மகிழ்ச்சி, கோபத்துக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவுகோல் இருக்கும். மகிழ்ச்சி தருவது எது என்று பாப்போம். Image Credit
மகிழ்ச்சி
மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பலரும் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அதில் பெரும்பாலானவை பணம் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது.
- பணம் இருந்தால் எவரும் மகிழ்ச்சி.
- மதிப்புடைய பதவி இருந்தால் மகிழ்ச்சி.
- அதிக சம்பளம் இருந்தால் மகிழ்ச்சி.
- நிறுவனம் வைத்து இருந்தால் மகிழ்ச்சி.
- மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தால் மகிழ்ச்சி.
- நினைத்ததை வாங்க முடிந்தால் மகிழ்ச்சி.
- ஆடம்பரமான வாழ்க்கை மகிழ்ச்சி.
எனவே, பலரின் எண்ணமும் இதை நோக்கியே உள்ளது.
வாழ்க்கைக்குப் பணம் அவசியம் தான் ஆனால், அது மட்டுமே வாழ்க்கை அல்ல.
மேற்கூறிய பிரிவுகளில் உள்ளவர்கள் அனைவருக்குமே அதில் உள்ள சொகுசான வாழ்க்கை மட்டுமே தெரிகிறதே தவிர, அதில் உள்ள இழப்புகள் புரிவதில்லை.
புரியும் போது வயது கடந்து விடுகிறது.
மகிழ்ச்சி தருவது எது?
என்ன பணி புரிந்தாலும், தொழில் செய்தாலும் எந்தப் பெரிய பிரச்சனையோ, சிக்கலோ இல்லாமல் செல்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி என்பது என் கருத்து.
அதை விட முக்கியமாகக் கடனில்லாத வாழ்க்கை.
எதிர்பார்ப்புகளை அதிகரித்தும், அடுத்தவர்களை ஒப்பீடு செய்தும் வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு பணம் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது.
அதாவது அவர்களால் நினைத்ததைச் செய்ய முடியும், வாங்க முடியும் ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி எதோ ஒன்றை இழந்து கொண்டு இருப்பார்கள்.
வெளிநாட்டு வாழ்க்கை
ஏன் சிங்கப்பூரிலிருந்து வந்தீர்கள்? அங்கேயே இருந்தால் பல லட்சங்களைச் சம்பாதித்து இருக்கலாமே! என்ற அறிவுரைகள் இன்றும் தொடர்கிறது.
இங்கே மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஊருக்கு வந்த பிறகு மேற்கூறியதை இழந்ததாக ஒரு நாள் கூட நினைத்ததில்லை என்று கூறினாலும் பலர் நம்பத்தயாராக இல்லை.
எதற்காக ஊருக்கு வந்தேனோ அதை அனுபவித்து விட்டேன், அனுபவித்து வருகிறேன், அனுபவிப்பேன்.
வாழ்க்கையை நடத்தும் அளவுக்கு அல்லது சராசரிக்கும் மேலாகவே என் சம்பளம் உள்ளது, சரியான அளவில் சேமிக்கிறேன். இதற்கு மேல் என்ன வேண்டும்?
வாழ்க்கையைத் தொடர்வது மகிழ்ச்சிக்காகவே. எனவே, அது எந்த வகையில், எந்த நிலையிலிருந்தாலும் (நேர்மையானதாக இருக்கும் வரை) மகிழ்ச்சி தான்.
எனவே, ஏராளமான பணம் இருந்தால் தான் மகிழ்ச்சி என்பது போலியான கருத்து.
தேவைகளை அதிகரித்துக்கொண்டே சென்று வாழ்க்கை முழுவதும் அதற்காக உழைத்து இறுதியில் பெறப்போவது என்ன?
அப்படியென்றால் முன்னேறவே கூடாதா?
சரியான கேள்வி!
மேற்கூறிய முறையில் ஒவ்வொருவரும் நினைத்து இருந்தால், உலகம் எப்படி வளரும்? ஒரு நாடு எப்படி முன்னேறும்? புதிய நிறுவனங்கள் எப்படித் துவங்கப்படும்? புதிய தொழில்நுட்பங்கள் எப்படித்தோன்றும்? வியாபாரம் பெருகும்?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும், இருக்க வேண்டும். அதை அடைந்த பிறகு அடுத்தது என்னவென்று முயலலாம்.
இதுவே மகிழ்ச்சி என்றால் இதையே தொடரலாம்.
தேவைகள் இருந்ததால், சிங்கப்பூர் சென்றேன், தேவைகளை நிறைவேற்றினேன், சம்பாதித்தேன் ஆனால், தேவைகள் முடிந்த பிறகு மகிழ்ச்சி தருவது? என்று தோன்றியது.
அது எனக்கு ஊரில், குடும்பத்துடன் இருப்பது, நண்பர்களுடன் நேரம் செலவிடுவது என்பதில் தான் என்பதை உணர்ந்தேன்.
அதன் படி ஊருக்கு வந்தேன், மகிழ்ச்சியாக உள்ளேன்.
அப்பா காலமான போது உடன் இருந்ததை, பாக்கியமாகக் கருதுகிறேன். வயதான அம்மாவை அவ்வப்போது ஊருக்குச் சென்று பார்த்து வருவது மகிழ்ச்சியைத்தருகிறது.
எனவே, மகிழ்ச்சி என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் ஆனால், ஆடம்பரமாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி என்பது போலியான கருத்து.
மகிழ்ச்சிக்கு பணம், ஆடம்பரம் அளவுகோல் அல்ல.
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் வாழ்வது எளிதானதல்ல அதே போலக் கடினமானதும் அல்ல. காரணம், என்னால் முடிகிறது, என் நண்பர்களால் முடிகிறது.
மகிழ்ச்சியடைவது எளிது ஆனால், அதற்கான வழிமுறைகளை அறிந்து அடைவது கடினம். எதிர்பார்ப்புகளைக் குறைப்பது முக்கிய வழி.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
உண்மை!
கிரி.. உண்மையில் இந்த தலைப்பே சிக்கலான தலைப்பு தான்.. காரணம் சுவாரசியமும் இது தான்.. பல கோடிகளை சாதாரணமாக சம்பாரிக்கும் எல்லா தொழிலதிபர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றால் கேள்வி குறியே?? காரணம் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் மகிழ்ச்சி, துன்பம் இவற்றுக்கான அளவுகோல் வெவ்வேறானது. உங்களுக்கு நடக்கும் அனைத்துமே எனக்கும் நடைபெறும் என்று நினைப்பது தவறு..
ஒரு நெடுதூர வாழ்வியல் பயணத்தில் கற்றுக்கொண்ட அனுபவத்துக்கு என்றும் விலையில்லை.. காலசக்கரத்தின் வேகத்தில் தான் எத்தனை மாற்றங்கள்! காலங்கள் வேகம் எடுத்த போது காட்சிகள் யாவும் பின்னோக்கி சென்றன…. பழைய அனுபவங்கள் அனைத்தும் நினைவாகி விட்டபோதிலும் அவ்வப்போது புனர்ஜனித்து நிலைகுலைய வைப்பதில் தான் எத்தனை போராட்டம்!
ஒவ்வொருவருடைய மனதிலும் காயங்கள் உண்டு…. வலிகள் உண்டு.. புன்னகையும் உண்டு.. அதை எல்லாம் வெளிப்படும் விதம் தான் மாறுபடும்! கண்ணீரால், வார்த்தைகளால், அன்பால் அல்லது புன்னகையால் என ஒவ்வொன்றும் ஒரு விதம்! கடந்து சென்றவை அனைத்தும் நமக்கான பாதைகள் அல்ல; நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்! அதனால் தவிப்பதைவிட தவிர்ப்பது நல்லது….
அது எதுவாயினும்! சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தாலும்.. நாம் செல்லும் பாதையில் இடையூறுகள் இருக்கத்தான் செய்யும். சுகமாக இருந்தாலும் சரி, வலியாக இருந்தாலும் சரி வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப் போவதில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்! சில விஷயங்களை விட்டு செல்வதை விட அவற்றிலிருந்து விலகிச் செல்வது எவ்வளவோ மேல் அல்லவா? அனுபவமே நல்ல ஆசான்!!! என்பதை ஓவ்வொரு முறையும் வாழ்வில் அடிபட்டு சுயமாக எழும் போதும் உணர்கிறேன்..
===================================
மகிழ்ச்சி அடைவது எளிது ஆனால், அதற்கான வழிமுறைகளை அறிந்து அடைவது கடினம். எதிர்பார்ப்புகளைக் குறைப்பது முக்கிய வழி. – சத்தியம் கிரி.. முழுமையாக ஏற்று கொள்கிறேன்.
===================================
@எழிற்பிரகாஷ் நன்றி
@யாசின்
“சில விஷயங்களை விட்டு செல்வதை விட அவற்றிலிருந்து விலகிச் செல்வது எவ்வளவோ மேல் அல்லவா? அனுபவமே நல்ல ஆசான்!”
சரியா சொன்னீங்க யாசின் 🙂 . சண்டைபோடுவதை விட விலகிச் சென்றால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.
அனுபவத்தின் மூலம் தவறுகளைத் திருத்திக் கொள்வது எனக்குப் பிடித்தமானது.
துவக்கத்தில் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது எரிச்சலாக இருக்கும் ஆனால், தற்போது அதைத் திருத்திக் கொள்ள வாய்ப்பாகக் கருதுகிறேன்.
இத்தளத்தில் கூடப் பலரின் ஆலோசனைகளைப் பின்பற்றி நிறைய மாற்றங்களைச் செய்துள்ளேன். அதனால் கிடைத்த பலனையும் உணருகிறேன்.