கவிஞர் புலமைப்பித்தன் | நீ ஒரு காதல் சங்கீதம்

3
கவிஞர் புலமைப்பித்தன்

விஞர் புலமைப்பித்தன் பற்றித் தெரியும் ஆனால், இளமையான, அசத்தலான பாடல்களை இயற்றி இருக்கிறார் என்று தெரியாது. Image Credit – News Credit https://www.dinamalar.com/

சமீபத்தில் காலமான புலமைப்பித்தன் அவர்கள் குறித்த சிறப்புக் கட்டுரையில், இவர் இயற்றிய பாடல்களைப் பார்த்த பிறகு ‘அட! இவற்றையெல்லாம் இவரா எழுதினார்!‘ என்று வியப்பே மேலிட்டது.

கவிஞர் புலமைப்பித்தன்

கோவை மாவட்டம் பள்ளபாளையத்தில் பிறந்த புலமைப்பித்தன் அவர்களின் இயற்பெயர் ராமசாமி. சிறு வயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

புலமைப்பித்தன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழைக் கண்டு அசந்த இயக்குநர் கே சங்கர், தன்னைச் சென்னையில் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.

தான் இயக்கிய குடியிருந்த கோயில் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு யார் கொடுத்த பாடலும் திருப்தியாக வரவில்லை என்று புலமைப்பித்தனை அழைக்கிறார்.

இப்பாடல் நன்றாக வந்தால், உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறிய நிலையில், எழுதிய பாடல் தான் ‘நான் யார் நான் யார் நீ யார்‘.

இப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெற, இதன் பிறகு வரிசையாக எம்ஜிஆர் படங்களுக்குப் பாடல்கள் எழுதித் திரையுலகில் கவனம் பெற்றார்.

அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றி பெற்று பல முன்னணி இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் எழுதினார்.

அசத்தலான பாடல்கள்

இக்கட்டுரையை எழுத முக்கியக்காரணமே என்னைப் போலப் பலருக்கு இவர் எழுதிய பாடல்களின் சிறப்புத் தெரியாமலே போய் இருக்குமே என்ற எண்ணத்தில் தான்.

பல பாடல்களை கவிஞர் வாலி எழுதியதாகவே நினைத்து இருந்தேன்.

எம்ஜிஆர், சிவாஜி, கமல் & ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களுக்குப் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

எம்ஜிஆர் பாடல்கள் இவருக்கு அடையாளத்தையும், திரையுலகில் வளர்ச்சியையும் கொடுத்துள்ளன.

ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய புலமைப்பித்தன் அவர்களின் சில பாடல்களைக் கூறுகிறேன், நீங்களும் வியப்படைவீர்கள்.

ஓடி ஓடி உழைக்கணும், சிக்கு மங்கு சிக்கு மங்கு, ஒன்றே குலம் என்று பாடுவோம், பாடும் போது நான் தென்றல் காற்று, இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ, சொர்க்கத்தின் திறப்பு விழா.

உச்சி வகுந்தெடுத்து, பட்டு வண்ண ரோசாவாம், வெண் மேகம் விண்ணிலே வந்து, நிலா அது வானத்து மேலே, நீ ஒரு காதல் சங்கீதம்.

உன்னால் முடியும் தம்பி, புஞ்சை உண்டு நஞ்சை உண்டு, ராத்திரியில் பூத்திருக்கும், கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு, வெள்ள மனம் உள்ள மச்சான், அடி வான்மதி, கல்யாண தேன் நிலா.

அழகிய விழிகளில் அறுபது கலைகளும், இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது, மழை வருது மழை வருது குடை கொண்டு வா, ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்.

ஜாதி மல்லி பூச்சரமே, சங்கீத ஸ்வரங்கள் பாடல்கள் அதிகம் ரசித்து, பல முறை கேட்டவை ஆனால், இவர் எழுதியது என்று தெரியாது.

அழகன் படத்தில் அனைத்துப் பாடல்களுமே அசத்தலாக இருக்கும்.

நான் படித்த பள்ளியில் ஒரு மாணவன் உன்னால் முடியும் தம்பி படத்தின் ‘புஞ்சை உண்டு நஞ்சை உண்டு‘ பாடல் பாடி முதல் பரிசு பெற்றான்.

இவர் எழுதிய மேற்கூறிய பாடல்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம், அனைத்து வகைப் பாடல்களையும் எழுதியுள்ளார் என்று.

திறமை

மேற்கூறியது புலமைப்பித்தன் எழுதிய சூப்பர் ஹிட் பாடல்களில் சில தான், குறிப்பிடாமல் விட்டது ஏராளம்.

சிலரின் சிறப்பை, திறமையை அவர்களின் கடைசிக் காலம் வரை உணராமல் இருப்பது அவர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதை தான்.

இவர் எழுதிய பெரும்பாலான பாடல்களை இன்றும் ரசித்துக் கேட்டு வருகிறேன். இவர் வரிகளுக்குச் சிறப்பான இசையை வழங்கிய இசையமைப்பாளர்களுக்கு நன்றி.

புலமைப்பித்தன் அவர்கள் மறைந்தாலும், இசை இருக்கும் வரை அவர் நினைவுகளைச் சுமந்து கொண்டு இருக்கும்.

புலமைப்பித்தன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

தொடர்புடைய கட்டுரை

தனிமை யாருக்கு கடினமில்லை?! | எழுத்தாளர் கி ரா

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, உண்மையில் இவரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.. ஆனால் ஒரு கவிஞர் என்று தெரியும்.. MGR ஆட்சியில் அரசவை கவிஞர்ராக இருந்தார் என நினைக்கிறேன்.. இவரின் சில பாடல்களை இன்றும் கேட்டு கொண்டே இருக்கிறேன்.. சிறிது கூட சுவை குறையவில்லை.. மாறாக இன்னும் அதிகமாக தித்திக்கிறது.. நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் சில என் விருப்ப பாடல்கள்..

    ஒன்றே குலம் என்று பாடுவோம் – பள்ளி பருவத்தில் ரசித்த முதல் பழைய பாடல்.

    இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ – இனிமையான பாடல்.

    உச்சி வகுந்தெடுத்து – படத்தின் காட்சிக்கு ஏற்ற பாடல்.. மொழியே வித்தியாசமாக இருக்கும்.

    பட்டு வண்ண ரோசாவாம் – விரும்பாதவர்கள் எவருமில்லை.. காட்சிக்கு ஏற்ற பாடல்.

    நீ ஒரு காதல் சங்கீதம் – 90ஸ் ஓட மிக சிறந்த மெலோடி.

    உன்னால் முடியும் தம்பி – விறுவிறுப்பான பாடல்.. இன்றும் கேட்டு கொண்டே இருக்கிறேன்.

    புஞ்சை உண்டு நஞ்சை உண்டு – 30 ஆண்டுகளுக்கு பின்னும் காட்சிகள் மாறவில்லை..

    ராத்திரியில் பூத்திருக்கும் – தலைவரின் உடல் மொழி செம்ம..

    கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு – பின்னிரவில் கேட்டால் உருகி விடுவேன்..

    வெள்ள மனம் உள்ள மச்சான் – காட்சிக்கு ஏற்ற சிறந்த பாடல்.. பாடல் வரிகள் செம்மையா இருக்கும்..

    கல்யாண தேன் நிலா – தற்போதும் அடிக்கடி கேட்கும் பாடல்.

    சங்கீத ஸ்வரங்கள் – எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்..

    அதோ மேக ஊர்வலம் – காதல் ரசம் சொட்டி கொண்டே இருக்கும்..

    ஓ வசந்த ராஜா – நான் அதிகம் கேட்ட மெலோடி பாடல் இது தான்..தற்போதும் கேட்டு கொண்டே இருக்கிறேன்.. சுவை சிறிது கூட குறையவில்லை..

    விழியிலே மணி – மிகவும் வேகமான செல்ல கூடிய மெலோடி பாடல்..

    நிறைய பாடல்களை நீங்கள் குறிப்பிடாமல் இருந்து இருக்கலாம்.. நானும் இங்கு சொல்லவில்லை.. ஆனால் மிக சிறந்த கவிஞர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. அவர் மறைந்தாலும் உலகம் உள்ளவரை அவரின் பாடல்கள் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.. புலமைப்பித்தன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    “உண்மையில் இவரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.. ஆனால் ஒரு கவிஞர் என்று தெரியும்.”

    எனக்கும் அதே.

    “MGR ஆட்சியில் அரசவை கவிஞர்ராக இருந்தார் என நினைக்கிறேன்.”

    ஆமாம். குறிப்பிட நினைத்தேன் ஆனால், அவர் தனிப்பட்ட விவரங்களுக்குள் அதிகம் சேர்த்தால் அரசியல் பதிவாகி விடும் என்று அவற்றைக் குறைத்து கொண்டேன்.

    “நிறைய பாடல்களை நீங்கள் குறிப்பிடாமல் இருந்து இருக்கலாம்..”

    உண்மை தான் யாசின். எவ்வளவு பாடல்களைக் குறிப்பிட்டாலும், யாராவது இதைக் குறிப்பிடவில்லையே என்று கேட்பார்கள் 🙂 .

    எனக்கு இவர் பாடல்களைக் கேட்டதும் அட! என்று வியப்பாக இருந்தது. கண்ணதாசன், வாலி, வைரமுத்து பாடல்களில் இவர்கள் திறமை மறைந்து விட்டது.

    இன்னமும் பலர் இவரைப்போலவே வெளிச்சத்துக்கு வராமலே சென்று இருப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here