ரயில் பயணங்கள்

15
ரயில் பயணங்கள்

யில் பயணங்கள் செல்லாத நபர்கள் மிகக் குறைவாகவே இருக்கும். Image Credit

ரயில் பயணங்கள்

கிராமத்தில் உள்ளவர்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் சென்று இருக்காமல் வாய்ப்புள்ளது.

ரயில் போக்குவரத்து ஒரு தவிர்க்க முடியாத ஒரு போக்குவரத்து.

இதற்கு முக்கியக்காரணம் குறைவான பயணக்கட்டணம், பாதுகாப்பான பயணம், சரியான நேரத்திற்கு சென்று விடலாம் என்பதாகும். Image credit

ரயிலின் நட்பு

எனக்கும் ரயிலுக்கும் நெருங்கிய நட்புண்டு. எத்தனை முறை திட்டினாலும் திரும்ப அதில் செல்லவே மனம் விரும்பும். ரயில் பயணங்களுக்கு அடிமை மாதிரி தான்.

ரயிலின் தடக் தடக் ஓசையும், அலறல் ஹாரன் சத்தமும், ரயில் நிலையங்களுக்கே உரிய மீன் வாடையும், ரயிலில் உள்ள இரும்பு வாடையும் ரொம்பப் பிடிக்கும்.

எனக்கு மீன் வாசம் பிடிக்காது ஆனால், ரசிப்பது ரயில்நிலையங்களில் மட்டுமே.

சிறிய வயதில் இருந்தே, ரயில் என்றால் ரொம்பப் பிடித்தமானது.

அப்பா ஏதாவது வேலை விசயமாகச் சென்னை செல்வார்கள், அப்போதெல்லாம் நான் அடம் பிடித்து நானும் வருகிறேன் என்று கூறி அவருடன் செல்வேன்.

அதற்குக் காரணம் ரயிலில் செல்லலாம் என்ற எண்ணம் தான்.

அப்பா, “டேய்! அங்கே வந்தா என்கூட நடந்து தான் வரணும்.. ஆட்டோ வேண்டும் என்று கேட்கக் கூடாது” என்று நிபந்தனையுடன் அழைத்துச் செல்வார்.

குறையாத ரயில் பயண ஆர்வம்

காலங்கள் சென்றாலும் ரயில் பயண ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.

ஒவ்வொருமுறை செல்லும் போதும், முதல் முறை செல்வது போலவே ஆர்வமாக இருக்கும். இன்று வரை எனக்குக் காரணம் புரியவில்லை.

திரைப்படங்களில் வரும் ரயில் காட்சிகளைக் கூட ஆர்வமாகப் பார்ப்பேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் 🙂 .

ரயில் பயணத்தில் தனியாக வருகிறேன் என்றால் எனக்கு அப்பர் பர்த் தான் பிடிக்கும். வந்தவுடன் யாருடைய தொந்தரவும் இல்லாமல் மேலே படுத்துக்கொள்ளலாம்.

கீழ்ப்படுக்கை என்றால் பலர் பேசிக்கொண்டு இருப்பார்கள், தூங்க நேரம் எடுப்பார்கள் எனவே எப்போதும் இதைத் தான் தேர்வு செய்வேன்.

ரயில் சங்கடங்கள்

ரயிலில் எனக்கு ஏற்படும் சங்கடங்களைக் கூறுகிறேன். உங்களுக்கும் இது போல அனுபவங்கள் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

தனியாக வந்தால் மேல் படுக்கை கிடைப்பது என்பது கஷ்டமாக இருக்கும். பெரும்பாலும் கீழ்ப்படுக்கை நடுப்படுக்கை தான்.

அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என்று வந்தால், சொல்லி வைத்த மாதிரி ரயில் பயணங்கள் எல்லோருக்கும் மேல் படுக்கையாகவே இருக்கும்.

இது எப்படி என்று இன்று வரை புரியாத மர்மம்.

முதலில் / கடைசியாக முன்பதிவு செய்தாலும், எப்போதுமே கம்பார்ட்மெண்ட் S 10 க்கு மேலே தான் வரும். ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருக்கும்.

அதுவும்  அம்மா அப்பா வரும் போது S 12 தான். பாவம் கஷ்டப்பட்டு நடந்து வருவார்கள். என்றாவது அதிசயமாக S 1, S 2 ல் கிடைக்கும்.

பெரும்பாலும் முன்பதிவு செய்யும் போது 1 – 10 அல்லது 60 க்கு மேலே தான் பர்த் கிடைக்கும். சரி அதுல என்ன பிரச்சனை என்கிறீர்களா? அதன் அருகில் தான் கழிவறை வரும்.

ரயில்வே துறை, சுத்தம் செய்வதில் சூப்பர் மேன்கள் என்று உங்களுக்குத் தெரியாததா. ஒரு சில நாட்கள், நாற்றம் குடலைப் புரட்டி விடும், அந்த அளவிற்கு மோசமாக இருக்கும்.

இதனால் எப்போதுமே பயணச்சீட்டின் எண்ணைத் தான் முதலில் பார்ப்பேன்.

அதே போல இதுவரை கீழ்ப்படுக்கை கிடைத்து, நான் தூங்கியது 5 % இருந்தாலே அதிகம். பெரும்பாலும் யாராவது ஒருத்தர் வந்து சைடு அப்பர் பர்த்திலோ, அப்பர் பர்த்திலோ படுக்கக் கூறி கேட்டு விடுவார்கள்.

அப்பர் பர்த் மகிழ்ச்சியாகப் போய் விடுவேன் சைடு அப்பர் பர்த் தான் கடியாக இருக்கும்.

இவ்வளவு குடைச்சல்கள் இருந்தாலும் எனக்கு இதில் பயணம் செய்யும் விருப்பம் மட்டும் போகவே இல்லை.

கல்லூரி படிப்பு

பள்ளிவகுப்பு முடித்துக் கல்லூரியில் செல்ல முயற்சிக்கும் போது கோவை PSG யில் BBM சேர 50,000 கேட்டார்கள்.

அப்பாவிற்கு அப்போது டிகிரி முக்கியம் இல்லை என்று தோன்றி (அஞ்சல் வழியில் படிக்கலாம் என்று) சென்னையில் டிப்ளோமோ படிக்க என்னைக் கேட்டார்கள், பிடிக்கவில்லை என்றால் டிகிரியே சேர்ப்பதாகக் கூறினார்கள்.

சென்னை என்றால் அடிக்கடி ரயிலில் செல்லலாமே என்ற ஒரே காரணத்திற்காக ஒத்துக்கொண்டேன் 🙂 . உங்களுக்கு நம்ப சிரமாக இருக்கும் ஆனால், இது உண்மை.

சென்னை வந்து படித்து, அங்கேயே வேலை கிடைத்து, அதன் பிறகு சிங்கப்பூர் வந்து என்று தொடர்ச்சியாகப் பல சம்பவங்கள் நடந்து விட்டது.

நான் சென்னை வரவில்லை என்றால் என் வாழ்க்கை முறை வேறு மாதிரி ஆகி இருக்கலாம்.

என் முன்னேற்றத்திற்கு இந்த ரயில் ஆசையும் ஒரு காரணம் என்று, நானே நினைத்துக்கொள்வேன்.

கொஞ்சம் கிறுக்குத் தனமாக இருக்கிறது அல்லவா! 🙂 ஆனால், எனக்கு அப்படித் தோன்றியதே இல்லை.

கூட்ஸ் வண்டி நடத்துனர்

சிறிய வயதில் கூட்ஸ் வண்டி நடத்துனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது 🙂 , அதில் பின்னாடி பெட்டியில் நின்று கொண்டு போக வேண்டும் என்ற நிறைவேறாத ஆசையும் இருந்தது.

உங்களுக்குத் தெரியுமா? தமிழக ரயில்களில் மட்டுமே நீங்கள் நிம்மதியாகச் செல்ல முடியும். மற்ற மாநிலங்களில் எல்லாம் மற்றவர்கள் நடந்து கொள்வதைக் காண நேர்ந்தால் வாழ்க்கையே வெறுத்து விடுவீர்கள்.

குறிப்பாகத் தென் மாநிலம் என்றால் கேரளா, ஆந்திரா. வட மாநிலங்கள் எல்லாம் மிக மோசமாக இருக்கும். முன்பதிவு செய்தவர்கள் இருக்கையிலேயே உட்கார்ந்து கொண்டு நகர மாட்டார்கள். பேசினால் சண்டைக்கு வருவார்கள்.

கேரளாவில் படித்தவர்கள் அதிகம் என்று கூறுகிறார்கள், அங்கே தான் ரயிலில் அநாகரீகமாக நடப்பவர்களும் அதிகம்.

தமிழக மக்களுக்கு எல்லாம் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும்.

குழந்தைகள்

குழந்தைகளுக்கு ரயில் பயணங்கள் என்றால் கொண்டாட்டம் தான்.

ரயில் புறப்பட்ட கொஞ்ச நேரத்துக்கு ஆடாத ஆட்டம் ஆடி, பரபரப்பாக அனைத்தையும் பார்த்துக் கைகாட்டி, அட்டகாசம் செய்து கொஞ்ச நேரத்தில் சுகமாகத் தூங்கி விடுவார்கள்.

குழந்தைகள் நிம்மதியாகத் தூங்கி விடுவார்கள், நமக்குத் தான் பயமாக இருக்கும்.

கொஞ்சம் ஏமாந்தாலும் பெட்டியைத் தூக்குவது போலக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்று விடுவார்கள்.

பலவிதமான மனிதர்கள்

பகல் நேரத்தில் என்றால் பல்வேறு விதமான மக்களைக் காண முடியும்.

அன்பானவர்கள், கோபக்காரர்கள், அரவாணிகள், காதலர்கள், குடும்ப சண்டைக்காரர்கள், எதையும் கண்டுகொள்ளாமல் தூங்குபவர்கள்.

பொருட்களை விற்பவர்கள், பாட்டுப் பாடி பிச்சை எடுப்பவர்கள், சுத்தம் செய்து பிச்சை கேட்பவர்கள் என்று பலவிதமான மக்கள்.

ஆனால், 90 % என்னுடையது இரவு நேரப் பயணம் தான். பகல் நேர வெயில், கூட்டம் எனக்குப் பிடிக்காத ஒன்று.

இரவு நேரப் பயணங்களில் வருபவர்களிலும் பல வித்யாசமான நபர்கள் இருப்பார்கள். வந்தவுடன்  பெட்டியைச் சங்கலியால் கட்டி வைத்து விடுவார்கள் 🙂 .

சிலர் தலையணை, போர்வை என்று பக்காவான செட்டப்பில் இருப்பார்கள்.

அப்புறம் சார்! சென்னை போறீங்களா? எங்க வேலை பார்க்கறீங்க என்று ஆரம்பித்து ப்ளேடு போட  சிலர் ஆரம்பித்து விடுவார்கள், தப்பித்தால் போதும் என்று ஆகி விடும்.

கல்லூரி மாணவர்கள் மாணவிகள் அதிகம் வருவார்கள்.

அவர்களிடம் வயதானவர்கள், இடம் மாற்றித் தரக் கூற கேட்டால் மறுப்பேதும் கூறாமல், உடனே சரி என்று கூறி விடுவார்கள்.

வெகுசிலரே மாட்டேன் என்று கூறுவார்கள்.

குறட்டை மன்னன்

இவர்கள் அனைவரையும் விடக் கொடூரமான ஒருத்தர் இருக்கிறார் அவர் தான் குறட்டை மன்னன்.

யப்பா! அத்தனை ரயில் சத்தத்தையும் விட இவர் விடும் குறட்டை சத்தம் அதிகம் இருக்கும். தூங்கவே முடியாது.

யாத்ரிகா க்ருபயா ஜாயங்கே

ரயில் நிலையத்தில் வரும் அறிவிப்புகள் கூடப் பிடிக்கும்.

“பயணிகள் கவனத்திற்கு, வண்டி எண் 6669, சென்னையிலிருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், தடம் எண் 6 ல் இருந்து 10 மணி 40 நிமிடத்திற்கு புறப்படும். யாத்ரிகா க்ருபயா ஜாயங்கே, காடி நம்பர்….”

என்று கூறும் போது நானும் சேர்ந்து கூறிக்கொண்டு இருப்பேன் 🙂 .

ஏற்காடு எக்ஸ்பிரஸ்

இதுவரை அதிகம் சென்ற ரயில் ஏற்காடு எக்ஸ்பிரஸ். முதலில் கட்டவண்டி மாதிரி போய்க்கொண்டு இருந்தது. தற்போது வேகம் கூட்டி இருக்கிறார்கள்.

ஈரோட்டில் இருந்து சென்றால் காலை 4 மணிக்கெல்லாம் சென்னை சென்று விடும்.

சென்னையில் காலைப் பரபரப்பு துவங்கும் முன்பே நம் வீட்டை அடைந்து விடலாம். முன்பு ஈரோட்டில் இருந்து பேருந்தில் வந்து கொண்டு இருந்தேன்.

பின் பேருந்து நிலையத்தைக் கோயம்பேடு மாற்றியவுடன் பேருந்தையே மறந்து விட்டேன், அதோடு கட்டணமும் ரயிலில் மிகக்குறைவு.

சென்னையில் இருந்து ஈரோடு வரும் போது இதுவே கடைசி நிறுத்தம் என்பதால் கவலை இல்லாமல் தூங்கிக்கொண்டு வரலாம்.

இல்லை என்றால் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அவசரமாக இறங்க வேண்டிய அவசியமில்லை.

சதாப்தி

சென்னை பெங்களூரு சதாப்தி ரயிலில் சென்றேன். ரொம்பப் பிடித்தது. மிகப்பெரிய கண்ணாடி ஜன்னல் இருப்பதால், வெளியே பார்த்துக்கொண்டே செல்லலாம்.

குளிர்சாதன வண்டி என்பதாலும், முன்பதிவு செய்யாதவர்கள் எற முடியாததால், நெரிசல் இல்லாமலும் அமைதியாக இருக்கும்.

இயற்கை சூழ்ந்த பகுதியாக வழியாகச் சென்றால், இன்னமும் சிறப்பாக இருக்கும்.

இரவு நேரப்பயணம்

இரவு நேரப் பயணத்தைத் தான் எப்போதும் விரும்புவேன். நண்பர்களோடு ரயிலில் சென்றால், அதைவிட மகிழ்ச்சி இருக்க முடியாது. செம ஜாலியாக இருக்கும்.

அனைவரும் பேசிக்கொண்டு கிண்டல் செய்து கொண்டே வருவோம்.

படுக்கும் போது 3 மணி ஆகி விடும். காதலர்கள் மட்டும் தான் நீண்ட நேரம் பேசுவார்களா என்ன?

நண்பர்கள் பேசினால் அதை விட அதிக நேரம் போய்க்கொண்டு இருக்கும்.

தற்போது பேருந்துக் கட்டண உயர்வால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதுவும் பண்டிகை நாட்களில் அடிதடியாக இருக்கும்.

சிறிய வயது முதல் சலிக்காத விஷயங்கள் ஏராளமாக உள்ளன, அதில் இந்த ரயில் பயணங்களும் ஒன்று.

ரயில் போலப் பதிவும் நீளமாக வந்து விட்டது 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

நிறைவேறாத ரயில்வே கனவு

ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?

உள்ளூர் (suburban) ரயில்களில் பயணிப்பவரா?

சிங்கப்பூர் MRT ரயில்

சுத்தமான சென்னை மெட்ரோ தூண்கள்

ரயிலில் ‘Boarding Point’ மாற்றுவது எப்படி?

புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!

சென்னை மெட்ரோ பயணிகள் அட்ராசிட்டிகள் 🙂

எவனோ சூனியம் வச்சுட்டான்

IRCTC யில் விரைவாக முன்பதிவு செய்வது எப்படி?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

  1. என்னடா, என்னுடைய IRCTC பதிவின் ஹிட் கவுன்ட் இன்றைக்கு சற்று அதிகமாக இருக்கிறதே என்ற வியப்புடன் Refering URL-களை கவனித்தால், உங்கள் பதிவுதான் அந்த நல்ல காரியத்தை செய்திருக்கிறது என்பது தெரிய வந்தது (இரயில் போல இந்த வாக்கியமும் நீளம், இல்லையா?!) 🙂 மிக்க நன்றி நண்பர்களே (மென்பொருள் பிரபுவிற்கும், உங்களுக்கும் மற்றும் உங்கள் வாசகர்களுக்கும்!) 🙂

    சுவையான உங்கள் இரயில் பயண அனுபவங்களை பகிர்ந்ததிற்கு நன்றி!

  2. பகிர்வுக்கு நன்றி கிரி… ஒரு உண்மையை நான் உங்களோடா பகிந்து கொள்ள விரும்புகிறேன்.. என்னுடைய தாத்தா (அப்பாவின் அப்பா) ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என்னுடைய பெரியப்பா, சித்தப்பா இருவரும் டீசல் மெக்கானிக்காக ரயில்வேயில் பணி புரிந்தவர்கள். என்னுடைய தந்தை ரயில்வே துறையில் பணி புரிந்து பின்னர் அந்த வேலையை விட்டு விட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் கணக்கராக பணி புரிந்தார்… இதில் வேதனையான விஷியம் என்ன வென்றால் இன்று யாருமே உயிருடன் இல்லை… ஆனால் சந்தோஷமான நிகழ்வு என்னவென்றால் என்னுடைய பெரியப்பா பையன் இன்று ரயில்வே துறையில் திருச்சியில் பணி புரிகிறான்.. எங்கள் குடும்பத்துக்கும் இந்திய ரயில்வே துறைக்குமான உறவு தண்டவாளம் போல் நீண்டு கொண்டே போவது மனம் மகிழ்வை தருகிறது… ஹிந்தியை பற்றி கவலை வேண்டாம் கிரி.. நிச்சயம் நீங்கள் சீக்கிரம் கத்து கொள்ளலாம்… கொஞ்சம் முயற்சி பண்ண போதும்.. ரொம்ப எளிதான மொழி தான்.. வாழ்த்துகள்…

  3. எனக்கும் ரயில் ரொம்பப்பிடிக்கும். ஆனால்…… நேரமில்லாததால் பயணிக்க முடிவதில்லை.

    பழைய கால ரயில் பொட்டிகளில் கிடைத்த இனிமை, இப்போ உள்ள ஏஸி வண்டிகளில் இல்லை. எல்லாத்தையும் கண்ணாடி போட்டுத்தடுத்துடறாங்க. அதில் உள்ள ழௌக்கைத்தவிர புறக் காட்சிகள் ஒன்னும் கண்ணுக்குத் தெரியறதில்லை:(

    நெடுந்தூரப்பயணங்களில் அடங்காப்பிடாரிகளா இருக்கும் குழந்தைகளோடு யாராவது நம்ம எதிரில் இருக்கும்படி நேர்ந்தால்…. கொடுமைதான்.

    ஒரு முறை சென்னை டு தில்லி பயணம்….. ஐயோ:(

  4. “…தமிழக ரயில்களில் மட்டுமே நீங்கள் நிம்மதியாகச் செல்ல முடியும். மற்ற மாநிலங்களில் எல்லாம் மற்றவர்கள் நடந்து கொள்வதைக் காண நேர்ந்தால் வாழ்க்கையே வெறுத்து விடுவீர்கள்…” – சத்தியமான வார்த்தை.

    எனக்கு அனுபவம் இருக்கு. நாங்க காலேஜ் படிக்கும் பொது ஆல் இந்தியா டூர் போனோம். எங்க எல்லாருக்கும் டிக்கெட்ஸ் ரிசெர்வ் பண்ணி இருந்தோம். மதுரை, ஈரோடு, எல்லாம் நல்ல இருந்துச்சு.. ஆந்த்ரா தாண்டி இருப்போம், எங்க இருந்தோ நாலு பேரு வந்து எங்க இடத்துல உட்கார்ந்துகிட்டு எந்திரிக்க மாட்டேனுட்டானுங்க.

    நாங்க தமிழ்/ஆங்கிலம் பேசினா, அவன் ஹிந்தில பேசுறான். ஒருத்தனுக்கும் ஒன்னும் புரியல.. நல்ல வேலை, TTE வந்து நாங்க எல்லாரும் கம்ப்ளைன்ட் பண்ணதுக்கு அப்புறம் அவங்கள எழுப்பினாங்க.

    நாங்க ஒரு க்ரூப்பா போனதால எங்களால அவங்களை கெளப்ப முடிஞ்சது; இதே ஒரு தனி ஆளோ குடும்பமோ போய் இருந்த அவ்ளவுதான்.

    நம்ம ஊர்ல மட்டும்தான் ரயில் பயணம் நல்ல இருக்கும். நாம ஊர் காரங்களுக்கு கோவில் கட்டி கும்பிடனும்.

  5. ரயில் பயணம் எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. முதலாவது நீங்கள் கூறியது போல அந்த தடக் தடக் ரிதம் வரும் அந்த சத்தமும், சின்னக் குலுக்கலும். அதுவும் நம்மூரிலிருந்து தலைநகரிற்கு செல்லும் ரயில் பாதை செல்லும் மலைப்பாதையின் இயற்கை அழகு முதலாவது காரணம். அதுவும் அதிகாலையில் பனி மூடிய ஒரு ரயில்வே நிலையத்தில் குளிருக்கு சூடாக ஒரு வடையுடன் குடிக்கும் அந்த தேநீரின் சுகம் தனி.

    ஆனாலும் பஸ்ஸில் சென்றால் 6 மணி நேரத்தில் சென்றுவிடலாம். ரயில் என்றால் 12 , 14 மணித்தியாலம் எடுக்கும் என்பதால் இப்போது அதிகம் பயணிப்பதில்லை. அதிலும் ஒருமுறை அவசர வேலையாக கொழும்பு செல்லும் போது இடையில் நடுக்காட்டில் அதிகாலை 3 மணிக்கு எஞ்சின் மக்கர் பண்ண, அதிகாலை 10 மணிக்கு ரிப்பேர் முடியும் வரை அங்கு கூடாரம் போட்டது தான் மிச்சம். அன்றிலிருந்து பஸ் அல்லது காரே கதி. நண்பர்களுடன் சேர்ந்தால் மட்டும் ஜாலியாக ரயிலில் போவது வழக்கம்.

  6. அருமையான பதிவு.
    மிகவும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள். எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

  7. இந்தியில் இருப்பது எல்லாம் சுத்தமான இந்தி அல்ல அதிலும் நிறைய தமிழ் சொற்கள் உண்டு. என்ன உச்சரிப்பு மாறி இருக்கும் அதனால அது தமிழ் இல்லை என்பது தவறு. தமிழிலும் பல மொழி சொற்கள் நிறைய உண்டு. சாவி எந்த மொழின்னு கண்டுபிடிங்க பார்க்கலாம், துப்பு- இந்தி அல்லது வடமொழி அல்லது பாரசீகம் அல்ல.
    சிவன் – ஷிவன், முருகா – முருஹா —தமிழ் தமிழல்லாமல் மாறுவது இப்படி தான் மெதுவாக நடக்கும்.

  8. ரயில் பயனம்னாலே எல்லோருக்கும் பிடிச்சதுதான். என் ரயில் பயணம் சின்ன வயசிலே ரயில் தண்ணீர் பிடிக்கும் இடத்திலிருந்து அதன் ஸ்டேசன் வரை (ஒருகிலோமீட்டார்) என்று ஆரம்பித்தது.
    நம் சிறு வயதில் நம் அரைடிரவுசர் நண்பர்கள் சொல்லும் ஒரு விஷயம் அதாவது தண்டவாளத்தில் ஒரு இரும்பை வைத்தால் ரயில் போன பிறகு அது காந்தம் ஆகிவிடும் (நல்லவேளை அப்படி எதுவும் ட்ரை பண்ணவில்லை-இல்லன்னா பெரிய இரும்பு கம்பிகளை எண்ண வேண்டி வந்திருக்கும்).
    அப்புறம் அவ்வப்போது போய் வந்தாலும் மிகவும் வியந்த ரயில் பயணம் என்று சொல்வது ஹாங்காங் தான் – சும்மா சல்லு சல்லுன்னு போய்கிட்டே இருக்கலாம். ஏற்போர்டுக்குல்லேயே 38-82 டேர்மினலூக்கு போக ட்ரெயின் உண்டு. (கடந்த 3 வருஷமா ஹாங்காங் ஏற்போர்டு தான் உலகிலே முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. அப்பாலிக்கா 350 கீமீ ஸ்பீடுல சின்கேன்ஷன் ட்ரெயினில் ஒசாகாவிலிருந்து டோக்கியோ போயிருக்கேன்.
    கடைசியா போனது (போக விரும்பாதது) வட இந்திய ரயில்வேக்கள் – கூட்டம் காரணமா குங்பூ ஸ்டைலில் 5 மணிநேரம் நின்னுகிட்டு ஓடுற ட்ரெயினில் இருந்து மூன்றாம் பிறை கமல் ஸ்டைலில் பஞ்சாபில குதிச்சேன். கடைசி நேர டிக்கட் கிடைக்காமல் (அதற்குரிய காரணம் மிகப்பெரியது எப்பவாவது திரும்ப விமான பயணம் பத்தியோ இல்லை கம்பெனி பாஸை பத்தியோ சொல்லும்போது சொல்றேன்) ஏஜெண்டை நம்பி டெல்லி பாம்பே பயணத்தில் 800 ரூபாய் மொய் அழுதது மறக்க முடியாது. இன்னும் எவ்ளவோ இருக்கு.
    உங்க நண்பர் சொன்ன ரிசெர்வேஷன் ட்ரிக் நாங்க பிளைட் டிக்கெட்டுக்கு பயன்படுத்திகொண்டிருக்கிறோம்.

    நீங்க சொல்றபடி நாம் அனேக ஹிந்தி வார்த்தைகளை தமிழ் என்று நினைத்து பயன்படுத்திகொண்டிருக்கிறோம். பேசி பழகுதல் அல்லது அந்த மொழிகளில் சில படங்களை பார்த்தால் அப்டுடேட்டாக இருக்கலாம். சும்மா தமிழ் தமிழ் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தா பொழைக்க முடியாது. நாமளே கத்துக்கலாம் அப்படின்னா முடியாது அதனால சங்கோஜம் பார்க்காமல் ஏதாவது கிளாசில் சேர்ந்தால்தான் படிக்கும் உத்வேகம் வரும்.

  9. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் நன்றி முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன்

    @துளசி கோபால் வட இந்திய ரயில் பயணம் என்றாலே கொடுமை தான் 🙂

    @விஜய் உண்மை தான். குழுவாக சென்றால் பிரச்சனை இல்லை, தனியாக மற்றும் குடும்பம் மட்டும் சென்றால் அதோ கதி தான்.

    @ஹாலிவுட் ரசிகன் கொழும்பு எங்கே இருந்து எங்கே இருந்து சென்றீர்கள்?

    @குறும்பன் சாவி தெரியலையேப்பா! (நாயகன் ஸ்டைல் ல் படிக்கவும்) 🙂 அப்புறம் நான் தமிழ் இல்லைன்னு அனைத்து சொற்களையும் கூறவில்லை. பல வட மொழிச் சொற்களை நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்று கூறுகிறேன் அவ்வளோ தான்.

    நான் கோபிசெட்டிபாளையம் 🙂 யாரும் “ஷெ” பயன்படுத்துவதில்லை. சுருக்கமா கோபி தான்.

    @ராஜ்குமார் இரும்பை வைத்தால் காந்தம் ஆகி விடும் என்பதை எவன் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. இன்று வரை அது தொடர்கிறது 🙂 350 கிலோ மீட்டர் வேகத்துல பறந்தீங்கன்னு சொல்லுங்க. ஒவ்வொரு பதிவு முடியும் போது சிலர் ட்ரைலர் கொடுப்பார்கள் அடுத்த பதிவு பற்றி. நீங்க அடுத்த கமெண்ட் க்கே ட்ரைலர் கொடுக்கறீங்களே! 🙂

    வட இந்திய பசங்களோடு சண்டை போட்டு உங்களை நல்லவேளை க்ளைமாக்ஸ் கமல் மாதிரி ஆக்காம விட்டானுகளே! ஹா ஹா 🙂

    ஹிந்தி நான் தற்போது படித்துக்கொண்டு வருகிறேன். வகுப்பிற்கு போல நேரம் தான் ஒத்து வரமாட்டேன் என்கிறது. பார்ப்போம். நீங்க கூறிய மாதிரி தமிழ் மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது இந்தக்காலத்தில். பல்வேறு மொழிகளை அறிந்து வைத்து இருப்பது மிக நல்லது.

  10. நிச்சயம் என்னிக்கும் மறக்க முடியாது .. உறவுகளும் அதோட சேர்ந்த ரயில் பயணமும் .. என் அப்பா, அம்மா, ரயில் அப்படின்னு சின்ன வயசுல பதிஞ்ச காலங்கள் மறக்கவே முடியாது

    ரொம்ப ரொம்ப ரசிச்ச பதிவுகளில் ஒன்று தல

    – அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here