கலைஞர் மு. கருணாநிதி பல விமர்சனங்களை, பாராட்டுகளை, கடந்து வந்தவர்.
சிலர் தற்போதைய நிலையை வைத்தும், பலர் அப்போதைய நிலையை வைத்தும் அவரை விமர்சிக்கிறார்கள். Image Credit
விமர்சனங்கள் வந்தாலும், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை கலைஞர்.
கலைஞர் மு. கருணாநிதி
எனக்குக் கலைஞர் குறித்த அறிமுகம் 1984 ம் ஆண்டுத் தேர்தலில் தான்.
எம்ஜிஆர் உடல்நிலை சரி இல்லாமல் இருந்த நிலையில் எம்ஜிஆர் தான் வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் பகுதியில் பலரும் வேண்டியது மங்கலாக நினைவுள்ளது.
இது மட்டுமே கலைஞர் பற்றி எனக்கு நினைவில் உள்ள பழைய செய்தி.
இதன் பிறகு கலைஞர் குறித்துத் திரும்ப எனக்குக் கவனத்தில் வந்தது 1996 தேர்தல்.
அப்போது ஜெ மீது மக்கள் கொண்ட வெறுப்பு, வளர்ப்பு மகன் திருமண நிகழ்வு என்று மாற்றுக் கட்சியாகத் திமுக வுக்கு அபரிமிதமான ஆதரவு இருந்தது.
அப்போது தான் ரஜினி ரசிகனாக (பாட்ஷாக்கு பிறகு) மாறி இருந்தேன் அதனால் அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையில் கலைஞர் வெற்றி பெற வேண்டும் என்ற பொதுவான மக்கள் எண்ணமே என்னிடமும் இருந்தது.
இதன் பிறகு அப்படியே ஜெ, கலைஞர் என்று மாறி மாறி எண்ணங்கள் இருந்ததே தவிரக் கலைஞர் பற்றிப் பெரியளவில் மரியாதையில்லை.
அது ஏனென்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
எழுத 2008 ல் வந்த பிறகு அரசியல் குறித்துத் திரும்ப நிறையத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது கலைஞர் செய்த பல முன்னேற்றங்கள், இவருடைய திட்டங்களால் தமிழகம் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஈழப்போர்
இந்தச் சமயத்தில் தான் 2009 ஈழப்போரும் நடந்தது.
இதில் கலைஞர் நடந்து கொண்ட முறையும் அப்போது நடந்த சில கசப்பான நிகழ்வுகளும் திமுக மீது ஒரு வெறுப்பைக் கொண்டு வந்து விட்டது.
இதன் பிறகு கலைஞர் / திமுக மீதான மரியாதை இன்று வரை மீண்டு வரவில்லை.
இதில் என்ன வியப்பு என்றால், கலைஞர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் செய்த அளவுக்கு, கொண்டு வந்த திட்டங்கள் அளவுக்கு ஜெ செய்ததில்லை ஆனால், அவர் மீது மக்களுக்கு அவ்வளவு வெறுப்பில்லை.
பாலங்கள்
சென்னையில் 95% பாலங்கள் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது தான்.
தற்போது கிண்டி, கோயம்பேடு, அண்ணா மேம்பாலங்கள் இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று சின்னதாகக் கற்பனை செய்து பாருங்கள்.
வளர்ச்சி திட்டங்கள் பெரியளவில் கலைஞர் ஆட்சியில் நடந்துள்ளது. உங்களுக்குப் படிக்கக் கடுப்பாக இருந்தாலும் இது தான் உண்மை.
இதெல்லாம் உடனே புரியும் என்பதற்காகவும், இதைப் பலர் தற்போது நேரடியாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதாலும் சொல்லப்பட்ட உதாரணம்.
கலைஞர் மு. கருணாநிதி வளர்ச்சி திட்டங்கள்
எண்ணிடலங்கா வளர்ச்சி திட்டங்கள், சாலைப்பணிகள், மக்களுக்கான திட்டங்களைக் கலைஞர் செயல்படுத்தி இருக்கிறார்.
இதில் என்ன வியப்பு என்றால், தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் கலைஞரின் திட்டங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயனடைந்து இருக்கிறார்கள்.
ஆனால், அதை அறியாமலே அவரைத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அவர் தனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று.
கலைஞரை விமர்சிக்கப் பல காரணங்கள் இருப்பது போல அவரைப் பாராட்டவும் நியாயமான பல காரணங்கள் உள்ளன.
குடும்ப ஆதிக்கம்
இவ்வளவு செய்தும் கலைஞருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது என்றால், அதற்குக் காரணம் அவரது குடும்ப ஆதிக்கம், அவர்கள் செய்த ஊழல் போன்றவையும் அவற்றைக் கலைஞர் ஆதரித்ததும், கண்டும் காணாமல் இருந்தது தான்.
கலைஞர் செய்த ஊழலை விட அவர் / கட்சி பெயர் கெட்டது அவர் குடும்ப உறுப்பினர்கள் செய்த ஊழலால் தான்.
தான் ஆட்சியில் இருக்கும் போது தன் உயிர் பிரிய வேண்டும் என்று விருப்பப்பட்டதாகக் கூறப்பட்டது ஆனால், அது நடக்கவில்லை.
சில சர்ச்சைகள் இறுதியில் ஏற்பட்டாலும் முழு மரியாதையுடன் வழி அனுப்பி வைக்கப்பட்டதாக உணர்கிறேன்.
கலைஞர் மீது பல்வேறு மாற்றுக்கருத்துகள், குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் தமிழக அரசியலில் மறுக்க முடியாத ஆளுமை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
தொடர்புடைய கட்டுரைகள்
தனிப்பட்ட காரணங்களால் எனக்கு கருணாநிதியை பிடிக்காது. ஆனால் இளமையான கருணாநிதி தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழுக்கும் நிறைய நல்லது செய்துள்ளார். கருணாநிதி எப்பாதும் இளமையாகவும் , குடும்ப உறவுகள் இன்றியும் இருந்திருக்கலாம். முக்கியமாக குடும்ப உறவுகள் இல்லாமல் இருந்திருந்தால், இப்போது புகழப்படுவதிலும் பார்க்க பல மடங்கு கொண்டாடப்பட்டிருப்பார். 2009 யுத்தத்தை கருணா நிதி மட்டுமல்ல யார் நினைத்திருந்தாலும் நிறுத்தியிருக்க முடியாது என்பதுதான் யாதார்த்தம். ஆனால் தன் உறவுகளுக்காக அமைச்சுப்பதவிக்கு காய் நகர்த்தியது, தமிழ மக்களை போர் நிறுத்தம் வந்துவிட்டதாக அறிவித்தது , மழை விட்டும் தூவானம் நிற்கவில்லை என கூறியது போன்றவைதான் சறுகலுக்கு காரணம். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது மீண்டும் பெரிய அளவில் மெரீனா புதைகுழி மூலம் நிரூபிக்கப்படுள்ளது.