புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்

2
Chennai Central புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்

ல காலமாக இது நடக்காதா என்று நான் எதிர்பார்த்த சென்னை சென்ட்ரல் புதுப்பிப்பு பணி ஒரு வழியாக நடைபெறத் துவங்கி உள்ளது.

புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வாய்ப்பைத் தேடி வரும் மக்களுக்கு நம்பிக்கையளிப்பது சென்னையின் பெருமை “சென்னை சென்ட்ரல்” ஆனால், பராமரிப்போ படு மோசம்.

உள்ளே நுழையும் போது ஒவ்வொருமுறையும் “நம்ம சென்ட்ரலை அழகாகப் பராமரித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நமக்கும் பெருமையாக இருக்குமே!” என்று ஏக்கமாக இருக்கும்

உள்ளே செல்லும் போதே சிறுநீர் நாற்றத்துடன், குப்பைகளை, ஒழுங்கற்ற பகுதிகளைக் கடந்து செல்லும் போது நினைக்காத நாளில்லை.

தற்போது முகப்பு அப்படியே தான் உள்ளது, உள்ளே தான் மாற்றம் செய்து வருகிறார்கள். எப்படியோ முயற்சியை எடுத்து இருக்கிறார்களே! என்பதில் மகிழ்ச்சி.

வாங்க! என்ன மாற்றங்களை நான் கண்டேன் என்று படங்களுடன் கூறுகிறேன் 🙂 .

மாற்றங்கள் என்ன?

பயணிகள் அமரும் முதன்மைப் பகுதியில் சுவற்றில் பழைய சென்ட்ரல், ரயில்கள் குறித்த கறுப்பு வெள்ளை படங்கள் காணப்படுகின்றன, இது ரொம்ப நாளாக இருக்கிறது.

தற்போது இதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஓட்டை உடைசலாக இருந்த கூரைப் பகுதியைக் கிட்டத்தட்ட முழுமையாக மாற்றி இருக்கிறார்கள். ஒட்டடை, ஓட்டைகள் இல்லாமல் அசத்தலாக உள்ளது.

சென்னை சென்ட்ரல் துவங்கிய பிறகு ஒட்டடை அடிக்கவே இல்லையோ! என்று சந்தேகத்தைக் கிளப்பி வந்த மின் விசிறிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

சுவரில் Wire உள்ள பகுதிகளில் அட்டையால் மறைத்து, பார்க்க அழகாக்கி இருக்கிறார்கள்.

ஆறாவது மற்றும் ஏழாவது நடைமேடைக்கு நடுவே இருந்த பெரிய அறையில் புதிதாக இருக்கைகள் அமைத்து, பயணிகள் அமர வசதியை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

ரயில்கள் வருகை புறப்பாடு குறித்த மின் தகவல் பலகை நடைமேடையில் வைக்கப்பட்டுள்ளது. இது முன்பு இல்லை. இதோடு இலவச இணைய WiFI பயன்பாடு குறித்த அறிவிப்பும் உள்ளது.

சில நடைமேடைகளே புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இரவில் மின் விளக்கு வெளிச்சம் குறைவாக இருக்கும், பல இடங்களில் விளக்கே இருக்காது, இருந்தாலும் எரியாது.

தற்போது மின் விளக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நடைமேடை பளிச்சென்று உள்ளது.

நடைமேடை எண் குறித்த அறிவிப்புகள் பச்சை வண்ணத்தில் மாற்றப்பட்டுள்ளது, அப்பகுதி கம்பங்கள் வர்ணம் பூசப்பட்டுப் பளபளக்கின்றன.

நடைமேடை வழியில் சில அறைகள் இருந்தன, இவை நடந்து செல்பவர்களுக்குத் தடையாகவும், இடத்தை அடைத்துக்கொண்டும் இருந்தன.

அவை தற்போது நீக்கப்பட்டு நடைமேடை பெரியதாகவும், நெரிசல் இல்லாமல் பயணிகள் நடக்க வசதியாகவும் உள்ளது.

இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, முன்பு வெகு குறைவான இருக்கைகளே இருந்தது. தற்போது இருக்கைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு மேலும் பல புதிய இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மிக வசதியாக உள்ளது.

எப்போதுமே தண்ணீர் ஒழுகிக்கொண்டு என்னைக் கடுப்பேற்றும் குழாய்கள், வர்ணம் தீட்டப்பட்டுப் புதுப்பொலிவுடன் இருந்தது.

செய்தியில் 600 ரயில் நிலையங்களைப் புதுப்பிக்கப்போவதாகவும், சில்லறை விற்பனை நிலையங்கள், கழிவறை, வாகன நிறுத்தம், உணவுக்கூடங்கள் பராமரிப்புப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சென்ட்ரல் புதுப்பிப்புப் பணிகள் தொடரும் என்றும், முகப்பு பகுதியையும் சிறப்பாகப் புணரமைப்பார்கள் என்றும் நம்பிக்கையோடு உள்ளேன்.

விரைவில் புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல் 🙂 .

கொசுறு

விரைவில் மெட்ரோ ரயில் சென்னை சென்ட்ரலில் வர இருக்கிறது.

இது திறக்கப்பட்ட பிறகு இந்த இடம் “மத்திய சதுக்கம் (Central Square)” என்று அழைக்கப்பட இருக்கிறது. இதன் பிறகு சென்னை சென்ட்ரல் பகுதி செமையாக இருக்கும் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

ரயில் பயணங்கள்

IRCTC யில் விரைவாக முன்பதிவு செய்வது எப்படி?

முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்

நீங்கள் உள்ளூர் (suburban) ரயில்களில் பயணிப்பவரா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கேட்கவும், புகைப்படங்களை பார்க்கவும் மகிழ்வாக இருக்கிறது. நீங்கள் சென்னையின் காதலன் என்பது அறிந்த ஒன்றே!!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here