யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் மரணம்.
கடந்த சில காலங்களில் அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்துப் பரவலாக விமர்சிக்கப்பட்டது ஆனால், இது போல ஒரு நிலையாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. Image Credit
அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் வதந்தி பரவியபோதும் அது குறித்து நான் நம்பவில்லை, அவ்வகைச் செய்திகளை யாரிடமும் பகிரவில்லை.
நிச்சயம் திரும்ப வருவார், ஓய்வுக்குப் பிறகு பொறுப்புக்கு வருவார் என்று உறுதியாக நம்பினேன்.
ஆனால், 4ம் தேதி Cardiac Arrest என்று கேள்விப்பட்ட போது தான் முதல் முதலாக அதிர்ச்சியானேன். அதன் பிறகு அப்போலோ கூறிய தகவல்கள் நம்பிக்கை தருவதாக இல்லை, பின் நடந்ததை அனைவரும் அறிவர்.
செல்வி ஜெ. ஜெயலலிதா
ஜெயலலிதா அவர்களின் முந்தைய நடவடிக்கைகள், செய்த ஊழல்கள், வீணடித்த மக்கள் பணம் என்று குறை கூற ஏகப்பட்ட விசயங்கள் இருந்தாலும், அவருடைய தைரியம், வழ வழ ன்னு பேசாமல் முடிவெடுக்கும் அவருடைய உறுதி அனைவரும் அறிந்தது.
அனைவரையும் திருப்தி செய்ய வேண்டும் என்று நினைத்து உருப்படி இல்லாமல் போகும் முடிவுகளை எடுக்காமல் தனக்குச் சரி என்று பட்டதை உறுதியாக எடுத்து இருக்கிறார்.
இதில் சில பெரும்பாலானவர்களுக்கு உடன்பாடில்லாத முடிவுகளும் இருக்கலாம்.
எண்ணற்ற முடிவுகள் இருந்தாலும், எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்தது பள்ளிகளில் “தமிழ்” கட்டாயம் என்ற உறுதியான முடிவு.
முதல் முறை ஆட்சிக்கு வந்த போது அனுபவம் இல்லாமல் படு மோசமாக ஆட்சி செய்து, வரைமுறை இல்லாமல் ஊழல்கள் செய்து பெரும் தோல்வியடைந்தார்.
அடுத்த ஆட்சியில் இத்தவறுகளை எல்லாம் களைந்து சிறப்பானதொரு ஆட்சியைக் கொடுத்தார். இதன் பிறகு விமர்சனங்கள் இருந்தாலும், இருக்கிற அரசியல்வாதிகளில் இவர் மக்களுக்கு ஏற்புடையவராக இருந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
திமுக ஆட்சியில் இருந்த அளவுக்கு மாநில வளர்ச்சி திட்டங்கள் இல்லை என்றாலும், அவர்கள் அளவுக்குப் பெரியளவில் ஊழல் இல்லை என்பதும் உண்மை.
ஜெயலலிதாக்குப் பின்
ஜெயலலிதா மீது எனக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், தற்போதைய நிலைக்கு இவரை விட்டால் ஒரு தலைவர் தமிழ்நாட்டுக்கு இல்லை.
இதுவே இவர் மீண்டு(ம்) வந்து விட வேண்டும் என்ற என் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இதைப் படிக்கும் நீங்கள் யார் அடுத்தத் தலைவர் என்பதைக் காரணங்களோடு விளக்கினால் எனக்கு ஒரு தெளிவு / ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இதை நான் ஏன் கூறுகிறேன்?
ஜெ க்கு பிறகு அதிமுக இருக்காது என்பதே என் முந்தைய கணிப்பாக இருந்தது காரணம், இரண்டாம் கட்ட பலமான தலைவர் என்று யாருமில்லை.
தற்போது பொறுத்து இருந்து பார்க்கலாம் என்ற நிலையில் உள்ளேன்.
ஜெ க்கு பிறகு ஓரளவு நம்பிக்கையளிக்கும் தலைவராக இருப்பவர் ஸ்டாலின் மட்டுமே! இவருக்கு அனுபவம் கிடைக்காமல் இன்றுவரை தடுப்பது கலைஞர். ஸ்டாலினுக்குப் பிரச்சனை அதிமுக அல்ல கலைஞர் தான்.
கலைஞரையும் தாண்டி வந்தால், ஸ்டாலின் திறமையான நிர்வாகி என்று கூற முடியாவிட்டாலும் இவரால் முடியும் என்று நம்பிக்கையுள்ளது.
ஆனால்,
இவர் பின்னாடியே தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கனிமொழி, ராஜாத்தி அம்மாள் என்று ஒரு பெரிய படையே உள்ளது. இவர்கள் ஸ்டாலினை ஆட்சி செய்ய விட மாட்டார்கள். இவர்களின் தலையீடு அதிகளவில் இருக்கும்.
வைகோ திறமையான நபர் ஆனால், மிக உணர்ச்சிவசப்படுபவர். வைகோவின் சமீப நடவடிக்கைகள் இவர் மீதான மதிப்பைப் பெருமளவில் குறைத்து விட்டது.
கேப்டன் முதன் முதலில் அரசியலுக்கு வந்த சமயத்தில் சக்கை போடு போட்டார்.
தற்போது உடல்நிலை காரணமோ என்னமோ முற்றிலும் வேறாக உள்ளார். இவரின் நடவடிக்கைகள் பொறுப்பான பதவிக்குத் தகுதியானவராகக் காட்டவில்லை.
அன்புமணி மீது வேறு வழி இல்லாமல் நம்பிக்கையுள்ளது ஆனால், அவர்கள் கட்சியின் மீதும் மற்றவர்கள் மீதும் நம்பிக்கையில்லை.
இது போல மிக மோசமான நிலையில் தான் தமிழகம் தற்போது உள்ளது. உண்மையில் ஜெ வின் இழப்பை விட அவரால் ஏற்பட்ட தமிழக அரசியல் வெற்றிட இழப்பு எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.
மத்திய அரசை மிரட்டக்கூடிய தகுதி பெற்ற ஒரே தலைவர் தற்போதைக்கு ஜெ மட்டுமே இருந்தார். இவரும் சென்ற பிறகு இது போல நமக்குப் பெருமையளிக்கக்கூடிய தலைவர் வேறு யார்? ஆளுமை மிகுந்த தலைவர் யார்?
தமிழ்நாடு என்றால் ஒரு கெத்தை நமக்குக் கொடுத்தது ஜெ யின் இருப்பு ஆனால், தற்போது யார் இது போல மத்திய அரசைக் கேள்வி கேட்கப்போகிறார்கள்? யார் தமிழகத்தை நினைத்துப் பயப்படுவார்கள்?
அதிமுகவின் தற்போதைய நிலை
அதிமுகவின் தற்போதைய நிலையைக் கற்பனையும் செய்ய முடியவில்லை.
இன்று தொலைக்காட்சி பார்த்து இருந்தீர்கள் என்றால், கவனித்து இருக்கலாம். சுற்றிலும் நின்று கொண்டு இருந்தவர்கள் மன்னார்குடியை சார்ந்தவர்கள் தான்.
ஜெ இருந்தவரை அவர் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.. தற்போது?!
“இதுவும் கடந்து போகும்” என்று நினைப்பதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
இறுதியில் கொண்டு செல்வது என்ன?
அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஜெ வையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். எத்தனையோ ஊழல் வழக்குகள், கொள்ளை என்று பல குற்றச்சாட்டுகள் ஆனால், இறுதியில் இப்பணம் எந்த வகையில் அவருக்கு உதவியது?!
கோடிக்கணக்கான பணம் இருந்தும் அவை காப்பாற்ற முடிந்ததா!
இரு மாதங்களுக்கு மேல் பல சிரமங்களை அனுபவித்து, இவ்வளவு வருடங்களாகப் பல வழிகளில் சம்பாதித்த பணமும் காப்பாற்றாமல் இறந்து போனார்.
இறுதியில் கொண்டு செல்லப்போவது ஒன்றுமில்லை.
தொண்டர்கள்
அதிமுக அமைச்சர்கள் கோமாளிகள் போல நடந்து கொண்டார்கள். அது குறித்துக் கிண்டலடிக்காத மாநிலமே இருக்க முடியாது.
இவர்களின் நிலைக்கு ஜெ வும் ஒரு காரணம்.
தொண்டர்களும் அப்போலோ வாசலில் பல கோமாளித்தனங்களைச் செய்து கொண்டு இருந்தார்கள்.
தற்போது ஜெ இறந்த பிறகு அவர்களின் நடவடிக்கைகளை வைத்து தமிழகத்தின் மானத்தை வாங்குகிறார்கள் என்று சமூகத்தளங்களில் கூறி வருகிறார்கள்.
ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவரது ரசிகர்களுக்கு அவர் எப்படி இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது.
ஜெ உடல்நிலை போல யாராவது கூறி தெரிந்ததே தவிர உண்மையான நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது.
சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லும் முன்பு “கண்ணுகளா” என்று ரசிகர்களுக்கு அவர் பேசியது வெளியாகியது.
இதுவரை இது போலக் குரலைக் கேட்டு இராத ரசிகர்கள் உடைந்து போயினர்.
இதுவே இப்படி என்றால்,
நடிகையாகவும் இருந்து, எம்ஜிஆர் அவர்களின் வாரிசாக இருந்து, ஆறு முறை முதல்வராக இருந்து, அவரால் பல இலவசங்களை, வசதிகளை அனுபவித்து, ஒவ்வொரு பொருளிலும் அவரின் அடையாளத்தைக் காணும் உண்மையான தொண்டனின் மன நிலை எப்படி இருக்கும்!
விமர்சிப்பவர்களால் நிச்சயம் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது.
விமர்சிப்பவர்களைப் பொறுத்தவரை தொண்டர்கள் செய்வது கோமாளித்தனமாகவும் அவர்களின் அழுகை கடுப்பேற்றுவதாகவும், அலறல்கள் தமிழ்நாட்டின் மானத்தை வாங்குவது போலத் தான் தோன்றும்.
ஒரே ஒரு முறை மற்றவர்கள் தமிழகத்தைப் எப்படி நினைப்பார்கள் என்று நினைக்கும் நேரத்தில் தொண்டர்கள் எப்படி உணர்வார்கள் என்று அவர்கள் மன நிலையில் இருந்து நினைத்துப் பாருங்கள், அவர்களின் உணர்ச்சிகளைப் உணர முடியும்.
அஞ்சலி
பல்வேறு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், ஜெ போல ஒரு தைரியமான, உறுதியான முடிவெடுக்கும், மத்திய அரசை எதிர்க்கும் ஆளுமை கொண்ட தலைவர் இல்லை.
ஜெ வின் இழப்பு தமிழகத்துக்கு மாபெரும் இழப்பு என்பதில் சந்தேகமில்லை.
இது போல ஒரு தைரியமான பெண் தலைவரைத் தமிழகம் காண காலங்கள் ஆகும்.
இவை இக்கட்டுரைக்கான அலங்கார வார்த்தைகள் அல்ல, உண்மையான என் மனதின் வார்த்தைகள்.
செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். உண்மையான தொண்டர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
வைரமுத்துவின் வரிகளில் எங்கேயோ படித்த ஒன்று. ஒரு மனிதன் எத்தனை நாடுகளை வென்றான், எத்தனை தூரம் கடந்தான்; எவ்வளவு பொருள்களை ஈட்டினான்; என்பனவைகள் “மனிதன்” என்பதற்கான அடையாளம் இல்லை.. இவையெல்லாம் “நான்” என்ற அகங்காரத்திற்கான அடையாளம்.
அதுவே அவன் மரணித்த போது அவனுக்காக அழுத “கண்கள்” தான் அவன் மனிதனாக வாழ்ந்ததற்கான அடையாளம். அந்த அடையாளத்தை “ஜெயலலிதா அம்மையார்” பெற்றுள்ளார் என நம்புகிறேன்.
தனிப்பட்ட முறையில் இவரை பிடிக்கும், பிடிக்காது அதுவேறு. ஆனால் இனி உலகத்தில் இல்லை என்பதை நினைக்கும் போது மட்டும் மனம் விம்புகிறது…இந்திய அரசியலில் அம்மையாரின் மறைவு மிக பெரிய வெற்றிடம்.
நீங்கள் குறிப்பிட்ட எந்த தலைவர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நெடும்காலமாக அனைவரின் செயல்பாடுகள் எல்லோரும் அறிந்ததே!!! நமக்கு ஒரு புதிய விதை, புதிய நம்பிக்கை, புதிய வழிகாட்டி வேண்டும் என நான் நம்புகிறேன்.
அது என்பார்வையில் சகாயம் அய்யா சரியான தீர்வாக அமையலாம் (ஆனால் அவருக்கு விருப்பம் இல்லை) விரும்பி கட்சி தொடங்கினால் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது சந்தேகமே.
கிரி. உங்கள் வார்த்தைகள் அனைத்தும் பொன் எழுத்துக்களால் எழுதப்ட வேண்டியது. என்னால் துக்கத்தை அடக்க முடியவில்லை. அழுது கொண்டே இருக்கிறேன். நான் ஜெயலலிதாவை நேரில் கூட பார்த்தது இல்லை. ஆனால் அவரின் பேச்சு, ஆளுமை, தைரியம், இதை எல்லாம் டிவியில் பார்த்து பல பேர் பேசியதை கேட்டு அவர் மேல் பெறும் பற்றும் மதிப்பும் கொண்டேன். அப்பப்பப்பா. அவரின் வாழ்க்கையில் தான் எவ்வளவு சோதனைகள். அனைத்தையும் தகர்த்து எறிந்து பெண் சிங்கமாக கம்பீரமாக வலம் வந்தவர் இப்போது சடலமாக பார்க்க மனது வலிக்கிறது. இனி ஜெயலலிதா போல ஒரு தலைவி வர வாய்ப்பு இல்லை. இறைவா என்னால் இந்த துக்கத்தை தாங்க முடியவில்லை.
டெஸ்ட்
//ஸ்டாலினுக்குப் பிரச்சனை அதிமுக அல்ல கலைஞர் தான்.//
ஹா ஹா ஹா ஹா
100% உன்மை.
ஓ.பன்னீர் செல்வம் கூட மூன்று முறை முதல்வராகி விட்டார். பாவம் ஸ்டாலின் 🙂
************
//இதைப் படிக்கும் நீங்கள் யார் அடுத்தத் தலைவர் என்பதைக் காரணங்களோடு விளக்கினால் எனக்கு ஒரு தெளிவு / ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய நிலையில் தான் பலர் இருக்கிறார்கள்//
உங்களுடைய நிலையில்தான் நானும் இருக்கிறேன்.
ஆயினும் என் யூகம்.
எஞ்சியிருக்கும் நாலரை ஆண்டு ஆட்சியை ஓட்டுவதே பெரிய சிரமம், நிர்வாகத்தை சமாளிக்க கூடிய ஆட்கள் என்று அதிமுகவில் யோசித்து பார்த்தால் என் நினைவுக்கு வருவது
1. பொன்னையன்
2. பாண்டியராஜன்
பொன்னையன்:
பொன்னையனுக்கு சென்ற தேர்தலில் தவறான சைதை தொகுதியை கொடுத்து; ஜெயலலிதாவே பாழாக்கிவிட்டார். திருச்செங்கோடு கொடுத்திருந்தால், அங்கு எளிதாக ஜெயித்து, இன்று ஆட்சியில் முக்கிய அமைச்சராக ஜெயலலிதாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்திருப்பார். இவர் ரொம்ப விவரமானவர் என்பதால்தான், 2001 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா பதவியிழந்த போது இவரை விடுத்து டம்மி பீஸூ ஓ.பன்னீர்செல்வத்திடம் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்தார்.
பொன்னையனை முதன்மையாக நான் கூறக்காரணம் எம்.ஜி.ஆரின் மூன்று அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்பில் இருந்தார்; பெரும்பாலும் சர்ச்சையில் சிக்காதவர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
பாண்டியராஜன்:
பாண்டியராஜனின் நிர்வாகத் திறமையை காண இப்போதுதான் வாய்ப்பு வந்துள்ளது; இவரைப்பற்றி கணிக்க இன்னும் சிலகாலம் ஆகும் என்றாலும், நிர்வாகத்தை சமாளிப்பார் என்றே என் உள்ளுணர்வு கூறுகிறது, காரணம், படித்தவர் மேலும் சமீபத்தில் நுழைவுத்தேர்வு பற்றி இவர் கூறியது வரவேற்கத்தக்கது; தேசிய அளவில் என்று இல்லாமல் மாநில அளவில் என்றாவது மாணவர்களை பழக்க படுத்த வேண்டும். கொஞ்சம் சுயமா தைரியமா பேசுகிறார். அதைவிட முக்கியமாக ஜெயலலிதா முன்பு கேள்விக்குறி போல வளைந்தோ டயரை தொட்டு வணங்கியோ நான் இவரை பார்த்ததில்லை.
நான் மேலே கூறியது தற்போதைய அ.தி.முக ஆட்சி நிர்வாகம் பற்றியே.
அ.தி.மு.க கட்சியை நிர்வகிக்க கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் தென்படவில்லை என்பதே உன்மை.
அ.தி.மு.க விற்கு மிக மோசமான காலகட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதிமுகவின் பிரதான வாக்கு வங்கியான தேவர், வன்னியர், கவுண்டர், பெல்ட்டில்;
ஓ.பி.எஸ், சசிகலா இருக்கும் வரை தேவர் வாக்கு வங்கி அ.தி.மு.கவை விட்டு இப்போதைக்கு மாற வாய்ப்பில்லை,
விஜயகாந்த்தின் வீழ்ச்சியும், ஜெயலலிதாவின் மறைவும் பா.ம.க இழந்த வன்னியர் வாக்கு வங்கியை அந்த கட்சிக்கு மீட்டுத்தரும், வன்னியர் பெல்ட்டில் அ.தி.மு.க வாக்கு வங்கி பா.ம.க மற்றும் தி.மு.கவிற்கு சிதற வாய்ப்புண்டு.
கொங்கு மண்டலத்தில் உள்ள அ.தி.மு.கதான் மிகப்பெரிய சவாலை எதிர் நோக்கியுள்ளது, கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் இதுநாள் வரை வாக்களித்தது ஜெயலலிதா என்ற முகத்துக்கே, ஜாதியை மீறி செல்வாக்குடன் இருந்தார் ஜெயலலிதா என்றால் மிகையில்லை. கொங்கு மண்டலத்தில் பிரபலமான செங்கோட்டையனும் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு உள்ளார், தி.மு.க கொங்கு மண்டலத்தில்தான் மிக மோசமான நிலையில் உள்ளது. சமீபத்தில் இந்த மண்டலத்தில் எழுச்சி பெரும் கவுண்டர் ஜாதி சங்கங்களின் போக்கு இனி வரும் காலங்களில் முக்கியமானது. இந்த ஏரியா வாக்கு இனி வரும் காலத்தில் மிக முக்கியமாக இருக்கும்.
கிழக்கு மண்டலத்தில் தி.மு.க மீண்டும் வலுப்பெரும்.
நாடார் பெல்ட்டில் [தென் மாவட்டம்] ஏற்கனவே அ.தி.மு.க பலவீனமாக உள்ளது, ஜெயலலிதாவின் மறைவு இந்த பகுதியில் தி.மு.க காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுச்சேர்க்கும்.
பார்க்கலாம் என்ன நடக்க போகுதுன்னு.
முழுமையாக கமெண்ட் செய்ய முடியவில்லை கிரி . பிரித்து பிரித்து போட்டாலும் இதற்கு மேல் கமெண்ட் பதிவு செய்ய முடியவில்லை. ஏன் எனக்கு மட்டும் அடிக்கடி இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை.
RIP ஐயன் லேடி JJ
ரொம்ப நேர்மையான பதிவு தல
“நீங்கள் யார் அடுத்தத் தலைவர்” – என்னுடைய தனிப்பட்ட கருத்து ADMK கு மாற்றா நாம் தமிழர் கட்சி வரும். தமிழ்நாட்டு அரசியல் ல தலைவர் நல்ல பேச்சு, தைரியம் உள்ளவரா இருக்கனும் னு மக்கள் ஆசை படுவாங்க . சினிமா இளைஞர்கள் நம்பி மாறியது போல அரசியலும் மாறும்
சீமான் கிட்ட மாற்று கருத்து எனக்கு சில விஷயங்கள் ல இருந்தாலும் அவர் தான் மாற்றாக வருவார் னு நான் நினைக்குறேன்
– அருண் கோவிந்தன்
நாம் தமிழர் தான் மாற்று
குன்ஹாவின் தீர்ப்பிக்கு பிறகு வெளியே தலைகாட்டாத தைரியசாலி ,ஒரு நூலகத்தை சிதைத்து ரசித்த மனநோயாளி ,தன் அமைச்சர்களை மனிதனாக கூட மதிக்காத சர்வாதிகாரி ,தமிழகத்தை பெரியக்கடனில் தள்ளியவர் உங்களுக்கு ஹீரோவா ?
ஜெயா எப்போதும் புலி கிடையாது பூனையே ? நக்கிப்பிழைக்கும் ஊடகங்கள் அவரை புலியாக கட்டமைத்தன ….
நாம் தமிழர் என்று ஒரு கட்சி இருப்பது உங்களுக்கு தெரியாதா? என்றாவது சீமான் அவர்களின் பேட்டியை கவனித்தீர்களா ? இல்லையென்றால் அவருடைய பேச்சுக்களை Youtube இல் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் அல்லது நாம் தமிழரின் வரைவு தேர்தல் கையேடு 2016 படிக்கவும் .
நாட்டை கெடுத்த கெடுத்துக்கொண்டிருக்கிற பல பேரை பற்றி கூறுகிறீர்கள் . நாட்டுக்கு நல்ல மாற்றாக இருக்கிற நாம் தமிழர் கட்சியை புறக்கணிக்கிறீர்கள்
கருணாநிதி தவறு செய்பவர்தான்…… ஆனால் , அவருடைய தமிழ் பிடிக்கும் ‘என்றும் , ஜெயலலிதா தவறு செய்தவர்தான் ……. ஆனால் அவருடைய துணிச்சல் பிடிக்கும்’ என்று சொல்பவர்களை அதிகமாக பார்க்கிறோம். அந்த தமிழும் அந்த துணிச்சலும் யாருக்கு பயன்பட்டது என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது . அது மாதிரிதான் உங்கள் கருத்தும் இருக்கிறது
நன்றி,
அழகர்