1990 – 2000 புதிய இசையமைப்பாளர்களின் பொற்காலம். ஏராளமான வெற்றி பாடல்களைக் கொடுத்தவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் சிற்பி. Image Credit
இசையமைப்பாளர் சிற்பி
நாராயணன் என்ற இயற்பெயரைத் திரைப்படத்துக்காகச் சிற்பி என்று மாற்றிக்கொண்டார்.
இயக்குநர் மனோபாலா திரைப்படமான செண்பக தோட்டம் என்ற படத்தில் அறிமுகமானவர்.
கோகுலம்
மூன்றாவது படமான கோகுலம் படத்தில் பலருக்கு அறிமுகமானார். இயக்குநர் விக்ரமன் தனக்கு சிற்பி என்று பெயர் வைத்ததாக நேர்முகத்தில் கூறி இருந்தார்.
இதில் வரும் ‘செவ்வந்தி பூவெடுத்தேன்’ பாடல் உட்பட அனைத்துப் பாடல்களுமே மிகப்பெரிய வெற்றிப்பாடல்களாக அமைந்தது.
கோகுலம் பாடல்கள் என் விருப்பப்பாடல்களாக இல்லை ஆனால், வெகுஜனங்களின் விருப்பப் பாடல்களாக இருந்தன.
பாடல்கள் பிடிக்கும் ஆனால், தொடர்ச்சியாக கேட்கும் என் பட்டியலில் இல்லை.
கேப்டன்
இதன் பிறகு கேப்டன் படத்தில் பாடல்கள் வெற்றியானது.
‘இடுப்பு அடிக்கடி புடிக்குது’ என்ற ஷாஹுல் ஹமீது, மால்குடி சுபா ஐட்டம் பாடல் பிரபலமானது குறிப்பாகச் சுபா குரல் பெரிய பலம், வித்யாசமாக இருக்கும்.
தனிப்பட்ட முறையில் இப்பாடலும் “உனக்கு ஒரு மச்சம் இருக்கு” பாடலும் Base இசை காரணமாக மிகவும் பிடித்தவை. ‘கன்னத்துல வை’ பாடல் பலரால் ரசிக்கப்பட்டது.
கோகுலம் பாடல்களுக்கும் கேப்டன் பாடல்களுக்கும் சம்பந்தமே இருக்காது.
அப்போது மாணவர் விடுதியிலிருந்த போது, கேசட் கொடுத்தால், விடுமுறை நாளில் வார்டன் கந்தசாமி அவர்கள் பாடலை ஒலிபரப்புவார்.
TDK D90 கேசட்டில் ஒரு பக்கம் காதலன், மறு பக்கம் சீவலப்பேரி பாண்டியுடன் ‘இடுப்பு அடிக்கடி’ பாடலும் வந்து விடுதி நண்பர்கள் கிண்டலடித்தது (ஐட்டம் பாடல் என்பதால்) இன்றும் பசுமையாக நினைவுள்ளது 🙂 .
இசையமைப்பாளர் ஆதித்யன் அவர்கள் பற்றிய கட்டுரையிலும் சூப்பர் ஹிட் பாடல்கள் என்று கூறி இருப்பேன், அப்பாடல்களில் இவையும் அடங்கும்.
நாட்டாமை
சிற்பி என்ற இசையமைப்பாளரைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது இயக்குநர் KS ரவிக்குமார் ‘நாட்டாமை’. அதிலும் ‘கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும்’ பாடல் தமிழ்நாட்டையே உலுக்கி விட்டது.
ஏராளமான இசையமைப்பாளர்களுடன் பணி புரிந்த பெருமை இயக்குநர் KS ரவிக்குமார் அவர்களுக்குண்டு.
கொங்கு பகுதியில் பாடல் ஒலிக்காத தனியார் பேருந்தே இருக்காது. ‘கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும்’ பாடல் ஒலிக்காத பேருந்தும் இல்லை.
நாட்டாமை முழுக்க எங்க ஊர் கோபியிலேயே எடுக்கப்பட்டது. அதனால், இப்படம் எங்கள் பகுதியில் மிகப்பிரபலம்.
சரத்குமாரை வேறு லெவலுக்கு கொண்டு சென்ற படம். ஜெ பார்க்க, சரத் கொடுத்த நாட்டாமை CD யை ‘ஜெயா’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பிச் சர்ச்சையானது.
எனவே, இப்படம் இசையமைப்பாளர் சிற்பி அல்லாமல் அதில் பங்கு பெற்ற பலருக்கும் மறக்க முடியாத படமானது.
உள்ளத்தை அள்ளித்தா
நாட்டாமைக்குப் பிறகு தமிழ்நாட்டையே கலக்கியது ‘உள்ளத்தை அள்ளித்தா’ பாடலில் வரும் ‘அழகிய லைலா’ பாடல். இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்.
முறை மாமன், முறை மாப்பிள்ளை போன்ற நகைச்சுவை படங்களை இயக்கி இருந்தாலும், சுந்தர் C யின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்துக்கு எதிர்பார்ப்பில்லை.
பாடல்கள் சூப்பர்ஹிட் என்றாலும் படம் வெளியாகும் முன் பெரியளவில் பிரபலமாகவில்லை. தற்போது போல இணையம் இல்லாததால், கொஞ்சம் கொஞ்சமாகவே பிரபலமாகும்.
கார்த்தியும், சுந்தர் C யும் ஒவ்வொரு திரையரங்காகச் சென்று மக்கள் வரவேற்பு எப்படியுள்ளது என்று பார்த்து வந்ததாகப் பேட்டியளித்தார்கள்.
அப்போது சமூகத்தளங்கள் கிடையாது. எனவே, உடனடியாக படம் எப்படி உள்ளது என்று யாருக்கும் தெரியாது.
குமுதம் எழுதிய விமர்சனத்தைப் படித்தே பலரும் படத்துக்குப் படையெடுத்தார்கள்.
எதிர்பார்ப்பு இல்லாததால் இப்படம் சென்னை வுட்லேண்ட்ஸ் சிம்பொனியில் வெளியாகியது. முதன்மை அரங்கு வுட்லேண்ட்ஸ், சிம்பொனி சிறிய திரையரங்கம்.
பாடல்கள் அனைத்துமே ஹிட் என்றாலும் ‘அழகிய லைலா’ பாடல் படத்துக்கு மிகப்பெரிய கவனத்தைக் கொடுத்தது.
இப்பாடலைப் படமாக்கிய விதமும் அனைவரும் கூடுதலாக ரசிக்கக் காரணம். இப்பாடலில் ரம்பா ஆடை பறக்கும் காட்சிக்காகப் பலமுறை முயன்று கடைசியாக எதிர்பார்த்த படி வந்ததாகச் சுந்தர் C கூறியதாக நினைவு.
கவுண்டரின் சேட்டைகளும் பாடலுக்குக் கூடுதல் ஈர்ப்பைக் கொடுத்தது.
சுந்தர புருஷன்
உள்ளத்தை அள்ளித்தாக்கு பிறகு பட்டையைக்கிளப்பிய படம் ‘சுந்தர புருஷன்’.
இப்படம் யாருக்கு மறக்குமோ! ஆனால், மறக்கவே முடியாத நபர் லிவிங்ஸ்டன். நாயகனாக முதன் முதலாக அவதாரம் எடுத்த படம். கதை திரைக்கதை லிவிங்ஸ்டன்.
படத்தின் வெற்றிக்குப் படத்தின் கதையும், திரைக்கதையும் முக்கியம் என்றாலும், பாடல்கள் மிகப்பெரிய பலம்.
‘மருத அழகரோ’ உட்பட அனைத்துப் பாடல்களும் ரசிக்க வைத்தது.
‘உன்னையெல்லாம் நாயகனாக வைத்து யார் படம் எடுப்பார்கள்?‘ என்று விமர்சித்த போது, தனக்கான கதையை அமைத்து வெற்றியை நிரூபித்துக் காட்டினார்.
பலரால் நம்பவே முடியாத வெற்றியாக இப்படம் இருந்தது. மக்கள் இப்படத்தை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்கள்.
தான் நடித்த சுந்தர புருஷன், உள்ளதை அள்ளித்தா பாடல்களின் வெற்றிக்காகச் சிற்பியை, வருடங்களுக்கு பிறகும் ரம்பா பாராட்டி நினைவு கூர்ந்தார்.
பூச்சூடவா
இவையல்லாமல் மேட்டுக்குடி, மூவேந்தர், பூச்சூடவா, தேடினேன் வந்தது, ராசி உட்பட பல படங்களுக்கு அருமையான பாடல்களைக் கொடுத்துள்ளார்.
பூச்சூடவா பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்போது இளசுகளிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாடல்கள்.
பாடல்களுக்காகவே பூச்சூடவா படம் பலரைக் கவர்ந்தது.
‘கோடம்பாக்கம்’ படத்தில் வரும் ‘ரகசியமானது காதல்’ பாடல் ரசனையானது. இப்பாடலை ரசிக்காதவர்களே அப்போது இருக்க முடியாது என்று கருதுகிறேன்.
அழகான, மனதை வருடும், இதமான மெலோடி பாடல்.
இக்கட்டுரைக்காகத் திரும்ப இவற்றையெல்லாம் கேட்டேன், அற்புதம்! எப்படியெல்லாம் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறேன் என்று வியப்பாக உள்ளது 🙂 .
மாநில அரசின் விருது
மேற்கூறிய படங்களுக்கு கிடைக்காத சிறப்பு விக்ரமனின் ‘உன்னை நினைத்து’ படத்துக்கு இசையமைத்தற்காக மாநில அரசின் விருது சிற்பிக்குக் கிடைத்தது.
2000 க்குப் பிறகு நடந்த இசை மாற்றங்களில் சிற்பி ஈடு கொடுக்க முடியவில்லை. இருப்பினும் அவருடைய பாடல்கள் அவரை நினைவு படுத்திக்கொண்டு இருக்கும்.
70 / 80 களில் பிறந்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா துவங்கி இன்றைய அனிருத் வரை கொண்டாடிய தலைமுறை.
இசையைப் பொறுத்தவரைக் கொடுத்து வைத்த தலைமுறை 🙂 .
ஏராளமான இசையமைப்பாளர்கள் அறிமுகம் 90 களில் தான் நடந்தது. அதோடு அவை என்றுமே காலத்தால் அழிந்து விட முடியாத பாடல்களாகவும் மாறியது.
இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் இசையமைத்தவர்களின் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்றே பலரும் கருதினர்.
ஆனால், 90 களில் இசையமைத்தவர்களுக்கு அவர்களுக்கான அடையாளம் கிடைத்தது. அதில் சிற்பியின் பாடல்களும் என்றும் தனித்துவமாக இருக்கும்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பாடல்கள் குறித்து வரும் இது போன்ற பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் இந்த பதிவுகளை படிக்கும் போது என்னுடைய மனது கடந்த காலத்திற்கு பயணப்படும்.. அந்த பயணம் நிச்சயம் என்னுடைய வசந்த காலத்தை கண் முன் கொண்டு வந்து விடும்.
சிற்பி : இவருடைய பாடல்களை நான் அதிகம் கேட்டதில்லை. ஆனால் சில குறிப்பிட்ட பாடல்களை அதிக முறை தொடர்ந்து கேட்டு இருக்கிறேன். தற்போதும் சில விருப்ப பாடல்கள் உண்டு.
கோகுலம் : நான் விரும்பி கேட்டதில்லை. செவ்வந்தி பூவெடுத்தேன் கேட்டு இருக்கிறேன். ஆனால் விருப்ப பாடல் என்று கூற முடியாது.
கேப்டன் : என்னுடைய ரசனை முற்றிலும் வேறு. TDK D90 இந்த empty கேசட் என் நண்பனின் தந்தை வெளிநாட்டில் இருந்தது கொண்டு வந்தது இருந்தார். அதன் மதிப்பு அப்போது தெரியாமல் 10 ரூபாய்க்கு விற்று நண்பர்களுடன் செலவு செய்தோம்.
நாட்டாமை : இந்த படத்தின் பாடல்களில் பெரிய விருப்பம் எப்போதும் இல்லை. நாட்டாமை முழுக்க எங்க ஊர் கோபியிலேயே எடுக்கப்பட்டது. படத்தில் சில காட்சிகள் பச்சை பசுமையாக இருக்கும்.
உள்ளத்தை அள்ளித்தா : உறவினர் விட்டால் AIWA CD பிளேயர் இல் முதல் முறையாக பாடல்களை கேட்ட நினைவு தற்போதும் இருக்கிறது. ப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். ஆமாம் கிரி. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில பாடல்கள் copy என்று நண்பர்கள் கூறியதாக நினைவில் உண்டு. அது உண்மையா? இல்லையா? என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ஹிட் ஹிட் தான்.
சுந்தர புருஷன் : தரமான படம். வெகு சமீபத்தில் கூட இந்த படத்தை மீண்டும் பார்த்தேன். சிற்பியின் இசையில் என் முதன்மை விருப்ப பாடல் இந்த பாடல் தான் மருத அழகரோ. பாடல் கேட்கும் போது செம்மையா இருக்கும். தற்போதும் அடிக்கடி கேட்பதுண்டு. சித்ராவின் குரலில் ஒரு மயக்கம் இருக்கும்.
நண்பர்கள் ஊரில் வைத்து இருந்த ரம்பா ரசிகர் மன்றத்தில் வீட்டுக்கு தெரியாமல், நானும் ஒரு உறுப்பினர் என்பதை தற்போது எண்ணினாலும் சிரிப்பாக இருக்கிறது. கடந்த மாதம் CHAI WITH சித்ரா நிகழ்ச்சியில் லிவிங்ஸ்டன் நேர்காணலை பார்த்தேன். அருமையாக இருந்தது. நேரம் இருப்பின் பார்க்கவும் கிரி. இவர் நடித்த சொல்லாமலே என்னுடைய ஆல் டைம் விருப்ப படம்.
கோடம்பாக்கம் : ‘ரகசியமானது காதல்’ பாடல் எந்த வித மன நிலையிலும் நான் விரும்பி கேட்கும் பாடல் இது . பாடல் ஆரம்ப இசையே நம்மை வேறு உலகிற்கு கொண்டு செல்லும். பாடல் காட்சி படுத்தியதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
உன்னை நினைத்து : என் கல்லூரி பருவத்தில் நான் காதலில் வயப்பட்ட போது வெளிவந்த படமிது. அந்த பருவத்தில் HAPPY NEW YEAR பாடல் மிகவும் பிடிக்கும். தற்போதும் வெகு அரிதாக கேட்பேன். பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் நெஞ்சை கசக்கி பிழியும். (நல்ல வேளை என் மனைவி, உங்கள் பதிவுகளை படிப்பதில்லை. படித்தால் என்னை பிழிஞ்சிடுவாங்க!!!).. பகிர்வுக்கு நன்றி கிரி.
@யாசின்
“TDK D90 இந்த empty கேசட் என் நண்பனின் தந்தை வெளிநாட்டில் இருந்தது கொண்டு வந்தது இருந்தார். அதன் மதிப்பு அப்போது தெரியாமல் 10 ரூபாய்க்கு விற்று நண்பர்களுடன் செலவு செய்தோம்.”
சில நேரங்களில் ஒரு பொருளின் மதிப்பு தெரிவதில்லை.
“சில பாடல்கள் copy என்று நண்பர்கள் கூறியதாக நினைவில் உண்டு. அது உண்மையா? இல்லையா? என்று தெரியவில்லை. ”
உண்மை தான். இதைக்குறிப்பிடலாம் என்று நினைத்தேன் பின்னர் தவிர்த்து விட்டேன்.
“நண்பர்கள் ஊரில் வைத்து இருந்த ரம்பா ரசிகர் மன்றத்தில் வீட்டுக்கு தெரியாமல், நானும் ஒரு உறுப்பினர் என்பதை தற்போது எண்ணினாலும் சிரிப்பாக இருக்கிறது. ”
😀 பயங்கரமான பின்னணி யாசினுக்கு இருக்கும் போல.
“CHAI WITH சித்ரா நிகழ்ச்சியில் லிவிங்ஸ்டன் நேர்காணலை பார்த்தேன்.”
கொஞ்சம் பார்த்தேன்.. பார்க்க முயல்கிறேன்.
“நல்ல வேளை என் மனைவி, உங்கள் பதிவுகளை படிப்பதில்லை. படித்தால் என்னை பிழிஞ்சிடுவாங்க!”
😀 😀
hi bro ungalukku adsence vanthucha.i am new blogger so athaan ketten
@Venkat Answer is here https://www.giriblog.com/google-adsense-tamil/