மணம் திரட்டியில் இணைத்த பிறகே வாசகர்களைப் பெற்றேன்.
எழுதுவதிற்கு அடிமை ஆகி விடக் கூடாது என்று அளவாக எழுதிக்கொண்டு உள்ளேன். எழுதுவது ரொம்பப் பிடித்தமானது. தமிழைப் பிழை இல்லாமல் எழுதுவதே நான் தமிழுக்கு செய்யும் பெரிய தொண்டு.
என் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே விருப்பம். அதை நாகரீகமான முறையில் செய்து கொண்டு உள்ளேன்.
படித்தது தமிழ் வழியில் என்பதாலோ என்னவோ இயல்பாகவே தமிழ் மிகவும் பிடிக்கும். தமிழ் குறித்த பல கட்டுரைகள் எழுதி உள்ளேன்.
முடிந்தவரை ஆங்கிலக் கலப்பு இல்லாமல் அனைவரும் தமிழ் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்.
மற்றவர்களிடம் நம் எண்ணங்களைப் பகிர வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் எழுத வந்து இருந்தாலும், எழுத்து எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்து உள்ளது.
எழுதத் தொடங்கிய பிறகு பெற்ற அனுபவங்கள் ஏராளம்.
எனக்கு அனைத்துப் பிரிவுகளிலும் ஆர்வம் என்பதால் ஜனரஞ்சகமாக எழுதி வருகிறேன். தொழில்நுட்பம் குறித்து எழுதுவது ரொம்பப் பிடிக்கும்.
என் தளத்தைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள விரும்பினால் பின்வரும் கட்டுரையைப் படியுங்கள்.
Read : இங்க என்ன சொல்லுது 🙂
தளத்தின் பெயர்
தளம் ஆரம்பித்த போது தமிழில் இவ்வளவு ஆர்வம் எனக்கு வரும், தமிழ் மொழியின் சிறப்பைப் போற்றுவேன், பெரியளவில் வாசகர்கள் கிடைப்பார்கள் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் உலவியில் (Browser) அனைவரும் எளிதாகத் தள முகவரியைத் தட்டச்சு செய்ய, நினைவு வைத்துக்கொள்ள “giriblog” என்று தேர்வு செய்தேன்.
பின்னர் எழுத எழுதத் தமிழ் மீதான வியப்பும், பற்றும் அதிகரித்தது. அப்போது தான் தமிழ்ப் பெயரில் தள முகவரி பெற்று இருக்கலாம் என்று தோன்றியது!
இருப்பினும் முதன்முதலில் வைத்து வாசகர்களைப் பெற்ற தளத்தின் பெயரை மாற்ற விருப்பமில்லை. ஒருமுறை (2015) வேறு தள முகவரி வாங்கிவிட்டேன் பின்னர் மனசு கேட்காமல் அப்படியே விட்டுவிட்டேன் 🙂 .
சிலர் ‘கிரி! “தமிழ் தமிழ்” ன்னு சொல்லிட்டு ஆங்கிலத்தில் தள பெயரை வைத்து இருக்கிறீர்களே!‘ என்று கேட்கும் போது ஒவ்வொரு முறையும் விளக்கம் கொடுக்க வேண்டியதாகிறது.
தள பெயர் மட்டுமே ஆங்கிலம், மற்றபடி என் தளத்தில் முடிந்தவரை ஆங்கிலக் கலப்பில்லாமலே எழுதி வருகிறேன். தொடர்ச்சியாகப் படிப்பவர்கள் உணர்வார்கள்.
எழுத வந்த பிறகு தான் தமிழின் சிறப்பு புரிந்து, பள்ளியில் இன்னும் சிறப்பாகத் தமிழ் படித்து இருக்கலாம், அதனுடைய அருமை தெரியாமல் பள்ளிப்படிப்பையே முடித்து விட்டோமே! என்ற ஆதங்கம் இன்னும் உள்ளது.
தமிழ் ஒரு அற்புதமான மொழி. அதை நம்மால் முடிந்தவரை சிதைக்காமல் போற்றுவோம்.
குறிப்பு
வலது சாரி கொள்கைகளில் ஆர்வமுடையவன், இந்து மதத்தை நேசிப்பவன், ரஜினி ரசிகன். இதுவே என் அடையாளம் ஆனாலும், கொடுக்கும் தகவல்களில் முடிந்தவரை வெளிப்படைத்தன்மையுடன் எழுதுவதே என் தனித்துவம்.
நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?
🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).