லால் சலாம் இசை வெளியீடு 2

2
லால் சலாம் இசை வெளியீடு

ஸ்வர்யா பேசியதை விளக்கமாகவும் தலைவர் பேசியதை சுருக்கமாகவும் கூறுகிறேன். காரணம், தலைவர் பேச்சில் சர்ச்சை எதுவுமில்லை, வழக்கமான ரசிக்கும்படியான பேச்சு. Image Credit

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா பேசும் போதே நேரம் இரவு 10 மணியைக் கடந்து இருந்தது. எனவே, நேரமானதால் பலரும் தலைவர் பேச்சைக் கேட்டுக் கிளம்ப ஆர்வமாக இருந்தனர்.

கல்லூரி அமைந்துள்ள தொலைவும், இருட்டான பயணமும் ஒரு காரணம்.

இதை ஐஸ்வர்யா நன்கு உணர்ந்து இருந்ததால், இந்த மேடை எனக்கு முக்கியமானது. எனவே, நான் நினைப்பதை கூற 10 நிமிடங்கள் அனுமதியுங்கள் வேண்டிக்கொண்டார்.

மறந்து விடக் கூடாது என்பதற்காகத் துண்டு சீட்டில் எழுதி வந்துள்ளதாகவும், யாரும் எழுதித்தரவில்லை, நானே சொந்தமாக எழுதியது என்று கூறினார்.

ஒரு பாடலை இயக்கிய போது கதாசிரியர் விஷ்ணு, ‘நீங்கள் படம் எதுவும் இயக்கவில்லையா?‘ என்று கேட்டதற்கு, கதை கூறுங்கள் முயற்சிக்கலாம் என்று கூறியுள்ளார்.

பின்னர் அவர் கூறிய இரு கதைகளுள் ஒன்று தான் லால் சலாம்.

துவக்கத்தில் மேடையில் பேசிப் பழக்கம் இல்லாததாலும், தலைவருள்ள மேடை என்பதாலும், படத்தின் இயக்குநர் என்பதாலும் இயல்பாகவே உள்ள பதட்டம் இருந்தது.

பதட்டம் காரணமாக முகத்தில் நடுக்கம் இருந்தது. பின்னர் ஒரு நிகழ்வைக் கூறும் போது ரசிகர்கள் கைத்தட்டியதால், பதட்டம் குறைந்து இயல்புக்கு வந்தார்.

நடிகர்கள் தயாரிப்பாளர்கள்

இப்படத்துக்காக நடிகர்களை அணுகிய போது பலரும் ஏதாவது காரணம் கூறி தவிர்த்துள்ளனர். தலைவர் மகள் என்பதால் தயாரிப்பாளர்களும் கதை கேட்டுள்ளனர் ஆனால், பின்னர்ப் பார்க்கலாம் என்று கூறி தவிர்த்துள்ளனர்.

ஒரு தயாரிப்பாளரிடம் முதலீடு பற்றிப் பேசும் போது 7 கோடி ஆகும் என்று கூறியதற்கு, இதெல்லாம் போதாது 40 / 45 கோடி முதலீடு வரும்படி கூறுங்கள் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு ஐஸ்வர்யா, எல்லோரும் குறைந்த முதலீட்டில் கேட்பார்கள் ஆனால், அதிக முதலீட்டில் எடுக்கக் கூறுகிறாரே?! என்று அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஒரு சூப்பர்ஸ்டாரின் மகளாக இருந்தாலும், நடிப்பதற்கோ, படத்தைத் தயாரிப்பதற்கோ யாரும் முன் வராதது வியப்பாக இருந்தது.

சூப்பர் ஸ்டாரின் மகள் என்பது தனக்குச் சுமையாக இருந்ததாகவே அவர் பேச்சு இருந்தது. அதாவது, அப்பா பெயர் தனக்கு எந்தச் சலுகையையும் பெற்றுத்தரவில்லை என்று கூறினார்.

மகள்களின் படத்தில் நடிப்பதில்லை, படம் தயாரிப்பதில்லை என்று முடிவில் இருந்த தலைவர் கதையைக் கேட்கவில்லை. இதைத் தலைவர் பேசும் போது கூறினார்.

பின்னர் ஒருநாள் கதையைக்கேட்டு, மொய்தீன் பாய் கதாப்பாத்திரம் சக்தி வாய்ந்ததாகவும், உண்மைக்கதை என்பதாலும் தானே நடிப்பதாகக் கூறியுள்ளார்.

இதை ஐஸ்வர்யா முதலில் நம்பவில்லை என்பதோடு விளையாட்டுக்குக் கூறுவதாக நினைத்துள்ளார். பின்னர் உறுதியாக நடிப்பதாகக் கூறிய பிறகே நம்பியுள்ளார்.

இதைத்தலைவரும் கூறியதாலே நானும் நம்பினேன். இல்லையென்றால் நானும் நம்பாமல், ஐஸ்வர்யா கட்டாயத்திலேயே நடித்து இருப்பார் என்று எண்ணியிருப்பேன்.

தலைவர் நடிப்பதாலே பல ஆண்டுக் கால அவருடைய உழைப்பை விளையாட்டாக எடுத்துக்கொண்டு படத்தை எடுத்து விடத் தனக்கு உரிமையில்லை என்பதை உணர்ந்து இருந்ததாகக் கூறினார்.

இதன் பிறகே ரகுமான், லைகா போன்றோர் வந்துள்ளனர்.

நல்லா இருக்கீங்களா?

விசாரிப்பவர்களில் 90% பேர் நல்லா இருக்கீங்களா என்று கேட்பதில் உண்மையில்லை எனவும், 10% பேரே தன்னை உண்மையாகவே நல்லா இருக்கீங்களா என்று கேட்டதாகவும் கூறினார்.

இதை எழுத்தில் வித்தியாசப்படுத்த முடியவில்லை, காணொளியாகப் பார்க்கும் போது புரியும்.

இதைக் கூறும் போது கண்ணீர் விட்ட தலைவர், பின்னர் கர்சீப்பில் துடைத்துக் கொண்டு இயல்பானார். ஐஸ்வர்யா – தனுஷ் திருமண முறிவை அல்லது வேறு எதையோ நினைத்து இருக்கலாம்.

பொதுவெளியில் உணர்ச்சிகளைத் தலைவர் வெளிக்காட்ட மாட்டார் ஆனால், நிகழ்ச்சியில் அழுது முதல் முறையாகப் பார்க்கிறேன், மிக வருத்தமாக இருந்தது.

தன் வேலை பளுவால், பசங்களைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை ஆனாலும், அவர்கள் அதைப் புரிந்து கொண்டு தனக்கு ஆதரவளித்தார்கள் என்று கூறி ஐஸ்வர்யா உணர்ச்சிவசப்பட்டார்.

தலைவர் 171 – விடாமுயற்சி

லால் சலாம் படத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டால், தலைவர் 171 (லைகா), விடா முயற்சி (லைகா) எப்போது வரும் என்று கேட்கிறார்கள்!

என்னது லால் சலாம் பற்றி யாருமே கேட்கவில்லை! யாருமே நம்ம படத்தைப் பற்றிக் கேட்க மாட்டேன் என்கிறார்களே?! என்று கஷ்டமாக இருந்தது‘ என்றார் ஐஸ்வர்யா.

இதுவொரு வியாதியாகத் தமிழ் ரசிகர்களிடையே உள்ளது.

ஐஸ்வர்யா மட்டுமல்ல, யார் எந்தவொரு படத்தைப் பற்றிச் செய்தி வெளியிட்டாலும் சம்பந்தமே இல்லாமல் அங்கே சென்று அவர்கள் விருப்ப நடிகரின் அப்டேட் கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இந்த வியாதிக்கு மருந்தே இல்லையென்றே நினைக்கிறேன்.

ஆதங்கம்

இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம் ஆனால், யாருமே எந்த ஆதரவும் தர மாட்டேன்கிறார்களே என்ற ஆதங்கம் அவரது பேச்சு முழுக்க இருந்தது.

இது போதாது என்று கருத்துப்பகுதியில் தலைவரைச் சங்கி என்று கூறுகிறார்கள் என்று கோபப்பட்டார்.

ஐஸ்வர்யா பேச்சு மிகச்சிறப்பாக இருந்தது காரணம், ஒரு பெண்ணாக, பிரபலத்தின் மகளாக அவர் பட்ட கஷ்டம் ஆகியவை கேட்கப் புதிதாக இருந்தது.

இவர் பேச்சு இவர் மீதான மதிப்பை அதிகரித்து விட்டது.

ஆனால், சங்கி என்று இவர் பேசியது இவர் பேச்சின் மற்ற முக்கிய விஷயங்களைக் கவனம் பெறாமல் செய்து விட்டது. இதை இவர் சொன்னவுடனே இது தான் நடக்கும் என்று புரிந்து விட்டது.

இதைத் தவிர்த்து இருக்கலாம் அல்லது தெளிவாகக் கூறி இருக்கலாம்.

தன்னை விமர்சிக்கும் சமுகத்தள விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று தலைவரே ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், அதை ஐஸ்வர்யாவே புரிந்த கொள்ளாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சர்ச்சையில் மாட்டியுள்ளார், புறக்கணிப்பே சிறந்தது. இந்த அனுபவம் மேலும் அவரைப் பக்குவப்படுத்தும்.

ஐஸ்வர்யாக்கு என் பரிந்துரை என்னவென்றால்,

அனைவரும் கடுமையாக விமர்சிக்கிறார்களே என்று மன உளைச்சல் ஆகாமல், அடுத்த முறை பேசும் போது கவனமாக இருக்கக் கிடைத்த வாய்ப்பாக, அனுபவமாக எடுத்துக்கொண்டால், மன உளைச்சலாகாது.

எல்லோரும் அனைத்து நேரங்களிலும் 100% சரியாகப் பேசிவிட முடியாது. இது தலைவர் உட்பட அனைவருக்கும் பொருந்தும். எனவே, இப்படி ஆகி விட்டதே என்று வருந்த வேண்டியதில்லை.

எல்லோருமே சாதாரண மனிதர்கள் தான். அதோடு அனைவரையும் திருப்தி செய்ய முடியாது, அனைவருக்கும் நல்லவராக இருக்க முடியாது.

Read: செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!

சங்கி

ஐஸ்வர்யாக்கு மேடையில் பேசிப் பழக்கமில்லை என்பதால், எதைக் கூறலாம், எதைக்கூறக் கூடாது என்பதில் அனுபவம் இல்லை. அனுபவமுள்ளவர்களே சில நேரங்களில் தவறி விடும் போது ஐஸ்வர்யா எம்மாத்திரம்.

தனக்கு யாரும் ஆதரவு தரவில்லை, தனிப்பட்ட வாழ்க்கையிலும் விமர்சிக்கிறார்கள் என்ற மன உளைச்சலோடு, அனைத்து மதங்களையும் விருப்பு வெறுப்பின்றி அணுகும் ஆன்மீகவாதியான தன் அப்பாவையும் சங்கி என்ற ஒரு வட்டத்துக்குள் அடைக்கிறார்களே என்ற கோபமே இப்படி வெளிப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.

தலைவர் இந்து மதத்தை நேசிப்பவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், அதற்காக அவர் மற்ற மதங்களை என்றும் பொதுவெளியில் விமர்சித்ததில்லை.

அவரது வீட்டிலேயே அனைத்து மதக் கடவுள் படங்களும் இருக்கும்.

எனவே, ஆன்மீகவாதியான தனது அப்பாவை இப்படிக்கூறுகிறார்களே என்ற கோபத்தில் தனது அப்பா சங்கியில்லை என்று கூறியுள்ளார்.

இதைச் சமீப பேட்டியில், ‘சங்கி என்பது கெட்ட வார்த்தை அல்ல, தன் அப்பா அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஆன்மீகவாதி என்ற அர்த்தத்திலேயே ஐஸ்வர்யா கூறினார்‘ என்று தலைவர் தெளிவுபடுத்தி விட்டார்.

சமூகத்தளங்களில், ஊடகங்களில் வந்ததை வைத்து ஐஸ்வர்யாவை, தலைவரைத் திட்டியவர்கள், பேசியதை முழுதாகப் பார்த்தால், தற்போதுள்ள வன்மம் இருக்காது.

தலைவர் பெண்ணாக இல்லாமல் வேறு யாரும் பேசியிருந்தால் நானும் கோபப்பட்டு இருப்பேன். எனவே, விமர்சனம் எதிர்பார்த்ததே.

ஆனால், மேடையில் இந்து மதத்தின் சிறப்புகளைக் கூறி உயர்த்திப் பேசிய தலைவரையும் மிக வன்மமாக விமர்சிக்கும்போது தான் ஆத்திரமாகிறது.

விமர்சனங்கள்

இதுவரை தலைவர் இந்து மதத்தை ஒரு வார்த்தை கூடப் பொதுவெளியில் இழிவுபடுத்தியதில்லை. தேசியவாதியான தலைவர் நாட்டின் வளர்ச்சிக்குப் பாதுகாப்புக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

பலரும் ஆதரவு தர மறுத்த, பணமதிப்பிழப்பு, CAA போன்றவற்றுக்கு வெளிப்படையாக ஆதரவு தந்ததோடு, அதன் முக்கியத்துவத்தையும் அனைவருக்கும் கூறியுள்ளார்.

2019 ல் தமிழ்நாடே மோடியை எதிர்த்த போது பத்து பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்த்தால், யார் பலசாலி என்று அனைவர் எதிர்ப்பையும் மீறித் தன் ஆதரவை தெரிவித்தார்.

முன்னணி தமிழ் நடிகர்கள் அயோத்தி பற்றிப் பேச பயந்த போது அங்குச் சென்றதோடு, ஒவ்வொரு ஆண்டும் வர விருப்பப்படுகிறேன் என்று கூறினார்.

ஆனால், இவை எதையும் புரிந்து கொள்ளாமல் திட்டுவது தான் கடுப்பாகிறது. இவர் என்றைக்காவது மோடி, பாஜக, இந்து மதம் பற்றித் தவறாகக் கூறியுள்ளாரா?

பின்னர் ஏன் பாஜகவினர் பாய்ந்து பிராண்டிக்கொண்டுள்ளார்கள்?!

சங்கி என்ற வார்த்தையைத் திமுக மற்றும் இடது சாரிகள், கெட்ட வார்த்தை போல மாற்றி வைத்துள்ளனர். இந்த எண்ணத்தை மாற்ற முயற்சி எடுக்காமல் திட்டுவதால் என்ன பயன்?! இதை மாற்ற முயற்சி எடுங்கள்.

மேடையில் என்ன பேசினார்?

காலமான கேப்டன், பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்தார்.

நகைச்சுவை, ஆன்மிகம், ஒவ்வொரு மதத்தின் சிறப்புகள், மதத்தலைவர் என்ற ஒருவர் இல்லாத இந்து மதம் ஆகியவற்றைக் கூறினார்.

தானே விருப்பப்பட்டுக் கேட்டு மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தில் நடித்ததாகக் கூறினார். மகள்கள் படத்தில் நடிப்பதில்லை என்ற முடிவிலும், படம் தயாரிப்பதில்லை என்ற முடிவிலும் இருந்துள்ளார்.

ஆனால், மருத்துவர்கள் ஆக்டிவா இருக்க வேண்டும் என்று கூறியதால், கோச்சடையான் படத்தில் நடித்தததாகவும், மொய்தீன் பாய் கதாப்பாத்திரம் பிடித்ததால் நடித்துள்ளார்.

உடல்நிலை சரி இல்லாமல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது கவனித்துக்கொண்ட ஐஸ்வர்யா தனக்கு இரண்டாவது தாய் என்றார்.

பெண் குழந்தைகள் பற்றிக் கூறும்போது குழந்தை கேட்டால், உடனே அனுப்புவதாகவும், மகளைக் கேட்டால் தானே (கடவுளே) வருகிறேன் என்று கூறியதாகவும் கூறினார்.

இவற்றைக் கூறும்போது ஐஸ்வர்யா, சவுந்தர்யா, லதா மூவரும் கண்கலங்கி விட்டார்கள். பல்வேறு காரணங்களாக, தலைவர் உட்படக் குடும்பமே கண்ணீர் விட்ட நிகழ்வு இது மட்டுமே!

தலைவர் பேசிய மற்ற செய்திகளை ஏற்கனவே படித்து / பார்த்து இருப்பீர்கள், இல்லையென்றால், தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதுவே பெரிய கட்டுரையாக வந்து விட்டது. எனவே, இதோடு முடித்துக்கொள்கிறேன்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. சினிமா துறையை பொறுத்தவரை ஒரு பெண் இயக்குனராக சாதிப்பது மிகவும் கடினம்.. அதற்கு கடந்த கால திரை வரலாறு ஒரு சான்றாகும். தற்போது சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), ஹலிதா சமீம் (சிலுக்கருப்பட்டி) இயக்குனர். காயத்ரி (விக்ரம் வேதா இயக்குனர்-புஷ்கர் மனைவி) வேறு யாராவது உள்ளார்களா என்று நினைவில் இல்லை.

  தலைவர் மகள் என்பதால் நிச்சயம் மேற்குறிய இயக்குனர்களுக்கு இல்லாத அழுத்தம் நிச்சயம் ஐஸ்வர்யாவுக்கு இருந்து இருக்கும். இந்த படம் விமர்சன ரீதியாக இல்லாமல், வசூல் ரீதியாக வெற்றி பெற்றால் நிச்சயம் நல்ல தயாரிப்பாளர்கள் மீண்டும் இவரை வைத்து படம் எடுக்க வாய்ப்புகள் அதிகம்.

  முந்தைய பதிவிலே சொல்ல மறந்து விட்டேன். விஷ்ணு விஷாலை எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லா கதாபாத்திரத்துக்கும் எளிதில் மாற கூடிய ஆற்றல் உள்ளவர். இடையில் தனிப்பட்ட சில குடும்ப பிரச்சனையாலும் , சரியான கவனமின்மையால், சூரியுடன் நில பிரச்சனை செய்தியாலும் திரை துறையில் சற்று சறுக்கல் ஏற்பட்டது. தற்போது கட்டாகுஸ்தி படத்துக்கு பின் மீண்டு வந்ததாக உணர்கிறேன். இவர் இன்னும் பல உயரங்கள் அடைய வாய்ப்பு உள்ளது. நடிகராக / தயாரிப்பாளராக தன்னை நிலை நிறுத்தி உள்ளார் என்றே உணர்கிறேன்.

  நீங்கள் கூறியது போல விக்ராந்த், எல்லா திறமையும் கொண்ட ஒரு நடிகர். காலம் தான் சரியான ஒரு வாய்ப்பை அளிக்கவில்லை. ஒரு வேலை நடிகர் விஜய்யின் உறவினர் என்பது கூட மைனஸாக இருக்கலாம். அவரை போல உருவ அமைப்பு, பேச்சு, BODY LANGUAGE கூட காரணமாக இருக்கலாம்.

  நான் பார்த்த முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவரை போல பல நடிகர்கள் திறமை இருந்தும், இன்னும் தனக்கான உயரத்தை அடைய முடியாமல் உள்ளார்கள். இந்த படம் இருவர்க்கும், இயக்குனருக்கும் ஒரு comeback காக இருக்க வேண்டும் என ஆசை படுகிறேன்.

  சங்கி : இசை வெளியீட்டு விழாவில் என்னை பொறுத்தவரை ஐஸ்வர்யாவின் சங்கி குறித்த பேச்சு தேவையில்லாதது என்றே உணர்கிறேன். சிலவற்றை எழுதுவதற்கும் / பேசுவதற்குமான வித்தியாசம் அதிகம். அது மட்டுமில்லாமல் பொது வெளியில் இயக்குனராக என்ன பேசவேண்டும் என்ற தயாரிப்பு மிக அவசியமானது. உங்களுக்கு பழக்கமில்லை யென்றாலும் பழக்க படுத்தி கொள்ள வேண்டும். ஒரு 2 நிமிட மேடை பேச்சு படத்தின் வெற்றி / தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக அமைந்து விடலாம் .

  அதற்கு சிறந்த உதாரணம் என்ன சொல்ல போகிறாய் இசை வெளியீட்டு விழாவில் : 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்று கூறிய நடிகர் அஸ்வின் குமாரின் பேச்சு கிட்டத்திட்ட இவரின் திரை வாழ்வில் ஒரு மிக பெரிய சறுக்கலை கொடுத்தது..

 2. @யாசின்

  சுதா கொங்கரா சிறப்பாக தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

  “தலைவர் மகள் என்பதால் நிச்சயம் மேற்குறிய இயக்குனர்களுக்கு இல்லாத அழுத்தம் நிச்சயம் ஐஸ்வர்யாவுக்கு இருந்து இருக்கும்.”

  பிரபலங்களின் பிள்ளைகள் என்றாலே அவர்களுக்கான அழுத்தம், எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.

  பிரபலங்களின் பிள்ளைகள் என்பது ஒரு வகையில் வசதி, ஒரு வகையில் துன்பம்.

  “இந்த படம் விமர்சன ரீதியாக இல்லாமல், வசூல் ரீதியாக வெற்றி பெற்றால் நிச்சயம் நல்ல தயாரிப்பாளர்கள் மீண்டும் இவரை வைத்து படம் எடுக்க வாய்ப்புகள் அதிகம்.”

  ஆம்.

  விஷ்ணு விஷால் பற்றி பல தகவல்கள் தெரிந்து வைத்துள்ளீர்கள் 🙂 ஆமாம், சூரி பிரச்சனை இன்னும் முடியவில்லை என்று நினைக்கிறன்.

  “ஒரு வேலை நடிகர் விஜய்யின் உறவினர் என்பது கூட மைனஸாக இருக்கலாம். அவரை போல உருவ அமைப்பு, பேச்சு, BODY LANGUAGE கூட காரணமாக இருக்கலாம்.”

  வாய்ப்புள்ளது.

  “நான் பார்த்த முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ”

  பாண்டியநாடு படத்தில் சிறப்பாக நடித்து இருப்பார் ஆனால், முதன்மை கதாப்பாத்திரமாக இல்லை.

  “இசை வெளியீட்டு விழாவில் என்னை பொறுத்தவரை ஐஸ்வர்யாவின் சங்கி குறித்த பேச்சு தேவையில்லாதது என்றே உணர்கிறேன்.”

  ஏற்றுக்கொள்கிறேன். தனது அப்பாவை விமர்சிர்த்துக்கொண்டே இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் கோபப்பட்டு விட்டார்.

  அதற்கான எதிர்வினைகள் கடுமையாக உள்ளது.

  “சிலவற்றை எழுதுவதற்கும் / பேசுவதற்குமான வித்தியாசம் அதிகம். அது மட்டுமில்லாமல் பொது வெளியில் இயக்குனராக என்ன பேசவேண்டும் என்ற தயாரிப்பு மிக அவசியமானது. ”

  சரி.

  “நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்று கூறிய நடிகர் அஸ்வின் குமாரின் பேச்சு கிட்டத்திட்ட இவரின் திரை வாழ்வில் ஒரு மிக பெரிய சறுக்கலை கொடுத்தது.”

  மிகச்சரியாக குறிப்பிட்டீர்கள் 🙂 .

  ஐஸ்வர்யா பேச்சு கோபம், அஷ்வின் பேச்சு ஆணவம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here