தமிழ்த்திரையுலகில் கவனிக்கப்படாத நடிகர்களுள் ஒருவர் சலீம் கவுஸ். இதற்குக் காரணம் சலீம் கவுஸ் நடவடிக்கைகளா அல்லது திரையுலகமே எதோ காரணத்தால் புறக்கணித்ததா என்று புரியவில்லை.
சலீம் கவுஸ்
வெற்றிவிழா திரைப்படத்தில் ஜிந்தா என்ற மறக்க முடியாத கதாப்பாத்திரத்தில் அட்டகாச வில்லனாகத் தமிழில் அறிமுகமானவர் சலீம் கவுஸ்.
திரைப்படங்களில் கதாப்பாத்திரத்தின் பெயர் நினைவிருந்தால், அந்நடிகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று கூறி விடலாம்.
அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களுள் ஒன்று ஜிந்தா.
வெற்றிவேல்ல்ல் என்று மிக ஸ்டைலிஷாக அவர் கூறும் லாவகம், வித்யாசமான சிரிப்பு, அவரின் பேஸ் குரல், ‘யாருயா இவர்!‘ என்று வியப்பால் பார்க்க வைத்தவர்.
பாட்ஷா படத்தில் ஆண்டனியாக ரகுவரன் அசத்தி இருப்பார். அது போல வெற்றிவிழா படத்தில் ஜிந்தாவாகக் கலக்கி இருப்பார்.
வில்லன் கதாப்பாத்திரம்
படத்துக்கு வில்லன் முக்கியம். நாயகனுக்கு வில்லன் கடும் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே நாயகன் அதைத் தாண்டி வரும் போது சுவாரசியமாக இருக்கும்.
ஆனால், தற்போது வில்லனை டம்மியாக்கி விடுகிறார்கள். நாயகனுக்கு இணையாக வரும் வில்லன் கதாப்பாத்திரம் தற்போது மிகக்குறைவு.
ஜிந்தா பேசும் ஒவ்வொரு வசனமும் நினைவில் இருக்கும். வெற்றிவேல் என்ற பெயரை மறக்க முடியாதபடி செய்ததே ஜிந்தாவின் ஸ்டைலிஷான குரல் தான்.
ஜிந்தாவின் ‘எனக்குத் தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது, மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை‘ என்ற வசனம் மிகப்பிரபலமானது.
எங்கிருந்தோ வந்து அனைவர் மனதையும் வில்லனாகக் கொள்ளையடித்தது, தற்போதைய தலைமுறைக்குத் தெரியாமல் இருக்கலாம் ஆனால், வெற்றிவிழா படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள் உணர்வார்கள்.
சின்னக் கவுண்டர்
சர்க்கரை கவுண்டராகச் சின்னக் கவுண்டர் படத்தில் அசத்தி இருப்பார். விஜயகாந்துக்குக் கடும் சவாலைக் கொடுக்கும் கதாப்பாத்திரமாக வந்தார்.
சின்னக்கவுண்டர் படம் நாயகன், நகைச்சுவை, இசை, பாடல், திரைக்கதை என்று அசத்தி இருந்தாலும், வில்லனாகச் சலீம் கவுஸ் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.
திருடா திருடா
இதன் பிறகு ‘விக்ரம்’ கதாப்பாத்திரத்தில் திருடா திருடா படத்தில் சொல்லிக்கொள்ளும்படியான கதாப்பாத்திரம் ஆனால், முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் கதாப்பாத்திரம் அல்ல.
இதுவே இவரை ஓரளவு சரியாகப் பயன்படுத்திய கடைசித் தமிழ்த் திரைப்படம். இதன் பிறகு நினைவில் வரக்கூடிய படம் என்றால் வேட்டைக்காரன்.
விஜய்க்கு கடும் போட்டி கொடுக்கக்கூடிய திரைக்கதையை அமைத்து இருந்தால், வேட்டைக்காரன் சிறப்பாக அமைந்து இருக்கும் ஆனால், இல்லை.
ஏமாற்றம்
இவையல்லாமல் பல இந்தி படங்களில் நடித்துள்ளார், சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார் ஆனால், அவை கவனம் பெறவில்லை.
தனிப்பட்ட ஏமாற்றம் என்றால், ரஜினியுடன் இவர் நடிக்காமல் போனாரே என்று தான்.
ரஜினி திரைப்படங்களில் வில்லனுக்கு மிக முக்கியத்துவம் இருக்கும், சமீப படங்களில் அவ்வளவாக இல்லை.
சமீபத்தில் திருப்தியளித்த வில்லன் காலா ஹரி தாதா (நானா படேகர்).
தர்பார் திரைப்படத்தில் சலீம் கவுஸ் பயன்படுத்தப்பட்டு இருந்தால், மிகப்பொருத்தமாக இருந்து இருக்கும் என்பது என் அனுமானம்.
ரஜினியை மிரட்டக் கெத்தான வில்லனாகச் சலீம் கவுஸ் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏன் எந்த இயக்குநருமே பரிசீலிக்கவில்லை என்று புரியவில்லை.
பேஸ் குரல், அலட்டல் இல்லாத நிதானமான வில்லன் உடல் மொழி, வில்லத்தனமான சிரிப்பு, தீர்க்கமான முகம், பதட்டத்தை வெளிக்காட்டாத தன்மை என்று அனைத்தும் ஒருங்கே அமைந்த வில்லனைத் தமிழ் திரையுலகம் பயன்படுத்தாதது ஏமாற்றமே.
மீண்டும் தரமான வில்லனாகச் சலீம் கவுஸை காண ஆவலாக உள்ளேன்.
என்னையும் ரொம்பவே கவர்ந்த நடிகர், குறிப்பா அவர் குரலும் தமிழ் உச்சரிப்பும்.
வேட்டைக்காரன் படத்தில், விஜய்யை ஒவ்வொரு இடமா கூட்டிக்கிட்டு பயத்தைப் பற்றி சொல்லும் காட்சியில் கவுஸ் நடிப்பு மற்றும் voice modulation சிறப்பாக இருக்கும்: “வேதநாயகம்ன்னா பயம்”
சூப்பர் ஸ்டார் விஜய் நடித்த வேட்டைகாரன் படத்தில் வேதநாயகம் என்ற பெயரில் வந்து பயம் காட்டியதை மறைத்ததற்கு கடும் கண்டணங்கள்
நடிகர் சலீம் கவுஸ் : தமிழ் சினிமா (எதனாலோ) முற்றிலும் கை விட்ட ஒரு சிறந்த கலைஞனை நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றி!!! வெற்றி விழா / சின்ன கவுண்டர் இரண்டும் வெவ்வேறு பரிணாமங்கள் கொண்ட படம்.. ஆனால் இரண்டிலும் சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார்.. நிறைய படங்கள் நடிக்க வேண்டிய ஒரு சிறந்த நடிகர்.. என்ன காரணமோ?? முடியாமல் போயிற்று.
நான் இன்றும் வியக்கும் இன்னொரு கலைஞன் நாசர் சார்.. கோபுர வாசலிலே (1991 வெளியீடு), தேவர் மகன் (1992 வெளியீடு), கோபுர வாசலிலே படத்தில் 4 / 5 பேர்ல ஒருவராக வந்து போவார்.. தேவர் மகனில் கமலுக்கு இணையாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.. எத்தனை படங்கள், எத்தனை வேஷங்கள்..
இன்று வரை நான் பிரமிக்கும் வெகு சிலரில் இவரும் ஒருவர்.. நன்றி கிரி.
@Barney & எந்நாளும் சூப்பர் ஸ்டார் ரஜினி
வெற்றிவிழா, சின்னக் கவுண்டர் எல்லாம் பார்த்துட்டு இதில் திருப்தியளிக்கவில்லை. அதோடு இதில் இன்னொரு வில்லனும் இருப்பார்னு நினைக்கிறேன்.
இதுவும் அவருடைய முக்கியத்துவத்தை குறைத்து விட்டது.
@யாசின் ஆமாம், இரண்டிலுமே அசத்தல் நடிப்பு குறிப்பா வெற்றி விழா அட்டகாசம்.
கமலுக்கே சவால் விடும் அற்புத நடிகர் நாசர். தேவர்மகனில் அவரின் நடிப்பு செமையா இருக்கும். தலைவாசல் பீடா சேட்டில் கலக்கி இருப்பார்.
குருதிப்புனல் ன்னு ஏராளமாகக் கூறலாம். இவரைப் பற்றித் தனிக்கட்டுரை எழுதும் அளவுக்குத் தகவல்கள் உள்ளது.
ரஜினிக்கு ரகுவரன் என்றால், கமலுக்கு நாசர்.