பலருக்கும் எப்போதுமே சலிக்காத விஷயங்களாக இரண்டை கூறுவார்கள். ஒன்று யானை இன்னொன்று விமானம் ஆனால், எனக்கு ரயில் 🙂 . Image Credit
ரயில் காதல்
ரயிலின் மீதான காதல் சிறுவயதிலிருந்து கொஞ்சம் கூடக் குறையவில்லை, மாறாக நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அது ஏக்கமாக மாறி விட்டது.
ஏற்கனவே கூறி இருக்கிறேன், ரயிலில் பயணிக்கலாம் என்ற ஒரே காரணத்துக்காக சென்னைக்குப் படிக்க வந்தேன்.
இது குறித்த விரிவான தகவல்களை ரயில் பயணங்கள் கட்டுரையில் படிக்கலாம்.
ஆலோசனை கூற எவருமில்லை
சிறுவயதில் ரயில் மீது காதல் இருந்தாலும் அத்துறையில் எப்படிப் பணிக்குச் செல்வது, பணியில் சேரலாம் என்று ஆலோசனை கூற யாரும் இல்லை.
அப்பா கூட என் ரயில் விருப்பங்களை அறிந்திருந்தும் ‘ஏன் நீ ரயில்வேக்குப் படிக்கக் கூடாது?‘ என்று ஏன் பரிந்துரைக்கவில்லை என்று புரியவில்லை.
ரயிலில் செல்ல விருப்பம் இருந்தும் அத்துறையிலேயே நாமும் பணிக்கு இணையலாம் என்பது சிறுவயதில் எனக்குத் தெரியவில்லை, தோன்றவில்லை, யாரும் ஆலோசனையும் கூறவில்லை.
இதனால் இதுகுறித்த விழிப்புணர்வு எனக்கு இல்லாமலே போய் விட்டது.
பின்னர் ஐடி துறையில் பணிக்குச் சேர்ந்து அப்பா கடனைக் கட்டுவது தலையாயக் கடமையானதால் வேறு எந்தச் சிந்தனைக்கும் இடமளிக்க முடியவில்லை.
ஒருவேளை ரயில்வேயில் இணைந்தால் எங்களுக்கு இருந்த கடனுக்குக் கடனைக் கட்ட முடியாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
எனவே, கடனைக் கட்டுவதிலேயே முழுக்கவனமும் இருந்ததால், வேறு எதையும் நினைக்காமல், கடனை முடித்து நிமிர்ந்த போது வயது 40 அடைந்து விட்டது.
இதன் பிறகு மீண்டும் ரயில்வே பணி விருப்பம் வந்து தேடினால் அதிகபட்ச வயது 33 என்று இருந்தது.
இப்படியாக என் ரயில்வே கனவு நிறைவேறாமலே போய் விட்டது 🙁 .
ரயில்வே வளர்ச்சி
தோராயமாக 2016 க்கு பிறகு மாற ஆரம்பித்த ரயில்வே துறை 2022 ல் வேறு லெவலில் சென்று கொண்டு இருக்கிறது.
ஏகப்பட்ட வளர்ச்சி, புதிய திட்டங்கள், பல்வேறு வசதிகளுடன் ரயில்கள் அறிமுகம், ரயில்நிலைய மாற்றங்கள், சேவைத்துறையில் மேம்பாடு என்று ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து செல்கிறது.
இவற்றைப் பார்க்கும் போது நாம் இந்தப் பணியில் இருந்தால், இதனுடன் விருப்பத்துடன் பணியாற்றலாமே என்ற ஏக்கமே அதிகமுள்ளது.
ஏனென்றால் நம் மனதுக்குப் பிடித்த பணியே கிடைப்பது எளிதல்ல. சிலருக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறது, எனக்கு இல்லை.
எனக்குத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருந்தாலும், பணி என்று வந்தால் ரயில்வே துறையே விருப்பமாக உள்ளது.
தற்போது ரயில்வே துறையில் நடைபெறும் மாற்றங்கள் மிக மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்குப் பிடித்த துறை மாற்றங்களை நடத்தி நவீனமயமாகி வருவது மகிழ்ச்சி.
ரயில்வே துறையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் நேரடியாகப் பார்த்து வருகிறேன். எனவே, இக்கட்டுரையில் கூறியவை ஆர்வத்தால் மிகைப்படுத்திக் கூறியவை அல்ல, உண்மையாகவே நடப்பவை.
பயணியர் சேவை
பயணியர் சேவையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை பகுதிக்கு எதும் புகார்கள் இருந்தால் ட்விட்டரில் DrmChennai tag செய்தால், உடனடியாகப் பதில் அளிப்பார். இதையெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு கற்பனை செய்யக்கூட முடியாது.
இதோடு என்ன புகாராக இருந்தாலும், RailwaySeva tag செய்தால், உடனடியாகப் புகாரைப் பதிவு செய்கிறார்கள். அதை 100% முடிக்கிறார்களா என்றால் அது சந்தேகமே.
ஆனால், தற்போது இந்த நிலைக்கு வந்தவர்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் புகார்களைச் சிரத்தையுடன் சரி செய்வார்கள் என்று நம்பிக்கையுள்ளது.
தற்போது குறைந்த பட்சம் நாம் கூறுவதைக் கேட்கிறார்கள் என்பதே பெரிய விஷயமாக உள்ளது.
அதே போலச் சில அவசர கோரிக்கைகளுக்கு ரயில்வே துறை எடுக்கும் முயற்சிகள் மிகப் பாராட்டத்தக்கது.
சமீபத்தில் ஒரு பையன் தனியாகப் பயணம் செய்து அவனைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை என்று அவன் அப்பா கூறிய கொஞ்ச நேரத்தில் அவனைக் கண்டுபிடித்துப் பேச வைத்தார்கள்.
இது போல ஏராளமான சம்பவங்கள் உள்ளன. Railway Timeline ல் சென்றால் காணலாம். சிலர் அளிக்கும் மொக்கை புகாரையெல்லாம் சிரத்தையுடன் கையாள்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பயனாளர், ‘ரயில்வே தளத்தில் ஆபாச படங்கள் வருகிறது, தடை செய்யுங்கள், பொறுப்பற்று இருக்காதீர்கள்‘ என்று புகார் அளித்தார்.
அதற்கு, ‘பயனாளர்கள் என்ன பார்க்கிறார்களோ (Browsing History) அதை வைத்தே விளம்பரங்களைக் கூகுள் காண்பிக்கிறது‘ என்று பதில் அளித்தார்கள்.
இதற்கு ட்விட்டரில் பலரும் இவர்கள் பதிலைப் பாராட்டி, ஆயிரக்கணக்கில் லைக் கொடுக்க, புகார் அளித்தவர் டெலிட் செய்து, கணக்கை Deactivate செய்து விட்டு ஓடிவிட்டார் 😀 .
புதிய ரயில்கள்
நவீனப்படுத்தப்பட்ட ரயில்களில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார்கள். ஆன்மீக பயணங்களைத் துவங்கியுள்ளார்கள்.
சமீபத்தில் கோவை – சீரடிக்கு தனியார் ரயில் துவங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சிறப்பு ரயில்களில் வட மாநிலங்களுக்குப் பயணிக்க வேண்டும் என்பது பல காலமாக விருப்பமாக உள்ளது.
ஆனால், இதன் பயணக் காலம் ஒரு வாரம் கிட்ட வருகிறது. அலுவலக விடுமுறை மற்றும் பொறுப்புகளால் இது போல விடுமுறை எடுத்துச் செல்ல முடியவில்லை.
சிறப்பு ரயில்கள் வெளிநாட்டு ரயில்களைப் போல உள்வடிவமைப்பையும், சேவையையும் கொண்டுள்ளது. கட்டணம் அதிகம் என்பது இதன் குறை.
ஆனால், எப்படியாவது இதில் சென்று விட வேண்டும் என்று நினைத்துள்ளேன். சென்றால், இங்கே எழுதாமல் இருக்க மாட்டேன் 🙂 .
தெறிக்கவிடப்போகும் இந்தியாவின் முதல் குஜராத் (அகமதாபாத்) – மும்பை புல்லட் ரயிலுக்காகக் (2024) காத்துக்கொண்டுள்ளேன்.
சரக்கு ரயில்கள்
இதே போலச் சரக்கு ரயில்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. வருடாவருடம் இதன் வருமானம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அரசின் தொடர் நடவடிக்கை காரணமாகத் தற்போது பல நிறுவனங்களும் தங்கள் சரக்குகளை ரயில் வழியாக அனுப்பி வருகின்றனர்.
இதற்காக ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளையும் வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது.
பழைய கட்டுரையில் கூறியது போல எனக்குச் சரக்கு (கூட்ஸ்) ரயிலின் பின்புறம் நின்று கொண்டு செல்ல வேண்டும் என்பது சிறுவயது முதல் இருக்கும் விருப்பம்.
சரக்கு ரயிலின் பின்னே சிறு பெட்டி இருக்கும் அதில் உள்ளவர் பச்சை / சிவப்பு கொடி / விளக்குக் காட்டிக்கொண்டு செல்வார்.
அதுபோலச் செல்ல வேண்டும் என்பதே என் முதல் ரயில் ஆசை 🙂 .
பயணியாக
ரயில்வே பணியாளராக முடியாததால் பயணியாகப் பயணித்துக்கொண்டு இருக்கிறேன் .
ரயில்வேயில் ஏதாவது மாற்றம் நடைபெற்றால் எதோ என் சொந்த நிறுவனத்தில் மாற்றம் வந்தது போல மகிழ்ச்சியாக இருக்கும்.
இதே போல ஒரு எண்ணம் வருவது டிஜிட்டல் இந்தியா தொடர்பாகக் குறிப்பாக UPI எங்குப் பார்த்தாலும், இதே எண்ணம் வரும் .
இன்றும் சென்னை – ஈரோடு பயணம் 95% ரயில் பயணமாகத்தான் உள்ளது.
வேறு வழி இல்லை, சென்றே ஆக வேண்டும் என்றால் மட்டுமே பேருந்தைத் தேர்ந்தெடுப்பேன்.
பணியாளராக இல்லையென்றாலும் பயணியாக வாழ்நாள் முழுக்க ரயில் பயணம் தொடரும். நவீன ரயில்களிலும் விரைவில் பயணிக்க விருப்பம்.
ரயில் தடக்தடக் சத்தத்துடன், ரயிலுக்கென்றே உள்ள அலறும் ஹாரனுடன் அதி வேகத்தில் பயணிக்கும் மகிழ்ச்சி எனக்கு விமானப்பயணத்தில் கிடைத்ததில்லை.
முதல் ஓரிரு விமானப்பயணம் மட்டுமே சுவாரசியமாக இருந்தது ஆனால், ரயில் பயணம் இன்றுவரை சலித்ததில்லை.
தற்போது மொபைல் Ring & SMS Tone கூட ரயில் சம்பந்தப்பட்டது தான் 🙂 .
ரயில்வே துறை பணியில் சேர முடியவில்லையே என்ற என் ஏக்கம் ரயிலைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு ஓரத்தில் வலித்துக்கொண்டே இருக்கிறது.
ரயில் சம்பந்தப்பட்ட என் சில கட்டுரைகள்
சென்ட்ரல் பெயர் மாற்றம் | ரயில்வே தேர்வு ஊழல்
உள்ளூர் (suburban) ரயில்களில் பயணிப்பவரா?
சென்னை மெட்ரோ பயணிகள் அட்ராசிட்டிகள்
புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!
முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்
சுத்தமான சென்னை மெட்ரோ தூண்கள்
ரயிலில் ‘Boarding Point’ மாற்றுவது எப்படி?
ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நானும் ரயில்வே வேலைக்கு முயன்றேன் ஆனால் கிடைக்கவில்லை . (1980)
கிரி.. யானையை காணும் போது எனக்கு எந்த வித ஒரு வியப்பும் இல்லை. ஆனால் புறாக்கள் என்னை வேறு உலகில் சிறகடிக்க வைக்கும்..(இதை பற்றி முன்பே கூறியுள்ளேன்) ஆனால் ரயில் பற்றி … நினைக்கும் போதே (backround இல் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!!!!) பாடல் ஒலிக்கிறது.. ரயிலில் பயணித்தாலோ, பார்த்தாலோ, தொட்டாலோ ஆனந்தம் தான்..
என் குடும்பத்துக்கும் ரயிலுக்குமான உறவு வெகு காலமாக இருக்கிறது.. என் தாத்தா (தந்தையின் தந்தை ) ரயில்வேவில் டீசல் லோகோ பைலட் – ஓய்வு) தந்தை கூட பிறந்த அண்ணன் / தம்பி 5 பேரும் ரயில்வே பணி – என் தந்தை மட்டும் 8 வருடம் ரயில்வேவில் பணி புரிந்து, ராஜினாமா செய்து பின் சென்னை உயர்நீதி மன்றத்தில் 10 வருடம் பணி புரிந்து இறந்து விட்டார்) தந்தைக்கு பூர்விகம் விழுப்புரம்..
சின்ன வயதில் விடுமுறைக்கு சென்றாலே விழுப்புரத்தில் நான்கு விஷியங்கள் கண்டிப்பாக நடக்கும்… பட்டம் விடுவது, ரயில்வே மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது, ரயில்வே பணிமனைக்கு சென்று ஓடாமல் நிற்கும் பழைய எஞ்சின், பெட்டிகள் மீது ஏறி விளையாடுவது, ரயில்வே பார்க்கில் சலிக்க, சலிக்க ஊஞ்சல் ஆடுவது)…
ஒவ்வொரு ஆண்டும் இது விடுமுறையில் தவறாமல் நடக்கும்…தற்போது குடும்பத்தில் யாரும் ரயில்வே பணியில் இல்லை.. என் தந்தையின் அண்ணன் பையன் மட்டும் திருச்சி ரயில்வேவில் CONTROL ரூமில் பணி புரிகிறான்.. எனக்கு மிகவும் நெருக்கமானவன் .. உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், கூறவும் .. இவன் உதவுவான்.. டிக்கெட் குறித்த சந்தேகம், ரயில் நேர விவரம் , பயண விவரம்..ரயில் தாமதம் போன்றவைகள்…
நீங்கள் கூறுவது போல ஒரு சமயத்தில் எனக்கும் ரயில்வே பணி மீது அதீத ஆர்வம்… முயற்சியும் செய்தேன்.. ஆனால் பண தேவை அதிகம் இருந்ததால் வெளிநாடு வந்து விட்டேன்.. தற்போது வயதும் கடந்து விட்டது.. என் பையனுக்கு சிறு வயது முதல் ரயில் என்றால் உயிர்.. மனைவிக்கு ரயில் பயணம் சுத்தமாக பிடிக்காது.. விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது நானும் பையனும் மட்டும் சில ரயில் பயணங்களை தனியாக மேற்கொள்ளுவோம்…
அவன் அதிகம் ரயில் சம்பந்தபட்ட பொருட்களை வைத்து தான் விளையாடுவான்.. ஒரு நாள் கூட அவனை நான் கட்டாயப்படுத்தியது இல்லை.. ஆனால் இயல்பாகவே அவனுக்கு ரயில் மீது காதல் வந்து விட்டது.. எனக்கும் மகிழ்ச்சி தான்.. நான் என் வாழ்வில் அதிகம் நேசித்தது.. நேசிப்பது தற்போதும் , கிரிக்கெட் / ரயில்.. இரண்டுமே மனைவிக்கு பிடிக்காது.. குறைந்தபட்சம் பையனாவது இதை விரும்புகிறான்.. என்பதில் ஒரு ஆனந்தம்..
அவன் அதிகம் விரும்புவது பழைய டீசல் என்ஜின் தான்.. திருச்சிக்கு (பெரியப்பா பையன் வீட்டுக்கு) விடுமுறைக்கு சென்ற போது, திருச்சி பொன்மலை பணிமனைக்கு சென்று முழுவதும் சுற்றி பார்த்தோம்.. என் பையனுக்கு ஆர்வத்தில் தலை / கால் புரியவில்லை.. பின்பு ஒரு மியூசியம் சென்று பழைய புகைப்படம் மற்றும் பழைய இன்ஜின், பெட்டிகள் பார்த்தோம்.. இந்த பயணத்தில் சக்தியும் கூட இருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.. தற்போது நான் ரயில் பயணம் அதிகம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லையென்றாலும் “ரயில்” என்றுமே என் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கும்… பகிர்வுக்கு நன்றி கிரி..
@வடுவூர் குமார் நீங்களாவது முயன்றீர்கள் 🙁
@யாசின்
“புறாக்கள் என்னை வேறு உலகில் சிறகடிக்க வைக்கும்..”
பலமுறை கூறி இருக்கிறீர்கள், நன்கு நினைவுள்ளது.
“டிக்கெட் குறித்த சந்தேகம், ரயில் நேர விவரம் , பயண விவரம்..ரயில் தாமதம் போன்றவைகள்…”
தற்போது சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மேம்படுத்தி விட்டார்கள். எளிதாக அனைத்தையும் இணையத்திலேயே பெற முடிகிறது.
தகவலுக்கு நன்றி. தேவைப்பட்டால் கேட்கிறேன்.
“பண தேவை அதிகம் இருந்ததால் வெளிநாடு வந்து விட்டேன்.”
எனக்கும் இதே காரணத்தால் என் விருப்பங்களை பற்றி யோசிக்க முடியவில்லை.
“நான் என் வாழ்வில் அதிகம் நேசித்தது.. நேசிப்பது தற்போதும் , கிரிக்கெட் / ரயில்.. இரண்டுமே மனைவிக்கு பிடிக்காது”
🙂 🙂 நீங்க இவற்றைக் கூறும் போது எனக்கு சிரிப்பாக இருக்கும்.
“என் பையனுக்கு ஆர்வத்தில் தலை / கால் புரியவில்லை.. பின்பு ஒரு மியூசியம் சென்று பழைய புகைப்படம் மற்றும் பழைய இன்ஜின், பெட்டிகள் பார்த்தோம்.. இந்த பயணத்தில் சக்தியும் கூட இருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.”
இதை என்னால் உணர முடிகிறது. மகிழ்ச்சி யாசின் 🙂 .