ஜெலன்ஸ்கி என்ற கோமாளி

3
ஜெலன்ஸ்கி என்ற கோமாளி

ரும் பிப் 2023 வந்தால், ரஷ்யா உக்ரைன் போர் துவங்கி ஒரு வருடம் முடியப்போகிறது. Image Credit

எதனால் போர் துவங்கியது?

அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள NATO அமைப்பில் உக்ரைன் இணைவதாக முடிவெடுத்த பிறகு ரஷ்யா உக்ரைன் போர் துவங்கியது.

NATO வில் இணையக் கூடாது என்று ரஷ்யா கூறியதை உக்ரைன் ஏற்கவில்லை.

NATO வில் இணைந்தால் ரஷ்யாக்கு என்ன பிரச்சனை?

ஒரு தம்பதி, இருவருக்கும் வாழ்க்கை இயல்பாக சென்று கொண்டு இருந்த போது இருவருக்கும் சில காரணங்களால் சண்டை ஏற்படுகிறது.

ஒருநாள் படுக்கும் போது மனைவி கத்தியுடன் படுக்கிறார், கணவன் கேட்டதுக்கு நான் ஒன்றும் செய்ய மாட்டேன், இது என் பாதுகாப்புக்கு என்று கூறுகிறார்.

தூங்கும் போது குத்தி விட்டால் என்ன செய்வது என்று கணவனுக்குப் பயம்!

தற்போது உங்களுக்கு புரிந்து இருக்கும், யார் என்ன கதாப்பாத்திரம் என்று.

கணவன் ரஷ்யா, மனைவி உக்ரைன், கத்தி NATO.

இது தான் உக்ரைன் பிரச்சனை. இவையல்லாமல் மற்ற சிக்கல்களும் உண்டு என்றாலும், போருக்கான ஆரம்பப்புள்ளி இது தான்.

ஜெலன்ஸ்கி

NATO வில் இணைவதை ரஷ்யா தடுக்க முடியாது. எனவே, போருக்குத் தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போரில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்.

வெளியிலிருந்து பார்ப்பதற்கு, அட! ஒரு சிறிய நாடு, வல்லரசு நாட்டை என்ன சங்கதி என்று கேட்டுக்கொண்டுள்ளதே! என்று தோன்றும்.

ஆனால், இதில் மிகப்பெரிய உலக அரசியல் உள்ளது.

உக்ரைனை ரஷ்யா எளிதாக அழித்து விடும் ஆனால், அதனால் உலகநாடுகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும் என்று பொறுமையாக உள்ளது.

போரால் ரஷ்யாவும் கடும் இழப்பைச் சந்தித்துள்ளது.

போர் இப்படியே தொடர்ந்து ரஷ்யா கடுப்பாகி அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், நிலைமை மிக மோசமாகி விடும். அது போல நடந்து விடக் கூடாது.

சரி! என்ன தான் இருந்தாலும், ரஷ்யாக்கு கடும் சவால் உக்ரைன் கொடுப்பது பெரிய சம்பவம் தானே! என்று தோன்றும்.

ஆனால், உண்மையில் நடப்பது வேறு.

உக்ரைன் எப்படி சமாளிக்கிறது?

அமெரிக்க, ஐரோப்பா நாடுகளுக்கு ரஷ்யா மீது கடுப்பு. ரஷ்யாவை ஒழிக்க வேண்டும் என்று பொருளாதார தடைகளை விதித்து படு தீவிரமாக உள்ளன.

மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதிகளைத் தாராளமாக வழங்கி வருகிறார்கள். இவையெல்லாம் இலவசம் அல்ல என்பது புரிந்து கொள்ள வேண்டியது.

இது மட்டுமல்லாது உலகளவில் மிகத் திறமையான Snipers களம் இறக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் ரஷ்ய வீரர்களைக் கொன்று குவிக்கிறார்கள்.

Snipers என்பவர்கள் யார் என்றால், தூரமாக இருந்தாலும் குறி பார்த்துச் சரியாக மறைவிலிருந்து இலக்கைத் தாக்குபவர்கள்.

கடுப்பாகி ரஷ்யா குண்டு போட்டால், ஐயோ! இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்களே! என்று புலம்ப வேண்டியது.

ரஷ்யா வைத்த செக் மேட்

ஐரோப்பா நாடுகளின் குடுமி ரஷ்யாவிடம் உள்ளது.

இந்நாடுகளுக்கு எரிபொருள், எரிவாயு கொடுக்கும் நாடாக ரஷ்யா உள்ளது.

ஐரோப்பா நாடுகள் தமக்கு எதிராக திரும்பியதால், எரிபொருள், எரிவாயு கொடுப்பதில் கெடுபிடி காட்ட ஆரம்பித்தது.

இதனால், கடுமையாக எரிபொருள் விலை உயர்ந்ததால், பணவீக்கம் ஏற்பட்டு, பொருட்களின் விலை உயர்ந்தது.

இதனால் பொருளாதாரம் மோசமான நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

குளிர் காலம் துவங்கினால், எரிவாயு தட்டுப்பாடு பிரச்சனை மிகப்பெரியளவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க, ஐரோப்பா நாட்டு மக்கள், எங்கள் வரிப்பணத்தை எதற்கு உக்ரைனுக்கு செலவிடுகிறீர்கள் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் என்று நினைத்த போர், தொடர்கிறது என்றால், உக்ரைனுக்கு மற்ற நாடுகள் உதவுவதே காரணம்.

ஜெலன்ஸ்கி என்ற கோமாளி

NATO நாடுகள் அமைப்பு என்றாலும், இதைக்கட்டுப்படுத்துவது அமெரிக்கா தான். அமெரிக்கா விருப்பப்படியே அனைத்தும் நடக்கும்.

தான் எவ்வளவு சிறிய நாடு என்பதை உணர்ந்து இருந்தும், ரஷ்யா போன்ற வல்லரசுடன் போருக்குச் செல்வது குருட்டுத்தனமான தைரியம்.

தற்போது தனது ஈகோ போரால் ஜெலன்ஸ்கி சாதித்தது என்ன?

மூன்று மில்லியன் உக்ரைன் மக்களை அகதிகளாக்கியுள்ளார், பல ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டார்கள், போரால் நாடு சிதைந்து விட்டது.

போர் நின்றாலும் இனி நாட்டைச் சீரமைப்பது எளிதல்ல, பல பழமையான, முக்கியமான கட்டிடங்கள், உட் கட்டமைப்புகள் சிதைந்து விட்டன.

உக்ரைன் பழையபடி திரும்ப பல தலைமுறைகள் எடுக்கும்.

பணத்துக்கு எங்கே போவது?

சரி! உக்ரைன் வெற்றி பெற்று விட்டது என்றே வைத்துக்கொண்டாலும், அதைக்கொண்டாட மக்கள் வேண்டுமே?! நாடு இருக்க வேண்டுமே?

நாட்டைத் திரும்பக் கட்டமைக்க தேவைப்படும் பல ட்ரில்லியன் பணத்துக்கு எங்கே போவது?

வாங்கிய கடனைக் கட்டவே பணம் இல்லை! இதில் எங்கே புதிதாக கட்டமைப்பது!

NATO வில் இணையாமல் இருந்தால், எந்தப் பெரிய இழப்பும் உக்ரைனுக்கு இல்லை. எதிர்காலத்தில் ரஷ்யாவால் பிரச்சனை வந்தாலும், அந்த நேரத்தில் போராடுவது சரியாக இருக்கும்.

தற்போது தவிர்த்து இருக்க வேண்டிய இவ்வளவு பெரிய சேதத்தை நாட்டுக்கு ஏற்படுத்தியதால் கிடைத்த பலன் என்ன?

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக (2001 – 2021) அமெரிக்கா (இங்கிலாந்தும்) போர் செய்து, தன் நாட்டின் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்து, திரும்ப அதே நிலையில் விட்டு வந்தது.

இதனால் அமெரிக்கா என்ன சாதித்தது? அதே தான் ஜெலன்ஸ்கி செய்ததும்.

இந்தியா மீதான புலம்பல்கள்

இந்தியா வாங்கும் ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெயிலும் உக்ரைனின் ரத்தம் உள்ளது என்று உக்ரைன் கூறி விமர்சித்தது.

அதாவது, ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை வாங்கி வருவதை சுட்டிக்காட்டி விமர்சித்தது.

ஆனால், இதற்கு நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,

ஐரோப்பா நாடுகளே அதிகளவில் எரிபொருள் வாங்கி வருகின்றன, இந்தியா வாங்குவதை ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை என்று கூறினார்.

தன் நாட்டு மக்களின் நலன் கருதாமல் முட்டாள்தனமாக ஜெலன்ஸ்கி போர் செய்து அழித்தால், இந்தியாவும் அதே போல முட்டாள்தனமாக நடந்து கொள்ள வேண்டுமா?

இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையின் போது இந்தியாக்கு எதிராக உக்ரைன் வாக்களித்தது. இந்த நேரத்தில் இந்தியாக்கு உதவியாக இருந்தது ரஷ்யா.

தள்ளுபடி

தனது பொருளாதாரத்தை மீட்க இந்தியாக்கு ரஷ்யா தள்ளுபடி விலையில் எரிபொருளைக் கொடுத்தது.

நாம் இல்லையென்றால் ரஷ்யா அவ்வளோ தான் என்று நினைத்தவர்களுக்கு இந்தியா எரிபொருள் வாங்கியதால், அமெரிக்க, ஐரோப்பா நாடுகள் கடுப்பாகின.

அமெரிக்க மிரட்டிப்பார்த்தது ஆனால், இந்தியா தங்கள் நாட்டு நலனே முக்கியம் என்று உறுதியாக கூறியதால், பின்னர் வேறு வழியின்றி எதிர்ப்பைக் கை விட்டது.

இந்தியா இது போலச் செயல்பட்டதாலே, பணவீக்கத்தை கட்டுப்பாட்டினுள் வைத்துப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிந்தது.

மற்ற உலக நாடுகள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் போது இந்திய பொருளாதாரம் மட்டும் உயர்ந்து வருகிறது.

அமெரிக்க, ஐரோப்பா நாடுகள் பேச்சைக்கேட்டு ரஷ்யாவை புறக்கணித்து இருந்தால், எரிபொருள் விலை உயர்வால் இந்தியா மிக மோசமான நிலைக்குச் சென்று இருக்கும்.

சொந்த செலவில் சூனியம்

இந்தியாவா உக்ரைனை போர் தொடுக்க சொன்னது? இந்தியாவா ஆயுதங்களைக் கொடுத்துப் போரை ஊக்குவித்து வருகிறது?

இவர்களே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது இல்லாமல், உலக நாடுகளையும் சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள்.

தற்போது ஆட்குறைப்பு, Recession ஏற்பட முக்கியக் காரணங்களில் ஜெலன்ஸ்கி முட்டாள்தனமும் ஒன்று. இதில் இந்தியாவை ரத்தம் வாங்குகிறீர்கள் என்று விமர்சனம்!

தன் முட்டாள்தனமான முடிவால், ஈகோவால் உலகையே சிக்கலில் தள்ளிய கோமாளி ஜெலன்ஸ்கியை இந்தாண்டின் சிறந்த நபராக Time இதழ் அறிவித்துள்ளது.

உலகநாடுகள், ஊடகங்கள் ஜெலன்ஸ்கியை உசுப்பேற்றி அனைவரையும் ரணகளமாக்கி கொண்டுள்ளன.

கொசுறு 1

ஜெலன்ஸ்கி நகைச்சுவை நடிகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொசுறு 2

டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? | FAQ கட்டுரையில் மேலும் புதிய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் கரன்சியை மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் திரும்பப் படிக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறதா? | FAQ

பிரிட்டனை பொருளாதாரத்தில் இந்தியா தாண்டியது சாதனையா?

அமெரிக்க டாலர் மதிப்புக் குறையாதது ஏன்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. கிரி, உண்மையில் இந்த பதிவை படிக்கும் போது மனது கனக்கிறது.. முதல், இரண்டு உலக போரில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்த்து மேற்கத்திய நாடுகள் அமைதியாகி விட்டது.. உண்மையில் தற்போது நடக்கும் போரினை கண்டு உலக நாடுகள் மொத்தமும் அமைதி காப்பது கொடுமையிலும் கொடுமை..

  கடந்த சில மாதங்களுக்கு முன் இரானின் கடந்த 80 ஆண்டு கால வரலாற்றை தொடர்ச்சியாக இணையத்தில் படித்து வந்தேன்.. 50/60 ஆண்டுகளுக்கு முன் ஷாவின் ஆட்சியின் போது ஈரான் மிக பெரிய வளர்ச்சியை அடைந்து இருக்கிறது.. எல்லா துறைகளிலும் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து இருக்கிறது.. பின்பு படிப்படியாக மேற்கத்திய நாடுகளின் சதியினாலும், உள்நாட்டு பிரச்சனையினாலும் வீழ்ந்த ஈரான் இன்று வரை எழ முடியவில்லை..

  உக்ரைன் போர் முடிந்த பின் மற்ற நாடுகள் எவ்வளவு தான் பொருளுதவி செய்தாலும்.. இழந்ததை என்றுமே மீண்டும் திரும்ப பெற இயலாது.. உக்ரைனின் கலச்சாரம், மக்கள், மொழி, வரலாறு என பல இழப்புகள் என்றுமே சரி செய்ய முடியாது.. மேலைநாடுகள் ஒரு சைடு தொட்டிலை ஆடுவதும், ஒரு சைடு பிள்ளையை கிள்ளுவதுமா செயல்படுகின்றனர்.. குறிப்பா அமெரிக்கா .. ஐநாவின் நிலை என்ன வேன்றே தெரியவில்லை..
  ========================================================

  சரி! உக்ரைன் வெற்றி பெற்று விட்டது என்றே வைத்துக்கொண்டாலும், அதைக்கொண்டாட மக்கள் வேண்டுமே?! நாடு இருக்க வேண்டுமே?

  நாட்டைத் திரும்பக் கட்டமைக்க தேவைப்படும் பல ட்ரில்லியன் பணத்துக்கு எங்கே போவது?

  வாங்கிய கடனைக் கட்டவே பணம் இல்லை! இதில் எங்கே புதிதாக கட்டமைப்பது! (இலங்கையில் ஆட்சியாளர்களின் குடும்பம் அடிச்ச கொள்ளையில் ஓவர் நைட்ல நாட்டு மக்கள் எல்லோரையும் வீதியில் நிப்பாட்டி விட்டார்கள்.. ) போரினால் ஏற்படும் இழப்பு கடுமையாக இருக்கும்.

  நீங்கள் கூறியது எல்லாம் சரியான கருத்து.. சாதாரணமாக நமக்கே இது தோன்றும் போது உக்ரைனில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எப்படி தெரியாமல் இருக்கிறது.. எந்த நம்பிக்கையில் இந்த போரை தொடர்ந்து கொண்டிருக்கின்றர்..

  இரண்டாம் உலக போருக்கு அடிப்படை ஹிட்லரின் மாபெரும் தவறு.. ரஸ்யாவை பற்றி அவர் மதிப்பீடு தவறாகி விட்டது.. தற்போதைய சூழலில் வளர்ந்த நாடுகளே, ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது..அப்படி இருக்கும் போது வளர்ந்து வரும் நாடுகளின் நிலை இன்னும் பரிதாபம்..

 2. @யாசின்

  ” முதல், இரண்டு உலக போரில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்த்து மேற்கத்திய நாடுகள் அமைதியாகி விட்டது.”

  இந்தப்போர் தொடர்வதே இவர்களால் தான்.

  “ஐநாவின் நிலை என்ன வேன்றே தெரியவில்லை..”

  இந்த அமைப்பு ஒரு கேடு கெட்ட அமைப்பு.

  “சாதாரணமாக நமக்கே இது தோன்றும் போது உக்ரைனில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எப்படி தெரியாமல் இருக்கிறது.. எந்த நம்பிக்கையில் இந்த போரை தொடர்ந்து கொண்டிருக்கின்றர்.”

  இரண்டே காரணங்கள் தான்.

  ஒன்று ஜெலன்ஸ்கி ஈகோ

  இரண்டு அமெரிக்க, ஐரோப்பா நாடுகளின் ரஷ்யா மீதான வன்மம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here