சிங்கப்பூர் அரசாங்கம் புதிய MRT (Mass Rapid Transit) ரயில் பாதைகளை எதிர்காலத் தேவை கருதி உருவாக்கி வருகிறது. 2017- 19 ம் ஆண்டுப் பல புதிய பாதைகளைத் திறக்கப் போகிறது.
சிங்கப்பூர் MRT ரயில்
15 நிமிட நடையில் ஒரு ரயில் நிறுத்தம்
இவர்களின் திட்டங்களைப் பார்த்தால் தலை சுற்றுகிறது. அதிகபட்சம் 15 நிமிட நடையில் ரயில் நிலையத்தை அடையும் படி திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களோட ரயில் பாதை அமைக்கும் முறையைப் பார்த்து அசந்து போய் உள்ளேன். நிறைய இடத்தில் பாதை அமைத்தாலும் “லிட்டில் இந்தியா” பகுதி அட்டகாசம்.
வாம்மா மின்னல்
போக்குவரத்து அதிகம் இருக்கும் (நெரிசல் அல்ல) சாலையான Rochor ல் பாதாள ரயில் பாதையும் அமைத்து, மாய மந்திரம் போலத் திடீர் என்று ரயில் நிலையமும் திறப்பதற்கு தயாராக்கி கிறுகிறுக்க வைத்து விட்டார்கள்.
இதெல்லாம் எப்ப நடந்தது? என்றே தெரியலையே! என்று குழம்ப வைத்து விட்டார்கள். எப்பப் பார்த்தாலும் “இங்கே வேலை நடைபெறுகிறது” என்ற அறிவிப்பு இருக்கும்.
திடீர் என்று ஒரு நாள் அனைத்தையும் நீக்கிக் கிட்டத்தட்ட தயாராக்கி விட்டார்கள்.
வாகனத்தை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித இடைஞ்சலும் இல்லாமல், அதே இடத்தில் மாற்றுப் பாதை அமைத்து வழி ஏற்படுத்தினார்கள்.
தற்காலிகச் சாலையே நிரந்த சாலை போல இருந்தது.
சாலையின் நடுவே ஒரு கெனால் இருந்தது, அதை எப்படி மாற்றினார்கள் என்று தெரியவில்லை. அதே இடத்தில் ரயில் பாதை வருகிறது (சாலையின் அடியே) மற்ற பகுதியில் ரயில் நிலையம்.
CCTV உலகம்
பின்வரும் படத்தில் மிகக் குறுகிய இடத்தில் 8 CCTV சாதனங்கள் இருக்கின்றன. எவரும் தப்பிக்க முடியாது! 🙂 சிங்கப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் CCTV தான்.
ஒரு இடத்தில் தவறு செய்து விட்டு ஆடையை மாற்றிக் வந்தாலும் அதனுடைய முந்தைய பகுதியையும் பிந்தைய தொடர்ச்சியையும் வைத்துப் பிடித்து விடுவார்கள்.
மச்சம் வைத்து மாறுவேடத்தில் வந்தாலும் தப்பிக்க முடியாது 🙂 .
ரயில் நிலையம் பகுதியில் எப்போதும் வேலைகள் நடந்து கொண்டு இருக்கும்.
தற்போது சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் இந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணி நடந்தது என்று எவரும் நம்ப முடியாத அளவிற்கு மாற்றி விட்டார்கள்.
இவங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் இருக்கு. சாலைப் பணிகளும் பாதாளப் பணிகளும் முழுமையாக முடிந்த பிறகு இணைப்பு வேலை துவங்கும்.
தொழில் சுத்தம்
தொழில் சுத்தம் என்பதை இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எப்படியொரு பணியைத் துவங்க வேண்டும்? அதை எப்படி பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்வது? பாதுகாப்பு வழிமுறைகள் என்ன? முடித்த பிறகு எப்படி அதைப் பயன்பாட்டிற்குத் தயார் செய்வது? என்பன.
ஒரு கட்டிடம் கட்டி முடித்தால் படு சுத்தமாக, பணிகள் நடந்ததற்கான எந்த அடையாளமும் இருக்காது.
புதிதாகப் பார்ப்பவர்கள் தற்போது தான் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டதையோ பயன்பாட்டுக்கு வந்ததையோ உணரவே முடியாது.
எங்குமே மிச்சம், பிசிறு காண முடியாது.
சிங்கப்பூர் பர்மா பஜார்
இரண்டாவது படத்தின் பின்னணியில் தெரிவது சிங்கப்பூரின் பிரபலமான SIM LIM Square. நம்ம ஊருல இருந்து வரவங்க இங்கே செல்வது வழக்கம். மின்னணு சாதனங்கள் இங்கே தான் பிரபலம்.
கிட்டத்தட்ட நம்ம சென்னை “பர்மா பஜார்” மாதிரி.
மூன்றாவது படத்தில் தெரியும் புல்தரை ராட்சத இயந்திரங்களால் நிரம்பி இருந்தது. இதன் கீழே தான் பாதாள ரயில் நிலையம் இருக்கிறது.
அத்தனை களேபரங்களும் முடிந்து “புயலுக்குப் பின் அமைதி” போலக் காட்சியளிக்கிறது.
தமிழ்
பெயர் பலகையில் தமிழில் அறிவிப்பைக் கவனியுங்கள்.
தமிழ் சிங்கப்பூரில் தேசிய மொழிகளுள் ஒன்று. எந்த இடத்திலும் ஆங்கிலம், மாண்டரின், மலாய் மற்றும் தமிழ் அறிவிப்புகள் இருக்கும்.
வீட்டிற்கு அரசாங்கத்தால் அனுப்பப்படும் அறிவிப்புக் கடிதங்களும் இந்த நான்கு மொழிகளிலும் இருக்கும்.
இன்னும் நான்கு வருடங்கள் கழித்துச் சிங்கப்பூர் வந்தால், எங்கு செல்ல வேண்டும் என்றாலும் MRT யிலேயே விரைவாகப் பயணம் செய்ய முடியும்.
Read : சிங்கப்பூர் உணவகங்கள்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நண்பா கிரி
உங்கள் MRT பற்றிய பதிவுகள் வழக்கம் போல் என்னுடைய கடந்த கால சிங்கப்பூர் வாசம் செய்த நாட்களை நினைவு படுத்திவிட்டது ……பெருமூச்சை தவிர வேறேதும் பதிலில்லை
நான் வந்த போது ரோசர் சாலை துண்டாக கிடந்தது.இப்ப அட்டகாசமாகியிருக்ககூடும். பசார் மலம் தான் எங்கு போனது என்று தெரியவில்லை.
சிங்கை காண்ட்ராக்ட் இந்த சுற்று வட்டார வேலைகளுக்கும் சேர்த்து தான் பணம் போட்டிருப்பார்கள்.
சென்னை மெட்ரோவிலும் இதற்கு ப்ரோவிசியன் உண்டு ஆனால் முறைப்படுத்துவதில் தான் சுணக்கம். சென்னை மெட்ரோ வேலைப்பற்றிய அறிவுப்பு பலகை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இதை செய்வதற்கும் காண்ட்ராக்ட் யில் பணம் உண்டு.
வழக்கம் போல கலக்கல் பதிவு கிரி, சிங்கப்பூர் பற்றி உங்களோட பதிவுகளை படிக்கும் போதெல்லாம் ஒரு குட்டி விசிட் அடிக்கணும் ஒரு எண்ணம் அடிக்கடி வந்து போகுது.. அலுவலத்தில் விடுப்பு எடுப்பது ஒரு பெரிய பிரச்சனை. அதனால் எதிர்கால திட்டத்தில் இதை வைத்து இருக்கிறேன்.
சென்ற வாரம் என்னுடைய நண்பன் சிங்கப்பூர் ஒரு வாரம் சுற்றி பார்த்து விட்டு மிகவும் அருமையாக / அழகாக இருக்கிறது என்று வர்ணித்தான்… சென்னையில் மெட்ரோ ரயில்கள் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. விடுமுறையில் செல்லும் போது முயற்சி செய்துபார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி கிரி.
தல,
பதிவு சூப்பர்..
யாசின் சொன்னது மாதிரி சிங்கப்பூர் பற்றி உங்களோட பதிவுகளை ரொம்பவே ரசிச்சு படிப்பேன் நானும்.. photos எல்லாம் நீங்க எடுத்ததா?
“பெயர் பலகையில் தமிழில் அறிவிப்பை”
– இதை நான் பாத்து இருக்கேன் ஏர்போர்ட் ல
– அருண் கோவிந்தன்
@ஸ்ரீகாந்த் நாம் இருந்த இடம் பற்றிய செய்தி கேட்கும் போது இனம் புரியாத பாசம் வருவது இயல்பு தான் 🙂
@வடுவூர் குமார் சென்னை மெட்ரோவும் மற்ற துறைப் பணிகளை ஒப்பிடும் போது சிறப்பாக திட்டமிட்டு செய்கிறார்கள்.
@யாசின் அவசியம் சிங்கப்பூர் வாங்க..! என்ன… நீங்க வரும் போது நான் இங்கே இருக்க மாட்டேன். அது ஒண்ணு தான் வருத்தம்.
@அருண் அட! நீங்க இருவரும் சிங்கப்பூர் இடுகைகளை விரும்பிப் படிப்பீர்கள் என்று தெரியாமல் போனதே! 🙂
படம் நான் தான் எடுத்தேன் ஆனால், சாதாரண படங்கள் சொல்லிக்கிற மாதிரி ஒன்றுமில்லை. DSLR எடுத்துப் பார்த்த பிறகு என்னுடைய சாதாரண நிழற்பட கருவியில் எடுக்க பிடிக்க மாட்டேங்குது 🙂 வேண்டா வெறுப்பா எடுத்தேன் 🙂
எம்.ஆர்.டி நிறுவனத்தில்தான் பணியாற்றுகிறேன் சகோ. எங்களுடைய வேலையை இவ்வளவு அழகா விவரித்து எழுதியது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி..