ஆழ்மனதின் அதிசய சக்தி

10
ஆழ்மனம்

வ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஆழ்மனம் எவ்வளவு முக்கியமானது என்பதை The Miracles of Your Mind புத்தகம் விவரிக்கிறது. Image Credit

ஆழ்மனம்

அனைவரிடமும் Conscious Mind (சுய நினைவு) Subconscious Mind (ஆழ்மனம்) என்ற இரு பிரிவுகள் உள்ளன. சுய அறிவுடன் செய்வது, மற்றொன்று நம் ஆழ்மனதிலிருந்து இயல்பாக இயக்கப்படுவது.

எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

Conscious Mind (சுய நினைவு)

ஒருவருடன் பேசுவது, ஒரு செயலைப் புதிதாகச் செய்வது போன்றவை. இவை நம் சுயநினைவுடன் நடப்பவை.

Subconscious Mind (ஆழ்மனம்)

இவை தொடர் பழக்கங்களினால் ஆழ்மனதில் பதியப்பட்டுத் தானியங்கியாக, நம் முயற்சிகள் இல்லாமலே நடப்பவை. திரும்பத்திரும்பச் செயல்படுத்தும் போது, நினைக்கும் போது, அவை தானாகவே நடைபெறுகிறது.

எடுத்துக்காட்டு, பல் துலக்குவது, வாகனம் ஓட்டுவது.

பல் துலக்கும் போது வேறு எதையாவது நாம் நினைத்துக்கொண்டு இருந்தாலும், நம் கைகள் தானாகவே அனைத்தையும் செய்கிறது.

சுய நினைவில் வாகனம் ஓட்டப்பழகுகிறோம். எனவே, பழகும் போது ஒவ்வொரு முறை கியர் போடும் போதும் பொறுப்பாகக் கவனித்து, இயக்கிறோம்.

ஆனால், பழகி ஆழ்மனதில் இருத்திவிட்டால், கியர், க்ளட்ச், வேகம், நிறுத்தம் அனைத்தையும் தானியங்கியாகவே நம் உடல் செய்யப்பழகி விடுகிறது.

அதாவது இதற்காகத் துவக்கத்தில் செய்தது போலக் கூடுதல் முயற்சிகளை எடுக்காமலே நடக்கிறது. காரணம், இவை நம் ஆழ்மனதில் பதிந்து விடுவதால்.

எனவே தான், ஒருவர் தன்னையே மறந்தாலும், வாகனம் ஓட்டுவதையோ, நீச்சல் அடிப்பதையோ மறப்பதில்லை.

தட்டச்சு பழகும் போது ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்து அடிப்போம் ஆனால், பழகி விட்டால் நம் விரல்கள் தானாகவே மிக வேகமாக இயங்குகிறது.

எதனால் என்று யோசித்துள்ளீர்களா? யார் இயக்குவது? மூளை, ஆழ்மனம்.

நல்லது கெட்டது

மேற்கூறியவை நம் நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாகக் கூறியவை.

இதன் இன்னொரு பகுதி தான் எண்ணங்கள்.

நாம் நம்புவதை ஆழ்மனம் நடத்திக்காட்டுகிறது. இதையே ‘நம்பிக்கையே வாழ்க்கை‘, ‘எண்ணம் போல வாழ்க்கை‘ என்கிறார்கள்.

ஆழ்மனதுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று தெரியாது. ஆழ்மனம் ஒரு கணினி போல. அதற்கு என்ன பயிற்றுவிக்கப்படுகிறதோ அதைச் செயல்படுத்தும்.

ஒரு செயலை நடக்கும் என்று நேர்மறையாக நம்பினால், அதை நடத்திக்காட்டும். ஒரு செயலை நடக்காது என்று எதிர்மறையாக நினைத்தால், அதை நடத்தாது.

இதையே தான் ‘என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்‘ என்றார் புத்தர்.

எனவே, தொடர்ந்து ஒன்றை உறுதியாக நம்பி ஆழ்மனதை நம்ப வைத்து விட்டால், அது பல அற்புதங்களைச் செய்யும் என்பது தான் இப்புத்தகத்தின் சுருக்கம்.

எனவே, எதிர்மறை சிந்தனைகளை அதிகம் நினைத்தால், எதிர்மறையான சம்பவங்களே உங்கள் வாழ்வில் நடைபெறும்.

அதே நேர்மறையாக நினைத்தால், நேர்மறை நிகழ்வுகள் தொடரும்.

உடல்நலம்

உடல் நலத்தில் பிரச்சனை உள்ளது என்றால், எனக்கு இது சரியாகி விடும், இப்பிரச்சனைகளிலிருந்து விடுபடுவேன் என்று ஆழ்மனதை நம்ப வைத்து விட்டால், நம் உடல் பிரச்சனைகளைச் சரி செய்து விடும்.

மாறாக, எதிர்மறையாக நினைத்துக்கொண்டிருந்தால், நம் உடல் நிலையை மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும்.

நம்பிக்கை என்பது அவநம்பிக்கையாக இருக்கக் கூடாது. முழுமையாக நம்பி ஆழ்மனம் நம்பும்படி செயல்பட்டாலே இதனுடைய பலன்கள் தெரியும்.

நான் நம்புகிறேன் என்று மேலோட்டமாகக் கூறிக்கொண்டு ஆனால், பயத்துடன், சந்தேகத்துடன் இருந்தால், எதுவுமே நடக்காது.

எனவே, முழுமையான நம்பிக்கை மிக முக்கியம்.

நம் உடல் பிரச்சனை சரியாகனும், நல்ல மதிப்பெண் பெறனும், பதவியை அடையனும் என்று விருப்பப்பட்டால் மட்டும் போதாதாது அதை முழுதாக நம்புவதோடு அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு தொடரும் போது அவை நடைபெறுவதை நம் வாழ்க்கையில் காணலாம்.

எனவே, விருப்பம் வேறு நம்பிக்கை வேறு. ஆசைப்படுவதால் மட்டுமே எதுவுமே நடக்காது. முழுமையாக நம்பனும் அது தொடர்பான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

இவை உண்மையா?

100% உண்மை என்று கூற முடியும்.

உடல்நலம் உட்பட மற்ற விருப்பங்கள் குறித்து எனக்குத் தெரியவில்லை ஆனால், நேர்மறையாக நினைத்தால், நேர்மறையான சம்பவங்களே நடக்கும்.

இதை உறுதியாகக் கூறக்காரணம், அதற்கு எடுத்துக்காட்டே நான் தான்.

தோராயமாக 2016 ல் இருந்து நேர்மறையாக நினைத்து நடக்கிறேன். துவக்கத்தில் கடினமாக இருந்தது ஆனால், அவை ஆழ்மனதில் பதிந்ததால் அதற்குக் கூடுதல் முயற்சிகள் பின்னர் தேவைப்படவில்லை.

அதாவது, தட்டச்சுச் செய்வது போல, வாகனம் ஓட்டுவது போல முயற்சிகளை எடுக்காமல் இயல்பாகவே நடக்கிறது.

இதை விட முக்கியம், என்னிடம் யாரும் சண்டையிடுவதில்லை, கோபப்படுவதில்லை, எதிரியாக நினைப்பதில்லை. பிரச்சனைகளைச் செய்வதில்லை.

அனைத்துமே சுமூகமாக நடைபெறுகிறது.

என் தளத்தில் எழுதப்படும் மாற்று கருத்துகளால் சிலர் என்னை வெறுக்கலாம், கோபப்படலாம், எரிச்சல் அடையலாம் ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கையில் எவரும் இவ்வாறு நடந்து கொள்வதில்லை.

ஓரிரு நாட்கள், ஓரிரு மாதங்கள் அல்ல, பல வருடங்களாக. அறிமுகமில்லாதவர் கூட நட்பாக நடந்து கொள்கிறார்கள், உதவுகிறார்கள்.

இவையனைத்தும் நேர்மறையாகச் சிந்திக்க ஆரம்பித்த பிறகு நடக்க ஆரம்பித்தது. துவக்கத்தில் தற்செயலாக (coincindence) நடப்பதாக நினைத்தேன் ஆனால், 5+ வருடங்களாகத் தற்செயலாக நடக்குமா?!

நம்ப மாட்டீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால், உண்மை.

ஏதாவது வெறுக்கும்படியாக நடந்துள்ளதா என்று யோசித்துப்பார்த்தாலும் எந்த மோசமான சம்பவங்களும் பிடிபடவில்லை. சமூகக் கோபங்கள், வருத்தங்கள் உள்ளது ஆனால், தனிப்பட்ட முறையில் இல்லை.

எனவே தான் உறுதியாகக் கூறுகிறேன்.

ரஜினி

இதை எனக்குப் பிடித்த தலைவர் ரஜினியை வைத்தே கூறுகிறேன்.

ரஜினியை அவரது கருத்துகளால், செயல்பாடுகளால், அரசியல் நிலைப்பாடு காரணமாகப் பலர் கடுமையாக விமர்சிக்கலாம், தூற்றலாம் ஆனால், அவரை நேரில் சந்தித்தால் எதிர் சூழ்நிலை நிலவுகிறது.

அதாவது, அவரால் ஈர்க்கப்படுகிறார்கள், நட்பாகி விடுகிறார்கள், பாராட்டுகிறார்கள், அவரது நேர்மறைப் பேச்சால் கவரப்பட்டு மதிப்புக்கொள்கிறார்கள்.

இதற்கு, அவரது நேர்மறையான எண்ண அலைகளே காரணம் என்று கருதுகிறேன்.

அதே போல நேர்மறையாகச் சிந்திப்பதால், எதிர்மறை எண்ணங்கள் இல்லாததால் என்னிடம் வருபவர்களும் அன்பாக நடந்து கொள்கிறார்கள் என்று கருதுகிறேன்.

நேர்மறையாகச் சிந்திக்கும் போது நமது எண்ண அலைகள் (Positive Vibe) நம்மைச் சுற்றி இருக்கும். எனவே, வெறுப்புணர்வோடு வருபவர்கள் கூட அந்த எண்ண அலைகளால் மனம் மாறி விடுவதாகப் புரிந்து கொள்கிறேன்.

மேற்கூறியவை என் புரிதல், இது தான் சரி என்று கூறவில்லை. இப்படி இருக்கலாம் என்று நினைக்கிறன், அவ்வளவே!

கடவுளா ஆழ்மனமா?

ஆழ்மனம் நடத்துவதை அறிவியலாகக் கருதலாம், கடவுள் நம்பிக்கையாகவும் கருதலாம். நான் இரண்டையுமே நம்புகிறேன்.

சிலர் ஸ்ரீ ராம ஜெயம் போன்றவற்றை 1000 முறை எழுதுவார்கள். இது பண்டை காலத்திலிருந்து வரும் வழக்கம். ஒருவேளை ஆழ்மனதில் நம்பிக்கையைப் பதிய வைக்க முன்னோர்கள் எடுத்த முயற்சியாகவும் இருக்கலாம்.

கடவுள் செய்ததாக நம்புகிறோம்! அது நம் ஆழ்மனதின் சக்தியாகவும் இருக்கலாம். நமக்கு மேலே ஒரு சக்தியுள்ளது என்பதை முழுமையாக நம்புகிறேன்.

காரணம், என் வாழ்க்கையில் இது போல எதையும் பின்பற்றாமல் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இவை ஆழ்மனதையும், நேர்மறை எண்ணங்களையும் தாண்டி எதோ உள்ளது என்று உணர்த்துகிறது.

அதை நான் கடவுளாக, கர்மாவாக நினைக்கிறன். என் உடன் பயணிப்பதாகவும், என்னைக் காப்பதாகவும் நம்புகிறேன். நான் இவ்வாறு நினைக்க நியாயமான, உண்மையான காரணங்களும் உள்ளன.

எனவே, ஆழ்மனம் / நம்பிக்கை என்பது விளையாட்டல்ல.

எப்படிச் செயல்படுத்துவது?

இரவு 9 -10 மணிக்குள் தூங்கி விடுவது நல்லது. தூங்கும் முன் மனதை அமைதியாக வைத்து நம் நம்பிக்கைகளை ஆழ் மனதில் பதிய வைக்க வேண்டும்.

காலை 4 மணிக்கு மனம் அமைதியாக உள்ள நேரத்தில், உடலில் புதுச் செல்கள் உருவாகும் நேரத்தில் நம் நம்பிக்கைகளை அழுத்தமாகத் தியானம் செய்ய வேண்டும்.

உடல் நலப்பிரச்னைகள் சரியாகி விடும் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

அதிகாலை நேரத்தில் செல்கள் புதிதாக உருவாகும் நேரத்தில் இதைச் செய்யும் போது உடல் பிரச்சனைகள் சரியாகும் என்று ஆசிரியர் கூறுகிறார். அறிவியல் பூர்வமாக உண்மையா என்று தெரியாது, இவர் கூறியதை கூறியுள்ளேன்.

முக்கியமாக, நம் நம்பிக்கை முழுமையானதாக இருக்க வேண்டும், அவநம்பிக்கை, சந்தேகம் கூடாது. இருந்தால், இம்முயற்சி பலனளிக்காது.

சிலவற்றைப் பின்பற்றி வருகிறேன், அவை பலனளித்ததா என்று பின்னர் தெரிவிக்கிறேன்.

ஆசிரியர் Joseph Murphy

இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் Joseph Murphy, ஆழ்மனதின் அற்புதங்களை மிக அற்புதமாக விளக்கி இருக்கிறார், குறிப்பாக முதல் 2 அத்தியாயங்கள்.

இதைத் தமிழில் மிகச்சிறப்பாக விளக்கிப் பேசியுள்ளவருக்கு என் பாராட்டுகள்.

அழகான, பிசிறில்லாத, சீரான குரல்.

எப்படி இவ்வாறு பேச முடிகிறது என்று வியப்பாக உள்ளது! இதைக்கேட்டால் நீங்களும் நான் கூறுவதை உண்மை என்று நம்புவீர்கள்.

எந்தத் தடங்கலும், திணறலும் இல்லாத தெளிந்த நீரோடை போல அற்புதமான குரலில் எளிமையான விளக்கம்.

அவசியம் கேட்க வலியுறுத்துகிறேன். 6 மாதங்களுக்கு ஒரு முறை திரும்பக் கேட்கும் போது (குறைந்த பட்சம் முதல் இரு அத்தியாயங்கள்) எந்த நிலையில் உள்ளோம் என்பதை உணர முடியும்.

அமைதியான சூழலில், மற்றவர்கள் தொந்தரவு, வேறு பணிகளில் கவனச்சிதறல் இல்லாத நேரத்தில் கேட்கும்படி வலியுறுத்துகிறேன்.

இந்தவொரு அற்புதமான புத்தகத்தை, குரல் பதிவைப் பரிந்துரைத்த JaiSuba Moorthik க்கு மனமார்ந்த நன்றிகள்.

தொடர்புடைய கட்டுரைகள்

நம்பினால் நம்புங்கள்

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

எண்ணம் போல் வாழ்க்கை என்றால் என்ன?

கடவுளை எப்போது நினைப்போம்?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

10 COMMENTS

  1. Hi கிரி,

    என்னோடு செம கோபத்தில் இருப்பீங்க. எனக்கு கோபம் இல்லை. 2007இல் இருந்து உங்கள் தளத்தில் இருக்கிறேன். என்னையும் உங்களையும் இணைக்கும் விடயம் ரஜினி தான்.

    நேர்மறை எண்ணங்கள் பற்றி பேசுகிறீர்கள். நல்ல விஷயம். நீங்கள் முஸ்லிம்கள் விடயத்தில் எதிர்மறையாக சிந்திக்குறீர்கள். நீங்கள் பார்க்கும் படங்கள் விமர்சனம் எழுதும் பெரும்பாலான படங்கள் இஸ்லாம் விரோத முஸ்லிம் விரோதமான படங்களே.

    நீங்கள் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணம் தரும் மாநாடு, மாமனிதன், அயோத்தி போன்ற படங்களை பார்ப்பதில்லையா?

    விமர்சனம் எழுதாதை வைத்து தான் சொன்னேன்.

    சுதந்திரத்துக்கு முன் இருந்து இப்போது வரை முஸ்லிம்கள் இந்தியாவுக்கு நிறைய நன்மைகள் (ஒரு சில காவாலி முஸ்லிம்கள் செய்கின்ற தீய செயல்கள் காரணமாக) செய்து இருந்தும் சுயநல அரசியல்வாதிகள் தான் முஸ்லிம்கள் வெறுப்பு அரசியல் செய்கிறார்கள்.

    நீங்கள் எங்களை பற்றி நேர்மறை யாக சிந்திக்க வேண்டுகிறேன்.

    இந்துக்கள் தங்கள் மதத்தை பரப்ப பாதுகாக்க பூரண உரிமை உள்ளது. அடுத்த மதத்தை அழித்து தன் மதத்தை ஒரு நாளும் வாழ வைக்க முடியாது.

    ரஜினி இலங்கை மக்களுக்கு ஆதரவாக பேசிய பேச்சில் அநியாயம் செய்யப்பட்ட இலங்கை மக்களின் மூச்சு காற்று இலங்கைக்கு பெரும் கேட்டினை தரும் என்று கூறினார். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது இலங்கை அனுபவிக்கிறது.
    நாளைக்கு இந்த நிலை இந்தியாவுக்கு வர கூடாது.

    எதிர்மறையாக சிந்திக்கும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை‌ அடக்கி ஆட்சியமைக்க நினைக்கும் அரசியல் அமைப்புக்களை நீங்கள் ஆதரிப்பது நீங்கள் நேர்மறையாக சிந்திப்பவர் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    இவ்வளவு காலம் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த சமூகம் இனியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும். இது தான் நாட்டுக்கு நல்லது.

    உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் I’m Sorry.

  2. ‘’ சுய நினைவில் வாகனம் ஓட்டப்பழகுகிறோம். எனவே, பழகும் போது ஒவ்வொரு முறை கியர் போடும் போதும் பொறுப்பாகக் கவனித்து, இயக்கிறோம்.

    ஆனால், பழகி ஆழ்மனதில் இருத்திவிட்டால், கியர், க்ளட்ச், வேகம், நிறுத்தம் அனைத்தையும் தானியங்கியாகவே நம் உடல் செய்யப்பழகி விடுகிறது.’’

    நானும் இதை நினைத்து மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளேன். நான் நினைத்ததை அப்படியே கூறியுள்ளீர்கள். என்னால் முடியும் என்று ஆழமாக நம்பி நிறைய வெற்றி பெற்றுள்ளேன். இப்போதும் நிறைய விஷயங்களில் அப்படி நினைத்துதான் வாழுகிறேன். இந்த கட்டுரை படித்தபின்பு இன்னும் இதன் மேல் நம்பிக்கை வந்துவிட்டது.

  3. @Fahim

    “என்னோடு செம கோபத்தில் இருப்பீங்க. எனக்கு கோபம் இல்லை.”

    எனக்கு எதுக்கு உங்க மேல கோபம்? என்னோட சொத்தைப் புடுங்கிட்டீங்களா? இல்லை எனக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சனையை உண்டு செய்து விட்டீர்களா? 🙂 .

    விவாதத்தை எப்போதுமே வரவேற்கிறேன். விவாதமே எப்போதும் என் தவறுகளைச் சுட்டிக்காட்ட உதவும்.

    அதோடு என்ன விவாதம் நடந்தாலும், அவை அதோடு முடிந்து விடும். அதையே நினைத்துக்கொண்டு இருக்க மாட்டேன்.

    எதையும் மனதில் வைத்துக்கொள்ளமாட்டேன் காரணம், பல கட்டுரைகளில் கூறியபடி எதையும் மனதில் சேர்த்து வருந்திக் கொள்ள மாட்டேன்.

    எனவே, எந்தக்கோபமும் உங்கள் மீது இல்லை. ஒரு பிரச்சனை ஒரு மணி நேரத்துக்கு மேல் அல்லது ஒரு இரவுக்கு மேல் என்னிடம் தங்காது.

    “என்னையும் உங்களையும் இணைக்கும் விடயம் ரஜினி தான்.”

    மகிழ்ச்சி

    “நீங்கள் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணம் தரும் மாநாடு, மாமனிதன், அயோத்தி போன்ற படங்களை பார்ப்பதில்லையா?

    விமர்சனம் எழுதாதை வைத்து தான் சொன்னேன்.”

    மாநாடு படம் வெளியாகி ரொம்ப நாட்களுக்கு பிறகு OTT யில் பார்த்தேன், எனவே, எழுத தோன்றவில்லை.

    மாமனிதனும் OTT யில் பார்த்தேன். முதல் பாதி பிடித்தது, சிறப்பாக இருந்தது ஆனால், குடும்பத்தை தவிக்க விட்டுட்டு விஜய் சேதுபதி சென்ற பிறகு ஈர்க்கவில்லை.

    அதற்கான காரணமும் ஏற்புடையதாக இல்லை. எனவே, எனக்கு பிடிக்கவில்லை.

    அயோத்தி இன்னும் பார்க்கவில்லை.

    உண்மையில் எனக்கு தமிழ் படங்களில் ஆர்வமில்லை. ஏராளமான படங்கள் பார்க்காமல் அப்படியே உள்ளது.

    பெரும்பாலும் தற்போது தமிழ் படங்கள் இடதுசாரி சிந்தனை கருத்துகளில் வருவதாலும், ஒரே மாதிரியான படங்களாக வருவதாலும் பார்க்க தோன்றுவதில்லை.

    “நீங்கள் எங்களை பற்றி நேர்மறை யாக சிந்திக்க வேண்டுகிறேன்.”

    உங்களுடைய அனைத்து கருத்துகளுக்கும் பதிலளிக்க ஆர்வமாக இருக்கிறேன் ஆனால், இக்கட்டுரை நேர்மறை எண்ணங்களை பற்றியது.

    இக்கட்டுரையில் இதைப்பற்றி விவாதம் செய்து பின்னர் படிக்க வருபவர்களுக்கு ஒரு வெறுப்புணர்வை, எதிர்மறை எண்ணங்களைக் கொடுக்க விரும்பவில்லை.

    எனவே, இதே கேள்விகளைப் பொருத்தமான கட்டுரையில் கேளுங்கள், நிச்சயம் பதில் அளிக்கிறேன்.

    உங்களுக்கு எந்த அளவுக்கு உங்கள் மதத்தின் மீது பற்று, அக்கறை உள்ளதோ அதே அளவு எனக்கும் உள்ளது.

    எனவே, என் எண்ணங்களை, பாதிக்கும் சம்பவங்களை நாகரீகமாக தொடர்ந்து வெளிப்படுத்துவேன். எனக்கு எந்தத் தயக்கமோ, பயமோ, கிடையாது.

    காரணம், என் மனசாட்சிக்கு சரி என்று தோன்றுவதை மட்டுமே எழுதுவேன். தவறு என்று தோன்றினால், நானே நினைத்தாலும் எழுத முடியாது.

    “ரஜினி இலங்கை மக்களுக்கு ஆதரவாக பேசிய பேச்சில் அநியாயம் செய்யப்பட்ட இலங்கை மக்களின் மூச்சு காற்று இலங்கைக்கு பெரும் கேட்டினை தரும் என்று கூறினார். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ”

    நீங்கள் இதை நினைவு வைத்து இருப்பது மகிழ்ச்சி.

    “நீங்கள் நேர்மறையாக சிந்திப்பவர் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.”

    இதை பற்றித் தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்.

    “உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் I’m Sorry.”

    நான் விவாதமாக, மாற்று கருத்துகளைக் கூறுபவர்களை வரவேற்கிறேன். விவாதம் ஆபாசமாக செல்லாதவரை எனக்கு பிரச்சனையில்லை.

    ஒருவேளை அப்படி நடந்தால், புறக்கணித்து விடுவேன். அது போல நடப்பது அரிது.

  4. @ஹரிஷ்

    “இந்த கட்டுரை படித்தபின்பு இன்னும் இதன் மேல் நம்பிக்கை வந்துவிட்டது.”

    இக்காணொளியை கேளுங்கள் மேலும் நம்பிக்கை அதிகரிக்கும்.

  5. கிரி.. இந்த காணொளியை நான் கேட்கவில்லை.. ஆனால் என்னுடைய தனிப்பட்ட கருத்தை நான் பகிர்கிறேன்.. கடந்த சில வருடங்களாக என்னுடைய எண்ணங்களில் நிறைய மாற்றம் ஏற்படுவதை உணர்கிறேன்.. முன்பு ரசித்த பல விடயங்கள் தற்போது ரசிக்க தோன்றவில்லை.. வயதின் முதிர்ச்சியா இல்லை என் மன மாற்றமா என தெரியவில்லை..

    அது போல என்னை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள் 90% எதிர்புறமாக நடக்கிறது.. முன்பு எல்லாமே சரியாக இருந்தது போல இருந்த உணர்வு.. தற்போது எல்லாம் தலைகீழாக மாறி போனது போல ஒரு எண்ணம் ஏற்படுகிறது.. உண்மையில் சொல்ல போனால் எதிர்காலத்தை குறித்த அச்சம் தற்போது ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை..

    இது ஒரு மாயை , எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருந்தாலும், இது தவறு என்று தெரிந்தாலும் இந்த எண்ணங்கள் அவ்வப்போது வந்து போவதை மாற்ற முடியவில்லை.. தற்போது அதிகம் பேசுவதை தவிர்த்து பிறர் பேசுவதை கேட்க விரும்புகிறேன் .. அமைதியாக இருப்பதை அதிகம் நேசிக்கிறேன்.. நேற்று கூட வாட்சப்பில் வந்த ஒருவரி மிகவும் பிடித்து போனது .. எனக்காகவே யாரோ ஒருவர் எழுதியது போல இருந்தது..

    மௌனம்..

    சில நேரங்களில் ஆயுதம்…
    பல நேரங்களில் கவசம்..

    நான் தற்போது இந்த கவசத்தை தான் விரும்புகிறேன்.. உண்மையில் என்னுடைய தற்போதைய மனநிலைக்கு இந்த பீலிங் ரொம்ப பிடித்து இருக்கிறது.. மாற்றங்கள் வாழ்வில் நிகழும் என்பதில் எப்போதும் மாற்றமில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  6. @யாசின்

    நீங்கள் கூறியதை வைத்தும், இது தொடர்பான என் அனுபவத்தை வைத்தும் உங்களுக்கு மன அழுத்தம் உள்ளது என்பதை உணர முடிகிறது.

    எதிர்காலம் பற்றிய எண்ணங்களாலும் இக்குழப்பங்கள் ஏற்படலாம் ஆனால், இது அனைவருக்கும் பொதுவானது.

    காரணம், ஒவ்வொருவரும் இந்தச் சூழ்நிலையை எப்போதாவது கடந்து வருவோம். எனவே, வழக்கமான ஒன்று தான்.

    பிரச்சனைகள் அதிகரிக்கும் போது அமைதியாக இருப்பது சரியான ஒன்று தான். காரணம், நமக்கு நேரம் சரியில்லை என்றால் என்ன செய்தாலும் தவறாகவே முடியும்.

    இதற்கு அமைதியாக இருப்பது பிரச்சனைகளைக் குறைக்கும் தவிர்க்காது.

    இக்கட்டுரையை திரும்ப ஒருமுறை படித்துப்பாருங்கள் https://www.giriblog.com/how-to-cross-bad-time/

    நீங்கள் குறிப்பிட்டது போல வயதும் ஒரு காரணமாக இருக்கலாம், அதோடு சிலவற்றை பகிர்ந்து கொள்ள சரியான நபர் உங்களுடன் இல்லாததும் காரணமாக இருக்கலாம்.

    எனவே, நம்பகமான யாருடனாவது பேசிப்பாருங்கள். நிச்சயம் மாற்றம் தெரியும்.

    இக்கட்டுரையை படித்துப்பாருங்கள் https://www.giriblog.com/how-will-be-the-mental-pressure/

    சில நேரங்களில் அமைதியாக இருப்பது சரி என்றாலும், அதையே தொடர்ந்தால் வாழ்க்கையே வெறுமையாகி விடும்.

    எனவே, நமக்குப் பிடித்த ஏதாவது ஒன்றில் நம் மனதை கண்டிப்பாக திருப்பியே ஆக வேண்டும். இல்லையென்றால், பெரிய சிக்கலில் கொண்டு சென்று விட்டு விடும்.

    நேர்மறை எண்ணங்களை நீங்கள் பின்பற்றினால் உங்களிடையே பிரச்சனைகள், குழப்பங்கள் சரியாகும்.

    இது 100% உண்மை. என்னை நம்புங்கள்.

    இணைக்கப்பட்டுள்ள காணொளியை நீங்கள் கட்டாயம் கேட்க வலியுறுத்துகிறேன். நிச்சயம் இவற்றில் உள்ளதை பின்பற்றும் போது உங்களிடையே மாற்றம் தெரியும்.

    புறக்கணிக்க வேண்டாம்.

  7. மிக்க நன்றி ஐயா. வாழ்க்கை சார்ந்த பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தான் ஆழ்மனம் என்றால் என்ன என்று தேடினேன். பதில் புரிந்தது. மனம் தெளிந்தது. 🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!