படம் எடுக்கப்படும் போதே ரிஷிகபூர் காலமானதால், அவர் கதாப்பாத்திரத்தில் பரேஷ் ராவலின் பங்குடனும் Sharmaji Namkeen படமாகியுள்ளது. Image Credit
Sharmaji Namkeen
VRS பெற்ற ரிஷிகபூருக்கு மனைவி இல்லை, இரு மகன்கள் மட்டும்.
ஓய்வு பெற்ற பிறகு நேரத்தை எப்படிச் செலவழிப்பது என்று தெரியாமல் ஓய்வுபெற்ற அனைவரைப் போல ரிஷிகபூரும் திணறுகிறார்.
சமையல் கலையில் ஆர்வம் உள்ள இவருக்கு நண்பர் ஒருவர், ஒரு வீட்டில் பார்ட்டிக்கு சமையல் செய்ய வாய்ப்பு வாங்கித்தர, ரிஷிகபூர் சமையலில் அனைவரும் அசந்து விடுகிறார்கள்.
அங்குள்ள பெண்கள் அனைவரும் ரிஷிகபூர் சமையலுக்கு ரசிகைகளாகி விடுகிறார்கள். இதில் ஜூஹி சாவ்லாவும் ஒருவர்.
பையனுக்குத் தெரிந்தால் பிரச்சனையாகும் என்று ரிஷிகபூர் மறைத்து விடுகிறார். பின்னர் ஏடாகூடமான சமயத்தில் தெரியவர பிரச்சனையாகி விடுகிறது.
இறுதியில் என்ன ஆனது என்பதே Sharmaji Namkeen.
ரிஷிகபூர்
படத்தயாரிப்பின் இடையே ரிஷிகபூர் காலமானதையும் பரேஷ் ராவலை வைத்து மீதியை முடித்ததையும் ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் படத்தின் துவக்கத்திலேயே விளக்குகிறார்.
இவர் கூறியதை பார்த்ததும், முதல் பாதியில் ரிஷிகபூரும், மீதியை பரேஷ் ராவலும் நடித்து இருப்பார்கள் என்று நினைத்தால், இருவருமே அடுத்தடுத்த காட்சிகளில் மாறி மாறி வருகிறார்கள்.
எப்படி எடுத்தார்கள் என்றே புரியவில்லை!
முன்னரே அதற்கு மனம் தயாராகி விட்டதால், துவக்கத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் போகப்போக ஏற்றுக்கொள்ள முடிகிறது.
ஒரு படத்தில் ஒரு கதாப்பாத்திரத்துக்கு இருவர் மாறி மாறி நடித்தது உலகிலேயே இது தான் முதல் முறையாக இருக்கும் 🙂 .
ஆனால், நடிப்பில் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் ரிஷிகபூர் தான் அனைவரையும் கவர்கிறார். குறிப்பாகச் சமையல் காட்சிகளில் இவர் தான் அதிகம் வருகிறார். இயல்பாகவே அமைந்ததா என்று தெரியவில்லை.
இவர் சமைப்பதைப்பார்த்தால் நமக்கும் சாப்பிடலாம் போல உள்ளது 🙂 . அதோடு சுவைப்பதிலும், சமைப்பதிலும் ஒரு தேர்ந்த நடிப்பு. வகை வகையாகச் சமைப்பதோடு அல்லாமல் அதை அழகாக வைத்துக்கொடுப்பதிலும் அசத்துகிறார்.
ஒரு Professional Chef சமையலைப் பரிமாறினால் எப்படி இருக்குமோ அப்படியுள்ளது.
மகனிடம் பேசும் போதும், முக்கியமான விஷயத்தை மகன் தன்னிடம் சொல்லவில்லையே என்று தெரியும் போதும் நடிப்பில் மிளிர்கிறார்.
ஜூஹி
சிலருக்கு வயதே ஆகாது. அதில் ஜூஹி சாவ்லா, மாதுரி திக்ஷித், ரேகா எல்லாம் பட்டியலில் உள்ளவர்கள்.
நாட்டுக்கொரு நல்லவன் படத்தில் எப்படிப் பார்த்தேனோ அதே போலக் கிட்டத்தட்ட ஜூஹி சாவ்லா இருக்கிறார். எப்படித்தான் அப்படியே இருக்காங்களோ!
ரிஷிகபூருக்கும் இவருக்குமான நட்பு ரசிக்கும்படியுள்ளது. அதிலும் ஜூஹி ஒரு படிமேலே சென்று பக்குவமாகப் பேசுவது அசத்தல்.
ஒரு காட்சியில் தன் மகனிடம் சண்டை போட்டு வந்து கோபமாக இருப்பார் ரிஷிகபூர்.
எனவே, அவரைச் சமாதானப்படுத்தி உங்களுக்குச் சண்டை போட, பேசக் குடும்பம் உள்ளது. இல்லாதவர்களை நினைத்துப்பாருங்கள் என்று ஜூஹி நிலையைக் குறிப்பிட்டு பேசுவது நெகிழ்ச்சியாக இருக்கும்.
உடன் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் அருமை புரியாமலே பலரும் சண்டையிட்டு கொள்கின்றனர். இதை ஜூஹி சுருக்கமாகக் கூறுவது ரசிக்கும்படியிருக்கும்.
ஓய்வு வயது
பணிக்குச் செல்பவர்களுக்கு மட்டுமே ஓய்வு வயது. மருத்துவர்களுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ, தொழிலதிபர்களுக்கோ ஓய்வு வயது கிடையாது.
அவர்கள் விரும்பும்வரை தங்கள் பணியில் ஈடுபடலாம்.
ஓய்வு பெற்றதும் என்ன செய்வது என்று தெரியாது. எப்படி நேரத்தைக் கடத்துவது? WhatsApp facebook என்று ஓடும். பழைய செய்திகளை எல்லாம் புதிது என்று நினைத்து குழுவில் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள் 🙂 .
மாறிய சூழ்நிலையைச் சரியாகக் கையாள தெரிந்தவர்கள் சமாளிக்கிறார்கள். மற்றவர்கள் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். இது சிக்கலான காலமே.
நான் ஓய்வு பெற்ற பிறகு கை நடுக்கம் வரும் வரை எழுதிக்(தட்டச்சு)கொண்டு இருக்கலாம், எழுத நிறைய உள்ளது.
எப்ப பாரு எழுதிட்டே இருக்கீங்களேன்னு சண்டை வருமோ 😀 .
என் பசங்க கூட ஒரு டீல் போட்டு இருக்கேன். வினய் என்னை அமெரிக்கா அழைத்துச் செல்ல வேண்டும், யுவன் இங்கிலாந்து அழைத்துச் செல்ல வேண்டும்.
எவ்வளவு செலவாகும்னு இருவரும் கணக்குப்போட்டுட்டு இருக்கானுங்க. கூட்டிட்டு போறானுகளா இல்ல.. சாக்கு போக்கு சொல்றானுகளான்னு பார்ப்போம். 🙂 .
யார் பார்க்கலாம்?
அனைவரையும் படம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். இளையவர்கள் அவர்கள் பெற்றோருக்காக, பெற்றோர் அவர்கள் ஓய்வு வயதுக்காகப் கண்டிப்பாகப் பாருங்கள்.
ஆனால் ஒரு பரிந்துரை, பசியோடு மட்டும் படம் பார்க்க வேண்டாம். ரிஷிகபூர் சமையல் உங்கள் பசியைத் தூண்டி தொல்லைப்படுத்தும் 🙂 .
இதுவொரு Feel Good Movie.
பரிந்துரைத்தது ஸ்ரீனிவாசன். Amazon Prime ல் காணலாம்.
Directed by Hitesh Bhatia
Written by Supratik Sen, Hitesh Bhatia
Produced by Farhan Akhtar, Ritesh Sidhwani, Honey Trehan, Abhishek Chaubey
Starring Rishi Kapoor, Paresh Rawal, Juhi Chawla, Suhail Nayyar, Isha Talwar
Cinematography Piyush Puty
Edited by Bodhaditya Banerjee
Music by Sneha Khanwalkar
Distributed by Amazon Prime Video
Release date 31 March 2022
Running time 119 minutes
Country India
Language Hindi
தொடர்புடைய திரை விமர்சனங்கள்
Jivan Sandhya (2021 மராத்தி) | முதுமைக் காதல்
Bro Daddy (2022 மலையாளம்) | A Delicate Position
கிரி, இயல்பாகவே சமையலில் ஆர்வம் இருப்பதால் இந்த படம் என் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது..கோவையிலும், திண்டுக்கல்லிலும் பணி புரிந்த போது நிறுவனத்தில் இலவசமாக உணவு கிடைத்ததால் சாப்பாட்டை பற்றி துளியும் கவலையில்லை..
ஆனால் வெளிநாடுக்கு வேலைக்கு வந்த போது சாப்பாடு தான் பெரிய பிரச்சனை என உணர்தேன்.. நிறுவன சாப்பாடு இல்லை.. ஒன்று ஹோட்டல் இல்லையெனில் சொந்த சமையல்.. ஊரில் ஒரு வெங்காயம் கூட வெட்டியதில்லை.. என்ன செய்வது என்றே புரியவில்லை..பின்பு சமையலில் ஆர்வத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தி கொண்டு நன்றாக சமைக்க கற்றுக் கொண்டேன்..
தற்போது மனைவி கூட இல்லாமல் இருந்தாலும் எனக்கு சாப்பாடு ஒரு பெரிய பிரச்சனையில்லை.. வார இறுதில் நண்பர்கள் வீட்டுக்கு சென்றாலும் / நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தாலும் நான் தான் செஃப்.. மனைவியை விட நன்றாக சமைத்தாலும் (மனைவியை தவிர) எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.. என் சமையல் பற்றி மனைவிக்கு இன்னும் கேள்வி குறிகளும்??? ஆச்சரிய குறிகளும்!!! உள்ளது..
கொரோனாவின் சமயத்தில் சாப்பாட்டை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருந்தேன்.. உண்மையா சொல்ல போனால் சில புதிய வகைகளை செய்ய அந்த நேரத்தில் கற்றும் கொண்டேன்.. பெண்கள் சமைப்பதற்கும் / ஆண்கள் சமைப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.. குறிப்பாக தற்போதைய தலைமுறையில் இருக்கும் பெண்கள்.. ஒன்னுமே இல்லாத ஒரு விஷியத்தை (சமையலை) அவ்வளவு பெருசா நினைச்சுக்கிட்டு மிக கடினமான ஒரு பணியா எண்ணி சமையலை செய்யும் போது அது உண்மையில் நமக்கு திருப்தி தராது..
சமையலை ரசிக்க வேண்டும்.. நிச்சயம் இது ஒரு அரிதான கலை.. நீங்கள் ரசிக்கும் போது உண்மையில் அது உங்கள் வசமாகி விடும்.. படத்தை கண்டிப்பாக பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“பின்பு சமையலில் ஆர்வத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தி கொண்டு நன்றாக சமைக்க கற்றுக் கொண்டேன்..”
சிங்கப்பூரில் எல்லாமே நம்ம ஊரில் இருப்பது போல கிடைத்ததால் சமைக்க வேண்டிய நெருக்கடிவரவில்லை.. அதோடு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை..
சோம்பேறித்தனம் ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.
அங்கே என் நண்பர் முத்து செமையா சமைப்பார்.. சொல்லப்போனால் அவர் மனைவியை விட நன்றாக சமைப்பார்.
ப்ரோக்கோலி சமைத்து சாப்பிட்டது இன்னும் மறக்கவில்லை. தயிர் சாப்பாட்டுக்கு அட்டகாசமாக இருந்தது. இன்னும் மறக்கவில்லை.
“மனைவியை விட நன்றாக சமைத்தாலும் (மனைவியை தவிர) எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.. ”
😀
“உண்மையா சொல்ல போனால் சில புதிய வகைகளை செய்ய அந்த நேரத்தில் கற்றும் கொண்டேன்.”
பலரும் YouTube பார்த்து புதிய வகை உணவு வகைகளை கற்றுக்கொள்கிறார்கள்.
“ஒன்னுமே இல்லாத ஒரு விஷியத்தை (சமையலை) அவ்வளவு பெருசா நினைச்சுக்கிட்டு மிக கடினமான ஒரு பணியா எண்ணி சமையலை செய்யும் போது அது உண்மையில் நமக்கு திருப்தி தராது..”
எனக்கு தெரிந்து ஒரு செயலை விருப்பமா செய்தால் சலிப்பு இருக்காது, கடமையா செய்தால் சலிப்பாக இருக்கும்.
“சமையலை ரசிக்க வேண்டும்.. நிச்சயம் இது ஒரு அரிதான கலை.. நீங்கள் ரசிக்கும் போது உண்மையில் அது உங்கள் வசமாகி விடும்”
மாற்றுக்கருத்தில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்.
எனக்கு காஃபி ஷாப் வைக்க வேண்டும் என்பது விருப்பம். நடக்குமா என்று தெரியவில்லை. தற்போது அதற்கான சூழல் இல்லை, எதிர்காலத்தில் நடந்தால் மகிழ்ச்சி.
பெரும்பாலும் குடும்பத்துக்காகவே அனைத்தையும் தொடர்ந்ததால் என் விருப்பம் எதுவும் பெரிதாக நடக்கவில்லை. ரயில் கனவு உட்பட.
காஃபி ஷாப் நடக்கிறதா பார்ப்போம் 🙂 .