தற்போது நாம் பார்க்கப்போவது, 1990 மற்றும் 2000 துவக்கங்களில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள்.
தேனிசை தென்றல் தேவா
தேவா இசையமைத்த பாடல்களைக் கேட்டாலே, அறை நண்பர்களுடன் நான் பார்த்த படங்கள், அவர்களோடு கொண்டாடிய நினைவுகளே முன்னிற்கும்.
கண்ணெதிரே தோன்றினாள், குஷி, வாலி, நினைத்தேன் வந்தாய், பொற்காலம், ஆசை, காதல் கோட்டை, தேவா, ஏழையின் சிரிப்பில், முகவரி, ப்ரியமுடன், சூரியன், நினைவிருக்கும் வரை படங்களின் பாடல்கள் எல்லாம் என்றைக்குமே அலுக்காது.
இவையல்லாமல் தலைவர் படங்களான அண்ணாமலை, பாட்ஷா படங்களின் பாடல்கள். கமலுடைய அவ்வை சண்முகி போன்றவை.
தேவாவின் வெற்றியில் மிக மிக முக்கியப் பங்காற்றியவர்கள், அவருடைய சகோதரர்கள் சபேஷ் & முரளி. இவர்கள் இருவரும் தேவாவின் இரு கரங்கள்.
தேவா என்றாலே கூறப்படும் குற்றச்சாட்டு “COPY” தான். இதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க முடியாது. எனவே, அதை ஒதுக்கி விட்டு அவர் பாடல்களை மட்டுமே பார்ப்போம்.
தனித்தன்மை
எந்த ஒரு மனிதனுக்கும் மற்றவர்களிடம் இல்லாத ஒரு தனித்தன்மை இருக்கும்.
தேவாவின் தனித்தன்மை “கானா பாடல்கள்” தான்.
தேவாவை விடத் திறமையானவர்கள் இளையராஜா, ரகுமான் என்பது அனைவரும் அறிந்தது ஆனால், இவர்களாலே தேவா போல ஒரு ராவான கானா பாடலைக் கொடுக்க முடியவில்லை.
தொட்டு வந்தார்களே தவிர கானாக்கு என்று இருக்கும் தனித்தன்மையை அடைய முடியவில்லை. இது தேவாக்கு மட்டுமே இருக்கும் சிறப்பு.
தேவாவின் நவீன கானா வடிவம் தற்போது சந்தோஷ் நாராயணன்.
இயக்குநர் ரவிச்சந்திரன் படங்களில் எல்லாம் ஒரு கானா பாடல் அவசியம் இடம்பெறும். அந்த ஒரு பாடலும் மாபெரும் வெற்றி பெறும்.
விஜயின் வளர்ச்சியில் தேவா
விஜயின் திரை வாழ்க்கையில் அவருடைய முன்னேற்றத்துக்குத் துவக்கத்தில் அவரது அப்பா சந்திரசேகர் மிக முக்கியமானவர்.
அவருக்கு அடுத்தது விஜய் எப்போதுமே மறக்க முடியாத நபர் என்றால் இசையமைப்பாளர் தேவா தான் இருக்க முடியும்.
விஜய் 8 படங்கள் அப்போது தொடர்ச்சியாக 100 நாட்கள் ஓடின, அதில் பெரும்பாலான படங்களுக்கு இசை தேவா. அனைத்தும் Blockbuster பாடல்கள்.
விஜயின் நடனத்துக்குத் தீனி போடும் வகையில் அவரது இசை இருந்தது. இப்பவும் விஜயின் பழைய பாடல்களே மிகப் பிடிக்கும்.
நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், தேவா, விஷ்ணு, குஷி போன்ற படங்களின் பாடல்கள் எல்லாம் தாறுமாறு வெற்றி. இப்பவும் நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
அஜித்
அஜித்துக்கு வான்மதி, வாலி, ஆசை, காதல் கோட்டை படங்கள் பெரிய வெற்றி.
அதில் வரும் பாடல்கள் அனைத்தும் எங்களுடைய விருப்பப் பாடல்கள். “பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்ப்பா” பாடல் எல்லாம் சக்கைப் போடு போட்டது.
சொன்னா நம்ப மாட்டீங்க.. இதை எழுதும் போதே “வான்மதி” பாடல்கள் கேட்க வேண்டும் என்று தோன்றி, பாடல்களைக் கேட்டுட்டே தான் எழுதுகிறேன்.
“பாட்ஷா” பற்றியெல்லாம் எழுதினால் தனிப்பதிவே வேண்டும் 🙂 .
நினைவிருக்கும் வரை
“நினைவிருக்கும் வரை” திரைப்படத்தின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் ஒரு நினைவு வருவதை தவிர்க்கவே முடியாது.
இப்படம் வெளியான சமயத்தில் நண்பனின் திருமணம் கடலூரில் நடைபெற்றது. நாங்கள் நண்பர்கள் ஒரு பெரிய படையே சென்று இருந்தோம்.
நெருங்கிய நண்பன் சதீஷுக்கு ஆடுவதில் அதிக ஆர்வம்.
எனவே, நான் அமைதியாக இருந்தாலும் என்னையும் ஆட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவான், வேறு வழியில்லை, ஆட்டம் போட்டே ஆக வேண்டும்.
நண்பன் திருமணத்தில் ஒரு அட்டகாசமான “ஆர்கஸ்ட்ரா” குழு பாடினார்கள். படத்தில் வருவது போலவே மாற்றமில்லாத இசை.
நாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பில் அவர்கள் இன்னும் உற்சாகமாகி சரவெடியாகப் பாடலைப் போட்டுத் தாக்குகிறார்கள்.
என் வாழ்க்கையிலேயே நான் விருப்பமாகக் கேட்டு முழுமையாக ரசித்த ஒரே “ஆர்கஸ்ட்ரா” இது தான்.
பாடுபவர், இசை கருவி வாசிக்கிறார், இசைக்கருவி, வாசிக்கிறவர் வந்து பாடுகிறார். எல்லோருமே பட்டையைக் கிளப்புறாங்க.
“நினைவிருக்கும் வரை” படத்தில் வரும் “காற்றடிக்குது காற்றடிக்குது” பாடலுக்கு நாங்க போட்ட ஆட்டத்தைப் பார்த்து, திருமணத்துக்கு வந்தவர்கள், நாங்கள் சரக்கு அடித்துட்டு ஆடுவதாக நினைத்துக் கடுப்பாகி விட்டார்கள் 🙂 .
தற்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. ஆடுவதுக்கு என்றே இருக்கும் செம இசை.
நண்பன் வீட்டுக்குச் சென்றால், அவரது மனைவி திருமண CD யைக் கூறி , “பாருங்க! எல்லோரும் எப்படி ஆடி இருக்கீங்க?!” என்று மானத்தை வாங்குகிறார் 🙂 .
தேவாவின் இன்னொரு முகம்
தேவாவிடம் இசையை வாங்கத் தெரிந்தால் “இது தேவா இசையா?!” என்று குழம்பும் அளவுக்கு இசையமைத்துக் கலக்குவார்.
அப்படி போட்டது என்றால், ஆசை, குஷி, நேருக்கு நேர் போன்றவை, வேற லெவல்ல இருக்கும். முதலில் கேட்டவர்கள் “ஆசை” இசை தேவா என்றால் நம்ப மாட்டார்கள்.
கிராமத்து இசையிலும் அளவில்லா அசத்தல் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
எனக்கு “நட்புக்காக” படத்தின் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும், குறிப்பாக “மீசைக்கார நண்பா”. பாடல் எடுக்கப்பட்ட விதமும் கலங்க வைக்கும்.
என் நினைவுகளை மீட்டெடுக்கும் தேவா இசை
சுருக்கமாக, பழைய நினைவுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், தேவா பாடல்களைக் கேட்டாலே போதும், அறை நண்பர்களின் நினைவுகளில் கலந்து விடுவேன் 🙂 .
எங்கள் அறையில் இருந்த தொலைக்காட்சிக்கு வாய் இருந்தால், “அடப்பாவிகளா! மனசாட்சியே இல்லாமல் பாட்டுக்கேட்குறீங்களே ஓய்வு கொடுங்கடா!” என்று கதறி இருக்கும்.
அப்போது SCV சேனலில் பாடல்கள் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
எனக்கும் நண்பன் சதீஷ்க்கும் பாடல்களைக் கேட்பது, படம் பார்ப்பது இவை தான் பொழுதுபோக்கே.
ஒரே நாளில் நான்கு படங்கள் திரையரங்கில் பார்த்து அதிர்ச்சி கொடுத்து இருக்கிறோம். தொலைக்காட்சியில் நள்ளிரவு 1.30 வரை பாடல்கள் கேட்போம்.
தேவாவின் இசையை முழுமையாக ரசிக்க வாய்ப்புக் கிடைத்தவர்கள், தோராயமாக 1975 க்கு மேல் – 1985 க்குள் பிறந்தவர்கள் தான்.
இவர்கள் தான் தேவா இசையை ரசிக்கும் வயதுக்கு சரியானவர்கள், அதாவது படங்கள் வெளியான போதே பார்த்துக் கொண்டாடியவர்கள்.
தேனிசைத் தென்றல் தேவா அவர்களே! உங்களை நாங்கள் மிகவும் தவற விடுகிறோம்.
தொடர்புடைய கட்டுரைகள்
கொசுறு
Tamil Radio HD செயலியில் எப்போதும் பாடல் கேட்டுக்கொண்டே இருப்பேன். இச்செயலியில் அனைத்து பண்பலை வானொலிகளும் உள்ளன. காலையில் எழுந்ததுமே இதைத்தான் போடுவேன் 🙂 .
நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து பிரபலமான வானொலிகளும் உள்ளன.
விளம்பரமே இல்லாத வானொலிகள் ஏராளம் உள்ளன. உங்களுக்கு இச்செயலியை பரிந்துரைக்கிறேன். Apple Store & Google Play Store இரண்டுக்குமே உள்ளது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி நீங்க ஒரு விஷயம் மறந்துடீங்க, அவருக்கு பட்ட பெயர் “தேனிசை தென்றல்” தேவா. கானா பாடல்கள்க்கு சமமா அவரு மெலோடிஸ்க்கு famous அதுக்கு தான் அவருக்கு இந்த பட்ட பெயர். ஆசை “புல்வெளி” பாட்டும் காதல் கோட்டை பாட்டு எல்லாம் கேக்கும்போது எனக்கும் மலரும் நினைவுகள் வந்து போகும்.
கிரி, திரைதுறையே தற்போது மறந்து போயி இருக்கும் ஒரு மாபெரும் கலைஞனை (மனிதனை) குறித்து பதிவிட்டமைக்கு முதலில் நன்றி!!! நான் 2000 முன்பு வந்த பாடல்களை தான் அதிகம் கேட்பேன்.. 2000 க்கு பின் வெளியான படங்களில் வெகு அரிதான பாடல்களை மட்டும் கேட்பேன்..
எந்த இசைக்கலைஞராக இருந்தாலும் எனக்கு விருப்பமான பாடலாக இருந்தால் தொடர்ந்து கேட்டு கொண்டே இருப்பேன்.. பழைய பாடலாக இருந்தாலும் சரி!!! தேவாவின் இசையில் எனக்கு நிறைய படங்கள் பிடித்தாலும், எப்போதும் நான் அதிகம் விரும்பி கேட்கும் படம் “முகவரி” (அந்த சமயத்தில் நான் காதலில் விழுந்த நேரம்).. SCV அந்த நேரங்களில் நான் வீட்டில் இருந்தால் ஓடி கொண்டே இருக்கும்..
உங்கள் அளவுக்கு இசையை கேட்பேனா என்று தெரியவில்லை.. ஆனால் நானும் ஒரு இசை பைத்தியம் தான்… எனக்கு பிடித்த பல பாடல்கள் என் மனைவிக்கு பிடிக்காது… அவரது ரசனை எனக்கு ஒத்து வராது.. வீட்டில் பாடல்கள் கேட்பது கிடையாது.. ஓய்வு நேரத்தில் அலுவலகத்தில் பாடல்கள் கேட்பதுண்டு. ஒரு மாபெரும் கலைஞனை குறித்து பகிர்ந்தமைக்கு நன்றி கிரி..
பின் வரும் காணொளியை கேட்கவும்…
@லீலா பிரசாத்
“கிரி நீங்க ஒரு விஷயம் மறந்துடீங்க, அவருக்கு பட்ட பெயர்”
தலைப்பிலேயே அதைத்தாங்க குறிப்பிட்டு இருக்கிறேன்.
“கானா பாடல்கள்க்கு சமமா அவரு மெலோடிஸ்க்கு famous அதுக்கு தான் அவருக்கு இந்த பட்ட பெயர்.”
நான் மெலடி என்று குறிப்பிடவில்லையே தவிர, நீங்கள் குறிப்பிட்ட அனைத்து படங்களையும் குறிப்பிட்டு இருக்கிறேன்.
நினைத்தேன் வந்தாய் படமெல்லாம் மெலடி ஹிட்ஸ் தான்.
@யாசின் 2000 வரை வந்த பாடல்கள் உண்மையிலேயே செம்ம.. ஏகப்பட்ட நல்ல பாடல்கள்.
நீங்க குறிப்பிட்ட காணொளி இன்னும் பார்க்கலை.. பார்க்கிறேன்.