சென்னை மெட்ரோ பயணிகள் அட்ராசிட்டிகள் :-)

3
Chennai Metro சென்னை மெட்ரோ பயணிகள்

சென்னை மெட்ரோ, DMS –> வண்ணாரப்பேட்டை வழித்தடம் பிப் 10 2019 அன்று பிரதமர் மோடி அவர்களால் திறக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு, LIC, சென்ட்ரல், உயர்நீதிமன்றம் உள்ளடக்கியது.

சென்னை மெட்ரோ பயணிகள்

10, 11 (12 & 13 கூடுதல்) நாட்கள் முழுவதும் சென்னை மெட்ரோ பயணிகள் இலவசமாகப் பயணிக்கலாம் அறிவிக்கப்பட்டு இருந்ததால், என்னுடைய பசங்களை அழைத்துக்கொண்டு திங்கள் 11 பிப் சென்றேன்.

எங்கள் வீட்டில் இருந்து உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையம் செல்வது எளிது என்பதால், பிராட்வே வரை பேருந்தில் சென்று உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை சென்றேன்.

இலவசப் பயணம் என்பதாலும், வண்ணாரப்பேட்டை பகுதிக்கு முதல் முறை மெட்ரோ / ரயில் செல்வதாலும், அப்பகுதி மக்கள் அதிகளவில் பயணித்தனர். அதோடு என்னைப்போன்றவர்களும் பயணித்ததால், கூட்டத்தில் ரயில் திணறியது.

நாங்கள் உட்பட பெரும்பான்மையோர் வண்ணாரப்பேட்டை வந்தும் இறங்கவில்லை. அதே ரயிலில் அப்படியே விமான நிலையம் திரும்பச் செல்ல அமர்ந்து விட்டோம்.

நெரிசலைப் பார்த்து, எனக்கு ஏன்டா வந்தோம் என்றாகி விட்டது.

கூட்டம் அதிகம் இருந்ததாலும், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நிலத்தடி வழி பயணம் என்பதாலும் பசங்க இருவரும் “இன்னும் எத்தனை நிறுத்தம் உள்ளது?” என்று “ஆத்தா வையும் சந்தைக்குப் போகணும்” என்பது போல ஆரம்பித்து விட்டார்கள்.

கூட்டமாக இருந்ததால், விமான நிலையம் வரை செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு ஆலந்தூரில் இறங்கி மறுபக்கம் சென்று திரும்ப உயர்நீதிமன்றம் வந்து விட்டோம்.

வரும் போது கூட்டமில்லை, எனவே, இவர்கள் இருவரும் பயணத்தை ரசித்தபடி வந்தனர். வினய் “அப்பா! செல்லும் போது விடத் திரும்பும் போது நல்லா இருக்குல்ல..” என்றான்.

அதுக்குக் கூட்டமில்லாதது காரணம் என்றேன், ஆமோதித்தபடி அங்கே உள்ள தகவல்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டான்.

உயர்நீதிமன்ற நிலையம்

உயர்நீதி மன்றத்தைச் சுற்றி ஏகப்பட்ட Exit’s. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே அதிகபட்ச Exit களை கொண்ட நிலையங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.

நிச்சயம் பாராட்டத் தக்க முயற்சி. எதிர்காலத்தில் மிக முக்கிய நிறுத்தமாக இருக்கும் போது, அப்போதைய கூட்டத்தைச் சமாளிக்க இவை தேவை.

நிலத்தடிப் பயணம்

தொடர்ச்சியாக 11 நிறுத்தங்கள் நிலத்தடியே உள்ளது. நீண்ட தூர பயணம்.

22 நிமிடங்களில் எளிதாகக் கடந்து விட்டோம் ஆனால், 22 நிமிட தூரத்தை உருவாக்க அவர்கள் எடுத்துக்கொண்ட உழைப்பு.. அடேங்கப்பா! மலைக்க வைக்கிறது.

சாலை மீது தடுப்பு வைத்து இயந்திரங்களை வைத்து வேலை செய்து கொண்டு இருந்தார்கள் ஆனால், கீழே மிகப்பெரிய உலகமே உருவாக்கப்பட்டுள்ளது.

OMR

OMR பகுதிகளில் மெட்ரோ மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இங்கேயும் மெட்ரோ வந்தால், மிகப்பெரிய வெற்றி பெறும் வழித்தடமாக மாறும்.

ஐடி பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக மெட்ரோவை குத்தகைக்கு எடுத்து விடுவார்கள்.

இங்கே செயல்படத்துவங்க எப்படியும் இன்னும் குறைந்தது 4 / 5 வருடங்கள் ஆகலாம்.

மிக முக்கியப் பகுதிகளான கலங்கரை விளக்கம், மைலாப்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு என்று பல இடங்கள் வரிசையில் உள்ளன.

இங்கே மெட்ரோ வந்தால், காற்று வாங்கும் மெட்ரோ, காற்று புகா மெட்ரோவாக மாறி விடும் 🙂 .

பயணிகளின் கலாட்டாக்கள்

கூட்டத்தில் ஒருவர் அருகில் இருந்தவரிடம் “சார் புதிய வழித்தடம் மட்டும் தான் இலவச பயணமாம்” என்று கொளுத்திப் போட அருகில் இருந்தவர் பீதியாகி விட்டார்.

உடனே அவர் அருகில் இருந்தவரிடம் “சார் அப்படியா?! DMS க்கு அப்புறம் கட்டணம் செலுத்த வேண்டுமா?” என்று கலவரத்துடன் கேட்க, அவர் “அதெல்லாம் இல்லை சார்! அப்படியிருந்தால் உங்களிடம் கட்டணம் வாங்கி இருப்பார்களே!” என்று லாஜிக்காகப் பேசியதும் சமாதானமானார்.

குழந்தைகள் ஏகப்பட்ட பேர் வந்து இருந்தனர்.

ரயில் நிற்கும் போது பிடிக்க அவர்கள் உயரத்துக்கு ஒன்றுமில்லையாததால் கீழே விழ, உடன் வந்த குழந்தைகள் கெக்கே பிக்கே என்று சிரிப்பு 🙂 .

ஒரு சிறுவன் அமரவே இடம் இல்லாத இடத்தில் கொஞ்சம் பருமனான ஒருவர்..

கொஞ்சம் தள்ளி உட்காருங்க” என்று பதிலை எதிர்பார்க்காமல் நெருக்கியடித்து உட்கார, “அடப்பாவி! நிஜமாவே உட்கார்ந்துட்டாரு” என்று அருகில் இருந்தவர்கள் அவரைக் கொலைவெறியோடு நசுங்கியபடி பார்த்தனர்.

மின்னணு அறிவிப்பு

மின்னணு அறிவிப்பு தவறான நிறுத்தத்தைக் காண்பித்தன. இதை நம்பி ஒருவர் சாவகாசமாக நின்று கொண்டு இருந்தார்.

அவரிடம் “சார் இது சென்ட்ரல் தானே!” என்று இன்னொருவர் கேட்க, அவர் அங்கே இருந்த மின்னனு அறிவிப்பைப் பார்த்து விட்டு ரொம்ப நம்பிக்கையுடன் “இது LIC சார், இனிமேல் தான் சென்ட்ரல் வரும்” என்று புன்னகையுடன் கூறினார்.

அவரிடம் “இது சென்ட்ரல்” என்றதும், எட்டிப்பார்த்து உச்சபட்ச அதிர்ச்சியுடன் அனைத்தையும் அள்ளிப்போட்டுக்கொண்டு எகிறிக் குதித்து ஓடினார் 🙂 .

திங்கள் காலை தொழில்நுட்ப கோளாறால், ஆறு மணி நேரம் சேவை பாதிக்கப்பட்டது.

இலவச பயணம் செல்லாம் என்று வந்தவர்கள் கடுகு போடாமலே பொரிந்து தள்ளியதாகச் செய்திகளில் படித்தேன். நான் மாலை தான் சென்றேன்.

இதன் காரணமாக 12 & 13 பிப் 2019 இலவசப் பயணம் நீட்டித்துள்ளார்கள். இதன் மூலம் பலருக்கு “மெட்ரோ” அறிமுகம் கிடைக்கும் என்பது இவர்கள் திட்டம் சரி தான்!

தொடர்புடைய கட்டுரைகள்

புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!

நீங்கள் உள்ளூர் (suburban) ரயில்களில் பயணிப்பவரா?

த்தா.. பயத்தை மட்டும் மூஞ்சில காட்டிடாதே!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. மெட்ரோ வார்த்தையை கேட்கும் போதே ரயில் பயணத்தின் சத்தம் காதில் ஒலிக்கிறது.. ரயில் பயணம் எனக்கு எப்போதும் விருப்பமான ஒன்று.. என் மனைவிக்கு பிடிக்காது.. பையனுக்கு மிகவும் பிடிக்கும்.. கடந்த முறை ஊருக்கு சென்றிருந்த போது பையன் விரும்பினான் என்று நெடுந்தூர ரயில் பயணம் ( திருச்சி TO கடலூர்) பெரியப்பா வீட்டிற்க்கு சென்றோம்..வரும் போது ரயிலில் திரும்பினோம்..

    passenger ரயில் என்பதால் ஏகப்பட்ட நிறுத்தம் (அம்மாவுக்கும், மனைவிக்கும் விருப்பம் இல்லை) இருப்பினும் பையன் விருப்பத்தினால் சென்றோம்.. கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலான சுகமான பயணம்.. புதிய இடங்கள், வித விதமான மனிதர்கள், மரங்கள், பறவைகள், வயல்வெளிகள், (இடையில் மழை வேறு) ஒரு புதிய அனுபவமாக இருந்தது.. என் பையன் மனதில் பல கேள்விகள்.. பலவற்றிற்கு விடையளித்தேன். சில கேள்விகளுக்கு சமாளித்தேன்..

    ஒரு நெடுதூர ரயில் பயணத்தை நண்பர் சக்தியுடன் பயணிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம்.. ஆனால் தற்போது வரை நிறைவேற்ற முடியவில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here