நிஷ்காம கர்மம் என்றால் என்ன?

4
நிஷ்காம கர்மம்

ர்மா தெரியும் அது என்ன நிஷ்காம கர்மம்? வாங்க என்னவென்று பார்ப்போம்.

நிஷ்காம கர்மம் என்றால் என்ன?

பற்றற்ற, சுயநலமற்ற, தன்னலமற்ற, எதிர்பார்ப்பில்லாத, வெற்றி தோல்வி பற்றிக் கண்டுகொள்ளாத மனநிலையே நிஷ்காம கர்மம் என்று அழைக்கப்படுகிறது.

செய்யும் செயல்களின் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாத / கண்டுகொள்ளாத / எதிர்பார்க்காத மனநிலை. Image Credit

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், ‘கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே‘ என்று கீதையில் கூறியது.

வள்ளுவரும் இதைப் பற்றிக் கூறியுள்ளார். பலனை எதிர்பார்க்கவில்லையென்றாலும், உங்கள் உழைப்புக்கான பலன் கிடைத்தே தீரும்.

வெற்றிக்குக் காரணம்

பாஜக அண்ணாமலை அடிக்கடி நிஷ்காம கர்மம் பற்றித் தான் மதிக்கும் தலைவர் மோடியை வைத்து கூறிக் கொண்டு இருந்தார்.

எதோ ஒரு பேட்டியில் நமக்குக் கிடைக்கும் வெற்றி பற்றிக் கூறியதே இது பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டியது.

அதாவது ‘ஒருவர் பெறும் வெற்றிக்கு அவரின் உழைப்போடு பல்வேறு மற்ற காரணிகளும் உள்ளன.

எனவே, நாம் ஒருவர் மட்டுமே நம் வெற்றிக்குக் காரணம் அதனால் சாதித்து விட்டதாகக் கருத வேண்டியதில்லை‘ என்று அண்ணாமலை கூறினார்.

இவர் கூறியதை உடனே என்னால், ரஜினி கூறியதோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிந்ததால், இவர் கூறிய நிஷ்காம கர்மத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.

ரஜினி மேடையில் ஒருமுறை,

என் வெற்றிக்கு என் உழைப்பு மட்டுமே காரணம் அல்ல.

எனக்கு அமைந்த நேரம், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் என்று பல்வேறு காரணிகளும் இணைந்து வந்ததாலே இந்த வெற்றி சாத்தியமானது‘ என்று கூறினார்.

இதை நிஷ்காம கர்மம் என்று ரஜினி கூறவில்லையே தவிர, அவர் நிஷ்காம கர்மத்தை பின்பற்றி இருக்கிறார்.

எனவே, அண்ணாமலை கூறிய போது ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

பகுத்தறிவாலும் அறிய முடியாதது

ரஜினியை விடத் திறமையானவர்கள் இருக்கலாம் ஆனால், ரஜினிக்கு அமைந்த இயக்குநர் பாலச்சந்தர், சூழ்நிலை மற்றவர்களுக்கு அமையாமல் கடந்து இருக்கலாம்.

பள்ளியில் உங்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற, புத்திசாலியான மாணவனை விட நீங்கள் நல்ல பணியில், வசதியான சூழலில் தற்போது இருக்கலாம்.

நிச்சயம் நடந்து இருக்கும். ஏன் என்று யோசித்தீர்களா?

அலுவலகத்தில் நீங்கள் திறமையானவராக இருக்கலாம் ஆனால், உங்களை விடத் திறமை குறைந்த ஒருவர் உங்களை விட உயர்ந்த இடத்தில் இருக்கலாம், அதிகச் சம்பளம் வாங்கலாம்.

ஒரு குடும்பத்தில் பிறந்த இருவர் வளர்ந்த, வளர்க்கப்பட்ட சூழல் ஒரே மாதிரியாக இருந்தாலும் ஒருவர் வெற்றி பெறுகிறார் இன்னொருவர் தோல்வியைச் சந்திக்கிறார்.

ஏன்?

அது தான் கர்மா, விதி, நேரம், சூழல்.

பகுத்தறிவாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாதது. அறிவியலுக்கும் அப்பாற்பட்டது.

ஆனால், அதற்காக நடப்பதெல்லாம் கர்மா, விதி என்று முயற்சியைக் கைவிட்டால் அது அறிவீனம். முயற்சியை, உழைப்பை, திட்டமிடுதலை தொடர வேண்டும், அதன் பிறகு நடப்பது நம் கையில் இல்லை.

ஏனென்றால், சிலர் விதியைக் காரணம் காட்டி தங்கள் தோல்விகளிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்ப்பார்கள், தங்கள் தோல்விக்கான காரணங்களை ஆராயாமல், விதியைக் குறை கூறிக்கொண்டு இருப்பார்கள்.

சராசரி நபர்

நிஷ்காம கர்மத்தை யோகிகளும், இந்நிலைக்கு முயல்பவர்களாலும் மட்டுமே பின்பற்ற முடியும்.

காரணம், ஒவ்வொருவரும் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஒரு இலாபம், எதிர்பார்ப்பு, சுயநலம் என்று ஏதாவது இருக்கவே செய்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, எழுதுவது எனக்கு Passion என்றாலும், அதற்காக யாருமே படிக்கவில்லையென்றால் என்னால் தொடர்ந்து எழுத முடியாது.

யாரும் படிக்கவில்லையென்றாலும் எழுதுவேன் என்று கூறுவதெல்லாம் பேச்சுக்குச் சரிப்பட்டு வரும் ஆனால், நடைமுறைக்கு ஒத்து வராது.

ஒரு நாளைக்கு 10 பேர் தான் படிக்கிறார்கள் என்றால் தொடர்ந்து எழுத முடியுமா?

முடியாது. எனவே, ஒரு எதிர்பார்ப்பு உள்ளது, அங்கீகாரம் தேவைப்படுகிறது.

இது போன்ற நிலை பணி புரிபவர்கள், தொழில் நடத்துபவர்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.

எதிர்பார்ப்பு, சுயநலம், வெற்றி போன்றவை இல்லாமல் மனித வாழ்க்கையே இல்லை. இவையல்லாமல் இருப்பவர்கள் அனைத்தையும் கடந்தவர்களாகி விடுகின்றனர்.

சராசரி நபருக்குச் சாத்தியமா?

சாத்தியமில்லை.

ஆனால், இதற்காக அனைத்து செயல்களிலும் நிஷ்காம கர்மத்தை பின்பற்றினால் தான் ஆச்சு என்பதில்லை, நம்மால் முடிந்த செயல்களில் பின்பற்ற முயற்சிக்கலாம்.

குறிப்பாக நிஷ்காம கர்மத்தை அலுவலகங்களில், தொழில்களில் பின்பற்ற முடியாது.

பிறருக்கு செய்யும் உதவியை விளம்பரப்படுத்திக்கொள்ளாமல், உதவி செய்யக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி கடந்து விடலாம்.

ஒரு உதவியைச் செய்து விட்டு அதைப் பெருமையாகச் சம்பந்தப்பட்டவர்களின் படத்துடன் சமூகத்தளங்களில் பகிர்ந்து விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டியதில்லை.

ஒரு டியூப் லைட்டை உதவி செய்து அதில் உபயம் என்று பெரிதாக எழுதி வைக்கும் கொடுமைகளைத் தவிர்க்க முயலலாம்.

உங்களுக்குக் கிடைத்த வெற்றிக்காகப் பெரியளவில் கொண்டாடாமல், தோற்றால் துவண்டு விடாமல் கடந்து போகப் பழகலாம்.

இவை போன்ற பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் பின்பற்ற வாய்ப்புள்ளது.

தொடரும் போது உங்களிடம் மாற்றத்தைக்காண முடியும். விருப்பமுள்ளவர்கள் பொறுமையாக யோசித்துப் பாருங்கள்.

நிஷ்காம கர்மம் அனைவருக்குமானது அல்ல ஆனால், அதற்காக அனைவரும் தவிர்க்க வேண்டிய ஒன்றுமல்ல.

இது ஒரு அற்புதமான உணர்வு. சில செயல்களில் இதன் பெயர் / அர்த்தம் தெரியாமலே முயற்சித்ததால் கூறுகிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

கர்ம வினையும் இந்து மதமும்

கர்மாவை வெல்ல முடியுமா?

அர்த்தமுள்ள இந்து மதம்

அலுவலகத்தில் எப்படி நடந்து கொண்டால் முன்னேறலாம்?

எண்ணம் போல் வாழ்க்கை

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, நிஷ்காம கர்மம் இந்த வார்த்தையை முதன் முறையில் தற்போது தான் கேள்விப்படுகிறேன்.. ஆனால் பதிவை முழுவதும் படித்து விட்ட பிறகு, கிட்டத்திட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு நானும் இந்த நிலையில் இருந்து இருக்கிறேன்.. முதுகலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு முடிக்கும் தருவாயில் கிட்டத்திட்ட (பற்றற்ற, சுயநலமற்ற, தன்னலமற்ற, எதிர்பார்ப்பில்லாத, வெற்றி தோல்வி பற்றிக் கண்டுகொள்ளாத) 100% இந்த மனநிலையில் தான் இருத்தேன் என்று தற்போது உறுதியாக சொல்கிறேன்.

    நாட்கள் செல்ல செல்ல நானும் இந்த மனநிலையில் இருந்து 50% மேல் வெளிவந்து விட்டேன். ஆனால் தற்போது ஆழ்ந்து சிந்திக்கும் போது நான் முன்பு இருந்த நிஷ்காம மனநிலை மிகவும் சரியென தற்போது உணர்கிறேன்.. ஆனால் என்னால் மீண்டும் முழுவதுமாக அந்த நிலைக்கு செல்ல முடியுமா?? என்றால் மிக பெரிய கேள்வி குறி என்முன் எழுகிறது..

    முன்பு நான் தனி மனிதன், ஆனால் தற்போது எனக்காக குடும்பம், உறவுகள், சமுதாய மதிப்பு என ஒரு சிக்கலான கட்டமைப்பில் இருக்கும் போது 100% நிஷ்காம கர்மம் சாத்தியம் என தோன்றவில்லை. ஆனால் தற்போது வெகு நாட்களாகவே என்னுள் ஒரு ஆழமாக தேடல் இருந்து கொண்டு வருகிறது என்பதை மறுக்க முடியவில்லை.

    சில சமயம் என் சிந்தனைகள் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை என்னால் முழுமையாக யூகிக்க முடியவில்லை.. நிறைய படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கிறது.. பணி சூழல் மிக பெரிய தடையாக இருக்கிறது.

    முன்பு விரும்பி ரசித்த பல விஷியங்களை தற்போது என்னால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.. ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு என்றார் இயேசு. ஆனால் நான் நாளைக்கு வந்தும் கன்னத்தை காட்டுகிறேன்.. என்ற ஒரு பக்குவப்பட்ட மனநிலையில் இருப்பதாக உணர்கிறேன்.. உண்மையில் இந்த பீலிங் ரொம்ப பிடித்து இருக்கிறது..

    யாருக்கும் தீங்கின்றி
    வாழ்பவன் மனிதன்
    ஊருக்கே வாழ்ந்து
    உயர்ந்தவன் புனிதன்..

    இந்த மனநிலையே வாழ்ந்து மடிய வேண்டும் என எண்ணுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின்

    “கிரி, நிஷ்காம கர்மம் இந்த வார்த்தையை முதன் முறையில் தற்போது தான் கேள்விப்படுகிறேன்.”

    எனக்கும் சில வாரங்களுக்கு முன்பு தான் தெரியும்

    “முதுகலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு முடிக்கும் தருவாயில் கிட்டத்திட்ட (பற்றற்ற, சுயநலமற்ற, தன்னலமற்ற, எதிர்பார்ப்பில்லாத, வெற்றி தோல்வி பற்றிக் கண்டுகொள்ளாத) 100% இந்த மனநிலையில் தான் இருத்தேன் என்று தற்போது உறுதியாக சொல்கிறேன்.”

    அப்படியென்றால், உங்களுக்கு அந்த அற்புதமான உணர்வை உணர முடிந்து இருக்கும்.

    “முன்பு நான் தனி மனிதன், ஆனால் தற்போது எனக்காக குடும்பம், உறவுகள், சமுதாய மதிப்பு என ஒரு சிக்கலான கட்டமைப்பில் இருக்கும் போது 100% நிஷ்காம கர்மம் சாத்தியம் என தோன்றவில்லை. ”

    சரி தான் யாசின். இதைத்தான் கட்டுரையிலும் கூறியுள்ளேன்.

    இதை சராசரி நபர் தனது தின வாழ்க்கையில் பின்பற்றுவது எளிதல்ல. அனைத்தையும் துறந்து அல்லது கடமைகள் / பொறுப்புகள் அற்ற நிலையில் இதை பின்பற்ற முடியும்.

    ஆனால், ஒரு சிலவற்றை மேற்கூறியது போல முயற்சிக்கலாம். வாய்ப்புள்ளது.

    “சில சமயம் என் சிந்தனைகள் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை என்னால் முழுமையாக யூகிக்க முடியவில்லை.. நிறைய படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கிறது.. பணி சூழல் மிக பெரிய தடையாக இருக்கிறது.”

    உண்மை தான். சில நேரங்களில் நம் விருப்பங்கள் மற்ற காரணிகளால் தடைபடுவது தவிர்க்க முடியாதது.

    அடுத்தவர்களுக்கு தொல்லையில்லாமல் இருப்பதே பெரிய செயல் தான்.

  3. ரொம்ப நல்லா இருக்கு padikum podhu Giri. ஆனால் idhu enakum nadanthu இருக்கு நம்புறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here