ரசித்தவற்றை வெறுத்துள்ளீர்களா?

4
ரசித்தவற்றை வெறுத்துள்ளீர்களா?

ரு காலத்தில் ரசித்தவற்றைத் தற்போதும் ரசிக்கிறோமா என்பது கேள்விக்குறி. இது பற்றி ரசித்தவற்றை வெறுத்துள்ளீர்களா? கட்டுரையில் பார்ப்போம் 🙂 . Image Credit

ரசித்தவற்றை வெறுத்துள்ளீர்களா?

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொன்றை ரசிப்போம் ஆனால், கால மாற்றத்தில் ரசனைகள் மாறுபடும் போதோ அல்லது மற்ற காரணங்களாலோ தொடர முடியாது.

தற்போது பிடிக்கவில்லை என்றாலும், ரசித்தவை இல்லையென்று மாறி விடுமா? இந்நிலை பெரும்பாலும் விளையாட்டு, திரைப்படம், அரசியலிலேயே அதிகமிருக்கும்.

எனக்குத் திரைப்படத்துறையிலேயே அதிகம் இந்நிலை வந்துள்ளது.

அரசியல்

தமிழக அரசியலில் எவரையும் ரசித்தது கிடையாது.

காமராஜர் போன்றவர்கள் மீது பெரு மதிப்பு இருந்தாலும், அவர்களுடன் பயணிக்கவில்லை என்பதால், அவர்களை இதில் சேர்க்க முடியாது.

எனவே, அரசியலில் இவ்வாறு கூற, தகுதியானவர்கள் என்று யாருமில்லை.

கலைஞர் ஜெ போன்றவர்களுடனான அரசியலில் பயணித்து இருந்தாலும், மூத்த அரசியல் ஆளுமையுள்ளவர்கள் என்ற அளவில் மதிப்புள்ளதே தவிரப் பிடித்தவர்கள் என்று கூற முடியாது.

எனவே, முன் பின் என்று ஒப்பிட முடியவில்லை.

சமகாலத்தில் என்னை மிகக்கவர்ந்தவராக அண்ணாமலை உள்ளார்.

இவர் பின்னாளில் மாறுவாரா அதாவது எனக்குப் பிடிக்காமல் போவாரா இல்லையா என்பது பின்வரும் காலத்தில் தான் தெரியும் 🙂 .

விளையாட்டு

பெரும்பான்மையினரைப் போலச் சச்சின் பிடிக்கும், அதன் பிறகு தோனி.

தற்போது கிரிக்கெட்டின் மீதான ஆர்வமே முற்றிலும் குறைந்து விட்டது. மற்ற விளையாட்டுகளில் குறிப்பிட்டு சொல்லும்படியாருமில்லை.

எனவே, ஒப்பிடவும் யாருமில்லை.

திரைப்படத்துறை

தற்போது பல்வேறு காரணங்களால் கமல், விஜய், சூர்யா உட்படப் பல நடிகர்களைப் பிடிக்காது. இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றிய கட்டுரை இதுவல்ல.

எனவே, அது குறித்த விளக்கங்கள் தேவையில்லை.

இவர்கள் பழைய படங்கள் தோராயமாக 2000 க்கு முன்பு வந்த படங்கள் மற்றும் பாடல்களே இன்றும் என் விருப்பமாக உள்ளது.

அதிலும் அடிக்கடி கேட்கும் பாடல்களாக விஜய் அதிலும் குறிப்பாகத் தேவா இசையில் வெளிவந்த பாடல்களே உள்ளன.

இப்பாடல்களைக் கேட்கும் போது அல்லது படங்களைப் பார்க்கும் போது கால இயந்திரத்தில் அந்தகாலத்துக்கே சென்று விடுவது போல இருக்கும்.

இதனாலே என்னால் வெறுப்புகள் இல்லாமல் விக்ரம், மகாநதி படங்களுக்கு விமர்சனங்கள் முழு மனதோடு எழுத முடிந்தது.

சூர்யாவோட மௌனம் பேசியதே இப்போதும் ரசிக்கும்படியான இயல்பான படம்.

இவர்களின் தற்காலப்படங்கள் பல்வேறு காரணங்களால் என்னைக் கவர்வதில்லை, சில படங்கள் மட்டும் விதிவிலக்குகளாக இருக்கும்.

பிடித்து இருந்தால், நன்றாக உள்ளது என்று கூறுவதில் எந்தத்தயக்கமும் இல்லை, அதே போல பிடிக்கவில்லையென்றாலும்.

சிலர் ஏற்றுக்கொள்வார்கள், பலர் ‘உங்களுக்கு அவரைப் பிடிக்காது என்பதால், படத்தைக் குறை கூறுகிறீர்கள்‘ என்பார்கள்.

எனவே, இப்பிரச்சனையே வேண்டாம் என்று அவர்கள் பட விமர்சனங்கள் எழுதுவதையே நிறுத்தி விட்டேன் 🙂 .

வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு படம் வெளியான போது, நன்றாக உள்ளது என்று கூறினாலும், முழுமையான மனதோடு அதைப் பாராட்டவில்லை.

இதன் பிறகு பல வருடங்கள் கழித்து இதை முழு மனதோடு பாராட்டி இருக்க வேண்டும் என்று தோன்றியது, குற்ற உணர்வாகவும் இருந்தது.

ஆனால், இதை அனுபவமாக எடுத்துக்கொண்டு சரிசெய்து கொண்டேன். அதன் பிறகு வேறு எந்தப்படத்துக்கும் இது போன்று தோன்றியதில்லை.

இதைக்கூடச் சொல்ல வேண்டும் என்பதில்லை, கூறினால் உறுத்தல் இனி இருக்காது என்பதே கூறக்காரணம் 🙂 .

இசை

இசை விருப்பமானது. எனவே, எப்போதுமே பாடல்கள் கேட்டுக்கொண்டு இருப்பேன்.

அவற்றில் 80, 90 களில் வெளிவந்த பாடல்களே அதிக விருப்பம்.

இளையராஜா, வைரமுத்து ஆகியோரின் Attitude எனக்குப்பிடிக்காது இருப்பினும், அவர்களின் திறமையை என்றும் குறைத்து மதிப்பிட்டதில்லை.

அதோடு அவர்களின் நடவடிக்கைகள் இசையை, நாவலை ரசிக்கத் தடையாக இருந்தது கிடையாது. நானே நினைத்தாலும் ரசிக்காமல் இருக்க முடியாது.

தற்காலப் பாடல்களைக் கொஞ்ச நேரம் கேட்டுத் திரும்ப 80’s இளையராஜா பாடல்களைக் கேட்டால் தான் மனம் தெளிவானது போல இருக்கும்.

அதாவது இரைச்சலான இடத்திலிருந்து அமைதியான இடத்துக்கு வந்தது போல இருக்கும்.

எனவே, என்றுமே தற்கால மன மாற்றங்களை, ரசனையை வைத்து ரசித்தவற்றை வெறுக்கத்தோன்றியதில்லை. உங்களுக்கு எப்படியுள்ளது? 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

தேவா THE தேவா | A Great Musical Experience

தேனிசைத் தென்றல் தேவா

இசையமைப்பாளர் வித்யாசாகர்

கவிஞர் புலமைப்பித்தன் | நீ ஒரு காதல் சங்கீதம்

சலீம் கவுஸ் | A Underrated Actor

தண்ணீர் தேசம் | வைரமுத்து

கருவாச்சி காவியம் | மனத்திரையில் ஒரு கிராமம்

கள்ளிக்காட்டு இதிகாசம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, இந்த பதிவை படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. பழமையை மீண்டும் அசைபோடுவதில் எனக்கு எப்போதும் அலாதி இன்பம்.. (தற்போது கூட FB யில் முன்னாள் காதலியை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை, திருமணம் முடிந்து வெளிநாடு சென்றது மட்டும் தெரியும்..

    சென்ற வருடம் அவரின் நெருங்கிய தோழியிடம் 20 நிமிடம் தற்செயலாக தொலைபேசியில் உரையாட நிகழ்ந்தது.. ஆனால் என் காதலியை பற்றி ஒரு வார்த்தை கேட்க மனது வரவில்லை..எங்கிருந்தாலும் வாழ்க!!! வாழ்க!!!!(இறைவி படத்தில் SJ சூர்யா சொல்வது போல ஆண் ண் ண்).

    ஒரு காலத்தில் ரசித்தவற்றைத் தற்போதும் ரசிக்கிறோமா – என்னுடைய பதில் நிச்சயம் பலதை ரசிக்கிறேன்.. சிலதை வெறுக்கிறேன்..கண்டிப்பாக மாற்றம் என்னுள் உண்டு..

    அரசியல் : என்னளவில் பெரிய மாற்றமில்லை..

    விளையாட்டு : அப்போதும், எப்போதும் டெஸ்ட் போட்டிகளின் காதலன் நான்.. முன்பு பார்த்தது போல் கிரிக்கெட் பார்ப்பதில்லை.. நேரமின்மை ஒரு காரணம்.. அலுவலகத்தில் இருந்தாலும் தினமும் இணையத்தின் மூலம் எந்த போட்டியாக இருந்தாலும் ஸ்கோர் தெரிந்து கொள்வேன்.. இது 15 வருடங்களுக்கு மேல் தொடர்கிறது..

    பழைய டெஸ்ட் போட்டிகளின் HIGHLIGHTS குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும், மீண்டும் பார்ப்பேன்.. ODI யில் சச்சின், கங்குலின் ஆட்டம் பிடிக்கும்.. டெஸ்ட்ல் டிராவிட், லாரா, சந்தர்பால் என்னை கவர்ந்த வீரர்கள்..கேப்டனாக அசாருதீன், ஸ்டீவ் வாக் பிடிக்கும்.. பௌலர் என்றாலே தலைவன் அம்ப்ரோஸ் தான் NO 1 .வாக்கர் யூனுஸ்ம் பிடிக்கும் . 20 / 20 போட்டிகளை முற்றிலும் வெறுக்கிறேன்.. சில நேரம் பார்ப்பதுண்டு. பெரிய அளவில் அப்போதும், இப்போதும் ஆர்வமில்லை.

    எப்போதுமே வாழ்க்கையிலே மிகவும் பிடித்த கிரிக்கெட் போட்டி என்றால் 1999 WORLD CUP ஆஸ்திரேலியா, சௌத் ஆப்பிரிக்கா செமி பைனல் போட்டி தான்.. செம்ம மேட்ச்.. இதுல ஒரு சிறப்பாக விஷியம் நடுவர்களாக டேவிட் ஷெர்பர்ட், வெங்கட்ராகவன்.. கிரிக்கெட் உள்ளவரை சரித்திரத்தில் இவர்கள் பெயர் நிலைத்து இருக்கும். நீங்கள் பார்க்கவில்லை என்றால் இந்த போட்டியின் HIGHLIGHTS பார்க்கவும்.

    திரைப்படம் : என்னளவில் பெரிய மாற்றம்.. முன்பு தமிழ் படம் மட்டும் பார்ப்பேன்.. சில ஆண்டுகளாக மற்ற மொழி திரைப்படமும் பார்க்கிறேன்.. தமிழ் படங்கள் பார்ப்பது முற்றிலும் குறைந்து விட்டது.. குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களை பார்ப்பதில்லை.
    கல்லூரி இறுதி ஆண்டு என்று நினைக்கிறேன்.. முதல் முதலில் நந்தா படத்தின் சூர்யா ஸ்டில்லை குமுதத்தில் பார்த்தேன்.. இவர் யார் தெரிகிறதா? என்பது போல கேட்டிருந்தார்கள்..

    சத்தியமாக அடையளாம் காண முடிவில்லை.. அப்போது சூர்யாவின் மீது ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு தற்போதும் உண்டு.. தீவிர ரசிகன் என்றெல்லாம் சொல்ல முடியாது.. விஜய், அஜித் இவர்களை விட சூர்யாவை பிடிக்கும்.. தற்போதும் அவர் நடித்த வெகு சொற்பமான படங்கள் மட்டும் தான் பார்க்கிறேன். பசங்க 2 படத்தில் அவரின் நடிப்பு பிடிக்கும். மௌனம் பேசியதும் செம்ம படம்.

    வேட்டையாடு விளையாடு : கோவையில் சக்தியுடன் கேஜி திரையரங்கில் பார்த்த படம்.. அந்த நினைவுகள் தற்போதும் உண்டு.. பார்த்த முதல் நாளே பாடல் முன்பு அப்படி ரசித்தேன்.. தற்போது கேட்பதேயில்லை.. ஆனால் மஞ்சள் வெய்யில் மாலை எப்போதும் கேட்பேன். காக்க, காக்க படம் அளவிற்கு விறுவிறுப்பு இல்லையென்றாலும், இதுவும் ரசிக்கும் படியான படம் என்பதில் சந்தேகமில்லை.

    இசை : இன்று காலையில் கூட “செவ்வரளி தோட்டத்திலே” பாடலை கேட்டு விட்டு தான் வந்தேன்.. உமா ராமனின் குரல் எப்பா!!! என்ன குரல்!!! நிறைய பாடல்களை சொல்லலாம். பன்ணீர் புஷ்பங்கள் படத்தில் மலேசிய வாசுதேவனின் கோடை கால காற்றே பாடல் எந்த மனநிலையில் கேட்டாலும் நம்மை ஊட்டிக்கு அழைத்து சென்று விடும்.. காற்றை விட மெல்லிய இதமான குரல் இவருடையது.. “தாலாட்டுதே வானம்” பாடலில் ஜெயச்சந்திரனின் குரல், நம்மை வேறு உலகிற்க்கு கொண்டு செல்லும். “இதழில் கதை” எழுதும் எந்த மனநிலையிலும் நான் கேட்கும் பாடலிது.. கவிஞர் முத்துலிங்கம் ஐயா எழுதிய பாடலிது.. பாடலின் வரிகள் ரொம்ப பிடிக்கும்..

    இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு – சிகப்பு ரோஜாக்கள் படத்தின் பாடலுக்கு முன் ஒரு ஹம்மிங்!!! ஏப்பா!!! ஜானகி அம்மா!!! அந்த ஹம்மிங்கே கேட்டு கொண்டிருக்கலாம்.. இசை ஞானியின் இசை உலக தரத்தில் இருக்கும். சமீபமாக வள்ளி படத்தின் என்னுள்ளே, என்னுள்ளே, பாடலை அதிகம் கேட்கிறேன்.. சுவர்ணலதாவின் குரல் ரம்மியமாக இருக்கிறது.. இதற்கு முன் என்னை தொட்டு அள்ளி கொண்ட அந்த பாடல் இவர் குரலில் நான் அதிகம் கேட்ட பாடல்..

    90 க்ளில் ஈரமான ரோஜாவின் பாடல்கள் பிடிக்கும்.. இதயம் படத்தில் – இதயமே பாடல் நெஞ்சை கிழித்து விடும்.. இளைய ராஜா / பாரதி ராஜாவின் கூட்டணியில் கடைசி படம் நாடோடி தென்றல் படத்தில் மணியே மணிக்குயிலே பாடல் . செம்மையா இருக்கும்..அப்பறம் என்னோட ஆல் டைம் விருப்ப பாடல் : முத்து மணியே முழு நிலவே.. அழகி படத்தின் பாடலை கேட்கும் போது கடந்த காலம் கண் முன் வந்து போகும்.. இசையை பொறுத்தவரை நான் 90% அதே மனநிலையில் தான் இருக்கிறேன்.. ரகுமானின் காதலர் தினத்தின் பாடல்களை தற்போதும் கேட்பதுண்டு..

    புதிய பாடல்களை அறவே கேட்பதில்லை..2000க்கு அப்புறம் வெளிவந்த படங்களில் 20/25 பாடல்கள் கூட நான் விரும்பி கேட்டதில்லை. கைப்பேசியில் பாடல்களை எப்போதும் வைப்பதில்லை.. தோன்றும் போது யூடியூபில் பிடித்த பாடலை கேட்பேன்.. ஹிந்தி பாடல்களும் சிலது பிடிக்கும்.. ஹிந்தியின் இசை முற்றிலும் வேறு மாதிரி இருக்கும்..

    லகான் படத்தின் பாடல்களை தற்போதும் கேட்பேன்.. வெளிநாடு வந்த புதிதில் என் நண்பன் ஒருவன் சோனி மொபைல் வைத்து இருந்தான்.. 2009 ஆண்டு மாடல் நினைவில்லை. அதில் ஹிந்தி பாடல்கள் வைத்து இருப்பான்.. ஆடியோ சூப்பரா இருக்கும் அந்த மொபைலில், அதில் பாடல் கேட்பதற்காகவே அவனுடை ரூமுக்கு வார விடுமுறையில் செல்வது என் வழக்கம்..பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. நண்பர் கிரி, நிச்சயமாக எல்லோருடைய வாழ்விலும் இந்த உணர்வு பல விசயங்களில் ஏற்பட்டிருக்கும்.

    எனக்கு அரசியலில் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை, ஆனால் ஆரம்பத்தில் அம்மையார் ஜெயலலிதா அவர்களிடம் பெரிதாக நன்மதிப்பில்லை, அவரின் கடைசி காலத்தில் என்னை ஈர்க்கத் தொடங்கினார் ஆனால், அவரது திடீர் மரணத்தால் அரசியல் ஈர்ப்பு முற்றிலும் போய்விட்டது.

    கிரிக்கெட்டைப் பொருத்தவரை டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளை நேரமிருந்தால் பார்ப்பேன், T20 பார்ப்பதில்லை. ஆனால் முதலில் அனைத்து போட்டிகளையும் நண்பர்களுடன் பார்க்கும் போது ஏற்படும் அனுபவமே தனி.

    ஒவ்வொருவருக்கும் ஒருவரைப் பிடிக்கும், அதனால் மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லையெனில் அவரின் ரசிக நண்பரை கலாய்த்துக்கொண்டே பார்ப்போம்😀.

    தற்போது கிரிக்கெட் விளையாட்டு பிடிக்கும் என்பதால் மட்டுமே பார்க்கின்றேன்.

    படங்களை பொறுத்தவரையில், நண்பர்களுடன் சேர்ந்து சில தமிழ் படங்களுக்குச் செல்வோம், ஆனால் ஆங்கிலத் திரைப்படங்கள் அனைத்தும் கூட்டமாக சென்று பார்ப்போம்.

    நான் தலைவரின் (ரஜினி) ரசிகன் என்பதால், தலைவரின் அனைத்து படங்களையும் தலைவர் ரசிகர் இல்லாத நண்பர்களையும் சேர்த்து இழுத்துச் சென்று தியேட்டரில் பார்ப்போம்.

    கடைசியாக நான் மட்டும் தலைவரின் சில படங்களை தியேட்டரில் பார்த்தேன், தமிழ் படங்களை தியேட்டரில் அதிகம் பார்க்க மாட்டேன், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்ததலோ என்னவோ, தற்போது வரும் தலைவரின் படங்களை பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.

    காரணம் தற்போது வரும் படங்கள் தலைவரைப் பயன்படுத்தி வரும், போகும் இயக்குனர்கள் எல்லாம் எதே ஒரு கதையை வைத்து படம் எடுப்பதால் ஆர்வம் குறைவது விட்டதாகத் தோன்றுகின்றது.

    OTT வந்துவிட்டதால், தியேட்டருக்குச் செல்வதே இல்லை,OTT-லேயே படங்களைப் பார்த்துக்கொள்கின்றேன், தற்போது அதிகமாக ஆங்கில சீரியல்களைத்தான் பார்க்கிறேன்.

    காலமாற்றமும் நேரமும் சிலதின் மீது ஆர்வத்தை, ஆர்வமின்மையும் ஏற்படுத்தும் போல.

  3. @யாசின்

    “தற்போது கூட FB யில் முன்னாள் காதலியை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை, திருமணம் முடிந்து வெளிநாடு சென்றது மட்டும் தெரியும்.”

    😀 😀 ஆண்கள் மனது இருக்கிறதே… 🙂

    “சென்ற வருடம் அவரின் நெருங்கிய தோழியிடம் 20 நிமிடம் தற்செயலாக தொலைபேசியில் உரையாட நிகழ்ந்தது.. ஆனால் என் காதலியை பற்றி ஒரு வார்த்தை கேட்க மனது வரவில்லை..எங்கிருந்தாலும் வாழ்க!!! வாழ்க!!!!”

    தெரியாமல் இருப்பதும் ஒரு சுகம் தானே! 🙂 .

    “இறைவி படத்தில் SJ சூர்யா சொல்வது போல ஆண் ண் ண்

    நீங்கள் இந்த எண்ணத்தில் நினைத்ததாக நான் கருதவில்லை.

    “அப்போதும், எப்போதும் டெஸ்ட் போட்டிகளின் காதலன்”

    பலமுறை கூறியுள்ளீர்கள்.. இதோட புறா வளர்ப்பது.

    “அலுவலகத்தில் இருந்தாலும் தினமும் இணையத்தின் மூலம் எந்த போட்டியாக இருந்தாலும் ஸ்கோர் தெரிந்து கொள்வேன்.. இது 15 வருடங்களுக்கு மேல் தொடர்கிறது..”

    எனக்கு தொழில்நுட்பம் சார்ந்து இருந்தால், ஆர்வமாகப் படிப்பேன்.

    “தமிழ் படங்கள் பார்ப்பது முற்றிலும் குறைந்து விட்டது.. குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களை பார்ப்பதில்லை.”

    நானும் தமிழ்ப்படங்கள் பார்ப்பதை குறைத்து விட்டேன்.. பார்க்கவே ஆர்வம் வருவதில்லை.

    பலரும் குறிப்பிட்டு பாருங்க என்று கூறினால் மட்டுமே யோசிப்பேன்.

    “இன்று காலையில் கூட “செவ்வரளி தோட்டத்திலே” பாடலை கேட்டு விட்டு தான் வந்தேன்.”

    🙂 நேற்று காலையில் பாடல் கேட்டுக்கொண்டு இருந்த போது இப்பாடல் வந்தது.. உங்கள் நினைவும் 🙂

    “வள்ளி படத்தின் என்னுள்ளே, என்னுள்ளே, பாடலை அதிகம் கேட்கிறேன்.. சுவர்ணலதாவின் குரல் ரம்மியமாக இருக்கிறது.”

    இசை குரல் அட்டகாசமாக இருக்கும். இதற்கு இசை கார்த்திக்ராஜ் என்று ரஜினி ஒரு மேடையில் கூறினார்.

    “கைப்பேசியில் பாடல்களை எப்போதும் வைப்பதில்லை.. தோன்றும் போது யூடியூபில் பிடித்த பாடலை கேட்பேன்.. ஹிந்தி பாடல்களும் சிலது பிடிக்கும்..”

    தற்போது யாரும் பாடல்களைச் சேமிப்பதில்லை ..எல்லோருமே ஆன்லைன் தான்.

    “ஹிந்தி பாடல்கள் வைத்து இருப்பான்.. ஆடியோ சூப்பரா இருக்கும் அந்த மொபைலில், அதில் பாடல் கேட்பதற்காகவே அவனுடை ரூமுக்கு வார விடுமுறையில் செல்வது என் வழக்கம்.”

    இதெல்லாம் ஒரு சுகம் தானே.. 🙂 .

    என் சிறு வயதில் ஸ்பைடர் மேன் கார்ட்டூன் பார்ப்பதற்காக கிராமத்தில் இருந்து கோபியில் உள்ளே என் மாமா வீட்டுக்கு ஞாயிறு செல்வேன்.

  4. @கார்த்திக்

    “அவரின் கடைசி காலத்தில் என்னை ஈர்க்கத் தொடங்கினார்”

    இது உண்மை தான்.. பலருக்கு இந்த அனுபவம் இருக்கும்.

    “கிரிக்கெட்டைப் பொருத்தவரை டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளை நேரமிருந்தால் பார்ப்பேன், T20 பார்ப்பதில்லை. ஆனால் முதலில் அனைத்து போட்டிகளையும் நண்பர்களுடன் பார்க்கும் போது ஏற்படும் அனுபவமே தனி.”

    முன்பு ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தேன்.. தற்போது ஏனோ ஆர்வம் குறைந்து விட்டது.

    “ஒவ்வொருவருக்கும் ஒருவரைப் பிடிக்கும், அதனால் மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லையெனில் அவரின் ரசிக நண்பரை கலாய்த்துக்கொண்டே பார்ப்போம்😀.”

    😀

    “படங்களை பொறுத்தவரையில், நண்பர்களுடன் சேர்ந்து சில தமிழ் படங்களுக்குச் செல்வோம், ஆனால் ஆங்கிலத் திரைப்படங்கள் அனைத்தும் கூட்டமாக சென்று பார்ப்போம்.”

    95 – 2005 முழுக்க இதே தான்.

    “தமிழ் படங்களை தியேட்டரில் அதிகம் பார்க்க மாட்டேன், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்ததலோ என்னவோ, தற்போது வரும் தலைவரின் படங்களை பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.”

    தலைவரை முழுவதும் பயன்படுத்தும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள் என்பது உண்மையே.

    கபாலி, பேட்ட ஆகியவை ரொம்ப ரசித்த சமீப காலத்து படங்கள்.

    “OTT வந்துவிட்டதால், தியேட்டருக்குச் செல்வதே இல்லை,OTT-லேயே படங்களைப் பார்த்துக்கொள்கின்றேன், தற்போது அதிகமாக ஆங்கில சீரியல்களைத்தான் பார்க்கிறேன்.”

    நானும் அதே 🙂 .

    “காலமாற்றமும் நேரமும் சிலதின் மீது ஆர்வத்தை, ஆர்வமின்மையும் ஏற்படுத்தும் போல.”

    கண்டிப்பாக..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here