மகாநதி [1994] | ஒரு ரஜினி ரசிகனின் விமர்சனம்

27
மகாநதி

முன்னரே கூறியபடி, மகாநதி கமல் படங்களுக்கு நான் எழுதும் கடைசி திரைவிமர்சனம். எழுதக் கூறி சிலரைத் தவிர யாரும் கேட்கவில்லை என்றாலும், ஒரு சுய விளக்கமாக கூறிக் கொள்கிறேன். Image Credit 

Read: கமல் பட திரை விமர்சனத்திற்கு இனி “கதம் கதம்”

பதிவு மிகப் பெரியது எனவே உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பொறுமையாகப் படிக்கவும்.

கமல் திரைப்படங்கள்

கமல் படங்களில் எனக்குப் பிடித்த படங்கள் என்று கணக்கெடுத்தால் ஏகப்பட்டது வரும்.

அதில் முக்கியமாக விக்ரம், மகாநதி, காக்கிச்சட்டை, தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், சத்யா, இந்தியன்.

மைக்கேல் மதன காமராஜன், நாயகன், வேட்டையாடு விளையாடு (சில காட்சிகள் தவிர்த்து), சலங்கை ஒலி, வெற்றி விழா போன்ற படங்கள் எனக்கு ரொம்பப் பிடித்தவை.

இதில் சில படங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல உங்களுக்குத் தோன்றினால் அது உண்மை தான். எனக்கு இந்த வகைப் படம் தான் பிடிக்கும் என்று கிடையாது.

மேற்க்கூறிய கமல் படங்களில் நான் விக்ரம் மட்டுமே விமர்சனம் எழுதி இருக்கிறேன். மற்றவற்றிக்கு எழுத சந்தர்ப்பம் அமையவில்லை.

மகாநதி

ஆனால், ஏனோ “மகாநதி” மட்டும் பார்க்கும் போதெல்லாம் (எத்தனை முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று எனக்கே நினைவில்லை) இதற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று தோன்றும். அது ஏன் என்று சரியாகப் புரியவில்லை.

இதில் உள்ள இயல்புத்தன்மையும், ஒரு சராசரி மனிதனின் உணர்வுகளை இந்தப் படத்தில் கமல் பிரதிபலித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்தப் படம் வெளியாகிய 1994 ம் ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறேன்.

கோபி வெள்ளாளர் மாணவர் விடுதியில் சனிக்கிழமை மாலை “Free night” விடுவார்கள். மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை வெளியே செல்லலாம்.

“மகாநதி” வந்து இருந்த போது பலரும் இதை சோகமான படம் என்று கூறி வர மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.

அப்போது உடன் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற “அமைதிப்படை” க்கு தான் அனைவரும் ஆர்வம் காட்டினார்கள்.

குறிப்பு: இந்த சமயத்தில் நான் யாருடைய ரசிகனும் அல்ல.

மகாநதி “தை பொங்கல்”

இன்று வரை கமல் படங்களுக்கு இருக்கும் ஒரு சிறப்பு, புத்தாண்டிற்கு “சகலகலா வல்லவன்” பிரபல பாடலான “Happy New Year” மற்றும் பொங்கலுக்கு, மகாநதி “தை பொங்கல்”  பாடலும் எதாவது ஒரு தொலைக்காட்சியில் கண்டிப்பாக வந்து விடும்.

குறிப்பாக காலங்கள் கடந்தும்.”சகலகலா வல்லவன்” தவிர்க்க முடியாததாகி விட்டது.

“மகாநதி” போகலாம் என்று முடிவாகி நான் மட்டும் சென்றேன்.

படத்துவக்கத்திலிருந்து இறுதிவரை ரொம்ப ரசித்துப் பார்த்தேன். பள்ளி படிக்கும் போது இந்தப் படம் எப்படி எனக்குப் பிடித்தது என்று தெரியவில்லை.

படம் சரியில்லை என்று பள்ளி நண்பர்கள் கூறி இது போல இரு முறை [Free Night] பார்த்த படம் “பாட்ஷா” [1995]. இதன் பிறகு தான் ரஜினி ரசிகன் ஆகி விட்டேன்.

மகாநதி எனக்குப் பிடித்த படம் என்பதாலும், இனி நான் கமல் படத்திற்கு விமர்சனம் எழுதப்போவதில்லை என்பதாலும் திருப்தியாக எழுதிக் கொள்கிறேன் 🙂 .

இனி எப்போதும் கமல் படங்களுக்கு திரைவிமர்சனம் எழுதப் போவதில்லை என்று நினைக்கும் போது உள்ளூர வருத்தம் இருக்கவே செய்கிறது.

இல்லை என்று மறுக்கவில்லை ஆனால், விமர்சனம் எழுதும் போது இதை விட பல்வேறு மனச் சங்கடங்கள் வருவதால், இதைத் தவிர வேறு வழியில்லை.

ரசித்த காட்சிகள்

மகாநதி படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்தது தான் எனவே, அதில் நான் ரசித்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்க்கையில் ஒரு சிறு சம்பவம் எப்படி ஒரு குடும்பத்தின் நிலையை முற்றிலும் புரட்டிப் போட்டு விடுகிறது என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு.

இது மட்டும் நடக்கவில்லை என்றால், என் வாழ்க்கை எப்படியோ போய் இருக்கும் என்று நாம் கூறக் கேட்டு இருப்போம், அதே போலத் தான் இதுவும்.

இவர்களின் மொத்தப் பிரச்சனைக்கும் துவக்கப் புள்ளி கமலின் நண்பராக லண்டனில் இருந்து வரும் நபரின் வாடகைக் கார் தான்.

கமல் கார் போகும் போது, கமல் பெண் ஷோபனா அவருடைய நண்பர் கார் என்று நினைத்து அந்த வாடகைக் காரை முந்தக் கூறுவார்.

கமலும் தன் மாமியார் கூறுவதைக் கேட்காமல் விரட்ட, கடைசியில் அந்தக் கார் பள்ளத்தில் இறங்கி விடும்.

அதில் இருப்பவர் தான் தனுஷ்.

இது மட்டும் நடக்காமல் இருந்தால்..

இதில் ஆரம்பிக்கும் இவர்களின் குடும்பச் சனி, முழுவதையும் அழித்து விட்டுத் தான் ஓயும்.

இந்தக் காரை விரட்டக் கூறிய ஷோபனாவே இறுதியில் இதற்கு பலியாவது தான் இதில் உள்ள சோகமாக இருக்கும்.

இவர்கள் வீட்டுக்கு அந்த நண்பர் மட்டும் வராமல் இருந்து இருந்தால், அந்தக் காரை மட்டும் ஷோபனா பார்க்காமல் இருந்து இருந்தால், போட்டி போடாமல் இருந்து இருந்தால், தனுஷை பார்க்காமல் இருந்து இருந்தால், பேசாமல் இருந்து இருந்தால் என்று “இருந்தால்” போட்டால் இந்தப் படம் இருந்து இருக்காது 🙂 .

லண்டனில் இருந்து வந்த கமல் நண்பர் பையன் ஆங்கிலத்தில் பட்டையைக் கிளப்புவான்.

இதைப் பார்த்து குழந்தைகளுக்கே உண்டான போட்டியில் ஷோபனா கிராமத்து ஆங்கிலத்தில் ஒப்பிப்பதும்,  “இவ இங்லிஷ் மீடியத்துல படிக்கிறா, இங்லிஷ் பொளந்து கட்டுவா!” என்று ஒரு கிராமத்து அப்பாவின் பெருமையை வெகுளித்தனமாக கமல் வெளிப்படுத்துவதும் ரொம்ப அருமையாக இருக்கும்.

London Bridge is falling down

அந்த சின்னப் பையன் “Falling down falling down london bridge is falling down” என்று பாடுவான்.

படம் பார்த்த போது என்னமோ பாட்டு பாடுறானே இவன் என்று எனக்குப் புரியவில்லை. ரொம்ப வருடமாக இது என்ன பாட்டே என்று தெரியாமல் இருந்தேன்.

நான் படித்தது தமிழ் வழி. இந்தப் பாடல் எல்லாம் நான் கேட்டதே இல்லை.

என் மகன் Play School வந்த பிறகு அவன் இந்தப் பாட்டை பாடிய பிறகு தான் தெரியும், இது ஒரு பிரபலமான குழந்தைகள் பாடல் என்று 🙂 .

தினேஷ்

அந்தப் பொடியன் பேசும் ஆங்கிலத்தை பொறாமையுடன் ஷோபனா பார்ப்பது ரொம்ப நன்றாக காட்சிப் படுத்தப்பட்டு இருக்கும்.

கமல் மகனாக வரும் பையன் தினேஷ் மிகச்சிறப்பாக நடித்து இருப்பான். எப்படி இதெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள் என்று வியப்பாக இருக்கும்.

அந்த அளவிற்கு சினிமாத்தனம் இல்லாமல் ரொம்ப ரொம்ப இயல்பாக நடித்து இருப்பான்.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது, அங்கே கமல் நண்பர் பொருள் ஒன்றை எடுக்க தினேஷ் முயற்சிப்பான்.

இதை கமல் பார்த்து, கண்ணாலையே மிரட்டி அதை எடுக்க வேண்டாம் என்று கூறுவது, நம் வீட்டில் அடிக்கடி நடக்கும் சம்பவம்.

இது சின்ன விஷயம் தான் ஆனால், இதைக் கூட ஒரு காட்சியாக சேர்த்து இருப்பது தான் படத்தின் சிறப்பு.

இந்தக் காட்சியில்லை என்றால், எந்த பாதிப்புமில்லை ஆனால், இவை தான் படத்திற்கு இயல்புத் தன்மையைக் கொடுத்தன.

கோவிலுக்கு சென்று விட்டு வரும் போது அங்குள்ள நாய் குட்டியை தினேஷ் எடுத்துக் கொள்வான். கமல், “டேய்! இதெல்லாம் எடுக்கக் கூடாது அது அம்மாவை விட்டு பிரிஞ்சு இருக்கும். பாவம்!” என்று கூறியதும்.

காவேரியும் நானும் அம்மா இல்லாம இல்லையா… நீங்க எங்களை பார்த்துக்கலையா..அதே மாதிரி நானும் பார்த்துக்குறேன்” என்று கூறியவுடன், கமல் “Point” என்று கூறி எதுவும் பேசாமல் வருவது, ரொம்ப அழகான காட்சி.

அவன் கூறியது லாஜிக்காக இருந்ததால், “சரி” என்று போகும் அந்தக் காட்சி ரசிக்கும்படி இருக்கும்.

அதோட இவன் துறு துறுன்னு இருப்பான். அங்கே போவான் இங்கே போவான்.. கைய பிடிச்சு இழுப்பான். ஏதாவது பண்ணிட்டே இருப்பான்.

மிரட்டல் தனுஷ்

தனுஷாக வரும் ஹனிஃபாவின் நடிப்பு அசத்தலோ அசத்தல்.

ஒரு பிம்ப் எப்படியெல்லாம் இருப்பாரோ, ஏமாற்றுபவர்கள் எப்படி பசப்பு வார்த்தைகள் கூறுவார்களோ அத்தனையும் இம்மி பிசகாமல் அதே உடல் மொழியுடன் நடித்து இருப்பார்.

அவர் பேசும் உடல்மொழி, வார்த்தைகள் அப்படியே என் கண்முன்னால் இருக்கிறது.

காலிங் பெல் அடித்தால்.. “சார் சார் பாருங்க சார் மணி அடிக்குது. நல்ல சகுனம் சார்” என்று கூறி பிரச்னையை திசை திருப்பி எதிராளியை குழப்புவது என்று உடல்மொழியில் அசத்தி இருப்பார்.

ஒரே கையெழுத்து அவ்வளோ தான்.. அதற்கு பிறகு நீங்க எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை” என்று மஞ்சு என்ற அந்தப் பெண்ணை அருகே வைத்து கமலை வீழ்த்துவார்.

மஞ்சு

கமல் மனைவியை இழந்து இருப்பார். நல்ல மனிதர் என்றாலும் மனைவி இல்லாதது, இள வயது என்ற காரணங்களால் சராசரி நபருக்கே உரிய சபலத்துடன் இருப்பார்.

அதோடு கிராமத்தில் இருந்து வந்ததால், தினேஷ் பேசும் வார்த்தைகளில் மயங்கி கொஞ்சம் தன்னிலை மறந்து இருப்பார்.

மஞ்சுவை பார்க்கும் போது படம் பார்க்கும் ஆண்களுக்கே ஒரு மாதிரி தான் இருக்கும், அப்புறம் கமல் மட்டும் என்ன விதிவிலக்கா.

இவரின் இந்தத் தவறு தான் அவரை தீராத் துயரில் கொண்டு சென்று விடும். இவர் சுதாரிக்கும் முன் அனைத்தும் முடிந்து இருக்கும்.

சிட் ஃபன்ட் துவங்கி புது வீட்டுக்கு வந்தவுடன், “விசு” படத்துல கிஷ்மு சொல்வாறே.. “இங்க தான் விமான நிலையம் வருது, அங்கே ரயில் நிலையில் வருது” என்று அது மாதிரி தனுஷ் அளந்து விடுவார்.

கமல் “இந்த ஃப்ரிட்ஜ்….” என்று கேட்டதும்.. “எல்லாம் உங்களுக்குத் தான்.. எல்லாமே வரும்” என்று அவர் கூறுவதைக் கேட்கும் போது அட அட! என்ன நல்லவர்யா இவர் என்பது போலவே இருக்கும்.

பணம் போட்டா பணம் வரும்” என்று கூறியவுடன் அப்போது குக்கூ கடிகாரம் கத்தும்.. “சார்! சார்! பாருங்க நல்ல சகுனம்” என்று தனுஷ் கூறும் போது கமல் முகத்தை பார்க்கனுமே…! வாய் இருந்தால் எங்க இருந்தாலும் பிழைச்சுக்கலாம்.

அறிமுகம் இல்லா நபரை எப்படி நம்பினார்?

இதில் கமல், புதிதாக அறிமுகமான நபர் தனுஷ் கூறுவதை நம்பி தனது பரம்பரை சொத்துக்கள் அனைத்தையும் விற்று கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வருகிறார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

முதலீடு போடுவது சரி என்றாலும், மொத்த சொத்தையும் இதில் போடுவது என்பது நம்பும்படி இல்லை ஆனால், திரைக்கதை சுவாரசியத்தில் இதெல்லாம் நமக்கு யோசிக்கத் தோன்றாது.

சிட் ஃபன்ட் பார்ட்டியில் கமலை மதுபானம் அருந்த தனுஷ், “கொஞ்சமா சாப்பிடலாமா?” என்று கேட்டதும், கமல் பழைய கதையைக் கூறுவார்.

அதற்கு தனுஷ் “கரக்ட்! வாங்க அறைக்கு போவோம்” என்று மஞ்சுவை வைத்து கமலை மயக்கி அனைத்து பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கி விடுவார்.

நாம் அனைவருமே கவனிக்க வேண்டியது… இது மாதிரி நேரத்தில் நாம் இருந்தாலும் கையெழுத்து போட்டு விடுவோம்.. ஏனென்றால் தனுஷ் பேசுவது அப்படி இருக்கும்.

நாம் வேண்டாம் என்று கூறினால் அவர் தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று நினைப்போம், அதாவது நமக்கு யோசிக்க நேரமே இருக்காது.

இயல்பான காட்சி

பார்ட்டியில் கமல் சாப்பிட்டுவிட்டு வந்து விட, குழந்தைகள் காத்திருந்து தூங்கி விடுவார்கள்.

ஷோபனாக்கு தூக்கத்தில் உளரும் வழக்கம் என்பதால், “சாம்பார் ஊத்துங்க.. குழம்பு ஊத்துங்க” என்று பேசிட்டே கட்டிலிலிருந்து விழுந்து விடுவார்.

அந்த சமயத்தில் குற்ற உணர்வால் கமல் அழுவது ரொம்ப இயல்பான காட்சி.

இந்த இடத்தில் இளையராஜாவின் பின்னணி இசை படம் பார்ப்பவர்களை உருக்கும். இங்கு மட்டுமல்ல படம் நெடுக.

இந்தப் படத்துக்கு இளையராஜாவைத் தவிர வேறு எவரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கமல் மஞ்சுவை நினைத்து, “அவள் சரியில்லைங்கம்மா” என்று பேசியதும்.. அவரது மாமியார் “எம் பொண்ணு செத்து புல்லு முளைத்து விட்டது” என்று கூறுவார்.

தப்பு பண்ணிய சங்கடத்தில்..

இல்லம்மா அப்படியில்லம்மா.. அம்மா நீங்களே இப்படி சொன்னா எப்படி.. நீங்களும் இல்லைனா.. அம்மா இனிமேல் சத்தியமா இந்த மாதிரி…

என்று கமல் தடுமாறுவதைக் காணும் பொழுது, இந்த இயல்பான கமலை / நடிகனை இனி திரையில் காண்போமா என்று இருக்கிறது.

ஏனென்றால் தற்போதைய படங்களில், எல்லாம் தெரிந்த நபராக தன்னை முன்னிறுத்தும் புத்திசாலி கமலைத் தான் காண முடிகிறது, மகாநதி நடிகனை அல்ல.

“உலகநாயகன்” என்று எப்போது கமலை கூற ஆரம்பித்தார்களோ,  அப்போதே கமல் என்ற இயல்பான நடிகனையும் திரையில் இழந்து விட்டேன்.

சராசரி வீட்டுச் சூழல்

தனுஷ் ஏமாற்றி விட்டார் என தெரிந்து இது குறித்து வழக்கறிஞருடன் கமல் பேசிக்கொண்டு இருக்கும் போது, கமலுக்குப் பார்த்த சுகன்யா நிழற்படம் தபாலில் வரும்.

இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதால், கமல் மாமியார் இந்த இரண்டு பசங்களையும் போய் வாங்கக் கூறுவார்.

இருவரும், நான் நீ என்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடுவதை பார்க்கும் போது, நிச்சயம் அங்கே உண்மையான வீட்டைத் தான் பார்த்தேன், திரைப்படத்தை அல்ல.

எப்படிப்பா இந்த சின்ன விஷயமெல்லாம் யோசித்து யோசித்து செய்து இருப்பாங்களா! அல்லது இயல்பா அப்படியே வந்து இருக்குமா!! நிஜமாகவே நம் வீடுகளில் பொடிசுகள் இப்படித் தான் போட்டி போட்டு ஓடிட்டு இருப்பாங்க.

சுகன்யா ஏன்?

சுகன்யா விசயத்தில் மட்டும் எனக்கு சிறு குழப்பம். இவங்க ஏன் இரண்டாம் தாரமா, அதுவும் இரு குழந்தைகளுக்குத் தாயாக வரணும்? இவங்க அப்படி வருவதற்கான சரியான காரணம் எதுவும் நான் பார்க்கவில்லை.

சுகன்யாக்கு திருமணம் ஏற்பாடு செய்து இருப்பார்கள், பூர்ணம் விஸ்வநாதன் கைதானதால், நிச்சயிக்கப்பட்டவர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்.

சுகன்யா மருத்துவமனையில் வேலை பார்க்குறாங்க.. ரொம்ப ஏழ்மை என்றும் சொல்ல முடியாது. அப்படியிருக்க ஏன் இரண்டாம் தாரமாக வரணும்? இது மட்டும் எனக்கு சரியாக விளங்கவில்லை.

இதற்கு கணவரை இழந்தவராகவோ, விவாகரத்து ஆனவராகவோ சித்தரித்து இருக்கலாம் என்று தோன்றியது.

ஒரு வகையில் சுகன்யா வாழ்க்கையும் ரொம்பப் பாவம். திருமணம் முடிவாகி ஒரு உதட்டோட முத்தம் மட்டும் அனுபவித்து வேறு எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் இருப்பார்.

பெரும்பாலான காலம் கமல் சிறையில் இருப்பார்.

வெளி வரும் போது வயதாகி இருக்கும், ஒரு கையையும் இழந்து இருப்பார்.

சுகன்யா நிலை ரொம்பப் பாவம். எந்த ஒரு பெண்ணுக்கும் இது போல ஆகக் கூடாது. இதன் பிறகு அனைவரும் ஒன்றாக இணைகிறார்கள் என்றாலும், அவர் இழந்த இளமை திரும்ப வருமா!

விமர்சனம் பெருசாக்கிட்டே போகுதே….! 🙂 .

பூர்ணம் விஸ்வநாதன்

கமலுடன் சிறையில் இருக்கும் “பூர்ணம் விஸ்வநாதன்” ஒரு சுவாரசியமான கதாப்பாத்திரம்.

எந்த வம்புக்கும் போகாமல் (போகிற நிலையிலும் அவர் இல்லை என்பது வேறு விஷயம்) சீக்கிரம் விடுதலை ஆகி விட வேண்டும் என்று இருப்பவர்.

ஒரு காட்சியில் கமலிடம் வாதம் புரியும் போது “சிரத்தையா சாமி கும்பிட்டுட்டு இருந்து இருந்தேனா இங்க வந்து இருக்க மாட்டே நீ!” என்று கூறுவார்.

இதற்கு கமல் எதுவும் பேசாமல் அமைதியாக அவரைப் பார்ப்பார் 🙂 .

இதற்கு அர்த்தம் “அப்ப நீங்க எப்படி இங்க வந்தீங்க?” என்பது ஆகும்.

இதை அவர் உணர்ந்து ‘நான் ஏன் இங்க வந்தேன்னா…‘ என்று ஆரம்பித்து என்ன சொல்வதென்று தெரியாமல் “போடா! நாஸ்திகம் பேசுறான் நாஸ்திகம்” என்று கூறி எஸ்கேப் ஆகுவது ரசிக்கும் படி இருக்கும் 🙂 .

சிறைச்சாலை செட்

இந்தப் படத்தில் இசையோடு குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், இந்தப் படத்திற்காக போடப்பட்ட சிறைச்சாலை செட்.

இது உண்மையான சிறைச்சாலை என்றே நினைத்து இருந்தேன். இதை யாரோ முக்கியமானவர் பாராட்டியதாக நினைவு. யார் என்று நினைவில்லை.

மகாநதி சங்கர்

அறிமுகமாகிய துலுக்கானம் “மகாநதி சங்கர்” என்றே தன்னை இன்று வரை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சிறைச்சாலையில், வார்டனாக நடிப்பு அருமை.

“கேப்டன் பிரபாகரன்” படத்தில் முதல் படத்திலேயே “மன்சூர்” தூள் கிளப்பியது போல, சங்கர் இதில் பட்டாசாக நடித்து இருப்பார். கமலை அடித்து முகத்தில் துப்பும் காட்சிக்கு தான் பயந்ததாக கூறி இருந்தார்.

இந்தப் படம் பார்த்த பிறகு தான் வார்டன், சிறையில் நடக்கும் கஞ்சா விற்பனை, அதில் உள்ள பிரச்சனைகள், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் போன்ற தகவல்கள் தெரிய வந்தது.

அட! இவ்வளோ விஷயம் இதுல இருக்கா என்று இருந்தது.

சிகை அலங்காரம்

கமல் துவக்கத்தில் 1980 கால பட கமல் போல முடி வைத்து இருப்பார். சிறைக்கு வந்ததும் முடி வெட்டி சுருக்கி விடுவார்கள்.

1992 ல் கமல் “தேவர் மகன்” படத்தில் ஃபன்க் முடி வைத்து நடித்து இருந்தார். இதைப் பார்த்து அனைவரும் இதே போல வைத்துக் கொண்டார்கள். நானும் வைத்து இருந்தேன் 🙂 .

பலர் வீடுகளில் “என்னடா முடி இது! ஜடை மாதிரி வைத்துட்டு!” என்று திட்டு விழுந்து கொண்டு இருந்த காலம்.

பின்னர் கமலே மகாநதியில் இப்படி குறைவாக வெட்டியதும் பலர் ஃபன்க் ல் இருந்து இதுக்கு மாறி விட்டார்கள்.

கமல் சிறையில் இருக்கும் போது, அவரது மாமியார் சாப்பிட எதுவும் கொண்டு வரக்கூடாது என்று நினைத்து எதுவும் எடுத்து வராமல் இருப்பார் பின்னர் தெரிந்து ரொம்ப வருத்தப்படுவார்.

இந்த கேப்புல தினேஷ்,

அப்பா! டைகர் நல்லா இருக்கு, வெஜிடெரியன் சாப்பிடுது, இப்ப மோர் சோர்(று) திங்குது. அப்பா! நான் 4th [place] பா. என்னை விட கெட்டிக்கார பசங்க மூன்று பேர் இருக்காங்க. 

அவங்களை எப்படியாவது துரத்தி அனுப்பிட்டா நான் தான் பர்ஸ்ட். அப்பா ஆனா ஸ்போர்ட்ஸ் ல் நான் தான் பர்ஸ்ட்.”

என்று மழலையாகக் கூறும் போது இதையெல்லாம் உடன் இருந்து பார்க்க தான் இல்லையே என்ற ஆதங்கத்தில் சிறைக் கம்பியை பிடித்துக்கொண்டு கமல் அழுவார்.

கமல் மாமியார்

கமல் மாமியார், “பசங்களுக்கு ஏதாவது சொல்றீங்களா?” என்று கேட்டதும்.

நல்லா படிங்க, பாட்டி சொல்றதை கேட்டு நடங்க… அம்மா நீங்க சொல்றது தான் சரி. இந்தப் பட்டணத்துல மரியாதையே கிடையாதுமா!

என்று கூறி விரக்தியில் அழும் போது… அங்கே கமலைக் காணவில்லை, ஒரு பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே தெரிந்தார்.

ஷோபனா பூப்பெய்திய பிறகு சிறைக்கு வரும் சமயத்தில் அவரது முகத்தில், பேச்சில் நடவடிக்கையில் நன்கு வித்யாசம் தெரியும். இதையெல்லாம் கூட உன்னிப்பாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

சிறையில் எதிர்பாராத விதமாக சுகன்யாவைக் காண, அதற்கு பூர்ணம் விஸ்வநாதன்.. “கிருஷ்ணனோட லீலைய பார்த்தியா எப்படியெல்லாம் கனெக்சன் கொடுக்குறான்” என்று கூறுவது ரசிக்கும் படி இருக்கும் 🙂 .

கமல் சுகன்யா இருவரும் பார்த்துக் கொள்ளும் போது, ஒரு பின்னணி இசை வரும். அருமை அருமை. இந்த இளையராஜவையும் தற்போது காணவில்லை.

தனுஷ் கிட்ட கமல் மாமியார் நியாயம் கேட்கும் போது, தனுஷ் அறைந்து விடுவார் இதனால், அதிர்ச்சியில் மயக்கமாகி விடுவார்.

இவர்கள் இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் சுகன்யாவிடம் உதவி கேட்க ஆட்டோவில் செல்வார்கள்.

அந்த ஒரு நிமிடம்

இவர்கள் வரும் ஒரு நிமிடம் முன்பு தான் சுகன்யாவும் பூர்ணம் விஸ்வநாதனும் கிளம்பிச் செல்வார்கள்.

மேற்கூறிய “இருந்தால்” இங்கேயும் தொடர்கிறது.

ஒருவேளை ஒரு நிமிடம் முன்பு இவர்கள் வந்து “இருந்தால்” அல்லது அவர்கள் தாமதமாக கிளம்பி ‘இருந்தால்” ஷோபனாவின் வாழ்க்கை & அனைவரின் வாழ்க்கையும் சீரழிக்கப்பட்டு இருக்காது.

ஒரு நிமிட தாமதம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது. காலம் செய்யும் கோலம்.

இவர்கள் இருவரும் சென்ட்ரல் ஜெயில் போவார்கள்.

அங்கே ஷோபனா காவலரிடம் விசாரித்துக்கொண்டு இருக்கும் போது, தினேஷ் காவலரின் துப்பாக்கியைத் தொட்டு தொட்டுப் பார்த்துட்டு இருப்பான். 

ரொம்ப ரொம்ப ரசித்த காட்சிகளில் ஒன்று.

இது வெறும் காட்சி என்று நினைத்து கடக்க முடியவில்லை, ஒரு சிறுவனின் இயல்பான நடவடிக்கையை அழகாக காட்சிப் படுத்தி இருந்தது மட்டுமே அங்கே தெரிந்தது.

இதைக் கூட செய்ய வேண்டும் என்று நினைத்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்த நேரத்தில் பின்னணி இசை திரும்ப ராஜாவின் ராஜாங்கம்.

இளையராஜா மகாநதி படத்தின் மிகப்பெரிய பலம்.

நாய்

இவர்களுடன் நாயும் பயணிக்கும். நான் கூறுவது உங்களுக்கு மிகைப்படுத்தப்பட்டது போல தெரியும் ஆனால், உண்மை.

இந்தப் படத்தில் வரும் நாய் டைகரும் ரொம்ப அருமையாக நடித்து இருக்கும். கலக்கலாக பழக்கி இருக்கிறார்கள்.

ஒரு மனிதருக்கு ஈடான நடிப்பை இந்த டைகர் வழங்கி இருக்கும். ஏகப்பட்ட நாயை வளர்த்து இருக்கிறேன் என்ற முறையில் இதை உறுதியாகக் கூற முடியும்.

ஷோபனா

திரும்ப ஒரு “இருந்தால்”. தனுஷ் விசிட்டிங் கார்டை தினேஷ் வைத்து இருப்பான்.

இவன் மட்டும் ஷோபனாவிடம் அதை கொடுக்கவில்லை என்றால் இவர்கள் தனுஷிடம் போய் இருக்க மாட்டார்கள்.

தனுஷ் தொலைபேசியில் “சார் உங்களுக்குனே ஒரு தனி அதிர்ஷ்டம் சார். ஒரு ப்ரெஷ் கேண்டிடேட் வந்து இருக்கு.. ச்சீ ச்சீ.. போன வாட்டி மாதிரி இல்ல சார்.. அவ ஏமாத்திட்டா..” என்று கூறி உனக்கு வேலை கிடைத்து விட்டது என்று கூறுவார்.

ஷோபனா “நான் டைப்பிங்ல லோயர் பாஸ் பண்ணி இருக்கேன்” என்று கூறியதும் அதற்கு தனுஷ் விசமமாக கூறி சிரித்ததும் படம் பார்ப்பவர்கள் வயிற்றில் பயப்பந்தை உருள வைக்கும்.

தனுஷ், வெங்கடாச்சலம் கிட்ட ஷோபனாவை அறிமுகப்படுத்தி “சார் ஹாப்பினா நான் ஹாப்பி” என்று சிரித்து ஷோபனாவை மாட்ட வைத்து விட்டுச் செல்வார்.

போகும் போது தினேஷ் “சார்! அடுத்த முறை டைகரையும் உள்ளே விடச் சொல்லுங்க சார்” என்று கூறுவது ரொம்ப எதார்த்தமாக இருக்கும்.

தலைவாசல் விஜய்

கமல் சிறையில் இருந்து வெளி வந்து இருவரையும் இழந்து விட்டோம் என்று வெறுப்பின் உச்சியில் இருக்கும் போது தான், கூத்தாடிகளிடம் இருந்து அவரது மகனை கண்டு பிடிப்பார்.

இவனை கூட்டிட்டுப் போகும் போது தலைவாசல் விஜய் சாப்பிடக் கூறுவார்.. பூர்ணம் விஸ்வநாதனுக்கு பிடிக்காது என்பதால்.. எப்படி வேண்டாம் என்று சொல்வதென்று தெரியாமல் திணறுவதை கமல் ரசித்துப் பார்த்துக்கொண்டு இருப்பார்.

இதை நமக்கு பார்க்க ரொம்ப நன்றாக இருக்கும். பெயர் என்ன என்று கேட்டதும், விஜய் “மண்ணாங்கட்டி” என்று கூற.. “என்னது இது.. நான் பெயரைத் தானே கேட்டேன்.. எதுக்கு திட்டறீங்க!” என்று கூறுவது செம காமெடி.

அவர் பெயரே மண்ணாங்கட்டி 🙂 . இந்தத் தேடல் காட்சிகளில் எல்லாம் பின்னணி இசை ரொம்ப அருமையாக இருக்கும்.

காவலாளி

தனுஷ் வீட்டில் வாட்ச் மேனாக வரும் நபர், கமல் சிட் ஃபன்ட் ல் காவலாளியாக பணி புரிந்து இருப்பார். கமலை பொதுமக்கள் அனைவரும் அடிக்கும் போது கூட்டத்தில் கமல் கை கடிகாரத்தை இவர் கழட்டி இருப்பார்.

இதை தற்போது கமலிடம் பேசும் போது இந்த கை கடிகாரத்தை பார்க்கும் போது அது அவருக்கு நினைவிற்கு வரும், உடன் கமலுக்கும். அந்த இடத்தில், இது பற்றி எந்த கேள்விகளும் விவாதங்களும் அவர்களிடையே இருக்காது.

படம் பார்க்கும் நம்முடைய ஊகத்திற்கே அவர்களின் மனநிலையை விட்டு இருப்பார்கள். பேசாமல் பேசும் காட்சி.

சோனாகாஞ்ச்

கமல் தன் பெண்ணைப் பற்றி தனுஷிடம் கேட்கும் போது, எட்டி உதைத்து “எவனா இருந்தாலும் எனக்கு பயமில்ல.. என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று போக, கமல் தனுஷின் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்.

சோனாகாஞ்ச் தெரியுமா சோனாகாஞ்ச்” என்று கூறி வெடிச்சிரிப்பு சிரிக்கும் காட்சிகளில் எல்லாம் தனுஷ் நடிப்பு மிரட்டலாக இருக்கும்.

அருமையான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருப்பார். ஹனிஃபா இதன் பின் பல படங்களில் நடித்து இருந்தாலும், இது தான் அவருடைய ஆகச் சிறந்த நடிப்பு. தற்போது காலமாகி விட்டார்.

சோனாகாஞ்ச் காட்சிகளில் நடிக்க ஷோபனாக்குப் பதிலாக சங்கீதாவை நடிக்க வைத்தார்கள். இந்தக் காட்சியில் அங்குள்ள பெண்களை கேவலமாக சித்தரிக்காமல் அவர்களின் கஷ்டத்தை காட்டி இருப்பார்கள்.

அங்குள்ளவர்களும் மனிதர்கள் தான், அனைவருமே விரும்பி இந்தத் தொழிலில் ஈடுபடுவதில்லை என்று விளக்கப்பட்டு இருக்கும்.

அங்கு “பாஸ்” போல இருக்கும் ஒரு பெண் “இங்கே எங்களை கொண்டு வந்து விடுறதே அப்பா மார்களும், அண்ணன் மார்களும் புருஷன் மார்களும் தான்” என்று கூறி..

ஒரு ஷிப்ட் ஓவர் டைம் செய்தால் இந்த மாமா பசங்க காசை தூக்கி எறிஞ்சுடலாம்” என்று கூறி பணத்தை தூக்கி எறிவார்கள்.

கமல் கை கூப்பி கண்ணீர் மல்க நன்றி கூறும் காட்சி எவரையும் கலங்கடிக்கும்.

காவேரி

ஊருக்கு வந்து சங்கீதா தூங்கிய பிறகு வழக்கம் போல தூக்கத்தில் உளருவார். அங்கு நடந்த சம்பவங்களைக் கூறி உளருவதை கேட்டு கமல் கதறுவது கொடுமையாக இருக்கும்.

காவேரியோட இந்தக் கனவை கலைக்க முடியாதே யமுனா (சுகன்யா)! மறுபடியும் மறுபடியும் வருமே யமுனா! நல்லவேளை இதையெல்லாம் பார்க்க என் மாமியார் உயிரோட இல்லை..

நான் மட்டும் என்ன பாவம் பண்ணுனேன்.. எனக்கு மட்டும் ஏன் இப்படி..ஒரு நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைச்சுடுதே! அது எப்படி?

என்று கமல் புலம்பும் காட்சி ஒரு சராசரி நபரின் இயலாமையாகத் தான் இருக்கும்.

கிட்டத்தட்ட 2.30 நிமிடம் வரும் இந்தக் காட்சி, ஒரே ஷாட்டில் படம் பிடிக்கப்பட்டு இருக்கும்.

ஷோபனா தூக்கத்தில் உளரும் பழக்கத்தை சரியாக இந்த முக்கியமான தருணத்தில் அதோடு தொடர்புபடுத்தி இருப்பார்கள்.

துவக்கத்தில் இது நகைச்சுவையான ஒரு விஷயம் போன்று பார்ப்பவர்களுக்குத் தோன்றி இருந்தாலும், இறுதியில் இந்தக் காட்சி பலரை உலுக்கி இருக்கும்.

பிறர் வாட பல செயல்கள் செய்து

கமல், வெங்கடாச்சலத்தை கொல்ல முடிவு செய்து தனுஷை அங்கே அழைத்துச் செல்வார். கமல் காரை விட்டு தள்ளி நிற்கும் போது, தனுஷ் ஒரு இரும்புத் தடியை எடுத்து கமலை அடிக்க வருவார்.

இதைக் கமல் கவனித்தவுடன் தனது உடல் மொழியை மாற்றி..

இதை வச்சுக்க.. ஒரு பாதுகாப்புக்கு..நீங்க கொலை பண்ணினா கூட நான் உங்க கூடவே இருப்பேன்… ஆமா! அவர் உங்களை எதிர் பார்க்க மாட்டாரு.. 12 வயசு பெண்ணைத் தான் எதிர்பார்ப்பாரு‘ என்று சிநேகமாய் சிரித்துக்கொண்டே அப்போதும் தன் பேச்சுத் திறமையைக் காட்டுவார்.

இதன் பிறகு கமல், வெங்கடாலாச்சலத்திடம் “இனி இழக்க என்னிடம் ஒன்றுமில்லை” என்று அவரைக் கொன்று எழும் போது தான் “பிறர் வாட பல செயல்கள் செய்து…” என்ற பாரதியார் கவிதை வரும்.

இதன் பின் கமல் சிறை தண்டனை முடிந்து அமைதியான வாழ்விற்கு திரும்புவதாக முடியும்.

கான்ஸ்டபிளாக வரும் ராஜேஷ், தன் மகனை சங்கீதாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக காட்சிப் படுத்தப்பட்டு இருக்கும்.

அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கும் டைகர், அவர்களின் சந்தோசத்திலும் உடன் இறுதியில் இருக்கும்.

மகாநதி கவிதையான காட்சிகளின் தொகுப்பு

படத்தின் பெயர் உட்பட மகாநதி கதாப்பாத்திரங்களின் பெயர்களும் நதிகள் பெயரில் இருக்கும். “மகாநதி” அருமையான திரைப்படம் மட்டுமல்ல, கவிதையான சிறு காட்சிகளின் தொகுப்பு.

Directed by Santhana Bharathi
Produced by S. A. Rajkannu
Written by Kamal Haasan
Ra. Ki. Rangarajan (dialogues)
Screenplay by Kamal Haasan
Story by Kamal Haasan
Starring Kamal Haasan, Sukanya, Cochin Haneefa, Poornam Viswanathan
Music by Ilaiyaraaja
Cinematography M. S. Prabhu
Editing by N. P. Satish
Studio Sree Amman Creations
Distributed by Sree Amman Creations
Release dates 14 January 1994
Country India
Language Tamil
Budget INR 3.7 crore

நான் இந்தப் படத்தின் விமர்சனம் [விலக்கு கேட்டு] எழுதுவதாகக் கூறிய போது பலர், ஸ்டண்ட் அடிக்கக் கூறியதாக நினைத்து இருக்கலாம்.

அது உண்மையாகக் கூறியது என்று இந்த விமர்சனம் முழுமையும் படித்து இருந்தால், உணர்ந்து இருப்பீர்கள்.

 எத்தனை பேர் இந்த விமர்சனம் முழுமையாகப் படித்தீர்கள் என்று தெரியவில்லை ஆனால், நான் ஒவ்வொன்றையும் ரசித்தே எழுதினேன்.

ஏனென்றால் நம் மனதிற்கு பிடித்த ஒன்றை எழுதுவது என்பது அலுக்காத விசயம் தானே! அதோட எழுதுவது என்பது என்னுடைய Passion.

வழக்கமாக எழுதும் திரைவிமர்சனம்  போல இது போன்ற விமர்சனங்களை எழுதி விட முடியாது. இதற்குண்டான எழுதும் மனநிலை வேண்டும், அப்போது தான் நமக்கு திருப்தி தரும் வகையில் கட்டுரை அமையும்.

இதை எழுதி முடிக்க முழுமையான ஒரு நாள் ஆனது, அதன் பிறகு எடிட்டிங்கிற்கு அரை நாள் ஆனது.

தாமதமாக எழுதினாலும் நான் நினைத்த மாதிரி வந்தது எனக்கு மகிழ்ச்சியே.

இனி என் தளத்தில் கமல் பட திரை விமர்சனங்கள் வராது என்று உறுதி கூறுகிறேன். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அனைவரின் அன்பிற்கும் நன்றி DOT

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

27 COMMENTS

 1. நான் இன்னும் இதை படிக்கவே இல்லை.

  இவள்ளவு பெரிய பதிவு எழுத தேவை பட்ட உங்கள் நேரத்துக்காக ஒரு சலாம்

 2. ஒரு திரைப்படத்திற்கு 20 வருடங்கள் கழித்து இவ்வளவு அணுஅணுவாக ரசித்து விமர்சனம் எழுதியதற்காக உங்களுக்கு ஒரு hatsoff …ஒவ்வொரு காட்சியையும் உங்க எழுத்துகள் மறுபடியும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது.

  சிறந்த திரைப்படங்களை யாரா இருந்தாலும் எந்த பாகுபாடும்
  காட்டாமல் ரசிக்க முடியும் என்பதற்கு உங்களின் இந்த பதிவு ஒரு உதாரணம்..
  ஒரு சிறந்த கலைஞனுக்கு தேவை ஒரு சிறந்த ரசிகன் மட்டுமே..
  இந்த பதிவை கமல் படித்தால் நிச்சயம் ரசித்திருப்பார் அவரும் ஒரு ரசிகனாக.. 🙂

  இனிமேல் கமல் பட விமர்சனத்திற்கு கதம்ன்னு ஏன் சொன்னீங்க என்று தெரியாது.
  ஒரு விமர்சகர் நடுநிலையா இருந்து படத்தின் நிறை,குறைகளை சொல்லணும்.
  இதில் கமல்,ரஜினி பாகுபாடு தேவை இல்லை என்பது என்னுடைய கருத்து.

 3. கமல் பட திரை விமர்சனத்திற்கு இனி “கதம் கதம்” இப்ப தான் படிச்சேன். ஏன் விமர்சனம் எழுத மாட்டேன்னு சொன்னீங்கன்னு இப்போ புரியுது.

  இருந்தாலும் உங்கள் முடிவை கொஞ்சம் மாத்திக்கலாமே..அப்புறம் ஒரு சிறந்த கமல் படம் எதிர்காலத்தில் வரும் போது அதற்கு விமர்சனம் எழுத முடியலயேன்னு நினைப்பீங்க..

 4. நல்ல விமர்சனம் கிரி. எக்காலத்திற்கும் பொருந்த கூடிய கதை. வாலி அவர்களின் பாடல்களும் அருமையாக இருக்கும்.

 5. நல்ல விமர்சனம் தான்….

  ரஜினி ரசிகன் என்பதால் கமல் படத்திற்கு விமர்சனம் எழுதக் கூடாது என்பது ஏன்?

  அதை பார்த்தால் எழுத வேண்டியது தானே?

  என்ன என்னைப போன்ற கமல் ரசிகர்களுக்கு இழப்புதானே பாஸ்..

  நான் கமலுக்கு இளமை உஞ்சலாடுகிறது படத்தில் இருந்து ரசிகன்தான்…

  அதற்காக ரஜினி பிடிக்காது என்பது இல்லை…

  இருவருமே இரு தண்டவாளங்களை போலத்தானே தமிழ் சினிமாவில்….

  மறு பரிசிலனை செய்யுங்கள்

 6. மகாநதி நான் சின்ன வயசுல பாத்தபடம்.ஆனால் இத்தனை வருசத்துக்கு அப்புறம், இந்த விமர்சனம் என் நினைவிடுக்குகளிலிருந்து அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மீண்டும் நியாகபடுத்திருப்பது ஆச்சர்யம் தான்.ஒன்றரை நாள் உழைப்பு இந்த பதிவுக்கு நிச்சயம் தகும்!

  Thankyou giri anna for such a great post 🙂

 7. nalla eluthi irukinga. enakum romba pidicha padam Ithu. padam paarkum bothu aluthu aluthu kaduppana padam 🙂

 8. மிக மிக அருமையான எழுத்து நடை கிரி…உங்க உழைப்புக்கு தலை வணங்குகிறேன். நான் மிகவும் ரசித்து படித்த பதிவு.

  முழு படத்தையும் பார்த்த திருப்தி கிட்டியது.

  உங்க “ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) பதிவுகள் அட்டகாசமான கொண்டாட்டம் என்றால் மகாநதி பதிவு கிளாஸ். தயவு செய்து நீங்கள் அணு அணுவாய் ரசித்த திரைப்படங்களை பற்றி அடிக்கடி இது போன்று எழுதுங்கள்.. கமல் படமாய் இருந்தாலும் பரவாயில்லை, எழுதுங்கள்…
  கமலின் திரைப்படங்களை பற்றி எழுத கூடாது என்கிற உங்கள் முடிவை மறு பரிசிலனை பண்ணலாமே…சினிமா ரசிகனாய் உங்களை கேட்கிறேன். 🙂

 9. கை கொடுக்கும் கை னு வந்த ரஜினி படம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. கண் தெரியாத ஒரு பெண்ணை கெடுப்பதெல்லாம், ரஜினி படமாயிருந்தாலும் ரசிக்க முடியாது. சினிமாதான்.. அதனாலென்ன? சினிமாவையும் “உண்மைபோலதான்” பார்க்கிறோம் அந்த 3 மணி நேரம். அதேபோல் மகா நதி ஒரு உபத்திரவம் பிடிச்ச கதை..

  கமல் ரசிகாமணிகள், உங்களைப் போல ரசிச்சு ரசிச்சுப் பேசுவதைப் பார்த்து இருக்கிறேன். நீங்களும் அந்த வகையில் சேர்ந்துட்டீங்க. எல்லாவற்ரையும் எல்லாரும் ரசிக்க முடியாது. இது என் இயலாமைனே இருக்கட்டும்! 🙂

 10. மிகவும் அருமையான பதிவு, கிரி. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நானும் இந்த படத்தை ரொம்ப வருஷம் கழித்து கொஞ்ச நாள் முன்பு பார்த்திருந்தேன். அதனால் நீங்க எழுதியதையெல்லாம் ரசிக்க முடிந்தது.

  “கமல் சுகன்யா இருவரும் பார்த்துக் கொள்ளும் போது, ஒரு பின்னணி இசை வரும். அருமை அருமை.”

  இந்த மெட்டு தான் தற்போது என் மொபைல் ரிங்க்டோன். நானும் இந்த மெட்டைக்
  கேட்டுவிட்டு “எப்படி ராஜா இதை இசை அமைத்திருப்பார்?” என்று வியந்ததுண்டு!!!

  இனிமேல் கமல் நடிக்கும் படங்களுக்கு விமர்சனம் எழுதபோவதில்லை என்று நீங்கள் எடுத்த முடிவு கொஞ்சம் என்னை வருத்தப்பட வைக்கிறது. இருந்தாலும் இது உங்கள் முடிவு, உங்களை வற்புறுத்த இஷ்டமில்லை. என்னைக் கேட்டால், இது உங்கள் தளம்…நீங்கள் என்ன எழுத நினைகிறீர்களோ அதை முழு சுதந்திரத்தோடு எழுத வேண்டும். இது என் அன்பான வேண்டுகோள்.

 11. மகாநதியை ஒருமுறை பார்த்தேன். மறுமுறை பார்க்கும் அளவிற்கு என் மன தைரியம் இல்லை. . அந்த படத்தை பார்த்ததில் இருந்து கனமான படங்களை பார்பதில்லை என்ற முடிவு எடுத்து விட்டேன். அதற்க்கு பின் நான் செய்த தவறு 7 G ரெயின்போ காலனி . என்னை பொறுத்த வரை சந்தோஷமான படங்கள், தான் சினிமா. நீங்கள் நிச்சயம் மன வலிமை உள்ளவர்.

 12. சோனாகாஞ்ச் காட்சிகளில் [கவர்ச்சியாக] நடிக்க ஷோபனா மறுத்து விட்டதால், அவருக்குப் பதிலாக சங்கீதாவை நடிக்க வைத்தார்கள்.
  ——

  சோனாகாஞ்ச் காட்சிகளில் நடித்தவர் சங்கீதாவுமில்லை, ஷோபனாமில்லை…. சிறுமி காவேரிக்கு ஷோபனா எனவும், பெரியவள் காவேரிக்கு சங்கீதா எனவும் முடிவு செய்துதான் படமாக்கினர், சிறுமி காவேரிக்கான காட்சிகள் ஷோபனாவை வைத்து படமாக்கியவுடன், பெரியவள் காவேரிக்கான காட்சிகள் சங்கீதாவை வைத்து படமாக்கினர், .

  முதல் கட்ட படப்பிடிப்பில் தமிழ்நாட்டில் இந்த காட்சிகள் படமாக்கிய பிறகுதான் (climax-ல் வரும் வயதான மகிழ்ச்சியான காட்சிகள் உட்பட), சோனாகாஞ்ச் காட்சிகளுக்காக கல்கத்தா சென்றார்கள். காட்சி அமைப்பின்படி சங்கீதாதான் சோனாகாஞ்ச் காட்சிகளில் நடித்திருக்க வேண்டும். ஆனால், அங்கு கொடுக்கப்பட்ட உடைகள் குறைவாக இருந்த காரணத்தினால் சங்கீதாவின் தாயரின் மறுப்பால், சங்கீதா அந்த காட்சிகளில் மறுத்து விட்டார். வேறுவழியின்றி, அங்கு கிடைத்த வேறொரு பெண்ணை வைத்து இந்த சோனாகாஞ்ச் காட்சிகள் படமாக்கப்பட்டன.

  சிறுமி காவேரி – ஷோபனா
  பெரியவள் காவேரி – சங்கீதா
  சோனாகாஞ்ச் காவேரி – கல்கத்தா பெண்..

  எத்தனை முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று எனக்கே நினைவில்லை —-

  ஒருமுறைகூட நீங்கள் இந்த வேறுபாட்டை கவனிக்கலையா சார்….?

  முதல் தடவை பார்க்கும் போதே எனக்கு இது தோனிச்சே சார்…

  • கதிர் நீங்கள் கூறுவது சரி தான். முதல் முறை பார்க்கும் போது நீங்கள் மட்டுமல்ல படம் பார்க்கும் எவரும் கவனித்து இருப்பார்கள். நான் தான் எழுதும் போது தவறாக குறிப்பிட்டு விட்டேன். சுட்டியமைக்கு நன்றி திருத்தி விடுகிறேன்.

 13. உங்கள் எழுத்துக்கு உருவம் கொடுக்க வைத்த விமர்சனம் !!! மெய் சிலிர்த்து விட்டேன்.

  ஹட்ட்ஸ் ஆப்!!!

  இப்படிக்கு
  சுரேஷ்.

 14. அருமையான விமர்சனம் கிரி. மிக மிக நுட்பமாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள். God is in the details…

 15. கஷ்டப்பட்டு எழுதும் கட்டுரைக்கு கிடைக்கும் கருத்துக்கள் தான் என்னைப் போன்றவர்களுக்கு கிடைக்கும் பூஸ்ட். கருத்துக் கூறிய / கூறப்போகும் அனைவருக்கும் என் நன்றி.

  @திரும்ப கமல் பட விமர்சனம் எழுதக் கேட்ட நண்பர்களுக்கு.

  முதலில் நன்றி. நான் நிஜமாகவே ஸ்டண்ட் அடிக்க, எழுதமாட்டேன் என்று கூறவில்லை. பழைய கமல் படங்களின் விமர்சனங்கள் எழுதுவது என்பது வேறு தற்போது வெளிவரும் கமல் பட விமர்சனம் எழுதுவது என்பது வேறு. நான் என்ன தான் முயற்சி செய்தாலும் நிச்சயம் விமர்சனம் நடு நிலையாக இருக்காது, காரணம் உள்ளுக்குள் இருக்கும் ரஜினி ரசிகன்.

  அதோடு எழுத முயற்சித்தால் அதில் உள்ள குறைகளையும் கூறித் தான் ஆகணும் ஆனால், குறைகளை கூறினால் திரும்ப நான் ரஜினி ரசிகன் என்பதால் தான் அப்படி கூறுகிறேன் என்று கூறுகிறார்கள். இதற்கு முடிவே இல்லை.

  அதோடு ஆபாசமான கருத்துகள் அதிகம் வருகின்றன. என்னுடைய தளத்தில் கமெண்ட் மாடரேசன் கிடையாது. இதனால் எந்தக் கமெண்ட் என்றாலும் அது உடனே வெளியாகிவிடும். ஆபாச கருத்துகள் பற்றி நான் கண்டு கொள்வதில்லை என்றாலும், அடுத்து படிக்க வருகிறவர்களுக்கு சங்கடம் ஆவதை நான் விரும்பவில்லை. இதைப் பார்த்து ஒவ்வொன்றாக நீக்கிக் கொண்டு இருக்க எனக்கு பொறுமையும் இல்லை. என்னதான் கண்டு கொள்வதில்லை என்று கூறினாலும் சில நேரங்களில் மன உளைச்சல் ஆகிறது என்பது உண்மை தான்.

  பின்னாளில் ஒரு நல்ல கமல் படம் வரும் போது அதற்கு விமர்சனம் எழுத முடியவில்லை என்று மன வருத்தம் இருக்கவே செய்யும். மறுக்கவில்லை ஆனால், சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாது.

  உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

  • “ஆபாச கருத்துகள் பற்றி நான் கண்டு கொள்வதில்லை என்றாலும், அடுத்து படிக்க வருகிறவர்களுக்கு சங்கடம் ஆவதை நான் விரும்பவில்லை.”

   – இந்த பாயிண்ட் ரொம்ப கரெக்ட். அதனால உங்க முடிவ வரவேற்கிறேன். இதேபோல பிற்காலத்தில விஜய் படத்துக்கும் இந்த முடிவ எடுப்பிங்கன்னு நான் கணிக்கிறேன்.

 16. “தற்போதைய படங்களில், எல்லாம் தெரிந்த நபராக தன்னை முன்னிறுத்தும் புத்திசாலி கமலைத் தான் காண முடிகிறது, மகாநதி நடிகனை அல்ல. “உலகநாயகன்” என்று எப்போது கமலை கூற ஆரம்பித்தார்களோ, அப்போதே கமல் என்ற இயல்பான நடிகனையும் நான் திரையில் இழந்து விட்டேன்.”

  – மிக சரி. “உலகநாயகன்” என்று ஆரம்பித்தவுடன் இல்லை என்று நினைக்கிறேன், அந்த மாற்றம் அதற்கு முன்பே வந்துவிட்டது.

  எப்படி பாஸ் இந்த அழுவாச்சி படத்த இத்தனவாட்டி பாத்தீங்க? நமக்கு அழுவாச்சி படமே ஒத்துவராது. அதுவும் இந்த படம், கேக்கவே வேண்டாம். ஒரு தடவ பாத்ததோட சரி.

 17. முதல் ல இந்த சோக படத்துக்கா கிரி விமர்சனம் நு நினச்சேன் (ரியல் லைப் ல சோகம் அதிகம் எனக்கு அதனால சோக படங்கள் பெருசா உக்கார மாட்டேன் தப்ப நினைக்க வேண்டாம் )
  அதனால பொறுமையா தான் படிச்சேன்

  ரொம்பவும் ரசிச்சு ரசிச்சு எழுதி இருக்கீங்க தல
  உங்களுக்காக சொல்ல மாட்டேன் உங்க எழுது நடை ல இன்னும் ஒரு டைம் அந்த சோக படத்த (முழு படமும் பாக்கள நீங்க ரசிச்ச scenes மட்டும் பார்த்தேன் ) நேத்து நைட் தான் பாத்து முடிச்சேன். செமைய ரசிச்சு இருக்கீங்க தல வித்தயாசமான ஒரு view இந்த படத்துக்கு எனக்கு கிடைச்சு இருக்கு இப்ப

  எனக்கு நீங்க கமல் படத்துக்கு விமர்சனம் எழுதணும் நு எல்லாம் சொல்ல மாட்டேன் நீங்க எழுதினா போதும்

  – அருண்

 18. திரைமனத்தில் இருந்து இந்தப் பதிவிற்கு வந்தேன். கிட்டத்தட்ட 2 மணி நேரமாக உங்கள் பதிவிலேயே மாற்றி மாற்றி படித்துக் கொண்டு இருக்கின்றேன். கமல், ரஜினி பற்றி சொல்ல விரும்பவில்லை. ஆனாலும், உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது ‘அவரு சொல்றதும் நியாயம்தானே’ என்று தோன்றுகிறது. அது உங்கள் எழுத்தின் வெற்றி.

  நேரம் இருக்கும்போது என்னுடைய பதிவுகளையும் படிக்கவும். ஏனென்றால், என்னுடைய பதிவுகள் உங்களுக்கு மாற்றாக (எதிராக என்பது சரியான வார்த்தை இல்லை) இருக்கலாம். ஆனால், சத்தியமாக உங்கள் அளவுக்கு இல்லை.

 19. அருமை.. நான் மகாநதி படம் பற்றி பல விமர்சனங்களை படித்துள்ளேன்,… எல்லோரும் நல்லா திரைக்கதை, நல்ல நடிப்பு என்று மட்டுமே எழுதியுள்ளனர்… நீர் ஒவ்வொரு காட்சியையும் அழகாக, நன்றாக ரசித்து எழுதியுள்ளீர்… Naan innum padam paarkka villai…

 20. கிரி.. 15 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தான் உங்களின் தளத்தை பார்வையிட்டேன்.. நன்றாக எழுதிஉள்ளீர்கள். மகாநதி என்னால் என்றுமே மறக்க முடியாத படம். பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

 21. இந்த திரைவிமர்சனம் மீண்டும் மகாநதியை பார்த்த ஒரு உணர்வு கிடைத்தது. மிக அருமை தோழரே…

 22. Watched this movie three consecutive nights and after that watched number of times and still watching. Also Informed my friends & family to watch this movie. One of favourite kamal fan. You are very true that once he becomes universal hero, his real acting skill diminishes.

 23. நான் உங்களோட பல பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். சில நல்ல உபயோகமான பதிவுகளும் போடுறீங்க . இந்த பதிவு மிக சிறப்பு . ரொம்ப கூர்மையா கவனித்து எழுதிருக்கீங்க . நன்றி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here