தண்ணீர் தேசம் | வைரமுத்து

3
தண்ணீர் தேசம்

ருவாச்சி காவியம்’ கவிதை என்று நினைத்தேன் ஆனால், நாவல். தண்ணீர் தேசம், நாவல் என்று நினைத்தேன் ஆனால், கவிதை நடை. இரண்டுமே ஏமாற்றவில்லை.

1996ல் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாகத் தண்ணீர் தேசம் வெளி வந்தது, பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கவிதை படிப்பதில் சுத்தமாக ஆர்வமில்லை. எனவே, தெரியாமல் வாங்கி விட்டோமே என்று ஏமாற்றமாக இருந்தது. ஏமாற்றத்திலேயே கொஞ்சம் படித்ததாலும், கவிதையாக இருந்ததாலும் சுவாரசியமளிக்கவில்லை.

ஒரேடியாகக் கவிதையாக இல்லாமல், இயல்பான வர்ணனை, பேச்சு என்று வந்ததால், சிரமப்பட்டுத் தொடர, போகப்போகச் சுவாரசியம் கூடி ஒரு வழக்கமான நாவலைப் படிப்பதைப்போல உணர்வை அடைந்தேன்.

நாவல் முழுக்கக் கடல் பயணம் என்பதால், சுவாரசியமாக இருந்தது.

தண்ணீர் தேசம்

கலைவண்ணன் பத்திரிகையாளன், அவனது காதலி தமிழ் ரோஜா. தண்ணீர் என்றால் கலைவண்ணனுக்கு விருப்பம். தமிழ் ரோஜா பள்ளியில் படிக்கும் போது படகில் இருந்து தண்ணீரில் விழுந்து உயிர் பிழைத்ததால், தண்ணீர் என்றாலே பயம்.

தண்ணீர் பயத்தைப் போக்க திட்டமிடாமல் தனது மீனவ நண்பர்களுடன் தமிழ் ரோஜாவைப் படகில் கடலுக்கு அழைத்துச் செல்கிறான் கலைவண்ணன்.

நடுக்கடலில் படகு பழுதாகி விட, சுற்றிலும் தண்ணீர், பிடிக்காத சூழல் என்று தமிழ் ரோஜாவுக்குச் சூழ்நிலை மோசமாக அமைந்து விட என்ன ஆகிறது என்பதே கதை.

கவிதையைப் பற்றிக் கிண்டலாகக் கூறும் போது, நீளமாக எழுதினால், கதை. மடக்கி மடக்கி எழுதினால் கவிதை என்பார்கள் 🙂 . இந்நாவல் கிட்டத்தட்ட அப்படித்தான் உள்ளது. 80% வழக்கமான எழுத்து, 20% கவிதை போல எழுத்து.

வைரமுத்து வர்ணனைகள்

வைரமுத்துவின் கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல்களைப் படித்தவர்களுக்கு வைரமுத்து வர்ணனையில் எவ்வளவு சிறந்தவர் என்பது தெரிந்து இருக்கும். இதிலும் அதே போல வர்ணனைகள், விவரங்களில் அசத்துகிறார்.

தமிழ் ரோஜாக்கு கடல் சூழல் ஒத்துவராமல் வாந்தி எடுக்க, அதற்குக் கலைவண்ணன் கூறும் வார்த்தைகள்..

உள்ளே எதையும் ஒளிக்காதே
துணிந்து விடு துப்பி விடு

ஆசையைத் துப்பு
ஞானம் வரும்
அச்சம் துப்பு
வீரம் வரும்
ரகசியம் துப்புத் தூக்கம்
வரும்

மீனவர்களின் கடினமான வாழ்க்கையைக் கூறும் போது

கரை மீண்டால் இவர்கள்
மீன் தின்னலாம் கரை
மீளாவிட்டால் இவர்களை
மீன் தின்னும்

வேட்டையாடு அல்லது
ஆடப்படு – இது தான்
இந்தத்தண்ணீரில் எழுதப்பட்ட
அழியாத வாசகம்

சுக்கான் இரும்பில் துரு
சமைக்கும் அடுப்பில் துரு
நட்ட கம்பியில் துரு
விசைப்படகின் விளிம்பில் துரு
இன்னும் துருப்பிடிக்காதிருப்பது
இவர்களின் எலும்பு
மட்டும் தான்.

என்று கூறுகிறார்.

2014 ம் ஆண்டு வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தில், இந்நாவலில் வந்த பின்வரும் வரிகளை வைரமுத்துப் பயன்படுத்தியுள்ளார்.

பொறுமையிருந்தால் தண்ணீரைக்கூட
சல்லடையில் அள்ளலாம் – அது பனிக்
கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்

அறிவியல் செய்திகள்

இந்நாவலில் பல அறிவியல் செய்திகளும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும் ஏராளமாக உள்ளது. போகிற போக்கில் பெர்முடாஸ் முக்கோண திகில் காரணங்களையும் விளக்கிச் செல்கிறார்.

கடலில் ‘நெருப்பு பேய்’ என்று மீனவர்கள் அலற அதற்குக் கலைவண்ணன் அறிவியல் விளக்கம் கூறுவது போல வருகிறது, கடலிலேயே இருக்கும் இவர்களுக்கு இதன் காரணம் தெரியாமல் இருக்குமா?!

வாழ்க்கை என்றால் என்ன?

தமிழ் ரோஜா பணக்கார வீட்டுப்பெண், கஷ்டம் என்றால் என்னவென்பதையே அறியாதவள்.

அவளுக்குத் தண்ணீர் பயம், படகு பழுதடைந்ததால் உணவுப் பிரச்சனை, குடிக்கத் தண்ணீர் பிரச்சனை, சைவ உணவுப் பழக்கம் என்று சுற்றியடிக்க, எப்படி வாழ்க்கையைத் தெரிந்து கொள்கிறாள் என்பது சிறப்பாக உள்ளது.

நாம் ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்தால், கலைவண்ணன் கூறும் வார்த்தைகள் நினைவுக்கு வந்து போகும் அளவுக்கு வைரமுத்து வார்த்தைகள் உள்ளது.

கடல் அனுபவம்

நண்பர்கள் இணைந்து இது போல ஒரு படகில் செல்லத் திட்டமிட்டுப் பின்னர் சூழ்நிலை அமையாததால் செல்ல முடியவில்லை.

மலேசியா லங்காவி சென்ற போது சிறிது தூரம் படகில் கடலுக்குள் அழைத்துச் சென்றார்கள். பூமி வட்டவடிவமானது என்பது கடலில் பயணம் செய்தால், நம்பலாம்.

ஒரு பந்தின் மேலே படகு செல்வது போலவே உணர்வு இருக்கும். படகில் இருந்து பார்த்தால், எதோ மேடான பகுதியில் ஏறி இறங்கப்போவது போல இருக்கும் 🙂 .

கப்பலில் செல்ல வேண்டும் என்பது பல வருட விருப்பம்.

இந்நாவலை படித்த பிறகு வாழ்க்கை குறித்த நம்பிக்கை அதிகமானது போலக் கொஞ்சம் தண்ணீர் பயம் வந்தது என்னமோ உண்மை 🙂 .

இந்நாவலின் முடிவு புரிந்தும் புரியாமல் உள்ளது. இறுதியில் என்ன ஆனது? என்பது குழப்பமாக உள்ளது. தெளிவாகக் கூறி இருக்கலாம்.

மேற்கூறியதில் உடன்பாடு இருந்தால் இந்நாவலை படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

அமேசானில் வாங்க –> தண்ணீர் தேசம் Link

தொடர்புடைய கட்டுரைகள்

கருவாச்சி காவியம் | மனத்திரையில் ஒரு கிராமம்

கள்ளிக்காட்டு இதிகாசம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, தண்ணீர் தேசம் புத்தகத்திற்கும் எனக்குமான உணர்வு , அற்புதமாக ஒரு உணர்வு .. இந்த புத்தகத்தை படிகின்றன நொடியெல்லாம் நான் தனியாக கடலில் பயணிக்கிறேன் .. இந்த உலகத்தில் ஒற்றை மனிதனாக வாழ்கிற உணர்வு .. தபு சங்கரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் , என்ற கவிதை புத்தகத்திற்கு (அந்த பருவத்தில்) பின் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் தண்ணீர் தேசம் ..

    வைரமுத்து சார் இந்த புத்தகத்தை எழுத எடுத்துக்கொண்ட சிரமங்கள் படிக்கின்ற போது உணர முடிந்தது .. இன்றும் வீட்டில் ஒரு பிரதி வைத்து இருக்கிறேன் .. புத்தகத்தில் என்னை பல பாகங்கள் கவர்ந்தாலும் “கலைவண்ணனுக்கும் , தமிழ் ரோஜாவின் தந்தைக்கும் மருத்துவமனையில் நிகழும் உரையாடல் ” வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ..

    மூன்று / நான்கு வருடங்களுக்கு முன்பு நான் இந்த புத்தகத்தை பற்றி உங்களிடம் கூறினேன் .. நீங்களும் சில பக்கங்கள் படித்து விட்டு கவிதை நடையில் இருப்பதால் படிக்க பிடிக்க வில்லை என்று சொன்னிர்கள் .. எனக்கு ஒரே ஆச்சரியம் என்ன இந்த புத்தகம் பிடிக்க வில்லை என்று , ரசனைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், மேற்கொண்டு இதை பற்றி பேசவில்லை .. தற்போது மீண்டும் இந்த புத்தகம் உங்களை கவர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது .. பகிர்வுக்கு நன்றி கிரி ..

  2. யாசின் யாரோ சொன்னாங்க என்று நினைவு இருந்தது அதனால் தான் வாங்கினேன் ஆனால், அது நீங்க என்பது நினைவில் இல்லை 🙂 .

    துவக்கத்தில் படிக்கக் கடுப்பாக இருந்தது, பணம் கொடுத்து வாங்கிவிட்டோமே என்று சிரமப்பட்டு படித்தேன் பிறகு பிடித்து விட்டது 🙂 .

    ரொம்ப நன்றாக எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here