ஆதங்கப்படவைத்த அண்ணாமலை

6
ஆதங்கப்படவைத்த அண்ணாமலை

தினமலர் நடத்திய UPSC / TNPSC படிப்பவர்களுக்கான நம்பிக்கையளிக்கும் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். Image Credit

நம்பிக்கையளிக்கும் பேச்சு

இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, மாணவர்கள் எவ்வாறு தங்களைத் தேர்வுக்குத் தயார் செய்வது என்பது குறித்து மிகச் சிறப்பாகப் பேசினார்.

பள்ளிப்பருவத்தில் இருந்த போது என்னவாக வேண்டும் என்பதில் இருந்த குழப்பம், பின்னர் IPS க்கு படிக்க முடிவு செய்து அதற்காக எதிர்கொண்ட சிரமங்களை, படித்தவர்களுடனான அனுபவங்களை விளக்கினார்.

குறிப்பாக இத்தேர்வுகளுக்குத் தேவை common sense என்பதைக் குறிப்பிட்டார்.

கேள்வி கேட்டவர்களுக்கு அண்ணாமலை கொடுத்த பதில் நிச்சயம் உந்துதலாக இருந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதோடு பார்த்தவர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது.

முந்தைய தலைமுறையினர்

தற்போதைய தலைமுறையினருக்கு இது போன்ற நம்பிக்கையளிக்கும், விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படுகிறது, அதோடு இணையம் இருப்பதால், அவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகள் இருப்பது தெரிய வருகிறது.

முன்பு இது போன்ற வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை.

பள்ளியில் படிக்கும் போது என்னவாக விரும்புகிறேன் என்றே எனக்குத்தெரியவில்லை. எனக்கு மட்டுமல்ல பலருக்கும் தெரியவில்லை.

என் தலைமுறையினர் (70 / 80s) பலர் படித்த படிப்புக்கும் செய்கிற வேலைக்கும் சம்பந்தமே இருக்காது.

அப்போது கல்லூரி படிப்பு முக்கியமில்லை, பாலிடெக்னிக் தான் பிரபலமாக இருந்தது ஆனால், தற்போது டிகிரி குறைந்த பட்ச தகுதியாகி விட்டது.

ஆதங்கப்படவைத்த அண்ணாமலை

சிறு வயதில் ரயில் மீது அளவு கடந்த விருப்பம் (இப்பவும்) ஆனால், படித்து இத்துறைக்கு வேலைக்குச் செல்லலாம் என்று தெரியாது, அப்பாவும் கூறவில்லை.

ஒருவேளை சரியான முறையில் யாராவது வழிகாட்டியிருந்தால், எனக்குப் பிடித்த துறையிலேயே சேர்ந்து இருக்க வாய்ப்புண்டு.

ஆனால், அப்போது இருந்த பணத்தேவைக்கு ஐடி துறையில் செல்ல வேண்டியதாகி விட்டது.

தற்போது ரயில்வே துறை கண்டு வரும் வளர்ச்சியைப் பார்க்கும் போது இத்துறையில் இணையாமல் போய் விட்டோமே என்ற ஆதங்கம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

அண்ணாமலை போன்றவர்கள் பேச்சைக்கேட்கும் போது இன்னும் அதிகமாகிறது.

பரிந்துரை

எனவே, பள்ளிப்படிப்பை முடிக்கும் வயதில் உள்ளவர்கள் அல்லது பிள்ளைகளைக் கொண்டவர்கள் சரியான ஆலோசனையைப் பெறுங்கள்.

ஏராளமான படிப்புகள் உள்ளன. வழக்கமாக அனைவரும் எடுக்கும் படிப்பையே எடுத்து அதிலேயே தொடர வேண்டாம்.

அதே போல மத்திய மாநில அரசுகளின் பணிகளுக்குச் செல்ல விரும்பினால், என்ன படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று திட்டமிடுங்கள்.

சரியான முறையில் திட்டமிட்டு படித்தால், நிச்சயம் விரும்பும் பணியைப் பெறலாம்.

பணி புரிய விருப்பமில்லை ஆனால், நிறுவனத்தைத் துவங்க வேண்டும் (Entrepreneur) என்று நினைப்பவர்கள், அதற்குண்டான படிப்பைப் படியுங்கள்.

தற்போது ஆலோசனை கூற ஏராளமானோர் உள்ளனர், இணையத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே, அவசரப்படாமல் படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.

ஒரு குறிக்கோளுடன் தற்போது படித்துக்கொண்டுள்ளவர்கள் அண்ணாமலை பேச்சை அவசியம் கேட்கப் பரிந்துரைக்கிறேன்.

IAS / IPS என்றில்லை, எந்த உயர் படிப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரை

நிறைவேறாத ரயில்வே கனவு

6 COMMENTS

  1. கிரி.. இந்த காணொளியை நான் இதுவரை காணவில்லை.. நிச்சயம் பார்க்கிறேன்.. 10 வகுப்பு வரை வாழ்க்கை எதை நோக்கி செல்கின்றதே என்று தெரியவில்லை.. 11 வகுப்பு இல் கணக்கியலை தேர்தெடுத்தேன். காரணம் எங்கள் ஊரில் சீனியர்கள் அதை படித்ததால்.. வகுப்புக்கு சென்ற பின்தான் தெரிந்தது, இதை படித்தால் அறிவியல் துறைக்கு செல்ல முடியாது என்று.. எனக்கு அந்த பருவத்தில் இயற்பியல் மீது அதீத காதல்..

    +2 முடித்து இளங்கலை வங்கியல் பட்டத்தை படித்து முடித்தேன்.. வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி அடைந்தும், MCA மதிப்பெண்காக இலவச சீட் கிடைத்தும், கல்லூரி கட்டணம் கட்ட பணமில்லாததால், அதை விட்டு MBA படிக்கலாம் என்று விசாரித்தால் அங்கும் இதே பிரச்சனை.. சக வகுப்பு தோழர்கள் எல்லாம் முதுகலை சென்று விட்டதால், வேறு வழியே இல்லாமல் ஏதாவது நாமும் படிக்க வேண்டும் சென்று, முதுகலை வணிகவியல் அரசு கல்லூரியில் கடைசி நாளில் விண்ணப்பித்தேன்..

    விண்ணப்பிக்கும் போது சத்தியமாக சீட் கிடைக்கும் என நம்பிக்கையில்லை.. கடவுள் அருளால் சீட் கிடைத்ததால் படித்து முடித்தேன்.. இந்த சமயத்தில் நூலகத்தில் அதிக நேரம் செலவிட முடிந்தது.. வகுப்பில் இருந்ததை விட நூலகத்திலும், கடற்கரையிலும் தான் அதிக நேரத்தை செலவிட்டேன்.. ஆனால் வாழ்க்கை முழுவதும் ஏதாவது படித்து கொண்டே இருக்க வேண்டும் என தேடல் இந்த சமயத்தில் இருந்தது.. சம்மதமே இல்லாத துறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இங்கு தான் பிறந்தது.. அதன் நீட்சி தான் இதழியல் பட்டய படிப்பு..

    கோவையில் பணி புரிந்து கொண்டே தொலைதூர வழியில் MBA படித்தேன்..(தேர்ச்சி பெற்று, ஒரு ப்ராஜெக்ட் முடிக்கும் முன் வெளிநாடு வந்து விட்டேன்) .. அந்த சமயத்தில் நான் என் சம்பளம் முழுவதும் என் படிப்புக்காகவும், வீட்டுக்கு கொஞ்சமும் கொடுத்த போது, என் மற்ற தேவை முழுவதையும் (சாப்பாடு, சினிமா, ஊர் சுற்றுவது) எல்லா செலவுகளையும் பார்த்து கொண்டது சக்தி தான்.. என் நிலையறிந்து நான் கேட்காமலே என்னை கவனித்து கொண்டது நான் இன்றளவில் சக்தியிடம் பிரமிக்கும் ஒரு விஷியம்..இந்த நிகழ்வு நட்பை இன்னும் ஆழமாக்கியது..

    திண்டுக்கல் சென்ற போது மீண்டும் தொலைதூர வழியில் PGDCA படித்தேன்.. (9 பாடத்தில் 7இல் தேர்ச்சி பெற்றேன்) .. ஆனால் வெளிநாடு வந்த பின் நேரம் மிக பெரிய பிரச்சனை.. காரணம் சில என்னுடைய விடுமுறை, தேர்வு, நேரில் வகுப்புக்கு செல்ல வேண்டியது என சில காரணத்தால் கடந்த 13 வருடங்களில் என்னால் எதையும் படிக்க முடியவில்லை.. இங்கு ஏதவாது படிக்கலாம் என்றால் சாதாரண படிப்புக்கே USD பணம் செலுத்த வேண்டியுள்ளது..

    இதற்கு இடையில் ஊருக்கு சென்ற போது இரண்டு முதுகலை படிப்புக்கு தொலை தூரத்தில் விண்ணப்பித்து இருந்தேன்.. இது போன்ற நிகழ்வுகள் மனைவிக்கு சுத்தமாக பிடிக்காது.. இந்த வயதில் படிப்பதா??? ஏன் வெட்டியா சீன் போடுறீங்க?? என்பார்.. ஆனால் எனக்கு உண்மையில் கொஞ்சம் கூட இந்த ஆர்வம் குறையவில்லை.. மாறாக முன்பை விட அதிகமாக இருக்கிறது..

    என்னுடைய இலக்கு நிறைய பட்டங்களை பெற வேண்டும்.. மற்ற துறையின் படிப்புகளையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே!!! என்னுள் இந்த ஆர்வம் ஏற்பட்ட ஒரே ஒரு நிகழ்வு முக்கிய காரணம்.. இளங்கலை கல்லூரி முடிந்த கடைசி நாள், நண்பர்களுடன் எல்லா ஆரவாரமும் முடிந்து வெளியே வந்த போது, வாழ்க்கை ஏதோ ஒரு சூனியம் போல் வெறுமையாக தோன்றியது..

    காதலியின் பிரிவு , நண்பர்கள் யாரும் கூட இல்லாதது, பணமில்லாதது, உறவுகளால் அவமானம்,. ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டெர் வாங்க முடியாதது, RUF & TUF ஜீன்ஸ் இல்லனு, ரிசல்ட் எப்படி வருமோ என்ற பயம், ஸ்போர்ட் ஷூ இல்லாதது இன்னும் ETC ..என பல குழப்பமான சூழ்நிலையில் இருந்த போது திரு.M.S. உதயமூர்த்தி (மக்கள் சக்தி இயக்கம்) அவர்களின் ஒரு கூட்டம் டவுன் ஹாலில் நடந்து கொண்டிருந்தது..

    தற்செயலாக நான் அந்த இடத்தை கடக்கும் போது, அரங்கின் கைதட்டல்களை கேட்டு உள்ளே சென்றேன்.. அந்த கூட்டம் எனக்காகவே மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது போல இருந்தது.. என்னுடைய வலிகள், காயங்கள் எல்லாவற்றிக்கும் களிம்பு தடவியது போல இருந்தது.. சின்ன, சின்ன ஒன்றுமே இல்லாத அற்ப காரணங்களுக்கு எல்லாம் நான் ஆசைப்பட்டு கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என அவரின் பேச்சு எனக்கு உணர்த்தியது..

    இந்த நிகழ்வு எனக்குள் ஒரு புதிய உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுத்தது.. அது இன்று வரையில் என்னுள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. இது நடந்து 20 ஆண்டுகள் முடிந்து விட்டது.. ஆனால் அந்த குறிப்பிட்ட தினத்தின் (20 ஏப்ரல்2002) நிகழ்வுகள் எல்லாம் என்னுள் அப்படியே இன்னும் இருக்கிறது.. நான் சோர்வுற்ற தருணங்களில் எல்லாம் அந்த நினைவுகளை மீண்டும், மீண்டும் அசை போட்டுக் கொண்டே இருப்பேன்..

    பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் சரியான வழிகாட்டல் என்பது மிக அவசியம்.. அதுவும் தற்போதைய தலைமுறையினர்க்கு அடிப்படை வாழ்வியல் முறையை கற்று தருவது மிக மிக அவசியம்.. என்னை பொறுத்தவரை படிப்பை விட என் குழந்தைகளுக்கு நம்முடைய வாழ்வியல் முறையை முறையாக பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்..

    பெரியவர்கள் மீது மரியாதை, கனிவான பேச்சு, ஆசிரியர்களுக்கு மரியாதை, நாட்டுப்பற்று, சுற்றுசூழல், ஏதோ ஒரு விளையாட்டின் மீது ஆர்வம்.. இதை நான் என் குழந்தைகளுக்கு முறையாக பயிற்று வைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் . படிப்பு கற்று தராததை நிச்சயம் அனுபவம் கற்று கொடுக்கும்.. கண்ணதாசன் ஐயா கூறியது போல் “அனுபவமே மிக சிறந்த ஆசான்”.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. நீங்க இப்பவும் இரயில்வேயில் உங்கள் பங்களிப்பை தரலாம் நீங்கள் இருக்கும் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம். At least u may be happy to see your product or service is applying on trains😊

  3. @யாசின்

    “கிரி.. இந்த காணொளியை நான் இதுவரை காணவில்லை.. நிச்சயம் பார்க்கிறேன்.”

    அவசியம் பாருங்க. சிறப்பான காணொளி.

    “இந்த சமயத்தில் நூலகத்தில் அதிக நேரம் செலவிட முடிந்தது.. வகுப்பில் இருந்ததை விட நூலகத்திலும், கடற்கரையிலும் தான் அதிக நேரத்தை செலவிட்டேன்.”

    உங்கள் பகுதியில் கடற்கரை உள்ளதா?

    “கோவையில் பணி புரிந்து கொண்டே தொலைதூர வழியில் MBA படித்தேன்.”

    சூப்பர்.. நான் சில மாதங்கள் சென்றேன் ஆனால், தொடரவில்லை.. பணிக்கு சிங்கப்பூர் சென்று விட்டேன்.

    “என் நிலையறிந்து நான் கேட்காமலே என்னை கவனித்து கொண்டது நான் இன்றளவில் சக்தியிடம் பிரமிக்கும் ஒரு விஷியம்..இந்த நிகழ்வு நட்பை இன்னும் ஆழமாக்கியது”

    சக்தி மீது நீங்கள் கொண்டுள்ள பற்று புரிகிறது.

    “எனக்கு உண்மையில் கொஞ்சம் கூட இந்த ஆர்வம் குறையவில்லை.. மாறாக முன்பை விட அதிகமாக இருக்கிறது.”

    பொறாமையாக உள்ளது யாசின் 🙂 .எனக்கு புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வந்து விடும்.

    படிப்பது என்றால் தற்போது வேப்பங்காயாக கசக்கிறது ஆனால், தற்போது நடந்து வரும் ஆட்குறைப்பு காரணமாக வேறு வழியில்லாமல் படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அடுத்தவாரம் எழுதுகிறேன்.

    “ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டெர் வாங்க முடியாதது”

    நான் வாங்கிய முதல் வாகனம் ஸ்ப்ளெண்டர் +

    “திரு.M.S. உதயமூர்த்தி (மக்கள் சக்தி இயக்கம்) அவர்களின் ஒரு கூட்டம் டவுன் ஹாலில் நடந்து கொண்டிருந்தது..”

    மிகச்சிறந்த நபர். அக்காலங்களில் இவருடைய பேச்சு மிகப்பிரபலம்.

    “என்னை பொறுத்தவரை படிப்பை விட என் குழந்தைகளுக்கு நம்முடைய வாழ்வியல் முறையை முறையாக பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்..”

    சரியான பார்வை யாசின் ஆனால், படிப்பும் மிக முக்கியம். போட்டி மிகுந்த உலகில் இவை அவசியமானதாக உள்ளது.

    “பெரியவர்கள் மீது மரியாதை, கனிவான பேச்சு, ஆசிரியர்களுக்கு மரியாதை, நாட்டுப்பற்று, சுற்றுசூழல், ஏதோ ஒரு விளையாட்டின் மீது ஆர்வம்.. இதை நான் என் குழந்தைகளுக்கு முறையாக பயிற்று வைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்”

    உங்கள் எண்ணம் ஈடேற என் மனமார்ந்த வாழ்த்துகள் யாசின். உங்கள் நல்ல எண்ணம் போல உங்க பிள்ளைகளும் சிறப்பாக வருவார்கள்.

    இதே எண்ணம் எனக்குமுள்ளது ஆனால், நடைமுறை சிக்கல்களால் செயல்படுத்துவது கடினமாக உள்ளது.

    “கண்ணதாசன் ஐயா கூறியது போல் “அனுபவமே மிக சிறந்த ஆசான்”.”

    உண்மை. அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்பவர்கள் உயர்கிறார்கள் மற்றவர்கள் குறைக்கூறிக்கொண்டே அதே நிலையில் தொடர்கிறார்கள்.

    • உங்கள் பகுதியில் கடற்கரை உள்ளதா?

      கிரி என்னுடைய வகுப்பு அறையிலிருந்து 30 அடிகள் எடுத்து வைத்தால் கடல்.. கடற்கரை காற்று ரம்மியமாக இருக்கும்.. வெயில் காலங்களை விட மழை காலங்களில் காற்று செம்மையா இருக்கும்.. வகுப்புக்கு செல்கிறோமோ இல்லையோ?? கடற்கரைக்கு எப்போதும் செல்வதுண்டு.. கல்லூரியில் கட்டுப்பாடு என்பது கிடையாது.. அதனால் சுதந்திரமாக சுற்ற முடிந்தது..

      எனக்கு புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வந்து விடும். இதுவரை எனக்கு இது போல அனுபவம் ஏற்றப்பட்டதில்லை.. மேலும் படிக்க வேண்டும் என்ற விருப்பம்..பணிக்காக அல்ல!!! என்னுடைய மன திருப்திக்காக தான்..

  4. @பாலா

    “நீங்க இப்பவும் இரயில்வேயில் உங்கள் பங்களிப்பை தரலாம் நீங்கள் இருக்கும் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம். ”

    எந்த முறையில் சொல்கிறீர்கள் பாலா?

    ரயிலில் செல்வதே தற்போதைய என் பங்களிப்பு 🙂 .

    • U can join some private company like alstom transport, siements rail transport, bombardier transportation, they employee IT ppls to develop train softwares for train controls and operating.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here