1980 களில் இசையில் கோலோச்சிக்கொண்டு இருந்த இளையராஜா அல்லாமல் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டு இருந்த சில இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் டி ராஜேந்தர். Image Credit
இசையமைப்பாளர் டி ராஜேந்தர்
இயக்குநராக ஏராளமான வெற்றிப்படங்களைக் கொடுத்து இருந்தாலும், இசையிலும் சாதித்தவர் ராஜேந்தர். இவரைப் போல இரண்டிலும் சாதித்தவர் திரையுலகில் எவரும் இருப்பதாகத் தோன்றவில்லை.
இவர் பல திறமைகளை ஒருங்கே கொண்ட அஷ்டாவதானி.
டி ராஜேந்தரை இசையமைப்பாளராகவே அதிகம் ரசித்தேன். குறிப்பாக, இவருடைய பல மெலடி பாடல்களின், பாடல் வரிகளின் மிகப்பெரிய ரசிகன்.
இன்னமும் ஒரு YouTube காணொளியில் இளையராஜா ஹிட்ஸில், இளையராஜா பாடல் என்று நினைத்து ராஜேந்தர் பாடலை முதல் பாடலாக வைத்துள்ளார்கள்.
அந்த அளவுக்கு அப்போது சில பாடல்கள் இளையராஜாவா ராஜேந்தரா என்று குழம்பும் அளவுக்குப் பல மெலோடி பாடல்களைக் கொடுத்து அசத்தியுள்ளார்.
ஒரு தலை ராகம்
இவரது பெரும்பாலான படங்களின் தலைப்பு 3 வார்த்தைகள், 9 எழுத்தில் இருக்கும்.
முதல்படமான ஒரு தலை ராகத்தில் கதாசிரியராகப் பணி புரிந்தார், இயக்குனராக அல்ல ஆனால், இசையில் பலரும் ரசித்த பாடல்களைக் கொடுத்தார்.
படத்தையும் இவர் தான் இயக்கினார் ஆனால், வேறு இயக்குநரின் (E. M. Ibrahim தயாரிப்பாளர்) பெயர் வைக்கப்பட்டது.
இயக்குநர் பெயரில் தன் பெயரைப் போட வேண்டும் என்ற தயாரிப்பாளரின் நிபந்தனையுடன் ராஜேந்தருக்கு இப்பட வாய்ப்புக்கொடுக்கப்பட்டது.
கிடைத்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதற்காக ராஜேந்தர் ஒப்புக்கொண்டு அதே போல இயக்குநரின் பெயரில் தயாரிப்பாளரின் பெயர் சேர்க்கப்பட்டது.
இயக்கம் மட்டுமல்லாமல் பின்னணி இசைக்கு A. A. Raj என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டது, இதனால் இத்திரைப்படத்தைத் திரும்பப் பார்க்க மாட்டேன் என்று ராஜேந்தர் கூறியதாகச் செய்தியுண்டு.
தயாரிப்பாளர் கேட்ட தொகைக்கு விநியோகஸ்தர்கள் ஒப்புக்கொள்ளாததால், தயாரிப்பாளரே நேரடியாகப் படத்தை வெளியிட்டார்.
ஆனால், துவக்கத்தில் சுமாராகச் சென்று பின்னர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 365 நாட்கள் படம் ஓடியது.
நம்பவே முடியாத இன்னோரு செய்தி, ஒரு தலை ராகம் 2 மாதங்களில் எடுத்து முடிக்கப்பட்டது 🙂 . இதன் பிறகு ராஜேந்தர் திரை வாழ்க்கை ஏறுமுகம் ஆகி விட்டது.
ஒரு தலை ராகம் படத்தில் வாசமில்லா மலரிது, இது குழந்தை பாடும் தாலாட்டு, என் கதை முடியும் நேரமிது, கடவுள் வாழும் கோவிலிலே, கூடையில கருவாடு, நான் ஒரு ராசி இல்லா ராஜா, மன்மதன் ரட்சிக்கனும் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்.
தமிழ்நாட்டையே கலக்கிய காலமாக இருந்தது.
TM சௌந்தரராஜன்
சூப்பர் ஹிட் பாடல்கள் என்றாலும் இதில் ஒரு பெரும் சோகமும் உள்ளது.
‘என் கதை முடியும் நேரமிது’ பாடலை TM சௌந்தராஜன் அவர்களைப் பாட வைத்த போது, ராகமும் வரிகளும் எதிர்மறையாக உள்ளதால், வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
ஆனால், ‘இது படம் தானே! பாடலில் என்ன உள்ளது! பாடுங்கள் ஒன்றும் பிரச்சனையில்லை‘ என்று ராஜேந்தர் கூறியுள்ளார்.
அதோடு ‘நானொரு ராசியில்லா ராஜா’ பாடலையும் பாட வைத்தார்.
TM சௌந்தரராஜன் அவர்கள் பயப்பட்டது போல அவரது இசை உச்சம் இப்படத்தோடு முடிந்து விட்டது. இதன் பிறகு வெகு சில பாடல்களே பாடினார், அதிலும் பல ராஜேந்தர் இயக்கிய படத்தின் இசையமைத்த பாடல்கள்.
இதைப் பற்றி TM சௌந்தராஜன் ஒரு பேட்டியில் கூறி வருத்தப்பட்டார். எனவே, எதிர்மறை எண்ணங்கள், பேச்சுகள் மிக ஆபத்தானது.
விளையாட்டுக்குக் கூட இதுபோலக் கூறக் கூடாது. நடிகர் தங்கவேலு அவர்களுக்குக் கூட இது போன்ற ஒரு பிரச்சனையானதை குறிப்பிட்டு இருந்தார்.
சூப்பர் ஹிட் பாடல்கள்
நூலுமில்லை வாலும் இல்லை, வைகைக்கரை காற்றே நில்லு உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்கள். இன்று கேட்டாலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.
இந்த மெலடி பாடல்களைக் கேட்கும் போது தற்போதைய டி ராஜேந்தரா இசையமைத்தது?! என்று தோன்றும். ஏனென்றால், தற்காலத் தலைமுறையினருக்கு இவரை ட்ரோல் நபராகத் தான் தெரியும் என்பது சோகம்.
இசை மட்டுமல்லாது பாடல் வரிகளும் அற்புதமாக இருக்கும். தற்காலத் தலைமுறை அறியாத இன்னொரு செய்தி, ராஜேந்தர் அற்புதமான கவிஞர் என்பது.
மெலடி பாடல்களைப் போலக் கல்லூரி பாடல்களுக்கு மிகப்பிரபலமானவர் ராஜேந்தர். கல்லூரி சம்பந்தப்பட்ட இவருடைய பாடல்கள் அக்காலத்தில் மிகப்பிரபலம்.
கட்டடிப்போம் காலேஜுக்கு, மன்மதன் ரட்சிக்கனும் உட்பட ஏராளமான பாடல்கள் அப்போது இளசுகளுக்குப் பிடித்தமானவை.
சென்டிமெண்ட் படங்களுக்கு ராஜேந்தர் பிரபலமானவர் போலக் கல்லூரி படங்களுக்கும் பிரபலமானவர். எனவே, இவ்வகைப் பாடல்களும் அதிகம்.
ட்ரம்ஸ்
ராஜேந்தர் இசையில் மெலடிக்கு பிறகு ட்ரம்ஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இவ்வகை இசையில்லாத படமே இருக்காது.
எதனால் ராஜேந்தருக்கு ட்ரம்ஸ் பிடிக்கும்?! என்று தெரியவில்லை ஆனால், பெரும்பாலான பாடல்களில் இவையே முதன்மையாக இருக்கும்.
உற்சாகமான பாடல்களில் ட்ரம்ஸ் இல்லாத பாடலே இருக்காது. சில நேரங்களில் எரிச்சலாகவும் இருக்கும் காரணம், இவையே பாடல் முழுக்க ஆக்கிரமித்து இருந்தது.
ட்ரம்ஸ் இசைக்குத் தகுந்த மாதிரி அரங்கம் அமைத்து இருப்பார். இவரைப் போல அரங்க வடிவமைப்பில் பிரம்மாண்டத்தை அப்போது காட்டியவர் எவருமில்லை.
எதற்கு இவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்று தோன்றும்.
உச்சம்
அனைவருக்குமே ஒவ்வொருவருடைய உச்சம் என்று இருக்கும். சிலருக்கு மட்டுமே பல ஆண்டுகளுக்குத் தொடரும்.
அது போல அவர் படத்துக்கு இசையமைத்த பாடல்களில் 70% சூப்பர் ஹிட் பாடல்களை அவருடைய இசை வாழ்க்கையில் கொடுத்துள்ளார்.
20 வருடங்கள் பலரும் ரசிக்கும் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
கடைசியாக ‘சொன்னால் தான் காதலா’ (2001) பாடல்கள் பிரபலமாக இருந்தது. அதன் பிறகு அவரது படங்களும் குறைந்து விட்டது, பாடல்களும் ஹிட் ஆகவில்லை.
இதுவரை (2023) இயக்கி இசையமைத்து வெளியான இறுதிப்படம் வீராசாமி (2007). இதன் பிறகு சில பாடல்களைப் பாடியுள்ளார், அவையும் சில சூப்பர் ஹிட் ஆனது.
என்றுமே மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்த டி ராஜேந்தர் எப்போதும் இசையுலகில் மறக்க முடியாத நபராக இருப்பார்.
கிரி.. சிலவற்றை மேலோடட்டமாக பார்க்கும் போது மிக சாதரணமாக தெரியும்.. சிலவற்றை உள்ளிறங்கி செய்யும் போது தான் அதன் வலி புரியும்.. என் பார்வையில் TR அவர்களை தற்போதைய தலைமுறை வேறும் நகைச்சுவையாக பார்க்கின்றார்.. உண்மையில் மிக சிறந்த திறமைசாலி..
நான் இவரையும் கங்கை அமரனையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பேன்.. இரண்டு பேருக்கும் கிட்டத்திட்ட 90% ஒற்றுமை உண்டு.. இசை, கதை , வசனம், பாடல் எழுதுவது, இயக்கம், தயாரிப்பு, என இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு .. இளையராஜாவின் கூடவே பல ஆண்டுகள் கங்கை அமரன் பயணித்து வந்ததால் அவர் இன்னும் உச்சம் தொட முடியவில்லை என நான் கருதுகிறேன்.
TR இன் பல பாடல்கள் எனக்கு விருப்பமானவைகள்.. குறிப்பாக இது குழந்தை பாடும் தாலாட்டு – இந்த பாடலின் வரிகளை பார்த்து கண்ணதாசனே வியந்ததாக கூறுவார்கள்.. காரணம் இந்த இதுவரை யாரும் எழுதாத மரபில் TR எழுதி இருப்பார்.
ஒரு பொன் மானை நான் காண – தற்போது கேட்டாலும் இன்னும் தித்தித்து கொண்டே இருக்கிறது.. எனக்கு TR ன் ஆல் டைம் விருப்ப பாடல் இது தான் – SPB செம்மையா பாடி இருப்பார்.. அமலாவின் நடனமும் அருமை.. பாடல் வரிகள் பெண்மையை அவ்வாறு வர்ணிக்கும்..
தற்போதைய தலைமுறையினருக்கு அந்த வரிகளின் பொருள் கூட தெரியாது.. எதுகை, மோனையில் விளையாடி இருப்பார்..
தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில்
தடுமாறி தாமாரை பூமீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும்
மோகத்தில் படைத்திட்ட பாகம்
தான் உன் கண்களோ!!!! –
(வார்த்தை ஜாலத்தில் TR விளையாடி இருக்கிறார்).
வைகை கரை காற்றே நில்லு பாடலை தற்போது கேட்டாலும் பிரெஷ்ஷா இருக்கும்.. பாடலின் ஆரம்ப இசை வேறு உலகிற்கு கொண்டு செல்லும்..
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை : இந்த பாடலை கேட்கும் போது என் தம்பி (பெரியப்பா பையன்) சின்ன வயதில் TR மாதிரியே ரொம்ப பீல் பண்ணி நடிப்பான்..
வீட்டில் பெரியவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் இவனை நடிக்க சொல்வார்கள்.. அவனும் ஆர்வத்துடன் நடித்து காட்டுவான்.. எனக்கு இந்த பாடலை எப்போது கேட்டாலும் அந்த பழைய நினைவுகள் வந்து வந்து போகும்..
கிளிஞ்சல்கள் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம்.. காரணம் படம் 80 களில் வந்து இருந்தாலும் நான் காதல் வயப்பட்ட அந்த தருணத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன்.. படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.. படத்தின் மேக்கிங், TR இசை என்னை எப்போதும் வியக்க வைக்கும்.. கடந்த 18 ஆண்டுகளில் மீண்டும் ஒரு முறை இந்த படத்தை பார்க்க மனதளவில் தைரியம் இல்லை..
MGR க்கு எதிராக அந்த காலக்கட்டங்களில் TR இருந்தார் என்று இவரது சில படங்களுக்கு தடைகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி தான் திறமையை கொண்டு இவர் வெற்றி பெற்று இருக்கிறார்.
சில படங்களுக்கு டிஸ்ட்ரிபியூட்டர்கள் கிடைக்காமல் தானே வெளியீட்டு மிக பெரிய வெற்றியையும் பெற்று இருக்கிறார்.. தமிழ் திரையுலகின் வரலாறு எழுதப்படும் போது TR க்கு நிச்சயம் சில பக்கங்கள் ஒதுக்கப்படாமல் எழுத முடியாது… பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“TR அவர்களை தற்போதைய தலைமுறை வேறும் நகைச்சுவையாக பார்க்கின்றார்.. உண்மையில் மிக சிறந்த திறமைசாலி”
சந்தேகமே இல்லை.
“இளையராஜாவின் கூடவே பல ஆண்டுகள் கங்கை அமரன் பயணித்து வந்ததால் அவர் இன்னும் உச்சம் தொட முடியவில்லை என நான் கருதுகிறேன்.”
சரியா சொன்னீங்க.. இவருடைய பாடல்கள், இசை ரொம்பவே நன்றாக இருக்கும்.
நீங்க சொன்னது போல, ராஜேந்தர் போல இவரும் பலதுறை வித்தகர்.
இதை நான் யோசிக்கவில்லை.. நீங்க கூறிய பிறகே அட! ஆமாம்ல என்று தோன்றியது. இவர் பற்றி எழுதும் போது நீங்க குறிப்பிட்டதை சேர்த்துக்கிறேன்.
“அமலாவின் நடனமும் அருமை.. பாடல் வரிகள் பெண்மையை அவ்வாறு வர்ணிக்கும்.”
உண்மை.. சரியாக கூறினீர்கள். இவருடைய வர்ணனை இப்பாடலில் அசத்தலாக இருக்கும்.
“வைகை கரை காற்றே நில்லு பாடலை தற்போது கேட்டாலும் பிரெஷ்ஷா இருக்கும்.. பாடலின் ஆரம்ப இசை வேறு உலகிற்கு கொண்டு செல்லும்..”
ஆமாம். ரிங் டோனுக்கு செமையா இருக்கும் 🙂 .. நான் கொஞ்ச நாள் வைத்து இருந்தேன்.