லால் சலாம் இசை வெளியீடு நடக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு VIP Pass கிடைத்தது. காலா இசை வெளியீட்டுக்குப் பிறகு கலந்து கொள்ளும் தலைவர் பட இசை வெளியீட்டு விழா. Image Credit
சாய்ராம் கல்லூரி
இசை வெளியீட்டு நிகழ்ச்சி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தாம்பரம் அருகே என்று தெரியும் ஆனால், இவ்வளவு தூரம் என்று தெரியாது.
தொலைவிலிருந்து எப்படித்தான் அனைவரும் தினமும் சென்று வருகிறார்களோ! தாம்பரத்திலிருந்தே 8 கிமீ. பயண நேரமே பெரும்பான்மை காலத்தை எடுத்துக்கொள்ளும் போல, செல்லும் சாலை அதை விட மோசமாக உள்ளது.
கல்லூரியில் ஏராளமான கார்கள், இரு சக்கர வாகனங்கள். Pass வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. காவல்துறை மற்றும் மற்றவர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தனர்.
இவ்வளவு தூரம் வருவது கடுப்பாக இருந்தாலும், இவ்வளவு வாகனங்கள் நகரத்தில் எங்குச் சென்றாலும், மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதுவரை தலைவர் சம்பந்தப்பட்ட படப் பாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு எந்தச் சர்ச்சையும் நுழைவுசீட்டு தொடர்பாக ஏற்பட்டதாக கேள்விப்பட்டதில்லை.
இதை விட பல மடங்குக் கூட்டம் காலா இசை வெளியீட்டு விழாவுக்கு நகரின் மையப்பகுதியில் இருக்கும் நந்தனம் கல்லூரிக்கு வந்தது ஆனால், அனைவரும் ஒழுங்கைப் பின்பற்றினர். எங்காவது சிறு சலசலப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
லால் சலாம் இசை வெளியீடு
நண்பர்களுடன் 5.30 க்கு உள்ளே சென்றேன், நிகழ்ச்சி 6.45 க்குத் துவங்கியது.
அதுவரை தலைவர் பாடல்களை DJ ஒலிபரப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தார், ஒலி சிறப்பாக இருந்தது.
சாய்ராம் கல்லூரி மாணவிகள் பலருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வந்து இருந்த ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதினர், குடும்பத்தினர்.
பாடல்களுக்கு ஏற்ப ஆடுபவர்களைத் திரையில் காண்பித்தது, அவர்களை உற்சாகம் கொள்ள வைத்தது.
நடிகர்கள்
பேசியவர்கள் வழக்கமாகத் தலைவரைப் புகழ்ந்து பேசினார்கள். எனவே, இயல்பாகப் பேசிய விஷ்ணு விஷால், விக்ராந்த் பற்றி மட்டும் விரிவாகக் கூறுகிறேன்.
தம்பி ராமையா அயோத்தி என்று ஆரம்பித்தவுடன் பலத்த ஆராவாரம் எழுந்தது.
பின்னர் கூட்டத்தை அமைதிப்படுத்தி ஒரு முஸ்லீம் குடும்பம் தன் குழந்தைக்கு ராம் ரஹீம் பெயர் வைத்த சம்பவத்தைக் கூறி, இதைபோன்றது தான் லால் சலாம் கதையென்றார்.
இதன் பிறகு திரையுலகில் தலைவரின் சிறப்புகளைக் கூறி, அரசியலையும் தொட்டுச்சென்றார். இவர் பேசியது மேடைப்பேச்சாளரை போல இருந்தது.
இவரின் பேச்சு ரசிகர்கள் பலரைக் கவர்ந்தது ஆனால், எனக்கு இயல்பாக இல்லை.
30 வருடங்களுக்குப் பிறகு நடிக்கும் ஜீவிதா, நிரோஷா போன்றோர் பேசினர். வெளிநாட்டு (ஜப்பான் / சீனா) தம்பதியினர் வந்து இருந்தனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தொழில்நுட்ப கலைஞர்களில் அனல் அரசு, தினேஷ் மட்டுமே பலருக்கு அறிமுகமானவர்கள், மற்றவர்கள் ஓரிரு படங்களில் பணியாற்றவர்களே!
இதில் தினேஷுக்கு மேடை பேச்சுப் பழக்கம் இல்லாததால், பதட்டமாக இருந்ததோடு, எனக்குப் பேச வராது என்று பலமுறை கூறி விரைவில் முடித்துக்கொண்டார்.
தங்கதுரை நகைச்சுவையாகப் பேசி அனைவரையும் கலகலப்பாக்கினார்.
ரகுமானை சினேகன் மிகப்புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தார். வைரமுத்து போலச் சில இடங்களில் பேச முயற்சித்தார் ஆனால், எடுபடவில்லை.
KS ரவிக்குமார் வழக்கம் போலப் பேசினார். அவருக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பன்ச் வசனத்தை உடனுக்குடன் கூறி ரசிகர்களின் கைத்தட்டலைப் பெற்றார்.
பேசியதில் கவனம் ஈர்த்தவர்கள் லால் சலாம் நாயகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த். இருவருமே போராட்டத்தைச் சந்தித்தவர்கள், சந்திப்பவர்கள்.
SP முத்துராமன், கலைப்புலி தாணு, தலைவர் குடும்பத்தினர் உள்ளிட்டோர் வந்து இருந்தனர். பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றவர்கள் எவரும் இல்லை.
லால் சலாம் படத்தில் தலைவர் காராக வரும் காரிலேயே தலைவர், சுபாஸ்கரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அரங்கத்துக்கு வந்தார்கள்.
விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷாலுக்கு, வெண்ணிலா கபடிக்குழு, முண்டாசு பட்டி, நீர்ப்பறவை, ராட்சசன் மற்றும் வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது.
மேடையில் பேசும் போது துவக்கத்தில் கொஞ்சம் தெனாவெட்டாகப்பேசினார், உடல்மொழியும் ரசிக்கும்படியில்லை. இவரது மனைவி Jwala Gutta வந்து இருந்தார்.
கூட்டத்தைக்குறிப்பிடும்போது தலைவர் ரசிகர்கள் அல்லது ரஜினி சார் ரசிகர்கள் என்று கூறாமல் ரஜினி ரசிகர்கள் என்று கூறியது மரியாதைக்குறைவாக இருந்ததால் எரிச்சலாக இருந்தது.
ஆனால், இவரது பேச்சில் பாதிக்கு மேல் மிகச்சிறப்பாக அமைந்தது. காரணம், அவரது வாழ்க்கை சம்பவங்களைக் கூறினார்.
திரைப்படங்களில் வாய்ப்புக்கிடைக்காமல், ஐடி வேலைக்குச் சென்றது, திரைத்துறையிலும் அவர் விரும்பிய கிரிக்கெட்டிலும் வெற்றி பெற முடியாததைக் கூறினார்.
கிரிக்கெட் போட்டி பார்க்கச் சென்று ராபின் உத்தப்பா அடித்த சிக்ஸ் கண்டு மனதுடைந்து போனதாகக் கூறினார். கிரிக்கெட்டில் இவருடைய ஜூனியர் ராபின் உத்தப்பா என்றார்.
பார்வையாளர்கள் பகுதியில் தலைவர் வந்து அமர்ந்ததைக் கண்டு எழுந்த ஆரவாரத்தில், திரையுலகிலும் தான் எதையும் சாதிக்கவில்லையே என்ற மன உளைச்சலில் போட்டியைக் காணாமலே அப்பாவிடம் சென்று தான் அனைத்திலும் தோற்று விட்டதாகக் கூறி அழுததாகக் கூறினார்.
கேட்கும் போது ரொம்ப வருத்தமாக இருந்தது. விஷ்ணு விஷால் அப்பாவும் கூட்டத்தில் அமர்ந்து இருந்தார் என்று கருதுகிறேன். விஷ்ணு விஷால் முதல் திருமணம் முறிந்து இரண்டாவது திருமண பந்தத்தில் உள்ளார்.
இறுதியில், உண்மையாக, யாரையும் ஏமாற்றாமல் போராடினால் வெற்றி கிடைக்கும் என்று கூறி, தான் ரசித்த கிரிக்கெட் மற்றும் ரஜினி படத்திலேயே தற்போது நடித்துள்ளதாகக் கூறினார்.
லால் சலாம் படம், கிரிக்கெட்டை மையப்படுத்தி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனுடன் இந்து முஸ்லீம் பிரச்சனையாக உண்மையாக நடந்த கதை.
விக்ராந்த்
கிட்டத்தட்ட விஷ்ணு விஷால் நிலை தான் விக்ராந்துக்கும். விஷ்ணு விஷாலுக்காவது சில படங்களின் வெற்றியைப் பெற்றுள்ளார் ஆனால், விக்ராந்துக்கு எதுவுமே சரியாக அமையவில்லை.
பல வருடங்களாகப் போராடியும் அவருக்கான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. மிகவும் வருத்தம் அளிக்கும் நிகழ்வு.
விக்ராந்த் தேர்ந்தெடுக்கும் கதையா அல்லது இயக்குநர்களா எதோ ஒன்று அவரைத் தொடர்ந்து தோல்விப்பாதைக்கே அனுப்பிக்கொண்டுள்ளது.
பத்துப்படங்களுக்கு மேல் நடித்து இருந்தாலும், ஒரு படம் கூடச் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. இதுவொரு கடினமான தருணம்.
‘15 வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கேன் என்று எனக்கே தெரியவில்லை‘ என்றது உண்மையிலேயே மனதை வருத்தியது.
அவர் முகத்தில் இனம் புரியாத சோகம், மனதின் வலி அவர் பேசும் போது இருந்தது. சலிப்பா, விரக்தியா, எதிர்கால கவலையா எனப் புரியாத ஒன்று.
விக்ராந்த் உணர்வை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அனைவருமே உண்மையான உழைப்பை கொடுக்கிறார்கள், எனோ சிலருக்கு அமைவதில்லை.
முயற்சிப்பதில் பிரச்சனையா? சரியான வழியைப் பின்பற்றவில்லையா? வாய்ப்பு கிடைக்கவில்லையா? நேரமா? என்னவாக இருப்பினும் வருத்தமாக உள்ளது.
நடிகர் விஜயின் உறவினர் விக்ராந்த், அவருடைய சாயல் இருக்கும். மேடையில் பேசும் போது கூட விஜயின் உடல்மொழியும், குரலும் அவரிடையே இருந்தது.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவருமே கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்கள், அதோடு மாமன் மச்சான் என்று அழைக்கக்கூடிய அளவுக்கு நெருங்கிய நண்பர்கள்.
இவர்கள் இருவரும் தாங்கள் நேசித்த கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இப்படம் வெற்றி பெற்று இருவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்பது மக்களின் தீர்ப்பில் உள்ளது.
விக்ராந்த் போல ஒரு தரமான வெற்றிக்காகப் பல வருடங்களாகக் காத்துக் கொண்டு இருப்பவர்களில் ஒருவர் சாந்தனு.
லால் சலாம் தொடர்பான தனது அனுபவங்களைக் கூறி, ஐஸ்வர்யா பேச்சு Explosive ஆக இருந்தது என்று AR ரகுமான் பேசினார்.
அதோடு மத ரீதியான படத்தில் வழக்கமாக வரும் க்ரிஞ், Cliche காட்சிகள் இருக்கும் என்று நினைத்தாகவும், படம் பார்த்த பிறகு அவ்வாறான காட்சிகள் இல்லாதது வியப்பை அளித்ததாகக் கூறியது மேடைக்காக கூறியது போல இல்லை.
சங்கி பற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியது சர்ச்சையானது பற்றியும், தலைவர் பேசியது பற்றியும் அடுத்தப் பகுதியில் கூறுகிறேன்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இயல்பாகவே இயக்குனர் ஐஸ்வர்யா / சௌந்தர்யா மீதும் எனக்கு அந்தளவிற்கு உடன்பாடு கிடையாது. தலைவர் மகள்கள் என்பதால் மட்டும் இவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது கடினம். திரைத்துறையை பொறுத்தவரை வெற்றி மட்டுமே சாதனையாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்..
குறிப்பாக கோச்சடையான் படத்தின் உருவாக்கம் என்னால் தற்போது கூட ஜீரணிக்க முடியவில்லை.. 10 பாகுபலிக்கு நிகரான ஒரு கதை அது. அதை முறையாக திரைக்கதை அமைத்து தலைவரை வைத்து படத்தை எடுத்து இருந்தால், உலகளவில் பேசப்பட்டிற்கும்.. வாய்ப்புக்கள் எல்லாம் இருந்தும் அதை சரியாக பயன்படுத்த வில்லை என்றே நினைக்கிறேன்.
லால் சலாம் கதைக்களம் கிரிக்கெட் குறித்து இருந்தால் உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக படத்தை வரவேற்கிறேன்.. படத்தை பார்ப்பேன்.. ஆனால் கொஞ்சம் கிரிக்கெட், அதிகம் இந்து / முஸ்லீம் பிரச்சனையை குறித்து படம் இருந்தால் படத்தை பார்க்கவே மாட்டேன்..
சமீபத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் ஒரு பேட்டியில் படத்தின் உருவாக்கம் அருமையாக இருக்கிறது. (படத்தில் இவரும் நடித்து இருக்கிறார்) நான் உண்மையில் இயக்குனரின் திறனை (அவர் வைத்த கேமரா ANGLE ) கண்டு வியப்படைந்தேன் என்று கூறி இருந்தார்.
@யாசின்
“திரைத்துறையை பொறுத்தவரை வெற்றி மட்டுமே சாதனையாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்..”
உண்மை தான்.
“கோச்சடையான் படத்தின் உருவாக்கம் என்னால் தற்போது கூட ஜீரணிக்க முடியவில்லை.. 10 பாகுபலிக்கு நிகரான ஒரு கதை அது. ”
நீங்கள் கூறுவது சரி தான் ஆனால், அப்போது இருந்த நிலையில் தலைவரால் நடிக்க முடியாது. உடல்நிலை மோசமாக இருந்தது.
அதோடு சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கான பட்ஜெட் இன்னும் கூடுதலாக வேண்டும்.
“முறையாக திரைக்கதை அமைத்து தலைவரை வைத்து படத்தை எடுத்து இருந்தால், உலகளவில் பேசப்பட்டிற்கும்”
என்னைப்பொறுத்தவரை திரைக்கதை சிறப்பாகவே இருந்தது ஆனால், கிராபிக்ஸ் தான் சொதப்பி விட்டது.
இதே படத்தைக் கிராபிக்ஸ் இல்லாமல் உண்மையாக எடுத்து இருந்தால், பெரிய வெற்றி பெற்று இருக்கும் ஆனால், அதற்கான சூழ்நிலை அப்போது இல்லை.
நானும் லிவிங்ஸ்டன் பேட்டி பார்த்தேன்.