தேவா THE தேவா 1 | A Great Musical Experience

2
தேவா THE தேவா

தேனிசை தென்றல் தேவாவின் “தேவா THE தேவா” இசை நிகழ்ச்சி Blacksheep நிறுவனத்தால் 2022 நவம்பர் 20 தேவா பிறந்தநாளில் நடைபெற்றது. Image Credit

தேவா THE தேவா

இசையமைப்பாளர்கள் அனைவரும் இசை நிகழ்ச்சியை நடத்தி இருந்தாலும், தேவா இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியதில்லை.

இவர்கள் கூறுவதுபடி 30 வருடங்களுக்குப் பிறகு நடத்தப்படுகிறது.

Blacksheep

YouTube பயன்படுத்தும் பெரும்பான்மையானவர்களுக்கு Blacksheep பரிட்சியமானவர்கள். இந்நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.

அனைவருமே இளம் வயதினர் என்பதால், அனுபவமில்லாதது சில இடங்களில் உணர முடிந்தது ஆனால், இவர்களே தேவாவின் அருமை புரிந்து நடத்தியுள்ளார்கள்.

இவர்களுக்கும் ரஜினிக்கும் உடனான தொடர்பை, நிறுவனத்தின் வளர்ச்சியைக் காணொளி வாயிலாகக் காண்பித்தது சிறப்பானதாக அமைந்தது.

தேவா என்ற ஒரு நபருக்காகவே இந்நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன். இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை, செல்ல முயன்றதும் இல்லை.

90 களில் கொண்டாட்டமாக இவரது இசையை நண்பர்களுடன் அனுபவித்தவன் என்ற முறையில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.

வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் சூர்யாக்கு நன்றி.

முதல் பாடல்

மேல்வருவத்தூர் அடிகளார் பக்தர் தேவா என்பதால், முதல் பாடலாக அடிகளார் பற்றிய பாடலுடன் ஆரம்பித்தார்.

இதன் பிறகு குஷி பாடலான மேகம் கருக்குது பாடலுடன் விழா துவங்கியது.

சித்ரா ஹரிஹரன் அனுராதா ஸ்ரீராம் குரல் முன்பு இருந்தது போலவே இருந்தது.

அவள் வருவாளா பாடல் முதலில் கேட்டபோது எப்படி இருந்ததோ அதே போல ஹரிஹரன் குரல், வாய்ப்பே இல்லை 🙂 . என்ன ஒரு அற்புதமான குரல்!

கருப்பு தான் எனக்குப்பிடித்த கலரு பாட்டைப்பாடி அனுராதா ஸ்ரீராம் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

பாடலில் வரும், “நம்மூரு சூப்பர்ஸ்டாரு” என்று கூறி சில நொடிகள் நிறுத்த, அரங்கமே அதிர்ந்தது. இந்த வரி வரும் முன்பே அனைவரும் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர்.

எதிரில் அமர்ந்து இருந்த ரஜினி புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.

சிறுவயதில் தலைவருடன் நடித்ததை நினைவு கூறி அந்தப்படத்தின் பாடலைப் பாடி அனுராதா ஸ்ரீராம் அசத்தினார்.

நிலவைக்கொண்டு வா பாடல் ஏற்கனவே இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு இருந்ததால், இதை வைத்துப் பார்வையாளர்கள் பகுதியில் ஒரு நபர் ஆடி ரணகளம் செய்து கொண்டு இருந்தார்.

அனுராதா ஸ்ரீராமும் ஜாலியாக எடுத்துக்கொண்டு உன்னி கிருஷ்ணனுடன் பாடியது சிறப்பு. உன்னி கிருஷ்ணன் எதுவுமே நடக்காதது போலப் பாடினார் 😀 .

மாளவிகா

இத்தளத்தைப் படிக்கும் அனைவருக்கும் நான் தலைவர் ரசிகன் என்பது தெரியும் ஆனால், 2010 / 2011 லிருந்து படிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் நான் மாளவிகாவின் ரசிகன் என்பதும் 🙂 .

இந்நிகழ்ச்சிக்கு மாளவிகா வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. தூரமாக இருந்தாலும், மாளவிகாவை நேரில் பார்தததில் பெரும் மகிழ்ச்சி.

தலைவரை ஏற்கனவே, இரு முறை நேரில் பார்த்து விட்டேன். ஒருமுறை ரசிகர்கள் சந்திப்பில், இரண்டாவது பேட்ட படப்பிடிப்பில்.

அனுராதா ஸ்ரீராமுடன் கருப்பு தான் எனக்குப் பிடித்த கலரு பாட்டுக்குச் சிறு ஆட்டம் போட்டுத் தேவாக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அஜித் விஜய்

விஜய் அஜித் கண்டிப்பாக இந்நிகழ்ச்சிக்கு வந்து இருக்க வேண்டும் காரணம், அவர்களின் ஆரம்பகால வளர்ச்சியில் தேவாவின் பங்கு மிக முக்கியமானது.

விஜயின் நடன திறமையை வெளிப்படுத்தும் விதமாக இசையைக் கொடுத்து அவரின் நடன விருப்பத்துக்குத் தீனி போட்டதில் தேவாவின் பங்கு முக்கியம்.

அஜித்துக்கும் காதல்கோட்டை, முகவரி, வாலி, வான்மதி உட்படப் பல படங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்பாடல்களைக் கொடுத்துள்ளார்.

இவர்களின் பாடல்களை நிகழ்ச்சியில் கேட்கவே அதிகம் விரும்பினேன். காரணம், இன்னமும் அடிக்கடி கேட்பது தேவா இசையில் வந்த அஜித் விஜய் பாடல்களே!

இவை என்றுமே எனக்குச் சலித்தததில்லை.

ஆனால், நான் கிளம்பும் வரை (10.30 PM) ஒரு விஜய் பாடல் கூட வரவில்லை, பின்னர் பாடப்பட்டதா என்று தெரியவில்லை.

தேவாவின் இசையில் சூப்பர் ஹிட் படங்களைக்கொடுத்த தயாரிப்பாளர் சிவ சக்தி பாண்டியன் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று வியப்பாக இருந்தது.

இவர் தயாரிப்பில் வெளிவந்த “காலமெல்லாம் காதல் வாழ்க, வான்மதி, கண்ணெதிரே தோன்றினாள், காதல்கோட்டை” ஆகியவை மியூசிக்கல் ஹிட்.

பிரபலங்கள்

வந்து இருந்த அனைவரையுமே துவக்கத்தில் பேச அழைத்தது பாடல்களின் எண்ணிக்கை குறையக் காரணமாகி விட்டது.

மரியாதை செலுத்த மேடையிலேயே பொதுவாக நன்றி கூறாமல், அனைவரையும் பேச அழைத்ததால் அதுவே கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது.

KS ரவிக்குமார், பிரசாந்த், வைரமுத்து, பாண்டியராஜன் உட்படப் பலர் பேசினார்கள். இதன் பிறகு பேசியவர்களைச் சுருக்கமாக முடித்துக்கொள்ள அறிவுறுத்தினர்.

பிரசாந்த் செமையாக ஒரு ஆட்டம் போட்டார்.

தேவா தம்பி சம்பத்தின் மகன் தான் நடிகர் ஜெய் என்று நிகழ்ச்சியில் தெரிய வந்தது.

அடிகளார் மகன் வந்து இருந்தார்.

தேவா இசையில் கேப்டன் படமான கள்ளழகரில் வரும் பாடல் “வாராரு வாராரு” இன்றுவரை மதுரை சித்திரை திருவிழாவில் ஒலிபரப்பட்டு வருகிறது, கோவிலிலிருந்து வந்து தேவாக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள்.

எவ்வளவு பெரிய பெருமை!

இயக்குநர் வசந்த்

அவள் வருவாளா பாடலைப் பற்றிக்கூறினார்.

பாடலை எழுதியது வைரமுத்து என்றாலும் அதில் வரும் வரும் சில ஆங்கில வார்த்தைகளை எழுதியது வேறு கவிஞர் என்று கூறி, அது நான் தான் என்று கலகலப்பூட்டினார்.

அதில் வரும் பிளாப்பி டிஸ்க் அவள், டால்பி சவுண்டு அவள் என்று வருவது அப்போது பிரபலமாக இருந்ததால், அதைச் சேர்த்ததாகக் கூறினார்.

அந்தப்பாடலின் BASE இசைக்கு அந்த வரியை (டால்பி சவுண்டு அவள்) பாடும் போது மிகப்பொருத்தமாக இருக்கும்.

இப்பாடல் எடுக்கப்பட்டது இதே நேரு விளையாட்டரங்கம். தேவா நிகழ்ச்சி உள் விளையாட்டரங்கத்தில் நடந்தது.

எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல். இதுவும் எங்கெங்கே எங்கெங்கே இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே பாடலும்.

தேவயானி

நலம், நலம் அறிய ஆவல் பாடலுடன், தேவயானி கடிதம் எழுதியதை காணொளியாக ஒளிபரப்பித் தேவயானியை பின்னர் நேரில் வர வைத்தார்கள்.

அவரும் இன்னொரு கடிதத்துடன் வந்து படிக்க ஆர்வமான நேரத்தில் ரஜினி அரங்கத்தின் உள்ளே நுழைந்ததால், பார்வையாளர்கள் ரஜினியைப் பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்ததால், கவனச்சிதறல் ஏற்பட்டது.

தேவயானி நிறையப் பகிர நினைத்து இருக்கலாம் ஆனால், சூழ்நிலை காரணமாக கடிதத்தைத் தொடர முடியவில்லை, ஏமாற்றமாகி இருப்பார்.

தேவயானியைப் பார்ப்பதா, ரஜினியை கவனிப்பதா என்று தேவா பதட்டமாகி, தேவயானி முடித்துக் கிளம்பினால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்.

பிரபலங்கள் அனுபவங்களைக் கூறியது, சிறப்புக் காணொளிகள் ஆகியவை ரசிக்கும்படி இருந்ததில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், இவை எடுத்துக்கொண்ட நேரம் காரணமாக பாடல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

இதன் தொடர்ச்சியை அடுத்தப் பகுதியில் முடிக்கிறேன். ஒரே பகுதியாக எழுத முயன்றேன் ஆனால், முடியவில்லை.

2 COMMENTS

  1. கிரி, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரியில் நுழையும் இடைவெளியில் தான் தேவா சாரின் பாடல்களை விரும்பி கேட்டேன்.. நிறைய பாடல்களை கேட்டு ரசித்து இருந்தாலும் குறிப்பிட்ட சில பாடல்களை கேட்கும் போது மட்டும் நிறைய நிகழ்வுகள் மனதிற்குள் வந்து போகும்..

    ஆசை படத்தில் மீனம்மா பாடல் தற்போது கேட்டாலும் பிரெஷ்ஷா இருக்கும்.. அது போல நேருக்கு நேர் படத்தில் அவள் வருவாளா?? பாடல் செம்மையா இருக்கும்.. பாட்ஷா படத்தில் தங்க மகனின்று பாடலின் இசை சிலிர்ப்பதாக இருக்கும்.. நிறைய பாடல்களை கூறி கொண்டே போகலாம்.. ஆனால் என்னுடைய ஆல் டைம் விருப்ப பாடல் .. சாமுண்டி படத்தின் முத்து நகையே பாடல் தான்..

    தேவா சாரின் நிறைய காணொளிகளை நான் கேட்டுள்ளேன்.. மிகவும் எளிமையான மனிதர்.. கிட்டதிட்ட குணத்தில் MSV ஐயாவை போன்றவர்.. தன் முதல் படத்தில் வாலி சாருடன் ஏற்பட்ட சுவையான அனுபவத்தை CHAI WITH CHITRA நிகழ்ச்சியில் பகிர்ந்து இருப்பார்.. முதல் tune போட்டதும் ஆரம்பம் நல்ல இருக்கு!!! வயலெல்லாம் நெல்லா இருக்கு!!! என்று பாடல் எழுதி தன் வாழ்க்கையில் விளக்கை ஏற்றியதாக தேவா சார் கூறினார்..

    https://www.youtube.com/watch?v=_aOL6YbtIIk

    தயாரிப்பாளர் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய நிகழ்வை கூட மிகவும் விளையாட்டாக, சிரிப்பாக ரசிக்கும் படி கூறி இருப்பார்.. நேரம் இருந்தால் பார்க்கவும்..

    அஜித், விஜய் நிச்சயம் உங்கள் கருத்துக்களை ஏற்று கொள்கிறேன்.. இவர்களின் ஆரம்ப கால வளர்ச்சியில் தேவா சாரின் பங்கு நிச்சயம் உண்டு.. விஜய்யை கூட ஒரு விதத்தில் ஏற்று கொள்ளலாம்.. தன் படங்களின் நிகழ்ச்சிகளுக்காவது வருகிறார்..

    ஆனால் அஜித் புரிந்து கொள்ள முடியவில்லை.. உங்க படத்தோட நிகழ்வுக்கு நீங்களே வராதது யாருக்கு உண்மையில் நட்டம்.. உங்களுக்கா? உங்கள் ரசிகருக்கா? தயாரிப்பாளருக்கா? இது எனக்கு புரியாத புதிர்.. ரஜினி சாரின் உயர்ந்த குணம் உண்மையில் அவர் மீது தனி மரியாதையை வர வைக்கிறது.

  2. @யாசின்

    “ஆசை படத்தில் மீனம்மா பாடல் தற்போது கேட்டாலும் பிரெஷ்ஷா இருக்கும்.. அது போல நேருக்கு நேர் படத்தில் அவள் வருவாளா?? பாடல் செம்மையா இருக்கும்.. பாட்ஷா படத்தில் தங்க மகனின்று பாடலின் இசை சிலிர்ப்பதாக இருக்கும்..”

    உண்மை. இவை எனக்கும் ரொம்பப் பிடிக்கும். பாட்ஷா BGM தற்போது Goosebumps தான்.

    “என்னுடைய ஆல் டைம் விருப்ப பாடல் .. சாமுண்டி படத்தின் முத்து நகையே பாடல் தான்.”

    முன்னரே கூறியுள்ளீர்கள். ஆனால், உங்களுக்கு எப்படி இப்பாடல் பிடித்தது என்பது மட்டும் எனக்கு புரியவில்லை 🙂 .

    எப்படிக்கேட்டாலும் சாதாரணமாக உள்ளது. ரசனைகள் ஒருவருக்கொருவர் எப்படி வேறு படுகிறது பாருங்கள்.

    “தயாரிப்பாளர் தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய நிகழ்வை கூட மிகவும் விளையாட்டாக, சிரிப்பாக ரசிக்கும் படி கூறி இருப்பார்.. நேரம் இருந்தால் பார்க்கவும்..”

    நிறைய காணொளிகள் பட்டியலில் உள்ளது. கண்டிப்பாக இதைப்பார்க்கிறேன்.

    ” ரஜினி சாரின் உயர்ந்த குணம் உண்மையில் அவர் மீது தனி மரியாதையை வர வைக்கிறது.”

    தலைவர் வாய்ப்பே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here